மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.1.11

எத்தனை பிறவி எடுத்தாலும் நீதான் எனது தாய்!

........................................................................................................................
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய வாரமலரை இரண்டு கட்டுரைகள் அலங்கரிக்கின்றன.  மாணவர்களில் ஒருவரின் கட்டுரையும், மாணவி ஒருவரின் கட்டுரையும் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எத்தனை பிறவி எடுத்தாலும் நீதான் எனது தாய்!

"நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!
(கற்பூர)"

என்று சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த பாடல் சட்டென்று நிற்க...அறிவிப்பு தொடர்ந்தது.

“ஓய்ங்ங்ங்ங்....ஹலோ; ஹலோ; ஹலோ; மைக் டெஸ்டிங்...... ஹலோ....அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, மெய்யன்பர்களே பக்தக் கோடி பெருமக்களே, இப்போது இன்னும் சற்றுநேரத்தில் இந்த ஆண்டு வரவிருக்கும் நமது முத்துமாரி அம்பிகையின் திருவிழாவை முன்னிட்டு ஊர் மகா சபைக் கூட்டம் தொடங்க இருப்பதால்; ஆங்காங்கே இருக்கும் பக்தக்கோடிப் பெருமக்கள் அனைவரும் உடனடியாக கோவில் மண்டபத்திற்கு வருமாறு கோவில் கமிட்டித் தலைவர் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்!”

சுப்பையா கிளார்க்கும் வேகவேகமாகக் கிளம்பி கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார், செல்லும் வழியில் மீனாக்ஷி அம்மாளைப் பார்த்தார்.   “வணக்கம் அம்மா” என்றார்.

அம்மையார் பதிலுறுத்தார்கள் “வணக்கம் ஐயா, கோவில் கூட்டம் ஆரம்பிக்கப் போகுதுபோல கொஞ்சம் சீக்கிரம் செல்லுங்கள். அத்தோடு  இந்த வருடம் எப்படியும் அம்பாளுக்கு வெள்ளிக்காப்பு வேலையை செய்து முடித்து விடுவோம் என்று தைரியமாக உறுதியும் அளித்துவிட்டு வாருங்கள்”

அன்று இரவு சுந்தரத்திடம் - அதாவது வெளிநாட்டில் இருக்கும் தன் மகனுடன் - வெள்ளிக்காப்பு சாத்துவதைப் பற்றி பேசுகிறேன் என்று தைரியம் சொல்லியும் அனுப்பினார்கள்.

“சரி அம்மா, அப்படியே செய்து விடுகிறேன்” என்று கூறியபடியே அங்கிருந்து கோவிலை நோக்கி விரைந்தார் சுப்பையா.

இங்கே மீனாக்ஷி அம்மாளைப்பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்தாக வேண்டும். அந்த அம்மா ஒரு பெரிய குடும்பத்தில் வாழ்க்கைபெற்று நிறையக் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய அனுபவசாலி. அத்துடன் 75 அகவையைத் தாண்டிய பழுத்தபழம்.

எல்லோரையும் தனது பிள்ளைகளாகவே என்னும் தாயுள்ளம் கொண்ட முதியவர். அதனாலே என்னவோ முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்; கொள்ளுப் பேத்தியைப் பார்த்த அந்த அம்மாளுக்கு ஊரில் இருக்கும அத்தனை குழந்தைகளும் பேரன் பேத்திகள்தான்.

அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களின் பெரும்பாலோனோரின் குடல்ஏற்றம், சுளுக்கு, காய்ச்சல் சளி போற்றவைகளுக்கெல்லாம் வைத்தியம் பார்த்த அனுபவ சித்த வைத்தியர் அவர்.

நேரங்காலம் இல்லை, நள்ளிரவு கூட யாராவது வந்து வாயிற் கதவுகளைத் தட்டி தனது சுகமில்லாத குழந்தையை பார்க்கச் சொல்லுவது சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வு. 

அந்த ஊர் மக்களைப் பொறுத்தவரையில் பல குடும்பங்களுக்கும் தாய் போன்றவர் அந்த மூதாட்டி.

தனது வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப்பெய்திவிட்டால் முதல் தகவல் இந்த அம்மாவிற்குத்தான் சொல்லியனுப்புவார்கள்.. வெளியூரில் இருக்கும் தாய்மாமனுக்கு கூட அதற்குப் பிறகுதான்.

அவர்கள்தான், ருதுவானப் பெண்ணையும் அவள் உடுத்தியிருந்த ஆடையையும் முதன் முதலில் பார்க்க வேண்டும். கிராமங்களில் பெற்றதாய்  முதலில் அந்தப்பெண் உடுத்தியிருந்த ஆடையைப் பார்க்கக்கூடாது என்பது ஒரு வழக்கம்.

அதுதான் ராசியானது என்றும் அவ்வூர் மக்கள் நம்பினார்கள்.

அதோடு யாராவது வெளியூர் சென்றால் இந்த மீனாக்ஷி அம்மா எதிரே வந்தால்; வெளியூர் செல்பவர்கள், நல்ல காரியம் பொருட்டு செல்பவர்கள் அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை.

ஆகா, புண்ணியவதியின் முகத்தில் விழித்துவிட்டு போகிறோம். அதனால் நாம் போகும் காரியம் நிச்சயம் வெற்றி என்ற ஒரு நம்பிக்கை.

இன்னும் ஒரு விஷயம். அந்த கிராமப் பஞ்சாயத்தில் தெருக்கூட்டும் சில குடும்பத்தை சேர்ந்தப் பெண்கள் தங்களது உணவிற்கு வந்து வாயிலில் நிற்பார்கள்; அப்படி வருபவர்கள் வீதியில் மூன்றுவீடுதாண்டி இருக்கும் மீனாக்ஷி அம்மாளின் கையில் ஏதாவது வாங்கிவிட்டுத்தான் வேறு வீட்டுக்கு செல்வார்கள். 

இன்னும் பல விசயங்களைச் சொல்லிக்கொண்டே போனால் நீண்டு கொண்டே போகும். இப்போது சொல்லவந்த விசயத்திற்கு வருவோம்.

ஊருக்கே தாயைப் போன்று விளங்கும் அந்த மீனாக்ஷி அம்மாள். அந்த ஊரில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்பிகையைத்தான், தனது தாயாய் எண்ணி வழிபடுவார்.

அதன் காரணமாகவும், அந்த அம்பாளின் மீது கொண்ட அதீத அன்பினாலும், பக்தியினாலும்தான், அவர்கள் ஊர் மக்களால் வருடம் தோறும் நடத்தப்படும் விழாவில், ஆறாவது மண்டகப்படியின் சார்பாக, எப்படியும் அம்பாளுக்கு வெள்ளியிலே கவசம் செய்து பூட்டி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

அதற்காக ஆகும் பெரும் தொகையைத் தாமே முன்னின்று பெற்றுத் தரவேண்டும் என்ற ஆசையும் இருந்தது.

அந்த நல்ல காரியத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற சிந்தனையில், தனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஆறாவது மண்டகப் படியின் பொருளாளர் சுப்பையா கிளார்க்கிடம் சென்று தனது விருப்பத்தையும் அதற்காக ஆகும் தொகையில் ஒரு பெருந்தொகையைத்தானே தன் மகன் சுந்தரத்திடமும் மற்றும் தனது சொந்த பந்தங்களிடமும் பெற்றுத்தருவதாக உறுதிக்கூறி, அதுபற்றி செயலாளரிடமும் கலந்தாலோசித்து வேலையைத் தொடங்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.

சொல்லி இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.

கோவிலில் மகாசபைக் கூட்டம் துவங்கியது. முதலில் கோவில் கமிட்டி கெளரவத் தலைவர், தலைவர் இருவரும் பேசினார்கள். அவரைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படியின் செயல்பாடுகளும் விவரிக்கப்பெற்றது.

அடுத்து ஆறாவது மண்டகப்படி முறை. அதன் செயலாளர் ஆரம்பிக்கும் முன்பே. வில்லங்கம் வீராசாமி (அவரை அப்படித்தான் தான் பலரும் அழைப்பார்கள் அதில் அவருக்கும் ஒரு சந்தோசம்) தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்று தலைவரிடம் அனுமதிக் கேட்டு எழுந்து நின்றார்.

கூட்டத்தில் கூடியிருந்த ஒருசாரார் ஆட்சேபிக்கவும், ஒருசாரார் ஆதரிக்கவும்; கடைசியாகத் தலைவர், ஒரு சத்தம் கொடுத்தார். “சும்மா இருங்கையா, நீங்க பாட்டுக்க ஆளாளுக்குப் பேசிகிட்டு இருந்தா பிறகு நாங்க எதற்குத் தலைவருன்னு இங்கே இருக்கோம்” என்றார்.

