மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.4.12

உணவுக்கும் நீருக்கும் உடைக்கும் இருப்பிடத்திற்கும் குறைவின்றி இருப்பது எப்படி?

 மாணவர் மலர்


இன்றைய மாணவர் மலரை ஐவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1


 கடல் சம்பந்தப்பட்ட சில புராண நிகழ்வுகள் 
ஆக்கம்: பார்வதி ராமச்சந்திரன், பெங்களூரு

'ஆழி சூழ் உலகு,' என்றும் 'நீரின்றி அமையாது உலகு' என்றும் போற்றப்படுகின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் தானே நாமும் வாழ்கிறோம்!!!. கடலை மையமாக வைத்து நடந்த காவியச் சம்பவங்கள், புராணங்கள் எத்தனை......எத்தனை. அகத்திய மாமுனி கடலைக் குடித்த கதை நாம் யாவரும் அறிந்ததே.

நாரம் என்றால் நீர். அயனம் என்றால் மிதப்பது. பகவான் ஸ்ரீமந் நாராயணன் பாற்கடலில் பள்ளிகொண்ட காரணத்தாலேயே அவருக்கு அப்பெயர் ஏற்பட்டது.

இப்படி எத்தனை......எத்தனை,சிறப்புகள்?.நாம் இக்கட்டுரையில் கடல் சம்பந்தப்பட்ட சில புராண நிகழ்வுகளைப் பார்க்கலாம்.

திருமாலின் பத்து அவதாரங்களுக்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
  • மச்ச அவதாரம்---------- (மீன், நீரில் வாழ்வது)
  • கூர்ம அவதாரம் ------------(ஆமை, நீரிலும் நிலத்திலும் வாழ்வது)
  • வராக அவதாரம் ------------( பன்றி, நிலத்தில் வாழ்வது)
  • நரசிம்ம அவதாரம் ------------( மனிதனும், மிருகமும் கலந்த தோற்றம்)
  • வாமன அவதாரம் ----------------(குள்ளஉருவமுள்ள மனிதன்)
  • பரசுராம அவதாரம் ----------------( ரஜோகுணம், கோபமுள்ள மனிதன்)
  • பலராம‌ அவதாரம்------------------- (சாதாரண மனிதன்)
  • ஸ்ரீராம அவதாரம்-------------------- (சத்வ குணமுள்ள தெய்வீகமான மனிதன்)
  • ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்------------ ( தெய்வத்தன்மை நிறைந்த‌ பரிபூரண அவதாரம்).
திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம், பிரளய காலத்தில், கடலில் நிகழ்ந்தது.

சோமுகாசுரன் என்ற அசுரன் அக்கினி மத்தியிலே சிவனை வேண்டி தவம் செய்து வரங்கள் பல பெற்றவன். அயக்கிரீவன் என்பது இவனது மற்றொரு பெயர். ஒரு நாள் சத்தியலோகத்தில், பிரம்மதேவன் சோர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த சமயத்தில் அவர் வாயிலிருந்து வேதங்கள் தாமாக வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவன், வேதங்களைத் தன் யோகசித்தியினால் கவர்ந்து கொண்டுபோய் கடலடியில் ஒளித்து வைத்தான். வேதங்கள் இல்லாமல், பிரம்மன் சிருஷ்டிகள் செய்ய இயலாது.

தேவர்கள் இதனைக் கண்டு பயந்து போய், திருமாலிடம் முறையிட்டனர். அவர், தாம் அவர்களைக் காப்பதாக, அபயம் அளித்தார்.

அப்போது பிரளய காலம். கடல்தாய் கடவுள் ஆணைப்படி, பரந்த இவ்வுலகங்களை தன் அலைக்கரத்தால் அணைக்கத் துவங்கினாள்.
அனைத்துலகங்களும் மூழ்கத்துவங்கின. அப்போது, திராவிட (தமிழ்) தேசத்தின் அரசனாக இருந்தவன் சத்தியவிரதன் என்னும் திருமால் பக்தன்.


இவன் ஒரு நாள் 'கிருதமாலா' என்னும் ஆற்றில் அர்க்கியம் விட்டுக் கொண்டிருந்தான். அவன் நீரை கையில்அள்ளி அர்க்கியம் விடும் போது ஒரு மீன்குஞ்சு அவன் கையில் வந்தது. உடனே அவன், அதை நீரில் விட்டு விட்டு, திரும்பவும் நீரை முகந்தான். மீண்டும் அவன் கையில் மீன் குஞ்சு!!!! . அது மன்னனிடம் பேசியது!!!!. . "மன்னா, உன் உயர்ந்த குணங்களை நான் அறிவேன். நீ என்னைத் திரும்பவும் ஆற்றில் விட்டால், பல பெரிய மீன்கள் என்னை விழுங்கிவிடும். ஆகவே என்னைத் திரும்பவும் ஆற்றில் விடாதே!!" என்றது.

அதிசயித்த மன்னன். அதைத் தன் கமண்டலத்துக்குள் விட்டுக் கொண்டு, தன் அரண்மனை வந்தான். வந்ததும் அதிர்ச்சி, அந்த மீன், அவன் கமண்டலத்தை அடைக்கும் அளவு பெரிதாகியிருந்தது. உடனே அதை ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் விட்டான். உடனே அது மேலும் பெரிதாகி, பாத்திரத்தையும் அடைத்துக்கொண்டது.உடனே அதை ஒரு பெரிய கிணற்றில் விட்டான். அது மேலும் வளர்ந்து பெரிதாகியது. பின், தன் வீரர்கள் துணையுடன் அதை ஒரு குளத்திலும் பின் ஒரு ஏரியிலும் விட்டான். அவற்றையும் அடைத்துக் கொண்டு மீன் வளர்ந்தது.


இது, 'கடவுளின் சோதனை' என்று கருதிய மன்னன், பின் அதைக் கொண்டு போய் சமுத்திரத்தில் விட்டான். அந்த மீன் மிகப்பெரும் உருவம் கொண்டு வளர்ந்தது.

"இது சாதாரண மீன் அல்ல" என்று உணர்ந்த அவன், மீனாக வந்தது இறைவனே என உணர்ந்து வணங்கினான்.

வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன் அவனை யம்மா விளைவயலுள்,
கானார் புறவில் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.--------எட்டாம் திருமொழி

என்று திருமங்கையாழ்வார் மச்சாவதாரம் எடுத்த திருமாலைப் பாடுகிறார்.

'இறைவனே, தாங்கள் தங்கள் தொண்டனுக்கு (எனக்கு) இடும் கட்டளை என்ன?' என்று சத்தியவிரதன் கேட்க,

திருமால், 'இப்பொழுது பிரளய காலம். பூ மண்டலத்தை நீர் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று முதல் ஏழாம் நாள், நீ வாழும் இடமும் நீரில் மூழ்கிவிடும். அதனால், நான் சொல்வதைப் போல் செய்வாயாக. உன் நாட்டில் வாழும், முனிவர்கள், குருமார்கள், பற்பல தானிய வித்துக்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள் மற்றும் உன் குலத்தோர் யாவரையும் விரைந்து ஒன்று கூட்டுவாய். உன் முன் பெரிய தோணி ஒன்று தோன்றும். அதில் அனைவரையும் ஏற்றி, அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு ஏறுவாயாக. அத்தோணி பிரளய வெள்ளத்திலும் மிதக்கும் தன்மை உடையது. பிரளய காலத்தில் இருள் சூழ்ந்திருக்கும். எனவே அந்தத் தோணியில் சப்த ரிஷிகளும் ஒளிவடிவமாக இருந்து வழிகாட்டுவார்கள். பின், நான் மீண்டும் தோன்றுவேன். என் மூக்கில் உள்ள கொம்பில் அந்தத் தோணியைக் கட்டுவாயாக.பிரம்மனின் இரவுப் பொழுதுமுழுவதும் நான் தோணியுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பேன். அதன்பின் என் பெருமையை நீ அறிவாய்.' என்றார்.


