மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.9.07

விதிப்படிதான் நடக்குமா?




************************************************************
விதிப்படிதான் நடக்குமா?

இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே
ஒரு பதில்தான்:

ஆமாம், எல்லாம் விதிப்படிதான் நடக்கும்!

எப்படிச் சொல்கிறாய்?

நிறையப் படித்ததையும், நீண்ட அனுபவத்
தையும் வைத்துச் சொல்கிறேன்!

முதலில் விதி என்றால் என்ன என்று பார்ப்போம்.

விதி என்ற சொல் இரண்டு வகையில் பொருள் தரும்

முதலில் அது வினைச் சொல்லாக (verb)
வரும்போது ஒரு பொருள் தரும்:
பெயர்ச் சொல்லாக வரும்போது வேறு
ஒரு பொருள் தரும் (noun):

விதி*1 - விதிக்க, விதித்து - வரி, கட்டணம்
முதலியவற்றை வசூலிக்க அறிவித்தல்.வரவு
செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் (levy, taxes)
விதிப்பது. 2.தண்டனை, தடை முதலிய
வற்றை அதிகாரபூர்வமாக அறிவித்தல்
award, impose 3. கட்டுப்பாடு நிர்ணயித்தல்,
நிபந்தனையை முன்வைத்தல் prescribe rules,
condition etc ; laydown

விதி*2 - 1.முன் கூட்டியே வகுக்கப் பட்ட
தாகவும், மனிதனால மாற்றமுடியாததாகவும்
உள்ள நியதி.ஊழ் (destiny, fate). 2.இயற்கை
யின் நிகழ்வில் உள்ள ஒழுங்குமுறை law of nature.

பிறந்தவன் இறந்துதான் போவான் என்ற
இயற்கையின் விதியை யாரால் மீற முடியும்?

எந்தச் செயலுக்கும் ஒரு எதிர்ச் செயல்
என்ற விதியின் அடிப்படையில்தான்
ஏவுகணை செலுத்தப்படுகிறது.

நான் இங்கே ஊழ் என்று பொருள்படும்
விதியைப் பற்றித்தான் எழுத முனைந்துள்ளேன்.

தமிழுக்கு முதல் பெருமை என்று சொல்லக்கூடிய
மறை நூலான 'திருக்குறள்' என்ற பொக்கிஷத்தைக்
கொடுத்த வள்ளூவர் பெருமகனார் விதியைப்
பற்றி என்ன சொல்கிறார்?

அடித்துப் பிழிந்து சாறெடுத்து இருபதே
வரிகளில் அவர் விதியைப் பற்றி
அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

இடம், பதிவின் நீளம், என்னுடைய கால
அவகாசம், கருதி மூன்று குறள்களை
மட்டும் எடுத்துக் கொடுத்துள்ளேன்.
பொறுமையாகப் படியுங்கள்
(பதிவர்களில் 81% இளைஞர்கள். அதனால்
இதைச் சொல்ல வேண்டியதுள்ளது.)
-----------------------------------------------------------------------
திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம்
38 அதிகாரங்கள் உள்ளன.

கடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை
அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை
என்ற அதிகாரம்.

ஊழ் (destiny) என்பதற்கு ஒரு உரையாசிரியர் இப்படி
விளக்கம் கொடுத்துள்ளார்.

முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள்
செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு
என்கிறார் அவர்.

அந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான குறள்:

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது!"
குறள் எண் 377

அவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன்
வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை
வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால்
அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட
வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை
அனுபவிக்க முடியாது.

சிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்
களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பார்கள்.
அவர்கள் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள்
கிளப்பிச் செலவளிப்பதற்கென்றே சிலபேர் பிறவி
எடுப்பார்கள்.

சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும்
கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ
அல்லது மாப்பிள்ளையோ அல்லது பேரனோ
ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று
அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான்.
விதி அங்கேதான் வேறு படுகிறது.

ஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம்.
ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்

******
"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
சுழினும் தான்முந்நுறும்"
குறள் எண். 380

ஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை
வேறு எவை உள்ளன? அந்த ஊழை விலக்கும்
பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு,
வேறு ஒரு வழியை ஆராய்ந்து எண்ணினாலும்,
அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி
முந்திக்கொண்டு வந்து நிற்கும்

கோவையில் இருந்து சென்னைக்குச் சேலம்
வழியாகச் சென்றால் விபத்து நேறிடும் என்று
அறிந்த ஒருவன், சேலம் வழியில் செல்வதைத்
தவிர்த்து, திருச்சி வழியாகச் சென்று தப்பித்துவிட
முனைந்தால் விதி விடாது. அது அவனுக்காக
திருச்சி டோல்கேட் அருகே காத்துக் கொண்டு நிற்கும்

ஒருவன் தன்னுடைய அபரிதமான பணத்தைப்
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஆபத்து
என்று தெரிந்து கிலோக் கணக்கில் தங்கமாக
வாங்கி வீட்டில் வைத்துக் கட்டிக் காத்தால்,
அது போகின்ற வேளையில் கொள்ளையில்
போய்விடும்

What is stronger than fate (destiny)?
If we think of an expedient
to avert it, It will itself be with us
(before the thought)

******

"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
குறள் எண்.372

பொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக்
காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன்
எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது
அவனைப் பேதமைப் படுத்தும் - அதாவது
முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள்
சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்
போது - ஒருவன் எவ்வளவு பேதமையாயிருந்
தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும்
அது அவனைப் பேரறிஞனாக்கும்!

An adverse fate produces folly, and
a prosperous fate produces enlarged knowledge.

******
இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter)
தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத்
துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப்
பாலின் கடைசி அதிகாரமாக ஊழ்வினையை
வைத்தார்?
அவருக்கே தெரியும், மனிதன் என்னதான்
கடவுளை வணங்கிக் கூழைக்கும்பிடு போட்டாலும்
அல்லது கதறி அழுதாலும், எல்லாம் ஊழ்வினைப்
படிதான் நடக்கும் என்று!

அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது
தெரியாமல் இருந்திருக்குமா என்ன?

சரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

ஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும்
சக்தியை அவர் கொடுப்பார்.
The Almighty will give standing power!
தாக்குப் ப்டிக்கும் சக்தியை அவர் கொடுப்பார்.
அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும்
பிரசித்தமான நாராயண குருவின் சரித்திரம்
(அதைப் பற்றி வேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)

ஆகவே எல்லாம் விதிப்படிதான் நடக்கும்!
நாம் வாங்கி வந்த வரத்தின்படிதான் நடக்கும்!

குமுதம் வார இதழின் நிறுவனரும், முன்னாள்
ஆசிரியருமான திரு.S.A.P அண்ணாமலை அவர்களிடம்
(அரசு கேள்வி பதில் பகுதியில்) ஒருமுறை இந்தக்
கேள்வி கேட்கப்பட்டபோது அவர் இப்படித்தான்
பதில் சொன்னார்:

"ஆமாம் அதுதான் உண்மையாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் பிறப்பில் ஏன் இத்தனை பேதங்கள்?"

ஒரு குழந்தை செல்வந்தர் வீட்டில் பிறக்கின்றது.
பிறந்த அன்றே வாழ்க்கைக்குத் தேவையான
அத்தனை வசதிகளும் அதற்கு கிடைத்து விடுகிறது.
மற்றொரு குழ்ந்தை, அன்றாடம் அரிசி வாங்கி,
தினமும் இரண்டு வேளை மட்டுமே - அதுவும்
அரை வயிறு மட்டுமே சாப்பிடும் ஏழை வீட்டில்
பிறந்து பாலுக்குக் கூட பலமணி நேரம் அழும்
நிலையில் பிறக்கிறது.

ஒரு குழந்தை பார்த்தவர் அத்தனை பேரும்
தூக்கிக் கொஞ்சும்படியான அழகுடன் பிறக்கிறது.
இன்னொரு குழந்தை பிறவியிலேயே ஊனத்துடன்
பிறக்கிறது.

ஒரு குழந்தைக்கு அற்புதமாக அன்பைச் சொறியும்
அன்னை கிடைக்கின்றாள். இன்னொரு
குழந்தைக்குப் பிறந்த மூன்றாம் நாளே
தூக்கிக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்துவிட்டுச்
செல்லும் இரக்கமில்லாத தாய் அமைகிறாள்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதெல்லாம் ஏன் இப்படி நடக்கிறது?