மழை பேய்ந்து ஓய்ந்தது போன்றதொரு அமைதி.

“என்னப்பா, வில்லங்கம், என்ன வேணும்?” என்றார் தலைவர்.

“ஐயா நான் இரண்டு வார்த்தைகள் பேசணும்”

“சரி, வில்லங்கம் பண்ணனும்னு வந்திட்டே, பேசு” என்றார், தலைவர் தணிகாசலம்.

“இந்த வெள்ளிக் கவசம் பற்றி ஒரு முடிவுச் சொன்னால் பரவாயில்லை! இரண்டு வருடம் போயிருச்சு. ஒன்னு இவுக செய்யணும் இல்லைன்னா.. எங்களுட்ட கொடுத்துரட்டும் நாங்க ஏழாம் மண்டகப் படி சார்பாகச் செஞ்சு கொடுக்கிறோம்” என்றார் வில்லங்கம்.

“அதான், அவுக பேசப் போராகள்ள; அதுக்குள்ளே என்ன பெரிய முந்திரிப் பருப்பாட்டம், இவரு பேசுறாரு” என்று முனங்கள் கூட்டத்தில் எழுந்தது.

“அது சரி, வெள்ளிக்காப்பு விசயமாக உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? அது அவுகளாக, முடிவெடுத்து முயற்சி செய்கிறாக நீங்க ஏன் அதுல மூக்கை நுழைக்கிறீக?”  என்றார், தலைவர்.

“அதுக்கில்லை அவுகனாள முடியலன்னா, நாங்கச் செய்யலாம்ன்னுதான்” என்று இழுத்தார் வில்லங்கம் வீராச்சாமி.

“சரி வில்லங்கம். உன் அபிப்பிராயத்தை சொல்லிப்புட்ட,  அவுக வந்து என்ன சொல்றாகன்னு பார்ப்போம்” னு சொல்லி; ஆறாவது மண்டகப் படி சார்பாக சுப்பையா கிளார்க்கை பேசச் சொன்னார், தலைவர் தணிகாசலம்.

அவரும் எழுந்து அம்பாளை வணங்கிவிட்டு பேச ஆரம்பித்தார்.   “நான் இங்கு முதலில் ஒன்றைக் கூற ஆசைபடுகிறேன். இந்த ஊருக்கு வயது 60 தான் எங்களது வயது அதனையும் தாண்டிவிட்டது. அதோடு இங்கு அமைக்கப்பட்ட இந்த பஞ்சாலையின் காரணமாகவே இந்த ஊர் உருப்பெற்றது. மேலும், இந்த அம்மனை ஸ்தாபித்து இந்த அம்பாளுக்கு இங்கு கோவிலைக் கட்டி குடமுழுக்கு செய்து வருடந்தோறும் திருவிழாவை நடத்தியும் வந்த பலருள் இன்றும் உயிரோடு இருப்பவர்கள் ஒருசிலரே என்னையும் சேர்த்து. மொத்தத்தில் இந்த ஊரில் வாழும் பெரும்பாலோனோர் தமிழகம் முழுவதில் இருந்து வந்து இந்தப் பஞ்சாலையில் பணியில் சேர்ந்து இங்கு குடி அமர்ந்தவர்களே. அப்படியிருக்க, இப்போது வேண்டுமானால் பக்கத்துக் கிராமங்களில் இருந்து இங்கு வந்து குடியிருந்து கொண்டு; இந்த ஊர் உங்களுக்கு சொந்தம் போலும் நாங்கள் எல்லாம் வெளியூர் போலவும் சிலர் பேசுவது தான் என்போன்றோருக்கு மிகவும் வருத்தம் தருகிறது. எனக்கு நன்குத் தெரியும்; இது போன்ற நல்ல காரியங்களை உண்மையாக, நேர்மையாக செய்பவர்களை இங்குள்ள ஒருசிலரைப் போன்றோர் நதிமூலம், ரிசிமூலம் பார்த்து அவர்களின் முயற்சிக்கு முட்டுக் கட்டையாக விளங்குவீர்கள் என்று அதற்கெல்லாம் பயப்படவில்லை பின்வாங்கவும் இல்லை; என்பதைக் கூறிக்கொள்கிறேன். நான் பிறந்தது தூத்துக்குடி. ஆனால், நான் பெரும்பாலும் எனது வாழ்நாளை இங்குதான் வாழ்ந்து கழித்திருக்கிறேன். இதுதான் எனது ஊர்; இந்த மண்ணிலேதான் எனது கட்டை வேகும்”  என்று சற்று உணர்ச்சிபொங்கப் பேசினார் சுப்பையா.

அப்படியே அமைதியாக அனைவரும் கேட்டுக் கொண்டிருந்த நேரம் பார்த்து வில்லங்கம் மட்டும் தலைவரே.  “இவரப் பேசச்சொன்னா?. இவர் என்னமோ ஏதேதோப் பேசுகிறார், என்னது?” என்றார்.

உடனே தலைவர், “எல்லாம் விசயமாகத்தான். நீ சும்மா இரு. அவர் பேசுவதில் உண்மை இருக்கிறது. அவைகளை நானும் கேள்விப்பட்டேன். நமக்கும் பக்கத்து கிராமம்தானே சொந்தம். ஆக சுப்பையாசார் சொல்வது போல் இந்த ஊர் அனைவருக்கும் பொதுதான். இவர்களைப் போன்ற படித்தவர்கள் பலரும் வெளியூரில் இருந்து வந்து இங்கு பலசேவைகளைச் செய்ததால், செழித்ததுதான் இந்த ஊர். 1947 -க்கு முன்பு அந்தக் காலத்திலேயே இது வெறும் நரியும், நாயும் சுத்தித் திரிந்த ஈச்சம்காடு. அதெல்லாம் உன்போன்ற இளசுகளுக்குத் தெரியாது. வேண்டுமென்றால்  உங்க அப்பனிடம் சென்று கேள்” என்று வில்லங்கத்தின் வாயிற்கு நிரந்தரமான ஒரு பூட்டைப் போட்டார் தலைவர்.

“சார், நீங்க பேசுங்க!” என்றார் தலைவர். அதற்கு சுப்பையா, “நன்றி, நான் சொல்லவந்ததை தாங்களே கூறிவிட்டீர்கள். சரி விசயத்திற்கு வருகிறேன். வழக்கம்போல் எங்களுடைய மண்டகப்படியைச் சிறப்பாக நடத்தி விடுகிறோம். அதோடு அம்பாளுக்கு வெள்ளிகாப்பு செய்யும் பணியும் முடிந்து விடும்.”

தாங்கள் கூறியபடி அம்பாளுக்குத் தங்கள் மண்டகப்படி அன்று அபிசேக ஆராதனையோடு, வெள்ளிக்காப்பும் சாத்தப்படும் என்ற உறுதியையும் கூறி நிறைவு செய்தார்.

கூட்டம் முடிந்து. வீடு திரும்பிய அவர் அந்தக் காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார்.

மீனாக்ஷி அம்மாளின் வீட்டின் முன்பாக "ஆம்புலன்சு" வண்டி. அதைச் சுற்றி மக்கள் கூட்டம். சற்றே நிலை தடுமாறி அருகில் வந்து பார்த்தவருக்குப் பெரும் அதிர்ச்சி.. மீனாக்ஷி அம்மாளுக்கு "ஹார்ட் அட்டாக்" அதுவும் இது இரண்டாவது முறை.

இடிந்தேபோனார் சுப்பையா!. சற்று முன்னர் நன்றாக இருந்தார்களே “தாயே முத்துமாரி! எங்கள் பேசும் தெய்வத்தைக் காப்பாற்று” என்று வேண்டிக்கொண்டவர் கண்ணீர் ததும்பினார்.

அன்று முழுவதும் அன்ன ஆகாரம் இன்றி கவலையில் தோய்ந்திருந்தார் சுப்பையா. அவரின் மனைவி, எவ்வளவோ ஆறுதல் கூறியும் இவர் தேறுவதாக இல்லை.

தனது கணவருக்கு ஆறுதல் கூறினார் சுப்பையாவின் மனைவி முத்துலட்சுமி டீச்சர்.

“திருமணமாகி இங்கே வந்து, பிள்ளைகள் பெற்று அவர்களையெல்லாம் வளர்த்து; படிக்க வைத்து; திருமணம் செய்து கொடுத்து; பேரன் பேத்திகளை பார்க்கும் வரைக்கும்; தனக்கும் தன் குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டில் இருந்துக் கொண்டு ஒரு தாயாய் இருந்த மீனாக்ஷி அம்மாளுக்கு ஒன்றும் நடக்காது” என்று தன்னை அவர் தேற்றிக் கொண்டார்.