(சப்த ரிஷிகள்:அத்திரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களும் சப்த ரிஷிகள் ஆவர்.)

சத்தியவிரதன் அவர் சொன்னது போல் செய்துவிட்டுத் தோணிக்காக, கடற்கரையில் காத்திருந்தான்.

' ஏ ,சமுத்திரமே...... பிரளய காலத்தில் நீயா உலகத்தை மூழ்கடிக்கப் போகிறாய் ? '

நீ அதிகாலையில் அமைதியின் அழகு
அந்திமாலையில் அலையோடு அழகு
நள்ளிரவில் ஆர்ப்பரிப்போடு அழகு(நன்றி. கவிஞர் தனுசு.)

நீ எப்போது வெகுண்டு பொங்குவாய் என்று யார் அறிவார்? என்று நினைத்திருந்த வேளையில் அழகான பெரிய தோணி ஒன்று தோன்றியது. அதில் அனைத்தையும் ஏற்றியதும், மீண்டும் இறைவன் தங்க நிற‌த் திமிங்கலமாக‌த் தோன்றினார். அவர் உடலில் கொம்பு போல் ஒன்று நீண்டு இருந்தது..அவர் கூறியபடி, அந்தக் கொம்பில், தோணியைச் சேர்த்துக் கட்டியதும், கடல் பொங்கத் துவங்கியது. மீனாக இருந்த பரமன் அந்தத் தோணியோடு, வெள்ளத்தில் மிதந்தபடி, மச்சாவதாரப் புராணத்தை சத்திய விரதனுக்கு உபதேசித்தார்.


பிரம்மனின் இரவுக்காலம் கழிந்து இருள் நீங்கி, மழையும் நின்றது. கடலும் ஓய்ந்தது.

பிரம்மனின் இரவுக்காலம் பற்றி இங்கே ஒரு தகவல் :

கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இவை நான்கும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம். ஒரு மகாயுகம் 43,20,000 மனித வருடங்கள். ஒரு மன்வந்திரம் 71 சதுர்யுகங்களை உள்ளடக்கியது. 14 மன்வந்திரங்கள் ஒரு கல்பம். அதாவது, ஒரு கல்பம் என்பது ஆயிரம் சதுர்யுகம்.ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். அதேபோல், ஆயிரம் சதுர்யுகம் சேர்ந்தது ஒரு இரவு. அவருக்கும் (அவர் கணக்கில்) 365 நாள் ஒரு வருடம். 100 வருடம் அவர் ஆயுள்.

ஸஹஸ்ரயுகபர்யந்தமஹர்யத்ப்ரஹ்மணோ விது:
ராத்ரிம் யுகஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ ஜநா: (பகவத் கீதை,எட்டாம் அத்தியாயம் ,அக்ஷரப்ரஹ்ம யோகம்)

ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு மனுவின் ஆதிபத்தியத்தில் நடைபெறுகிறது. நாம் இருப்பது வைவஸ்வத மன்வந்திரத்தில் நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் வருடங்கள் கொண்ட கலியுகத்தில்.சத்தியவிரதனே,திருமாலின் கட்டளைப்படி, வைவஸ்வத மனுவாக ஆனான்.

மச்சாவதார மூர்த்தி தோணியைக் கரை சேர்த்தார். பிரம்மன் உறக்கம் நீங்கி எழுந்து, வேதங்கள் களவு போனதை அறிந்து நாராயணனை வேண்ட, மச்சாவதார மூர்த்தியாக இருந்த மஹாவிஷ்ணு அந்த உருவிலேயே சோமுகாசுரனுடன் போர் புரிந்து வென்று, வேதங்களை மீட்டுக் கொடுத்து, பிரம்மனை மீண்டும் சிருஷ்டியைத் தொடங்கப் பணித்தார்.

சத்திய விரதன் பாண்டிய மன்னனெனவும் அவன் காலத்தில் மச்சாவதாரம் நிகழ்ந்ததாலேயே பாண்டியர்கள் கொடிச் சின்னம் மீன் ஆயிற்று எனவும் ஒரு கூற்று உண்டு.

இந்தப் புராணம் ,பைபிளில் வரும் நோவாவின் கதையை ஒத்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இறைவன் ஒருவனே. அதனால், அவரைப் பற்றிய செய்திகளும் ஒன்றுபோல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

இன்னொரு நிகழ்வைப் பார்க்கலாம்.

அழகிய திருமதுரை. மீனாட்சிஅம்மைக்கும், சோமசுந்தரக்கடவுளுக்கும் மகனாகப் பிறந்த ஸ்ரீ உக்கிரபாண்டியனின் ஆட்சிக்காலம். 100 அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரப் பதவி கிடைக்கும். மன்னன், 96 யாகங்களை முடித்திருந்தான். பதவி ஆசை அவனுக்கில்லை. ஆனாலும், இந்திரப் பதவி கிடைத்தால் , மாதம் மும்மாரி பொழிய வைத்து மக்களை வாழ்விக்கலாமே என்ற நல்லெண்ணம் அவனுக்கு. இந்திரன் சினம் கொண்டான். வருணனை அழைத்து "ஏழு கடல்களையும்"பொங்கச் செய்து, மதுரையை அழிக்கச் சொன்னான்.

பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான்

(திருவிளையாடற்புராணம், கடல் சுவற வேல் விடுத்த படலம்)

ஏழு கடல்கள் (புராண காலத்தில்):

1. பாற்கடல், 2. கருப்பஞ்சாற்றுக்கடல் (இக்ஷு சமுத்திரம் ), 3. லவண(உப்பு) சமுத்திரம், 4. சுரா (கள்) சமுத்திரம், 5. சர்ப்பி (நெய்) சமுத்திரம்,
6.ததி (தயிர்) சமுத்திரம், 7. சுத்தோதக (நல்ல நீர் ) சமுத்திரம்.

ஏழு கடல்கள் ( தற்காலத்தில் ):

1. ஆர்க்டிக், 2. அண்டார்டிக்(சதர்ன்), 3.வடக்கு பசிஃபிக், 4.தெற்கு பசிஃபிக், 5.வடக்கு அட்லாண்டிக், 6.தெற்கு அட்லாண்டிக், 7.இந்துமகா சமுத்திரம் .

மன்னனின் கனவில் சித்தர் உருவில் வந்த இறைவன், இந்திரன் சூழ்ச்சியை உணர்த்த, திடுக்கிட்டு எழுந்த மன்னன், அமைச்சர் மற்றும் படைகளுடன் சென்று பார்க்கும்போது, ஏழு கடல்களும் உக்கிரமாகப் பொங்கி மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தன. உடனே தன் வேலை எடுத்து எறிந்தான். அந்த வேல் முனை பட்டதும் ஏழு கடல்களும் வற்றிப் போயின்.

எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை வேல் முனை
மடுத்த வேலை சுறெனவ் அறந்தும் ஆன வலி கெட
அடுத்து வேரி வாகை இன்றி அடி வணங்கும் தெவ்வரைக்
கடுத்த வேல் வலான் கணைக் காலின் மட்டது ஆனதே.

(திருவிளையாடற்புராணம்)

மக்கள் மகிழ்ந்து மன்னனையும் மகேசனையும் போற்றினர்.

செல்வத் திருமகளான மகாலக்ஷ்மியின் மலர் மாலையை துர்வாச முனிவர் தரும்போது அதை இந்திரன் மதிக்கவில்லை. மகரிஷியின் சாபத்தால் செல்வங்கள்அனைத்தையும் இழந்தான் தேவேந்திரன். காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம், அரம்பையர் அனைத்தும் அவனை விட்டகன்றன. நவநிதிகளும் மண்துகளாயின. அசுரர்கள் ஆதிக்கம் ஓங்கியது.

