மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

3.11.14

Short Story: சிறுகதை: அப்பத்தாவின் அணுகுமுறை!


Short Story: சிறுகதை: அப்பத்தாவின் அணுகுமுறை!

Approach means a way of dealing with a situation or problem.
Appaththa means Grand mother from father's side
----------------------------------------------------------
அடியவனால் எழுதப்பெற்று, மாத இதழ் ஒன்றில் வெளியாகி. பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை இது. அதை  இன்று உங்களுக்கு
அறியத்தரும் முகமாக பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரையும்
படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------
கதையின் தலைப்பு: அப்பத்தாவின் அணுகுமுறை!

“ஆணை அடக்கி வள; பெண்ணைப் பொசுக்கி வள, என்று சொல்லி, எங்க காலத்தில் பிள்ளைகளை வளர்த்தார்கள். இப்போது அப்படியா நடக்கிறது?
பிள்ளைகள்தான் பெற்றோர்களைப் பொசுக்கி வைத்துள்ளன” என்று தன்னுடைய அப்பத்தா உமையாள் ஆச்சி சொல்லியவுடன், ஆச்சியின்
பேரன் முத்தப்பன் மெல்லிய குரலில் சொன்னார்.

“அப்பத்தா, உங்க காலத்தில் வீட்டில் எட்டுப் பிள்ளைகள், பத்துப் பிள்ளைகள் என்று நிறையப் பிள்ளைகள். கண்டிப்புடன் வளர்த்தார்கள். ஒன்று
அப்பச்சி கண்டிப்புடன் இருப்பார். இல்லையென்றால் ஆத்தா கண்டிப்பு மிக்கவராக இருந்தார். செல்வந்தர் வீடாக இருந்தாலும் எளிமையான
வாழ்க்கை. இப்போது அப்படி இல்லை. வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். செல்லமாக வளர்க்கிறார்கள். அவர்கள் சொன்னது
கேட்பதில்லை. அதுதான் குறை!”

“கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கிறார்கள். அதுவும் குறைதான். படிக்கும் காலத்தில் செல்போன் எதற்கு?”

“பெண் குழந்தைகளுக்கு அது அவசியம் அப்பத்தா. ஒரு பாதுகாப்பிற் காகத்தான்.”

“பேசுவதற்குத்தானே - சாதாரண போன் பத்தாதா? பதினைந்தாயிரம்
ரூபாயில் ஸ்மார்ட்போனாமே - அது எதற்கு? அத்துடன் இணைய
இணைப்பு, டாப் அப் என்று பிள்ளைகள் மாதம் ஐநூறு ரூபாய்களைக்
கறந்து விடுகின்றன. அதெல்லாம் தேவையா? அதனால் படிக்கின்ற
காலத்தில் எத்தனை கேடுகள் தெரியுமா? பணத்தின் அருமை
இப்போது பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது?

“உண்மைதான். கண்ணைக் கசக்குகிறார்களே என்று வாங்கிக்
கொடுக்க வேண்டியதாக உள்ளது”

“கண்ணைக் கசக்கினால் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் விட்டு வைப்போமா? உரிய மதிப்பெண்களை வாங்கவில்லை - அதனால் பொறியியல் படிப்பு உனக்குக் கிடையாது. என்னால் லட்சக்கணக்கில்
பணம் கொடுத்து சீட் வாங்க முடியாது என்று சொல்கிறோமா? பணம் செலவழித்து ஏற்பாடு செய்கிறோமா இல்லையா?”

“அவர்களுடைய எதிர்காலத்திற்காக அதை எல்லாம் செய்ய
வேண்டியதாக உள்ளது!”

“செய்ய வேண்டியதை, செய்யக்கூடியததைத்தான் செய்ய வேண்டும்.
நேற்று உன் அண்ணன் முருகப்பன் வந்து கலங்கி விட்டுப் போனான். என்னையும் கலக்கிவிட்டுப் போனான். என்னவென்று தெரியுமா
உனக்கு?”

