மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.1.12

மச்சான் உறவை எருது எப்போது கொண்டாடும்?

மாணவர் மலர்

இது மாணவர்கள் பங்குபெறும் பகுதி. வகுப்பறைக்குத் தினமும் வரும் மற்றும் வந்து எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும் மாணவர்கள் பங்கு பெறும் பகுதி. அவர்களுக்கு உள்ள எழுத்தை, எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முகமாக உள்ள பகுதி. வாரம் ஒருமுறை ஞாயிறன்று இது மலரும். யார் வேண்டுமென் றாலும் எழுதி அனுப்பலாம். வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்

இன்றைய மாணவர் மலரை ஆறு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


துலா உற்சவக் காட்சி!

 மச்சான் உறவை எருது எப்போது கொண்டாடும்?
ஆக்கம்: கே.முத்துராம கிருஷ்ணன், லால்குடி

ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு திருவிழா புகழ் பெற்றது. திருப்பதியென்றால் பிரம்மோற்ச‌வம்.பழனியென்றால் தைப்பூசம். திருச்செந்தூர் என்றால்
சூரசம்ஹாரம். இப்படிப் பலப்பல திருவிழாக்கள்.

துலாமாதத்தில், அதாவது சூரியன் துலாராசியில் நிற்கும் காலம், ஐப்பசி மாதம் (15 அக்டோபெர் முதல், 14 நவெம்பர் வரை)  என்றால் நன்கு
புரியும், அப்போது காவேரியில் துலா முழுக்கு (துலா ஸ்னானம்) செய்வது மிகவும் புண்ணியம். இதனை ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் ஊர்
அக்காலத்தில் மாய‌வரம் (மயூரம்) என்று அழைக்கப்பட்ட மயிலாடுதுறை தான் அவ்வூர்.

இவ்வாண்டு சென்னையில் இருந்து லால்குடிக்கு திடீர்த் தொலைபேசி  அழைப்பு ஒன்று வந்தது. என் மனைவியின் "சுவர்ணலதா பெரியம்மா (82,) சுந்தரி சித்தி (76),கோமதி (எ)பாப்பா சித்தி(72) ஆகியோரை துலா ஸ்னானத்திற்கு மயிலாடுதுறை காவேரிக்கு அழைத்துச் சென்று பத்திரமாக சென்னைக்குத்
திருப்பி அனுப்ப முடியுமா (?)" என்ற கேள்வி கேட்கப்பட்டது.

என் அகராதியில் 'முடியாது, தெரியாது' என்ற சொற்களை 'டெலீட்' செய்து விட்டதால், 'முடியும் முடியும், முடியும்' என்று மும்முறை கூறிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன்.அதுவும் மனைவியின் பக்க உறவினர்களை அலட்சியப்படுத்த முடியுமா? அதிலும் சுந்தரி என்ற சிறிய மாமியார் என் மாமனின் மனைவியும் கூட. இரண்டு சொந்தம். என‌வே மகிழ்ச்சியுடன் வரச் சொல்லி விட்டேன்

என் மனைவியார் சென்னையில் இருந்து அந்த முதாட்டிகளைப் பல்லவன் அதிவிரைவு வண்டியில் லால்குடி அழைத்து வந்தார்கள். இங்கிருந்து திருச்சிக்கு வாடகைக்கார், அங்கிருந்து மயூரத்திற்கு மைசூர் எக்ஸ்பிர‌ஸ்.மீண்டும் மயூரத்தில் அனைத்து இடங்கள் செல்ல வாடகைக்கார் என்று மூன்று நாட்கள் அவர்களுடைய‌ புனிதப்பயணத்தை செவ்வனே முடித்துக் கொடுத்தேன்.15 11 2011 முதல் 17 11 2011 வரை.

அப்போது கோமதி என்ற என் சிறிய மாமியார் கலகலப்பாகப் பேசி வந்தார்கள். ஒவ்வொரு சொற்றொடருக்கும் ஒரு பழமொழி, சொல் அடைவு என்று இலக்கிய தரத்துடன் பேசி வந்தார்கள். கேட்பதற்கு நயமாக இருந்தது.

"எப்படி இவ்வளவு சொல் அடைவுகள் உங்களுக்கு நினைவில் உள்ளன?" என்று கேட்டேன்.

"எல்லாம் என் அம்மா அடிக்கடிப் பயன் படுத்திய சொல் அடைவுகள்தாம். குழந்தையில் இருந்து கேட்டுப் பழகியதால் மறக்காமல் இருக்கிறது" என்றார்கள்.

"இவற்றையெல்லாம் ஒரு குறிப்பெழுதித்தாருங்கள்; வலை ஏற்றுகிறேன்"  என்றேன்.

சென்னை திரும்பியவுடன் கர்மசிரத்தையாக ஒரு குறிப்பேட்டில் பல சொல்லடைவுகளை எழுதி,மேலும் விடுகதைகள், நர்சரி ரைம்ஸ், பயணக் கட்டுரை ஆகியவைகளைத் தொகுத்து ஒரு தீபாவளி மலர் போல அனுப்பி வைத்து விட்டார்கள்.

அவற்றுள் என் மனம் கவர்ந்த 10 சொல்லடைவுகளை மட்டும் இங்கு முதலில்கூறுகிறேன். பின்னர் சிறுகச்சிறுக அவ்வப்போது மற்றவற்றையும்
கூறுகிறேன்.

1. "குதிச்சுக் குதிச்சு மாவிடிச்சாலும் அந்தப் புழுக்கச்சிக்கென்னாமோ ஒரு கொழுக்கட்டைதான்" (ஆகா,கவிதையல்லாவா? என்ன எதுகை மோனை!)

  இது மிகவும் சமூகப்பிரக்ஞையுடன் கூறிய ஒரு சொல்லடை."காடு விளைஞ்சு என்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்?" என்ற
பட்டுக்கோட்டையாரின் குரல் இதில் கேட்கிறது. உழைப்பாளிக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை. உழைக்காதவனுக்குப் பலன் அதிகமாகவும் உழைப்பின்றிக் கிடைக்கிறது என்ற ஆதங்கம் இந்த சொல்லடையில் வெளிப்படுகிறது. வள்ளலார் சுவாமிகள் மனுமுறைகண்ட வாசகத்தில் பாவச்செயல்களின் பட்டியலில் "வேலை சொல்லிக் கூலி குறைத்தேனோ?" என்பார்.உடலால் உழைப்பவர்களூக்கு உரிய கூலி அளிக்க வேண்டும் என்ற செய்தியைச் சொல்லுகிறது இந்த சொல்லடை.

2. "வாய்க்கு ருசியா சாப்பிட்டாலும் தீய்க்கு இரையாத்தான் போகணும்."

வாழ்க்கை நிலையாமையைக் கூறும் அருமையான சொல்லடை. "எம்மை உண்பீர்; எமக்கு உணவாவீர்" என்று மகாகவி பாரதியாரின் வசன கவிதையில் வரும். ஐந்து வகையான ருசிக்கேற்ற உணவினை வெள்ளித் தட்டில் நெய் மணக்க உண்டாலும், நம்மை உண்ணப் போவதோ தீ என்ற பஞ்ச பூதத்தில் ஒன்றுதான். "அன்னையிட்ட தீ அடி வயிற்றிலே" என்பார் பட்டினத்தடிகள். அதைத்தான் ஜாடராக்கினி என்பார்கள். வயிற்றில் தோன்றும் அமிலத்தன்மை, அதனைத் தணிக்க அளிக்கப்படும் உண‌வு என்று இது சுழற்சி மாறாத ஒரு நிகழ்வு. 'அன்னை என் வயிற்றில் நெருப்பை வைத்தாள்; அவள் மார்பில் நான் நெருப்பை வைக்கிறேன்' என்ற பொருளில் "யானும் இட்ட தீ மூள்க மூள்கவே!"என்பார் பட்டினத்துச் சித்தர்.