 நவநிதிகள்:  
சங்கநிதி , பதுமநிதி , மஹாபதும நிதி , மகரநிதி , கச்சபநிதி, நந்த நிதி, நீல நிதி, கர்வ நிதி, மற்றும் முகுட நிதி.

பிரம்மனின் யோசனைப்படி, தேவர்களும் தேவேந்திரனும் மஹாவிஷ்ணுவைச் சரணடைந்தனர். அவர் மந்திரகிரியை மத்தாகவும் அஷ்டமாநாகங்களில் தலையாயதான வாசுகியைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடையும்படி சொன்னார்.

அஷ்டமா நாகங்கள்:
ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், தனஞ்செயன், காளியன், தாகபுராணன், புஞ்சன்

மேலும் 66 கோடி அசுரர்களையும் துணையாகக் கொள்ளுமாறு சொன்னார். சாகாநிலை தரக் கூடிய அமுதம் கிடைக்கும் என்றதும் அசுரர்கள் ஒப்புக் கொண்டனர். தேவர்கள் வாசுகியின் வால்பக்கமும் அசுரர்கள் தலைப்பக்கமும் பிடித்துக் கொள்ள, பாற்கடல் கடையப் பெற்றது. வாசுகியின் மூச்சுக்காற்றால்,திணறிய அசுரர்கள் பலம் குன்றியதால், மந்திரகிரி ஒரு பக்கமாகச் சாயத்துவங்க, திருமால், பொங்கி ஆர்ப்பரிக்கும் கடலின் உட்புகுந்து, கூர்மாவதாரம் எடுத்து, மந்திரகிரியைத்தன் முதுகில் தாங்கினார்.

மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக அங்கோர் வரைநட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை,
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.

என்று திருமங்கையாழ்வார் கூர்மாவதார மஹாவிஷ்ணுவைப் பாடுகிறார். மேலும் அவர் தன் சிறிய திருமடலில்,

ஆராத போரில் அசுரர்களும் தானுமாய்
காராய் வரை நட்டு நாகம் கயிறாக
பேராமல் தாங்கிக் கடைந்தான்“   என்று போற்றுகிறார்.

பாற்கடலில் இருந்து முதலில் ஆலாகால விஷம் தோன்ற, பரம தயாளனான சிவபெருமான், தன் கருணையால்,அதைப் பருகினார். உமாதேவி, சிவன் கழுத்தில் கைவைத்து, விஷத்தை நிறுத்தியதால் அவருக்கு "நீலகண்டன்"என்ற பெயர் ஏற்பட்டது.

பின், காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், அரம்பையர், சங்கநிதி, பதுமநிதி, முதலிய அனைத்து செல்வங்களும் வெளிவந்து இந்திரனை அடைந்தன. பின்னர் சந்திர பகவான,தோன்றினார்.. அதன் பின், பேரொளியுடன் கூடிய அழகுமிக்க வடிவம் தாங்கி, உலகனைத்திற்கும் அன்னையாகிய ஸ்ரீ மஹாலக்ஷ்மி தோன்றினாள். தேவர்கள் ஸ்ரீ ஸுக்தத்தால் அவளைத் துதித்தனர். அஷ்டதிக்கஜங்கள் புனித நீரால் அன்னையை அபிஷேகம் செய்தன.

அஷ்டதிக்கஜங்கள்:
கஜம் என்றால் யானை. எட்டுத் திசைகளிலும் இப்பூவுலகை யானைகள் தாங்குவதாக ஐதீகம். அவையாவன, ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம்.

சமுத்திரமும், விஸ்வகர்மாவும் தாமரை மாலையையும், ஆபரணங்களையும் தேவிக்கு அளித்தனர். ஸ்ரீமஹாலக்ஷ்மி , ஸ்ரீமந் நாராயண னுக்கு மாலையிட்டு, அவர் திருமார்பில் குடிபுகுந்தாள். தேவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தேவேந்திரன், இழந்த செல்வமனைத்தும் திருமகள் அருளால் பெற்று, பேரானந்தமடைந்தான். நன்றிப் பெருக்கில் திருமகளை வணங்கி,

இத்தனை தந்தென்னை காப்பவளே - இனி
எத்துனை நான் இங்கே கேட்பது?
என் உடல் பொருள் ஆவி அத்தனையும்
உன் தடம் அருள் தூவி நிற்பதன்றோ. (நன்றி. கவிஞர் தனுசு)

என்று ஆனந்தக் கண்ணீர் பெருக ஸ்ரீலக்ஷ்மியையும் ஸ்ரீநாராயணனையும் வணங்கினான்.

தமிழ்ப்புத்தாண்டில் நாமும் நலம் பல பெற்று வாழ, இறைவனை வேண்டுவோம்.தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.
பெங்களூரு.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2


சூ! மந்திரக்காளி!
ஆக்கம் தேமொழி

சென்ற மாணவர் மலரில் சிறு குழந்தைகளுக்கு வித்தை காட்டும் ஒரு விளையாட்டுப் பொருளைப் பற்றி நான் கீழ்கண்டவாறு விவரித்திருந்தேன்:
"இதற்குள் நூரு நாங்கள் அனைவரும் சூழ்ந்திருக்க வித்தை காண்பித்தாள். அவள் கையில், நடுவில் சிறிய சதுரக் கண்ணாடி வைத்து, பக்கத்திற்கு நான்கு நடிகர் நடிகைகள் படம் அச்சடித்த இரண்டு தாள்கள், நட்சத்திரங்களின் படம் வெளிப்புறம் தெரியுமாறு ஒட்டப்பட்ட ஒரு வித்தை சாமான் இருந்தது."

அதற்கு ஸ்ரீஷோபனா "எப்படி அப்படியொரு வித்தை கண்ணாடி என்று புரியவில்லை...ஆனால் எனக்கும் எங்கோ அறிந்த ஞாபகம்...சரியாக நினைவில்லை." என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

எனவே அந்த விளையாட்டுப் பொருள் எப்படி இருக்கும், அதை எப்படிச் செய்வது என்பதை விளக்குவதற்காக  ஒரு காணொளி தயாரித்தேன்.  அதை இந்த சுட்டி வழி சென்று காணலாம்.
http://youtu.be/O1EFmH1BUCA



யாரவது அதைத் தயாரிக்க விரும்பினால், படங்களுடன் உள்ள  PDF கோப்பும் உள்ளது.  குழந்தைகளுக்காக விலங்குகளின் படங்களும், திரைப்பட நடிகர்களின் படங்களுடன் என இரண்டு வகைகள் அந்தக் கோப்பில் உள்ளது.  அதை கீழ உள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்யலாம்.
https://docs.google.com/open?id=0B44VxvrIURArT3pqR19SU2RrS00

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3



உணவுக்கும் நீருக்கும் உடைக்கும் இருப்பிடத்திற்கும் குறைவின்றி இருப்பது எப்படி?
ஆக்கம்: கே முத்துராமகிருஷ்ணன், லால்குடி.

எழுத்துச் சித்தர் பாலகுமாரனைப் படித்தவர்களுக்கு திருவண்ணாமலை யோகி ராம் சூரத் குமாரை நன்கு தெரிந்து இருக்கும்.

யோகி வடநாட்டைச் சேர்ந்தவர். இந்தியா முழுதும் பாதயாத்திரை செய்து கஞ்சன்காடு பப்பா ராமதாஸ் என்ற தவச் சீலரிடம் ராம மந்திரம் பெற்று நினைக்க முக்தி தரும் அண்ணாமலையில் வந்து தங்கி நீண்ட ஆண்டுகள் மக்களுக்கெல்லாம் அருளாசி வழங்கிவிட்டு அண்ணாமலையிலேயே சமாதியும் ஆகிவிட்டார்.ரமணரையும் தரிசித்துள்ளார் யோகி ராம் சூரத் குமார்.