“தெரியாது அப்பத்தா! நீங்கள் சொன்னால்தான் தெரியும்? அண்ணனும் அண்ணமிண்டியும் கசடுகள். அடுத்தவன் வீட்டு விஷயத்தை
ஆர்வத்துடன் விசாரிப்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டு விஷயத்தை அப்படியே அமுக்கிவிடுவார்கள். அத்துடன் கோபப்படுவார்கள்.
அதனால் அவர்கள் வீட்டு விஷயத்தில் நான் தலையிடுவதில்லை”

“எல்லாவற்றையும் எப்படி அமுக்க முடியும்? அவனுடைய மகள் நீலா
உடன் வேலை பார்க்கும் பையனைக் காதலிக்கிறாளாம். அவனைத்தான் மணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாளாம்.
உங்கள் சம்மதம் தேவை. நீங்கள் சம்மதித்தால் மட்டுமே திருமணம்.
இல்லை என்றால் நான் திருமணம் செய்து கொள்ளாமல் உங்களு
டனேயே இருந்து விடுகிறேன் என்கிறாளாம். என்ன செய்யலாம் என்று கேட்டார்கள்?”

“அடடா, என்ன சொன்னீர்கள்?”

“சொல்வதற்கு என்ன இருக்கிறது? குடும்ப கெளரவத்தைக் கெடுக்கப் பிறந்ததுகள். போனால் போகட்டும் என்று விட்டு விடுங்கள் என்று சொன்னேன்.”

“அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்?”

“என்ன நீ? கதை கேட்பது போல ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்? என்ன செய்தால் நல்லது என்று நீ சொல்!”

“காதலித்தவளுக்குக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தெரியாதா?"

"நானும் அதைத்தான் சொன்னேன். அவளையே வீட்டை விட்டுப்போய் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள்.
இருபத்திநான்கு ஆண்டுகள் வளர்த்த பெண்ணை ஒரே நாளில் எப்படித்
தலை முழுக முடியும்? ஆகவே. நாங்கள் முன்னின்று அவளுடைய
திருமணத்தை நடத்தி வைப்பதாக உள்ளோம். வீட்டிற்குப் பெரியவர்கள் நீங்கள், உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்பதற்காகத்தான் முதன்
முதலில் உங்களிடம் சொல்கிறோம் என்றார்கள். நான் ஆசீர்வதிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது? எல்லாம் தலை எழுத்து. உங்கள் இஷ்டப்படி
செய்யுங்கள். என்னை இழுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டேன்.
நம்முடைய பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காததினால் ஏற்படும் அவலம் என்று சொன்னேன்.
அத்துடன் இன்னொன்றையும் சொன்னேன். சின்னத்தா மகன் சிவநேசன்  முன்பு செய்தானே - அது போல பங்காளிகள், தாய பிள்ளைகள் என்று எல்லோரையும் அழைத்து, பஸ் வைத்துக் கூட்டிக்கொண்டுபோய்,
நீங்கள் செய்வதை ஊர் அறிய நியாயப் படுத்தாதீர்கள். நகரத்தார்களின்
நீண்ட வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் இது ஒவ்வாதது. அத்துடன் இதை நியாயப்படுத்தி மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழாதீர்கள். அது சமூகக் கேடாகும். காதலிப்பவன்
ஒரு காஷ்மீர்க்காரன் என்றால் நீங்கள் அங்கே சென்று அவளுடைய திருமணத்தை நடத்தி வைப்பீர்களா? அல்லது அவன்தான் தன்னுடைய உறவினர்களுடன் சென்னைக்கு வந்து உங்களுடைய பெண்ணைத்
திருமணம் செய்து கொள்வானா? இதை எல்லாம் சொல்வதனால் நான் காதலுக்கு எதிரியல்ல. காதல் வேண்டியதுதான். ஆனால் அது திருமணத்திற்குப் பிறகுதான் வரவேண்டும். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் காதலிக்க வேண்டும். அதானால்தான்
கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் ஒன்றில் அதை நன்றாக வெளிப்படுத்தினார். இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் அறிவுரையாகச் சொன்னார்.

“காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்
கல்யாணத்தை பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்”

என்றார்”

”உண்மைதான் அப்பத்தா! நீங்கள் சொன்னால் சரிதான்” என்று முத்தப்பன் அத்துடன் முடித்துக் கொண்டான்.

                                          ***************************

பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதை நாற்காலி போட்டு உட்கார வைக்காதீர்கள். அவ்வப்போது, என்ன, ஏதென்று பார்த்து அனுப்பி
விடுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று அப்பத்தா அடிக்கடி சொல்வார்.

முருகப்பனும் அதைத்தான் செய்தார்.

பையனின் பெற்றோர்கள் பொள்ளாச்சியில் இருந்தார்கள்.
 பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள
ஜமீன் முத்தூர் என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
பெரிய தென்னந்தோப்பு இருந்தது. வசதியான குடும்பமாக இருந்தது.

அவர்களுடைய முதல் கேள்வியே அதிரடியாக இருந்தது.

“பெண்ணிற்கு என்ன சீர் செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். உடன்
சென்ற முருகப்பனின் மனைவி வள்ளி ஆச்சிக்கு அது அதிர்ச்சியாக
இருந்தது.

காதல் திருமணம்தானே? கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியது
தானே? இதை எல்லாம் எதற்குக் கேட்கிறார்கள் என்று நினைத்தார்.

ஆனால் முருகப்பன் நிலைமையை உணர்ந்து நிதானமாகப் பேசினார்.

”ரொக்கமாகப் பத்து லட்சமும், இரண்டு வைர நகைகளையும்
கொடுப்பதாக உள்ளோம்.”

பையனின் தந்தை தொடர்ந்து கேட்டார்: “பூமியாக எத்தனை ஏக்கர் கொடுப்பீர்கள்?”

பூமியா? முருகப்பன் திகைத்துப்போய் விட்டார். ஏன்டா பேசப்
போனோம் என்று ஆகிவிட்டது!

”எங்கள் பகுதியில் பூமியைச் சீராகக் கொடுக்கும் வழக்கமில்லை”
என்று மெதுவாகச் சொன்னார்.

அதுவுமில்லாமல் பெண்ணிற்காக எடுத்துவைத்துள்ள பணத்தில்,
அதுவும் இன்று உள்ள விலைவாசி நிலவரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தைக்
கூட வாங்க முடியாது.

”உங்களுக்காக நானும் இறங்கி வருகிறேன். பெண்ணிற்குச் சீராக நான்கு
ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுங்கள். தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில்
வேண்டுமென்றாலும் வாங்கிக் கொடுங்கள். அத்துடன் வைர நகைகள் எல்லாம் எங்களுக்கு ஆகாது. எல்லாவற்றையும் தங்கமாகவே
கொடுத்து விடுங்கள். நூறு பவுனிற்கு நகைகளைக் கொடுங்கள்”

முருகப்பன் சட்டென்று மனதிற்குள்ளேயே  கணக்குப் போட்டார். மன்னார்குடிக்கு அருகே பூர்வீகச் சொத்தாக வந்த நிலம் இருக்கிறது.
பத்து ஏக்கர். அதில் நான்கு ஏக்கர்களைக் கொடுத்துவிடலாம் என்று
முடிவு செய்தார். அத்துடன் வைரத்திற்குப் பதிலாகத் தங்கம் எனும்
போது அதில் பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை!

சரி என்று சொன்னவர். சட்டென்று கேட்டார்.”பையனுக்கு நீங்கள்
என்ன செய்வீர்கள்?”

பையபின் தந்தை கடகடவென்று சிரித்தார்.” எங்களுக்கு அவன் ஒரே
பையன். ஆகவே எங்கள் சொத்துக்கள் எல்லாம் அவனுக்குத்தான்!”

