மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.5.18

Short story: சிறுகதை: கைகொடுத்த தெய்வம்!


Short story: சிறுகதை: கைகொடுத்த தெய்வம்!

அடியவன் எழுதி, இந்த மாதம், மாத இதழ் ஒன்றில் வெளிவந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை இது. நீங்கள்
படித்து மகிழ்வதற்காக இன்று அதை வலை ஏற்றியுள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்ல வேண்டுகிறேன்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------

பெண் பார்க்கும் வைபவம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் கோயிலில்தான் நடந்தது.

பெண்ணின் பெயர் மீனாட்சி. பெண் வீட்டில் இருந்து பெண்ணுடன் சேர்த்து நான்கு பேர்கள் வந்திருந்தார்கள். பெண்ணின்
பெற்றோர்கள், தாய் மாமா மற்றும் பெண். 

பெண் சிவந்த நிறத்துடன் அழகாக இருந்தாள். செடியில் இருந்து அப்போதுதான் பறித்த ரோஜா பூவைப் போல அழகாக
இருந்தாள். பொறியியல் படித்தவள். பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் டிஸைன் இஞ்சினியர்  வேலை. மாதம்
எண்பதாயிரம் ரூபாய் சம்பளம். அவளுடைய பெற்றோர்கள் சேலத்தில் இருக்கிறார்கள்.

பையனின் பெயர் சரவணன். பையன் வீட்டில் இருந்தும் நான்கு பேர்கள்தான் வந்திருந்தார்கள். பையனுக்கு தாயார் இல்லை.

இரண்டாண்டுகளுக்கு முன்பு இறந்து போய் விட்டார்கள். அவனுடைய தகப்பனார் முத்தப்ப செட்டியார். சித்தப்பா சிதம்பரம்
செட்டியார். பெரிய அய்த்தை பொன்னழகி ஆச்சி ஆகியோர்கள் அவனுடன் வந்திருந்தார்கள்.

பெண்ணின் தாய்மாமா கையில் கொண்டு வந்திருந்த புது ஜமுக்காளத்தை, கோவிலின் சுற்று பிரகாரத்தில் இருந்த நிழலான
பகுதில் விரித்து விட்டு,“வாருங்கள், உட்கார்ந்து பேசுவோம்” என்று அழைத்துக் கொண்டு போனார்

பரஸ்பரம் அறிமுகத்திற்குப் பிறகு, பேசத்துவங்கினார்கள். பெண்ணின் தாய்மாமா, பெண்ணையும், பையனையும் பார்த்து, “நீங்கள் இருவரும் மனம் திறந்து பேசிவிட்டு வந்து உங்கள் ஒப்புதலைச் சொல்லுங்கள்” என்று சொல்லி எதிர்ப்பக்கம் ஷாமியானா, சேர்கள் எல்லாம் போடப்பட்டிருந்த பகுதியைக் காட்டினார்.

இருவரும் எழுந்து சென்று, பத்து நிமிடங்கள் பேசி விட்டுத் திரும்பினார்கள்

பெண் முகம் சாந்தமாக இருந்தது. சரவணனின் முகம் மகிழ்ச்சியாக இல்லை.

அதைப் புரிந்து கொண்ட முத்தப்ப செட்டியாரும், பொன்னழகி ஆச்சியும், அவனை ஒதுக்கிக் கொண்டு போய் சற்றுத் தள்ளி
நின்று பேசத்துவங்கினார்கள்.

“என்ன கண்ணா? ஏன் உன் முகம் வெளிறிப்போய் இருக்கிறது?”

“இந்த இடம் வேண்டாம் அப்பச்சி?”

“ஏன்? என்ன நடந்தது?”

“அந்தப் பெண் இரண்டு கண்டிஷன்களைப் போடுகிறாள்?”

“என்ன கண்டிஷன்?”

