மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.10.19

பாத சமர்ப்பணைக்கு பணம் எப்படி கிடைத்தது!


பாத சமர்ப்பணைக்கு பணம் எப்படி கிடைத்தது!

"என் பெயர் சந்திரமௌலீ!"“ நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம் (“என்ன சந்தானம்! சந்திர மௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ? ”-பெரியவா)

சொன்னவர்-சந்தானம்.

கட்டுரையாளர்; ரமணி அண்ணா

31-12-2012 போஸ்ட்-வரகூரான்

.பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மஹா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மஹா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.

ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிக்ஷை அளித்து வழி படுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மறுநாள் காலை ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், “சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே ? ஒரு நாளைக்கு உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.

உடனே என் தந்தையார், “நானும் அதக் கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக்கிழமையே வைச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும் ?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.

காரியஸ்தர் சிரித்தபடியே, “சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர செலவு. எல்லாம் முடிஞ்சு ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை) அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு பிடிக்கும்! உங்கள் ஊர்ல வசூலாயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.

சற்றும் தயங்காமல், “பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், “அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார். “ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.

சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.

“பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்ரஹித்த ஸ்வாமிகள், “ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ ?” என்று வினவினார்.

உடனே என் தகப்பனார் குரலைத் தாழ்த்தி, “மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரக்கிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.

ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் முப்பது வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. நானூறு ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும் ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக மொத்த வசூல் ஐநூறு ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.

இனி பெரியவாளின் பாத சமர்ப்பணைக்குத் தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு, அவர் சரியாகவே தூங்கவில்லை.

வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில் – கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள் சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கைகூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம் ?’ என்கிற கவலை அவருக்கு.

திடீரென்று ஒரு கருணைக் குரல்: “சந்தானம்! கிட்ட வாயேன்… ஏன் அங்கேயே நின்னுண்டிருக்கே ?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.

“என்ன சந்தானம்! நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியா ?” என்று வினவினார் ஸ்வாமிகள். “அதெல்லாம் ஒண்ணுமில்ல பெரியவா. ஞாயித்துக்கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், “அது சரி சந்தானம்… லௌகீகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என் சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.

அவர் சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல், “ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கிற மாதிரியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார். திடீரென, “ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நிறைய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார்.”காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார் ?” என்று அனைவரும் குழம்பினர்.

“போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.

பெரியவா விடவில்லை. “அது சரி, நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே ?”

“ஒரு வாரம் முன்னாடி, பெரியவா!” – என் தகப்பனார் பதில் சொன்னார். “அதிருக்கட்டும்… இப்போ ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ ?” – இது பெரியவா.

உடனே அருகில் இருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, “இன்னிக்கிக் கார்த்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.

ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. “சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியா எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, “சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளைக்கு விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதான்னு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறி விட்டு, ‘விசுக்’ கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.

‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணி விட்டு வருவதற்காகத் தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேக்கறா போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.

சனிக்கிழமை. பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும், தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: “நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தான் ஜலம் போறது! பெரியவா கிட்ட போய் சொல்லணும்.”

தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார், என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, “சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ…புண்ணியமுண்டு” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர் ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!

சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தக்ஷணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.

அவர் சொல்ல ஆரம்பித்தார். “எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர் தான். அப்பா வழித் தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருதுவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்க ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட்டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திர மௌலீச்வர ஸ்வாமி தான் எங்க குலதெய்வம்.”

“நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா”ன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்கு கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், “ஆமா, சாஸ்த்ரிகளே! ரயிலை விட்டு எறங்கி வரச்சே பார்த்தேன். நிறைய பேர் மடிசாரும், பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம் ? ” என்று கேட்டார்.

ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித்தார். அவருக்கு பரம சந்தோஷம். “கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்ம ஊர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்றபடி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் ஐநூறு ரூபாய்.

“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம்.

பின்னர் நேராகச் சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்திற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். என் தகப்பனார், மடத்து காரியஸ்தரிடம் சென்று, “பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதான்னு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், “பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்கள் பிரமிப்பு அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷா வந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக, அந்த ஐநூறு ரூபாயை வைத்து சமர்ப்பித்தார். பழத்தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, “என்ன சந்தானம்! சந்திர மௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ? ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்

காஞ்சிப் பெரியவர், பரமாச்சாரியாரின் தெய்வீக சக்தி வணங்குவதற்கு உரியதாகும்!!!!
-------------------------------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir interesting to hear about kanchi periyava girubai thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,
    இன்றைய பதிவைப் படித்து மனம் நெகிழாதோர் யாரும் உளரா!
    ஏற்கனவே பலமுறை படித்து மனம் உருகிய நாட்கள் எத்தனையோ!!
    மீண்டும் ஒருமுறை அதே நெகிழ்வைத் தந்த கணங்களுக்கு
    உரிய பதிவைக கொணர்ந்த ஆசானுக்கு இதயம் கனிந்த
    வாழ்த்துக்கள்!👍👌💐

    ReplyDelete
  3. ///////Blogger Shanmugasundaram said...
    Good morning sir interesting to hear about kanchi periyava girubai thanks sir vazhga valamudan///////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  4. /////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    Nice story.
    Thank you.///////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!!

    ReplyDelete
  5. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    இன்றைய பதிவைப் படித்து மனம் நெகிழாதோர் யாரும் உளரா!
    ஏற்கனவே பலமுறை படித்து மனம் உருகிய நாட்கள் எத்தனையோ!!
    மீண்டும் ஒருமுறை அதே நெகிழ்வைத் தந்த கணங்களுக்கு
    உரிய பதிவைக கொணர்ந்த ஆசானுக்கு இதயம் கனிந்த
    வாழ்த்துக்கள்!//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com