மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.12.10

Astology உனக்கு எது சொந்தம்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 Astrology  உனக்கு எது சொந்தம்?

இறைவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பேதம் கிடையாது. படைப்பில் உள்ள எல்லா உயிர்களுமே அவருக்கு வேண்டியவைகள்தான். வேண்டியவர்கள்தான்.

இறைவனுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. எல்லோருக்கும் பொதுவானவர் அவர். எல்லோருக்குமே அவர் சொந்தமானவர். பேடண்ட் உரிமை யாருக்கும் கிடையாது.

அவர் படைத்தவற்றில் சில விஷயங்கள் பொதுவில் உள்ளன. சில விஷயங்களை சக மனிதர்களும், அரசும் கைப்பற்றி வைத்திருக்கின்றன.

காற்றும், வெளிச்சமும் பொது உபயோகத்தில் இருக்கிறன.

“மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று 

ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை”

என்று கவிஞர் வாலி அவர்கள் அதை அற்புதமான பாட்டாகச் சொன்னார்

ஆனால் கடவுள் கொடுத்த நீரும் நிலமும் இன்று பொது உபயோகத்தில் இல்லை.

நிலம், சொத்து, பட்டா, பத்திரம் என்று பலரது கைகளில் சிக்கி இருக்கிறது. பெரும்பான்மையான நிலமும், நீர் வளமும், இயற்கை வளமும் அரசாங்கங்களின் கைகளில் சிக்கி இருக்கிறன.

அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இல்லையென்றால் மனிதன் இயற்கை வளங்களைல்லாம் ஒட்டு மொத்தமாகக் க்ளோஸ் செய்து காசாக்கி வைத்துவிடுவான். மாடமாளிகைகளில் குடியிருப்பான். ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் போய்க் கொண்டிருப்பான்..

இப்போதும் இயற்கையில் கிடைக்கும், ஆற்று மணல், சுண்ணாம்பு, கிரானைட் கற்களையெல்லாம் சில மனிதர்கள் கோடிக் கணக்கில் காசாகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் வருமானம் இருப்பதால் அரசும் அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. அவர்களை விட்டு வைத்திருக்க்கிறது.

அதுபோன்றே, நிலங்களும் பலரது கையில் சிக்கியிருக்கிறது. நகரங்களுக்கு அருகில் இருக்கும் விவசாய நிலங்கள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஏக்கர் ஐம்பதாயிரம் ரூபாய் அளவில் இருந்த நிலங்கள் எல்லாம் இன்று ஒரு கோடிக்குப் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

சென்னை அண்ணா சாலையில் ஒரு ஏக்கர் (அதாவது 44,000 சதுர அடிகள் கொண்ட நிலம்) நிலத்தின் இன்றைய மதிப்பு 200 கோடி ரூபாய்கள். கிடைத்தால் அந்த விலைக்கு வாங்குவதற்குப் பல செல்வந்தர்களும், நிறுவனங்களும் போட்டி போடும் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.

விவசாயம் பார்த்துக் கஷ்டப்படுவதை விட நிலைத்தை விற்றுவிட்டு, நகரங்களில் சுகமான வாழ்க்கை வாழ நினைக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கோவை கிராஸ் கட் ரோடு எண்ணும் வியாபாரப் பகுதியில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு செண்ட் இரண்டு அல்லது மூன்று லட்சமாக இருந்த இடத்தின் விலை இப்போது ஒரு கோடியைத் தொட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒரு செண்ட் என்பது 440 சதுர அடி இடம்.

உங்களுக்கு அந்தத் தெருவில் இரண்டு கிரவுண்ட் இடமிருந்தால், அதன் இன்றைய மதிப்பு, பதினோரு கோடி ரூபாய். நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம். எந்தத் தொழிலையும் செய்து கஷ்டப்பட வேண்டாம். அதை விற்று வங்கியில் பணத்தைப் போட்டு விட்டு, சுகமாக இருக்கலாம். தினமும் கோஹினூர் எக்ஸ்ட்ரா லென்த் பாசுமதி அரிசியில் சாதம் சமைத்துச் சாப்பிவிட்டு வீட்டில் படுத்துக்கொள்ளலாம். கோவை என்றால் ஏஸி தேவையில்லை. மற்ற ஊர்க்காரர்கள் வீடு மொத்தத்தையும் ஏஸி செய்துவிட்டால் போதும். வாழ்க்கை அம்சமாகிவிடும். ஆனந்தமாகிவிடும்.