யோகி தன்னை ஒரு 'பிச்சைக்காரன்' என்றே குறிப்பிட்டுக் கொள்வார்.இறைவனை 'என் தந்தை'என்றே கூறுவார்.

யோகியைச் சிறு வயதில் கிணற்றில் தண்ணீர் இறைத்து வரத் தாயார் பணித்தார்களாம்.கிணற்று மேட்டில் ஒரு குருவி இருந்துள்ள‌து. சிறுவன் ராம் சூரத் விளையாட்டாக நீர் இறைக்கும் கயிற்றினை குருவியின் பக்கம் சுழற்றியுள்ளார். குருவியை விரட்டுவதே அவருடைய நோக்கம்.ஆனால் சற்றும் எதிர் பாராமல் குருவியின் மீது கயறு வேகமாகப் பட்டு குருவி துடி துடித்து இறந்து விட்ட‌து. அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய
தாக்க‌மே அவரை சிந்திக்க வைத்தது. வாழ்க்கை நிலையாமையில் துவங்கி இறவாப் பெரு நிலையை எய்தினார்.

திருவண்ணாமலையில் அவருடைய ஆசிரமம் உள்ளது.அங்கு சென்றவுடனேயே மன அமைதி ஏற்படுவதை அனுபவத்தில் உணரலாம்.

முன்பே என் அப்பாவின் ஆன்மீகத் தேடல் பற்றிப் பல முறை கூறியுள்ளேன்.

திருக்கோவிலூர் ஞானான‌ந்த சுவாமிகளின் வழிகாட்டுதலின் பேரில் பல யோகிகளையும் சித்தர்களையும் அப்பா தரிசித்துள்ளார்கள். அப்பாவுடன் பல சமயங்களில் நானும் உடன் இருந்துள்ளேன்.

ஒரு முறை யோகி ராம் சூரத் குமார் நடந்தே திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வந்து விட்டார்.திருக்கோவிலூர் ஞானான‌ந்த தபோவனம் வாசலில் வந்து ஒரு ராணுவ வீரரைப் போல நிற்கிறார். தன் கைத்தடியை துப்பாக்கி போல இடது தோளில் சார்த்திக் கொண்டு சல்யூட் செய்து கொண்டு கம்பீரமாக நிற்கிறார்.

இதனை உள்ளேயிருந்து கண்ணுற்ற‌ சுவாமி ஞானானந்தர்,

"ஹே!சர்தார்!" என்று உரத்த‌ குரல் கொடுக்கிறார்.(சர்தார் என்றால் தளபதி)

உடனே யோகியின் உடல் ஒரு ராணுவத்தானைப் போலவே விரைத்துப் போகிறது. துப்பாக்கி ஏந்தியது போன்ற‌ பாவனையில் 'டக் டக்' என்று 'ஸ்டெப்' வைத்து அதிவேகமாக நடந்து தபோவனத்திற்குள் வருகிறார்.

ஞானான‌ந்தரின் அருகில் வந்ததும் தடியை இறக்கி மண்டியிட்டு வணங்குகிறார்.

ஞானானந்தர் எழுந்து யோகியைக் கட்டி அணைத்து உச்சி முகர்கிறார். இருவரும் சிரிக்கத் துவங்குகிறார்கள். அவர்களுடைய ஆனந்தச் சிரிப்பு தபோவனத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று நிரம்புகின்றது. அங்கிருந்த அனைவருமே வேற்று நினைவில்லாம‌ல் ஆன்மீக ஆழ்நிலையில் ஆனந்தம் அனுபவித்தனர்.

அந்த ஆன்மீக அலை ஓய்ந்தவுடன் என் அப்பா யோகியினைப் பணிந்து,"ராம்ஜி! ஏதாவது ஆகாரம் எடுத்துக் கொள்ளுங்கள், வாருங்கள்" என்று அழைத்தார். யோகியும் மறுப்பேதும் சொல்லாமல் அப்பாவுடன் வந்தார்.

தபோவனத்திற்கு அருகில் அன்னபூர்ணா என்ற பெயரில் அந்தக் கால சத்திரம் போன்ற ஓர் அமைப்பு உண்டு.  அங்கே சென்று யோகிக்கு இட்லி வாங்கிக் கொடுத்தார் அப்பா. அடியேன் அருகில் இருந்து யோகிக்குத் தண்ணீரும்
வெஞ்சனங்களும் பரிமாறும் பாக்கியத்தினைப் பெற்றேன்.

சாப்பிட்டு முடித்ததும் என் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்.என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெறும் பேறாக அதனைக் கருதுகிறேன்.இப்போதும் மனம் சஞ்சலப்படும் போது யோகியின் கைகள் என் சிரத்தினை வருடுவது போன்ற எண்ணம் ஏற்பாடுகிறது. அவருடைய அமானுஷ்ய சக்தியை உணருகிறேன்.

அப்பா 1985ல் மறைந்த பிறகு ஆன்மீக எண்ணம் அதிகரித்தது. கேதுதசை நடந்தது.என் மனைவிக்கும் கேது தசையாதலால் இருவருமாகக் கோவில்களுக்கும், ஆசிரமங்களுக்கும் செல்ல ஆரம்பித்தோம்.

ஓர் ஆண்டு முழுதும் பெள‌ர்ணமிக்கு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் வருவது என்று சங்கல்பித்துக் கொண்டு செல்லத் துவங்கினோம்.

முதல் மாதத்திலேயே யோகியின் சன்னதித் தெரு இல்லத்தின் முன்னர் போய் நின்றோம்.உள்ளே 7 பேர் மட்டும் அமரக் கூடிய அந்த வாசல் தாழ்வாரத்தில் யோகியுடன் 7 பேர் ஏற்கனவே அமர்ந்து இருந்தனர்.'இடமில்லை' என்று மறுக்கப்ப‌ட்டோம்.

"நான் சேலம் காந்தி ஆசிரமம்  கிருஷ்ணன் அவர்களின் பிள்ளை!"என்று உரக்கச் சொன்னேன்.

யோகி நிமிர்ந்து பார்த்தார். க‌தவு எங்களுக்காகத் திறந்தது.அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தோம். தானகவே தியானம் கை கூடியது.ஓர் ஆன்மீக மின் காந்தத்திற்கு அருகில் இருப்பதை நான் முற்றிலும் உணர்ந்தேன். சொற்களால் அந்த அனுபவத்தைச் சொல்ல முடியாது.

என் மனைவிக்கு வீடு திரும்பியதும் ஏதோ ஓர் உள்ளுணர்வால் உந்தப்பட்டு மாதம் தோறும் மிகச் சிறிய தொகையை பண அஞ்சல் மூலம் யோகிக்கு அனுப்பத் துவங்கினார்கள். யோகியும் கையெழுத்திட்டு அத் தொகையைப் பெற்றுக் கொண்டார். அந்த மணி ஆர்டர் ரசீதுகளைப் பத்திரமாகப் பொன் போல் காபாற்றி வருகிறார் மனைவியார்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இது போன்ற ஆன்மீக மலைகள் நம் கண்களுக்குத் தெரிகின்ற‌னர்.

என் மிகச்சிறிய வயதிலேயே யோகியின் பழக்கம் ஏற்பட்டதே நான் உணவுக்கும் நீருக்கும் உடைக்கும் இருப்பிடத்திற்கும் குறைவின்றி இருக்கிறேன் என்று இப்போது உணர்கிறேன்.

இது போன்ற மகான்களின் ஆசியால்தான் ஓரளவாவது நல்ல குணங்களும்
சேவை மனப்பானமையும் எனக்குத் தோன்றியது.

