மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.4.15

சிறுகதை; உண்மைக்கதை: அப்பச்சியின் பயிற்சி வகுப்பு


அப்பச்சியின் பயிற்சி வகுப்பு

வலைக்குள் பயிற்சி (Net practice)

சிறுகதை: உண்மைக்கதை
----------------------------------------------------
கிரிக்கெட் ஆட்டத்தில் பேட்ஸ்மென்களுக்கும் பெளலர்களுக்கும்
வலைக்குள் பயிற்சியளிப்பார்கள். அது அவர்கள் தங்கள் ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக உள்ள பயிற்சியாகும்.

கிரிக்கெட்டிற்கு மட்டுமா? அந்தக் காலத்தில் சில வீடுகளில், தங்கள் குழந்தைகளுக்கு,  அவற்றின் செயல்பாடுகளுக்குப் பயிற்சி
கொடுப்பார்கள். எங்கள் அப்பச்சி எனக்குக் கொடுத்த பயிற்சிகள் அற்புதமானவை. 50 பந்துகளில் 100 ரன்கள் அடிப்பது வரை பயிற்சி
கொடுத்தார். ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்ப்பதற்கும் பயிற்சி
கொடுத்தார்.

உடனே கிரிக்கெட்டை நினைத்துக் கொண்டு குழம்பாதீர்கள்.
வாழ்க்கையில் பலரை எதிர்  கொள்வதற்கான பயிற்சி.
ஜெயிப்பதற்கான பயிற்சி என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எல்லாம் சுவையாக இருக்கும். அப்பச்சி சொன்ன கதைகளைப்
படித்த நீங்கள், அவர் கொடுத்த பயிற்சிகளையும் படியுங்கள்.
சிறுசிறு சம்பவங்களாக எழுதித் தொகுத்துக் கொடுத்துள்ளேன்
-----------------------------
பயிற்சி 1

அப்போது எனக்கு 14 வயது. ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிந்த சமயம்.
வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தேன். உள்ளே நுழைந்த அப்பச்சி
என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.

“என்னடா, சும்மா உட்கார்ந்திருக்கே?”

“தேர்வு முடிந்து விட்டது. படிப்பதற்கு ஒன்றும் இல்லை. அதனால் சும்மா உட்கார்ந்திருக்கேன்”

“சும்மா உட்காரக்கூடாது. கல்கி, விகடன், குமுதமெல்லாம்
வைத்திருப்பாயே! அவற்றை எடுத்துப் படி”

“இந்த வாரம் வந்தது வரை, எல்லாவற்றையும் படித்து விட்டேன்”

“பைண்டு பண்ணின தொடர்கதைப் புத்தகமெல்லாம் இரவல் வாங்கி வைத்திருப்பாயே - அவற்றை எடுத்துப் படி”

“அவையெல்லாம் ஒன்றும் இல்லை...”

“அப்படியா? சரி வா, நான் உனக்கு வேலை தருகிறேன். மாணிக்க
முதலியார் கடை தெரியுமா?”

“தெரியும்”

“அவர் கடைக்குப் போய் வேஷ்டி இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டு வா”

அவர் சொன்னால் உடனே செய்ய வேண்டும். உடனே கிளம்பி விட்டேன். எங்கள் வீட்டில் இருந்து அவருடைய கடை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. சுட்டெரிக்கும் கோடை வெய்யில். நடந்துதான் போக வேண்டும். ஓட்டமும் நடையுமாகச் சென்று விசாரித்து விட்டு வந்தேன்.

”இருக்கிறதாம்”

உடனே அவர் கேட்டார்: “4 முழம் வேஷ்டியா அல்லது 8 முழம் வேஷ்டியா?”

”அதைக் கேட்க வில்லை”

”மறுபடியும் போய்க் கேட்டுக் கொண்டு வா”

கேட்டுக் கொண்டு வந்து சொன்னேன். “இரண்டுமே இருக்கிறதாம்”

“மில் வேஷ்டியா அல்லது கைத்தறி வேஷ்டியா?”

“அதைக் கேட்கவில்லை” என்று சொன்னவன் மனதிற்குள் நொந்து
கொண்டு மூன்றாவது முறையாக  நானே கிளம்பிச் சென்று விட்டேன்.

என்னைப் பரிதாபமாகப் பார்த்த கடை முதலாளி, ஒரு சீட்டில் எல்லா விபரத்தையும் எழுதிக் கொடுத்துவிட்டார்.

