கவிதை: ஒரே பாட்டில் எத்தனை உவமைகள்டா சாமி!
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
பொன்னோவியம் என்று பேரானதோ?
என் வாசல் வழியாக வலம் வந்ததோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ?
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ?
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ?
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ?
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?
எந்நாளும் பிரியாத உறவல்லவோ?
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ?
செவ்வானமே உந்தன் நிறமானதோ?
பொன் மாளிகை உந்தன் மனமானதோ?
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ?
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ?
செவ்வானமே உந்தன் நிறமானதோ?
ஆஆஆஆஆ ஆஆஆ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ?
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ?
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ?
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ?
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ?
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ?
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ?
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ?
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ?
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ?
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ?
செவ்வானமே உந்தன் நிறமானதோ?
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?
செந்தாமரை இரு கண்ணானதோ?
ஆஆஆஆ ஆஆ
படம் : சந்திரோதயம்
குரல் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர்: வாலி
ஆண்டு: 1966
---------------------------
ஒரே பாடலில் எத்தனை உவமைகள்!
சந்திரோதயம் ஒரு பெண்ணானது
செந்தாமரை இரு கண்ணானது
பொன்னோவியம் என்று பேரானது
என்று 3 உவமைகளைப் பல்லவியில் சொன்ன கவிஞர் தொடர்ந்து சொல்கிறார்:
குளிர் காற்று கிள்ளாத மலர்
கிளி வந்து கொத்தாத கனி
நிழல் மேகம் தழுவாத நிலவு
என்று 3 உவமைகளில் நாயகியின் மேன்மையை வர்ணிக்கின்றார்.
இளம் சூரியன் உந்தன் வடிவு
செவ்வானமே உந்தன் நிறம்
பொன் மாளிகை உந்தன் மனம்
என்று மேலும் 3 உவமைகளைக் கொண்டு நாயகனின் பெருமைகளைச் சொல்கின்றார்
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பு
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பு
சங்கீதம் பொழிகின்ற மொழி
சந்தோஷம் வருகின்ற வழி
என் கோயில் குடி கொண்ட சிலை
என்று 5 உவமைகளில் நாயகியின் நிலைப்பாட்டை வர்ணிக்கின்றார்
அலையோடு பிறவாத கடல் இல்லை
நிழலோடு நடக்காத உடல் இல்லை
துடிக்காத இமையோடு விழியில்லை
துணையோடு சேராத இனமில்லை
என்று 4 உவமைகளில் வாழ்க்கையின் நிலைப்பாட்டைத் தத்துவமாகவும் சொல்கின்றார்
மொத்தம் 18 உவமைகளைக் கொடுத்துப் பாட்டைக் கலக்கலாக எழுதியிருக்கிறார். பாடலைக் கேட்டுப் பாருங்கள். அப்போதுதான் தெரியும் பாடலின் மேன்மை. இசையமைப்பாளர், பாடலைப் பாடியவர்கள் என்று அனைவரும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். ஒரு நல்ல பாடலைக் கேட்ட மகிழ்ச்சி கேட்ட அன்று முழுவதும் மனதில் நிற்கும்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
 

 

 
அம்மாவுக்காக
ReplyDeleteஅந்த பாட்டை பார்த்தேன்...
வாழ்க
வாத்தியார்...
சினிமா பாடல் என்று ஒதுக்காமல் அழ்காக அதனை விளக்கிய உங்களுக்கு நன்றிகள் ஐயா!
ReplyDeleteவாத்தியார் அய்யனுக்கு,
ReplyDeleteதங்களுக்கு அமைந்த மனது போல எமக்கு அமைய விருப்பபடுகின்றேன். ஏனென்றால் வகைவகையாக தினுசு தினுசாக தினமும் ஒரு நல்ல படைப்பை தருகின்றீர்களே அதனால் தான் ஆசானே.
நன்றி. வணக்கம்