மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.8.16

Short Story: சிறுகதை: எது பெரிய பதவி?


Short Story: சிறுகதை: எது பெரிய பதவி?

மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி இந்த மாதம் 20-8-2016 அன்று அந்த இதழில் வெளிவந்த சிறுகதை. நீங்கள் படித்துப் பார்ப்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்
அன்புடன்,
SP.VR. சுப்பையா.

--------------------------------------------------------------------------------
சிவநேசன் செட்டியார் எதிர்பார்க்கவில்லை. அது நடந்து விட்டது. அவசர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆச்சியின், அதாவது அவரது மனைவி அன்னபூரணி ஆச்சியின் உயிர் பிரிந்து விட்டது.

செட்டி நாட்டிலுள்ள தங்கள் ஊரில் இருந்து காரைக்குடியில் உள்ள மருத்துவ மனைக்குத்தான் முதலில் சென்றார்கள். மூச்சுத் தினறல் இருக்கிறது என்று சொல்லி அதற்கு மருந்து கொடுத்து விட்டு, நாடித் துடிப்பும் சீராக இல்லை. நீங்கள் மதுரைக்குச் செல்லுங்கள். அங்கேதான் வைத்தியம் செய்ய முடியும் என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்கள்.

ஆச்சியின் உயிர் பிரிந்த அதிர்ச்சியைவிட, காரில் செல்லும்போது ஆச்சி அவர்கள் பேசிய பேச்சுத்தான், அவருக்கு பெரும் அதிர்ச்சியாகி, பலமுறை அவர் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“ என் காலம் முடியப் போகிறது. சிகிச்சை செய்கிறேன் என்று என்னை அவதிப்பட வைக்காதீர்கள். உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். சொல்லட்டுமா?”

“சரி சொல்லடி அன்னம்....” என்று செட்டியார் வாஞ்சையுடன் சொல்ல, ஆச்சி அவர்கள் மெல்லிய குரலில் சொன்னார்கள்.

“பதவி, பதவி என்று இனிமேல் அலையாதீர்கள். உலகத்திலேயே பெரிய பதவி எது தெரியுமா?”

“என்னைவிட நீதான் கெட்டிக்காரி. நீயே சொல்”

“சிவபதவிதான் பெரிய பதவி. அந்தப் பதவி கிடைக்க இனிமேல் பாடுபடுங்கள்.”

“உனக்கு வேண்டுமென்றால் சிவபதவி கிடைக்கும். நீ சிவபக்தை. எனக்கு எப்படிக் கிடைக்கும்?”

“கருணையே வடிவானவர் சிவபெருமான். வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர். தன் பக்தர்கள் அனைவருக்கும் சிவபதவியை கொடுத்து அருளக்கூடியவர் அவர். சிவபதவி கிடைத்தால் முக்தியடையலாம். முக்தியடைந்தால் அடுத்த பிறவி இல்லை. அடுத்தடுத்துப் பிறந்து பிறவிப் பெருங்கடலில் நீந்திக் கஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவிக்காமல் இறைவனோடு இருந்துவிடலாம்.”

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அதையும் சொல்!”

“ தினமும் காலையிலும், மாலையிலும் சிவன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வாருங்கள். திருவாசகத்தைப் பாராயணம் செய்யுங்கள். இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்று தினமும் 108 முறை சொல்லுங்கள்.தினமும் ஐந்து எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்களால் முடியும். செய்யுங்கள். முதலில் உங்களுடைய கொடுக்கல் வாங்கல் தொழிலை நிறுத்துங்கள். இருக்கிற செல்வம் போதும். என்ன செய்வீர்களா? எனக்காக செய்வீர்களா?”

“உனக்காகச் செய்கிறேனடி அன்னம்....” என்று சொல்லச் சொல்ல, ஆச்சி அவர்கள் புன்னகையுடன் அவர் கையைப் பிடிக்க முயன்று, அது முடியாமல் போய், செட்டியாரின் மடியிலேயே சாய்ந்துவிட்டார்கள். உயிர் பிரிந்து விட்டது. செட்டியாரிடம் வாக்குறுதி வாங்கிய மனத் திருப்தியோடு ஆச்சியின் காலம் முடிந்துவிட்டது.