உண்மைதானா?

தனி மனிதனுக்கு மட்டும் அது சாத்தியம். குடும்பஸ்தனுக்கு மட்டும் அது சாத்தியமில்லை. சொத்தை வைத்துப் பல குடும்பங்களில் இன்று குடுமிப்பிடி சண்டை நடந்துகொண்டிருக்கிறது. நெருங்கிய உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வருத்தம், மனஸ்தாபம், விரோதம், குரோதம், துரோகம் என்று பல காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

சொத்துக்கள் இருக்கும் பலர் வாழ்வில் இன்று நிம்மதி இல்லை. திருப்தியின்மை இல்லை.

சொத்து இல்லாதவன், இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர மற்றபடி நிம்மதியாக இருக்கிறான்.

இதைப்பற்றிக் கவியரசர் ஒரு பாடலில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:

எல்லையில்லா நீரும் நிலமும் நான்தந்தது
எந்தன்சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது.
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது.
காசுபண ஆசை எல்லாம் ஏன் வந்தது


மனிதன் சுய நலத்தின் மொத்த உருவமாக மாறிவிட்டிருப்பாதால்தான் இந்த அவலம்.

தஞ்சாவூரில் 100 ஏக்கர் நிலமும், ஊட்டியில் 300 ஏக்கர் தேயிலைத் தோட்டமும் வைத்திருப்பவன் கூட ஒரு நாள் எல்லாவற்றையும் போட்டது போட்டபடி போகப்போகிறான். மண்ணோடு மண்ணாகப் போகிறான்.

நிலம் எனக்குச் சொந்தம் என்பவனை, அவன் எனக்குச் சொந்தம் என்று நிலம் ஒருநாள் காட்டப்போகிறது.

யாருக்கும் எதுவும் சொந்தமில்லை.

வெறும் கையோடுதான் வந்தோம் (பிறந்தோம்) வெறும் கையோடுதான் போகப்போகிறோம்!

ஒடிந்துபோன ஊசிகூட உன்கூட வராது என்று பட்டினத்தார் அதை,அந்த நிலையை வலியுறுத்திச் சொன்னார்.

ஆகவே யாருக்கும் எதுவும் சொந்தமில்லை.

உனக்கு எது சொந்தம்? என்ற கேள்விக்குக் கவியரசர் கண்ணதாசன் அழகாக விளக்கம் சொல்வார்.

உனக்கு எதுவுமே சொந்தமில்லை. உன் உடம்பே உனக்குச் சொந்தமில்லை. உன் ஆன்மா உடம்பு என்னும் வாடகை வீட்டில் குடியிருக்கிறது. நீ இறந்துபோகும்போது, உன் உயிர் உன்னைவிட்டுப் பிரியும் போது, அது உன உடலைவிட்டு நீங்கிவிடும். பாழ் உடம்பை ஒரு நாள் கூட வீட்டில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். எரித்துவிடுவார்கள். அல்லது மண்ணோடு மண்ணாகப் புதைத்துவிடுவார்கள். ஆகவே உனக்கு எதுவுமே சொந்தமில்லை.

அதையே தயானந்த சரஸ்வதி சுவாமிகள் வேறுவிதமாகச் சொல்வார்கள்.
You have not owned anything. You are only a custodian.
++++++++++++++++++++++++++++++++++
வேறு விதமாக, இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவருகிறமாதிரி சற்று சிந்தித்துப்பார்ப்போம்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

பொருள் இல்லாமல் எப்படி ஜீவிக்க முடியும்?

ஒரு கிலோ வெங்காயத்தின் இன்றைய விலை கிலோ 100 ரூபாய். நல்ல அரிசியின் விலை கிலோ 40 ரூபாய். நகரங்களில் ஆயிரம் சதுர அடிகள் கொண்ட ஒரு வீட்டின் வாடகை பத்தாயிர்ம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை இடத்தைப் பொறுத்து உள்ளது.

காலைப் பலகாரமாக ஒரு பிளேட் வடை, பொங்கல், ஒரு நெய் ரோஸ்ட், ஒரு காப்பி சாப்பிட்டால் நூறு ரூபாய் செலவாகும்.