சென்னிமலை கைத்தறி வேஷ்டி, மீனாட்சி மில் மற்றும் மேட்டூர் மில்
வேஷ்டி, 4 முழம், 8 முழம், அவற்றின் விலை விபரம் என்று அனைத்து தகவல்களையும் எழுதிக் கொடுத்து அனுப்பி விட்டார்.

அதைப் படித்துப் பார்த்தவுடன், இனிமேல் இவனை அனுப்புவதற்கு
வழி இல்லை என்று தெரிந்து கொண்டதோடு, புத்திமதிகள் சொன்னார்.
 ”முதல் தடவை சென்ற போதே இந்த விபரங்களை நீ கேட்டு எழுதிக்
கொண்டு வந்திருக்க  வேண்டாமா?”

”ஆமாம்’ என்று சொன்ன நான், அடுத்த தடவை என் தந்தையார்
என்னை எங்கே அனுப்பினாலும் கடைந்து எடுத்துக் கொண்டு முழு விபரங்களுடன்தான் வருவேன்.

பிறகு ஒரு காலத்தில் என் தந்தையார் தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.” எங்கள் சுப்பையாவை விட்டால் கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பான். எடுப்பதோடு மட்டுமல்ல, அதைப் பொட்டலம் போட்டு மேலே சீட்டை வைத்து, எடையையும், விலையையும்
எழுதிக் கொடுத்துவிடுவான்.
--------------------------------------
பயிற்சி 2

எங்கள் தந்தையார், வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும்
கடை வைத்திருந்தார். அவரிடம் சாமான்கள்  வாங்கிச் சென்ற ஒருவன்
ஐநூறு ரூபாய்கள் பாக்கி வைத்து விட்டுப் போய் விட்டான், அப்போது
எனக்குப் பதினைந்து வயது. அதை வசூலிக்கும் பொறுப்பு எனக்கு
வந்து சேர்ந்தது.

ஐநூறு ரூபாய் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை.

எங்கள் கடை சேலம் கல்லாங்குத்துப் பகுதியில் இருந்தது. அந்த வாடிக்கையாளரின் வீடு செவ்வாய்ப் பேட்டையில். எங்கள்
தந்தையார் கொடுத்த முகவரியை வைத்து வீட்டைக் கண்டு பிடித்து விட்டேன். ஒரு நாளா அல்லது இரண்டு நாளா? சுமார் ஒரு மாத
காலம் தொடர்ந்து அலைந்திருக்கிறேன். பாதி நாட்கள் அந்த ஆசாமி
வீட்டில் இருக்க மாட்டார். இருந்தாலும் ஏதாவது சால்ஜாப்புச்
சொல்லி என்னை அனுப்பி வைத்துவிடுவார்.

ஒரு நாள் அவருடைய மனைவிக்கே கோபம் வந்து தன் கணவரைக்
கடிந்து கொண்டு சொன்னார்: “பாவம் அந்தப் பையன் (என்னைத்தான்) எத்தனை தடவை வருவான். படிக்கிற பிள்ளை. நீங்கள் செய்வது
உங்களுக்கே நல்லா இருக்கிறதா? ஒவ்வொரு தடவையும் ஐம்பது,
நூறு என்று கொடுத்திருந்தால் இந்நேரம் கடன் கழிந்திருக்குமே.
இன்று நீங்கள் முழுத் தொகையையும் கொடுத்து அந்தப் பையனை
அனுப்பி வையுங்கள். இல்லை  என்றால் நான்  கொடுக்கிறேன். எங்கள்
நைனா நேற்றுக் கொடுத்து விட்டுப்போன பணம் இருக்கிறது.”

என்னவொரு ஆச்சரியம்? அந்த ஆசாமி முழுப்பணத்தையும் அன்று
கொடுத்து விட்டார்.

வானமே வசப் பட்டது போலிருந்தது. மிக்க மகிழ்ச்சியுடன் ஓட்டமும் நடையுமாக கடைக்கு வந்து சேர்ந்தேன்.

எங்கள் கடையில் எங்கள் அப்பச்சியின் முன்பாக அவருடைய
நண்பர்கள் இருவர் அமர்ந்து  பேசிக் கொண்டிருந்தார்கள். நான் அதை
மறந்து விட்டு, ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைக்கச் சொன்னேன்.
ஒரு ஆர்வக் கோளாறுதான். அவர்  மகிழ்வார் என்று நினைத்துச்
சொன்னேன்.