ஒரே வரியில் சொன்னால் பிறப்பில் இருந்து
இறப்பு வரை எல்லாமே விதிப்படிதான்.

நான் வலைப் பதிவில் எழுதுவது கூட விதிப்படி
என்று வைத்துக் கொள்ளுங்களேன்........!
(இது நகைச் சுவைக்காக)

(தொடரும்)


**********************************************************

32 comments:

  1. //"ஆமாம் அதுதான் உண்மையாக இருக்க வேண்டும்.
    இல்லையென்றால் பிறப்பில் ஏன் இத்தனை பேதங்கள்?"//

    சுப்பையா ஐயா,

    இங்கு முக்கியமான ஒரு கேள்வி பாரதியார் காலத்தில் 30 கோடி முகமுடையாளாக இருந்த இந்தியா இன்று 100 கோடி முகங்களை வைத்திருக்கிறது. உலக நாடுகளின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. புதிய பிறவிகளின் முன் வினை என்ன ? புதிதாக பிறப்பவர்கள் பேதங்கள் தவிர்த்து பிறக்கிறார்களா ? அல்லது புதிய பிறப்புக்கள் எந்த முன்வினையின் அடிப்படையில் ?

    ReplyDelete
  2. நான் இங்கு பின்னூட்டம் இடவேண்டும் என்பது என் விதி. :-)
    நல்ல அலசல்,ஐயா.

    ReplyDelete
  3. ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும், ஆனால் விதியய் மதியால் வெல்லாம் எனும் பழமொழி உள்ளதே.

    ReplyDelete
  4. வாருங்கள் கண்ணன்.
    நீங்கள் கேள்வி கேட்க பிறந்தவர் (திருவிளையாடல் திரைப் படத்தில் வருவதைப் போல)

    ஆனால் மிகவும் நல்ல கேள்வியாகக் கேட்டிருக்கிறீர்கள். பதிலலைப் பின்னூட்டத்தில் எழுதும் அளவிற்குச் சின்னதாக எழுதி விளங்கச்செய்ய முடியாது. ஆகவே அடுத்த பதிவில் விலாவரியாக எழுதுகிறேன். என்ன சரிதானே?

    ReplyDelete
  5. நல்ல அலசல் என்ற உங்கள் விமர்சனத்தின் மூலம் பதவில் சொல்ல வேண்டியதை சொல்லிய மகிழ்ச்சி எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. நன்றி!

    ReplyDelete
  6. ///ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும், ஆனால் விதியை மதியால் வெல்லாம் எனும் பழமொழி உள்ளதே///

    இயக்குனர் சங்கரைவிட எத்தனையோ கில்லாடிகள் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுகில்லாத மதியா?

    அவர்கள் ஏன் சங்கரைப் போல பணம், புகழ், வெற்றி ஏன் எல்லாவற்றையும் அடைய முடியவில்லை?

    விதியை வெல்ல முடிந்திருந்தால் நம்க்கு இந்நேரம் நூற்றுக்கணக்கான சங்கர்கள் அல்லவா கிடைத்திருப்பார்கள்?

    யோசித்துப் பாருங்கள் - விதியின் விளையாட்டுப் புரியும்!

    ReplyDelete
  7. someone asked why there are more humans now than before, but it is 100% incorrect. from the time humans evolved to this day 60 billion human have lived & died on this world. thats just 10% of the total human population of the world today.

    this is because the birth rate has not been increasing steady and the death rate falling steady thru out the years as most people think.

    this is a sceintific fact, sadly i cannot at the momment provide you with a link to where i read this.

    ReplyDelete
  8. Kovi,

    I too have asked similar question some years ago : If athamas can neither be created nor destroyed and if their total number is a constant n, then how is the human population into 6.5 billion from a mere millions some millenia ago ?

    Answer is : other forms of livng things like fish, flora and fauna are being depleted at an alarming rate and it can be assumed that those athamaas have been re-born as wretched humans to
    spend their remaining karma....

    ReplyDelete
  9. விதியில் வலியது ஒன்றுமே இல்லை. அதை முன் கூட்டியே அறியும் அறிவும் வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.
    நடக்கும் விஷயங்கள் நல்லதாக அமைய மட்டும் பிரார்த்தனை செய்யலாம். நம்பிக்கை வைக்கலாம்.
    தாங்கும் சக்தி கொடுக்க வேண்டிக் கொள்ளலாம். அருமையாக இருக்கிறது சுப்பையா ஐயா.

