மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.1.16

சிறுகதை: மாமியாரும் தேவதையும்!


சிறுகதை: மாமியாரும் தேவதையும்!

மாத இதழ் ஒன்றில் வெளியான என்னுடைய சிறுகதை ஒன்றை நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன்.

படித்தவர்கள் தங்களுடைய கருத்தைத் தெரியப்படுத்தலாம்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
மீனாட்சியின் தீர்த்தம் குடிக்கும் நிகழ்விற்காக வந்திருந்த அவளுடைய உறவினர்கள் அனைவருக்கும் விழாவின் நாயகி மீனாட்சி தேம்பித் தேம்பி  அழுக ஆரம்பித்தவுடன் ஆச்சரியமாக இருந்தது.

”என்னடி இது காலமாக இருக்கிறது? எதுக்காக இவள் அழுகிறாள்?” என்று வந்திருந்தவர்களில் வயதில் பெரியவரான வள்ளி ஆச்சி கேட்டவுடன்தான் மற்றவர்களுக்கும் உறைத்தது.

அனைவருக்கும் பதில் சொல்லும் விதமாக மீனாட்சியின் தாயார் சேதுக்கரசி ஆச்சி சற்றுப் புன்னகையுடன் பேசத் துவங்கினார்கள்.

“அவளுக்கு மாமியார் பித்துப் பிடித்து விட்டது. பிரசவத்திற்காக அவளைக் கூட்டிக் கொண்டு வந்து விட்ட அவளுடைய மாமியார், இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிச் செல்ல இருக்கிறார்கள். அவர்கள் போகக்கூடாது. அவர்களும் இங்கேயே இருக்கட்டும் என்று வந்தது முதல் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அழுகைக்குக் காரணமும் அதுதான்”

”அவர்களை வேண்டுமென்றால் இன்னும் இரண்டொரு நாள் இருந்துவிட்டுப் போகச் சொல்லுங்கள்” இது மீண்டும் வள்ளி ஆச்சி

”அவர்கள் சர்வீஸ் ஓட்டுனர் ஒருவருடன் தங்கள் காரில் வந்திருக்கிறார்கள். உடன் அவர்களுடைய கணவரும் வந்திருக்கிறார். இருவரும் அவர்களுடைய ஊருக்குத் திரும்பிப் போக வேண்டாமா?”

இதைக் கேட்ட வள்ளி ஆச்சி,” ஆமாம், அதுவும் சரிதான்!” என்று சொன்னவுடன், யாரும் பேசவில்லை. சற்று நேரம் அமைதி நிலவியது.

எல்லாம் சில நொடிகள்தான். மீனாட்சி மீண்டும் அழுகையைப் பிடித்துக்கொண்டவுடன், அவளுடைய மாமியார் சாரதா ஆச்சி மெல்லிய குரலில் சொன்னார்கள்:

“சம்பிராயங்களை நாம்தான் உருவாக்குகிறோம். தலைப்பிரசவம் தாய் வீட்டில்தான் என்பார்கள். மீனாட்சி திருமணமாகி, மாலையும் கழுத்துமாக எங்கள் வீட்டிற்கு வந்ததில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அவளிடம் ஒரு தாயைப் போல்தான் நடந்து கொண்டிருக்கிறேன். அவள் என்னிடம் அளவிடமுடியாத பாசம் வைத்திருக்கிறாள். அவளுடைய பிரசவத்தை சென்னையில் வைத்துக்கொண்டால் போகிறது. அவளுடைய பெற்றோர்கள் எப்போது வேண்டுமென்றாலும் வரட்டும். ஒரு நாள் இருந்து விட்டு, நாளைக் காலையில் நாங்கள் புறப்பட்டுச் செல்கிறோம். மீனாட்சியும் எங்களுடன் வரட்டும்.”

யாரும் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

மீனாட்சி நினைத்ததுதான் நடந்தது.

அடுத்த நாள் காலையில் அவள் தன் அன்பு மாமியார், மாமனாருடன் சென்னைக்கே திரும்பிச் சென்றாள்.

இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்ன வென்றால், இதே மீனாட்சிதான் 
தன் திருமணப் பேச்சின்போது,“கல்யாணத்திற்குப் பிறகு தங்களைத் தனிக்குடித்தனம் வைக்க வேண்டும். மாமியார் உபத்திரவம் எல்லாம் 
எனக்கு ஆகாது. ஆகவே அவர்கள் எங்களுடன் வந்து தங்கக் கூடாது” 
என்று சொன்னவள். ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறி விட்டது.