பிறகு மெதுவாகத் தனக்குள்ள ஆஸ்திகளைப் பட்டியலிட்டார். ஜமீன் முத்தூரில் இருக்கும் நூறு ஏக்கர் தென்னந்தோப்பு, அங்கே உள்ள
பெரிய வீடு, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் இருக்கும் பங்களா, மனைவியிடம் இருக்கும் இருநூறு பவுன் நகைகள், பழநி ரோட்டில்
இருக்கும் தேங்காய் நார்த் தொழிற்சாலை.

முருகப்பனுக்கும் ஒரளவிற்குத் திருப்தியாக இருந்தது. தன்னுடைய மனப்பூர்வ சம்மதத்தைத் தெரிவித்தார்.

பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. அடுத்த மாதம் வந்த ஒரு
வளர்றை முகூர்த்த நாளில், பழநி தண்டாயுதபாணி சந்நிதியில்
நீலாவின் திருமணம் நடந்தேறியது.

                                  **********************************************

"எங்கே வாழ்க்கை தொடங்கும் -  அது 
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் 
என்பது யாருக்கும் தெரியாது"

என்று கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையின் போக்கை இரண்டே
வரிகளில் அற்புதமாக எழுதி வைத்தார்.

பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பித்த நீலாவின்
திருமண வாழ்க்கை ஒரு முட்டுச் சந்தில் போய் முடிந்துவிட்டது.
ஆமாம், கணவனுடன் பிணக்கமாகி மூன்றே மாதங்களில் தாய்
வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டாள்.

எதைக்கேட்டாலும் ஓ வென்று அழுகை. இரண்டு நாட்கள் விட்டுப்
பிடித்த முருகப்பன் அவளைத் தேற்றி, நடந்ததைத் தெரிந்துகொள்ள முயன்றார்.

தன்னுடைய கணவனைப் பிடிக்கவில்லை. அவனுடன் வாழ முடியாது
என்று திரும்பத் திரும்பச் சொன்னாள்.

முருகப்பன் பேச்சுக் கொடுத்தார்:

”குடிக்கிறானா....?”

”இல்லை!”

”போதைப் பொருள் பழக்கம் இருக்கிறதா....?”

”இல்லை!”

”உறவுகள் நார்மலாக உள்ளதா? அல்லது இரவு நேரங்களில் முரட்டுத்
தனமாக நடந்து கொள்கிறானா....?”

”அதிலெல்லாம் பிரச்சினை இல்லை!”

”பின்னே என்ன பிரச்சினை?”

”என்னை அநியாயத்திற்குக் கட்டுப் படுத்துகிறார். எனது சுதந்திர
உணர்வுகளை மதிப்பதில்லை. அடிமைபோல் நடத்துகிறார்

”அப்படி என்ன செய்கிறார்?”

“ஒரு வாரத்திற்கு முன்பு என் மேக்கப் சாமான்களை எல்லாம் கொண்டு
போய்த் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்து
விட்டார். அவைகள் மொத்தம் பத்தாயிரத்திற்கு மேல் விலை
உள்ளவை. கேட்டால் திருமணத்திற்கு முன்புதான் அவைகள் எல்லாம்
ஒரு பெண்ணிற்குத் தேவைப்படும். இப்போது தேவை இல்லை
என்கிறார்”

முருகப்பனுக்குப் புரிந்தது. படிக்கிற காலத்திலேயே அவள் மாதம்
ஐயாயிரம் ரூபாய்க்கு மேக்கப் சாமான்களை வாங்குவாள். குளிக்கு
முன்பாகப் பூசிக் கொள்வது. குளித்த பிறகு பூசிக்கொள்வது என்று வகைவகையாக இருக்கும். எல்லாம் ஸ்ப்ரேயருடன் உள்ளவை.
கண்ணிற்குப் போடும் கண்மை செட்டே பிரமாதமாக இருக்கும்.
கண்ணிற்கு ஒன்று. இமைக்கு ஒன்று.புருவத்திற்கு ஒன்று. எல்லாம் பிராண்டட் அயிட்டங்கள். கண்ணிற்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் செலவாகும்.