******************************************

சிவநேசன் செட்டியாருக்கு பதவிகள் மேல் அப்படியொரு ஈடுபாடு. ஆர்வம். எந்த அமைப்பு என்றாலும், துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு, நான் என்று முதல் ஆளாகப் போய் நின்று விடுவார். சுமார் ஆயிரம் புள்ளிகளைக் கொண்ட செட்டிநாட்டு ஊர் அவருடைய ஊர். ஊருக்குள் அவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. இத்தனைக்கும் அவருக்கு 55 வயதுதான். அதற்குள் பிரபலமாகிவிட்டார்.

தங்கள் ஊருக்குள் உள்ள சிவன் கோயில், மற்றும் உள்ள ஏழு கோயில்கள், அவற்றின் நிர்வாக அமைப்புக்கள், பொது நல அமைப்புக்கள், சஷ்டி அபிஷேகக் குழு, பாதயாத்திரைக்குழு,  அந்த வட்டகையைச் சேர்ந்த சுழற்சங்கம் என்று எங்கே பதவி இருந்தாலும், அது தலைவர் பதவி அல்லது செயலாளர் பதவி என்று எந்தப் பதவியாக இருந்தாலும், அதில் இடம் பிடிக்காமல் விட மாட்டார்.

ஊருக்குள் அவர் செல்வந்தர். அத்துடன் கொடுக்கல், வாங்கல் தொழிலையும் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே தனக்கு வேண்டியவர்கள், வேண்டியவர்கள் என்றால் அவரிடம் பற்று வழி உள்ளவர்கள்தான், பத்து அல்லது இருபது பேரை கூட்டிக் கொண்டு போய் விடுவார்.
அவர் பெயரை முன் மொழிவதற்கும், வழி மொழிவதற்கும் அவர்கள் உதவுவார்கள். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்.

இருபது வருடங்களாக எல்லாப் பதவிகளிலும் இருந்து விட்டார். தான் இதுவரை வகித்த பதவிகளை முன்னாள் என்ற அடைமொழியுடன் தனது அடையாள அட்டையில் அதாவது விசிட்டிங் கார்டில் பட்டியல் இட்டும் வைத்துள்ளார்.

ஆனால் அவர் மனைவி அன்னபூரணி ஆச்சிக்கு, அவருடைய பதவி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவுமே பிடிக்காது. செட்டியாருக்கு மூளை வறண்டு விட்டது. பதவிப் பித்து தலைக்கேறி அங்கேயே குடியிருக்கிறது. நாம் சொன்னால் எங்கே கேட்கப் போகிறார் என்று எதுவும் சொல்லாமல் மெளனியாக இருந்து விடுவார்.

“ரேசன் கார்டில்தான் தலைவர் என்ற பெயரில் உங்கள் பெயர் இருக்கிறதே! அது போதாதா? எதற்காக இந்தப் பதவி மோகம்?” என்று ஒருமுறை ஆச்சி அவர்கள் கேட்டபோது, செட்டியார் கோபமாகக் கத்தித் தீர்த்துவிட்டார்.

அதற்குப் பிறகு ஆச்சி அவர்கள் பதவி விஷயமாக அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள். இப்போது இறக்கும் முன்பாக தன் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பேசினார்கள்.

அந்தப் பேச்சு செட்டியாரிடம் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் ஆளே தலை கீழாக மாறிவிட்டார்.

முதலில் தனது கொடுக்கல் வாங்கல் தொழிலை முடிவிற்குக் கொண்டு வந்தார். தன்னிடம் வைப்புத் தொகை போட்டிருந்தவர்களை எல்லாம் அழைத்து, அவர்களுடைய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். தன்னிடம் கடன் வாங்கியிருந்தவர்களின் பட்டியலைத் தயார் செய்து, பிராமிசரி பேப்பர்களுடன், உள்ளூரில் இருந்த தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கொடுத்து, ”மொத்தம் ஒரு கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறது. எல்லாவற்றையும் நீயே பார்த்து வசூல் செய். வசூலாக வசூலாக பத்து பெர்சண்ட் கமிஷனை நீ எடுத்துக் கொண்டு மீதியை என் வங்கிக் கணக்கில் கட்டிவிடு. முடியாதவர்களை அழைத்து வங்கிகளில் செய்வதுபோல வட்டியைத் தள்ளுபடி செய்து ஒன் டைம் செட்டில்மெண்ட்டாக பணத்தை வாங்கு.வந்தவரை போதும். மூன்று மாதங்களுக்குள் இதைச் செய்து கொடு. பெரும் உதவியாக இருக்கும். அந்தப் பணம் எனக்கு வேண்டாம். நம்ம ஊர் சிவன் கோயிலுக்குத்தான் கொடுப்பதாக உள்ளேன். திருப்பணிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவேன்” என்றார்