எப்படி மாறியது? மாற்றம் சுவாரசியமானதுதான். வாருங்கள் என்ன நடந்தது என்பதை விவரமாகப் பார்ப்போம்

  **********************************************************

”ஆத்தா, வாங்குகிற சம்பளம் எல்லாம் சரவண பவனுக்கே போகிறது.” என்று தன் புது மனைவியைப் பற்றிக் கலக்கமாக மகன் சொன்னபோது, சாரதா ஆச்சி கலக்கமின்றி நிதானமாகக் கேட்டார்கள்:

“என்னப்பச்சி சொல்றே?”

”அவள் வீட்டில் சமையல் செய்வதே இல்லை. காலை, மத்தியானம், இரவு என்று மூன்று வேளையுமே ஹோட்டல்களில்தான் சாப்பாடு. எங்கள் இருவருக்கும் அலுவலகம் இருக்கும் நாட்களில் மதிய சாப்பாடு கம்பெனி காண்டீனில்.”

“அவள் சம்பளத்தை என்ன செய்கிறாள்?”

“ வங்கியில் போட்டு விடுகிறாள். கேட்டால் நம் இருவருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் அதற்காகத்தான் அந்த சேமிப்பு என்கிறாள்” 

“நல்ல விஷயம்தானே!”

“வேளா வேலைக்கு வெளியில், ஹோட்டல்களில் சாப்பிட்டால் வீடு விளங்குமா?”

“இதை அவளிடம் கேட்டாயா?”

“கேட்டேன். எனக்கு சமையல் தெரியாது. படிக்கிற காலத்தில் ஹாஸ்டலில் தங்கித்தான் படித்தேன். அதற்குப் பிறகு வேலையில் சேர்ந்த நாள் முதலாக உங்களைத் திருமணம் செய்து கொள்ளும் நாள்வரை பி.ஜியில் (Paying Guest House) தான் தங்கியிருந்தேன். சமையல் செய்வதற்கோ அல்லது சமையலைக் கற்றுக்கொள்வதற்கோ  வாய்ப்பே கிடைக்கவில்லை என்கிறாள்”

“உண்மைதானே!”

“என்ன ஆத்தா, உண்மைதானே என்று அவளுக்கு அனுசரணையாகப் பேசுகிறீர்கள்?”

“திருமணமாகி ஒரு மாதம்தானே ஆகிறது. பொறுமையாக இரு. கொஞ்ச நாள் போனால், சரியாகிவிடும்” என்று சொன்னவர்கள் மேலும் அவனைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார்கள்.

இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு. அதற்குப் பிறகு சண்டை சச்சரவு இல்லாமல், விவாகரத்தில் போய் முட்டிக் கொள்ளாமல், மீனாட்சி, சோமசுந்தரத்தின் வாழ்க்கையில் ஒவ்வொன்றாக எல்லாம் சீராக நடந்ததற்கு  சாரதா ஆச்சியின் அனுகுமுறையே காரணம் என்றால் அது மிகையல்ல!

என்ன அனுகுமுறை?

வாருங்கள், விரிவாக அதைப் பார்ப்போம்!

**********************************

ஏகாம்பரநாதர் அருள்பாலிக்கும் காஞ்சிபுரத்தில்தான் சாரதா ஆச்சி வசிக்கிறார்கள். வடக்கு மாட வீதியில் வீடு. வீட்டிற்குப் பக்கத்திலேயே  அவர்களுக்குச் சொந்தமான திருமண மண்டபம். பூர்வீகச் சொத்து. திருமணமாகிவந்த நாளில் இருந்து ஆச்சிதான் அதை நிர்வகிக்கிறார்கள். ஏகப்ப செட்டியாருக்கு, அதுதான் ஆச்சியின் கணவருக்கு வேறு தொழில் உள்ளது.

அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரத்தில்தான். படிக்கின்ற 
காலத்தில் அவருக்கு உள்ளூர் வாசிகளான தேவாங்க இனத்தவர்களுடனும் சாலிகர் இனத்தவர்களுடனும் அதீத பழக்கம். காஞ்சிபுரம் பட்டு சேலை நெசவுத் தொழில் மொத்தமும் அந்த இரு இனத்தவர்களிடம்தான் 
இருக்கிறது. செட்டியாருக்கும் அதில் பிடிப்பு இருந்ததால் படித்து 
முடித்தவுடன் தன் தந்தையார் ஆசியுடன் அவரும் பட்டுச் சேலை உற்பத்தியில் இறங்கி விட்டார். துவக்கத்தில் பத்து தறிகள் இருந்தன. இப்போது 200 தறிகள் உள்ளன. சேலையின் கரைகள், முந்திகள், நடுவில் 
புட்டா அமைப்புக்கள், சேலைகளின் வடிவமைப்பு என்று செட்டியாரின் தயாரிப்பில் வரும் சேலைகள் எல்லாம் அசத்தலாக இருக்கும். 
சென்னையில் உள்ள இரண்டு பெரிய ஜவுளி நிறுவனங்கள் முன்பணம் கொடுத்து அத்தனை சேலைகளையும் வாங்கிக் கொண்டு இருக்கின்றன.