மின் கட்டணம், செல்போன் பில், வாகனத்திற்குப் பெட்ரோல் என்று பலவகையான செலவுகள் உள்ளன.

பணம் வேண்டாமா?

பட்டினத்தார் போல எதுவும் வேண்டாம் என்று கோவில் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ள முடியுமா?

ஆகவே பொருளை (பணத்தை) வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது.

பொருள் வேண்டும்.

ஆனால் தேவைப்படும் அளவுதான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும்.

தேவைப்படும் அளவு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

தேவைக்கு மேல் கிடைப்பவன், அதைக் குவித்து வைக்க ஆசைப்படும்போது தான் பிரச்சினை!

தேவையான அளவு கிடைக்காதவன், தன் தேவைகளைக் குறைத்துக் கொள்வது ஒன்றுதான் சாத்தியமான வழி!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===========
யாருக்கும் எதுவும் சொந்தமில்லை என்பதுதானே பொதுவிதி என்று சொல்லி, அம்பானி 4,500 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ள வீட்டிற்குப் போய் நாம் குடியிருக்க ஆசைப்பட முடியுமா? ஏன் நுழைய முடியுமா? அமிதாப்பச்சன், சச்சின் டெண்டூல்கர் ஆகியோரின் மாளிகைக்குள் நுழைய முடியுமா?

தமிழ் நாட்டின் முன்னணிப் பொறியியல் கல்லூரிக்குள் சென்று, அதைச்(பொதுவிதியைச்) சொல்லி, கட்டணம் எதுவுமில்லாமல் உங்கள் பிள்ளைக்கு, அல்லது உங்கள் தம்பிக்குப் படிப்பதற்கு ஒரு சீட்டைக் கேட்டு வாங்க முடியுமா?

”இருக்கும்வரை எல்லாம் சொந்தம். இறந்து சாம்பலான பிறகு அது தன் வாரிசுகளுக்குப் பயன்படட்டும்” என்பதுதான் இருப்பவனின் அசைக்க முடியாத சிந்தனை.
++++++++++++++++++++++++++++++++++
சரி, அதையெல்லாம், அந்த சிந்தனையைச் சற்றுத் தள்ளிவைத்துவிட்டு, சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொன்னான நேரம் கருதியும், எனது தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை நாளை!

(தொடரும்)

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

18 comments:

  1. ///"இப்போதும் இயற்கையில் கிடைக்கும், ஆற்று மணல், சுண்ணாம்பு, கிரானைட் கற்களையெல்லாம் சில மனிதர்கள் கோடிக் கணக்கில் காசாகிக் கொண்டிருக்கிறார்கள்".///
    குளித்தலை கரூர் மார்க்கத்தில் குறுகிய சாலையில் மணலை அள்ளிக்கொண்டு டிப்பெர் லாரிகள் அதி வேகமாகப் பறக்கின்றன. கேரளாவுக்குச் சென்று பல்லாயிரக்கணக்கான ரூபாயாக மாறிவிடுமாம்.அந்த இடத்தில் பேருந்துப்
    பயணம் ஆபத்தாகவும் போய்விட்டது, எந்த நேரம் விபத்து சம்பவிக்கும் என்று தெரியாது.
    உங்கள் ஆக்கம் சிந்தனையைத் தூண்டுகிறது.நன்றி!

    ReplyDelete
  2. //நிலம் எனக்குச் சொந்தம் என்பவனை, அவன் எனக்குச் சொந்தம் என்று நிலம் ஒருநாள் காட்டப்போகிறது.
    //