“ திருமணத்திற்குப் பிறகும் வேலைக்குப் போவேன் என்கிறாள். நான் அதற்குச் சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் அடுத்த
கண்டிஷன்தான் நெருடலாக உள்ளது. திருமணத்திற்குப் பிறகு உங்கள் அப்பாவை உங்களோடு கூட்டிக் கொண்டு வந்து
வைத்துக் கொள்ளக்கூடாது. அவருக்கும் சேர்த்து என்னால் பணிவிடைகள் செய்ய முடியாது. ஒரு ஒர்க்கிங் உமனுக்கு அது
சாத்தியப்படாது. மாமியார் என்றால் ஒத்துப் போய் விடலாம். அவர்களும் ஒத்தாசையாகக் கூட மாட வீட்டில் சேர்ந்து வேலை
பார்ப்பார்கள். ஆனால் மாமனார் மட்டும் என்னும் போது அது சரிப்பட்டு வராது என்கிறாள். அதற்கு நீங்கள் சம்மதித்தால் மட்டுமே
நமக்குத் திருமணம் என்கிறாள்”

“நீ என்ன சொன்னாய்?”

“சற்று டைம் கொடு, யோசித்துத் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்”

"அது ஒன்றும் பெரிய சமாச்சாரம் இல்லை.  இரண்டு நாட்களுக்கு முன்பாகவே எனக்கு அது தெரியும். அவளுடைய தாய்மாமா
போனில் பேசும்போது என்னிடம் சொல்லிவிட்டார். எங்கள் பக்கம் அதுதான் யோசனையாக இருக்கிறது என்றும் சொன்னார்.
என் பையனும், வரப் போகும் மருமகளும் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தினால் போதும். நான் அவர்களுடன் செல்ல மாட்டேன்.
அவர்கள் வாழ்வில் குறுக்கிட மாட்டேன். சென்னையில் போரூரில் இருக்கும் என் வீட்டில்தான் எப்போதும் போல இருக்கப்
போகிறேன். என்னை நீங்கள் முழுமையாக நம்பலாம். பெண்ணும் பையனும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துப் பேசுவதற்கு ஏற்பாடு
செய்யுங்கள். அவர்கள் சம்மதம்தான் முக்கியம் என்று சொல்லிவிட்டேன்.”

“எனக்கு அதில் உடன்பாடு இல்லை. திருமணத்திற்குப் பிறகு உங்களை என்னுடன் கூட்டிக் கொண்டுபோய் வைத்துக்
கொள்ளலாம் என்றிருக்கிறேன்” இது சரவணன்

இந்த இடத்தில் சரவணனின் அய்த்தை பொன்னழகி ஆச்சி குறுக்கிட்டுப் பேசினாள்:

“அடேய் கண்ணா, நாட்டு நிலவரம் தெரியாமல் பேசாதே! பெண் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. கடந்த ஒரு
வருடமாக நானும் உன் அப்பச்சியுமாகச் சேர்ந்து இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்களைப் பார்த்துவிட்டோம். யாரும்
இசைந்து வரவில்லை. சிலர் நம் ஊர் என்றால் வேண்டாம் என்கிறார்கள். சிலர் ஜாதகம் பொருந்தவில்லை என்கிறார்கள். சிலர் பதிலே சொல்லாமல்  இதைவிடப் பெரிய இடம் கிடைக்குமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெண்ணின் பெற்றோர்கள்
மட்டும்தான் ஒத்து வந்திருக்கிறார்கள். ஆகவே மறுப்பு எதுவும் சொல்லாமல் இந்தப் பெண்ணை ஒப்புக் கொள்வோம். உனக்கு
இப்போது இருபத்தொன்பது வயதாகிறது. இன்னும் ஒரு வருடம் தேடலில் கழிந்தால் உனக்கு முப்பது வயதாகிவிடும். முப்பது
வயதிற்கு மேல் நமக்கு யாரும் பெண் தரமாட்டார்கள். அதை யோசித்துப் பார்!”

அய்த்தையின் சொற்களில் இருந்த உண்மை சரவணனுக்குப் பிடிபட்டது.

”சரி அய்த்தை. நீங்களும் அப்பச்சியும் சேர்ந்து எடுக்கும் முடிவிற்கு நான் சம்மதிக்கிறேன்” என்று சொன்னான்.

பிறகு எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

சரவணின் அய்த்தை தாங்கள் கொண்டுவந்திருந்த மல்லிகைப் பூவை பெண்ணின் தலையில் சூட்டிவிட, அனைவரின் முகத்திலும்
மகிழ்ச்சி நிலவியது.

அடுத்து வந்த வைகாசியிலேயே இருவருக்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

           **********************************************************

காலதேவனின் ஓட்டத்தில் 15 மாதங்கள் போனதே தெரியவில்லை.

மீனாட்சி அழகான பெண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள். சேலத்தில் உள்ள சிறந்த மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்தது.