நண்பரும் கோயில் காரியம் என்பதால் ஒப்புக்கொண்டு அந்தப் பணியைச் செய்யத் துவங்கினார்.

அடுத்ததாக தான் தலைவர் பதவியில் இருந்த இரண்டு அமைப்புக்களுக்கும், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்து, அந்தப் பதவிகளில் இருந்து விலகிக் கொண்டார்.

ஆச்சியின் கேதத்திற்காக அமெரிக்காவில் இருந்து தன் மனைவியுடன் வந்திருந்த தன் மகனை அழைத்து, ஆச்சியின் தங்க,வைர நகைகளைக் கொடுத்துவிட்டார். எல்லாம் ஐம்பது லட்ச ரூபாய் பெறுமானமுடையவை. காரைக்குடியில் உள்ள லாக்கரில் பத்திரமாக வையுங்கள் என்றார். கேத்ததிற்கு வந்திருந்த தன் இளைய சகோதரியிடம் ஆச்சியின் வெள்ளிப் பாத்திரங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டார். அவை மொத்தம் 25 கிலோ அளவில் இருக்கும். உன் மகள் திருமணத்திற்கு இவற்றைக் காசாக்கிப் பயன் படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

வந்த பத்தாவது நாளே அவருடைய மகன் அமெரிக்காவிற்குத் திரும்பிப் போய்விட்டான். மருமகள் இவருடைய ஆச்சி மகள். அவள் அத்தை இறந்த அதிர்ச்சி மாமாவிற்குத் தீரட்டும் நான் இரண்டு மாதம் மாமாவுடன் இருந்துவிட்டுப் பிறகு வருகிறேன் என்று சொல்லி இங்கேயே இருந்து விட்டாள்.

ஆச்சி இறந்து 21 நாட்களுக்குப் பிறகு செட்டியார் முன்பு செய்து, விட்டுப்போன சந்தியா வந்தனத்தைத் தினமும் இரண்டு வேளைகள் செய்யத் துவங்கினார். அதுபோல வீட்டுக்கு எதிரில் இருந்த சிவன் கோயிலுக்குத் தினமும் இரண்டு வேளைகள் சிரத்தையாகச் சென்று வந்தார்.

சொ.சொ.மீ அவர்கள் எழுதிய திருவாசகம் நூல் ஒன்றை வைத்திருந்தவர், அதை எடுத்துப் பாராயணம் செய்யத் துவங்கினார்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காது அல்லவா? ஒரு மாதம் போனதே தெரியவில்லை.

ஒரு நாள் காலை, அவருடைய மருமகள் அவருடன் பேச்சுக் கொடுத்தாள்.

“மாமா, எனக்கு எல்லாமே வியப்பாக இருக்கிறது. நீங்கள் இப்படி நெற்றி நிறைய விபூதி பூசி முழு சிவபக்தராக ஆவீர்கள் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்த மாற்றம் உங்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று?”

“இறந்து போன உங்கள் அத்தைதான் காரணம்”

“அத்தை கடைசியாகச் சொன்னதைவைத்தா இத்தனை மாற்றங்கள்?”

“உங்கள் அத்தையின் உடல்தான் எரிந்து சாம்பலாகிவிட்டது. ஆனால் ஆத்மா இங்கே என்னுடன்தான் இருக்கிறது. நான் சந்தியாவந்தனம் பண்ணும் போதும், உணவு உண்ணும்போதும் உன் அத்தை வளவு பட்டியக் கல்லிலேயே உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். என் மீது அவளுக்கு அத்தனை அன்பு. அதனால் அவளுடைய ஆத்மா என்னை விட்டுப் பிரிய மறுக்கிறது. நான் செய்த புண்ணியம் எனக்கு நல்ல மனைவி அமைந்தாள். பராசக்தி போன்ற தோற்றமும் செயலும் உடையவள் அவள்! அவள் என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு எதுவும் ஈடாகாது.இன்னும் மூன்று மாதத்தில் நாம் போகலாம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்”