    இரண்டு வரியில் எப்படிப்பட்ட பொன்னான சிந்தனை!
    தொடருங்கள், காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  3. "உனக்கு எது சொந்தம்?" என்ற வினாவை எழுப்பிவிட்டு அதன் மீது ஒரு படம், இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த விளம்பரத்தாள், இரண்டு கார் சாவிகள். எதற்கு இந்தப் படம் என்று யோசித்தேன். ஒருவனுக்கு நிம்மதியான வாழ்க்கை, குறைகள் இல்லாத மரணம் இவை கிடைக்க "இறைபக்தி" எனும் பிரிமியம் செலுத்தி, கடவுளின் "அருளைப்" பெற வேண்டும். அதற்கான திறவுகோல் பேராசை இல்லாத, போதுமென்ற மனம். இதை குறிப்பாகக் காட்டுவது போல இருக்கிறது. பிறர் பொருளைத் திருட வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு கிராம நிர்வாக அதிகாரி, ஏழை எளிய கிராமமக்களுக்கு பணிபுரிய அமர்த்தப் பட்டிருக்கும் ஒரு கீழ்நிலை அரசு ஊழியர். அந்தக் கால கிராம பட்டாமணியம், கணக்குப் பிள்ளை இவர்கள் தங்கள் சொந்த செல்வத்தில் வாழ்வர். அரசாங்க ஊதியம் என்பது அவர்களுக்கு ஒருநாள் செலவுக்குத்தான் போதுமானதாக இருக்கும். அப்படியும் அவர்கள் நேர்மையாக வாழ்ந்தனர். இன்று ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் கையூட்டு வாங்கிக் கைதானவர்களில் நிச்சயம் ஒரு கிராம வி.ஏ.ஓ. எனப்படும் கிராம அதிகாரி இருக்கிறார். சமூகம் சீர்கெட்டுக் கிடக்கிறது, ஊழல்தான் இன்றைய வாழ்வின் மூலாதாரம் என்றாகிவிட்டது. இதனைத் திருத்த ஒரு மகாத்மா அவதாரம் செய்வாரா தெரியவில்லை.

    ReplyDelete
  4. ஆசானே வணக்கம்!

    இன்றைக்கோ, நாளைக்கோ அல்லது என்றைக்கோ ஒருநாள் இந்த உயிர் ஆனது வீடு என்னும் சடலத்தை விட்டு பிரிந்து போவது உறுதல் . அவ்வாறு பிரிந்து போகுமுன் நாம் வாழ்ந்த வாழ்க்கை தமக்கு பிடித்த அளவாவது திருப்தி தரும் வகையில் தர்மத்தின் படி அமைந்தால் அல்லது அமைத்துகொண்டால் அதுவே இந்த ஜென்மத்தின் பெரும் " பலாபலன்!" என்று கூற வருகின்றீர்களா ஐயா

    --

    ReplyDelete
  5. "செல்வத்துப் பயனே ஈதல்"- என்றார் வள்ளுவர் சிலர் தனது நலனுக்கே ஈவதில்லை.....
    கண்ணால் காணும் பொருளை மட்டுமே பெரிது என்று நினைக்கு இந்த மனிதன்..... காணமுடியாத அருளைப்பற்றி அது தேவைப்படும் வரைக் கவலைப் படுவதில்லை....
    பாவம் இவன் தான் பகுத்து அறிபவனாயிற்றே!

    சரி, அவன் தேடிய பொருளைக் கொண்டு அருளை பெறுவோம் என்ற எண்ணம் வருகையில் அதை செலவு செய்யும் அதிகாரமோ அவனிடம் இல்லை.... நல்ல விசயங்களைத் தள்ளிப் போட்டால் நடக்காமலே போய்விடும்....
    இன்றே இப்போதே நினைத்த மாத்திரத்திலே செய்வோம்......

    அருளும் பொருளும் இரட்டைத் தண்டவாளங்கள்... அவை இரண்டிலும் வாழ்க்கை என்னும் வண்டிப் பயணம் செய்தவர்கள் ஊர் போய் சென்றிருக்கிறார்கள்.......இது உலகம் கூறும் நல்வழி....

    செவிடாய்ப் போனக் காதுகளுக்கு செய்கையில் புரிய வைக்கலாம்.....
    செவிடாய் தான் இருப்பேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு காலம் தான் புரியவைக்கும்....

    அருமையானக் கட்டுரை....பகுதியையும் சொல்லுங்கள் எங்கள் வாத்தியாரே! பாங்குடன் நாங்கள் காத்திருக்கிறோம்....

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,

    நலம் நலம் அறிய ஆவழ், நீநீண்ட நாள் வரவில்லை, வியாபார நிமித்தமாக அயல்நாடு சென்றுவிட்டேன்.

