மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

15.8.18

பணத்தைப் பற்றிய பழைய நிகழ்வுகளைச் சுஜாதா சொன்னது!!!


பணத்தைப் பற்றிய பழைய நிகழ்வுகளைச் சுஜாதா சொன்னது!!!

*பணம் - சுஜாதா*

பணம் என்பது எனக்கு வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு அர்த்தங்கள் கொண்டிருந்தது.

பள்ளியில் படிக்கும்போது மத்தியானம் சாப்பிட வீடு திரும்பிவிடுவதால், பாட்டி கண்ணில் காசைக் காட்டமாட்டாள்.

எப்போதாவது இரண்டணா கொடுத்து ‘பப்பரமுட்டு’ வாங்கிச் சாப்பிடு என்று தருவாள்.

இரண்டணா ஒரு இரண்டுங்கெட்டான் நாணயம்.

ரங்கராஜா கொட்டகையில் சினிமா தரை டிக்கெட் வாங்கலாம். பிரச்சனை, வெளியே வரும்போது சட்டையெல்லாம் பீடி நாற்றம் அடிக்கும். பாட்டி கண்டு பிடித்துவிடுவாள்.

பாட்டிக்கு ஜனோபகார நிதி என்று ஒரு வங்கியில் கொஞ்சம் குத்தகைப் பணம் இருந்தது. அதிலிருந்து எப்போதாவது எடுத்து வரச்சொல்வாள். 25 ரூபாய்.

நடுங்கும் விரல்களில் இருபத்தைந்து தடவையாவது எண்ணித்தான் தருவார்கள்.

பாங்கையே கொள்ளையடிக்க வந்தவனைப்போல என்னைப் பார்ப்பார்கள்.

திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜில் படித்தபோது, ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி டவுனுக்கு மூணு மாசத்துக்கு மஞ்சள் பாஸ் ஒன்று வாங்கித் தந்துவிடுவாள்.

லால்குடி பாசஞ்சரில் பயணம் செய்து கல்லூரிக்குப் போவேன்.

மத்யானம் ஓட்டலில் சாப்பிட இரண்டணா கொடுப்பாள்.

பெனின்சுலர் ஓட்டலில் ஒரு தோசை இரண்டணா. சில நாள் தோசையத் துறந்து விட்டு இந்தியா காப்பி ஹவுசில் ஒரு காப்பி சாப்பிடுவேன்.

ஐஸ்க்ரீம் எல்லாம் கனவில்தான்.

எம்.ஐ.டி படிக்கும் போது அப்பா ஆஸ்டல் மெஸ் பில் கட்டிவிட்டு என் சோப்பு சீப்பு செலவுக்கு 25 ரூபாய் அனுப்புவார்.

பங்க் ஐயர் கடையிலும் க்ரோம்பேட்டை ஸ்டேஷன் கடையிலும் எப்போதும் கடன்தான். எப்போது அதைத் தீர்த்தேன் என்று ஞாபகமில்ல.

இன்ஜினீயரிங் படிப்பு முடிந்து ஆல் இண்டியா ரேடியோவில் ட்ரெய்னிங்கின்போது ஸ்டைப்பெண்டாக ரூ.150 கிடைத்தது.

ஆகா கனவு போல உணர்ந்தேன். அத்தனை பணத்தை அதுவரை பார்த்ததே இல்லை.

சவுத் இண்டியா போர்டிங் அவுசில் சாப்பாட்டுச் செலவு ரூ.75. பாக்கி 75_ஐ என்ன செய்வது என்று திணறினேன்.

உல்லன் ஸ்வெட்டர், ஏகப்பட்ட புத்தகங்கள் என்று வாங்கித் தள்ளினோம்.

மாசக் கடைசியில் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் மிச்சமிருந்தது.

அதன்பின் வேலை கிடைத்தது.

1959_ல் சென்ட்ரல் கவர்மெண்டில் ரூ.275 சம்பளம்.