“எல்லாம் பிரம்மையாக இருக்கும் மாமா”

“பிரம்மை அல்ல. உண்மை.பொறுத்திருந்து பார்! கவியரசர் கண்ணதாசன் சொல்வார், உண்டு என்றால் அது உண்டு. இல்லை என்றால் அது இல்லை
உங்களுக்கெல்லாம் அது இல்லாமலிருக்கலாம். ஆனால் எனக்கு அது உண்டு”

அத்துடன் மருமகள் தன் உரையை முடித்துக் கொண்டாள்

****************************************

அன்று சிவராத்திரி. அதற்கு முதல்நாள் தான், செட்டியார், கடன்காரர்களிடம் இருந்து அதுவரை வசூலாகி இருந்த முப்பது ல்ட்ச ரூபாய் பணத்துடன், ஊருக்குச் செல்லும்போது தன் மகன் கொடுத்துவிட்டுப்போன இருபது லட்ச ரூபாயையும் சேர்த்து, கோயிலுக்கு மொத்தமாக ஐம்பது லட்ச ரூபாய்க்கான காசோலையை, அதன் காரியக் காரர்களிடம் கொடுத்திருந்தார்.

நாளை மாலை சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் விஷேச அபிஷேகம், அலங்காரம் பூஜை எல்லாம் உண்டு, வாருங்கள் என்று அவருக்கு அழைப்புக் கொடுத்திருந்தார்கள்.

அடுத்த நாள் மாலை, கண் குளிர சிவனாரை வணங்கியவர் கோயில் அமைப்பாளர்கள் கொடுத்த காளாஞ்சி, பிரசாதம் எல்லாவற்றையும் வாங்கித் தன் மருமகளிடம் கொடுத்ததோடு, ”நீ முன்னால் வீட்டிற்குச் செல் ஆத்தா, நான் அரை மணி நேரம் கழித்து வருகிறேன்” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தார்

கோயிலை விட்டு வந்தவர், எதிரில் இருந்த ஊரணியைப் பார்த்த போது, அதன் சுற்றுச் சுவரில் தன் மனைவி அன்னபூரணி அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவருக்கு அப்படித்தான் தெரிந்தது. வாருங்கள் இங்கே என்று கூப்பிடுவதைப் போல் இருந்தது.

சின்னைபிள்ளைகளைப் போல ஓட்டமும் நடையுமாக அங்கே விரைந்தவர், குறுக்கே வந்த கோயில் மாட்டைக் கவனிக்கவில்லை. மாடும் ஒட்டமும் நடையுமாகத்தான் வந்து கொண்டிருந்தது. வந்த வேகத்தில் மாடு இவரை இடித்து விட்டது. தடால் என்று கீழே விழுந்தார்.விழுந்த வேகத்தில் தலையில், நெற்றிப் பொட்டில் அடிபட உயிர் பிரிந்துவிட்டது.

ஊருக்குள் அத்தனை பேரும் அன்று இரவு அதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ’பெரிய மனுஷன்னா பெரிய மனுஷந்தானய்யா, சிவன் கோயிலுக்கு தர்மமா ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்தவர், சிவராத்திரி அன்னைக்கு சிவன் கோயில் வாசலிலேயே இறந்து போனாரய்யா - நிச்சயம் அவருக்கு சிவபதவி கிடைக்கும்.”

கிடைக்கட்டும். கிடைக்கட்டும்.  அப்போதுதானே அன்ன பூரணி ஆச்சியின் ஆத்மாவும் சாந்தியடையும்!

*************************************
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

ravichandran said...

Respected Sir,

Happy morning. Hope your health is good. Prayer will answer definitely. We need to have patience.

Have a nice day.

Thanks & Regards,
Ravi

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
நல்ல கதை! ஆனால், அவர் ஏன் மாடு முட்டி இறக்கவேண்டும்? கோவிலை விட்டு வெளிவரும்போது அப்படியே உட்கார்ந்து மாரடைப்பில் உயிர்போய் சிவபதவி கிடைத்திருக்கலாமே!
ஏக்கம், எனது!