யோகி ராம் சூரத் குமார் ஜெயகுரு ராயா!
வாழ்க வளமுடன்.
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)  
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


வறுமையும் வன்முறையும்
ஆக்கம்: தனுசு

(கொல்கொத்தாவின் நடைபாதையில் குடும்பம்  நடத்தும் ஒரு ஏழையிடம் தூங்கும் நேரத்தில் தினந்தோறும் தொடர்ந்து மாமுல் பணம் கேட்ட ஒரு ரவுடியை பொறுக்க முடியாமல் அந்த ஏழை கத்தியால் குத்தி கொன்றான் . என்ற செய்தியை  செய்தியைக் கேட்டதால் எழுதிய கவிதை இது.)

என்னைச்சுற்றிலும் ஓடுகிறார்கள்
என்னையும் ஒடச்சொல்கிறார்கள்
எதுவரை ஓடுவது?எவரும் அறியவில்லை!
எங்கே ஓடுவது?அதுவும் தெரியவில்லை!

எருமையின் மீதமர்ந்துவரும்
எமன்போல் வறுமை பாசக்கயிருடன் விரட்ட
எதுவரை ஓடுவது?
ஓடினால்விட்டுவிடுமா!

ஒத்தைரூபாய்க்கு படிஅரிசி
சொத்தைரூபாய்க்கு வெய்யிலில் ஓட்டம்
இதுவறுமையின் சாட்சி
மாறும்ஆட்சியாளர்களின் ஆசி

வானமேகூரை சாலையேவாசல்
முச்சந்தியேவீடு கந்தலேகோலம் -நாங்கள்
கருவறை முதல் கல்லறைவரை
கழிவறை காணா வருமைதேசவாசிகள்.
                 ++++++++++++
சுற்றிலும் ஓலமிடுகிறார்கள்
என்னையும் சேர சொல்கிறார்கள்
ஏனிந்த அலறல்?தனிமா இந்தக்கதறல்?
நானும்அழுவதா? நாரிஅழுவதா?

தட்டிக்கேட்க ஆளில்லாத தம்பி
சண்டபிரசண்டன்போல் வன்முறை மிரட்ட
வாய்பொத்தி அழுவதா?
மெய்குருகி படிவதா!

ஓர்நாள் உழைப்புக்கு அரைவயிறு காசு
ஓட்டாண்டி சேகரிப்புக்கு குண்டாந்தாண்டி அபகரிப்பு
"இல்லாத வன்முறைகேட்டு" அழுவதா
"இல்லாதவன் முறைகேட்டு" அழுவதா

ஊரறிந்த காலிகள் பேரறிந்த ரவுடிகள்
தட்டிப்பறிக்கும் தடியர்கள்
சலாம் போடும் காக்கிகள்
கண்மூடும் நீதிகள்  ஓட்டைசட்டங்கள்

வேர்விட்டமரமாம் வறுமையையும் வன்முறையையும்
வேரறுக்க வந்த ஒற்றைநாற்றுச்செடி நான்.
ஒடமாட்டேன் ஒலமிடமாட்டேன் விழச்செடியாய் மாறிவிட்டேன்!
எந்த வேறை முதலில் அழிக்க.

வறுமையா?வன்முறையா?
கஷ்டமா?துஷ்டனா?
முன்நிற்கும் சபையோரே முன்மொழியுங்கள்!
தறவாட்டை தயாராகிவிட்டேன்!
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5

All smart people 
by G Ananthamurugan


Smart Train Driver
 
A train got off rails, started running in fields all around and ultimately stopped. Inquiry was made. Driver was strongly rebuked and asked the reason.
 
He explained "Well this idiot was standing right on the track of the train, was not paying attentions to horns, making vulgar funny gestures ridiculing me and not moving away.
 
The inquirers angrily asked, "Well you idiot, you should have crushed and killed him rather than getting off track and risk so many passengers' life to save his."
 
The driver said, "Sir, I wanted exactly to do that, I was angry at his vulgar gestures at me, so I raised the speed of the train to crush him. When train came closer, that jerk got off tracks and started running in the fields and I started chasing to kill him as you said."
 --------------------
The Smart Wife
 
A husband came from a paid seminar on married life, wanted to express his bad luck of ugly wife said, "The lecturer told us, the wife of an Idiot is generally beautiful and ............"
 
The wife interrupted the husband and said, "Seems you don't have any work other then praising me all the times."
 ---------------------------
The Smart Husband
 
The husband asked wife, "I know you have very sharp memory and you don't forget the face you have seen once."
 
Wife asked, "Yes that is true, but why?"
 
The husband said, "Well, I just broke your mirror while moving the table and it will be a while before I can replace it for you. I hope you remember your face till then and not beach at me."
 -------------------------------
The Smart Saint
 
The angry husband blasted, "You always make the dish of tomatoes and I am tired. Do you know, our saints say, 'the man who eats too much tomatoes is reborn as a Jackass in next life'."
 
The wife said, "Yes, but you should have thought that in your last life."
 ---------------------------------
The Smart Trainer
 
The mountain climber trainee was half way up with trainer and he asked Guru, "What happens If I broke this rope in middle here?"
 
The trainer assured him, "Don't worry, we got lots of ropes down below for you."
++++++++++++++++++++++++++++++++++++++++===
வாழ்க வளமுடன்!


27 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    இன்றைய மாணவர் மலரில் ஐவரின் ஆக்கங்களும்
    சிறப்பாக உள்ளன.
    நன்றி!!

    ReplyDelete
  3. என்னுடைய "மாயக்கண்ணாடி" செய்முறை காணொளியையும் அதற்குரிய தகவலையும் வெளியிட்டதற்கு வாத்தியாருக்கு நன்றி.
    ____________
    ஆனந்தமுருகன் அறிமுகப் படுத்திய அறிவாளிகளில் ரயில்வண்டி ஓட்டுனர் சிறந்த புதிசாலியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
    ____________
    மிகச்சிறிய வயதிலேயே யோகியின் பழக்கம் ஏற்பட்டதால் உணவுக்கும் நீருக்கும் உடைக்கும் இருப்பிடத்திற்கும் குறைவின்றி இருப்பதாக KMRK ஐயா மனநிம்மதி அடைந்து விவரித்ததை படித்து மகிழ்ச்சி.
    ____________
    அவ்வாறு யோகிகளை சந்தித்துப் பயனடையத் தெரியாத காரணத்தினால் ரொட்டி, கப்டா, மகானுக்கு சிங்கி அடித்த தெருவோர உழைப்பாளி தனுசுவின் கவிதையில்.
    ஓடப்ப ராயிருந்த ஏழையப்பர் ஒருநாள் உதையப்ப ராகிவிட்டதால், ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆன கவிதை தனுசுவின் வழக்கமான உணர்ச்சி மிகுந்த வரிகள் உள்ள கவிதை.
    "வானமேகூரை சாலையேவாசல்
    முச்சந்தியேவீடு கந்தலேகோலம் -நாங்கள்
    கருவறை முதல் கல்லறைவரை
    கழிவறை காணா வருமைதேசவாசிகள்"
    வரிகள் அவர்கள் நிலைமையை நன்றாக விளக்குகிறது.
    "வறுமை தேசவாசி" வறுமை தேசத்தின் வாசி, என்பது நல்ல சொல் தேர்வு.
    ____________
    கடவுளின் பல அவதாரங்கள் போலவே பார்வதியின் கட்டுரையிலும் எழுத்துக்கள் குள்ள வாமன அவதாரம் முதல், சாதாரண அளவு,விஸ்வரூப அளவு எனப் பல வடிவங்களிலும் உள்ளது.

    ///அப்போது பிரளய காலம். கடல்தாய் கடவுள் ஆணைப்படி, பரந்த இவ்வுலகங்களை தன் அலைக்கரத்தால் அணைக்கத் துவங்கினாள்.///
    ????? சுனாமியை இப்படி நாசூக்காகச் சொன்னால் அதனால் பாதிக்கப் பட்டவர்கள் நிச்சயம் காட்டமாகிவிடுவார்கள் :)))

    வைவஸ்வத மன்வந்திரத்து மனுவாகிய சத்தியவிரதன் மற்றும் ஊழிக்காலத்து தோணி புராண நிகழ்ச்சியானது யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தினர் கூறிவரும் நோவாவுடன் ஒத்துப்போவதை இப்பொழுதான் தெரிந்து கொண்டேன். அதுவும் ஏழு நாட்களில் நிகழும் என்ற எச்சரிக்கை வரை பொருந்துவது வியப்பு.