சுகப் பிரசவம். குழந்தை பிறந்த இரண்டாவது நாளே தாயையும் சேயையும் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்

குழந்தை மிகவும் அழகாக இருந்தது. ரசகுல்லா இனிப்பைப் போல பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. வந்தவர்களில் பாதிப்பேர்கள்
அதைச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

மீனாட்சிக்கு பிரசவ வலி வந்து விட்டது. மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு போகிறோம் என்ற செய்தியைக் கேள்விப் பட்ட
உடனேயே  தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு பெங்களூரில் இருந்து மூன்று மணி நேரத்தில் சேலத்திற்கு வந்த சரவணன்
குழந்தை பிறந்த சமயத்தில் மருத்துவ மனையில்தான் இருந்தான்.

பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டுவந்து முதலில் சரவணனிடம்தான் காட்டிவிட்டுச்
சென்றார். அத்துடன் குழந்தை ரசகுல்லாவைப் போல இருக்கிறது என்று சொல்லிவிட்டும் சென்றார்.

சரவணன் வேலை பார்த்த பன்னாட்டு நிறுவனத்தில் குழந்தை பிறப்பிற்கு கணவனுக்கு ஒரு வாரம் விடுப்பு கொடுப்பார்கள்.

சரவணன் ஒருவாரம் மாமியார் வீட்டிலேயே தங்கி விட்டான். குழந்தையைப் பிரிந்து செல்வதற்கு அவனுக்கு மனமே வரவில்லை.

சரவணின் தந்தையும் சென்னையில் இருந்து வந்து குழந்தையைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

கல்யாணத்திற்குப் பிறகு கடந்து சென்ற 15 மாதங்களில் இரண்டு குடும்பத்தார்களும் ஒருவருடன் ஒருவர் நன்றாகப் பழகி  விட்டார்கள். மீனாட்சிக்கு தன் மாமனார் முத்தப்ப செட்டியார் மீது பல மடங்கு மரியாதை உண்டாகியிருந்தது. இடைப்பட்ட
நாட்களில் அவர் மூன்று முறை பெங்களூர் வந்து அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கிவிட்டுச் சென்றிருந்தார். மீனாட்சியும்
சென்னை போரூரில் உள்ள அவருடைய வீட்டிற்கு நான்கைந்து முறை சென்று பார்த்துவிட்டுத் திரும்பியிருக்கிறாள். அவர் வீட்டை
அழகுற வைத்திருக்கும் பாங்கை தன் தாய் வீட்டில் அடிக்கடி சிலாகித்துச் சொல்வாள்.

குழந்தை பிறந்து இரண்டரை மாதங்களில்தான் அவளுடைய வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நிகழ்ந்தது.

குழந்தையும், தன்னையும் பார்த்துவிட்டுச் செல்வதற்காக வந்திருந்த தன்னுடைய கணவன் சரவணனிடம் அவள் மெதுவாகக்
கேட்டாள்:

      “என்னை எப்போது பெங்களூருக்கு கூட்டிக் கொண்டு போவீர்கள்?”

      “இப்போது என்ன அவசரம் குழந்தைக்குக் கழுத்து நிற்கட்டும். ஆறு மாதம் கழித்து நீ வரலாம்”

      “ என்ன தமாஷ் பண்ணுகிறீர்களா? எனக்கு என் கம்பெனியில் பிரசவத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள்தான் லீவு
கொடுத்திருக்கிறார்கள். இன்னும் பதினைந்து நாட்களில் நான் வேலையில் சேர வேண்டும் - தெரியுமல்லவா?”

      “அப்படியா? அப்படியென்றால் குழந்தையை உன் தாய் வீட்டில் விட்டு விட்டு நீ மட்டும் வா!”

       “அதெப்படி தாய்ப்பால் குடிக்கும் பச்சைக் குழந்தையை அவர்கள் எப்படிப் பார்த்துக்கொள்வார்கள்?”

       “என்ன செய்யலாம் என்பதை நீயே சொல்!”

        “குழந்தையைப் பார்த்துக் கொள்ள என் தாயாரையும் நம்முடன் கூட்டிக் கொண்டு செல்வோம். குழந்தைக்கு இரண்டு
வயதாகும்வரை அவர்கள் நம்முடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு குழந்தையை டே கேர் இல்லத்தில் பகல் நேரங்களில் விட்டுக்
கூட்டிக் கொள்ளலாம். இது பற்றி என் பெற்றோர்களிடம் பேசி விட்டேன். அவர்களும் சரியென்று சொல்லிவிட்டார்கள். மாதத்திற்கு
இரண்டுமுறை எனக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அவர்கள் சேலத்திற்கு வந்துவிட்டுத் திரும்புவார்கள்.