”அவன் முழுப் பணத்தையும் கொடுத்து விட்டான் அப்பச்சி”

அவர் அதைக் காதில் வாங்காமலேயே, சொன்னார்.” பக்கத்து
ஓட்டலுக்குப் போய் நீ காப்பி சாப்பிட்டு விட்டு, எங்கள்
மூவருக்கும்  காப்பி வாங்கிக் கொண்டு வா!”

நான் அதன்படியே செய்து விட்டு, கடையின் முற்பகுதியில் இருந்த
ஸ்டூலில் அமர்ந்தேன். சற்று நேரத்தில், வந்திருந்த நண்பர்கள்
எல்லாம் கலைந்து சென்று விட்டார்கள்.

அதற்குப் பிறகு எங்கள் அப்பச்சியிடம் இருந்து சரியான டோஸ்
விழுந்தது. அடிக்காத குறை. அடித்திருந்தால் கூட வலிக்காது.
அப்படி ஒரு தொடர் திட்டு.

“ஏன்டா மடப் பயலே! ஒரு இடத்திற்குப் போய்விட்டு வந்தால், நான்
கேட்ட பிறகுதான் நீ சொல்ல வேண்டும். அதுவரை பொறுமையாக இருப்பதற்கு என்ன கேடு? முழுப் பணத்தையும் கொடுத்துவிட்டான்
என்று சத்தமாகச் சொல்கிறாயே! என்னிடம் ஒருவன் பணம் கேட்டு வந்திருப்பான். அல்லது நான் கொடுக்க வேண்டிய பாக்கியைக்
கேட்டு வந்திருப்பான். அது தெரியாமல் நீ உள்ளதைப் போட்டு
உடைத்தால் என்ன அர்த்தம்? இனிமேல் இது போன்று செய்யாதே.
நான் என்ன ஆச்சு என்று கேட்ட பிறகுதான் நீ சொல்ல வேண்டும்
தெரிகிறதா?”

தெரிகிறது” என்று முனுமுனுப்போடு சொல்லி வைத்துத் தப்பித்துக் கொண்டேன்.

இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேச வேண்டும் என்பதை அன்றுதான்
கற்றுக் கொண்டேன்.
--------------------------------------
பயிற்சி 3

எங்கள் தாயார் நன்றாக சமைப்பார்கள். விதம் விதமாக சமைப்பார்கள்.
எங்கள் அப்பச்சி, என்னையும் என் உடன் பிறப்புக்களையும் சேர்த்து
ஆறு பிள்ளைகள் என்று அனைவரும் ஒன்றாக உட்கார்ந்துதான் சாப்பிடுவோம். எங்கள் தாயார் அன்போடு பறிமாறுவார்கள்.

எங்கள் தாயார் பாகற்காயையே மூன்று விதமாகப் பொரியல்
செய்வார்கள். அன்றும் செய்திருந்தார்கள்.

எனக்கு அப்போது பாகற்காய் பிடிக்காது. தட்டில் வைத்திருந்ததை
ஒதுக்கி வைத்துவிட்டு மற்றதை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

என் தந்தையார் அதைக் கவனித்து விட்டுக் கேட்டார்கள்.

”அதை ஏன்டா ஒதுக்கிவைத்துவிட்டாய்?”

“கசக்கும். எனக்குப் பிடிக்காது” இது நான்.

“எதையும் ஒதுக்கக்கூடாது. அதன் அருமை உனக்கு இப்போது தெரியாது. சாப்பிடு!” என்று சொன்னவர், என்

தாயாரைப் பார்த்துச் சொன்னார்கள்,,
“அவனுக்கு இன்னொரு கரண்டி வை”

அப்படியே நடந்தது. நான் வேண்டா வெறுப்பாக வைத்த பாகற்காய்
கறியை மென்று ருசித்துத் திங்காமல், அப்படியே கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து விழுங்கி வைத்தேன்.

அதைக் கவனித்த என் தந்தையார், என் தாயாரிடம் சொன்னார்.
” இன்னும் பத்து நாட்களுக்கு, அவனுக்கு மட்டும் என்று
பாகற்காய் செய். அவன் மென்று தின்று, உருளைக் கிழங்கை
ருசித்துச் சாப்பிடுவதைப் போல இதையும் சாப்பிடும் வரை
விடாதே!”

அப்புறம் என்ன?