    ReplyDelete
  10. ///this is because the birth rate has not been increasing steady and the death rate falling steady through out the years as most people think.///

    உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி அனானி ந்ண்பரே!

    ReplyDelete
  11. ///Answer is : other forms of livng things like fish, flora and fauna are being depleted at an alarming rate and it can be assumed that those athamaas have been re-born as wretched humans to
    spend their remaining karma....///

    உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.கே ஆர்.அதியமான் அவர்களே!

    மனிதன் அடுத்த பிறவியிலும் மனிதனாகவே பிறப்பான் என்று சொல்ல முடியாது. செக்கு மாடாகக்கூடப் பிறக்கலாம் - தன் கர்ம வினையைக் கழிக்கலாம்
    அவை பற்றியெல்லாம எழுத உள்ளேன்

    ReplyDelete
  12. ///திருமதி.வல்லி சிம்ஹன் அவர்கள் சொல்லியது:நடக்கும் விஷயங்கள் நல்லதாக அமைய மட்டும் பிரார்த்தனை செய்யலாம். நம்பிக்கை வைக்கலாம்.
    தாங்கும் சக்தி கொடுக்க வேண்டிக் கொள்ளலாம். அருமையாக இருக்கிறது சுப்பையா ஐயா.///

    நன்றி சகோதரி! உங்களுக்கு கட்டுரையின் அடிப்படை நோக்கம் - என்ன சொல்ல விழைகிறேன் என்பது முழுதாகப் பிடிபட்டிருக்கிறது. அதற்காகப் பாராட்டுகிறேன்

    ReplyDelete
  13. //ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும், ஆனால் விதியய் மதியால் வெல்லாம் எனும் பழமொழி உள்ளதே.//

    பழமொழிகளைப் பழயன என்று பரனினே போடுவதை விடுத்து அவற்றின் ஆழ்ந்த கருத்துக்களை விளங்கிக் கொள்வது பயனுடயதாகுகும்.

    இங்கு மதியென்பது 7வது அறிவாகிய மெய்யறிவைக் குறிப்பதாகவே நினைக்கின்றேன்.

    எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமோ அவ்வறிவினைப் பெற்றிற்றால்,
    விதியும் விதி முடிந்து மாய்ந்து விடுமன்றோ!.

    சிந்திக்கத் தூண்டும் நல்ல பதிவு.

    ReplyDelete
  14. பதிவர்களின் மதிப்பிற்குரியவ்ரே,

    "ஊழ்" என்பது ஒருவற்கு நன்மை பயக்கும் வகையில் இயற்கை முறையாக அமைந்து பயனபடும் பண்பறிவு ஆகும்.போகூழென்பது தீமை பயக்கும் வகையில் இயற்கை முறையாக அமைந்து,பயன்படாமல் போகும் பண்பறிவாகும்.
    "ஊழ்" என்ற சொல் விதி-முன் வினை=தலை எழுத்து போன்றவை சமய வாதிகளின் கற்பனைக் கருத்தின் பாற்பட்டவை யாகும்.

    நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் கருத்துக்களைச் சொல்லியுள்ளேன்.நம்பிக்கை இருக்கலாம்.எல்லாம் தலை விதி என்ற அவநம்பிக்கையை நம்பலாமா?

    பெரும் பொருள் சேர்த்தவர்கள் தங்களுக்கு முன் நடந்தவர்களின் வாழ்க்கையைப் பார்த்து இயற்கைப் பண்பறிவைப் பயன் படுத்தித் தாங்கள் சம்பாதித்த சொத்து எப்படிச் செலவழிக்கப் பட வேண்டும் என்று"தலைவிதி" எழுதி வைத்து விடுகிறார்கள்.

    வகுத்தான்
    பில் கேட்சும்,நாத்திகர் என்று நம்பப்படும் வாரன் பஃவேட்டும் தங்கள் செல்வம் எப்படிச் செலவு செய்யப் பட வேண்டும் என்று வகுத்து,எழுதியுள்ளனர்.

    எதுவும் எப்போதும் இயற்கையாக நடக்கலாம்.அந்த இயற்கைப் பண்பை தலைவிதி என்பது கதையா,கற்பனையா என்பது அவரவர் மன நிலை.