இந்த இடத்தில் சரவணன் குறுக்கிட்டுப் பேசினான்: “எனக்கு அதில் உடன் பாடில்லை. உன் அப்பச்சியையும், தம்பியையும் தவிக்க
விட்டுவிட்டு உன் தாயார் நம்முடன் வர வேண்டாம்”

      “எங்கள் அப்பச்சி சரியென்று சொல்லிவிட்டார். அதில் உங்களுக்கென்ன பிரச்சினை?”

       “அதில் சட்டப் பிரச்சினை இருக்கிறது.”

       “சட்டப் பிரச்சினையா? என்ன சொல்கிறீர்கள்? தெளிவாகச் சொல்லுங்கள்”

       “எங்கள் அப்பச்சிக்கு ஒரு சட்டம். உங்கள் ஆத்தாவிற்கு ஒரு சட்டமா?  திருமண சமயத்தில் எங்கள் அப்பச்சியை நம்முடன்
பெங்களூருக்கு அழைத்து வரக்கூடாது என்று நீ சொன்னாயல்லவா? அது போல உங்கள் தாயாரையும் நம்முடன் தங்குவதற்கு நீ
பெங்களூருக்கு அழைத்து வரக்கூடாது.”

       “என்ன பழி வாங்குகிறீர்களா?”

        “கணவன் மனைவிக்குள் பழி பாவத்திற்கெல்லாம் இடமில்லை. நியாயத்தைத்தான் சொல்கிறேன்.”

        “சரி நீங்கள் சொல்வதை நியாயம் என்றே வைத்துக் கொள்வோம். உதவிக்கு ஆள் இல்லாமல் பச்சைக் குழந்தையை வைத்துக் கொண்டு, நான் எப்படி வேலைக்குச் செல்ல முடியும்?”

        “சாத்தியமில்லாதது எதுவும் இல்லை. குழந்தையா? அல்லது வேலையா? என்பதை நீயே முடிவு செய். குழந்தைதான் முக்கியம்
என்றால் வேலையை விட்டுவிடு. அல்லது வேலை முக்கியம் என்றால் குழந்தையை உன் தாய் வீட்டில் விட்டு விட்டு வா.
பதினைந்து நாட்களுக்கொருமுறை நாம் வந்து பார்த்துவிட்டுத் திரும்புவோம். குழந்தை இரண்டு ஆண்டுகள் வரை ஆயா
வீட்டிலேயே வளரட்டும்!”

        “இதுதான் உங்கள் முடிவா?”

        “ஆமாம்.ஆமாம்.ஆமாம்” என்று மூன்று முறை சொன்ன சரவணன் அடுத்த அரை மணி நேரத்தில் சேலத்தை விட்டுப்
புறப்பட்டுச் சென்று விட்டான். மீனாட்சியின் திகைப்பு அடங்க ஒரு நாள் ஆனது!

          *************************************************************************
இந்தக் காலத்துப் பெண்களெல்லாம் அதீத புத்திசாலிகள். முன் இரவு முழுவதும் யோசித்த மீனாட்சி, அடுத்த நாள் காலை ஒரு
முடிவிற்கு வந்தாள். அதை உடனே செயல் படுத்தவும் துவங்கினாள்.

தன் மாமனாருடன் அலைபேசியில் பேசிய அவள், “மாமா உங்களுடன் நான் சற்றுப் பேச வேண்டும். ஒரு இக்கட்டான சூழ்நிலை. போனில் பேச முடியாது. நேரில்தான் பேச வேண்டும். சிரமத்தைப் பார்க்காமல் நீங்கள் புறப்பட்டு வந்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். நன்றி உடையவளாக இருப்பேன்”

     “சரி ” என்று சொன்னவர், காரை எடுத்துக் கொண்டு அன்று மதியமே வந்துவிட்டார்.

