மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.5.15

சிறுகதை: அன்னையின் வளர்ப்பு!


சிறுகதை: அன்னையின் வளர்ப்பு!

அழகு சுந்தரி ஆச்சியின் அடையாளப் பெயர்தான் வசவு சுந்தரி ஆச்சி.
அவர்கள் குடியிருக்கும் பகுதி மக்கள்தான் அந்த அடையாளப் பெயரைச் சூட்டியிருந்தார்கள்.

மதுரை கோரிபாளையத்தில் ஜம்புரோபுரத்தில்தான் ஆச்சியின் வீடு.
அந்தப் பகுதியில் வசிக்கும் நகரத்தார்களின் மூலம், ஆச்சியின் பிறந்த ஊரிலும் வாழ்க்கைப் பட்ட ஊரிலும் அந்தப் பெயர் பரவி பிரபலமாகி
விட்டது. ஆச்சியை அறிந்த ஊர்க்காரர்கள் எல்லாம் அது சரியான
பெயர்தான் என்று புன்னகையோடு ஏற்றுக்கொண்டார்கள்.

அந்தப் பெயருக்கு என்ன காரணம்?

ஆச்சி அவர்கள் சின்ன வயதில் வளர்ந்த சூழ்நிலைதான் முக்கியமான காரணம். அத்துடன் ஆச்சி அவர்களுக்கு தன்னுடைய உடன் பிறப்புக்கள்
மீதும், கணவர் வீட்டு ஜனங்களின் மீதும் பற்று இல்லாமல் போனதும்
ஒரு காரணம்.

காலையில் எழுந்தது முதல் படுக்கச் செல்லும்வரை யாரையாவது
திட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். பட்டுக்கிடப்பான், மொட்டையாய்ப் போவான், நாசமாய்ப் போவான் என்ற சொற்கள் சர்வ சாதாரணமாக
வந்து விழும்.

காலையில் பால்காரன் வருவதற்குச் சற்றுத் தாமமதமானால், “பட்டுக்கிடப்பான், ஊத்துகிற தண்ணிப் பாலை நேரத்திற்குக் கொண்டு
வந்து ஊத்திவிட்டுப் போனால் என்ன?” என்பதில்தான் பொதுவாக
காலையில் வசைப் புராணம் துவங்கும். தெருவிற்கே கேட்கிறமாதிரி
சத்தமாக இருக்கும். பெங்களூர் ரமணியம்மாள் மாதிரி கணீரென்ற
குரல் ஆச்சிக்கு.

”என்னப்பனே ... என் அய்யனே ...
கந்தப்பனே கந்தக் காருண்யனே
பன்னிருகை வேலவனே
கன்னி வள்ளி மணவாளனே”
என்ற பாடல் வரிகளுக்குப் பதிலாக

என்னப்பனே......என் அண்ணனே....
கண்ணப்பனே....கருணை இல்லாதவனே
பணத்தைச் சுருட்டி வைப்பவனே
பார்வதிஆச்சி மணவாளனே” என்று இருக்கும்

ஆச்சியின் கணவர் சிதம்பரம் செட்டியார், அடிக்கடி சொல்வார்.” சுந்தரி,
நீ பாட்டுக்கு யாரையாவது திட்டிக்கொண்டே இருக்கிறாய். தெருவில் போகிறவர்கள் காதில் விழுந்து, நான் தான் உன்னிடம் டோஸ்
வாங்குகிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள். கொஞ்சம்
மெதுவாகத் திட்டு”

“நெனச்சால் நெனைத்துவிட்டுப் போகிறான்கள் கழிசரைப் பயல்கள். நீங்கள்தான் பிள்ளைப் பூச்சியாயிற்றே - உங்களை நான் ஏன் திட்டப் போகிறேன்” என்று சொல்வார்.

இந்த இடத்தில் ஆச்சியின் பிறப்பு வளர்ப்பைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.