3. "முன் போற சவத்துக்குப் பின் போகும் சவம்."

இதுவும் உய‌ர்ந்த தத்துவத்தினைப் புகட்டும் ஒரு சொல்லடைவுதான். ஒரு காட்சி மலருகிறது."எ(ம்ட)ன் மகன்" என்று ஒரு படம். நாசர், சரண்யா, வடிவேலு, காதல் படத்தில் நடித்த அந்தப் பையன் எல்லோரும் நடித்தது. அதில் சரண்யாவின் அப்பா கிழவர் இறந்து விடுவார். அந்த சவ ஊர்வல‌ம் மிகுந்த
உற்சாகத்துடன் நடக்கும்.அந்த ஊர்வலத்தில் காதல் மலரும். 'வராரு வராரு தாத்தா வராரு'ன்னு பாடல். அதற்கு அசத்தலான ஆட்டபாட்டங்கள்.ஆனால் அந்த ஆட்ட பாட்டக்காரர்கள் யாரும் தாங்களும் அது போல ஒரு நாள் சவமாவோம் என்று சிறிது கூட எண்ணவில்லை. பல்லக்கில் வருவது உயிர் அற்ற சவம் . அதனுடன் மயானத்திற்குச் செபவர்கள் உயிருள்ள சவங்கள்தாம். இதற்கும் பட்டினதாரின் பாடல் உள்ளது.

4. “வயிற்றைத் தோண்டி விட்டவன், மண்ணை அள்ளிப் போட மாட்டான்."

வயிறு வளர்த்துப் பழக்கப் படுத்திவிட்டால், அது கொண்டா கொண்டா என்று மேலும் மேலும் கேட்கும்.வயிறு நிரம்ப உணவு உண்ணப் பழகி விட்டவனால் உடல் உழைப்புச் செய்ய முடியாது. கான்கிரீட் போடும் தொழிலாளர்கள் கடுமையான உழைப்பாளிகள்.அவர்கள் வேலை நேரத்தில் நீராகாரம் போல்தான் சாப்பிடுவார்கள். வேலை முடிந்தவுடந்தான் சுடுசோறும் குழம்பும்.

5. "அரிசி உழக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்றுதான்"

குறைந்த அள‌வு சமையல் என்றாலும், வேலை என்னமோ பெரிய சமையல் போலத்தான். அளவு குறைந்ததால் பெண்களின் வேலைச்சுமை குறைவதில்லை என்ற ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது இந்த சொல்லடை.

6. "நாயே நல்லப்பா. பேயே பெரியப்பா"

நல்ல சகவாசம் இல்லாதவர்களைப் பற்றிய சொல்லடை இது. அந்த ஆசாமிக்கு உறவுகள், நட்புக்கள் எல்லாம் நாய் குணமும் பேய் குணமும் உள்ள
பொல்லாதவர்கள்தான் என்பது பொருள்.

7. "முற்றம் கருத்தது பாயைப்போடு. மூலை கருத்தது சோத்தைப் போடு"

மணி அடிச்சா சோறு;முடி முளைச்சா மொட்டை என்பதைப்போல இது. எல்லாம் 'டாண் டாண்' என்று ராணுவ ஒழுங்கு போல நடத்த விரும்புபவரைப் பற்றிய
சொல்லடை. வீட்டினுள் இருக்கும் முற்றத்தில் இருள் வந்துவிட்டால் அது படுக்கும் நேரம். எனவே பாயைப்போடு. வானத்து மூலையில் சூரியன் அஸ்தமித்து விட்டால் உடனே சோற்றினைப் பரிமாறு. எதையும் நேரத்தோடு செய். ஒத்திப் போடாதே.

8. "இருந்தால் நவாபு; இல்லாவிட்டால் பக்கிரி"

கையில் காசு இருந்தால் மனம் தன்னை பெரிய அரசனாக நினைத்து கொள்ளும். அதுவே காசில்லாவிட்டால் பிச்சைக்காரனாக நினைக்கும். ஆனாக்க அந்தமடம், ஆகாட்டா சந்தைமடத்துடன் ஒப்பிடுக‌

9. "பொன்னைச் சுட்டு வளை. பெண்ணைப் பேணி வளர்."

பொன்னை நெருப்பில் இடுவது போல அல்லாமல், பெண்களை சுடுசொல் சொல்லாமல் பேணிக் காத்து வளர்க்க வேண்டும்.

10. "இளைத்தவனைக் கண்டால் எருதும் மச்சான் உறவு கொண்டாடும்"

ஏர் உழப் போகும் நபர் ஏப்பை சேப்பையாக இருந்தால் காளைகள் சண்டித்தனம் செய்யும். அது போல உலகில் வெகுளியாக இருப்பவரை பிறர் ஏமாற்றுவார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அறிவுரைப்படி கடிக்காதே ; சீறு என்பதே நடைமுறைக்கு ஏற்ற கொள்கை.

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 2

மனிதம் செய்வோம்; மகத்துவம் செய்வோம்!
ஆக்கம்: - செந்தில்குமார், புதுக்கோட்டை
--------------------------------------------------------

உன்னால் முடியும்
உணர்வாய் தோழா
உன்னால் முடியும்
உணர்வாய் தோழா!

மண்ணாளும்
மன்னனாக முடியும்!
விண்ணாளும்
வேந்தனாக முடியும்!

உன் சக்தியை - நீ
உணர்ந்து விட்டால்
வானம் உன்னை வணங்கும்!
பூமி உனக்கு பூமாலைசூடும்!

பூக்களுடன் முட்கள்
நிறைந்ததே வாழ்க்கை!
முட்களைக் களைந்து எடு
பூக்கள் உன்வசப்படும்!
 
போராடும் களம் யாவும் 
நீராடும் குளமாகும் - நீ
செல்லும் தடம் யாவும்
பந்தயத் திடலாகும்

தோல்வி தொடர்கதையல்ல - அவ்வப்போது
முற்றும் எனப் போட்டுவிடு!
அடுத்த கதையை
அப்போதே எழுதத் துவங்கு!

நத்தை இனமல்ல
நகர்ந்து செல்லாதே
சிறகு முளைத்த
சிந்தனையாளன் நீ!
பரந்த உலகில்
பறந்து செல்!
பகுத்தறிவாளனாய்,
படைப்பவனாய் வாழ்!

செயல் ஒவ்வொன்றையும்
செய்து முடி - இடைவரும்
புயல்களை அழிப்பதை
இயற்கையிடம் விட்டுவிடு!

பாரெங்கும் - உன்
பார்வை  படட்டும் - உன்
கண்கள் இரெண்டும் - இரு
சூரியனுக்குச்  சமம்.

தீயவற்றை நீ
சாம்பலாக்கு!
நேயம் மிக்கவைக்கு  - நீ
ஒளிகாட்டு!

திசையெங்கும் தேடு
தசைவலிக்க ஓடு
தேடத் தேடத்தான்
தேவைகள் கிடைக்கும்!

தேடல் மாபெரும் தவம்
நினைத்தது நடக்கும் வரை
களைத்து விடாதே!
கண்களைக் கலங்க விடாதே!

தேடலில்
தடங்கல் வரலாம்...
தயங்காமல்
தடங்களைப் பதித்துவிடு!
பதித்த தடங்கள்
பனித்துளி போல்
மறைந்துவிடக் கூடாது - அவை
வரலாற்று தடயங்களாய்
வலம் வரவேண்டும்!