நெசவிற்கு வேண்டிய மல்பெர்ரி பட்டு நூல்களை பெங்களூரிலும்,  ஜரிகை நூல்களை சூரத்திலும் வாங்கிக் கொண்டு இருக்கிறார். சொந்தமாக சாயப் பட்டறைகளும் உள்ளன. காலையில் 7 மணிக்குப் போனால் இரவு 7 மணிக்குத்தான் வருவார். வீட்டு நிர்வாகம், திருமண மண்டப பணப் பரிவர்த்தனை எல்லாம் ஆச்சியின் கையில்தான் இருக்கிறது.

சோமசுந்தரம் ஒரே மகன். அவனுக்குத் திருமணம் செய்துவைக்கத்தான் 
ஆச்சி சற்று சிரமப்பட்டார்கள். நினைத்தபடி பெண் கிடைக்கவில்லை. 
இரண்டு ஆண்டு தேடலுக்குப் பிறகு கிடைத்த பெண்ணைத் திருமணம்
 செய்து வைத்தார்கள். அப்படி வந்தவள்தான் மீனாட்சி.

மகன் வந்துவிட்டுப்போன இரண்டாவது நாளே ஆச்சி அவர்கள் சென்னைக்குப் புறப்பட்டுப் போனார்கள். காஞ்சியில் இருந்து 75 கிலோமீட்டர் தூரத்தில்தான் சென்னை இருக்கிறது. ஒன்றரை மணி நேரத்தில் போய்விடலாம்.

மனதை நோகடிக்காமல், மருமகளை எப்படி வழிக்குக் கொண்டு வரலாம் என்று யோசித்த ஆச்சி, அதற்கு ஒரு மாஸ்டர் பிளானுடன் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஆச்சியின் தம்பி சின்னைய்யா, சென்னை திருவான்மியூரில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து கொண்டிருந்தான். அவனிடம் சொல்லி நல்ல இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை வாங்கித் தரும்படி கேட்டிருந்தார்கள். அவனும் வாருங்கள், உடனே முடித்துத் தருகிறேன் 
என்று சொல்லியிருந்தான்.

ஆச்சி புறப்படும்போதே தொலைபேசியில் மகனுக்கும் தன் தம்பிக்கும் தகவலைச் சொல்லிவிட்டுத்தான் போனார்கள். 

திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில், கிழக்கு கடற்கரைச் சாலை துவங்கும் இடத்தில் புதிதாகக் கட்டப்பெற்றிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் நல்ல வீடு ஒன்று கிடைத்தது. முதல் மாடியில் வீடு. 
2 படுக்கை அறைகள் வசதிகள் கொண்ட கிழக்குப் பார்த்த நல்ல வீடு.
விலை அறுபது லட்ச ரூபாய்கள். மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவருக்குமே அலுவலங்கள் அருகில் உள்ள பகுதிகளில்தான்.

ஆச்சியின் மகனுக்குத்தான் சற்று யோசனை. பணம் எப்படிப் புரட்ட முடியும்? வங்கியில் பாதி கடன் வாங்கினால், மாதம் எவ்வளவு தவணைத் தொகை செலுத்த வேண்டும்? எத்தனை ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும் என்பது போன்ற கவலைகள்.

அதற்கெல்லாம் இம்மிகூட இடம் கொடுக்காமல் ஆச்சி முழுப் பணத்தையும் கொடுத்து வீட்டை மகன் பெயருக்கே வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். மேலும் கார் ஒன்றை வாங்கிக் கொள்ளச் சொல்லி அதற்கெனத் தனியாக எட்டு லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்தார்கள். எல்லாவற்றிற்கும்  முத்தாய்ப்பு வைத்தைதைப் போல கல்யாணத்தின்போது மீனாட்சியின் பெற்றோர்கள் கொடுத்திருந்த ஆறு லட்ச ரூபாய் பணத்தை மீனாட்சியிடம் கொடுத்து உன் பெயரில் வங்கியில் போட்டு வைத்துக்கொள் என்று சொல்லிக்  கொடுத்துவிட்டார்கள், ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் என்று ஆச்சி அவர்கள் அடித்த ரன்கள் நன்றாக வேலை செய்தன. எல்லாமே இன்ப அதிர்ச்சியாக மீனாட்சியை சாய்த்துவிட்டன. இத்தனையும் ஒரே நேரத்தில் நடக்கும் 
என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

எல்லாம் முடிந்து ஆச்சி அவர்கள் கிளம்பும் சமயத்தில் மீனாட்சி ஆச்சியின் காலில் விழுந்து வணங்கியதோடு, தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்துவிட்டாள்.