ஆச்சி அவர்களுக்கு இப்போது 42 வயது. அவர்களுடைய அப்பச்சி சுவாமிநாதன் செட்டியாருக்கு ஆச்சி எட்டாவது பிள்ளை. எட்டாவது
பிள்ளை சுட்டியாக இருக்கும் என்பார்கள். ஆச்சிக்கு மூன்று
சகோதரர்களும், நான்கு சகோதரிகளும் மூத்தவர்களாகப் பிறந்தவர்கள்.
ஆச்சி பிறந்த அன்றே ஆச்சியின் அழகைப் பார்த்துச் சீராட்டப் பூவுலகில் இல்லாமல் ஆச்சியின் தாயார் மேல் உலகம் சென்றுவிட்டார்கள்.

ஆச்சியின் சின்ன அத்தை கமலா ஆச்சி தன் அண்ணனிடம்,”அண்ணே,
பச்சைக் குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வாய் நீ? எனக்குத்தான் குழந்தை இல்லையே. நான் கொண்டு போய் இதை நன்றாக வளர்க்கிறேன். ” என்று சொல்லிப் பச்சைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிங்காரச் சென்னைக்கு வந்து விட்டார்கள்

கமலா ஆச்சிக்கு செளகார்பேட்டை ஏழு கிணறு பகுதியில் வீடு. சவுக்கார் என்றால் பணத்தைக் கொடுத்து வாங்கும் மணி லெண்டர்ஸ் என்று பொருள்படும். அந்தத் தொழிலில் பெரும்பாலும் வட இந்தியர்களும் தெலுங்குக்காரர்களும் அதிகமாக இருந்ததால் சவுக்கார் பேட்டை என்று அந்தப் பகுதி பெயர் பெற்றுக் காலப் போக்கில் செளகார்பேட்டை என்று மாறிவிட்டது.

ஆச்சி 3 வயதுக் குழந்தையாக இருக்கும்போது கற்றுக்கொண்ட முதல்
வசை மொழி: துன்னப்போத்தா. தெலுங்கில் துன்னப்போத்தா என்றால்
எருமை மாடு என்று பொருள். சுந்தரத் தெலுங்குக்காரர்கள் தங்கள் குழந்தைகளைத் திட்டுவதற்குப் பயன் படுத்தும் சொல் அது!

எழுத்தில் வடிக்க முடியாத வேறு சில தெலுங்கு வசை மொழிகளையும்
அந்த வயதில் கற்றுக் கொண்டார். கஸ்மாலம், பேமானி போன்ற சிங்காரச் சென்னையின் வசை மொழிகளும் ஆச்சிக்குப் பரீட்சயமாயின. அத்துடன் செட்டிநாட்டு வசை மொழியான பட்டுக்கிடப்பானும் பின்னாளில் பழக்கமாயிற்று.

மகாபரதத்தைத் தன் நூலில் விமர்சித்த திரு. பழ.கருப்பையா அவர்கள்
இப்படி அருமையாக எழுதினார்:

”மகாபாரதத்தில் குந்தியின் பங்கு மிகப் பெரியது. பாண்டவர்களின் சிறப்பிற்குக் காரணம் அவர்களைக் குந்தி பெற்றது மட்டுமல்ல
அவர்களையும், அவர்களின் வாழ்க்கை முறைகளையும் குந்தியே வடிவமைத்ததுதான்! ஐந்து வயதில் அண்னன் தம்பி; பத்து வயதில்
பங்காளி என்னும் பழமொழியைச் செல்லாததாக்கி எல்லா வயதிலும் அண்ணன் தம்பிதான் என்று ஆக்கியவள் குந்திதான். பாண்டுவோடு
சேர்ந்து குந்தி இறந்துபோய், பாண்டவர்களை வளர்க்கும் பொறுப்பு
குந்தியின் சக்களத்தி மாத்திரிக்கு வந்து சேர்ந்திருந்தால், பாண்டவர்கள்
மாடு மேய்க்கத்தான் போயிருப்பார்கள்!”

அசத்தலாக ஒரு போடு போட்டார் பார்த்தீர்களா?