மனிதனாக
பிறந்துவிட்டோம்..
மரிப்பதற்குமுன்
மனிதம் செய்வோம்!
பிறகு
மகத்துவம் செய்வோம்!

- செந்தில்குமார், புதுக்கோட்டை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.


படத்திற்காக எழுதப் பட்ட கவிதை இது.

தினசரி நம் வாழ்கையில் எத்தனையோ வறியவர்களை பார்க்கிறோம். அவர்கள் உண்டு பண்ணாத ஒரு பாதிப்பு இப்படம் என் மனசுக்குள் உண்டு பண்ணியது. நெஞ்சில் நீர் வடிந்தது போல் ஒரு வலி.

இந்த வயதான காலத்தில் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்கலாம்.ஆனால் பிரியவில்லை. படத்தில் குருடனாகவோ அல்லது உடல் ஊனமுற்ற வனாகவோ அந்த ஆண்மகன் தெரிகிறான்.அந்த பெண்ணே அவனை அரவணைத்துக்கொண்டு போவதை பார்கையில் சொல்லமுடியாத ஒரு வேதனை அதைத்தான் இதில் எழுதி உள்ளேன்.

படம் உதவி - நன்றி - தினமலர் - 24 -12 -2011


எங்கே போகும் இந்த பயணம்?
+++++++++++++++++++++++++
ஆக்கம்: -தனுசு-   

எங்கே போகும் இந்த பயணம்.
எங்கே போகும்  இந்த பாதை.
யாதும் ஊரோ? அந்தம் காடோ? 
படைப்பின் பொருளென்ன?
படைத்தவன்  பொறுப்பென்ன ?

தாயென்றும் தந்தையென்றும்            
ஒன்றை ஒன்று நம்பி
போகும் இந்த  ஊர்கோலம் -இது
இந்த ஊர்க் கோலமோ?.

ஊரின்றி உறவின்றி வீடின்றி வழியின்றி
வீதிவழி போகும் விதியோ?
சேய்யீன்ற தாயொன்று -காக்கும் அதன் நலம்  போன்று
துணைதன்னை துயிலின்றி காத்து
உத்தமி செல்லும் சபையோ?

யார் கேட்டு பிறந்தார்கள்? -இவர்கள்
யார் கெட்டு  பிறந்தார்கள்?
பிள்ளைகள் கை விட்டார்களா? இவர்களை
பிள்ளையில் கை விட்டார்களா?

எட்டடுக்கு  மாளிகைக்கும்
கோலோச்சும்  மன்னனுக்கும்
கிட்டாதபாசம்  எட்டாதநேசம் -இங்கு
ஒட்டிக்கொண்டு  இருப்பது நிஜமே!
.
விலைமகளின்  வீட்டுக்கு -கணவனை
கூடையில் கொண்டுசென்ற
திருமகளின் கதையை கேட்டு
பத்தினி  பாசம்  அறிந்தோம் கதையினிலே.

கண்ணில்லா  கணவனை
கண்ணில்  வைத்து  காக்கும்  -இந்த
பெண்ணின முதல்வின் பதிபக்தியை!
இம்மண்ணின்  பெரும்சக்தியை!
பார்க்கிறோம்  நேரினிலே.

-தனுசு-   
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4





உன்னால் எப்படி முடிகிறது?
ஆக்கம்: தேமொழி

பசியுடன் பள்ளியில் இருந்து வந்தால்
பரிவுடன் சமைத்த உணவைக் கொடுத்தாய்
பாடநூலுக்கு உடனே அட்டை வேண்டுமென்றால்
பாசத்துடன்  பழுப்பு அட்டைதனைப் போட்டாய்

பெயர் நீ எழுதிக் கொடுத்தால் ராசியென்றால்
பெருமையுடன் சிட்டை ஒட்டி எழுதினாய்
பெற்றவன் பெயரின் முதலெழுத்தும்  பின்னால்
பெற்ற அன்பு  செல்வமெனது பெயருமாய்

அன்பு அன்னை நீ  மனம் வருந்தாமல்
தன் கடமையிது என்பதுபோல் நினைக்கிறாய்
என் வாழ்வில் உனக்குரிமை இல்லாததுபோல்
உன்னால் எப்படியிது முடிகிறது சொல்வாய்

- தேமொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5

ஜப்பானியக் கடற்கரை. இந்தப் படத்தில் மைனரைத் தேடிக்கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு ஒன்று காத்திருக்கிறது. என்ன பரிசா? அது சஸ்பென்ஸ்! -  வாத்தியார்


----------------------------------------------------------------------------------------------
விண்ணவனேநீ வா..வா..!
ஆக்கம்: மைனர்

முழுதுடல்தனைப் போர்த்தி கண்ணிரண்டே  வலைவீச 
ஏங்கித் தவித்திருக்கும் எந்தன்  கண்களுக்கு
உனதங்கந்தனை   ஒளித்து மறைக்கவெண்ணும்
கடுங்குளிரே சனவரியே சகுனியேநீ..போ..போ..

மாறாக  'இளவேனில்மார்ச்சின்' மோகமழைதனிலே
டூபீசைவிருந்தாக்கி பீச்மண்ணிலெனை வீஷ்த்தி
கட்டுறுதிதனைக்  குலைத்து  வாலிபவதம்செய்து
கொக்கரித்துச் சுட்டெரிக்கும் சூரியனேநீ..வா..வா..

காந்தியின் கதராடை கூடவும்வேண்டாமென
கடலலையில் கால்பதித்து கடலைமுடிவதற்குள்
மூடுமாற்றிச்  சடுதியிலே  'விடுதிக்கெனையிழுத்து'
இடைக்கச்சைக்கொடியேற்றி  விடுதலைவேள்விசெய்ய விண்ணவனேநீவா..வா..

சப்பானியச் சனவரியைச்  சாடிப்பாடியதில்
வேகம் கலைந்திடாது..மோகமும் குலைந்திடாது..
மார்ச்சுதனை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கும்
மாணவன் நானிங்கே மார்ச்சிங் ப்ராக்டிஸ்ஸில்..
- மைனர், ஜப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6


பெரியாறும் சிறாரும்
++++++++++++++++++++++++++++++++++ 
ஆக்கம்: தனுசு

செம்மொழியும் இளமொழியும்
முத்தமிடும் மண்ணில்
மணியோசை கேட்கிறது- யானை வருமோ?
இடியோசை கேட்கிறது - மழை வருமோ?
மதம் அடங்குமோ? பிழை முடியுமோ?

பெரிய மனுஷன் பென்னி
சேகரித்து தந்தான் தண்ணி -அன்று
அந்நியனுக்கு இருந்தது அக்கறை -இன்று
அநியாயத்திற்கு  அழைப்புவைக்குது  அக்கரை.

"ஒழிக" ஒருபக்கம்
"மரியட்டே" மறுபக்கம்
அரபிக்கடலும் வங்கக்கடலும் - தீ
கொள்ளும் காலமோ ?

சிவகிரியும் சதுரகிரியும்
அறியும் அந்த நீர்வலம் என்னவென்று.
முல்லையும் பெரியாரும்
அறியும் அந்த நீர்வளம் யாதென்று.

யார்வளம் காண - நீர்வளம் களமானது?
இந்த  நீர்பலமே - இங்கு    
பசுமைக்கு அணையாவிளக்கு -அதை
யாருமறிய அணையே நீ விளக்கு.

எமக்கொரு உறவாய் நீர்  பிறந்தீர்.
எமக்கென்று இருக்கும் நீர் பிரித்து
நீரின் எல்லை குறைப்பது நியாயமா?
நீர் எல்லைதாண்டுவது  நியாயமா?