அத்துடன் சொன்னாள். “நீங்கள் நல்ல மாமியாராக இருக்கிறீர்கள். அதுபோல  உங்கள் மகனுக்கு நல்ல மனைவியாக என்னால் இருக்க முடியும். ஆனால் எனக்கு சமையல் மட்டும் தெரியாது. நான் இரண்டு மாதங்கள் லீவு போட்டுவிட்டு காஞ்சிபுரத்திற்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன். நீங்கள்தான் எனக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்”

இதைத்தான் சாரதா ஆச்சி எதிர்பார்த்திருந்தார்கள். “நீ யெல்லாம் லீவு போட்டு சிரமப் பட வேண்டாம். நானே அடுத்தவாரம் முதல், மாதத்தில் 15 நாட்கள் என்ற கணக்கில் வந்து உங்களுடன் தங்கி உங்கள் இருவருக்கும் சமையல் செல்லித்தருகிறேன்

”இருவருக்குமா?”

”அதிலென்ன தவறு? என் மகனுக்கும் சமையல் தெரிந்திருப்பது நல்லதுதானே!”

இந்தப் பதிலில்தான் மீனாட்சி க்ளீன் போல்டாகிவிட்டாள். ஆச்சியை அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

இருக்காதே பின்னே? எந்தத் தாய்க்காவது இப்படி ஒரு சிந்தனை மற்றும் செயல் இருக்குமா?

அடுத்து நடந்தது எல்லாம் முக்கியமில்லை. ஆச்சி அவர்கள் சொன்னபடி வந்திருந்து இருவருக்கும் சமையலில் பயிற்சி கொடுத்தார்கள். ஆச்சி அவர்களுக்கு செட்டி நாட்டு சமையலும் நன்றாகத் தெரியும். அத்துடன் ஐயர் வீட்டு சமையலும் நன்றாகத் தெரியும். தங்களுடைய கலயாண மண்டபத்திற்குத் தொடர்ந்து வரும் சமையல் கலைஞர்கள் மூலம் அதையும் கற்றுக்கொண்டிருந்தார். சூப்பராக சமைக்கவும் செய்வார். ரசம், கூட்டு மோர்க் குழம்பு, அவியல், சாம்பார் என்று ஐயர் வீட்டு ஐயிட்டங்களெல்லாம் அசத்தலாக இருக்கும். ரசம் வைத்தாரென்றால் ரசம் ஒன்றே போதும். இலையைவிட்டு எழுந்திரிக்க மனம் வராது.

மீனாட்சி குறிப்பு எடுக்க முயன்ற போது, ஆச்சி அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். சமையல் குறிப்புக்கள் மொத்தத்தையும் சுமார் ஐநூறு குறிப்புக்கள் இருக்கும், கணினியில் நீட்டாக வேர்ட்பாடில் தட்டச்சு செய்து வைத்திருந்ததை அப்படியே பென் டிரைவில் காப்பி செய்து கொண்டு வந்து மருமகள் வீட்டில் வைத்திருந்த கணினியில் உள்ளிட்டுக் கொடுத்து விட்டார்கள். அப்போதுதான் மீனாட்சிக்கு தன் மாமியார் சகலகலாவல்லி என்பது தெரிந்தது. கணினியில் ஆச்சிக்கு இருந்த அபார ஞானம் வியப்பூட்டுவதாக இருந்தது. போட்டோஷாப், கோரல் டிரா என்று அவர்கள் உருவாக்கிவைத்திருந்த பட்டுச் சேலைகளுக்கான டிஸைன்களை எல்லாம் பார்த்தவுடன் மீனாட்சி அசந்து போய்விட்டாள். அவர்கள் தன்னுடன் இருந்தால் பரவாயில்லை என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

ஆறு மாதப் பயிற்சியில் மீனாட்சியும், அவள் கணவன் சோமசுந்தரமும் சமையலில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு ஆளுக்கொரு நாள் சமைக்க ஆரம்பித்தார்கள். கருணைக் கிழங்கு கெட்டிக் குழம்பு, தக்காளி ரசம், பீன்ஸ் உசிலி என்று எல்லாம் கலக்கலாகச் செய்தார்கள்.