எது எப்படியோ, பிறந்தவர் ஒருநாள் மாண்டுதானே போக வேண்டும். சூரியன் மறைந்தது, சுடர் ஒளியும் பிரிந்து. மீனாக்ஷி அம்மாளும் மறைந்து காரியங்களும் முடிந்து மூன்று நாட்கள் ஆகியும் விட்டது.

சுந்தரம் தனது தந்தையை தன்னோடு அழைத்துச் செல்ல அவசரம் அவசரமாகப் பயணக் கடவுச் சீட்டு (Passport ) வெளிநாட்டு நுழைவு அனுமதி சீட்டு ( VISA ), விமானப் பயண சீட்டு (Flight ticket) என்று இவைகளை வாங்குவதில் மும்மரமாக இருந்தான்.

அப்போது சுந்தரத்தின் தந்தை தன் மகனிடம் கூறினார்.

“தம்பி, உன் அம்மா கடைசி நிமிடத்தில் என்னிடம் பேசும்போது, கவலைப்படாதீர்கள்; நான் போய்விட்டால் என்ன?, தம்பி சுந்தரம் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்றாள். அவள் இறக்கும் தருவாயிலும் என்னைப் பற்றிய அக்கரைதான்” என்று தனது வறண்டு போன விழிகளில் நீர் ததும்ப தழுதழுத்த குரலில் கூறினார். 82 வயது நிரம்பியவர் சுந்தரத்தின் அப்பா.

“தாங்கள் எதையும் நினைத்துக் கவலைப்படாதீர்கள். நாங்கள் இருக்கிறோம் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம்” என்றான் சுந்தரம்.

“இன்னொரு முக்கியமான விஷயம்; உன் அம்மாவின் விருப்பப்படி முத்துமாரி அம்பாளுக்கு வெள்ளிக்காப்பு செய்ய முன்தொகையாக போன வருசம் நீயும் ஒரு தொகையை கொடுத்தாய் அல்லவா?. ஆனால் அது இன்னும் செய்து முடிந்தபாடில்லை. இன்னும் கொஞ்சம் பணம் தேவைப் படுகிறது அதற்கு கூட உள்ளூர், வெளியூர் என்ற பெரும் சர்ச்சை எல்லாம் மகாசபைக் கூட்டத்தில் வந்து விட்டது. இருந்தும் உன் அம்மா கொடுத்த தைரியத்தில் சுப்பையா அண்ணனும் (சுந்தரம் அப்படித்தான் அவரை அழைப்பான்) கோவில் மகாசபைக் கூட்டத்தில் இந்த வருடமே அம்பாளின் வெள்ளிக்கவச வேலைகளை முடித்து விடுவதாக உறுதிகூறி வந்துவிட்டார். ஆக, ஆரம்பித்து வைத்தது உன் அம்மா,” என்று சுந்தரத்தின் அப்பா சொல்லி முடிக்கும் முன்பே. “சரி அப்பா, அதனால் என்ன நாமே அந்த மீதத்தொகையையும் தந்து அம்பாளின் வெள்ளிக்கவச வேலையை பூர்த்தி செய்து விடுவோம்” என்று கூறினான் சுந்தரம்.

“எப்படியோ உன் அம்மாவின் ஆசையும் நிறைவேறும், அவளின் ஆத்மாவும் சாந்தியடையும்” என்று கூறி; இருவரும் அப்போதே பக்கத்து வீட்டிற்குச் சென்று, சுப்பையாவைக் கண்டு, தேவையான மீதத் தொகையென; அவர்கூறிய ரூபாய் 36 ஆயிரத்தை எண்ணிக் கொடுத்தார்கள்.

அப்போது சுப்பையா சொல்வார், “தம்பி சுந்தரம் இது அம்மாவின் ஆசை; நான் கடைசியாக அவர்களிடம் பேசும் போது கவலைப் படாதீர்கள் தம்பியிடம் பேசி மீதத்தையும் தரச் சொல்கிறேன் என்று உறுதியாக சொன்னார்கள்.
இப்போது அம்மா சொன்னபடியே செய்துவிட்டார்கள்; ஆனால் இதை அவர்கள் இருந்து கொடுக்கும் முன் அந்த அம்பாள் அழைத்து கொண்டு விட்டாளே” என்று கூறியபடியே கண்ணீர் கன்னங்களில் தாரைத் தாரையாய்  வடிய; கரங்கள் இரண்டும் நடுங்க சுந்தரம் தந்ததொகையைப்  பெற்றுக்கொண்டார்.

தனது தாய் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, அவரின் ஆத்மாவையும் சாந்தமடையச் செய்து, தனது தந்தையோடு சுந்தரம் ஊருக்குப் புறப்பட்டான்.

விமானம் வான்வெளியில் பறந்தது. அவன் அங்கு பார்த்த மேகக் கூட்டங்களுக்குள் இருந்து தன் அம்மா மீண்டும் வரமாட்டாளா? அல்லது கையசைக்கவாது மாட்டாளா? என்ற இனம் புரியாத ஏக்கம் அவனை ஆட் கொண்டது. 

எத்தனை வயதானாலும் பெற்றவள் இல்லையா! தாய் இல்லையா! தனது உதிரத்தை பாலாக்கித் தந்தவளில்லையா! எத்தனை  நாட்கள், தான் கண்ணயராது நம்மைக் காத்திருப்பாள்!! என்ற எண்ணம் பலவாறு மோதி கண்களில் கண்ணீர் ஆறாய்ப்பெருகி  ஓடியது. ஓடட்டும் அது தானே அவன் இதயத்தின் கனத்தைக் குறைக்க வல்லது.  தனது தந்தையோடு விமானத்தில் அமர்ந்திருந்தவன் சிந்தை மட்டும், அவன் அம்மாவின் மறைவு நாள் நிகழ்ச்சியில் மட்டுமே உழன்றுக் கொண்டிருந்தது.
 
தனது தாயை தான் வாழும் நாட்டிற்கு அழைத்து சென்று கவனித்துப் பார்க்க ஆசைப் பட்டவன் சுந்தரம். ஆனால் அது கடைசிவரை நிறைவேறாமல் போய்விட்டது.

தாய் இறந்த அன்று ஊரே கூடி நின்று, “ அம்மா! அம்மா!! எங்களைவிட்டு சென்றுவிட்டீர்களே; இனி யாரிடம் போவோம்?”  என்று கதறி அழுததை எண்ணிப்பார்த்த சுந்தரம், தனது தாய் எவ்வளவு உயர்ந்தவள் இப்படி ஒரு தாயிற்கு மகனாகப் பிறக்க நாம் எவ்வளவு புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று அந்த சோகத்திலும் ஒரு மயக்கம் கொண்டான்.

அத்தனை நினைவுகளும் அவன் இதயத்தை இறுக்கிப் பிழிந்த நேரத்தில் தான் தனது அம்மாவிற்கு  முதன் முதலில் வாங்கித்தந்த. தனது அம்மாவிற்கு மிகவும் பிடித்த சந்தனமும் குங்குமமும் கலந்த நிறமுள்ள அந்தப் பட்டுப்புடவையும் அவளின் உடலோடு சேர்த்து அக்கினிக்கு வார்த்த அந்த துயரக் காட்சி மனதில் மின்னலாய்த் தோன்றி மறைந்தது. இதயத்தில் இடியாய் இறங்கியது.

அவனையும் மீறி சுந்தரம் துக்கம் தாங்காமல் சத்தமிட்டு அழுது விட்டான். அவன் அழும் சத்தத்தில் கண்விழித்த அவனது தந்தை.  “சரி, அழுகாதே! ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டோர் வருவதில்லை" தைரியமாக இரு. என்று சுந்தரத்தின் கைகளை இறுக்கிப் பிடித்தார்.

இருந்தும், தனது அம்மாவை நினைத்து மீண்டும் மீண்டும் அழுதபடியே விமானத்தில் பயணமானான் சுந்தரம்.    

சில மாதங்களுக்கு பிறகு சுப்பையா கிளார்க் அனுப்பிய  ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் வெள்ளிக்கவசம் பூட்டிய படம் ஒன்றை பெற்று இன்றும் அதை வீட்டு பூஜை அறையிலே வைத்து வணங்கிவருகிரார்கள் சுந்தரம் குடும்பத்தினர்.