 -தனுசு -

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

36 comments:

  1. இரட்டிப்பு மகிழ்ச்சி தந்த ஆசானுக்கு நன்றி.

    KMRK அவர்களின் பெரியம்மா பகர்ந்த பொன்மொழிகள் யாவும் பலமான பொருள் பதிந்த கருக்கள். மனித மனங்கள் மேம்பட இவைப் போன்ற ஆக்கங்கள் படிப்பதில் எனக்கு எப்போதும் விருப்பம் அதிகம் .

    "இருந்தால் நாவாபு இல்லையென்றால் பக்கிரி"- இதை, இருந்தால் நவாப்சா இல்லாட்டி பக்கிர்சா என்று எங்கள் பக்கமும் அதிகம் பயன்படுத்தும் பழமொழி.

    "முன்போர சவத்துக்கு பின் போகும் சவம்"-இதனை கவியரசு கூட ஒரு இடத்தில் இப்படி சொல்லி இருப்பார் ;செத்ததை சுத்தி சாவபோவது அழுகின்றன என்று.

    மீதி உள்ளாவைகளை வரும் காலங்களில் எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. செந்தில் குமாரின் கவிதை நன்று.
    மகத்துவம் செய்வதற்கு முன் மனிதனாக இருப்போம் நல்ல கரு.

    போராடும் களம் யாவும்
    நீராடும் குளமாகும்- நான் மிகவும் ரசித்த வரிகள்

    ReplyDelete
  3. உலகுக்கு வந்த குழந்தை
    பேசும் முதல் மொழி
    மா... அம்மா...

    கவிதை உலகுக்கு
    வந்த தேமொழி
    பேசிய முதல் மொழி
    அம்மா...

    மாதாவை மறக்காத
    உன் மாண்பே
    உன்னை வளர்க்கும்.
    நீ ....வளர்வாய்.
    புகழ் பெறுவாய்.

    ReplyDelete
  4. /////////மச்சான் உறவை எருது எப்போது கொண்டாடும்?///////

    ஆஹா..இதையெலாம் பகிரங்கமா எழுதுற அளவுக்கு KMRK கிளம்பிட்டாரா?ன்னு ரொம்பப் பதறிட்டேன்..

    அப்புறமாப் படிச்சுப் பார்த்தாத்தான் தெரியுது..வண்டியை வேற ரூட்டிலே விட்டிருக்கிறார்ன்னு..

    ஆனாலும் பாருங்க இத்தனை சொல்லடையில் வாத்தியார் எதைத் தலைப்பா போட்டிருக்காருன்னு?

    ரெண்டு பேருமே விவகாரமான ஆட்கள்..
    இதுலே என்னைப் போலே வெள்ளந்தியா இருந்தா கொஞ்சம் சிரமம்தான்..

    ReplyDelete
  5. ///////////என் அகராதியில் 'முடியாது, தெரியாது' என்ற சொற்களை 'டெலீட்' செய்து விட்டதால், 'முடியும் முடியும், முடியும்' என்று மும்முறை கூறிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன்.///////

    நெப்போலியன் சொன்னசொல்லை வேதவாக்காக்கி நீங்க நல்ல பேரு வாங்கிட்டீங்க..
    வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  6. எல்லா சொல்லடையுமே நன்றாக இருந்தாலும் என்னைக் கவர்ந்ததேன்னவோ 1 ,4 ,7 ,10 என்று கேந்திர ஸ்தானம் பெற்ற நான்கும்தான்..

    ReplyDelete
  7. மோக மழைதனிலே
    வட்டுடையை விருந்தாக்கி கடற்கரையில் என் கட்டுடலையும் கட்டுருதியினையும் காலிசெய்யும் ......

    மைனர் அவர்களே இதற்குதான் மைனர் பஞ்ச் என்பதா.

    உங்கள் ஆசை என்னவோ அபத்தம். ஆனால் சொன்னவரரையில் நீங்கள் சுத்தம்.வாழ்க உங்கள் வெள்ளை மனது.

    கன்னியரையும் குளுமையையும்
    வைத்து வந்த
    கண்ணிகவிதை குளுமை.

    ReplyDelete
  8. தனுசுவின் வறுமை குறித்த வரிகளில்'போகுமிந்த இந்த ஊர்கோலம்.. இந்த ஊர்க்கோலமோ?' என்ற கேள்விக்கு
    சோசியல் செக்யுரிட்டி என்ற விஷயத்தை,பிறப்புரிமையை மக்கள் மனதில் சற்றும் எழுந்திடாமல் 'அப்படி ஒன்று உண்டா?' என அதிசயித்துப் பார்க்கும் அளவுக்கு விழிப்புணர்வே இல்லாத அளவிற்கு இதுகாறும் அடித்தட்டு மக்களை ஆட்சியிலிருந்த அரசுகள் வைத்துச் செயல்பட்டிருப்பதால்தான் இந்த ஊர்கோலம்..
    உலகெங்கும் இருந்தாலும் இந்தியாவெங்கும் அதிகமாக ஆங்காங்கே இதே கோலம்..

    ReplyDelete
  9. ///எமக்கொரு உறவாய் நீர் பிறந்தீர்.எமக்கென்று இருக்கும் நீர் பிரித்துநீரின் எல்லை குறைப்பது நியாயமா?நீர் எல்லைதாண்டுவது நியாயமா?///////

    கவிதை நன்று..

    தனுசு நியாஸ்தலத்துக்கு லேட்டாகக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்..
    நியாயம் வழங்குவதுடன் அதன் வேலை முடிந்ததென்று சயனித்துக் கொண்டது நீதிமன்றம்..
    தமிழன் அரசும் செயலில் இறங்காமல் இன்னும் கேள்வியே கேட்டுக் கொண்டிருப்பதனால்
    மக்களை வீதிக்கனுப்பி வேடிக்கை பார்க்கின்றார் நீர் உறவென்று சொல்லிடும் எதிரிகள்..

    ReplyDelete
  10. அம்மாவைப் பாடிய தேமொழியம்மையாருக்கு
    செம்மொழியில் வாழ்த்துக்கள்..
    எமஎஸ் உதயமூர்த்திக்கு
    அடுத்ததோர் செந்தில்குமாராய்
    உத்வேகக் கவிபாடி
    எம்உள்ளத்தை உய்வித்த
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. விளக்கினால் பெருங்கதையாம்
    விளங்கமுடியாக் கவிதைநான்..
    கவிதையில் களமிறக்கி
    துணைவியரின் காயத்துக்கு
    மைனரை மருந்தாக்கி
    மண்ணின் மைந்தனுக்கு
    கவிமலையோர் கடுகாக்கி
    'சிவனே' என்றிருந்தவனை
    'தானே' என்றாக்கி
    சாதனை படைத்திட்ட
    சிங்கைக் கவிப்புலியும்
    சிங்களக் கரை கடந்து
    ஆஸியிலே மையம் கொண்ட
    சிந்தனைத் தமிழ்ப் புலியும்
    விடுத்த வேண்டுதலால்
    எடுத்து விட்டேன்
    அடல்ட்ஸ்ஒன்லி அம்புதனை..
    தொடுத்த நல்வம்பை
    தடுத்து உள்வாங்கி
    வலையில் வெளியேற்றி
    வாசகனுக்கோர் அட்டாக்கை
    கட்டாயம் வரச் செய்த
    வாத்தியாரை வணங்குகிறேன்..
    சொற்குற்றம் பொருட்குற்றம்
    கண்டறிந்து கதைப்போரும்
    சந்த(த்)திலே கவிப்போரும்
    அசைபோடும் அன்பாரும்
    நக்கீரன் நிலையறிந்து
    கிட்டவந்து முட்டிடாமல்
    எட்டவே நின்றிட்டால்
    துளிர்க்கதோ நாளுமிங்கே
    நல்லதோர் புதுக்கவிதை?