இதையே, அதாவது பிள்ளை வளர்ப்பைப் பற்றிக் கவியரசர் கண்ணதாசன் அவர்களும் கருத்தாழம் மிக்கப்பாடல் வரிகளில் சொன்னார்:

எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே  - அவர்
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே"

பெற்றோர்கள் எவ்வளவு தூரத்திற்குக் கண்டிப்பும், கடினமும், தண்டனை விதிப்பவர்களாகவும் இருக்கின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களின் பிள்ளைகள் பின்னர் மிகவும் வலுச்சண்டையாளர்களாக, ஊறு விளைவிப்பவர்களாக, இன்னா செய்பவர்களாக வளர்கின்றார்கள் என்பது உளவியலாளர்களின் கணிப்பு. இதனை நாம் நமது அனுவபவாயிலாகவும் காணலாம். கண்டிப்பான பெற்றோரின் பிள்ளைகள் ஒன்று மிகவும் பயந்த சுபாவமுடையவர்களாக அல்லது ஆக்கிரமிப்புத்தன்மை மிக்க வலுச்சண்டைக்காரராக வளர்வார்கள்.

                    ******************************

சுந்தரி ஆச்சிக்குப் பத்து வயதாக இருக்கும்போது நடந்த சம்பவம் முக்கியமானது.

சுந்தரி ஆச்சியின் அத்தை கமலா ஆச்சி குடியிருந்த ஏழுகிணறு
பகுதியில் பங்காரம்மா ஆப்பக்கடை மிகவும் பிரபலமானது. பங்காரம்மா
 வீட்டு வாசலிலேயே நடை மேடையை உள்ளடக்கிக் கடை போட்டிருப்பார். ஆப்பம், புட்டு, இட்லி  என்று சுடச்சுட எல்லாம் கிடைக்கும். காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை ஒரு நேரம் மட்டுமே வியாபாரம்.

இரண்டு அண்டாக்களில் ஆட்டின மாவு, பெரிதும் சிறிதுமான பாத்திரங்களில், சட்னி, சாம்பார், தேங்காய்ப்பால் என்று பக்கவசத்தில் பாத்திரங்களை வைத்துக்கொண்டு, எதிரில், அடுப்பில் ஆப்பச் சட்டிகளுடன் பங்காரம்மா அமர்ந்திருப்பார். பக்கத்தில் இன்னொரு அடுப்பில் பெரிய இட்லிச்
சட்டியுடன் பங்காரம்மாவின் மகள் வேலை செய்து கொண்டிருப்பார்.
வருகிற வாடிக்கையாளர்களை இருவருமே மாற்றி மாற்றி கவனித்துக் கொள்வார்கள்.

அன்று குழந்தையாக இருந்த சுந்தரி ஆச்சி, பங்காரம்மாவின் கடைக்குச் சென்ற போது, கடை வாசலில் கலவரமாக இருந்தது. பத்து அல்லது
பதினோரு பேர்கள் நின்று கடையை மூடச் சொல்லிக் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைவர் இறந்து போய்விட்டாராம். அதனால் நகரம் முழுவதும் துக்கம் அனுஷ்ட்டித்துக் கடையடைப்பாம்.

பங்காரம்மா, அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். “ராசாக்களா,
இன்னும் ஒரு மணி நேரத்தில் அடைத்து விடுகிறேனப்பா. இந்த
மாவெல்லாம் தீர வேண்டும். இல்லையென்றால் வீணாகிவிடும்
சாமிகளா”

அவர்கள் அதைக் காது கொடுத்துக் கேட்கவில்லை. அவர்களில் அந்த
வட்டத் தலைவன் போலிருந்தவன், “கிழவியிடம், என்னடா பேச்சு? எல்லாவற்ரையும் தூக்கிக் கடாசுங்கடா” என்று சொல்லியவாறு மாவு நிரம்பியிருந்த ஒரு அண்டாவை எட்டி உதைய, அது கவிழ்ந்து அருகிலிருந்த சாக்கடையில் போய் விழுந்தது. அடுத்தடுத்து அனைவரும் சேர்ந்து கடையைத் துவம்சம் செய்துவிட்டுப் போய் விட்டார்கள்.

நொந்து போன பங்காரம்மா, நெஞ்சில் அடித்துக் கொண்டு, அழுகுரலோடு சாபமிடத் துவங்கினார். ”பாவிப் பசங்க, இந்த ஏழை வயித்துல அடிச்சிட்டுப் போறானுங்களே, இவனுங்க கால்ல கட்டை முளைக்க”

தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்தார்களே தவிர, பங்காரம்மாவிற்கு ஆறுதல் சொல்ல வரவில்லை.