      வந்தவருக்கு அறுசுவை உணவை வழங்கினார்கள். கார் ஓட்டிக் கொண்டு வந்த களைப்புத் தீர ஒரு மணி நேரம் தூங்கிவிட்டார்
அவர் எழுந்த போது மாலை மணி நான்கு, மீனாட்சியின் தந்தை
லீ பஜாரில் இருக்கும் தனது கடைக்குச் சென்று விட்டார். மீனாட்சி
தன் தாயாருக்கு ஒரு வேலையைக் கொடுத்து அவரை வெளியே அனுப்பி விட்டாள்.

     சூடாக கொழுக்கட்டை, இஞ்சி தேநீர் என்று முத்தப்ப செட்டியார்க்கு வழங்கிய மீனாட்சி, அவருக்கு எதிரில் அமர்ந்து
அவருடன் தன்னுடைய பிரச்சினைகளை விரிவாகச் சொல்லிப் பேசினாள். தன் கணவன் சொன்ன அத்தனை சொற்களையும்
விடாமல் அவருக்கு எடுத்துரைத்தாள்.

     “இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் மாமா! நீங்கள் சொல்வதைத் தட்டாமல் நான் கேட்கிறேன் மாமா!”
என்றாள்

முத்தப்ப செட்டியார் புன்னகையுடன் சொன்னார்:  ”சாவி இல்லாத பூட்டை இறைவன் தயாரிப்பதில்லை என்பார்கள். அதுபோல
தீர்வு இல்லாத பிரச்சினைகளையும் இறைவன் கொடுப்பதில்லை.
நீ கவலைப் படாதே! உன்னுடன் நானும் வருகிறேன். நாளை
அதிகாலை நாம் இருவரும் குழந்தையுடன் பெங்களூருக்குப் புறப்பட்டுச் செல்வோம். சரவணனிடம் எதையும் இப்போது
சொல்லாதே சர்ப்ரைசாக இருக்கட்டும்.  மஹாதேவபுராவில் என் நண்பன் ஒருவன் மனிதவள மேம்பாட்டு மையம் நடத்துகிறான்.
அவனிடம் சொல்லி பகல் நேரத்தில் வீட்டிற்கு வந்து செல்லும்படி வேலைக்காரப் பெண் ஒருத்தியைச் சேர்த்துக் கொள்வோம். மாதம்
பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை சம்பளம் கொடுத்தால் நல்ல வேலைக்காரி கிடைப்பாள். வாரத்தில் உனக்கு ஐந்து
நாட்கள்தானே வேலை. ஆகவே நீ இல்லாத சமயத்தில் குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆளைச் சேர்த்துக் கொள்வோம்.
வீட்டோடு நானும் இருப்பதால் என் பேத்தியை நானும் பார்த்துக் கொள்வேன். என்ன சம்மதம் தானே?’

மீனாட்சிக்குக் கண்கள் கலங்கிவிட்டன. மாமனார் சொன்ன அற்புதமான தீர்வைக் கேட்டுப் பேச்சே வரவில்லை. சட்டென்று
அவருடைய கால்களில் விழுந்து வணங்கி எழுந்தாள்.
       ******************************************************************************* 
அடுத்த நாள் அதிகாலை நான்கு மணிக்கு இன்னோவா வாடகைக்கார் ஒன்றில் முத்தப்ப செட்டியார் தன் மருமகள், பேத்தியுடன்  பெங்களூருக்குப் பயணமானார்.

லக்கேஜ்கள் அதிகமாக இருந்ததால் பெரிய காருக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எட்டு மணிக்கெல்லாம் பெங்களூர் சர் சிவி ராமன் நகரில் இருந்த சரவணைனின் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சென்றடைந்தார்கள்.

காலிங் பெல்லின் சத்தத்தைக் கேட்டு வீட்டின் கதவைத் திறந்த சரவணன், தன் தந்தையைப் பார்த்தவுடன் ஆச்சரியத்தில்
உறைந்துபோய் தன்னையும் அறியாமல் அப்பச்சி என்று சத்தமாகக் கூப்பிட்டுவிட்டு உள்ளே வாருங்கள் என்றான், அவருக்குப்
பின்னால் பச்சைக் குழந்தையைக் கையில் ஏந்தியவாறு நின்றிருந்த தன் மனைவியைப் பார்த்தவுடன் அவனுடைய ஆச்சரியம் இரண்டு மடங்கானது.