    ReplyDelete
  15. // /தமிழன் அவர்கள் சொல்லியது: இயற்கை முறையாக அமைந்து,பயன்படாமல///

    வாருங்கள் அன்பரே! உங்கள் கருத்திற்கும், மதிப்பிற்குரியவரே என்று அன்புடன் அடியவனை விழித்தமைக்கும் மிக்க நன்றி!

    இறையன்பர்கள், எல்லாப் படைப்புக்களுமே இறைவன் செயல் என்பார்கள்
    இறைமறுப்பாளர்கள் எல்லாச் செயலுமே இயற்கை என்பார்கள்

    இருவரும் தண்டவாளத்தின் இரு வெவ்வேறு பக்கங்கள். இருவர் கருத்தும் எக்காலமும் ஒருமித்த கருத்தாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.No chance at all

    ஆகவே உங்கள் கருத்துக்கள் உங்களுக்கு. எங்கள் கருத்து எங்களுக்கு!

    "உண்டு என்றால் உண்டு
    இல்லையென்றால் - அது இல்லை"
    என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லுவார்

    ஆகவே நீங்கள் (உணரும்வரை) இல்லையென்றே சொல்லிக் கொண்டிருங்கள்
    அது உங்களுக்கு விதிக்கப்பட்டது!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  16. ஐயா, தவறாமல் உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன், மிகுந்த ஆர்வத்துடன். விதியின் வலியது இல்லை! மிக்க நன்றி.

    //நடக்கும் விஷயங்கள் நல்லதாக அமைய மட்டும் பிரார்த்தனை செய்யலாம். நம்பிக்கை வைக்கலாம். தாங்கும் சக்தி கொடுக்க வேண்டிக் கொள்ளலாம்.
    ஆமாம் வல்லிய‌ம்மா, நம்பிக்கை வேண்டும்.

    ReplyDelete
  17. தொடர்ந்து எழுதுங்கள்.
    அங்கங்கு உங்கள் அனுபவங்களைச்
    சுட்டி நிறைய எழுதுங்கள்.
    ஒரு புத்தகமாகத் தொகுக்கும் அளவுக்கு வளரட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. ஒரு தண்டவாளமாக இருப்பதில் முழு மகிழ்வுடன் பெருமையாகவும் இருக்கிறேன்.தண்ட வாளங்கள் மோதிக் கொள்வதில்லை,அவரவ்ர் வழி என்றே இருந்தாலும் ரயில்கள் அமைதியாகப் போனால் அனைவர்க்கும் நல்லது.

    தங்களின் அடுத்தவர்க்குச் செய்யும் தொண்டே அனைத்தின்பம் என்பது அனைவரின் கொள்கையாகி விட்டால் அமைதி நிறைந்து விடும்.

    ReplyDelete
  19. /// நண்பர் கெக்கே பிக்குணி அவர்கள் சொல்லியது:ஐயா, தவறாமல் உங்கள் பதிவுகளைப் படித்து வருகிறேன், மிகுந்த ஆர்வத்துடன். விதியின் வலியது இல்லை! மிக்க நன்றி.///

    வருகைக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள் நண்பரே

    ReplyDelete
  20. //ஜீவி அவர்கள் சொல்லியது:ஒரு புத்தகமாகத் தொகுக்கும் அளவுக்கு வளரட்டும்.
    வாழ்த்துக்கள்.//

    வார்ங்கள் கவிஞர் ஜீவி அவர்களே!. புத்தகமாகப் போடும் எண்ணம் உண்டு.

    அப்போது தவறாமல் ஒரு பிரதி வாங்குங்கள்......(இது நகைச்சுவைக்காக!)

    ReplyDelete
  21. ///தமிழன் அவர்கள் சொல்லியது:தங்களின் அடுத்தவர்க்குச் செய்யும் தொண்டே அனைத்தின்பம் என்பது அனைவரின் கொள்கையாகி விட்டால் அமைதி நிறைந்து விடும்.///

    நிதர்சனமான உண்மை நண்பரே!
    நன்றி!

    ReplyDelete
  22. அருமையான அலசல்.

    முழுமையாக தங்கள் கருத்துடன் ஒன்றுகிறேன்.