“தனக்கு மட்டும்தான் உறவு என்று கொள்ளமுடியாத ஓர் உயரிய தெய்வீக உறவு உனது உறவு அம்மா. உன் நினைவுகள் என்றும் என் உடல், உதிர அணுக்கள் ஒவ்வொன்றிலும் மட்டும் அல்ல என் ஆத்மாவிலும் நிலைத்து இருக்கும். இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு அம்மாவாக வேண்டும். இறைவியிடம் வேண்டிக்கொள்கிறேன்”

ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கப்பூர்


மாணவர் ஆலாசியம் அவர்களின் எழில்மிகு தோற்றம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
சிறுகதை

தலைப்பு: இரு துருவங்கள்

என்ன சமையல் பண்ணட்டும் இன்னிக்கு?

ஏதாவது பண்ணு.

தினமும் நானேதானே யோசிக்கிறேன்.  இன்னிக்கு நீங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்.

சமையல் விஷயம்லாம் எங்கிட்ட கேட்காதே.  எது செஞ்சாலும் சாப்பிடற மாதிரி இருந்தா சரி.

ம்க்கும், அது சரி.  என்ன படம் இது?  இந்த மாதிரி படத்தையெல்லாம் எப்படித்தான் பொறுமையா பார்க்கறேளோ?  ஏதாவது வித்தியாசமான படமா பார்க்க மாட்டீங்களா?

பின்ன நீ பார்க்கிற மாதிரி அறுவை படத்தையெல்லாம் பார்க்கச் சொல்றியா?
!!!!!!!!!!!!!!!
---------

என்ன படம் முடிஞ்சுடுச்சா?

ம்ம்

பவானி மே மாசம் வரேன்னு சொல்லிருக்கா.

எந்த பவானி?

ம்ம், உங்களுக்கு எத்தனை பவானியைத் தெரியும்?  நான் சொல்றது என் தங்கை.



அப்புறமா நான் ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன்.

எதுக்கு?

சும்மாத்தான்.  ஒரு கதைக்கு 100 $ கிடைக்கும்.  அதெல்லாம் சேர்த்து வச்சு ஒரு வீடு வாங்கலாம்னுதான்.

இல்ல எழுதி என்ன பண்ணப்போறேன்னு கேட்டேன்.

ப்ளோக்ல போடத்தான்.

அப்படின்னா?


கிழிஞ்சுது.  வலைப் பத்திரிக்கைன்னு வெச்சுக்கோங்களேன். 

ஆமா வீட்டுக்காரன் வாடகை வாங்கிட்டுப் போயிட்டானா?

ம்ம்ம்

இந்த மாசம் கரண்ட் பில் எவ்ளோ வந்துருக்கு?

நான் பேசிட்டிருக்கறது ஏதாவது காதுல விழுதா?

சரி முதல்ல சாப்பாடு எடுத்து வை, பசிக்குது.

-----------------

நான் சொல்லிக்கிட்டிருந்ததைப் பத்தி நீங்க எதுவும் சொல்லலியே?

ஏண்டி மனுசனை நிம்மதியா இருக்க விடாம தொணதொணன்னு உயிரை வாங்கறே?  என்ன சொல்லிக்கிட்டிருந்த?

ம்ம் கதை எழுதறதைப் பத்தி.

எப்ப எழுதுவ?

அலுவலகத்தில சும்மா இருக்கும்போதுதான்.

உன்னையெல்லாம் எப்படி வேலைக்கு வெச்சுக்கராங்கன்னே புரியலை!

ஹலோ, வேலைலாம் முடிச்சுட்டுதான் இந்த வேலை பண்ணுவேன்.  அது என்னோட பாஸ்க்கும் தெரியும்.

சரி அத விடுங்க.  உங்களுக்கு நான் லிங்க் அனுப்பறேன், படிப்பீங்களா?

எனக்கு இதுக்கெல்லாம் நேரம் கிடையாது.

ஆமாமா, உங்க மெயில் கூட நான்தானே பார்க்கறேன்.

ஆமா பவானி எப்ப வரான்னு சொன்ன?

ம்ம், மே மாசம். சரி பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வரவா?

எனக்கு இதெல்லாம் படிக்க பொறுமை இல்லன்னு உனக்குத் தெரியாதா?  நீ வேணும்னா படிச்சுச் சொல்லு.

எப்படிக் கேட்பீங்க?  இதோ இப்ப கேட்டுக்கிட்டிருக்கிற மாதிரிதானே?  அதுக்கு நீங்க படிக்கவே வேணாம்.

வடிவேலு இப்ப நல்லா குண்டாயிட்டான் இல்ல?

ம்க்கும், எனக்கு இது ரொம்ப முக்கியம்.

எங்கடி எழுந்து போற?

நிம்மதியா 2 மணி நேரம் படுத்துத் தூங்கப்போறேன்.
-------------------------------------------------------------------------
ஆக்கம்: திருமதி உமா, தில்லி


வாழ்க வளமுடன்!

52 comments:

  1. உள்ளேன் ஐயா!

    மிகவும் அற்புதமாக வடிவமைத்த கட்டுரை. நன்றிகள் பல வடிவமைத்த அன்புள்ளகளுக்கு.

    ReplyDelete
  2. உள்ளேன் ஐயா!

    அன்புள்ளகளுக்கு. முக்கியமா செய்தி ஒன்று உள்ளது . வாசுதேவநல்லூரில் அருள்மிகு மாரிஅம்மன் கோவில் உள்ளது . அக்கோவில் மத சதிகாரர்களால் சுமார் பத்து வருடதீர்க்கு மேலாக பத்து நாட்கள் மிகவும் விமர்சியாக நடக்கும் பூக்குழி திருவிழா நடக்காமல் போகி விட்டது. பின்னர் பல்வேறு போராட்டதீர்க்கு பின்னர் இப்பொழுதுதான் வரும் தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது மிகவும் விமர்சியாக .

    திருநெல்வேலிக்கே பெயர் போன சாதி கலவரத்தை தூண்டி விட்டு திருவிழாவையே நிறுத்தியவர்களை என்ன வென்று கூறுவது

    அண்ணன் தம்பிகளை அநியாயமாக தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மாக்களை அம்மன் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. ஐயா !

    400 மில்லியன் ரியால்
    (நமது பணத்தில் 5oo கோடி)
    மதிப்பில் ஆன இதய ஆஸ்பத்திரியின் பைனல் கம்மிச்சிநிங் வேலை நடக்குது.

    எல்லா Engg சிஸ்டமும் சரியா என்று பார்த்து பதில் கூறும் முக்கிய பொறுப்பு வந்து அமைந்தமையால் இடையில் சரியாக வகுப்பீர்க்கு வரமுடிய வில்லை, மேலும் பொறுமையாக கூட கருத்து கூற முடியவில்லை சகோதர்களே!

    ***

    குற்றம் உள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும் என்பதனால் இதுவரைக்கும் நடந்தமைக்கு நான் வருந்தியது இல்லை.

    ஏனெனில் தவறாக ஒன்றும் நான் கேட்க வில்லையே?

    உரிமை உள்ள காரணத்தால் தான் உரிமையுடன் கேட்டது.

    நன்றாக நடக்க வில்லையே என்ற ஆதங்கம் இருந்தது அதுவும் இப்பொழுது மாற தொடங்கி விட்டது.

    காரணம் என்னவென்றால் தனது சொந்த சரீர சுகதீர்க்காக வாழுகின்றவர்களின் உறவுகள் அமைவதை விட அமையாமல் போனதீர்க்கு

    "
    மிகவும் சந்தோசமே!".

    மற்றவருக்கு உதவ வேண்டும், உதவிகரமாக இருக்க வேண்டும் என்பது தானாக வரவேண்டும் அப்படி ஒரு சிந்தனை இல்லாதவர்கலீடம் போகி குடும்ப ஒற்றுமை என எதீர்பார்தது எமது முட்டாள் தனம் ஒழிய அவர்களை குறை கூறி பயன் ஒன்றும் இல்லை.

    இந்த பிறப்பு முடிந்து போகும் பொழுது அனுபவீத்த காமம், அழகு, குரோத்தம், பொன், பொருள் என எல்லாத்தையும் தன்கூட அல்லவா கொண்டு போக போகின்றனர்.

    பாமரர்கள் !!!!

    ReplyDelete
  4. வாத்தியார் எழுதிய கதையோ என்று நினைத்துப் படித்தால் அப்புறம் தான் தெரிந்தது ஹாலாஸ்யம் சார் என்பது. அப்ப‌டியே வாத்தியாரின் பாணி கை வரப்
    பெற்றுவிட்டார்.கதை அருமை ஹாலாஸ்யம் சார்! இது போன்ற மனதை மயில் தோகையை வைத்து வருடக்கூடிய கதைகள் இப்போதெல்லாம் வெகு ஜனப்பத்திரிகைகளில் வருவதில்லை.நன்றி.