“அடடே வாங்க மேடம் வாங்க!” என்றவன், அவர்களைச் சில நிமிடங்கள் நிற்க வைத்துவிட்டு, எதிர்க் குடியிருப்பு மாமியை அழைத்து ஆரத்தி எடுக்கச் சொன்னான். ஆரத்தித் தட்டில் புது இருநூறு ரூபாய் நோட்டு ஒன்றை வைத்தவன், மாமிக்கு நன்றி
சொல்லிவிட்டு அவர்களை உள்ளே அழைத்து வந்தான்.

அவனுடைய ஆரத்தி வரவேற்பை எதிர்பார்க்காத மீனாட்சி மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளானாள்.

பின்னால்  வந்த அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிகள் மற்றும் வாடகைக் கார் ஓட்டுனர் மூவரும்  லக்கேஞ்களை அனைத்தையும்
உள்ளே வைத்துவிட்டுச் சென்றார்கள்.

சரவணனின் கைகளில் குழந்தையைக் கொடுத்த மீனாட்சி, அடுக்களைக்குள் சென்று காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வந்தாள் மூவரும் காப்பியை அருந்தினார்கள்.

முத்தப்ப செட்டியார் வாடகைக்கார் ஓட்டுனரை அழைத்து வாடகைத் தொகையைக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்.

சரவணனுக்கு தன் மனைவி, தான் திரும்பி வந்த இரண்டே நாட்களில் தன் தகப்பனாரை  எப்படி சரிக்கட்டி அழைத்து வந்தாள்
என்பது புரியாத புதிராக இருந்தது. கண் ஜாடையில் அதைக் கேட்கவும் செய்தான். அவரும் பதிலுக்கு கை ஜாடையில் அப்புறம்
பேசலாம் என்று சமாதானப் படுத்தினார்.

சரவணன் பக்கத்துத் தெருவில் இருந்த மார்வாரி போஜனா சாலைக்குப் போன் செய்து மூவருக்கும் காலை உணவாக பூரி
மசால் அனுப்பி வைக்கச் சொல்லி போனில் பேசினான்.

முத்தப்ப செட்டியார், “டேய் ராஜா, உனக்கு அலுவலத்திற்கு நேரமாகிறது. நீ புறப்பட்டுச் செல். எல்லாவற்றையும் சாயந்திரம்
பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

“இல்லை அப்பச்சி நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் வந்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டு அம்மணி வந்திருக்கிறார்
செல்லக்குட்டிப் பெண் வந்திருக்கிறாள். இதைக் கொண்டாட வேண்டாமா? ஆகவே இன்று அலுவலகத்திற்கு டும்மா. லீவு சொல்லி
விடுகிறேன்” என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்கு போன் செய்து தன் மேலதிகாரியுடன் பேசி  விடுப்பு எடுத்துக் கொண்டுவிட்டான்.

காலை 11 மணி வரை எல்லாம் சுறுசுறுப்பாக நடந்தது. குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. மீனாட்சியும் சரவணனும்  சேர்ந்து
அவர்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜ்களைப் பிரித்து துணிமணிகள், சாமான்களை அலமாரிகளில் மற்றும் மேஜைகளில் அடுக்கி வீட்டை ஒதுங்க வைத்தார்கள்.

சரவணன் தனக்குத் தெரிந்த இஞ்சினிரியங் கம்பெனியில் ஆர்டர் கொடுத்து ஸ்டீல் ராடு 4 அடி நீளத்தில் ஃபேன் வளையத்தில்
மாட்டுவதற்கும், அந்த ராடின் முனையில் தொட்டில் கட்டுவதற்குத் தோதாக வளையம் மற்றும் தொட்டில் கம்பி என்று
அனைத்திற்கும் ஏற்பாடு செய்தான்.

”வாருங்கள் அப்பச்சி, எதிரில் ஒரு மலையாளி கடை இருக்கிறது. பலாக்காய், வாழைப்பூ என்று எல்லா காய்கறிகளும்
கிடைக்கும்.உங்களுக்குப் பிடித்த காய்கறிகளாக வாங்கிக் கொண்டு வருவோம்” என்று சொல்லி அப்பச்சியைக் கீழே கூட்டிக்
கொண்டு போனான்.

அவனுக்கு சேலத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல். வெளியே போகும்போது அதைக் கேட்கவும்
செய்தான். முத்தப்ப செட்டியார் சுருக்கமாக விபரத்தைச் சொன்னவர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதுதான்
வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் அடிப்படையான விஷயம் என்று சொல்லி அவனை அதை ஏற்றுக் கொள்ளவும்
வைத்தார்.