    எஸ்ஏபி அவர்கள் சொன்ன ஒன்று போதும் இதை உணர.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  23. //VSK அவர்கள் சொல்லியது: அருமையான அலசல்.
    முழுமையாக தங்கள் கருத்துடன் ஒன்றுகிறேன்.
    எஸ்ஏபி அவர்கள் சொன்ன ஒன்று போதும் இதை உணர.
    மிக்க நன்றி.////

    நன்றி சொல்வேன் உங்களுக்கு
    என் பதிவிற்கு வந்துசென்றதற்கு!

    ReplyDelete
  24. பெரும்பாலும் விதியை 'மனு'தாரர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, தாழ்த்தப்பட்டவனை தாழ்த்தியே வைத்திருப்பதற்கு விதியை காரணம் காட்டுவார்கள். எல்லாம் விதிக்கப்பட்டது என்பார்கள். விதி உண்மையோ பொய்யோ ஆனால் சில சமூகங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காக விதி நன்றாக செயலாற்றுகிறது.

    :)

    ReplyDelete
  25. வணக்கம் ஐயா,

    மனிதனின் வாழ்க்கை பல இன்னல் பயணமாக அமைவதற்கு முக்கிய காரணம் "ஊழ்வினை" என சொல்கிறார்கள். இதை ஜாதகத்தில் கண்டரிய ஒரு பதிவு போடுங்கள். கேள்வி தவறாக இருந்தாள் மன்னிக்கவிம்.

    ReplyDelete
  26. //இறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக ஊழ்வினையை வைத்தார்? அவருக்கே தெரியும், மனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கூழைக்கும்பிடு போட்டாலும் அல்லது கதறி அழுதாலும், எல்லாம் ஊழ்வினைப்படிதான் நடக்கும் என்று! அவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன?//

    தூள்.. சூப்பர் வாத்யாரே.. மிக எளிமையாகப் புரிகின்ற தமிழில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்.. அருமை..

    ReplyDelete
  27. ///கோவியார் சொல்லியது: விதி உண்மையோ பொய்யோ ஆனால் சில சமூகங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காக விதி நன்றாக செயலாற்றுகிறது.///

    அதுவும் விதிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் சிங்கைக்காரரே!
    (இது நகைச்சுவைக்காக......)

    இவ்வளவு கஷ்டப்பட்டு (அதாவது தட்டச்சுசெய்து, பிழை சரிபார்த்து) பதிவைப் போட்டுக்கொண்டிருக்கிறேன். யாருக்காக? எல்லாம உங்களைப் போன்ற என் வகுப்பறை சிங்கங்களுக்காக மற்றும் தங்கங்களுக்காக!

    நீங்கள் என்னவென்றால், விடிய விடிய ராமாயணம் கேட்டவன், காலையில் - சீதைக்கு ராமர் சித்தப்பா என்றானாம். அதுபோல அல்லவா இருக்கிறது
    உங்கள் கூற்று. விதி பொய் என்னும்படி உங்கள் மனிதில் வந்து தங்கிவிட்ட
    எண்ணத்தை, அடித்துத் துவைத்து வெளியேற்றுங்கள்.

    இல்லையென்றால் என்னுடைய இந்தப் பதிவை நூறு முறை கைப்பிரதி எடுங்கள் - தவறினால் ஒருவாரம் பெஞ்ச் மேல் நிற்கவேண்டியதிருக்கும்
    (தலைமை ஆசிரியரின் சிபாரிசு இந்த விஷயத்தில் செல்லுபடியாகாது)


    வகுப்பு வாத்தி(யார்)

    ReplyDelete
  28. ///விக்னேஷ்வரன் அவர்கள் சொல்லியது: மனிதனின் வாழ்க்கை பல இன்னல் பயணமாக அமைவதற்கு முக்கிய காரணம் "ஊழ்வினை" என சொல்கிறார்கள். இதை ஜாதகத்தில் கண்டறிய ஒரு பதிவு போடுங்கள். கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும்.///

    நான் திருச்சி - சென்னை வழித்தடத்தில் பேருந்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்
    நீங்கள் திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்கிறீர்கள்?