ஒருநாள் காஞ்சிபுரம் கோயிலில் தலைமைக் குருக்குள் கேட்ட போது, தன் மருமகள் பின்னால் வந்து நிற்பது தெரியாமல் ஆச்சி அவர்கள் பேசத் துவங்கினார்கள்

”என்ன ஆச்சி உங்கள் மருமகள் எப்படி இருக்கிறார்?”

”அவளுக்கென்ன, தேவதை! நன்றாக இருக்கிறாள்!”

”என்ன ஆச்சி சொல்கிறீர்கள்?”

”வரும் மருமகள் தேவதையாக இருப்பதோ அல்லது பிசாசாக இருப்பதோ 
நாம் அவளை நடத்தும் விதத்திலும், அவள் அதைப் புரிந்துகொள்ளும் விதத்திலும்தான் இருக்கிறது. நான் அவளை எங்கள் வீட்டிற்கு வந்த தேவதையாகத்தான் நடத்துகிறேன். அவளும் அதி உன்னத தேவதையாகத்தான் நடந்து கொள்கிறாள்”

”கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது ஆச்சி” என்று சொன்னவர் கோயில் பிரசாதங்களைக் கொண்டுவரச் சென்றார்.

”நான் எவ்வளவு கொடுத்துவைத்தவள்” என்று எண்ணிய மீனாட்சி, கிறக்கத்தில் அப்படியே பின்னால் இருந்த பெரிய தூணின் அருகில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.

மீனாட்சிக்கு மாமியார் பித்துப் பிடித்தது இப்படித்தான்.

உறவுகளின் மேன்மை ஒருவருக்கொருவர் நடந்து கொள்வதிலும், புரிந்து கொள்வதிலும் பரஸ்பரம் அன்பைச் செலுத்துவதிலும்தான் இருக்கிறது.
அப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் நடந்தால், பிரச்சினைதான் ஏது? பிரிவுதான் ஏது? விவாகரத்துதான் ஏது?                                   ============================================================
வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

23 comments:

  1. ஐயா,
    ஒரு நல்லுள்ளம் கொண்ட எழுத்தாளனின் அற்புதமான படைப்பு (அல்லது பத்தில் ஒரு குடும்ப நிஜக்கதையாக கூட இருக்கலாம்.)
    ஒரு வேண்டுகோள் ஐயா; வழிதெருவில் அந்த பிரம்மதேவனை எங்கேனும் காண நேர்ந்தால் உடனே எனக்கு அறியத்தரவும். அவரின் உடல் நலத்திற்கு ஊறு நேரா வண்ணம் நடந்து கொள்ள வேண்டியது என் பொறுப்பு!
    ஒரு எழுத்தாளனுக்கே இவ்வளவு நல்லெண்ணமும், பாத்திரங்களை அற்புதமாக படைக்கும் திறனும் இருக்கையில், அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தது யாரென்றாவது ஒரு கேள்வி கேட்டு விடுகிறேன். அவ்வளவே. வேறொன்றும் செய்யேன்.
    வீட்டுக்கு வீடு வாசற்படி. மாமியார், மருமகள் பிரச்சனை என்பது கல்லூரி ragging போல். யான் பெற்ற இன்பம் அவளும் பெறக்காண்பதில் பல மாமியார்களுக்கு திருப்தி. சிலர், இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில் கொஞ்சம் கறாராக நடந்து கொள்வது. சிலருக்கு தானா மருமகளா என்ற போட்டி. இந்த மனநிலையில் மாத்திரம் இந்த பெண்கள் சிலர் (சில ஆண்களுமே) வயதில் என்றும் சிறு பிள்ளைகளாகவே இருந்து விடுகின்றனர். வளர்வதே இல்லை. (இந்தக் குணம் சில நாத்தனார்களுக்கும் உண்டு.) சிலருக்கு வெறுமே சுயநலம் மட்டுமே. பிள்ளையின் வாழ்வே கெட்டுவிடுமே என்பது கூட புரிவது இல்லை. இதில் மாமியார்களை மாத்திரமே குறை கூறுவதற்கில்லை. சில இடங்களில் மாமியார் நன்றாக இருக்க மருமகள் சரியாக நடப்பதில்லை.
    ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால்; எல்லாம் அவரவர் கொண்டு வந்த வரம்! கிரகங்களின் விளையாட்டு.

    ReplyDelete
  2. அருமையான கருத்து , படிப்பதோடு நில்லாமல் மனதில் அனுதினமும் நினைவூட்டுவது ,குடும்ப வாழ்வை செம்மையாக்கும்.
    குரு மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பணிவான காலை வணக்கம்
    - சக்திவேல்

    ReplyDelete
  3. எம் தொண்டை மண்டல தலைனரான காஞ்சி எகாம்பர நாதர் கோபுர தரிசனம் அருமை. மனம் காஞ்சிக்கு சென்றுவிட்டது.