பத்து நாட்களில் பாகற்காயை எனக்குப் பிடித்துப் போய் விட்டது.
வேறு வழியில்லாமல் பிடித்துப் போய் விட்டது என்று
வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இறைவின் படைப்பில் உள்ள
எந்தக் காயையும், கனியையும் ஒதுக்காமல் சாப்பிடும்  பழக்கமும்
ஏற்பட்டது.
----------------------------------------------
பயிற்சி 4

அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சாதாரண நகராட்சிப் பள்ளிதான். எங்கள் பள்ளிக்கு மூதறிஞர் ராஜகோபாலாச்சாரி அவர்கள் படித்த பள்ளிகூடம் என்ற பெருமை உண்டு. பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு வைத்து, பெற்ற மதிப்பெண்களுக்கான பட்டியல் சீட்டைக் (Progress Report) கொடுத்து, பெற்றோர்களிடம்
காண்பித்துக் கையெழுத்து வாங்கிக் கொண்டு வரச் சொல்வார்கள்.

நான் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருப்பேன். என் தந்தையாரிடம்
அந்த சீட்டைக் கொடுத்து, கையெழுத்திட்டுத்  தாருங்கள் என்று
கேட்பேன். சற்று   தள்ளி  நின்றுதான் கேட்பேன்.

சட்டென்று சீட்டை வாங்கி, மதிப் பெண்கள் இருக்கும் பகுதியை இடது கையால் மறைத்துக் கொண்டு, அதாவது  மதிப்பெண்களைப்
பார்க்காமல் கீழே உள்ள இடத்தில் கையெழுத்தைப் போட்டுக்
கொடுத்து விடுவார்.

”மார்க்கை நீங்கள் பார்க்கவில்லையே” என்று மெதுவாகச் சொன்னால், அதற்கு அதிரடியாக அவர் இப்படிச் சொல்வார்:

” நான் பார்த்து என்னடா ஆகப் போகிறது? உனக்கு அக்கறை இருந்து
நீ தானே படித்து மார்க் வேண்டும்? நான்  சொல்வதற்கு என்ன
இருக்கிறது? ஒன்று மட்டும் தெரிந்து கொள். என்  நண்பர்தான்
வங்கியில் வேலை வாய்ப்பு அதிகாரி. நீ எப்படிப் படித்தாலும்
அவரிடம் சொல்லி உனக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்து
விடுவேன். நன்றாகப் படித்து முடித்தால் ஆபீசர் வேலை. சுமாராகப்
படித்தால் கிளார்க் வேலை. படிக்கவில்லையா? ப்யூன் வேலை. என்ன
வேலைக்குப் போக    வேண்டும் என்பதை நீயே முடிவு செய்து கொள்.
அதற்கு ஏற்றாற்போல படி. கட்டிக் கொடுக்கிற சோறும் சொல்லிக்
கொடுக்கிற சொல்லும் இரண்டு நாட்களுக்கு மேல் வராது!”

அது 1966ம் ஆண்டு. அப்போது வங்கிகள் தனியார் வசம்தான் இருந்தன.
தேசிய மயமாக்கப் படவில்லை. இந்தியன் வங்கியில் என் தந்தையாரின் நண்பர் பள்ளத்தூர் ஸ்டைல் அருணாசலம் செட்டியார் என்பவர் தான்
ஸ்டாஃப்  டிபார்ட்மென்ட்டின் மேலாளராக இருந்தார்.

நான் படித்து முடித்தவுடன் ஸ்டேட் பாங்கில் வேலை கிடைத்தது.
ஆனால் நான் அதில் சேரவில்லை. அது தனிக் கதை.
அதை இன்னொரு நாள் பார்ப்போம்.
--------------------------------------------
பயிற்சி 5

என் தாயருக்கு நான் மூத்த மகன். அதனால் என் மீது அவர்களுக்கு
அலாதிப் பிரியம். பள்ளிக்கூடம் விட்டு மாலை மணிக்கெல்லாம்
வீட்டிற்கு வந்து விடுவேன். ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் திடீரென்று
மாஜிக் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதைப் பார்த்து
விட்டு நான் வீட்டிற்குத் திரும்பும் போது மாலை மணி ஏழு ஆகிவிட்டது.