    தாங்கள் என் மேல் வருத்த‌ப்பட்டு எழுதிய பின்னூட்டத்திற்கு என் பதிலையும்
    பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

    டெல்லி உமாஜியின் மனக் குமுறலைக் காண்பிக்கும் ஆக்கம் அருமை.
    இதையாவது அவர்கள் அகத்து மாமாஜி வாசிக்கட்டும். நிகழ்ச்சி கற்பனை என்றால் நடை சிறப்பாக உள்ளது.ந‌ன்றி

    ReplyDelete
  5. அன்புடன் வணக்கம்
    என்ன ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை அழகாக சொல்லி இருக்கறீர்கள் சபாஷ் !!!
    எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி.!!!!அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் உன் காலுக்கு செருப்பாக இருக்க வேண்டும்
    நீ என்னை மிதிக்க அல்ல நான் உன்னை தாங்க !!!thanks Mr alasiyam..

    ReplyDelete
  6. இரண்டு கதைகளும் அருமை ஐயா

    ReplyDelete
  7. ஆசிரியருக்கு வணக்கம்,

    ஐயா! எனது ஆக்கத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி....

    உமா! சும்மா... அசத்திட்டீங்க.....
    மிகவும் கேசுவலாக.... அதில் ஆயிரம் அர்த்தங்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. உமா அக்கா சூப்பர்... ஆனா ஆலசியம் சார் ஆயிரம் அர்த்தம் இருக்குனு சொல்லுறாரு தான் புரியல....

    நன்றி

    பாண்டியன்

    ReplyDelete
  9. டெல்லி உமாஜியின் அங்கலாய்ப்பை கொட்டியவிதம் ரொம்பவே யதார்த்தம். பாவம்..என்ன செய்வது கொடுத்துவைத்தது அவ்வளவுதான் .உடனே இனாம் வாங்கின வடிவேலு மாதிரி ..ஹி..ஹி..ங்காதேள். நான் பாவம்ன்னு சொன்னது உங்க அகத்து மாமாவை. உங்க அகத்து மாமா வெகு காலத்திற்கு முன்னாலே தொலைத்ததை நீங்க ரொம்ப பிரயத்தனப் பட்டு கண்டுபிடிக்கிற விதம் சம்பாஷணையின் கடைசி ரெண்டு வரிகள்ளே அற்புதமா சொல்லியிருக்கேள்.

    ReplyDelete
  10. திரு. ஆலாசியம் அவர்கள் கதை அற்புதம். எழுதிய விதமும் வெகு ஜோர். படித்து முடிக்கும்போது அடடா.. இதுவே உண்மை கதையாய் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்..என்று மனது ஏங்கிற்று. ம்ம்..ம்ம்.. இந்த மாதிரி நல்ல உள்ளாம் படைத்தவர்களைஎல்லாம் கதைகளில் தான் பார்க்கமுடிகிறது. ஆனால் நான் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வெள்ளிக்காப்பு சாத்தும் நிகழ்ச்சியை ...இப்படி சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது... கரங்கள் இரண்டும் நடுங்க சுந்தரம் தந்ததொகையைப் பெற்றுக்கொண்ட சுப்பையா உடனே செயலில் இறங்கி ஆவன செய்து முடித்துவிட்டார். சாத்திய வெள்ளிக்காப்பு கோலத்தில் இப்போது மீனாக்ஷி அம்மாளே சாட்சாத் அந்த அம்மனாக சுப்பையா கண்களுக்கு தெரிந்தது. ...
    வாழ்த்துக்கள். ஆலாசியம் சார். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  11. அருமையான கதைகள்.

    ஆக்கம் மிகவும் நன்று.

    ReplyDelete
  12. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    இரண்டு கட்டுரைகளுமே அசத்தலாக உள்ளன. குறிப்பாக இரு துருவங்கள்
    சூப்பர் கட்டுரை.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  13. ஆலாசியம் சாரின் கதை அருமை..இயல்பான சம்பவங்களைக் கோர்த்து ஒருகோவில் திருவிழா ஸீன், ஒரு பஞ்சாயத்து ஸீன், செல்வாக்கும் பக்தியும் மிகுந்த மீனாட்சி அம்மாளின் கடைசி கட்டங்கள்-அபிலாஷைகள், ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வலம், வாக்கு தவறாமைக்கு சுந்தரத்துக்கு அப்பாவுடன், சுப்பையாவுடன் ஒரு ஸீன், விமானப் பயண ஸீன் என்று பல சீன்களை மனதில் கொணர்ந்து விடுகிறார்..இவ்வளவு அதிகமான சம்பவங்களை இதற்கு மேல் குறுக்கி சொல்வது கடினம்தான்..அதை சிறப்பாக செய்திருக்கிறார் ஆலாசியம் சார்..பெயருக்குத்தான் சிறுகதையே தவிர உண்மையில் இது பெருங்கதைதான்.இதைச் சிறுகதையாக்க எடிட்டிங்கில் மிகுந்த சிரத்தை எடுத்திருப்பார்..வெளியாகியிருக்கும் வரிகளில் எங்காவது ஒரு வரியைக் குறைத்தால் நீளம் குறையுமே என்று முயன்றாலும் சம்பவத்தின் தன்மையை இந்த அளவில் கூட சுருங்கச் சொல்ல முடியாது.. சிறுகதை எழுதுவதில் உள்ள பெரிய சிரமமாக நான் இதைத்தான் நினைக்கிறேன்..இதில் வரும் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒவ்வொரு சிறு கதையாக்க முடியும்..அப்போதுதான் அந்தந்த சம்பவங்கள்,பாத்திரங்கள் உணர்ச்சி மிகுந்த வசனங்கள் என்று முழுப் பரிணாமத்துடன் கொண்டு வர எதுவாக இருக்கும்..வாராவாரம் இதே கதையையே தொடர்கதையாக்கி வெளியிட வேண்டியதாகிப் போய்விடும்..அதிலிருந்து தப்பித்து வேலையை எளிதாக்கிக் கொண்டிருக்கிறார் அன்பர் ஆலாசியம்..அவருக்கு எனது பாராட்டுக்கள்...

    ReplyDelete
  14. நேற்றைய கலக்கலைத் தொடர்ந்து இன்றும் வெற்றிகரமாக தனது முத்திரையைப் பதித்திருக்கும் ஒரு துருவமாக விளங்குபவரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்..ஒவ்வொரு முறையும் ஒரு புது உத்தியைக் கையாள்கிறார்..நல்ல ஆர்வம்..வாழ்த்துக்கள்..'யாரது பவானி' என்று கேட்கும் ஆள் அப்புறமா 'பவானி எப்போ வர்றா?'ன்னு கேட்கும் போது அவருக்கு கவனம் எங்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது..நல்ல முயற்சி..சிறப்பு.

    ReplyDelete
  15. இரண்டு கதைகளும் அதனதன் வகையில் நன்று என்றுதான் சொல்ல வேண்டும். ஆலாசியம் அவர்களின் கதை உண்மையிலேயே நெஞ்சை நெகிழச் செய்து விட்டது.

    ஜோதிடத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல் போகக் கூடாது. எழுத்துத் திறமை வெளிப்பட 3ம் இடம் அதன் அதிபதி மற்றும் புதன் ஆகியவர்களின் அருள் தேவைப் படும் என்று கூறப்படுகிறது. நல்ல சிந்தனைக் கென்று ஒரு வீடு கறபனை வளத்திற்கென்று இன்னொரு வீடு என்று கூட்டு முயற்சி தேவைப் படுகிறது. தனி மரம் தோப்பாகாது என்பது ஜோதிடத்திற்கும் பொருந்தும்.

    ReplyDelete
  16. //// kannan said...உள்ளேன் ஐயா!
    மிகவும் அற்புதமாக வடிவமைத்த கட்டுரை. நன்றிகள் பல வடிவமைத்த அன்புள்ளகளுக்கு./////
    பாராட்டுக்களுக்கு நன்றிகள் சகோதரா!

    ////திருநெல்வேலிக்கே பெயர் போன சாதி கலவரத்தை தூண்டி விட்டு திருவிழாவையே நிறுத்தியவர்களை என்ன வென்று கூறுவது
    அண்ணன் தம்பிகளை அநியாயமாக தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மாக்களை அம்மன் தான் பார்த்து கொள்ள வேண்டும்.////
    ஒளவைப்பாட்டிக் காலத்தே இதைப் பாட வேண்டிய அவசியம் இருந்தது......
    எத்தனை ஆயிரம் வருடங்கள் கழிந்தாலும்... எத்தனை மகாத்மாக்கள் பிறந்தாலும்..... எத்தனைப் பாரதி பிறந்தாலும்... எத்தனை அத்வைதம் சுடர்விட்டு ஒளிர்ந்தாலும்... இந்தக் கொடூரத்தை அழிக்க முடியாது... ஆண்டவனே முயன்று பார்த்துவிட்டான்.... சரி விடுங்கள் அந்த போதை நமக்கு ஏறாமல் இருந்தால் போதும்...