    எனக்கு மிகவும் பிடித்தவரிகள்

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    பறவைகளே பதில் சொல்லுங்கள்
    மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
    மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்


    நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா
    மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே


    வாழ்க வளமுடன்
    நன்றி

    ReplyDelete
  7. kmr.krishnan said...
    ///"இப்போதும் இயற்கையில் கிடைக்கும், ஆற்று மணல், சுண்ணாம்பு, கிரானைட் கற்களையெல்லாம் சில மனிதர்கள் கோடிக் கணக்கில் காசாகிக் கொண்டிருக்கிறார்கள்".///
    குளித்தலை கரூர் மார்க்கத்தில் குறுகிய சாலையில் மணலை அள்ளிக்கொண்டு டிப்பெர் லாரிகள் அதி வேகமாகப் பறக்கின்றன. கேரளாவுக்குச் சென்று பல்லாயிரக்கணக்கான ரூபாயாக மாறிவிடுமாம்.அந்த இடத்தில் பேருந்துப்
    பயணம் ஆபத்தாகவும் போய்விட்டது, எந்த நேரம் விபத்து சம்பவிக்கும் என்று தெரியாது.
    உங்கள் ஆக்கம் சிந்தனையைத் தூண்டுகிறது.நன்றி!///

    உங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  8. ////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
    //நிலம் எனக்குச் சொந்தம் என்பவனை, அவன் எனக்குச் சொந்தம் என்று நிலம் ஒருநாள் காட்டப்போகிறது.
    //
    இரண்டு வரியில் எப்படிப்பட்ட பொன்னான சிந்தனை!
    தொடருங்கள், காத்திருக்கிறேன்!////

    நல்லது. நன்றி தொடர்ந்து அடுத்த பகுதியையும் படியுங்கள்

    ReplyDelete
  9. /////Thanjavooraan said...
    "உனக்கு எது சொந்தம்?" என்ற வினாவை எழுப்பிவிட்டு அதன் மீது ஒரு படம், இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த விளம்பரத்தாள், இரண்டு கார் சாவிகள். எதற்கு இந்தப் படம் என்று யோசித்தேன். ஒருவனுக்கு நிம்மதியான வாழ்க்கை, குறைகள் இல்லாத மரணம் இவை கிடைக்க "இறைபக்தி" எனும் பிரிமியம் செலுத்தி, கடவுளின் "அருளைப்" பெற வேண்டும். அதற்கான திறவுகோல் பேராசை இல்லாத, போதுமென்ற மனம். இதை குறிப்பாகக் காட்டுவது போல இருக்கிறது. பிறர் பொருளைத் திருட வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு. ஒரு கிராம நிர்வாக அதிகாரி, ஏழை எளிய கிராமமக்களுக்கு பணிபுரிய அமர்த்தப் பட்டிருக்கும் ஒரு கீழ்நிலை அரசு ஊழியர். அந்தக் கால கிராம பட்டாமணியம், கணக்குப் பிள்ளை இவர்கள் தங்கள் சொந்த செல்வத்தில் வாழ்வர். அரசாங்க ஊதியம் என்பது அவர்களுக்கு ஒருநாள் செலவுக்குத்தான் போதுமானதாக இருக்கும். அப்படியும் அவர்கள் நேர்மையாக வாழ்ந்தனர். இன்று ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் கையூட்டு வாங்கிக் கைதானவர்களில் நிச்சயம் ஒரு கிராம வி.ஏ.ஓ. எனப்படும் கிராம அதிகாரி இருக்கிறார். சமூகம் சீர்கெட்டுக் கிடக்கிறது, ஊழல்தான் இன்றைய வாழ்வின் மூலாதாரம் என்றாகிவிட்டது. இதனைத் திருத்த ஒரு மகாத்மா அவதாரம் செய்வாரா தெரியவில்லை.//////

    நம்பிக்கையோடு இருங்கள் சார். ஒரு அவதார புருஷன் வந்து அனைத்தையும் சீராக்குவார்!

    ReplyDelete
  10. ///kannan said...
    ஆசானே வணக்கம்!
    இன்றைக்கோ, நாளைக்கோ அல்லது என்றைக்கோ ஒருநாள் இந்த உயிர் ஆனது வீடு என்னும் சடலத்தை விட்டு பிரிந்து போவது உறுதல் . அவ்வாறு பிரிந்து போகுமுன் நாம் வாழ்ந்த வாழ்க்கை தமக்கு பிடித்த அளவாவது திருப்தி தரும் வகையில் தர்மத்தின் படி அமைந்தால் அல்லது அமைத்துகொண்டால் அதுவே இந்த ஜென்மத்தின் பெரும் " பலாபலன்!" என்று கூற வருகின்றீர்களா ஐயா/////

    பொறுத்திருந்து அடுத்த பகுதியையும் படியுங்கள் ராசா!