அதற்குள் என் தாயாருக்குக் கவலையாகி, நான் வருகிறேனா என்று
வீட்டு வாசலில் நின்று தெருவை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அதைப் பார்த்த என் தந்தையார் இப்படிச் சொன்னாராம்:

“என்ன எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். நீ பார்ப்பதற்காக
அவன் உடனே வந்து விடுவானா? வரும்போதுதான் வருவான். நீ
உள்ளே போய் வேறு வேலையைப் பார். வந்தால் சேர்த்துக் கொள்.
இல்லை என்றால் ஆறில் ஒன்று போனால் ஐந்து. அதை மனதில் வை.
கவலை இருக்காது!

அதுதான் அப்பச்சிக்கும் ஆத்தாளுக்கும் உள்ள வித்தியாசம் என்றாலும்
அந்த மனப் போக்கை பின்னாளில் நானும் கடைப் பிடித்திருக்கிறேன்.
நாம் கவலைப் பட்டு ஒன்றும் ஆகாது. நடப்பதுதான் நடக்கும் நடக்க
வேண்டிய  நேரத்தில்தான் நடக்கும் என்று மனது தானாகவே
சமாதானமாகும் மனப்   பக்குவம் அது!
-----------------------------------------------
பயிற்சி 6

ஒரு நாள் எங்கள் அப்பச்சி நிறையக் காய்கறிகளை வாங்கிக் கொண்டு
வந்து எங்கள் தாயாரிடம் புலவு சாதம் போடச் சொன்னார்கள். எங்கள்
தாயார் புலவு சாதம் போட்டால் சூப்பராக இருக்கும். ஹைதராபாத் தம்
கட்டி பிரியாணி என்று கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா அந்த
முறையில் செய்வார்கள்.எங்கள் தாயாரும் சரி என்று சொல்ல,
வீட்டில்  பிரியாணி அரிசி மட்டும் இல்லை. பாசுமதி அரிசி எல்லாம்
அப்போது கிடையாது. சீரகச்  சம்பா அரிசியைத் தான்
உபயோகிப்பார்கள்.

எங்கள் அப்பச்சி என்னைப்போய் ஒரு கிலோ சீரகச் சம்பா அரிசி
வாங்கிக் கொண்டு வரும்படி பணித்தார்கள். எங்கள் தெருவில்
அப்போது சித்தம்மா கடை’ என்ற பெயரில் விருது நகர்
அண்ணாச்சியின் கடை ஒன்று இருந்தது.

அண்ணாச்சி கையை விரித்துவிட்டார். சீரகச் சம்பா ஸ்டாக் இல்லை.
நான் திரும்பி வந்துவிட்டேன்.

எங்கள் அப்பச்சியிடம் இருந்து பத்து நிமிடம் தொடர் டோஸ்!

“அவர் கடையில் இல்லை என்றால் என்னடா? நேரே வ.உ.சி
மார்க்கெட்டிற்குப் போய் வாங்கிக் கொண்டு வர  வேண்டியதுதானேடா. முட்டாப் பயலே இதை எல்லாம் சொல்லியா தருவார்கள்? ஏதாவது காரியமாகப் போனால் அதை முடிக்காமல் திரும்பி வரலாமா?
செத்துப்போன  ஒருத்தனின் பிணத்தைத் தூக்கிக் கொண்டு
சுடுகாட்டிற்குப் போனால் எரிக்காமல் திரும்புவோமா? என்ன
சிக்கல் என்றாலும் எரித்துவிட்டுத் தானே திரும்புவோம். எவனாவது
கொண்டு போன பிணத்தை வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு வருவானா? ஒவ்வொரு காரியமும் பிணத்தைப் போன்றதுதான். புறப்பட்டுச்
சென்றால்,  அதை முடிக்காமல் திரும்பக்கூடாது. பாதியில் திரும்பக்
கூடாது. என்ன புரிந்ததா? மார்க்கெட்டிற்குப் போய் வாங்கிக் கொண்டு
வா!”

நானும் அப்படியே செய்தேன். இந்தப் பிண உதாரணம் சற்று
அருவருப்பாக இருந்தாலும், அது உணர்த்தும் செய்தி
அற்புதமானதாகும். அதற்குப் பிறகு இன்று வரை  எந்த ஒரு
செயலையும் கையில் எடுத்தால் முடிக்காமல் நான் விட
மாட்டேன். அப்படியொரு மனப் பக்குவம் உண்டானது!

கட்டுரையின் நீளம் கருதியும், படிக்கும் உங்களின் பொறுமை கருதியும் இப்போது இத்துடன் நிறைவு செய்கிறேன்.