அப்பாவுக்கு ஒரு டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்தேன். அம்மா எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

ஒரு மாண்டலின் வாங்கி ராப்பகலாக சாதகம் பண்ணினேன்.

வீட்டுக்குள் ஆம்பிளிஃபயர், ரிகார்ட் ப்ளேயர் எல்லாம் வைத்து அலற வைத்தேன். எல்லாவற்றையும் அம்மா சகித்துக் கொண்டிருந்தாள்.

பி.எஸ்சி., பரீட்சை எழுதி டில்லிக்கு டெக்னிக்கல் ஆபீசராக வந்துவிட்டேன்.

சம்பளம்? மயங்கிவிடாதீர்கள் ரூ.400!

முதன்முதலாக ஐ.ஓ.பி.யில் என் பெயரில் ஒரு அக்கவுண்ட், சகட்டு மேனிக்கு புத்தகங்கள், வெஸ்பா ஸ்கூட்டர் அலாட்மெண்ட் ஆன போது உலகத்தின் உச்சியைத் தொட்டமாதிரி இருந்தது.

அடுத்தபடி பாரத் எலக்ட்ரானிக்ஸில் டெபுட்டி மேனேஜராகச் சேர்ந்தபோது சம்பளம் முதல் முதலாக நான்கு இலக்கத்தைத் தொட்டது.

பங்களூருக்கு இடமாற்றம். செகண்ட் ஹாண்டில் கருப்பு அம்பாஸடர் கார்; திருமணம்.

என்னிடம் ஒரு பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்க்க மாட்டேன்,

சேராது.

எப்போதும், தேவைக்குச் சற்றே சற்று குறைவாகவே பணம் இருக்கும். இதில் ஒரு பரவசம் இருக்கிறது.

 யாராவது வந்து பெரிசாக எதிர்பார்த்து கடன் கேட்டால் வேஷ்டியை அவிழ்த்து ஸாரி, பாங்க் புத்தகத்தைத் திறந்து காட்டிவிடலாம்.

ஒரு சிறிய அறிவுரை, அதிகப் பணம் சேர்க்காதீர்கள். இம்சை, தொந்தரவு...

இன்று பலபேருக்கு என்னிடம் சந்தேகம். சினிமாவுக்கு எல்லாம் கதை எழுதி வருகிறாய், அவர்கள் இரண்டு கைகளிலும் தாராளமாய் பணம் கொடுப்பார்கள். புத்தகங்களிலிருந்தும் பத்திரிகை களிலிருந்தும் ராயல்டி வரும். இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்கிறாய்?

என் அனுபவத்தில் ஓரளவுக்கு மேல் பணம் சேர்ந்து விட்டால், ஒரு பெரிய செலவு வந்தே தீரும்.

இது இயற்கை நியதி.

அந்தச் செலவு வைத்தியச் செலவாக இருக்கும் அல்லது வீடு, கார் ஏதாவது வாங்கினதுக்கு வங்கிக்கடனாக இருக்கும்.

இதிலிருந்து முக்கியமாக நான் கண்டுகொண்டது,

செலவு செய்தால்தான் மேற்கொண்டு பணம் வருகிறது என்பதே.

இன்று பலருக்கு என் பண மதிப்பைப் பற்றிய மிகையான எண்ணங்கள் இருக்கலாம்.  உண்மை நிலை இதுதான்.

இன்றைய தேதிக்கு கடன் எதுவும் இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தில் குற்றநிழல் எதுவும் கிடையாது.

ராத்திரி படுத்தால் பத்து நிமிஷத்தில் தூக்கம் வந்து விடுகிறது.

எகனாமிஸ்ட்டுகள் என்ன என்னவோ கணக்குகள் போட்டு ஜிஎன்பி, ஜிடிபி என்றெல்லாம் புள்ளிவிவரம் தரலாம்.

நான் தரும் எளிய புள்ளி விவரம் இது.

ஒரு ரூபாய், அதன் வாங்கும் மதிப்பு கவனித்தால் உங்களுக்கு இந்தியப் பொருளாதாரம் சட்டென்று புரிந்துவிடும்.