வீட்டிற்குத் திரும்பிவந்த சுந்தரி, தன் வளர்ப்புத் தாயாரிடம் கேட்ட கேள்வி, “ஆத்தா கால்ல கட்டை முளைக்கன்னா என்னாத்தா அர்த்தம்? கால்ல
எப்படிக் கட்டை முளைக்கும்?”

நடந்ததை விசாரித்துவிட்டு, கமலா ஆச்சி விளக்கம் சொன்னார்கள்
.” கால் துண்டாகி, கட்டைக் கால்களுடன் நடக்கும் நிலைமைதான் காலில் கட்டை முளைப்பது. ஆகவே யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது. பாதிக்கப் பட்டவர்கள் சாபம் கொடுத்தால் அது பலித்து விடும்”

என்ன ஆச்சரியம்! இரண்டு மாதத்தில் சாலை விபத்தில் தனது கால்களைப் பறிகொடுத்த அந்த வட்டத் தலைவன், கட்டைக் கால்களுடன் நடக்க ஆரம்பித்தான்.  உண்மையான சாபத்தின் வலிமை அதுதான்.

அதைக் கண்ணால் பார்த்த சுந்தரியின் மனதில் அந்தச் சம்பவம் ஆழமாகப் பதிந்துவிட்டது.

                                      ************************************
சுந்தரி ஆச்சி பள்ளி இறுதியாண்டுவரை படித்தார்கள். அதற்குப் பிறகு படிப்பைத் தலை முழுகிவிட்டார்கள். தன் வளர்ப்பு ஆத்தாளுக்கு உதவியாக வீட்டு வேலைகளை எல்லாம் செய்து கொடுப்பார்கள். சமையல் செய்வதையும் ஆர்வமாகவும் முனைப்பாகவும் கற்றுக்கொண்டார்கள்.

சடங்கான பிள்ளையை எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டில் வைத்துக்கொள்வது என்று வளைப்புத் தாயாரும், சுந்தரி ஆச்சிக்கு 21 வயதாகும்போது ஒரு எதவான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து, திருமணத்தைச் செய்து வைத்தார்கள்.

ஆச்சியின் தந்தையாரும், ஆச்சிக்குப் பதினைந்து வயதாக இருக்கும்
போதே இறந்து போய்விட்டார்கள். அத்துடன் ஆச்சியின் நான்காவது சகோதரிக்கும்  திருமணத்தை முடிக்கும் முன்பாகவே காலமாகி
விட்டார்கள். இருந்த சொந்தக்காரர்கள் எல்லாம் ஆளாளுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று பணம் போட்டு அந்தப் பெண்ணைக்
கரையேற்றினார்கள்.

சுந்தரி ஆச்சியின் திருமணத்திற்கு யாரும் பொருள் உதவி செய்யவில்லை. வளர்ப்புத்தாயாரே, தன் சேமிப்புப் பணத்தின் மூலம் திருமணத்தை நடத்தி வைத்தார். உடன் பிறப்புக்கள் ஏழு பேர்களும் உதவிக்கரம் நீட்டாதது ஆச்சியின் மனதைப் பெரிதும் பாதித்தது. அவர்கள் ஒருவரையும்
பிடிக்காமல் போயிற்று. ஆனால் பார்த்தால் ஒப்புக்காகப் பேசிக்கொள்வார். அவர்கள் தலை மறைந்ததும் திட்டித் தீர்ப்பார்.

சுந்தரி ஆச்சியின் கணவர் சண்முகம் செட்டியாருக்கு, தனியார் பேருந்துக் கம்பெனி ஒன்றில் வேலை. மதுரை அரசரடிப் பகுதியில் அலுவலகம். கோரிப்பாளையம் வீட்டில் இருந்து தனது அலுவலகத்திற்கு சைக்கிளில்
தான் போய் வருவார். கைக்கும் வாய்க்குமான வருமானம்.

ஆச்சிக்குத் திருமணமான ஒரு வருடத்திலேயே, ஆண் மகவு ஒன்று
பிறந்து, தம்பதிகளை மகிழ்வித்தது.

ஆச்சி குடியிருக்கும் வீடு சின்ன வீடு. ஆகவே ஆச்சியின் உடன் பிறப்புக்களாகட்டும் அல்லது அவருடைய கணவரின் உடன் பிறப்புக்களாகட்டும் யாரும் வீட்டில் வந்து இறங்கமாட்டார்கள்.
மீனாட்சி கோவிலுக்கு வருகிறவர்கள் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவார்கள்.