அப்பச்சியின் மற்ற பயிற்சிகளை   இன்னொரு நாள் விரிவாகப் பார்ப்போம்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

 1. இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் வந்து அருமையான அனுபவப் பதிவைக் கொடுத்து விட்ட்டீர்கள்.அதுவும் என்னைப் போல சேலத்தானுக்குத் தெரிந்த பகுதிகளைப் பற்றித் தகவல் கொடுத்ததால் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. கல்லாங்குத்து என்றவுடன் இம்ப்பீரியல் டாக்கீஸ் நினைவுக்கு வந்தது.எத்தனை முறை 'மாட்டினி ஷோ' பார்த்திருப்போம் அங்கே!

  கிச்சிப்பாளையம்/கல்லாங்குத்து 'நடிகை'களுக்கும் பெயர்போன இடம். பல வீடுகளின் வாயிலில் பெயர்ப் பலகை இருக்கும்.மாடெர்ன் தியேட்டர்ஸ், நரசு ஸ்டூடியோ ஆகியவற்றுக்கு 'எக்ஸ்ட்ரா'நடிகைகள், ஸ்டன்ட் மாஸ்டர்கள் வாழ்ந்த இடம் கல்லாங்குத்து.சென்னைக்குக் கோட‌ம்பாக்கம் போல சேலத்திற்கு கல்லாங்குத்து.

  பூஜ்ய இராஜாஜி அவர்கள் சேலம் நகராட்சி உய்ர்நிலைப் பள்ளியில் படித்தார் என்பது ஓர் அரிய‌ செய்திதான்.சேலம் நகராட்சிதான் முனிசிபல் கல்லூரியையும் நடத்தியது. உலகிலேயே ஒரு நகராட்சி கல்லூரி நடத்தியது என்றால் அது சேலம் நகராட்சிதான். பின்னர் தான் அது அரசுக் கல்லூரி ஆகியது.

  செவ்வாய்ப்பேட்டை பெரிய மார்க்கெட் நிறையப் பணம் புழங்கும் இடம். லீபஜார் பெரிய சந்தைதான்.

  தங்கள் அப்பச்சி செளடாம்பிகா சிட் ஃப்ண்டில் இருந்ததாகச் சொல்லியுள்ளீர்கள்.
  அதற்கு முன்னர் ஸ்பேர்பார்ட்ஸ் கடையா?

  ReplyDelete
 2. அற்புதமான பயிற்சி வாத்தியாரே!!!

  நம்மை போல வெகு சிலருக்கே இதைபோன்ற அப்பா, தாத்தா அமைவார்கள்... எல்லாம் கொடுப்பினை...

  எனக்கு பொறுமையை என் அப்பாவும், பேச்சு மற்றும், செயல் முடிக்கும் திறனை என் தாய் வழி தாத்தாவும் கற்று தந்தனர்...

  நான் கற்கிறேன் என்று அறியாமலேயே கற்றுகொண்டேன்...

  ஏமாற்றுவது எப்படி என்று பக்கத்து தெரு பலசரக்கு அண்ணாச்சி, என்னை ஏமாற்றியே காட்டினார். அந்த சம்பவதிர்க்கு பிறகு பணம் விசயத்தில் நான் கொஞ்சம் கறார் பேர்வழி ஆனேன்...  அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.

  ReplyDelete
 3. பயிற்சியும்
  முயற்சியும் இருந்து விட்டால்

  பெற்றது நிச்சயம்
  வெற்றியாக தான் இருக்கும்..

  உற்றவரிடம் கற்பது போல்
  பெற்றவரிடம் கற்பது

  அன்பை அள்ளித்தரும்
  ஆனந்தத்தை பெருக்கி தரும்

  ReplyDelete
 4. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .,

  அருமை அபாரமான பயிற்ச்சி ...உலக வாழ்க்கைக்கு தேவையான து ..
  நச் சுன்னு இருக்கு...!!!!

  ReplyDelete
 5. இவற்றுள் சில பயிற்சிகள் பரவலாக நடக்கும் நிகழ்வுகள் என்றாலும் உங்கள் எழுத்து நடையில் மீண்டும் ஒருமுறை படிக்க தோன்றுகிறது.அடுத்த பயிற்சிகள் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. நண்றி ஐயா

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா,

  கதைகள் சூப்பர். உங்கள் கதைகளை படிக்கையில், என் அப்பா எனக்கு சொன்ன கதைகள் எல்லாம் ஞாபகம் வந்தது. சின்ன வயதில் சொல்லி தருவது பசுமரத்து ஆணி போல் பதிந்து விடுகிறது. அது வாழ்கையில் பெரிய இடங்களை அடைய உந்துசக்தியாக உள்ளது.