    சற்றுப் பொறுங்கள். சில பிரச்சினைகள் காரணமாக ஜோதிடப் பதிவை 32.அத்தியாயங்களுடன் நிறுத்தி வைத்திருக்கிறேன். ஆறு அல்லது எட்டு வாரங்களுக்குப் பின் அந்தத் தொடரை மீண்டும் ஓட்டும்போது உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். சரிதானே நண்பரே?

    ReplyDelete
  29. ///உண்மைத் தமிழன் அவர்கள் சொல்லியது: தூள்.. சூப்பர் வாத்யாரே.. மிக எளிமையாகப் புரிகின்ற தமிழில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்.. அருமை..///

    உங்கள் பின்னூட்டமும் நச்சென்று இருக்கிறது - நன்றி நண்பரே!

    கோவை வலைப்பதிவர் சந்திப்பில் பார்த்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் (பதிவின் மூலம்) சந்திக்கின்றோம். சந்திப்பு தொடரட்டும் நண்பரே!

    வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!

    ReplyDelete
  30. ஐயா,

    உங்கள் கருத்துக்களை மறுக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. எனது கருத்தை நான் சொல்வதற்கு உங்கள் வகுப்பில் தடையில்லை என்பதால் சொன்னேன். :)

    விதிப்படியே எல்லாம் நடக்கிறதென்றால் சோதிடம் பார்த்து பலன் அறிந்து கொள்வதில் என்ன பலன் ?

    விதிப்படியே எல்லாம் நடக்கிறது என்று உறுதியாக நம்பினால் கடவுள் நம்பிக்கையால் அதை மாற்ற முடியாது என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அது மனத்திடம் தருவதற்கென்று ஒத்தடமும் கொடுக்கிறீர்கள். விதிகள் வகுத்தது யார் ? என்ற கேள்வியில் கடவுளை புகுத்தி விடைகாண முடியும். அதே சமயத்தில் விதிப்படி என்றால் சுனாமி, சோகங்களும், கும்பகோணம் குழந்தைகள் சாம்பலுக்கும் விதிமேல் பலியை போட்டுவிடலாம் ? ஆனால் விதியை படைத்தவன் இறைவன் என்று நம்பினால் கடவுள் கருணையற்றவராகத்தானே தெரிகிறார். நெருப்பு எதையும் சுடும் அதற்கு குழந்தையோ, கண் இல்லாதவரோ தெரியாது என்பது தானே இயற்பியல் விதி ? கத்தி எதையும் கைவிரலையும் வெட்டும், கழுத்தையும் வெட்டும் அதுவும் இயற்பியல் விதி. இந்த இயற்பியலைப் போல்தான் விதிகள் என்று நம்பப்படுவது இயக்கங்கள் அனைத்தும் சார்பு நிலை தத்துவத்தில் இயங்குகிறது. நமது மனதையும், முன்நிகழ்வுகளையும் வைத்து இயக்கங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இது நன்மை, இது தீமை என்கிறோம். ஆனால் அவை யாவும் வெறும் நிகழ்வு மட்டுமே. நன்மை / தீமை என்ற பகுப்பில் பார்பதால் நன்மைக்கு சாதகமான பின்னனியாக இறைநம்பிக்கையும், தீமைக்க்கு காரணமாக வினையையும் வசதியாக வைத்துக் கொள்கிறோம்.
    :))

    ReplyDelete
  31. வாத்தியார் அய்யாவிற்க்கு,

    உங்கள் வீட்டின் படமென்று நீங்கள் போட்டிருப்பது frontline பத்திரிகயில் வந்த படங்கள் என்று நினைவு.எந்த இதழ் என்று நினைவு இல்லை.ஆனல் படம் நன்றக மண்தில் உள்ளது

    ReplyDelete
  32. ////seetha said...
    வாத்தியார் அய்யாவிற்க்கு,
    உங்கள் வீட்டின் படமென்று நீங்கள் போட்டிருப்பது frontline பத்திரிகயில் வந்த படங்கள் என்று நினைவு.எந்த இதழ் என்று நினைவு இல்லை.ஆனல் படம் நன்றக மனதில் உள்ளது///

    பதிவை மீண்டும் ஒருமுறை நன்றாகப் படியுங்கள் சகோதரி!
    மாதிரிக்காக எங்கள் பகுதியில் உள்ள வீட்டுப் படம் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்

    எங்கள் வீட்டுப் படம் வீடியோவாக உள்ளது - அது பதிவிடப்படும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com