    நன்றி பார்வதி, உங்கள் ஆக்கங்களைப் படிப்பதால் நம் நாட்டின் தொன்மையான கலாச்சார புராதான செய்திகள் (உண்மையோ அல்லது கற்பனையோ) பின்னணியை நான் தெரிந்து கொள்கிறேன். கோபம் கொள்ள வேண்டாம். பெரியார் படம், அதிலும் புராணத்தைப் பற்றி பெரியாராக வரும் சத்தியராஜ் சகபயணிகளிடம் (ஒய்.ஜி. மகேந்திரன், மதன் பாப்) செய்யும் வாதம்/விதண்டாவாதத்தை கலைஞர் தொலைகாட்சியில் பார்த்ததின் தாக்கம் இன்னமும் நீங்கவில்லை.
    "அர்க்கியம் விடுவது" என்பதன் உண்மையான பொருள் என்னவென்று தெரியாவிட்டாலும், நீரை கையில் முகந்து மீண்டும் ஊற்றிவிடுவது எனப் புரிகிறது. ஆனால் செய்வதன் காரணம் தெரியவில்லை. விளக்க முடியுமா? உங்கள் பதிவில் எழுதினாலும் வந்து படித்துவிடுவேன்.

    ReplyDelete
  4. கடவுளையும், கடலையும் சேர்த்து வந்த பார்வதியின் ஆக்கம் பல செய்திகளை சொன்னது.

    அதில் என்னுடைய கவிதைகளையும் உதாரன மேற்கோள் காட்டி என்னையுமுயர்த்தி விட்டீர்கள்.

    டார்வீனின் பரினாம வள்ர்ச்சி கொள்கையை ஒற்றுமை படுத்திய விதம் நன்றாக இருந்தது.

    எனது கவிதையை வெளிக்கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  5. ச்சூ...மந்திரக்காளி....
    பார்க்க முயியவில்லை
    பார்த்ததும் சொல்கிறேன் தோழி.

    ReplyDelete
  6. யோகியின் பழக்கம் ஏற்பட்டதே உனவுக்கும் உடைக்கும்,வீடுக்கும், நீருக்கும் குறையின்றி இருக்கிறேன்.அத்துடன் சேவை மனம்.

    கிருஷ்னன் சார் இது பெரியோர்களின் ஆசி, அந்த ஆசி இன்னும் நிறைந்தும், சேவை வளர்ந்தும் நீங்கள் இருப்பீர்கள்.

    ReplyDelete
  7. எனது கவிதையை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  8. அனந்தராமனின் ஆக்கத்தில் அவன்,அவள், அதிக ஆனந்தம் தந்தது.

    ReplyDelete
  9. ஆனந்தமுருகன் எண்கணிதத்தின்படி உங்கள் பெயரை "அனந்தராமன்" என மாற்றியத்தை என்னிடம் தெரிவிக்காததால் நான் அதை ஒப்புக்கொள்ளப்போவதில்லை..... (என்று நான் வெளியிடப்போகும் சுற்றறிக்கையின் சாரம் இந்த சுருக்கமான பின்னூட்டம் வழியே தெரிவிக்கப் படுகிறது).

    ReplyDelete
  10. என் ஆக்கத்தினை வெளியிட்ட ஐயாவுக்கு நன்றி.என் லண்டன் பெயர‌னுக்கு ஓராண்டு முடிந்து ஆயுஷ்ய ஹோம‌ம் சென்னையில் 16 ஏப்ரல் திங்கள் கிழமை அன்று நடக்கவுள்ளது. எனவே சென்னை வாசம். மற்றவர்களின் கட்டுரைகளைக் கருத்தூன்றிப் படிக்கமுடியவில்லை.மன்னிக்கவும்.

    ReplyDelete
  11. எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.

    "கழிவறை காணா வறுமைதேசவாசிகள்"

    "நானும் அழுவதா? நாறி அழுகுவதா?"

    என்று திருத்தி வாசிக்கவும்.

    பிழையை சுட்டிக் காட்டிய தேமொழி அவர்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா,
    பார்வதி அவர்களின் ஆக்கம் வழக்கம் போல் மிக அருமை...எனக்கு புராண கதைகளை படிப்பதில் மிகவும் ஆர்வம் உண்டு...இன்றைய ஆக்கத்தில் தந்துள்ள இரு கதைகளையும் தாங்கள் விளக்கித் தந்துள்ள விதம் மிகவும் அருமை,கூடவே தனுசு அவர்களின் 'கடல் பயணம்' கவிதையையும் இணைத்து தந்தது பொருத்தமாக அமைந்திருந்தது...பத்தாவது அவதாரத்தை பற்றி ஏன் விளக்கம் தரவில்லை;கலியுகத்தில் பிறந்த நாம் எதிர்பார்ப்பது திருமாலின் 'தசாவதாரத்தை'த் தானே...பின்னூட்ட‌த்தில் த‌ங்க‌ளுடைய‌ விள‌க்க‌த்தை எதிர்பார்த்து இருப்பேன்...

    திருமாலின் 'தசாவதாரமும்',மனிதனின் பரிணாம வளர்ச்சியும் பற்றி நானும் ஒரு புத்தகத்தில் படித்து அறிந்து கொண்டேன்...நம் முன்னோர்கள் எத்துனை பெரிய "ஞானிகள்" என்பது இது போன்ற அரிய பல விஷயங்கள் மூலம் நாம் அறியலாம்...நல்லதொரு ஆக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரி...

    தேமொழி த‌ங்க‌ளுக்கு என‌து மிக‌ப் பெரிய‌ ந‌ன்றிக‌ள்...ச‌ந்தேக‌ம் எழுப்புவ‌தே என் வேலையாகிவிட்டாலும் அத‌ற்கு மிக‌வும் தெளிவான‌ விள‌க்க‌த்தை கானொளி மூல‌மே த‌ந்துவிட்டீர்க‌ள்...கானொளியை பார்த்த‌தும் சிறுவ‌ய‌தில் செய்து பார்த்து விளையாடிய‌து நினைவிற்கு வ‌ந்துவிட்ட‌து..."Templates"யையும் இணைத்து த‌ந்துவிட்டீர்க‌ள்,நானும் மீண்டும் செய்து பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்...ந‌ன்றி தேமொழி சகோத‌ரி...கேட்ட‌தும் கொடுப்பவரே,"தேமொழி,தேமொழி"...

    ReplyDelete
  13. kmrk ஐயா தங்களுக்கு சிறுவயதிலேயே இத்தகைய ஞானிகளின் ஆசி கிட்டியது தாங்கள் வாங்கி வந்துள்ள பூர்வபுண்ணியமே என்று நினைக்கின்றேன்...

    ///இது போன்ற மகான்களின் ஆசியால்தான் ஓரளவாவது நல்ல குணங்களும்
    சேவை மனப்பானமையும் எனக்குத் தோன்றியது///
    மிகச் சரியாக கூறியுள்ளீர்கள்...நம்மையும் நம் எண்ணங்களையும் சீர்படுத்துவது ஆன்மிகம் தான்...தங்களின் அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா...

    தனுசு அவர்களின் கவிதை மிகவும் அருமை...சமூகத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு முதல் முக்கிய காரணமாய் அமைவது வறுமையை வளர்க்கும் ஆட்சியாளர்கள் தான்...ஆகவே வறுமையையும்,வன்முறையையும் ஊக்குவிக்கச் செய்யும் 'துஷ்டர்களான' போலி அரசியல்வாதிகளை இனம் கண்டு வேரறுக்க வேண்டும் என்பது எனது கருத்து...