    ReplyDelete
  4. வாத்தியார் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் & ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.மிகவும் அருமையாக உள்ளது, பாராட்டுகள் பல பல.

    மேலும் சிறிய வேண்டுகோள், நான் தங்களது ஜோதிட பாடங்களை படித்து வருகிறேன், முதல் பகுதியான ஜோதிட புத்தகத்தை படித்து விட்டேன். மேல்நிலை பாடங்களை படிக்க தாங்கள் அனுமதி அளிக்க வேண்டுகிறேன். ஒரு போராட்டமாக இருக்கிறது, பாதியை படித்து விட்டு ... என்ன செய்ய? அடுத்த புத்தகம் எப்பொழுது வருவது எப்போ படிப்பது. இனையத்திலும் படிக்க ஆர்வமாக உள்ளது, புத்தகம் வந்தாலும் வாங்கி வைத்து படிப்பேன்.

    Dear Sir,

    i am venkatesh, working in SRM University chennai. kindly i request to you grant me to continue astrology website studies please..

    ReplyDelete
  5. வணக்கம் குரு,

    மிகவும் அருமை.//உறவுகளின் மேன்மை ஒருவருக்கொருவர் நடந்து கொள்வதிலும், புரிந்து கொள்வதிலும் பரஸ்பரம் அன்பைச் செலுத்துவதிலும்தான் இருக்கிறது.// இதைதான் அனைவரும் உணர வேண்டும்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  6. நம்மிடம் எப்படி மற்றவர்கள் நடந்து கொள்ள‌ வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படியே நாம் மற்றவர்களிடம் நடந்து கொண்டு விட்டால் மரியாதை தன்னால் கிடைக்கும்.ஒரு ஐடியல் மாமியார். இப்படி ஊர் உலகத்தில்
    ஆயிரத்தில் ஒருவர் இருக்கலாம்.

    ReplyDelete
  7. //////Blogger Mrs Anpalagan N said...
    ஐயா,
    ஒரு நல்லுள்ளம் கொண்ட எழுத்தாளனின் அற்புதமான படைப்பு (அல்லது பத்தில் ஒரு குடும்ப நிஜக்கதையாக கூட இருக்கலாம்.)
    ஒரு வேண்டுகோள் ஐயா; வழிதெருவில் அந்த பிரம்மதேவனை எங்கேனும் காண நேர்ந்தால் உடனே எனக்கு அறியத்தரவும். அவரின் உடல் நலத்திற்கு ஊறு நேரா வண்ணம் நடந்து கொள்ள வேண்டியது என் பொறுப்பு!
    ஒரு எழுத்தாளனுக்கே இவ்வளவு நல்லெண்ணமும், பாத்திரங்களை அற்புதமாக படைக்கும் திறனும் இருக்கையில், அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தது யாரென்றாவது ஒரு கேள்வி கேட்டு விடுகிறேன். அவ்வளவே. வேறொன்றும் செய்யேன்.
    வீட்டுக்கு வீடு வாசற்படி. மாமியார், மருமகள் பிரச்சனை என்பது கல்லூரி ragging போல். யான் பெற்ற இன்பம் அவளும் பெறக்காண்பதில் பல மாமியார்களுக்கு திருப்தி. சிலர், இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில் கொஞ்சம் கறாராக நடந்து கொள்வது. சிலருக்கு தானா மருமகளா என்ற போட்டி. இந்த மனநிலையில் மாத்திரம் இந்த பெண்கள் சிலர் (சில ஆண்களுமே) வயதில் என்றும் சிறு பிள்ளைகளாகவே இருந்து விடுகின்றனர். வளர்வதே இல்லை. (இந்தக் குணம் சில நாத்தனார்களுக்கும் உண்டு.) சிலருக்கு வெறுமே சுயநலம் மட்டுமே. பிள்ளையின் வாழ்வே கெட்டுவிடுமே என்பது கூட புரிவது இல்லை. இதில் மாமியார்களை மாத்திரமே குறை கூறுவதற்கில்லை. சில இடங்களில் மாமியார் நன்றாக இருக்க மருமகள் சரியாக நடப்பதில்லை. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால்; எல்லாம் அவரவர் கொண்டு வந்த வரம்! கிரகங்களின் விளையாட்டு./////

    நல்ல வேளை பிரம்மாவிற்கு தனியாக இணைய தளமும் இல்லை. மின்னஞ்சல் முகவரியும் இல்லை!:-)))))))
    உங்களின் பாராட்டிற்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. //////Blogger Sakthi- 2014 said...
    அருமையான கருத்து , படிப்பதோடு நில்லாமல் மனதில் அனுதினமும் நினைவூட்டுவது ,குடும்ப வாழ்வை செம்மையாக்கும்.
    குரு மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் பணிவான காலை வணக்கம்
    - சக்திவேல்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சக்திவேல்!