ஆச்சி ரோஷக்காரி, வருகிறவர்கள் யாரிடமும் தன் வறுமையான சூழ்நிலையை வெளிப்படுத்த மாட்டார். அத்துடன் வருகிறவர்கள்
யாராவது நூறு இருநூறு என்று பணம் கொடுத்தால் கை நீட்டி வாங்கவும் மாட்டார்.

ஆச்சியின் பெரிய அண்ணன் மட்டும் செல்வச் செழிப்புடன் இருந்தார்.
தொழில் செய்து நிறையப் பணம் சம்பாத்தித்துவிட்டார். அத்துடன் அவருடைய மாமனார் வீட்டில் இருந்து அவர்களுடைய பூர்விகச் சொத்துக்களை விற்று வரும் பணத்தில் இருந்து அவ்வப்போது
லட்சங்களாகக் கொடுத்து வந்தார்கள். திருச்சியில் வசித்து வந்த அவர், வருடத்திற்கு இரண்டு முறை தன் தங்கையை வந்து பார்த்து விட்டுப்
போவார்.

புறப்படும்போது ஐநூறு ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்துத் தன் தங்கை
மகன் சோமசுந்தரத்திடம் கொடுத்துவிட்டுப் போவார்.

சோமசுந்தரத்திற்கு இப்போது வயது 20. தியாகராஜர் பொறியியற்
கல்லூரில் பி.இ இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறான். மதிப்பெண் அடிப்படையின் (மெரிட்) காரணமாக அங்கே இடம் கிடைத்தது.
அத்துடன், கோவிலூர் மடம், அமெரிக்க நகரத்தார் சங்கம் ஆகியோரின் கல்வித் தொகை உதவியால் படிப்பும் சிரமமின்றி போய்க் கொண்டிருந்தது.

தன் பிறந்த வீட்டில் இருந்து காலணா காசு கூட லெவிக்கவில்லையே
என்பது ஆச்சி அவர்களுக்கு உள்ள ஒரே ஒரு வருத்தம். அதன்
வெளிப்பாடாக தன் உடன் பிறப்புக்கள் அனைவரையும் அவ்வப்போது
திட்டித் தீர்ப்பார். தன் மகன் படித்து முடித்து வேலைக்குச் சென்றால்
தன் வீட்டு நிலைமை சீராகும் என்று தன் மனதை சமாதானமும் செய்து கொள்வார்.

ஆச்சி அவர்களின் தந்தையார் சுவீகாரம் வந்தவர். வந்த இடத்தில்
இருந்த சொத்துக்களெல்லாம், பிளைகளை வளர்த்ததில், பெண்மக்களுக்குத் திருமணம் செய்து வைத்ததில் கரைந்துபோய் விட்டது. வீடு ஒன்றைத்
தவிர வேறு ஒன்றும் மிச்சமில்லை. ஆனால் அவர்பிறந்த வீட்டில்
திண்டுக்கல் அருகே இருந்த நிலத்தில், அவருக்கும் பங்கு உண்டு என்று அவருடைய பெற்ற தந்தையார் உயில் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தாராம்.  அதை மறைத்து அவர் பிறந்த இடத்து மூத்த சகோதரர்.
ஒரு ஆலை அதிபருக்குப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு விற்று
நன்றாகப் பணம் பண்ணிவிட்டார். மொத்தம் 50 ஏக்கர் பூமி. அது தெரிந்து
பதிவு செய்யப்பெற்றிருந்த அந்த உயிலின் பிரதியைப் பெற்று, ஆச்சியின் மூத்த சகோதரர், விலைக்கு வாங்கிய ஆலை அதிபருடன் பேச்சு நடத்திக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்தன. சமரசம் செய்தால் 4 அல்லது
5 கோடிகள் பணம் வரும். சுந்தரி ஆச்சியின்  பங்கிற்கும் கணிசமான
பணம் வரும். ஆனால் எப்போது வரும் என்று தெரியவில்லை. ஆச்சியின் அண்ணன் கண்ணப்ப செட்டியாரும் அது விஷயமாக சுறுசுறுப்பாகச் செயல் பட வில்லை. ஆச்சி அவர்களுக்கு அதிலும் வருத்தந்தான் மிச்சம். அதனால்தான் தன் மூத்த சகோதரரை ஆச்சி அவர்கள் அதிகமாகத் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார்கள்.