    ReplyDelete
  14. மாஷே நமஸ்காரம்.

    அற்புதமான படைப்புகளை அல்லி வழங்கி வரும் சக தோழன் தோழி மார்களுக்கு எமது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. ஆனந்த முருகன் அவர்களின் நகைச்சுவைகளில் 'சாமர்த்தியமான' ஓட்டுனரும்,பயிற்சியாளரும் உண்மையில் 'நல்ல சாமர்த்தியசாலிகள்' என்று நினைக்கின்றேன்...

    ReplyDelete
  16. ///தேமொழிsaid...
    ஆனந்தமுருகன் எண்கணிதத்தின்படி உங்கள் பெயரை "அனந்தராமன்" என மாற்றியத்தை என்னிடம் தெரிவிக்காததால் நான் அதை ஒப்புக்கொள்ளப்போவதில்லை..... (என்று நான் வெளியிடப்போகும் சுற்றறிக்கையின் சாரம் இந்த சுருக்கமான பின்னூட்டம் வழியே தெரிவிக்கப் படுகிறது).///
    எண்க‌ணித‌முறைப்ப‌டி "Gazate"யில் வெளியிடாமலேயே பெய‌ர்மாற்ற‌ம் த‌ந்த‌ த‌னுசு அவ‌ர்க‌ளை பாராட்டாம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை...சுற்ற‌றிக்கை இன்னும் என‌க்கு கிடைக்க‌வில்லையே,சகோத‌ரி?...ஹிஹிஹி

    ReplyDelete
  17. எனது ஆக்கத்தை வெளியிட்ட வாத்தியார் அவர்க/ளுக்கும் படித்துப் பாராட்டிய நண்பர்களுக்கும் நன்றி. வெளியூர்ப் பயணம் சென்றிருந்ததால், இப்பொழுதுதான் வகுப்பறைக்கு வர முடிந்தது.

    ReplyDelete
  18. தேமொழியின் 'மாயக்கண்ணாடி' அவரது ஆற்றலுக்குச் சிறந்த சான்று. எவ்வளவு உழைத்திருப்பீர்கள் எனப் புரிந்து கொள்ள முடிந்தது.

    //"அர்க்கியம் விடுவது" என்பதன் உண்மையான பொருள் என்னவென்று தெரியாவிட்டாலும், நீரை கையில் முகந்து மீண்டும் ஊற்றிவிடுவது எனப் புரிகிறது. ஆனால் செய்வதன் காரணம் தெரியவில்லை. விளக்க முடியுமா? உங்கள் பதிவில் எழுதினாலும் வந்து படித்துவிடுவேன்.//

    அர்க்கியம் விடுவது என்பது ஒருவிதமான பூஜை முறை. ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில், இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு, இரண்டு கைகளாலும் நீரை எடுத்து, நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்துக்கொண்டு, நீரை அருவிபோல் பொழிவதே அர்க்கியம் விடுதல். சூரியபகவானுக்கு, மூன்று நேரங்களிலும் சந்தியாவந்தனம் செய்து அர்க்கியம் விடுவதை 'காணாமல், கோணாமல் கண்டு கொடு' எனும் வாக்கியத்தின் மூலம் அறியலாம். காணாமல் என்றால், சூரியன் உதிப்பதற்கு முன்னால், கோணாமல் என்றால் சூரியன் நேராக உச்சிக்கு வரும் வேளையில், கண்டு என்பதற்கு சூரிய அஸ்தமனத்திற்கு முன்னால் சூரியனைக் கண்டு என்பது பொருள். இவ்வாறு அர்க்கியம் விடுதல், பாவங்களைப் போக்கும். தெய்வங்களுக்கு நடைபெறும் பூஜை முறைகளிலும், அர்க்கியம் விடுதல் எனும் ஒரு உபசாரம் நடைபெறும். அப்போது, உத்தரணி (சிறிய கரண்டி), மூலம் ஒரு பாத்திரத்தில் நீர் சேர்ப்பது வழக்கம்.

    ReplyDelete
  19. superb article about ramsurathkumar

    ReplyDelete
  20. தனுசு அவர்களின் கவிதை உணர்ச்சிக் குவியல். நடக்கும் போது நடைபாதையைப் பிடுங்கும் 'ரவுடியிச' வளர்ச்சிக்கு என்னதான் தீர்வு?. தனுசுவின் கவிதைகளின் சிறப்பே, பிரச்னையோடு அதற்கான தீர்வும் தருவதே. துணிந்துவிட்டால், மண்புழுவும் மலைப்பாம்பே. 'விஷச்செடியாய் மாறிவிட்டேன், எந்த வேரை முதலில் அழிக்க?' வரிகள் குமுறலின் வெளிப்பாடு. தரவாடு என்ற ஆழ்ந்த பொருளுடைய சொல்லாக்கம் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

    தங்களின் கவிதை உணர்ச்சிக் குமுறலாய்க் கொட்டும் வேளையில், பிழைகள் தோன்றுவது இயற்கையே. ஆனால், சில பிழைகள், காரசாரமான வெண்பொங்கலில், சிறு கல் போல் 'ஸ்பீடு பிரேக்கர்'களாகி விடுகின்றன. உதாரணமாக,
    'ஏனிந்த அலறல்? தணியுமா இந்தக் கதறல்?',
    'மெய்குறுகி படிவதா',
    'ஓட்டாண்டி சேகரிப்புக்கு, குண்டாந்தட்டி அபகரிப்பு',
    'விஷச்செடியாய் மாறிவிட்டேன்'

    என்ற திருத்தங்களோடு படிக்கும் போது, கவிதையின் தாக்கம் அபரிமிதமாக இருக்கிறது. அருமையான கவிதையினைத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  21. குருவருள் இன்றி திருவருள் கிட்டாது என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கியது திரு. கே. எம்.ஆர். அவர்களின் ஆக்கம்.

    ஆனந்த முருகனின் கைவண்ணத்தில், எனது ஓட்டும் 'சமாளிபிகேஷன் சாம்ராட்' ரயில் வண்டி ஓட்டுனருக்கே.

    ReplyDelete
  22. @ஸ்ரீ ஷோபனா,

    தங்களுடைய பாராட்டிற்கு நன்றி. கல்கி என்பதன் பொருள் 'முடிவில்லாத' என்பதாகும். கலியுகத்தின் முடிவில், சம்பல் என்னும் கிராமத்தில் விஷ்ணுயாஸர் என்பவருக்கு மகனாகப் பிறக்கப் போவதாக 'கல்கி புராணத்தில்' வருகிறது. நாம் இப்போது, பிரம்மாவின் இரண்டாவது பாதி ஆயுளில் (த்விதீய பரார்த்தத்தில்) இருக்கிறோம் (50 வருடங்கள் ஒரு பரார்த்தம்). கலியுக முடிவிற்குப் பலப்பல வருடங்கள் இருக்கின்றன. ஆகவே இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  23. சில உபரி தகவல்கள்:

    மீன்கள் முதலில் சிருஷ்டி செய்யப்பட்ட இடமே கும்பகோணம் ஜெயங்கொண்டம் அருகில்
    இருக்கும் மீன்சுருட்டி. கால போக்கில் மீன்சிருஷ்டி மருவி மீன்சுருட்டி ஆகியது. இங்கு புராதன சிவன் கோயில் உள்ளது.
    இதை போல சிதம்பரம் கோயில் சிவகங்கை தீர்த்தத்தில் இருக்கும்
    மீன்களுக்கு உணவிடுதல் மிகவும் சிறப்பு ஏனெனில் இத்தீர்த்தத்தில் இருக்கும் மீன்கள் யாவும்
    சாக்ஷாத் சித்தர்களே. சிவனே சித்தன், சித்தனே சிவன். இதுவும் இல்லாமல், இங்கு ஒரு மீனுக்கு உணவிடுதல் சாக்ஷாத் மச்ச அவதார பெருமாளுக்கு உணவு அளித்தற்கு சமம்.