வாசகன் said...

அன்புடையீர்,

பெரிய பதவி - சிவ பதவி - மறுக்க முடியாத நிதர்சனம். அருமையாக எழுதி உள்ளீர்கள். நிஜமான சம்பவத்தைப் படித்த உணர்வைக் கொடுத்தது.

அன்புடன்,
சரவணபாபு ஸ்ரீனிவாசன்

Sivakumar Selvaraj said...

தினமும் கோவிலுக்கு சென்று சிவனாரை தரிசித்து வருவதில் இருக்கும் பரம திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை.
தங்களது சிறுகதை அழகாக இதனை எடுத்துரைக்கிறது அய்யா.

kmr.krishnan said...

ஆம். இப்படி திடீர் மாற்றம் பலருக்கும் வருகிறது.இந்த செட்டியாருக்கு ஆச்சியின் மரணமும் அவர்களிடம் செய்து கொடுத்த உறுதிமொழியும் கிரியா ஊக்கியாகப் பயன் பட்டுள்ளது.நல்ல கதைக்கு நன்றி ஐயா!

SELVARAJ said...

இறை நினைப்பை விதைக்க நினைக்க அருள் தருவானின் புகைப்படம் சொல்லாமல் சொல்லி இருப்பது மிஅ அருமை.

C.Senthil said...

Ayya,

Yesterday post 115 quiz answer but you have mentioned 114 quiz answer. please change it.

adithan said...

வணக்கம் ஐயா,கதை நாயகன்,நாயகியை இன்னும் கொஞ்சம் வயதானவர்களாக சொல்லி இருக்கலாம்.செட்டியாருக்கு 55வயது என்றால்,ஆச்சிக்கு 50திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.அதற்க்குள்ளாகவா என மனம் பதறுகிறது.ஜோதிடத்தில் ஒருவரி சந்தேகம்.உதாரணமாக தனுசு லக்னத்தில் சனி அமர்வு.2ம் அதிபதி லக்னத்தில் என்று பலன் எடுப்பதா அல்லது 2ம் அதிபதி,2க்கு 12ல் என்று பலன் எடுப்பதா?நன்றி.

Vicknaa Sai said...

அருமை அருமை அற்புதம் ஐயா,

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் சிவபதவி என்னும் பிரசாதக் குழையல் உண்டோம் மகிழ்ந்தோம்.

தொடர்ந்து அருந்த இறைவன் அருள்வானக.

மிக்க நன்றி ஐயா.........

ஓம் நமசிவாய.

அன்புடன்
விக்னசாயி

============================================

Sakthi Balan said...

கதையில்
கணவன் மனைவி அன்பையும் , ஒரு மனிதன் வாழ்வின் நன்னடத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஐயா...

// ஊருக்குள் அத்தனை பேரும் அன்று இரவு அதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ’பெரிய மனுஷன்னா பெரிய மனுஷந்தானய்யா, சிவன் கோயிலுக்கு தர்மமா ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்தவர், சிவராத்திரி அன்னைக்கு சிவன் கோயில் வாசலிலேயே இறந்து போனாரய்யா - நிச்சயம் அவருக்கு சிவபதவி கிடைக்கும்.”

கிடைக்கட்டும். கிடைக்கட்டும். அப்போதுதானே அன்ன பூரணி ஆச்சியின் ஆத்மாவும் சாந்தியடையும்! //

இந்த வரிகளை படிக்கும் பொது கண் கலங்கிவிட்டது..

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning. Hope your health is good. Prayer will answer definitely. We need to have patience.
Have a nice day.
Thanks & Regards,
Ravi/////

இப்போது சற்றுப் பரவாயில்லை. உங்களின் அன்பிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
நல்ல கதை! ஆனால், அவர் ஏன் மாடு முட்டி இறக்கவேண்டும்? கோவிலை விட்டு வெளிவரும்போது அப்படியே உட்கார்ந்து மாரடைப்பில் உயிர்போய் சிவபதவி கிடைத்திருக்கலாமே!
ஏக்கம், எனது!////

மாடு என்று ஏன் நினைக்கிறீர்கள்? அது சிவனாரின் வாகனம் அல்லவா? அது வந்து அவருக்கு முக்தி கொடுத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள் சாமி!

Subbiah Veerappan said...

