Astrology: கல்வியின் மேன்மை
கல்வியைப் பற்றிச் ஜோதிடம் சொல்வதென்ன?
”கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை”
- திருக்குறள்
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல - மு.வ உரை. கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல - சாலமன் பாப்பையா உரை
-----------------------------------------------
மாடு என்றால், தமிழில் செல்வம் என்ற பொருளையும் கொடுக்கும். கல்வியைத் தவிர மற்றதெல்லாம் சிறந்த செல்வம் இல்லை என்கிறார்கள். சரி, நாமும் ஒப்புக்கொள்வோம்.
அத்தகைய சிறந்த செல்வம் அனைவருக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். கல்வி வியாபாரமாகிவிட்ட சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள கொடுமை அது. அதை நாம் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. ஆகவே அதை விடுத்து, ஜாதகப்படி கல்வி கிடைக்க என்ன அமைப்பு என்பதை மட்டும் பார்த்து நாம் நம் மனதை சாந்தப் படுத்திக்கொள்வோம்!
----------------------------------------------
இயற்கையாகவே ஒருவருக்குத் தடையற்ற கல்வி கிடைப்பதற்கு லக்கினாதிபதி ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். லக்கினாதிபதி கேந்திரங்களிலோ (1,4,7,10th houses), அல்லது திரிகோணங்களிலோ (1,5,9th houses) அல்லது 2 அல்லது 11ஆம் வீட்டிலோ சென்று அமர்ந்திருப்பது நன்மை பயக்கும். அதைவிடுத்து லக்கினாதிபதி 6 அல்லது 8 அல்லது 12ம் வீடுகளில் அமர்ந்திருப்பது நல்லதல்ல. ஜாதகன் கஷ்டப்படப் பிறந்தவன். அந்தக் கஷ்டங்களில் முறையான கல்வி கிடைக்காமையும் சேர்ந்து கொள்ளும்.
நான்காம் வீடுதான் கல்விக்கான வீடு. நான்காம் வீடுதான் தாய்க்கான வீடு. தாய்தான் ஒரு குழுந்தைக்கு முதல் ஆசான். என்னவொரு ஒற்றுமை பாருங்கள். தன் தாயிடமிருந்துதான் ஒரு குழந்தை நிறையக் கற்றுக்கொள்கிறது. நான்காம் வீடுதான் ஜாதகனுக்கு அடிப்படைக் கல்விக்கும், பட்டப் படிப்புவரை உள்ள கல்விக்கும் உரிய இடமாகும்.
ஐந்தாம் வீடு அறிவிற்கான இடமாகும். It is the place for keen intelligence. ஒருவன் விஞ்ஞானம் மருத்துவம் போன்ற துறைகளில் உயர்கல்வி பெற ஐந்தாம் வீடும் நன்றாக இருக்க வேண்டும்.
--------------------------------------------------
கல்வி பெறுவதற்குத் தடை ஏற்படுத்தும் ஜாதக அமைப்புக்களைக் கீழே கொடுத்துள்ளேன். அவற்றைக் கவனமாகப் பாருங்கள். அவற்றில் எது இருந்தாலும் ஜாதகன் கல்வி மற்றும் உயர் கல்வியைப் பெற முடியாது!
1. இரண்டாம் வீட்டின் அதிபதி, நான்காம் வீட்டின் அதிபதி, ஐந்தாம் வீட்டின் அதிபதி ஆகியவர்களில் எவரும் நீசம் அடைந்திருக்கக்கூடாது.
2. 2ம், 4ம் & 5ஆம் வீடுகள் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்ககூடாது.
3. அதேபோல் 2, 4 & 5ஆம் வீட்டின் அதிபதிகளும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்ககூடாது.
4. இரண்டாம் வீட்டில் சனி அல்லது ராகு அல்லது அவர்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்திருக்கக்கூடாது
5. புதன் மேஷம் அல்லது விருச்சிகத்தில் போய் அமர்ந்திருக்ககூடாது.
6. புதன் நீசமடைந்திருக்ககூடாது.
7. புதன் செவ்வாயின் பார்வையில் இருக்கக்கூடாது.
8. குரு நீசம் பெற்றிருக்கக்கூடாது.
9. சூரியன் நீசமடைந்திருக்கக்கூடாது.
மேற்கூறியவை அனைத்தும் பொதுவிதிகள். சுபக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையை வைத்து இந்த அமைப்பினால் ஏற்படும் கெடுதல்கள் குறையலாம். அல்லது இல்லாமல் போகலாம்.
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com