இந்த வாங்கும் மதிப்பு காலப்போக்கில் குறைந்து கொண்டே வந்திருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு ரூபாய் ஒரு வாரம் வரை தங்கியது.

இன்று ஒரு மணிநேரம்கூட, சிலசமயம் ஒரு நிமிஷம் கூட தங்குவதில்லை.

யோசித்துப் பாருங்கள்.

- சுஜாதா.
நட்புடன்! !!!!!!!!!!!!
----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

Saravanan Duraisamy said...

அரிய தகவலுக்கு மிக்க நன்றி
நானும் பணத்தை வங்கியில் போட்டு வைத்து இருக்கின்றேன் அதனால் எந்த மகிழ்ச்சியும் இல்லை

Subbiah Veerappan said...

//////Blogger Saravanan Duraisamy said...
அரிய தகவலுக்கு மிக்க நன்றி
நானும் பணத்தை வங்கியில் போட்டு வைத்து இருக்கின்றேன் அதனால் எந்த மகிழ்ச்சியும் இல்லை /////

உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

ravichandran said...

Respected Sir,

Happy morning... Nice one.

Have a great day.

With regards,
Ravi-avn

வரதராஜன் said...

வணக்கம் குருவே!
தனி ஸ்டைல் குறுங்கதை மன்னன்!சிறு சொல்லுக்கும் சுவை
கூட்டி,நகைச்சுவையால் போர்த்தி
அழகைக் கலந்து தெளிப்பதில்
வல்லவர! நுணுக்கத்தை உணரச்
செய்வார்,அணுக்கத்தை விளங்கச் சொல்வார்! அவருக்கு நான் அடிமை!
அவரது பதிவைத் தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

kmr.krishnan said...

Good experience

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Nice one.
Have a great day.
With regards,
Ravi-avn//////

நல்லது. நன்றி அவனாசி ரவி!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
தனி ஸ்டைல் குறுங்கதை மன்னன்!சிறு சொல்லுக்கும் சுவை
கூட்டி,நகைச்சுவையால் போர்த்தி
அழகைக் கலந்து தெளிப்பதில்
வல்லவர! நுணுக்கத்தை உணரச்
செய்வார்,அணுக்கத்தை விளங்கச் சொல்வார்! அவருக்கு நான் அடிமை!
அவரது பதிவைத் தந்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!/////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Good experience//////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Unknown said...

வணக்கம்,
சுஜாதாவின் அருமையான கருத்து, எளிமையான எழுத்து நடை...பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி!

இப்ப இருக்கிற் நிலைமைய அப்பவே பட்டுகோட்டையார் பாட்டுல எழுதிட்டு போயிட்டாரே! அப்புறம் பேங்க்ல எங்க பணத்தை போடுறது...

கையிலே வாங்கினேன்
கையிலே வாங்கினேன் பையிலே போடல்லே
காசு போன இடம் தெரியல்லே-என்
காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதென்றும் புரியல்லே
ஏழைக்குக் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்-வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக் கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே-அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே)

விதவிதமாய்த் துணிகள் இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லே-இதை
எண்ணாமலிருக்கவும் முடியல்லே (கையிலே)

கண்ணுக்கு அழகாப் பெண்ணைப் படைச்சான்
பொண்ணுக்கு துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்கு பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு-அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே)

[இரும்புத்திரை,1960]

வெங்கடேஷ்.

Subbiah Veerappan said...

/////Blogger Unknown said...
வணக்கம்,
சுஜாதாவின் அருமையான கருத்து, எளிமையான எழுத்து நடை...பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி!
இப்ப இருக்கிற் நிலைமைய அப்பவே பட்டுகோட்டையார் பாட்டுல எழுதிட்டு போயிட்டாரே! அப்புறம் பேங்க்ல எங்க பணத்தை போடுறது...,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,//////
[இரும்புத்திரை,1960]
வெங்கடேஷ்.//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் பாடலுக்கும் நன்றி வெங்கடேஷ்!!!!!!!