  நீங்கள் இங்கு கொடுத்துள்ள முதல் கதை என் தந்தை எனக்கு கூறிய கதைகளுள் ஒன்று, (அவர் difference between engineer and ordinary labour என்று சொல்லி தந்தார்) அந்தக்கதை பிற்காலத்தில் என்னை பொறியாளனாக மாற்றியது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

  நன்றி...

  ReplyDelete
 7. அன்பாக பிள்ளையை
  அப்பா வளர்க்க வேண்டும் என

  அறிவுறுத்தி சொல்ல வந்த கதை என
  அப்படி நினைத்தேன்..

  உண்மைகதை என்ற தலைப்பால்
  உரக்க எதுவும் சொல்ல வில்லை...

  இன்றைய பிள்ளைகளுக்கு
  இப்படி பயிற்சி கொடுக்க கூடாது

  என சொல்ல வந்த கதை
  எப்படி இருந்தாலும் சுவை கூடுதல்

  இத்தனை வயதிற்கு பிறகு
  இப்படி ஒரு நினைவு திறன்

  ஆச்சரிய பட வைக்கிறது வகுப்பில்
  அத்தனை பேருக்கும்...

  ReplyDelete
 8. ஐயா வணக்கம்

  பிண உதாரணம் அருமை ஐயா !!

  நன்றி
  கண்ணன்

  ReplyDelete
 9. அய்யா அப்புச்சி கதைகள் அருமை . எனினும் கடந்த இரு வாரங்களாக தங்களிடமிருந்து புதிர் போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டேன் . இனி வரும் பதிவுகளில் எதிர்பார்க்கிறேன் .

  அன்புடன்
  ஆனந்த் .தமிழ்

  ReplyDelete
 10. பயனுள்ள பதிவு. அருமையான பயிற்சிகள். எக்காலத்திற்கும் பொருந்துபவை

  ReplyDelete
 11. தாங்கள் கடைசியாய்ச் சொன்னது என்னை மிகவும் யோசிக்கவைத்தது.

  என்ன ஒரு அருமையான உதாரணம். திருமணம் கூட நின்று போகலாம் ஆனல் இறுதிச் சடங்கு...?

  ஒருவன் தான் எடுத்த காரியத்தை எப்பாடுபட்டேனும் முடித்தாகவேண்டிய நிலையை கச்சிதமாகச் சொன்னது.

  இது முக்கியமாக பிசினஸ் செய்வோருக்கு 100 சதம் பொருந்தக் கூடியது மட்டுமல்ல ஒரு அற்புதமான விதிமுறையாகவே எடுத்துக் கொள்ளவேண்டிய தகுதி கொண்டது.

  பகிர்வுக்கு நன்றி. மிகவும் பயனுள்ள பதிவு.

  கடை கல்லாங்குத்து, ஸ்கூல் முனிசிபல் ஸ்கூல் அப்போ வீடு நாராயண நகரிலா...?

  ReplyDelete
 12. Nice message.
  it remembers my childhood.

  ReplyDelete
 13. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. உங்கள் தந்தையாரின் ஒவ்வொரு சொல்லையும் மந்திரமாய் மனதில் வைத்து எங்களுக்கும் உபதேசித்துள்ளிர்கள் ஐயா.. நன்றி

  ReplyDelete
 14. All Messages Beautiful. Particularly, "கட்டிக் கொடுக்கிற சோறும் சொல்லிக்
  கொடுக்கிற சொல்லும் இரண்டு நாட்களுக்கு மேல் வராது!"

  ReplyDelete
 15. P.JAGANNATHA THANJAVUR-4.
  AT A GLANCE IT IS LOOKING AS IF SO SIMPLE BUT IN FACT EACH OF YOUR EXPERIENCE IS LIKE GETHA WORDS AND YOUNGSTERS NEED THIS SORT OF LESSONS TOO?

  ReplyDelete
 16. அப்பச்சி கொடுத்த பயிற்சிகள் அலாதியானவை. கொடுத்தவர்க்கும், பெற்றவர்க்கும், நாங்கள் பெற பதிந்தமைக்கும் நன்றி.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com