    //////ஏனெனில் தவறாக ஒன்றும் நான் கேட்க வில்லையே?
    உரிமை உள்ள காரணத்தால் தான் உரிமையுடன் கேட்டது.
    நன்றாக நடக்க வில்லையே என்ற ஆதங்கம் இருந்தது அதுவும் இப்பொழுது மாற தொடங்கி விட்டது.////

    தண்ணீர் இன்றித் தாமரை இல்லை... ஆனால் அந்தத் தண்ணீர் தாமரையில் ஒட்டாது... இன்னும் சொன்னால்.... இதை நினைத்து இரண்டுமே கவலை கொள்வதில்லை.. அப்படி கொண்டால் தண்ணீர் தெளியாது... தாமரையும் மலராது....

    காரணம் அவனன்றி யாரறிவார்! தெய்வத்தை நம்பும் யாவரும் நடந்த யாவையும் அவனின் ஏற்பாடு என்று உணர்தல் அவசியம் இல்லையா!
    நன்றி...

    ReplyDelete
  17. kmr.krishnan said...
    ///வாத்தியார் எழுதிய கதையோ என்று நினைத்துப் படித்தால் அப்புறம் தான் தெரிந்தது ஹாலாஸ்யம் சார் என்பது. அப்ப‌டியே வாத்தியாரின் பாணி கை வரப்
    பெற்றுவிட்டார்.கதை அருமை ஹாலாஸ்யம் சார்! இது போன்ற மனதை மயில் தோகையை வைத்து வருடக்கூடிய கதைகள் இப்போதெல்லாம் வெகு ஜனப்பத்திரிகைகளில் வருவதில்லை.நன்றி.
    தாங்கள் என் மேல் வருத்த‌ப்பட்டு எழுதிய பின்னூட்டத்திற்கு என் பதிலையும்
    பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். /////
    தங்களின் பாராட்டிற்கு நன்றிகள் சார்.... வருத்தம் போயிருச்சு சார்... அதுக்கு நீங்க ரொம்ப பெரிய வார்த்தையை சொல்லிருக்க வேண்டாம் சார்... அப்படின்னு வேறு உங்களுக்கும் பின்னூட்டம் அங்கேயே இட்டுள்ளேன்.... அறியாமல் பிசகு நடந்து இருந்தாலும்... பெரியவர்களை ஒரு இக்கட்டான நிலையில் வைத்து சட்டையைப் பிடித்த மாதிரி கேள்விகளை கேட்க மனம் ஒருபோதும் ஒப்புவதில்லை.... ஆகவே தாங்கள் மனத்தாங்கல் கொள்ள வேண்டாம்... தவறு இருப்பின் என்னை மன்னியுங்கள் சார்... நன்றி...

    ReplyDelete
  18. /////hamaragana said...

    அன்புடன் வணக்கம்
    என்ன ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை அழகாக சொல்லி இருக்கறீர்கள் சபாஷ் !!!
    எனக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி.!!!!அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் உன் காலுக்கு செருப்பாக இருக்க வேண்டும்
    நீ என்னை மிதிக்க அல்ல நான் உன்னை தாங்க !!!thanks Mr alasiyam..////


    ஆமாம் சார் இது ஒரு நெகிழ்ச்சியான ஒரு இனிய சம்பவம் தான்... பேசும் தெய்வங்களான தாய் தந்தை செய்த புண்ணியம் தான் இன்று இந்த மகனை காத்து நிற்கிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளேன்... பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சார்...

    ReplyDelete
  19. middleclassmadhavi said...


    இரண்டு கதைகளும் அருமை ஐயா


    பாராட்டிற்கு நன்றிகள் சகோதிரி...

    ReplyDelete
  20. /////bhuvanar said...உமா அக்கா சூப்பர்... ஆனா ஆலசியம் சார் ஆயிரம் அர்த்தம் இருக்குனு சொல்லுறாரு தான் புரியல.... நன்றி
    பாண்டியன்////


    பாண்டியன்.... கண்மணி அவள் கரம் பற்றும் வரை இது புரியாது... முதல் நாள் இரவில் கவிதை பாடுங்கள் கண்மணி அவள் துள்ளிக் குதிக்கிரளா?... இல்லை தூங்கி விழுகிராளா? என்று அப்போது புரியும்.... அந்தக் கதையில் உள்ள ஆயிரம் அர்த்தமும்... அதனாலேத் தானே என் போன்றோர் சிலருக்கு வகுப்பறையில் வந்து எழுத விருப்பம் இருக்கு... இங்கேயாவது அவைகளை படிக்க யாராவது இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு... அதுவும் சரிதான் பிறகு குடும்பத்தை யார் பார்ப்பது.....


    வாத்தியார் சொல்வார்... ஒன்னு ரயில்.. இன்னொன்னுத் தண்டவாளம்.... சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கோ ரொம்ப நல்லா இருக்கும்.... யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.. நன்றி...

    ReplyDelete
  21. /////G.Nandagopal said...

    திரு. ஆலாசியம் அவர்கள் கதை அற்புதம். எழுதிய விதமும் வெகு ஜோர். படித்து முடிக்கும்போது அடடா.. இதுவே உண்மை கதையாய் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும்..என்று மனது ஏங்கிற்று. ம்ம்..ம்ம்.. இந்த மாதிரி நல்ல உள்ளாம் படைத்தவர்களைஎல்லாம் கதைகளில் தான் பார்க்கமுடிகிறது. ஆனால் நான் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வெள்ளிக்காப்பு சாத்தும் நிகழ்ச்சியை ...இப்படி சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது... கரங்கள் இரண்டும் நடுங்க சுந்தரம் தந்ததொகையைப் பெற்றுக்கொண்ட சுப்பையா உடனே செயலில் இறங்கி ஆவன செய்து முடித்துவிட்டார். சாத்திய வெள்ளிக்காப்பு கோலத்தில் இப்போது மீனாக்ஷி அம்மாளே சாட்சாத் அந்த அம்மனாக சுப்பையா கண்களுக்கு தெரிந்தது. ...
    வாழ்த்துக்கள். ஆலாசியம் சார். தொடர்ந்து எழுதுங்கள்./////


    தாங்கள் எழுதியதுபோலும் எழுதி இருந்தால் அது நன்றாகத்தான் இருக்கும்... ஆனால் அந்த வேலை சில மாதங்கள் கழித்துத் தான் முடிவுற்றது...



    இந்த மீனாக்ஷி அம்மாள் மகன் ஹாலாஸ்ய சுந்தரத்தின் .... சித்தத்தில்... ரத்தத்தில்... என் அன்னையின் நினைவுகள் ஊசலாடிய பொழுது... கண்களில் நீர் வடிய... சோகத்தில் இந்த சுரம் பிரித்தேன்... அதனாலே இது சற்றே உயிர் பெற்றுள்ளது.... உங்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.... பிறர் மெச்சும் படி வாழ்ந்து சென்ற அன்னையின் பெயரை காப்பாற்றினாலே நான் செய்யும் பெரும் காரியமாக இருக்கும்... நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  22. /////vprasanakumar said...


    அருமையான கதைகள்.
    ஆக்கம் மிகவும் நன்று.////


    பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  23. ////ARASU said...

    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    இரண்டு கட்டுரைகளுமே அசத்தலாக உள்ளன. குறிப்பாக இரு துருவங்கள்
    சூப்பர் கட்டுரை.
    அன்புடன், அரசு.////


    பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  24. //////minorwall said...