“பியூட்டி பார்லருக்கு சென்று முடியை வெட்டக்கூடாது என்கிறார்.
எங்கள் அம்மாவைப் போல முடியை நன்றாக வளர்த்து சடை
போட்டுக்கொள் என்கிறார். நடக்கிறகாரியமா?”

முருகப்பன் மனதிற்குள் நினைத்துக்கொண்டார். “ஆஹா..இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம்  ரூபாய்மிச்சமாகுமே!”

“இவ்வளவுதானா?”

“என்ன இவ்வளவுதானா என்கிறீர்கள்? ஜீன்ஸ் பேண்ட், ஸ்டாக்கிங்ஸ்,
 டி’ சர்ட் எல்லாம் அணியக்கூடாது என்கிறார். சூடிதார் அல்லது சேலை
மட்டும்தான் உடை என்கிறார்.”

“இரண்டு பேரும் ஒரே நிறுவனத்தில், ஒரே இடத்தில்தானே வேலை பார்க்கிறீர்கள். அதனால் மற்றவர்களின் பார்வைகளை வைத்து அப்படிச்
சொல்கிறார். நல்லதுதானே! குடும்பம் என்று வந்துவிட்ட பிறகு, குடும்பப்பெண் என்று வந்துவிட்ட பிறகு அதெல்லாம் தேவைதானே
ஆத்தா?”

”திருமணத்திற்கு முன்பு நான் அப்படித்தானே இருந்தேன். அப்போது
ஒன்றும் சொல்லாமல் உருகி உருகிக் காதலித்தவருக்கு இப்போது
என்ன ஆயிற்று? இப்போது ஏன் இந்த வக்கிரம்? கட்டுப் படுத்தும்
ஆணாதிக்கக் குணம்?”

"ஆணாதிக்கம் என்று சொல்லாதே ஆத்தா! அது தனக்கு என்று வரும் பொசஸிவ்னெஸ் - தனக்கு மட்டும் உரியது என்ற சுயகுணம் என்றும்

சொல்லலாம். அது இயற்கையானதுதான். தன் மனைவியை
மற்றவர்கள் ரசிக்கக்கூடாது என்ற ஆதங்கமாகவும் எடுத்துக்
கொள்ளலாம்!”

“நீங்கள் சப்பைக் கட்டுக் கட்டாதீர்கள் அப்பா! என்னைச் சற்றுத் தனியாக இருக்க விடுங்கள்” என்றாள்.

அத்துடன் தங்களுடைய பேச்சிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு,
பிறகு இதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று அவளுடைய தந்தையும்
எழுந்து சென்று விட்டார்.

                                  ************************************

எங்கே சுற்றினாலும் கடைசியில் அம்பாளைத்தான் சேவிக்க
வரவேண்டும் என்பார்கள் மதுரைக்காரர்கள். மேற்படி செய்திகள்
எல்லாம் இரண்டே நாளில் அப்பத்தாவின் காதுகளுக்கு எட்டியது.

தொலைபேசியில் தன் பேரன் முருகப்பனோடு பேசியவர், நீலாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்து சேர். நான் அவளைச் சமாதானப்
படுத்துகிறேன் என்றார்.

முருகப்பனும் அடுத்த நாள் காலையிலையே தன் மகள் நீலாவுடன்
வந்து சேர்ந்தார்.

வந்த கொள்ளுப் பேத்தியைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து, அப்பத்தா
தன் அன்பை வெளிப் படுத்தியவுடன், அவள் கண் கலங்கியதோடு, குரல்
கொடுத்து அழுக ஆரம்பித்து விட்டாள்.

அப்பத்தா, சமாதானப் படுத்தியோடு சொன்னார்கள்: ”அழுகாதே!
அழுவதற்காக இந்தப் பிறவியை யாரும் எடுக்கவில்லை. எது
வந்தாலும் நின்று  சாதிக்க வேண்டும்! என்ன பெரிதாக நடந்துவிட்டது இப்போது?”