***********************************************

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். அதை ஆச்சி அவர்களுக்கு உணர்த்தும் விதமாக காலதேவன் அதிரடியாக ஒரு நிகழ்வை
ஏற்படுத்தினான்.

ஆச்சியின் கணவர் சண்முகம் செட்டியார், ஒரு நாள் காலை தன் அலுவலக வாசலில்  லாரி ஒன்றில் அடிபட்டு விபத்துக்குள்ளாகிவிட்டார். தலையில் பலமான அடி. அலுவலக ஊழியர்கள் அவரைத் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொண்டுபோய்ச் சேர்த்ததுடன், ஆச்சி அவர்களுக்கும் தகவலைச் சொல்லியனுப்பினார்கள். அவசரச் சிகிச்சைக்கு முன்பணமாக ஐம்பதாயிரம் ரூபாயையும் செலுத்தியிருந்தார்கள்.

தலையில் ரத்தம் கட்டியிருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை நீக்கி ரத்த ஓட்டத்தைச் சீராக்க வேண்டும், மூன்று லட்ச ரூபாய்களைக் கட்டுங்கள் என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள்.

மூன்று லட்ச ரூபாய் என்றவுடன், ஆச்சி அவர்கள் திகைத்துப் போய்விட்டார்கள். அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது?

தகவல் தெரிந்து உடனே புறப்பட்டு வந்திருந்த ஆச்சியின் பெரிய அண்ணன் கண்ணப்ப செட்டியார், மருத்துவ மனையில் பணத்தைக் கட்டி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். மூன்று நாட்கள் சிகிச்சையில், சண்முகம் செட்டியாருக்கு நினைவு வந்து விட்டது. மேலும் ஒருவாரம் கண்கணிப்பில் இருக்க வேண்டும் என்றார்கள். அதற்கும் கண்ணப்ப செட்டியார் பணத்தைக் கட்டினார். மேலும் தன் தொழில் மற்றும் வேலைகளை விட்டுவிட்டு மருத்துவமனையிலேயே இருந்தார்.

தகவல் தெரிந்து சுந்தரி ஆச்சியின் மற்ற உடன் பிறப்புக்களும், கணவன்
வழிச் சொந்தக்காரர்களும் வந்துவிட்டார்கள். வந்தவர்கள் எல்லாம் ஆளாளுக்கு முடிந்த தொகைகளைக் கொடுத்தார்கள்.

உறவின் வலிமை, முதன் முதலாக சுந்தரி ஆச்சிக்குப் புரிந்தது. கணவர் காப்பாற்றப் பட்டதில் ஆச்சி அவர்களுக்கும் பெருத்த நிம்மதி
உண்டாயிற்று.

இருபது நாட்களில் அவர் குணமாகி வீடு திரும்பியவுடன் சொந்தக்காரர்கள் எல்லாம் ஆறுதல் சொல்லிக் கிளம்பியபோது, சுந்தரி ஆச்சி கண்கலங்கியவாறு மெளனமாக அனைவரையும் கையெடுத்துக்
கும்பிட்டார். மூத்த சகோதரர் கண்ணப்ப செட்டியார் சொல்லிக் கொண்டு கிளம்பிய போது, அவர் காலில் விழுந்து கதறி அழுத சுந்தரி ஆச்சி, இரு கைகளாலும் அவரை வணங்கி தன் நன்றிக் கடனையும் தெரிவித்தார்.

"எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்"

என்று வாழ்க்கைப் பயணத்திற்கு அற்புதமாக விளக்கம் சொன்னார் கவியரசர் கண்ணதாசன். பாதை மாறினாலும், பயணம் மாறினாலும் உறவுகள் மட்டும் மாறாது. அது தொடர்ந்து வரும். அதுதான் உணர்வுகளின் மேன்மை என்பதை சுந்தரி ஆச்சி நன்றாகப் புரிந்து கொண்டார்.

அப்புறம்?