    ஆலாசியம் சாரின் கதை அருமை..இயல்பான சம்பவங்களைக் கோர்த்து ஒருகோவில் திருவிழா ஸீன், ஒரு பஞ்சாயத்து ஸீன், செல்வாக்கும் பக்தியும் மிகுந்த மீனாட்சி அம்மாளின் கடைசி கட்டங்கள்-அபிலாஷைகள், ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வலம், வாக்கு தவறாமைக்கு சுந்தரத்துக்கு அப்பாவுடன், சுப்பையாவுடன் ஒரு ஸீன், விமானப் பயண ஸீன் என்று பல சீன்களை மனதில் கொணர்ந்து விடுகிறார்..இவ்வளவு அதிகமான சம்பவங்களை இதற்கு மேல் குறுக்கி சொல்வது கடினம்தான்..அதை சிறப்பாக செய்திருக்கிறார் ஆலாசியம் சார்..பெயருக்குத்தான் சிறுகதையே தவிர உண்மையில் இது பெருங்கதைதான்.இதைச் சிறுகதையாக்க எடிட்டிங்கில் மிகுந்த சிரத்தை எடுத்திருப்பார்..வெளியாகியிருக்கும் வரிகளில் எங்காவது ஒரு வரியைக் குறைத்தால் நீளம் குறையுமே என்று முயன்றாலும் சம்பவத்தின் தன்மையை இந்த அளவில் கூட சுருங்கச் சொல்ல முடியாது.. சிறுகதை எழுதுவதில் உள்ள பெரிய சிரமமாக நான் இதைத்தான் நினைக்கிறேன்..இதில் வரும் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒவ்வொரு சிறு கதையாக்க முடியும்..அப்போதுதான் அந்தந்த சம்பவங்கள்,பாத்திரங்கள் உணர்ச்சி மிகுந்த வசனங்கள் என்று முழுப் பரிணாமத்துடன் கொண்டு வர எதுவாக இருக்கும்..வாராவாரம் இதே கதையையே தொடர்கதையாக்கி வெளியிட வேண்டியதாகிப் போய்விடும்..அதிலிருந்து தப்பித்து வேலையை எளிதாக்கிக் கொண்டிருக்கிறார் அன்பர் ஆலாசியம்..அவருக்கு எனது பாராட்டுக்கள்...//////


    பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே! நான் முதலில் ஆசிரியரிடம் எனது பெயரைப் போடவேண்டாம் என்று தான் வேண்டிக் கொடிருந்தேன்.. இருந்தும் ஆசிரியர் பெயரை எழுதி விட்டார்கள்.... இருந்தும் இதைக் கதையாகவே நான் கற்பனை செய்து எழுதியதாக கூறியிருக்கலாம்.. மனதுக் கேட்கவில்லை.. ஒரு நல்லப் பெண்மணியைப் பற்றிய உண்மைச் சம்பவம் என்பதால்.... இதில் 99 விழுக்காடு உண்மை மேலே நண்பர் நந்தக்கோபாலருக்கு எழுதியது போல் அந்த மீனாக்ஷி அம்மாள் எனது அம்மா...... அதனால் தான் தாங்கள் கூறியது போல் இயல்பான சம்பவங்களின் கோர்வை ஒரு மணக்கும் மல்லிகையின் கோர்வையாய்.. அதுவாக வந்தது... இப்போது எனக்கும் புரிகிறது... உண்மையில் லகித்து அனுபவித்து எழுதுபவைகள் எளிதில் வெற்றி பெரும் என்று உங்களின் மனம் திறந்தப் பாராட்டுக்கு எனது நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  25. //////minorwall said...


    ஆலாசியம் சாரின் கதை அருமை..இயல்பான சம்பவங்களைக் கோர்த்து ஒருகோவில் திருவிழா ஸீன், ஒரு பஞ்சாயத்து ஸீன், செல்வாக்கும் பக்தியும் மிகுந்த மீனாட்சி அம்மாளின் கடைசி கட்டங்கள்-அபிலாஷைகள், ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வலம், வாக்கு தவறாமைக்கு சுந்தரத்துக்கு அப்பாவுடன், சுப்பையாவுடன் ஒரு ஸீன், விமானப் பயண ஸீன் என்று பல சீன்களை மனதில் கொணர்ந்து விடுகிறார்..அதிலிருந்து தப்பித்து வேலையை எளிதாக்கிக் கொண்டிருக்கிறார் அன்பர் ஆலாசியம்..அவருக்கு எனது பாராட்டுக்கள்...//////


    பாராட்டிற்கு நன்றிகள் நண்பரே! நான் முதலில் ஆசிரியரிடம் எனது பெயரைப் போடவேண்டாம் என்று தான் வேண்டிக் கொடிருந்தேன்.. இருந்தும் ஆசிரியர் பெயரை எழுதி விட்டார்கள்.... இருந்தும் இதைக் கதையாகவே நான் கற்பனை செய்து எழுதியதாக கூறியிருக்கலாம்.. மனதுக் கேட்கவில்லை.. ஒரு நல்லப் பெண்மணியைப் பற்றிய உண்மைச் சம்பவம் என்பதால்.... இதில் 99 விழுக்காடு உண்மை மேலே நண்பர் நந்தக்கோபாலருக்கு எழுதியது போல் அந்த மீனாக்ஷி அம்மாள் எனது அம்மா...... அதனால் தான் தாங்கள் கூறியது போல் இயல்பான சம்பவங்களின் கோர்வை ஒரு மணக்கும் மல்லிகையின் கோர்வையாய்.. அதுவாக வந்தது... இப்போது எனக்கும் புரிகிறது... உண்மையில் லகித்து அனுபவித்து எழுதுபவைகள் எளிதில் வெற்றி பெரும் என்று உங்களின் மனம் திறந்தப் பாராட்டுக்கு எனது நன்றிகள் நண்பரே!

    ReplyDelete
  26. ////ananth said...


    இரண்டு கதைகளும் அதனதன் வகையில் நன்று என்றுதான் சொல்ல வேண்டும். ஆலாசியம் அவர்களின் கதை உண்மையிலேயே நெஞ்சை நெகிழச் செய்து விட்டது.

    ஜோதிடத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல் போகக் கூடாது. எழுத்துத் திறமை வெளிப்பட 3ம் இடம் அதன் அதிபதி மற்றும் புதன் ஆகியவர்களின் அருள் தேவைப் படும் என்று கூறப்படுகிறது. நல்ல சிந்தனைக் கென்று ஒரு வீடு கறபனை வளத்திற்கென்று இன்னொரு வீடு என்று கூட்டு முயற்சி தேவைப் படுகிறது. தனி மரம் தோப்பாகாது என்பது ஜோதிடத்திற்கும் பொருந்தும்./////


    நண்பர் ஆனந்த்... தாங்கள் நலம் பெற்று வந்ததில் மிக்க மகிழ்ச்சி.. தங்களின் பாராட்டிற்கும் நன்றிகள்... ஜோதிடக் கூரையும் கூறி பாராட்டியதற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  27. சார் என் கதையை வெளியிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  28. ஆலாசியம், அருமையாக உங்கள் உணர்வுகளைக் கலந்து எழுதியுள்ளீர்கள். சுந்தரம்னு பேரைப்பார்த்தவுடனே தெரிந்துவிட்டது இது உங்களின் தாயாரைப் பற்றி என்று. படித்து முடித்ததும் இது மாதிரி தாய் கிடைக்க நீங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது.

    ReplyDelete
  29. கண்ணன் உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  30. டெல்லி உமாஜியின் மனக் குமுறலைக் காண்பிக்கும் ஆக்கம் அருமை.
    இதையாவது அவர்கள் அகத்து மாமாஜி வாசிக்கட்டும். நிகழ்ச்சி கற்பனை என்றால் நடை சிறப்பாக உள்ளது//

    தங்கள் பாராட்டுக்கு நன்றி. கொஞ்சம் அனுபவம் / கொஞ்சம் கற்பனை எல்லாம் சேர்ந்ததுதானே கதை. எங்காத்து மாமா இதையும் படிக்க மாட்டார். படிப்பில அவ்ளோ ஆர்வம் அவருக்கு. ஆனா இதப் படிச்சுதான் என்னோட மனக்குமுறல் அவருக்குப் புரியணும்னு இல்லை. நாங்கல்லாம் நேரடியாவே தாக்குதல் நடத்தி அப்பப்போ புரிய வைப்போமில்ல?

    ReplyDelete
  31. கணபதி சார், என்னோட கதையைப்பத்தி ஒண்ணும் சொல்லாம விட்டுடீங்களே?

    ReplyDelete
  32. இரண்டு கதைகளும் அருமை ஐயா//

    நன்றி மாதவி!

    ReplyDelete
  33. உமா! சும்மா... அசத்திட்டீங்க.....
    மிகவும் கேசுவலாக.... அதில் ஆயிரம் அர்த்தங்கள்...//

    ரொம்ப நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  34. உமா அக்கா சூப்பர்... ஆனா ஆலசியம் சார் ஆயிரம் அர்த்தம் இருக்குனு சொல்லுறாரு தான் புரியல....//

    நன்றி பாண்டியன். அவரு அனுபவஸ்தறு, உணர்ந்து சொல்லிருக்காரு. நீங்க என்ன சின்னப் புள்ளத்தனமா கேட்டுகிட்டு?