”உங்கள் பேச்சை எல்லாம் கேட்காமல் போய்விட்டதற்கு இப்போது வருந்துகிறேன்”

”என்ன செய்வதாக உத்தேசம்?”

”என்னுடைய குணத்திற்கும் அவருடைய குணத்திற்கும் ஒத்து வராது.
ஆகவே பிரிந்து வந்துவிடலாம் என்றுள்ளேன்!”

“எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று எதையும் செய்யக்கூடாது. ரத்து செய்யக்கூடிய அளவிற்கு அவர் ஒன்றும் குணக்கேடான ஆளாகத் தெரியவில்லை.

வெற்றிகரமான வாழ்க்கை என்பது உடன் இருப்பவர்களை ஒருவருக்கொருவர் அனுசரித்துக் கொண்டு போவதில்தான்
இருக்கிறது! ஆகவே நன்றாக யோசித்துப்பார். சரி, ரத்து செய்வதாகவே வைத்துக்கொள்வோம். அதனால் உனக்கு ஏற்படப்போகும் இழப்புக்களை நீ நினைத்துப் பார்த்தாயா?”

“இழப்பு என்று எதைச் சொல்கிறீர்கள்?”

”ஒரு கார்  விற்பனை நிலையத்தில் இருக்கும்வரைதான் புதுக்கார். 
ஒருவர் ஒரு காரை வாங்கிக்கொண்டுபோய்விட்டு ஒரு மாதம் 
கழித்துத் திருப்பிக் கொண்டுவந்தால் அது புதுக்கார் கணக்கில் வராது. 
அதை செகண்ட் கார் என்றுதான் சொல்வார்கள். திருமணமான பெண், திரும்பக் கன்னிப் பெண் என்ற நிலைக்குத் திரும்பி வரமுடியாது. 
கன்னிப் பெண்ணிற்கு உள்ள திருமண வாய்ப்புக்கள், இரண்டாவது திருமணத்திற்குக் கிடைக்காது. அது தெரியுமா? காம்ப்ரமைஸ் 
அதாவது சமரசம் செய்து கொள்ள வேண்டும். அதையும் யோசித்துப்பார்!”

தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவளுக்கு அறிவுரை சொன்னார்கள். அவர்கள் காலத்தில் பெண்கள் எப்படி பல கசப்பான

நிகழ்வுகளையும் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்தினார்கள்
என்பதையும் விபரமாகச் சொன்னார்கள். கதையின் நீளம் கருதி
அதை நான் விவரிக்கவில்லை.

சொல்லச் சொல்ல புடம் போட்ட தங்கம் போல, ஒரு தெளிவான
சூழ்நிலைக்கு வந்த நீலா, தன் கசப்புக்களை மறந்ததோடு, தன்
குணத்தை மாற்றிக்கொண்டு தன் கணவனிடமே போய்
அடைக்கலமானாள். நாகரீகம் என்று தான் நினைத்துக்
கொண்டிருந்ததை எல்லாம் விட்டொழித்தாள்.

எல்லாவற்றையும் கேள்விப்பட்ட அவளுடைய கணவனும் தன்
மனைவி நீலாவுடன் செட்டிநாட்டிலுள்ள ஊருக்கு வந்து
அப்பத்தாவையும் வணங்கி ஆசீர்வாதம் பெற்றுச் சென்றான்.
நல்லதொரு விருந்தை அவர்களுக்கு நல்கிய அப்பத்தா, அவர்கள்
புறப்படும் சமயம் தன் கணவர் பயன் படுத்திய
அந்தக் காலத்தில் பிரபலமான ஷெஃபர்ஸ் (Sheaffer) பேனா
ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார். 1928ம் ஆண்டில் வாங்கப்
பட்டதாகும் அது முழுவதும் தங்கத்தினால் ஆனது. இரண்டு லட்ச
ரூபாய் கொடுத்தால் கூட அதுபோன்ற பேனா இப்போது கிடைக்காது.