    ReplyDelete
  12. ////Blogger minorwall said...
    /////////மச்சான் உறவை எருது எப்போது கொண்டாடும்?///////
    ஆஹா..இதையெலாம் பகிரங்கமா எழுதுற அளவுக்கு KMRK கிளம்பிட்டாரா?ன்னு ரொம்பப் பதறிட்டேன்..
    அப்புறமாப் படிச்சுப் பார்த்தாத்தான் தெரியுது..வண்டியை வேற ரூட்டிலே விட்டிருக்கிறார்ன்னு..
    ஆனாலும் பாருங்க இத்தனை சொல்லடையில் வாத்தியார் எதைத் தலைப்பா போட்டிருக்காருன்னு?
    ரெண்டு பேருமே விவகாரமான ஆட்கள்..//////

    தலை என்றால் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்.
    தலைப்பு என்றால் நிமிர்ந்து பார்க்க வைக்க வேண்டும்

    ReplyDelete
  13. எழுதுகோல் தலைகுனிய
    எழுந்து நிற்கும் தமிழினம் என

    தொடர்ந்து வந்த வரிகள் எல்லாம்
    தொட்டு நெஞ்சில் நிற்பதாலே

    (சப்பான்) கடல் போல் நிறைந்த
    கவிதை கடலில் நீந்திகொண்டிருப்பதால்

    கருத்தரித்த உங்கள்
    கருத்துக்களுக்கு பின்...... ஊட்டமா என

    அமைதி கொள்கிறோம்
    ஆராவாரமின்றியே..

    சொல்லடைகளை பற்றி சில
    சல்லடைகள் உண்டு... அதனை

    விரும்பாதவர்கள் மகிழ்ச்சியடைட்டுமே
    (என) விவரிக்கவில்லை இங்கே...

    வாழ்த்துக்ககள் பொங்கலுக்கும்
    வணக்கங்கங்கள் உங்களுக்கும்...

    ReplyDelete
  14. வருது வருது... அட விலகு விலகு... அப்படின்னு பாடி சுத்தி இருக்கிறவங்களை பத்தடி தள்ளி விரட்டி விட்டு,
    தன் கைப்பிடியில் இருக்கும் கண்மணி வாண்டை, கண்ணும் கருத்துமாக, கடமை தவறா கர்மவீரனாக பாதுகாப்பவர் எவரோ
    அந்த நீல/நீள கால்சராயும் வெள்ளை சட்டையுமாக (பள்ளி சீருடையில்?) நடுநாயகமாக திகழும் நாயகன்தான் நம் மைனர்வாள்
    எங்கே என் பரிசு? ஐயா, உங்கள் ரங்கூன் தாத்தா கொடுத்த, மையைத் தொட்டு தொட்டு எழுதும் பேனா கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்

    ReplyDelete
  15. KMRK ஐயாவின் சொல்லடைவுகளின் தொகுப்பும் விளக்கமும் நயம் நிறைந்தவை. பத்தில் ஒன்றே ஒன்றுதான் "இருந்தால் நவாபு; இல்லாவிட்டால் பக்கிரி" மட்டுமே எனக்குத் தெரியும். நான் கைவேலைகளில் வீட்டில் உதவும் பாங்கிற்கு அம்மா இப்படி உவமை சொல்வார்கள் (மனசு வச்சா வீட்டு வாசல திருப்பி கொல்லைப்பக்கம் வச்சுடுவ ... இல்லாட்டி ஒன்னுமே செய்ய மாட்டே என்று சொல்லிவிட்டு) நீ இருந்தா நவாபு இல்லாட்டி பக்கிரி (அல்லது) உனக்கு வச்சா குடுமி இல்ல செரைச்சா மொட்டைதான், என்று கிண்டலடிப்பார்கள். மற்றவைகளையும் தொடர்ந்து விளக்கத்துடன் எதிர்பார்க்கிறேன். நன்றி

    ReplyDelete
  16. செந்தில்குமாரின் கவிதை, "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" பாடலைப் போன்ற ஒரு நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை. புதுகை புதுக்கவியே நன்றி. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்....
    பூக்களுடன் முட்கள்
    நிறைந்ததே வாழ்க்கை!
    முட்களைக் களைந்து எடு
    பூக்கள் உன்வசப்படும்!

    ReplyDelete
  17. கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என்று தனுசு இரண்டு கவிதைகளைத் தீட்டிவிட்டார் (நிறைய நடை பயணம் செய்திருக்கிறார் இந்த வாரம் என்று புரிகிறது).

    பிரதிபலன் எதிர்பார்க்காமல் துன்பத்திலும் துயரிலும் துணிவுடன் துணைவரும் உறவுகள் மேன்மையானவை. அந்த வகையில் அந்த முதல் கவிதையின் மனிதர் கொடுத்து வைத்தவர். இரண்டு வாரம் குடும்பம் நடத்தி சலித்துப் போய், இரண்டு மில்லியனைக் கறந்துகொண்டு விவாகரத்து செய்யும் காலத்தில் இப்படியும் மனிதர்கள். ஆனால் அவர்களைத்தான் துன்பம் தொடர்கிறது.

    "நீரின் எல்லை குறைப்பது நியாயமா?
    நீர் எல்லைதாண்டுவது நியாயமா?"
    வரிகளில் சொற்களில் விளையாடி விட்டீர்கள்.

    ReplyDelete
  18. வாருங்கள் அதிவீரராம பாண்டியன் மைனர் அவர்களே, மற்றவர்களை விவகாரமானவர்கள் என்று சொல்லிவிட்டு நீங்கள் தப்பிக்கப் பார்கிறீர்களா?

    ஏதோ குளிர் தாங்காம மார்ச் எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருக்கீங்கன்னு நினைச்சா.... உண்மை காரணம் என்னன்னு இப்ப புரியுது ....கவிதை விவகாரமால்ல இருக்குது. உங்கள் பின்னூட்டக் கவிதையும் அருமை

    "விளக்கினால் பெருங்கதையாம்
    விளங்கமுடியாக் கவிதைநான்.."
    அடடா கவிதை... கவிதை ....

    ReplyDelete
  19. என் கவிதையினைப் பதிவிட்ட ஆசிரியர் ஐயாவுக்கும், படித்த வாசகர்ளுக்கும் நன்றி.

    பாராட்டிய தனுசுவுக்கும் மைனருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  20. திருவாதிரை 10 நாட்கள் ஆதிரைத்திருவிழா என்று பிரமாதமாகக் கொண்டாடுகிறார்கள் திருத்தவத்துறையில்.அதாங்க, லால்குடியில்தான். சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கே தான் ஆதிரை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்று உள்ளூர்காரார்கள் வய்க்கு வாய் சொல்கிறார்கள். உத்தரகோசமங்கை மரகத நடராஜர், சென்னை பாடியில் திருவ‌லிதாயம் ஆகிய இடங்களிலும் சிறப்பாகவே கொண்டாடப்படும் என்று சொல்லாமல், உள்ளுர்காரார்களின் முறைப்பைத் தவிர்த்து விட்டேன்.

    இரவும் அதிகாலையிலும் அபிஷேகம் பார்க்கச் சென்றதால் வகுப்பறைக்குத் தாமதமாயிற்று.