    ReplyDelete
  9. /////Blogger SELVARAJ said...
    எம் தொண்டை மண்டல தலைனரான காஞ்சி எகாம்பர நாதர் கோபுர தரிசனம் அருமை. மனம் காஞ்சிக்கு சென்றுவிட்டது./////

    ஆமாம். மனம் செல்ல வேண்டும். ஒரு ஊரை வர்ணித்து எழுதும் நோக்கமும் அதுதான். நன்றி செல்வராஜ்!

    ReplyDelete
  10. //////Blogger C.P. Venkat said...
    வாத்தியார் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம் & ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.மிகவும் அருமையாக உள்ளது, பாராட்டுகள் பல பல.
    மேலும் சிறிய வேண்டுகோள், நான் தங்களது ஜோதிட பாடங்களை படித்து வருகிறேன், முதல் பகுதியான ஜோதிட புத்தகத்தை படித்து விட்டேன். மேல்நிலை பாடங்களை படிக்க தாங்கள் அனுமதி அளிக்க வேண்டுகிறேன். ஒரு போராட்டமாக இருக்கிறது, பாதியை படித்து விட்டு ... என்ன செய்ய? அடுத்த புத்தகம் எப்பொழுது வருவது எப்போ படிப்பது. இனையத்திலும் படிக்க ஆர்வமாக உள்ளது, புத்தகம் வந்தாலும் வாங்கி வைத்து படிப்பேன்.
    Dear Sir,
    i am venkatesh, working in SRM University chennai. kindly i request to you grant me to continue astrology website studies please..//////

    எனது வலைப்பூவில் 900 ற்கும் அதிகமான ஜோதிடப் பாடங்கள் உள்ளனவே. அவை அனைத்தையும் படித்துவிட்டீர்களா?

    ReplyDelete
  11. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    மிகவும் அருமை.//உறவுகளின் மேன்மை ஒருவருக்கொருவர் நடந்து கொள்வதிலும், புரிந்து கொள்வதிலும் பரஸ்பரம் அன்பைச் செலுத்துவதிலும்தான் இருக்கிறது.// இதைதான் அனைவரும் உணர வேண்டும்.
    நன்றி
    செல்வம்///////

    உண்மை. உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி!

    ReplyDelete
  12. /////////Blogger kmr.krishnan said...
    நம்மிடம் எப்படி மற்றவர்கள் நடந்து கொள்ள‌ வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படியே நாம் மற்றவர்களிடம் நடந்து கொண்டு விட்டால் மரியாதை தன்னால் கிடைக்கும்.ஒரு ஐடியல் மாமியார். இப்படி ஊர் உலகத்தில் ஆயிரத்தில் ஒருவர் இருக்கலாம்./////

    கரெக்ட். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. Vanakkam ayya thangalin arumaiyana kathaiyaga ninaika mudiyavillai arputham nantri vazhga valamufam

    ReplyDelete
  14. மிக அருமை. சாரதா ஆட்சியின் அணுகுமுறை போல் ஒவ்வொரு மாமியாரின் அணுகுமுறையும் இருந்ததென்றால் ஒவ்வொரு குடும்பமும் விளங்கும். கதையும், கருத்தும் அருமையிலும் அருமை...!!

    எனது வலைப்பூவில் இன்று:

    டீம்வியூவர் | கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் அணுகல் மென்பொருள்

    ReplyDelete
  15. /////Blogger Gajapathi Sha said...
    Vanakkam ayya thangalin arumaiyana kathaiyaga ninaika mudiyavillai arputham nantri vazhga valamufam/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////Blogger தங்கம் பழனி said...
    மிக அருமை. சாரதா ஆச்சியின் அணுகுமுறை போல் ஒவ்வொரு மாமியாரின் அணுகுமுறையும் இருந்ததென்றால் ஒவ்வொரு குடும்பமும் விளங்கும். கதையும், கருத்தும் அருமையிலும் அருமை...!!
    எனது வலைப்பூவில் இன்று:
    டீம்வியூவர் | கம்ப்யூட்டர் டூ கம்ப்யூட்டர் அணுகல் மென்பொருள்///////

    உங்களின் மேலான பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ஆம் ஐய்யா, 750 பகுதிக்கு மேல் படித்து கொண்டிருக்கின்றேன். பிறகு தங்களுடைய விருப்பம்.(நகைச்சுவைக்காக:தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை. எப்பொழுது என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும்).