நீலாவின் கணவனுக்கும் மிக்க மகிழ்ச்சியாகிவிட்டது. அதற்காக
மீண்டும் ஒருமுறை அப்பத்தாவின் காலில் விழுந்து வணங்கினான்.
அத்துடன்  சென்னைக்கு வந்து தங்கள் வீட்டில் ஒரு பத்து நாட்களாவது
தங்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

”நல்ல பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொடுங்கள். அந்தக்
குழந்தை பிறக்கும் சமயத்தில் சென்னைக்கு வந்து ஆறுமாத காலம் உங்களுடனேயே தங்கி விடுகிறேன்”

நீலாவின் கண்கள் கலங்கிவிட்டன!

தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அப்பத்தாவின் அணுகுறைக்கு 
ஈடு இணையே கிடையாது. முதலில் தன்னுடைய திருமணத்திற்கு, 
பண்பாடு, கலாச்சாரம் என்று சம்மதத்தைத் தெரிவிக்காதவர்கள், 
பிரச்சினை என்று தெரிந்தவுடன் தானாகவே தலையைக் கொடுத்து, பிரச்சினையை எப்படித் தீர்த்தார்கள் என்பதை நினைக்கும்போது 
வியப்பாக இருந்தது.

எல்லோருக்கும் அனுபவங்கள் இருக்கின்றன. சரியான அணுகுமுறைகள் இருக்கின்றனவா? இருந்தால் இந்த உலகத்தில் பிரச்சினைகளுக்கு 
இடமேது? அதை இறையருள் என்றும் சொல்லலாம்! இறையருள்
இருந்தால் எதுதான் சரியாக இருக்காது? எல்லாமே சரியாக இருக்கும்!!!
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

Yarlpavanan Kasirajalingam said...

கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்

இராஜராஜேஸ்வரி said...

சரியான அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி ஈடு இணையர்றது..

வாழ்க்கைத்தத்துவத்தை சிறப்பாக காட்சிப்படுத்திய அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்.!

Selvam Velusamy said...

வணக்கம் குரு,

கதை அருமை. அப்பத்தாவை போல நானும் மனதை பக்குவ படுத்த முயற்சிக்கிறேன்.

நன்றி
செல்வம்

-'பரிவை' சே.குமார் said...

கதை அருமை ஐயா...
வாழ்த்துக்கள்.

Subbiah Veerappan said...

////Blogger Yarlpavanan Kasirajalingam said...
கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்////

எழுத்து நடை நன்றாக இருந்தால்தானே கதையும் நகரும் சுவாமி. அதற்காகத்தான் அந்த நடை ஓட்டத்தைக் கடைப் பிடிக்கிறேன். உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger இராஜராஜேஸ்வரி said...
சரியான அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி ஈடு இணையற்றது..
வாழ்க்கைத் தத்துவத்தை சிறப்பாக காட்சிப்படுத்திய அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்.!/////

உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி! பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து!

Subbiah Veerappan said...

////Blogger Selvam Velusamy said...
வணக்கம் குரு,
கதை அருமை. அப்பத்தாவை போல நானும் மனதை பக்குவ படுத்த முயற்சிக்கிறேன்.
நன்றி
செல்வம்/////

நல்லது. நன்றி அப்படியே செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

Subbiah Veerappan said...

//Blogger -'பரிவை' சே.குமார் said...
கதை அருமை ஐயா...
வாழ்த்துக்கள்./////

உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!! பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து!

Kirupanandan A said...

//“காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்
கல்யாணத்தை பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்”//

காதலிக்கும் நேரத்தில் காதலர்களுக்கு இதெல்லாம் காதில் விழாது. மண்டையில் ஏறாது. அத்துடன் திருமணத்திற்கு முன் வரும் காதலில் உள்ள kick/thrill இவையெல்லாம் திருமணம் முடிந்த பின் இருக்காது.