    தனுசுவின் கவிதைகளில் அந்த எளீயோரின் பயணமே எனக்குப் பிடித்தது.
    'ஊரின்றி உற‌வின்றி வீடின்றி வழியின்றி வீதிவழி போகும் விதியோ"அருமையான வரிகள். பாராட்டுக்க்கள்.

    அம்மா செல்லமோ தேமொழி? அம்மாவை நினைந்து எழுதியது நன்றாகவே உள்ளது.

    மைனர் 'ஜில்காட்'மைனர்தான்.கட்ற்கரையில் கடலை சாப்பீட்டிர்ரா, கடலை போட்டீரா மைனர்வாள்?

    மார்ச்சிங் பிராகடீஸ் ஆரம்பிச்சாச்சு. இனிமே எங்க காட்டிலே கவிதைதானா?
    'இன்சஃபிஷியன் டைம் தான்' போலிருக்கு.

    ReplyDelete
  21. //////// தேமொழி said...

    வாருங்கள் அதிவீரராம பாண்டியன் மைனர் அவர்களே, மற்றவர்களை விவகாரமானவர்கள் என்று சொல்லிவிட்டு நீங்கள் தப்பிக்கப் பார்கிறீர்களா?

    ஏதோ குளிர் தாங்காம மார்ச் எப்ப வரும்னு காத்துக்கிட்டு இருக்கீங்கன்னு நினைச்சா.... உண்மை காரணம் என்னன்னு இப்ப புரியுது ....கவிதை விவகாரமால்ல இருக்குது. உங்கள் பின்னூட்டக் கவிதையும் அருமை////////

    எனதெழுத்தையும் கவிதை வரிசையில் சேர்த்து விட்டு பாராட்டையும் கூடவே அருமை என்று சொல்லி ஊக்கப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.. விவகாரமான விஷயம் KMRK கண்ணில் படும் என்று நினைத்தேன்..பாம்பின் கால் பாம்பறியும் என்ற ரீதியில்..

    ஆனால் விவகாரமான ஆளுக்குப் புரிந்து தூண்டில் போட்டுத் தப்பிக்க இயலாவண்ணம் சிக்க வைத்துவிட்டீர்..நன்றி..

    ReplyDelete
  22. ///////////kmrk said , மைனர் 'ஜில்காட்'மைனர்தான்.கட்ற்கரையில் கடலை சாப்பீட்டிர்ரா, கடலை போட்டீரா மைனர்வாள்?//////

    வாத்தியாருக்கு விளக்கமளித்ததை உங்களுக்கும் அளிக்காமல் போனால் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கும்போதே நான் சொன்ன விவகாரமான ஆளு லிஸ்ட் பாஃபெக்ட்டா மேட்ச் ஆவதால் மிக்க மகிழ்ச்சி..

    ஆதலால் என் உள்ளக் கிடக்கையை
    சொல்லியேவிடுகின்றேன்-இங்கேயும்.

    "ஜப்பானில் ஜனவரியிலே கடுங்குளிர் மைனசைத் தொடும்..அக்கால கட்டங்களில் winter clothing கிலே பெண்டியர் உடல் கண்களை மட்டுமே விட்டுவிட்டு முழுமையாகப் போர்த்திமூடப்பட்டுவிடும் . இதனால் உடலங்கங்களைத் ரசித்து அழகை ஆராதிக்கும் வாய்ப்பு சகுனியாக மாறிப் போன இந்த சனவரியால் தவிர்க்கப்பட்டுவிடுவதால் வேகத்துடன் சனவரியே நீ போ..போ..என்று வேகப்படுவதாய் எழுதியிருந்தேன்..

    அடுத்த பாராவிலே
    வசந்தகாலத்தைக் குறிப்பிட்டு பீச்சிலே மூடு வரக்காரணமாயிருந்து எனது உறுதியைக் குலைத்து வாலிபத்துக்கு சவால்விடும் வேலையை செய்யும் சூரியனே வருக என்கிற விதத்தில் எழுதியிருந்தேன்..

    அடுத்த பாராவிலே
    கதராடையைத்தான் வெயிலில் விரும்பி அணிவது..அந்த கதர் கூட வேண்டாம் என வெயிலை, வேக்காட்டைச் சொல்லி அலைகளின் ஊடே கடலை போட்டு பேசியபடியே நடந்து கொண்டிருக்கும் கணங்களுக்குள்ளே வேகமாக மூடை மாற்றி இடைக் கச்சையை அவிஷ்த்து கொடியாக்கி விடுதலை வேள்வி என்ற (சல்லாபத்துக்கு) போராட்டத்துக்கு தூண்டும் சூரியனே என்று பொருள் படும்படியாக எண்ணி எழுதியிருந்தேன்.."

    ReplyDelete
  23. /////KMRK said,
    மார்ச்சிங் பிராகடீஸ் ஆரம்பிச்சாச்சு. இனிமே எங்க காட்டிலே கவிதைதானா?
    'இன்சஃபிஷியன் டைம் தான்' போலிருக்கு.//////

    நல்ல word coining .

    இன்னிக்கு ஒண்ணைக் கவனிச்சீங்களா?
    கதைவுடுறதுலே தனிக்காட்டு ராஜா..
    நீங்கதான்..நீங்க மட்டுமேதான்..

    அதுனாலே நீங்களும் காலாகாலத்துலே களத்துலே குதிச்சுடவேண்டியதுதானே?ஒண்டிக்கட்டையா எத்தினிகாலம்தான் காலம் தள்ள முடியும்?

    எல்லாம் சனிப்பெயர்ச்சி பண்ற வேலை..நம்ம கையிலே என்னா சார் இருக்கு?
    ஒண்ணுக்குமே ஆகாத ஒரு ரிஷபராசிக்காராளையே கவிஞராக்கிடுச்சே பார்த்தீங்களா?

    ReplyDelete
  24. /////தேமொழி said...
    வருது வருது... அட விலகு விலகு... அப்படின்னு பாடி சுத்தி இருக்கிறவங்களை பத்தடி தள்ளி விரட்டி விட்டு,
    தன் கைப்பிடியில் இருக்கும் கண்மணி வாண்டை, கண்ணும் கருத்துமாக, கடமை தவறா கர்மவீரனாக பாதுகாப்பவர் எவரோ
    அந்த நீல/நீள கால்சராயும் வெள்ளை சட்டையுமாக (பள்ளி சீருடையில்?) நடுநாயகமாக திகழும் நாயகன்தான் நம் மைனர்வாள்
    எங்கே என் பரிசு? ஐயா, உங்கள் ரங்கூன் தாத்தா கொடுத்த, மையைத் தொட்டு தொட்டு எழுதும் பேனா கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்/////

    மைனரை வைத்து கேம் ஆடுவதில் வாத்தியாருக்கு ஏதோ ஒரு இண்டரெஸ்ட்..
    அதுனாலே ரெண்டு நாளைக்கு நான் ஒண்ணும் தலையிடலே..
    தலையோட மேட்டர்..
    'தலை இருந்தாத் திரும்பிப் பார்க்க வைக்கணும்.'
    'அப்பிடி..இப்பிடி' ன்னு காலையிலே பஞ்ச் டைலாக் வுட்டுருந்தாரே பார்க்கல?