    ReplyDelete
  18. குருவே வந்தனம்.
    மிகவும் வரவேற்கத்தக்க ஒரு சிறுகதை. கூட்டுக்குடும்பத்தின் நல்ல பல உத்தேசங்களில் ஒன்றான மாமியார், மாமனாரின் அன்புக்குப் பாத்திரமானால் கிடைக்கும் ஆசிகளில் ஒரு பங்கு தான் இக்கதையின் நிகழ்வு. பிரிந்து போக நினைக்கும் ஒரு மருமகளை எவ்வளவு அழகாக அவள் மனதினின்றும் மாற்றி ஒற்றுமைக்கு வித்திடுகிறார்கள், அம மாமியார்! கதை கொண்டு போயிருக்கும் பாணியும் சிறப்பாக flashback ஆகக் காட்டியுள்ளீர்கள்!! பிரமாதம்.
    நான் வெளி மாநிலத்திலுள்ளேன். பல காரணங்களால் தாமதமாகப் பின்னூட்டம் எழுத நேர்ந்தது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  19. குருவே வந்தனம்.
    மிகவும் வரவேற்கத்தக்க ஒரு சிறுகதை. கூட்டுக்குடும்பத்தின் நல்ல பல உத்தேசங்களில் ஒன்றான மாமியார், மாமனாரின் அன்புக்குப் பாத்திரமானால் கிடைக்கும் ஆசிகளில் ஒரு பங்கு தான் இக்கதையின் நிகழ்வு. பிரிந்து போக நினைக்கும் ஒரு மருமகளை எவ்வளவு அழகாக அவள் மனதினின்றும் மாற்றி ஒற்றுமைக்கு வித்திடுகிறார்கள், அம மாமியார்! கதை கொண்டு போயிருக்கும் பாணியும் சிறப்பாக flashback ஆகக் காட்டியுள்ளீர்கள்!! பிரமாதம்.
    நான் வெளி மாநிலத்திலுள்ளேன். பல காரணங்களால் தாமதமாகப் பின்னூட்டம் எழுத நேர்ந்தது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  20. good story sir.But you are always writing baseod on chettiar background.why sir?

    ReplyDelete
  21. /////Blogger C.P. Venkat said...
    ஆம் ஐய்யா, 750 பகுதிக்கு மேல் படித்து கொண்டிருக்கின்றேன். பிறகு தங்களுடைய விருப்பம்.(நகைச்சுவைக்காக:தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை. எப்பொழுது என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும்)//////.

    அதுவும் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும்!

    ReplyDelete
  22. ////Blogger வரதராஜன் said...
    குருவே வந்தனம்.
    மிகவும் வரவேற்கத்தக்க ஒரு சிறுகதை. கூட்டுக்குடும்பத்தின் நல்ல பல உத்தேசங்களில் ஒன்றான மாமியார், மாமனாரின் அன்புக்குப் பாத்திரமானால் கிடைக்கும் ஆசிகளில் ஒரு பங்கு தான் இக்கதையின் நிகழ்வு. பிரிந்து போக நினைக்கும் ஒரு மருமகளை எவ்வளவு அழகாக அவள் மனதினின்றும் மாற்றி ஒற்றுமைக்கு வித்திடுகிறார்கள், அம மாமியார்! கதை கொண்டு போயிருக்கும் பாணியும் சிறப்பாக flashback ஆகக் காட்டியுள்ளீர்கள்!! பிரமாதம்.
    நான் வெளி மாநிலத்திலுள்ளேன். பல காரணங்களால் தாமதமாகப் பின்னூட்டம் எழுத நேர்ந்தது. மன்னிக்கவும்./////

    அதனாலென்ன பரவாயில்லை. படித்தால் போதும்! நன்றி!

    ReplyDelete
  23. //////Blogger srinits78 said...
    good story sir.But you are always writing baseod on chettiar background.why sir?/////

    எல்லாம் குடும்பக்கதைகள்தான். எல்லா சமூகங்களும்மும் பொருந்தக்கூடியதுதான். வட்டார வழ்க்கில் எழுதுகிறேன். நான் அந்தப் பகுதியைச் சேர்ந்தவன். நான் எழுதும் பத்திரிக்கைகளைப் படிப்பவர்களும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள். எல்லாம் ஒத்துப்போகிறது! அவ்வளவுதான்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com