    ReplyDelete
  11. /////Alasiam G said..
    "செல்வத்துப் பயனே ஈதல்"- என்றார் வள்ளுவர் சிலர் தனது நலனுக்கே ஈவதில்லை.....
    கண்ணால் காணும் பொருளை மட்டுமே பெரிது என்று நினைக்கு இந்த மனிதன்..... காணமுடியாத அருளைப்பற்றி அது தேவைப்படும் வரைக் கவலைப் படுவதில்லை....
    பாவம் இவன் தான் பகுத்து அறிபவனாயிற்றே!
    சரி, அவன் தேடிய பொருளைக் கொண்டு அருளை பெறுவோம் என்ற எண்ணம் வருகையில் அதை செலவு செய்யும் அதிகாரமோ அவனிடம் இல்லை.... நல்ல விசயங்களைத் தள்ளிப் போட்டால் நடக்காமலே போய்விடும்....
    இன்றே இப்போதே நினைத்த மாத்திரத்திலே செய்வோம்......
    அருளும் பொருளும் இரட்டைத் தண்டவாளங்கள்... அவை இரண்டிலும் வாழ்க்கை என்னும் வண்டிப் பயணம் செய்தவர்கள் ஊர் போய் சென்றிருக்கிறார்கள்.......இது உலகம் கூறும் நல்வழி....
    செவிடாய்ப் போனக் காதுகளுக்கு செய்கையில் புரிய வைக்கலாம்.....
    செவிடாய் தான் இருப்பேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு காலம் தான் புரியவைக்கும்....
    அருமையானக் கட்டுரை....பகுதியையும் சொல்லுங்கள் எங்கள் வாத்தியாரே! பாங்குடன் நாங்கள் காத்திருக்கிறோம்....//////

    "செல்வத்துப் பயனே ஈதல்"- என்றார் வள்ளுவர் என்று மேற்கோள் காட்டியுள்ளீர்கள். நன்றி. ஒளவையார் அதற்கும் மேலே ஒருபடி சென்று, இப்படிச்சொல்லியுள்ளார், “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்”
    ஈயாமல் தேடிக் குவித்துவைத்துள்ள செல்வம் ஒரு நாள் தீயவர்களின் கைக்குப் போய்ச்சேரும் என்றார். அது மகனாகவும் இருக்கலாம். அல்லது வீட்டிற்கு வந்த மாப்பிள்ளையாகவும் இருக்கலாம். அல்லது பேரனாகவும் இருக்கலாம். பேத்தியை மணந்துகொண்டவனாகவும் இருக்கலாம்!

    ReplyDelete
  12. ////Success said...
    வணக்கம் ஐயா,
    நலம் நலம் அறிய ஆவல், நீண்ட நாட்களாக வரவில்லை, வியாபார நிமித்தமாக அயல்நாடு சென்றுவிட்டேன்.
    எனக்கு மிகவும் பிடித்தவரிகள்

    ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
    அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
    பறவைகளே பதில் சொல்லுங்கள்
    மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
    மனதிற்கு மனது கொஞ்சம் தூது செல்லுங்கள்
    நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
    விதி செய்த குற்றம் அன்றி வேறு ஏதம்மா
    மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
    வாழ்க வளமுடன்
    நன்றி/////

    உங்களுக்குப் பிடித்தவரிகளைச் சொன்னமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. வாத்தியார் அவர்களின் கூற்று முற்றிலும் சரியே. உலக துன்பங்களின் அடிப்படைக் காரணமே ஆசை. அதனால் 'ஆசையை துற' என்று சில ஞானிகள் சொல்கிறார்கள். வேறு சில ஞானிகளோ 'ஆசைப்படு' அப்போதுதான் வாழ்க்கை என்கிறார்கள். ஆசைப்படுவதா அல்லது வேண்டாமா என்று குழம்பி, இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து முயற்சி செய்ய நினைக்கும்போது எல்லாம் முடிந்து போயிருக்கிறது. இதற்குமேல் வாத்தியார் வேறு அவர் பங்கிற்கு 'எல்லோருக்கும் 337 தான் ஆகையினாலே 'அலட்டிக்காதே' என்கிறார். என்னசெய்வது என்றே பலசமயங்களில் புரிவதில்லை

    ReplyDelete
  14. சார் ,
    ஆரம்பமே அமர்களமா இருக்கு ,அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் .