அப்புறம் என்ன? சுந்தரி ஆச்சி இப்போது யாரையும் திட்டுவது இல்லை! பால்காரன் உட்பட யாரையும் திட்டுவதில்லை!
--------------------------------------------
மாத இதழ் ஒன்றிற்காக எழுதிய சிறுகதை இது. அதை இன்று
நீங்கள் அறிந்து கொள்ளப் பதிவிட்டிருக்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. Respected Sir,

    Happy morning... Very interesting story...

    Have a pleasant day.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  2. வழக்கம் போல செட்டிநாட்டு மண் வாசனைக்கதை. 'எதவாக','லெவிக்கவில்லை' போன்ற சொற்கள் கதைக்கு மெருகூட்டுகின்றன.

    'லபிக்கவில்லை' என்ற சொல் செட்டிநாட்டுப் பேச்சு வழக்கில் லெவிக்கவில்லை ஆகிறது. எதவான என்பது ஏதுவான என்பதின் பேச்சு வழக்காக இருக்கலாம்.

    'என்னப்பனே' பாடல் போலவே தன் அண்ணனைத் திட்டுவார்கள் என்பது உங்கள் கற்பனையாக இருக்கலாம் என்றாலும், உண்மையாகவே அப்படி ஒரு நபரை நான் கண்டிருக்கிறேன்.விடியற்காலையில் ஸ்லோகம் சொல்லிக் கொண்டு பால் வாங்கப் போவார். அப்படித்தான் எல்லோரும் நம்பியிருந்தனர். ஒருநாள் நான் கூர்ந்து கேட்ட போதுதான் ஸ்லோகம் சொல்லும் அதே த்வனியில், பாணியில் திட்டிக் கொண்டே செல்கிறாரென்பதைக் கண்டு கொண்டேன்.

    பல உண்மைச் சம்பவங்கள் நகரத்தார்களைப் பற்றி அறிவேன்.பெரும்பாலும் ஊரில் கருமி என்று பெயர் எடுத்த செட்டியார்கள் பல பேர் ஓர் அதி முக்கியமான சமயத்தில் கணக்குப் பார்க்காமல் செலவு செய்ததைப் பார்த்து இருக்கிறேன்.கண்ணப்பன் செட்டியாரைப் போல பலரையும் சந்தித்த அனுபவம்
    அடியேனுக்கு உண்டு.

    நல்ல கதை. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    புத்தகங்கள் எப்போது வெளியாகும் ஐயா ஆவளாக ஊள்ளேன்

    ReplyDelete
  4. வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.

    உண்மையிலே சுந்தரி ஆட்சி குடுத்து வைத்தவர் தான் அவருக்காவது தக்க சமயத்தில் உதவ ஆள் இருந்தது .

    எமக்கோ ( தந்தைக்கோ ) எவரும் இல்லை . ஆள்கள் நிறைய இருந்தனர் எண்ணிக்கைக்கு உண்மையை சொல்ல போனால் அடுத்தவர் உதவ கொடுத்து வைக்க வில்லை என்பது தான் .

    என்னுடைய ஐயாவை நினைக்க வைத்து விட்டது ஐயா தங்களுடைய ஆக்கம்.

    நன்றி ! வணக்கம்! . நன்றி !

    ReplyDelete
  5. இந்த கதையை நான் படிக்கவில்லை
    இது வருகை பதிவு மட்டுமே...

    ReplyDelete
  6. ராட்ஷஸ கணத்தில் மற்றும் 2ல் செவ்வாய் உள்ளவர்கள் வசை பாடுவர்கள் அல்லவா?

    ReplyDelete
  7. அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா..
    எங்க ஏரியாவில ஒரு பழ மொழி சொல்லுவாங்க ..!!!
    பன்னியோட சேர்ந்த கண்ணு குட்டியும் பீ திங்கும் ..!!
    அதாவது குணம் கெட்டவ்ரக்ளோடு சேர்ர்ந்த உயர்குடி பிள்ளைகளாக இருந்தாலும் கெட்டு போவார்கள் என்பது ..!!!
    அது மாதிரி வளர்ப்பு நன்றாக இருந்தால் நல்லவர்களாகவே இருப்பார்கள் ...!!!
    சிறுகதை நல்ல இருக்கு ..வளரும் சூழல் நன்றாக இருந்தால்குழைந்தை நன்றாக வளரும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com