    ReplyDelete
  25. ////Blogger minorwall said...
    ///////////kmrk said , மைனர் 'ஜில்காட்'மைனர்தான்.கட்ற்கரையில் கடலை சாப்பீட்டிர்ரா, கடலை போட்டீரா மைனர்வாள்?//////
    வாத்தியாருக்கு விளக்கமளித்ததை உங்களுக்கும் அளிக்காமல் போனால் விடமாட்டேன் என்று அடம் பிடிக்கும்போதே நான் சொன்ன விவகாரமான ஆளு லிஸ்ட் பாஃபெக்ட்டா மேட்ச் ஆவதால் மிக்க மகிழ்ச்சி..//////

    இதில் மகிழ்ச்சிக்கெல்லாம் வேலை இல்லை. ஐம்பதைத் தாண்டிய அனைவருமே விவரமான (உங்கள் மொழியில் விவகாரமான) ஆட்களாகத்தான் இருப்பார்கள் மைனர். keep it in your mind!

    ReplyDelete
  26. சுதன்.க‌
    கனடா.
    கிருஸ்ணனின் சொல்லடை கேள்விப்படாத ஒன்றாக புதுமையாக அருமையாக
    இருந்தது.நன்றிகள் கோமதிமாமிக்கும் உரித்தாகட்டும்.
    செந்தில்குமார்‍‍‍ ‍புதுக்கோட்டை அவர்களின் கவிதை புரட்சிகரமாகவும் ஏதோ ஈழத்தமிழனுக்கு மனதிற்குஆறுதல் கொடுப்பதாகவும்/புத்துயிர் ஊட்டுவதாகவும்
    எனக்கு தோன்றுகிறது.அற்புதமான வரிகள்.தோல்வி தொடர்கதையல்ல அவ்வப்போது முற்றும் என்று போட்டுவிடு,அடுத்த கதையை அப்போதே எழுதத்தொடங்கு,என் மனதைதொட்டது.முழுக்கவியுமே மிகவும் சிறப்பாக உள்ளது.பதிவுலகோடு நின்றுவிடாமல் ப்த்திகைகளுக்கும் அனுப்புங்கள்.நல்ல வரவேற்பு கிடைக்கும்.
    தேமொழியின் அன்னைபற்றிய கவிதையும் மனதில் கீற்ல் எற்படுத்தியது.
    யாவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. ///துளிர்க்காதோ நாளுமிங்கே
    நல்லதோர் புதுக்கவிதை///
    தம்பி மைனரின் கவிதை தவழ்கின்றது.
    விரைவில் மரதன் ஓட்டம் போல் கவித்துவம் மிக்கதாய் நீண்டு செல்லும் என்பது திண்ணம்.
    என்னையும் தன் கவிக்குள் சிங்கைத் தம்பியுடன் சேர்த்து விட்டதற்கு நன்றி.
    கருத்துக்கு பஞ்சமில்லாத மைனருக்கு கவிதை கைகொடுக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. ///எமக்கொரு உறவாய் நீர் பிறந்தீர்.
    எமக்கென்று இருக்கும் நீர் பிரித்து நீரின் எல்லை குறைப்பது நியாயமா?நீர் எல்லைதாண்டுவது நியாயமா?//

    நீர் எனும் பதத்தை கையாண்ட முறை பாராட்டுக்குரியது.

    KMRK ஐயாவின் சொல்லடைவுகளின் தொகுப்பு நன்றாக உள்ளது.அவரின் கைவண்ணம் தெரிந்ததுதானே.
    நான் பாராட்டினால் பொன்னுக்கு பொட்டிட்டதாயே அமையும்.

    ReplyDelete
  29. நல்ல கருத்துள்ள படங்களுக்கு விளம்பரங்கள் கிடைப்பதில்லை.

    "உச்சிதனை முகர்ந்தால்" படம் பார்த்தல் நல்லது.இதனை ஒரு தகவலாகத் தருகின்றேன்..

    விமர்சனம்..
    http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1501

    ReplyDelete
  30. நன்றி..நன்றி.ஆஸி..யின் ஆசிக்கு..

    ReplyDelete
  31. Uma S umas1234@gmail.com

    தனுசுவின் கவிதைகள் வழக்கம்போல் அருமை.

    தொடர்ந்து எழுதும் செந்தில்குமாரின் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள்.

    சொல் அடைவுகள் பற்றிய ஆக்கம் அருமை. நிறைய கேள்விப்படாததாக இருந்தது. கேள்விப்பட்டவற்றிற்கும் இப்படி ஒரு அர்த்தம் இருப்பது தெரியாமல் இருந்தது. இவற்றை ஆவணப்படுத்த நினைக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    தேமொழியின் முதல் கவிதை நேர்த்தியாக வந்திருக்கிறது.

    கொலைவெறித்தாக்குதலையும் மீறி துணிச்சலுடன் (விருச்சிக லக்னம்னா சும்மாவா????, போதாக்குறைக்கு சந்திரன் வேற உச்சம்) புதிதாக கவிதை உலகில் அடியெடுத்து வைத்திருக்கும் மைனருக்கு திரும்பிய திக்கு தோறும் காட்சியளிக்கும்படி ஆள் உயர கட் அவுட்டுகள் தலைநகரில் வைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது. அதற்கான செலவை என் அக்கௌண்டில் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    என்னாது குளிர்ல கண்கள் மட்டும்தான் தெரியுதா? நீங்க ஜப்பான்ல இருக்கவேண்டிய ஆளே இல்லை சார், அண்டார்ட்டிகாவில இருக்கவேண்டிய ஆளு!!!!!!!!!!!

    S.உமா, தில்லி

    ReplyDelete
  32. Uma S

    13:18 (1 hour ago)

    to me
    முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஒருவாரமாக மெயில் கூட பார்க்கவில்லை.

    முதலில் ஒரு விஷயம். தனுஷின் கொலைவேறிப்பாட்டு எனக்கு பிடித்திருந்தது. அது ஹிட்டானதற்கு தனுஷின் குரல் / பாடல் வரிகளைத்தவிர்த்து இசையும் முக்கியமான காரணம். ஆடத்தூண்டும் இசைதான் முதல் காரணம் எனத்தோன்றுகிறது. ஆனால் வழக்கம்போல் எல்லா நடிகர்களும் செய்வதுபோல் அவரை இருட்டடிப்பு செய்து தனுஷ் பிரபலமடைந்துவிட்டார். நான் இந்த பாடலை விரும்பக்காரணம் இசைதான். அவ்வளவு பிரமாதமான இசை என்று சொல்லமுடியாவிட்டாலும் எதோ ஒரு கவரும் அம்சம் இருக்கிறது. பாடல்வரிகள் கொலைவேறியைத்தவிர்த்து எல்லாமே ஆங்கிலத்தைக்கொலை செய்துதான் எழுதப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க தமிழ் இதனால் பாதிக்கப்படாது என்பது என் கருத்து. சக்திவாய்ந்த ஊடகத்தின்மூலம் நேர்மறைக்கருத்துக்களே அதிகம் பரப்பப்படவேண்டும் என்ற உங்கள் கருத்தில் எனக்கு சிறிதளவு கூட மாறுபாடு இல்லை. ஆனாலும் ஒரு மாறுதலுக்கு இதுபோன்ற பாடல்களை ரசிப்பதில் தவறு இருப்பதாகத்தெரியவில்லை. அப்படி ரசிப்பதாலேயே தமிழ் உணர்வு இல்லை எனவும் சொல்லமுடியாது. என் தனிப்பட்ட விருப்பம் என்றால் இளையராஜாவின் பாடல்கள்தான் நான் எப்போதும் பாடிக்கொண்டிருப்பது, பாட விரும்புவது. காலத்தை வென்ற இசை என்றால் அதுதான். அவருக்கு முன் இருந்த திறமையான இசையமைப்பாளர்கள் / பாடகர்களின் பாடல்கள் இன்றளவும் எல்லோராலும் விரும்பப்படுகின்றன அல்லவா? கொலைவெறி போன்ற பாடல்கள் குறுகிய காலம் மட்டுமே முணுமுணுக்கப்படும், இதற்குமுன் ஹிட்டான, அபத்தமான, தமிழைக்கொலை செய்வது போல் எழுதப்பட்ட 'நாக்கமுக்க' போன்ற பாடல்களை ஒப்பிடும்போது இது ஒன்றும் மோசமில்லை என்பது என் கருத்து. இருந்தும் இது போன்ற பாடல்கள் ஹிட்டாவதைப்பார்த்து மற்றவர்களும் ஆரம்பித்துவிடுவார்களே என்ற உங்கள் ஆதங்கம் / பயம் புரிகிறது. அதற்கு என் பதில் தமிழ் மக்கள் அப்படியொன்றும் முட்டாள்கள் இல்லையென்பதுதான். ஒரே மாதிரியான இப்படிப்பட்ட பாடல்கள் வெளிவர ஆரம்பித்தால் அவற்றை மக்கள் புறக்கணிக்கவும் தயங்க மாட்டார்கள். கவர்ச்சி அம்சங்கள் நிறைந்த மசாலா படங்கள் எல்லாமே வெற்றி பெறாததன் காரணம் இதுதான். சற்றும் விரசம் இல்லாத 'களவாணி' படம் வெற்றிபெற்றதன் காரணமும் இதுதான்.