    சுத்தோதக மகரிஷியே முதன் முதலில் ஜீவன்களின் பயன்பாட்டிற்காக
    கடவுளை பல காலம் வேண்டி தவம் இருந்து தண்ணீரை பூவுலகிற்கு கொண்டு வந்தவர். இந்நிகழ்விற்கு முன்பு பல காலாமாக ஜீவன்கள் பிறந்தும் தண்ணீர் இல்லாமல்
    தாகத்தில் வாடி இறந்தன.

    நாம் இன்றைக்கு பயன்படுத்தும் தண்ணீர் கிடைப்பதற்கு காரணம் சுத்தோதக மகரிஷியே.

    ஓம் ஸ்ரீ சுத்தோதக மகரிஷியே போற்றி.

    அஷ்டதிக்கு கஜங்களை போல
    அஷ்டதிக்கு பாலகர்கள்
    அஷ்டதிக்கு நாகங்கள்
    அஷ்டதிக்கு தேவதைகள் உள்ளன

    தினமும் வெளியே செல்லும் முன் இவர்கள் அனைவரையும் வேண்டி
    சென்றாலே பல இன்னல்களில் இருந்து காத்து கொள்ளலாம்.

    புராணத்தில் வரும் ஏழு விதமான சமுத்திரங்களும் இன்றும் உள்ளன.
    குரு அருள் கனிந்தால் கண்டிப்பாக காட்சி கிடைக்கும்.

    குபேரனிடம் இருந்த மொத நிதிகளின் எண்ணிக்கை 108. இன்றைய காலத்தில் நமக்கு தெரிந்தது சங்க நிதி, பதும நிதி மட்டுமே. நாம் இன்று காணும் "Laughing Buddha" என்னும் சீன தேசத்து பொம்மைகள் உருவில் உள்ளவர்கள் உண்மையில் குபேர லோகத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் யாவரும் குபேர லோகத்தின்
    நிதியை நிர்வாகிக்கும் செயல்களை செய்து வருகின்றார்கள்.

    ஓம் ஸ்ரீ உத்தம சத்குருவே சரணம்.

    ReplyDelete
  24. தேமொழி said... ஆனந்தமுருகன் எண்கணிதத்தின்படி உங்கள் பெயரை "அனந்தராமன்" என மாற்றியத்தை என்னிடம் தெரிவிக்காததால் நான் அதை ஒப்புக்கொள்ளப்போவதில்லை..... (என்று நான் வெளியிடப்போகும் சுற்றறிக்கையின் சாரம் இந்த சுருக்கமான பின்னூட்டம் வழியே தெரிவிக்கப் படுகிறது).

    R.Srishobana said...எண்க‌ணித‌முறைப்ப‌டி "Gazate"யில் வெளியிடாமலேயே பெய‌ர்மாற்ற‌ம் த‌ந்த‌ த‌னுசு அவ‌ர்க‌ளை பாராட்டாம‌ல் இருக்க‌ முடிய‌வில்லை...சுற்ற‌றிக்கை இன்னும் என‌க்கு கிடைக்க‌வில்லையே,சகோத‌ரி?...ஹிஹிஹி

    நான் செய்த தவறுக்கு அனந்த முருகன் என்ன செய்வார்?

    ReplyDelete
  25. Parvathy Ramachandran said...என்ற திருத்தங்களோடு படிக்கும் போது, கவிதையின் தாக்கம் அபரிமிதமாக இருக்கிறது.

    பார்வதி அவர்களின் தமிழுக்கு தலை வணங்குகிறேன் .

    இந்த கவிதை ஒரு அவசர கதியில் எழுதியது. சாதரணமாக வியாழன் அன்று கவிதையை வாத்தியாருக்கு அனுப்பி விடுவேன். காரணம் வெள்ளி இரவு நீண்ட இறைவணக்கத்தில் இருப்பேன்.அந்த இரவு வேறு எதிலும் பங்கு கொள்ள மாட்டேன். உடற் பயிற்சிக்கும் செல்வதில்லை .விடிந்தால் சனி, நமக்கு ,வழக்கமான management meeting, staff meeting site visit என்று போய்க்கொண்டே இருக்கும் ,மதிய உணவுக்கு பிறகுதான் மூச்சு விடமுடியும்.சமயத்தில் சனி மாலையே வாத்தியார் மலர் வெளிவந்துவிடும்

    சென்ற வியாழன் அன்று சுனாமி பிரச்சினையில் புருனெய் ,மலேஷியா என்று சுற்றியதில் இணையக் கோளாறு வேறு.

    வாத்தியார் தான் வாராவாரம் இந்த மாதிரியான வல்லின ,மெல்லின தவறுகளை திருத்தி வெளியிடுவார்.

    இனி இப்பிழைகள் வராமல் பார்த்துக் கொள்கிறேன்.

    நல்லதொரு பின்னூட்டமிட்டு என்னை வளர வைக்கிறீர்கள். மிக்க நன்றி பார்வதி.

    ReplyDelete
  26. பார்வதியின் ஆக்கம் படிக்க சுவாரசியமான எழுத்து நடையுடன் நிறைய தகவல்களைத் தருவதாக இருந்தது. தொடர்ந்து இதுபோல் மேலும் பல ஆக்கங்களைத் தாருங்கள்.

    தேமொழியின் காணொளியை தற்சமயம் காண இயலவில்லை.

    யோகி சூரத்குமாரைப்பற்றி பாலகுமாரன் எழுத்துக்களில் முன்பே படித்திருக்கிறேன்.

    என் மிகச்சிறிய வயதிலேயே யோகியின் பழக்கம் ஏற்பட்டதே நான் உணவுக்கும் நீருக்கும் உடைக்கும் இருப்பிடத்திற்கும் குறைவின்றி இருக்கிறேன் என்று இப்போது உணர்கிறேன்.//

    இருக்கலாம், நம் சிற்றறிவிற்கு எட்டாத எவ்வளவோ விஷயங்கள் / நிகழ்வுகள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன.

    தனுசுவின் கவிதை அவரின் மனக்குமுறலை சரியாக வெளிப்படுத்தியுள்ளது. போன வாரமலருக்கு வாத்தியார் கொடுத்த தலைப்பான 'இந்தியாவில் மட்டுமே இது நடக்கும்' என்பது இதற்கும் பொருத்தமாக இருக்கும்.

    ஆனந்தமுருகனின் நகைச்சுவைத் துணுக்குகளும் சிரிக்கவைத்தன.

    ReplyDelete
  27. ///Parvathy Ramachandran said...
    @ஸ்ரீ ஷோபனா,
    தங்களுடைய பாராட்டிற்கு நன்றி. கல்கி என்பதன் பொருள் 'முடிவில்லாத' என்பதாகும். கலியுகத்தின் முடிவில், சம்பல் என்னும் கிராமத்தில் விஷ்ணுயாஸர் என்பவருக்கு மகனாகப் பிறக்கப் போவதாக 'கல்கி புராணத்தில்' வருகிறது. நாம் இப்போது, பிரம்மாவின் இரண்டாவது பாதி ஆயுளில் (த்விதீய பரார்த்தத்தில்) இருக்கிறோம் (50 வருடங்கள் ஒரு பரார்த்தம்). கலியுக முடிவிற்குப் பலப்பல வருடங்கள் இருக்கின்றன. ஆகவே இறைவனை வேண்டுவோம்.///

    த‌ங்க‌ளுடைய‌ த‌க‌வ‌லுக்கு மிக்க‌ ந‌ன்றி சகோதரி...இன்றே தாங்க‌ முடிய‌வில்லை,இன்னும் ப‌ல‌ நூறு ஆண்டுக‌ளை யோசிக்க‌ முடிய‌வில்லை...சிவ‌ ச‌ம்போ....

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com