    ReplyDelete
  15. இம் மண் சொந்தம், மனை, மாடி எனக்கே சொந்தம் என்றான் ; அவனே அவனுக்கு சொந்தமில்லாதபோது !

    ReplyDelete
  16. ///////////G.Nandagopal said...
    என்னசெய்வது என்றே பலசமயங்களில் புரிவதில்லை\\\\\\

    டிராக் 1 . அருளியல் முதல்வாதப்படி 'ஆசையை ஒழி' - டைரக்ட் ப்ரோமோஷன் to பேரின்பம்..

    டிராக் 2 . பொருளியல் முதல்வாதப்படி 'ஆசைப்படு' - 'கனவு காண்' - 'திட்டமிடு' - 'செயலாற்று' - 'காரிய வெற்றி' - 'அனுபவி ராஜா அனுபவி' (இன்பமும் துன்பமும் சேர்த்துதான்) - way to சிற்றின்பம்...
    இந்த ரூட்டுலே தப்புத்தாளங்கள் கூட அவசியமாகும்..
    stop not .. till the goal is reached ..ன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..

    பார்த்தனுக்கு அடாத உளச் சோர்வுக்கு காரணமாகும்

    'மனிதனம்மா மயங்குகிறேன்
    தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே
    தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே...
    பறவைகளே பதில் சொல்லுங்கள்
    மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்'

    பாட்டு கொண்டு 'மனசாட்சி' தட்டி எழுப்புவதற்கெல்லாம் இங்கே வழியில்லை..

    நல்லவனா கெட்டவனா என்ற கேள்விக்கும் இடமில்லை..

    நம்பிக்கை வைத்து கல்லையும் பார்க்கத் தேவையில்லை.

    'நான் வெற்றி பெற்றவன்..பகையை முட்டி விட்டவன்.. தீயை சுட்டு விட்டவன்..

    இமயம் தொட்டு விட்டவன்..

    என் வாகையே வீரமே சூடும்..விக்ரம்'

    என்று பாட்டைப் பாட வேண்டியதுதான்..


    நமக்கெல்லாம் எந்தப் பக்கமா போறதுன்னு சந்தேகம் வரலாமா மாமூ?

    அப்பிடியே ஒண்ணாம் நம்பர் டிராக்லே போகணும்னாலும் நடக்குற கதையா?

    ReplyDelete
  17. Minorwall said////
    நல்லவனா கெட்டவனா என்ற கேள்விக்கும் இடமில்லை../////////

    மாப்பு, இங்கே மறுபடியும் மகாபாரதத்தைதான் இதற்குச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. மகாபாரதம் பல நூறு கதாப்பாத்திரங்களை கொண்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஒவ்வொருவரும் விதவிதமான செயல்களை செய்திருப்பர் . ஆனால் முதலிலிருந்து முடிவு வரை மகாபாரதம் இதுதான் சரி இது தவறு என்று எந்த ஒரு செயலையும் சுட்டிக்காட்டியதில்லை. சரியா தவறா என்று தீர்மானிக்கும் வேலையை அது அதைப் படிப்பவர்களிடமே விட்டுவிடுகிறது. அதையேதான் கீதையில் பகவானும் சொல்லியிருப்பார். 'ஒரு யுகத்தின் தர்மங்களை இன்னொரு யுகத்தில் கடைபிடிக்கக்கூடாது' என்று. அந்த அற்புதமான காவியத்தை யார் யார் எந்தெந்த யுகங்களில் படிப்பார்கள் என்று யாருக்குத் தெரியும். ஆகவேதான் அதை படிப்பவர்கள் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது. என்னே! அதை அருளியவர் தீர்க்கதரிசனம்.

    ReplyDelete
  18. ஐயா இன்றைய கால்ம் மிக்வும் மோசமாகி விட்டது.

    இந்த பதிவு அதை நன்றாக படம் பிடித்து காட்டுகிறது.

    நன்றி ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com