////Blogger வாசகன் said...
அன்புடையீர்,
பெரிய பதவி - சிவ பதவி - மறுக்க முடியாத நிதர்சனம். அருமையாக எழுதி உள்ளீர்கள். நிஜமான சம்பவத்தைப் படித்த உணர்வைக் கொடுத்தது.
அன்புடன்,
சரவணபாபு ஸ்ரீனிவாசன்/////

ஆமாம். அதை உணர்த்தவே கதையை அவ்வாறு அமைத்தேன். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Sivakumar Selvaraj said...
தினமும் கோவிலுக்கு சென்று சிவனாரை தரிசித்து வருவதில் இருக்கும் பரம திருப்தி வேறு எதிலும் கிடைப்பதில்லை.
தங்களது சிறுகதை அழகாக இதனை எடுத்துரைக்கிறது அய்யா./////

உண்மைதான். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
ஆம். இப்படி திடீர் மாற்றம் பலருக்கும் வருகிறது.இந்த செட்டியாருக்கு ஆச்சியின் மரணமும் அவர்களிடம் செய்து கொடுத்த உறுதிமொழியும் கிரியா ஊக்கியாகப் பயன் பட்டுள்ளது.நல்ல கதைக்கு நன்றி ஐயா!//////

நல்லது. உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

//////Blogger SELVARAJ said...
இறை நினைப்பை விதைக்க நினைக்க அருள் தருவானின் புகைப்படம் சொல்லாமல் சொல்லி இருப்பது மிக அருமை.//////

நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger C.Senthil said...
Ayya,
Yesterday post 115 quiz answer but you have mentioned 114 quiz answer. please change it./////

கவனப் பிழை. எடுத்துச் சொன்னமைக்கு நன்றி! பதிவில் திருத்தி விடுகிறேன்!!!

Subbiah Veerappan said...

/////Blogger adithan said...
வணக்கம் ஐயா,கதை நாயகன்,நாயகியை இன்னும் கொஞ்சம் வயதானவர்களாக சொல்லி இருக்கலாம்.செட்டியாருக்கு 55வயது என்றால்,ஆச்சிக்கு 50திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.அதற்குள்ளாகவா என மனம் பதறுகிறது.ஜோதிடத்தில் ஒருவரி சந்தேகம்.உதாரணமாக தனுசு லக்னத்தில் சனி அமர்வு.2ம் அதிபதி லக்னத்தில் என்று பலன் எடுப்பதா அல்லது 2ம் அதிபதி,2க்கு 12ல் என்று பலன் எடுப்பதா?நன்றி.//////

இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் லக்கினாதிபதி முதற்கொண்டு மற்ற கிரகங்களின் அமைப்பை அந்த வீட்டை ஆதாரமாகக் கொண்டு அலசுங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger Vicknaa Sai said...
அருமை அருமை அற்புதம் ஐயா,
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் சிவபதவி என்னும் பிரசாதக் குழையல் உண்டோம் மகிழ்ந்தோம்.
தொடர்ந்து அருந்த இறைவன் அருள்வானக.
மிக்க நன்றி ஐயா.........
ஓம் நமசிவாய.
அன்புடன்
விக்னசாயி///////

உண்மைதான். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger Sakthi Balan said...
கதையில்
கணவன் மனைவி அன்பையும் , ஒரு மனிதன் வாழ்வின் நன்னடத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் ஐயா...
// ஊருக்குள் அத்தனை பேரும் அன்று இரவு அதைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ’பெரிய மனுஷன்னா பெரிய மனுஷந்தானய்யா, சிவன் கோயிலுக்கு தர்மமா ஐம்பது லட்ச ரூபாய் கொடுத்தவர், சிவராத்திரி அன்னைக்கு சிவன் கோயில் வாசலிலேயே இறந்து போனாரய்யா - நிச்சயம் அவருக்கு சிவபதவி கிடைக்கும்.”
கிடைக்கட்டும். கிடைக்கட்டும். அப்போதுதானே அன்ன பூரணி ஆச்சியின் ஆத்மாவும் சாந்தியடையும்! //
இந்த வரிகளை படிக்கும் பொது கண் கலங்கிவிட்டது..//////

கதை உங்களைக் கவர்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான். நன்றி நண்பரே!