    ReplyDelete
  35. அங்கலாய்ப்பை கொட்டியவிதம் ரொம்பவே யதார்த்தம். //

    பாராட்டிற்கு நன்றி நந்தகோபால்.

    பாவம்..என்ன செய்வது கொடுத்துவைத்தது அவ்வளவுதான் .உடனே இனாம் வாங்கின வடிவேலு மாதிரி ..ஹி..ஹி..ங்காதேள். நான் பாவம்ன்னு சொன்னது உங்க அகத்து மாமாவை.//

    இனம் இனத்தோடதான் சேரும்னு சும்மாவா சொல்லிருக்கா பெரியவா எல்லாம்?

    ReplyDelete
  36. உங்க அகத்து மாமா வெகு காலத்திற்கு முன்னாலே தொலைத்ததை நீங்க ரொம்ப பிரயத்தனப் பட்டு கண்டுபிடிக்கிற விதம் சம்பாஷணையின் கடைசி ரெண்டு வரிகள்ளே அற்புதமா சொல்லியிருக்கேள்.//

    எதை? நிம்மதியை? ம்ம் பாதாளச் சிறையில் போட்டதுக்கு அப்புறமும் உங்க நக்கல் குறைய மாட்டேங்குது. நல்லா இருங்க.

    ReplyDelete
  37. அருமையான கதைகள். ஆக்கம் மிகவும் நன்று.//

    நன்றி பிரசன்னகுமார்.

    ReplyDelete
  38. குறிப்பாக இரு துருவங்கள் சூப்பர் கட்டுரை.//

    நன்றிகள் பல, அரசு.

    ReplyDelete
  39. ஒவ்வொரு முறையும் ஒரு புது உத்தியைக் கையாள்கிறார்..நல்ல ஆர்வம்..வாழ்த்துக்கள்.//

    தங்களின் பாராட்டிருக்கு நன்றி.

    ReplyDelete
  40. எப்போ வர்றா?'ன்னு கேட்கும் போது அவருக்கு கவனம் எங்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது//

    நினைச்சேன்.

    ReplyDelete
  41. இரண்டு கதைகளும் அதனதன் வகையில் நன்று என்றுதான் சொல்ல வேண்டும். //

    ஆனந்த் தங்கள் பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  42. சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்கோ ரொம்ப நல்லா இருக்கும்.... யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.//

    பாண்டியன், ஆலாசியத்தை இந்த அன்பு அக்காவும் வழிமொழிகிறேன். எப்ப கல்யாணப் பத்திரிகை அனுப்பப் போறீங்க?

    ReplyDelete
  43. ////Uma said...

    ஆலாசியம், அருமையாக உங்கள் உணர்வுகளைக் கலந்து எழுதியுள்ளீர்கள். சுந்தரம்னு பேரைப்பார்த்தவுடனே தெரிந்துவிட்டது இது உங்களின் தாயாரைப் பற்றி என்று. படித்து முடித்ததும் இது மாதிரி தாய் கிடைக்க நீங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது. /////


    உண்மைதான் என் அம்மாவின் சுண்டுவிரல் கூட என் மீது பட்டதில்லை... எதற்காகவும் என்னிடம் கோபிக்க மாட்டார்கள்.. நான் என் தாயின் அருமைப் பெருமை அத்தனையும் முழுமையாக ஆத்மா பிரிந்த அன்றே அல்ல அன்று தான் தெரிந்து கொண்டேன்... இந்த தாயின் கருவில் குடி கொள்ளத் தான் எனக்கு இந்த ஜென்மம் என்று.. அது தான் நான் வாங்கி வந்த வரமாக இருக்கும்.... நான் என் அம்மாவைக் கொண்டாடினேன் இருந்தும் இன்னும் நிறைய கொண்டாடாமல் விட்டுவிட்டேனே என்ற ஏக்கம் இன்றும் என்னுள் இருக்கிறது... அவர்கள் செய்த புண்ணியங்கள் தான் என் வாழ்க்கைக்கு காரணம் என்பதை நான் தீர்க்கமாக நம்புகிறேன்..... ஆத்மா கடைசியாக உடுத்தியிருந்த அல்லது கடைசி காலங்களில் அதிகமாக உடுத்தியிருந்த உடையில் தான் செல்லும் என்று ஒரு மகரிஷி கூறியதைப் படித்திருக்கிறேன்... அதனாலே என் அம்மாவிற்கு பட்டாடையோடு அனுப்பி வைத்தேன்.... அம்மா உயிரோடு இருக்கும் போதே.... பெரும்பாலு வெளிநாடுகளில் இருக்கும் சகோதர சகோதிரிகள் பெற்றவளைப் பார்க்கும் போதெல்லாம் முடிந்தளவுக்கு அவளை சந்தோசப் படுத்துங்கள்.... தாயை வணங்கியதால் தான் அசோகனும்... வீர சிவாஜியும்.... எம்.ஜி.ஆரும்... ஏன் நடிகர் திலகமும்... இளைய ராஜாவும்.... இன்னும் பலரும் வாழ்வில் உயர்ந்துள்ளார்கள் என்பதை வரலாறு கூறுகிறது... அதற்கு வேறு தகுதியே வேண்டாம்... சென்ற பிறகு திரும்ப மாட்டாள்.... என்பதையும் இந்தத் தருணத்தில் அனைவருக்கும் கூறிக் கொள்கிறேன்.... நன்றி உமா...

    ReplyDelete
  44. /////நன்றி பாண்டியன். அவரு அனுபவஸ்தறு, உணர்ந்து சொல்லிருக்காரு. நீங்க என்ன சின்னப் புள்ளத்தனமா கேட்டுகிட்டு?////


    ஹி..ஹி ...ஹி..

    ReplyDelete
  45. Aalasiam Sir,
    Kathai Super
    UMA Madem,
    Yarayo summa naalla ooravachi thovichiirukenga. Enakku karuthu puriyala.
    Yaaro sonaanga. Varigal sariyaaga gnabagam illai.
    "Thiruthapadaatha vaakiyangale enakku sontham.
    Athaye virumbugindren, tiruthum pani unakku thanthathanaal"

    Antha maathri ethaavathu neenga yaarukkavaathu thanthuvitengala.

    ReplyDelete
  46. //பாண்டியன், ஆலாசியத்தை இந்த அன்பு அக்காவும் வழிமொழிகிறேன். எப்ப கல்யாணப் பத்திரிகை அனுப்பப் போறீங்க?
    //
    Pandiyan Sir,

    Ungalukkana pathivin "Chittukoru mettu" Pandiyanin Rajiyathil oyalalla..

    ReplyDelete
  47. ஹி..ஹி ...ஹி..//

    ஆலாசியம், என்ன நீங்களுமா?

    ReplyDelete
  48. Enakku karuthu புரியல//

    ஐயகோ, நான் சொன்னது புரியவில்லையா? அது ஒரு மனைவிக்கும், கணவருக்கும் இடையே நடக்கும் பேச்சு. (அதாவது எவ்ளோ ஒற்றுமையா குடும்பம் நடத்தறாங்கன்னு எடுத்துரைப்பது).

    ReplyDelete
  49. ////தகடூரான் said...


    Aalasiam Sir,
    Kathai Super////


    நன்றி சோழரே!

    ReplyDelete
  50. ///Uma said...

    ஹி..ஹி ...ஹி..//

    ஆலாசியம், என்ன நீங்களுமா?////


    பின்னே! நானும் உங்களோடு தானே வகுப்பறையில் இருக்கேன்..

    ReplyDelete
  51. அன்புடன் வணக்கம் திருமதி உமா...
    எல்லார் வீட்டிலும் வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்...""""தினமும் நானேதானே யோசிக்கிறேன். இன்னிக்கு நீங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்."""" பெருமை பட வேண்டிய விஷயம் ஒன்று .இதை எல்லாம் சகித்து கொண்டு தன குழைந்தகளுக்காக . ஒரு பெண் வாழ்க்கை எனும்ஓடத்தில் தனியாக துடுப்பு போட்டு கொண்டு போகிறாள் சிலருக்கு அதிர்ஷ்டம் கணவனும் சேர்ந்து ரெண்டு துடுப்பு போட ..
    உங்கள் கதையல் வரும் கதை நாயகி பாவம் """சோலோ""" !!!!
    படிப்பவர்களை அட!! அடா!!!!!.. என்று சொல்ல வைக்கும் அளவுக்கு எழுதி உள்ளீர்கள் உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி !!! வாழ்க !!!!
    """ஏதேனும் தவறாக இருந்தால் பொருத்துகொள்க ""

    ReplyDelete
  52. உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி கணபதி சார்.

    நீங்க எதுவும் தவறாகச் சொல்லவில்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com