    மேலும் இந்த பாடல் எப்படி காட்சிப்படுத்தப்படப்போகிறது என்பதையும் பார்க்கலாம். அது தமிழர்களை / தமிழை இழிவுசெய்யும் நோக்கில் இருந்தால் பொங்குவதில் அர்த்தம் இருக்கிறது.

    இந்த பாடலை எதிர்ப்பதை விட நாம் செய்யவேண்டிய முக்கியமான காரியங்கள் இருக்கின்றன. தமிழ் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் கலந்து வரும்போது (இதற்குமுன் எத்தனையோ பாடல்கள் இதுபோல் வந்திருக்கின்றன) நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாமே? தமிழை வாழவைக்க அதைவிட முக்கியம் நாம் பேசும், எழுதும் தமிழில் ஆங்கிலம் / பிறமொழி கலக்காமல் பேசுவது / எழுதுவது. நான் அதை என் தினசரி வாழ்வில் பின்பற்றுவதாலேயே உரிமையுடன் மற்றவர்களுக்கும் கூறுகிறேன். நான் அலுவலகத்திலோ / பொது இடங்களிலோ / வீட்டிலோ தேவையில்லாத சமயத்தில் ஆங்கிலம் பேசுவதில்லை. வீட்டில் தமிழ் மட்டுமே பேசுகிறோம். என் பையனும், பெண்ணும் திடீரென்று ஹிந்தியில் பேச ஆரம்பித்தால் கூட உடனே திட்டுவிழும். ஆனால் ஆங்கிலத்திலேயே அலம்பல் விடும் தமிழர்களையும் பார்த்து வெறுப்படைந்து இருக்கிறேன். என் கணவரின் உறவினர் ஒருவர் வீட்டில் கூட ஹிந்திதான் பேசுகிறார்கள். சொந்தக்காரர்கள் வீட்டிற்கு ஊருக்கு வந்தால் அவர்களுக்குள்ளேயே ஆங்கிலத்தில் பேசிக்கொள்வார்கள் (தன் ஆங்கிலப்புலமையைக் காட்ட). சமீபத்தில் கூட ஒரு பூஜைக்கு சென்றபோது இரண்டு தமிழ் பெண்மணிகள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிட்டனர். இதுபோன்று ஆங்கிலம்தான் சிறந்தது, தமிழில் பேசுவது கேவலம் என்கின்ற தாழ்வு / அடிமை மனப்பான்மை உள்ளவர்களால் தமிழை எப்படி அழியாமல் பாதுகாக்க முடியும்? அதே சமயம், ஊர் / மொழிப்பற்றுடையவர்களும் நிறையவே இருக்கிறார்கள்.

    உங்கள் தமிழ் உணர்வை நான் அறிவேன். இது உங்களுக்கு எழுதப்பட்ட மாற்றுக்கருத்து அல்ல, என் கருத்தாகவே எழுதியிருக்கிறேன், நீங்களும் அப்படியே எடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

    எஸ். உமா, தில்லி

    ReplyDelete
  33. வணக்கம் ஐயா,
    ஆஹா,எத்தனை கவிபுயல்கள்,கவிகுயில்கள் நம் வகுப்பறையில் வாத்தியாரால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்...அனைத்தும் ஒவ்வொரு விதமாக அருமையாக இருந்தது...மைனர் அவர்கள் தன் "பெயரை" நிலைநாட்டிவிட்டார்...
    kmrk அவர்களின் சொல்லடையை குறிப்பு எடுத்துக் கொண்டேன், என் தோழிகளை ஆச்சிரயப்படுத்த...சொல்லடைகளை காக்கும் உங்கள் முயற்சியில் என்னுடைய பங்கு(!?)...

    ReplyDelete
  34. /////////Uma said கொலைவெறித்தாக்குதலையும் மீறி துணிச்சலுடன் (விருச்சிக லக்னம்னா சும்மாவா????, போதாக்குறைக்கு சந்திரன் வேற உச்சம்) புதிதாக கவிதை உலகில் அடியெடுத்து வைத்திருக்கும் மைனருக்கு திரும்பிய திக்கு தோறும் காட்சியளிக்கும்படி ஆள் உயர கட் அவுட்டுகள் தலைநகரில் வைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது. அதற்கான செலவை என் அக்கௌண்டில் அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
    ////////
    ரெண்டு நாளா எங்க ஆளைக் காணோமின்னு நினைச்சேன்..ஆஜராகிட்டீங்கோ..
    மனந்திறந்த பாராட்டுக்கு நன்றி..

    மாநில அளவிலேதான் நம்ம அமைப்பு பலமா இருக்குங்குறதாலே மாநிலத் தலைநகர் அளவிலே இதை நிறுத்திக்குவோம்..தேசிய அளவுக்குப் போனா புரியாத மொழியிலே எழுதவேண்டியதாப் போயிடும்..

    எதுவா இருந்தாலும் உங்க அக்கௌன்ட் நம்பரையும் பாஸ்வேர்டையும் எனக்கு மறக்காமல் அனுப்பிவைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..

    ReplyDelete
  35. /////////Uma said என்னாது குளிர்ல கண்கள் மட்டும்தான் தெரியுதா? நீங்க ஜப்பான்ல இருக்கவேண்டிய ஆளே இல்லை சார், அண்டார்ட்டிகாவில இருக்கவேண்டிய ஆளு!!!!!!!!!!!//////

    இதுக்குத்தான் அன்னிக்கே பாடினான் பாரதி
    'நெஞ்சு பொறுக்குதில்லையே..இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்' என்று.. உங்களை நினைச்சா இந்தக் குளிரிலும் எனக்குப் பத்திக்கிட்டு வருது..

    ReplyDelete
  36. ////R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    ஆஹா,எத்தனை கவிபுயல்கள்,கவிகுயில்கள் நம் வகுப்பறையில் வாத்தியாரால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்...அனைத்தும் ஒவ்வொரு விதமாக அருமையாக இருந்தது...மைனர் அவர்கள் தன் "பெயரை" நிலைநாட்டிவிட்டார்...////

    தாளாத காய்ச்சலிலும் மாளாதுவந்து
    'பெயர்' சொல்லி வாழ்த்திய
    சோபனமே..நல் சொப்பனமே..
    நீர் வாழ்க..உம்காய்ச்சல் நீங்குக..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com