இரண்டு நாட்களில் 40 வயதான தெலுங்குப் பெண்மணி ஒருத்தி வேலைக்குக் கிடைத்தாள். அவள் நன்றாகத் தமிழும் பேசினாள்.
குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். காலை ஒன்பது மணிக்கு வருகிறவள். மாலை ஆறு மணி வரைக்கும் இருந்து வீட்டு
வேலைகள் அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டுப் போனாள்.

மீனாட்சியும் வேலைக்குச் செல்லத் துவங்கினாள்

அவர்களுடைய வாழ்க்கை அனுசரணையாக ரம்மியமாகக் கழிந்தது

****************************************************************

இருபத்தோரு மாதங்கள் கடந்து போனதே தெரியவில்லை. குழந்தை நடக்கத் துவங்கியிருந்தது. அய்யாவின் வளர்ப்பில் சின்ன
சின்ன வார்த்தைகளை மழலையாகப் பேசவும் செய்தது.

குழந்தையின் இரண்டாவது பிறந்த நாள். அதை சிறப்பாகக் கொண்டாட விரும்பினார்கள். குழந்தையின் முதல் பிறந்த நாளை
தன் தந்தையின் விருப்பத்திற்கேற்ப சரவணன் தம்பதியர் சென்னையில் எளிமையாகக் கொண்டாடினார்கள். வடபழநி முருகன் கோவிலுக்குப் போய வந்தார்கள்

குழந்தையின் இரண்டாவது பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடும் முனைப்பாக சரவணன் மற்றும் மீனாட்சியின் அலுவலக நண்பர்கள், தெரிந்த நகரத்தார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என்று மொத்தம் 300 பேர்கள் கலந்து கொள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிறந்த நாள் விழா சிறப்பாக நடந்தது.

மீனாட்சியின் பெற்றோர் உடனே ஊருக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள்

விழா முடிந்து இவர்கள் வீடு திரும்புமபோது மணி இரவு பதினொன்றாகியிருந்தது.

முத்தப்ப செட்டியார் தனது அறைக்குச் சென்று விட்டார்.

அவர் உறங்கியிருப்பார் என்று நினைத்து தம்பதியர் இருவரும் பேசிக்கொண்டது அவருடைய காதில் விழுந்தது.

சரவணன் குறுகுறுப்போடு சொன்னான்:

”அடுத்த வாரம் குழந்தையை டே கேரில் விட்டு விடுவோமா”

“எதற்காக....?” இது மீனாட்சி.

“நீ நினைத்தபடி உன் காரியத்தைச் சாதித்துக் கொண்டு விட்டாய். என் தந்தையை எதற்காக இன்னும் இங்கே வைத்துக்
கொண்டிருக்க வேண்டும். ஊருக்கு அனுப்பி விடலாம் இல்லையா?”

“என்ன, என் வாயைப் பிடுங்கி வம்புக்கு இழுக்கிறீர்களா?”

சரவணன் மீண்டும் குறுகுறுப்போடு சொன்னான்: “இல்லை உண்மையாகத்தான் கேட்கிறேன், என் கண்மணி!”

“என்னை என்ன பாதகி என்று நினைத்தீர்களா? அவர் கடைசிவரை நம்மோடுதான் இருப்பார். உங்களுக்கு வேண்டுமென்றால் 
அவர் பெற்றவர் என்ற நினைப்பு ம்ட்டும்தான் இருக்கும். எனக்கு அவர் சாதாரண மனிதர் அல்லை. கை கொடுத்த தெய்வம். 
இக்கட்டான சூழ்நிலையில் என்னை நீங்கள் தள்ளி விட்டு வந்த நிலையில் எனக்குக் கை கொடுத்து நான் வருகிறேன் வா 
பெண்ணே என்று கை கொடுத்து எனக்கு மறு வாழ்வு கொடுத்த தெய்வம் அவர். என் வேலை என்னை விட்டுப் பறி போகாமல் 
என்னைக் காத்த தெய்வம் அவர். அவர் கடைசி வரை நம்மோடுதான் இருப்பார். வயதான காலத்தில் அவருக்கு ஏதாவது சுகக்கேடு 
என்றால் வீட்டோடு ஒரு நர்சை வைத்து அவரை நான் பார்த்துக் கொள்வேன். எப்படி நம் குழந்தையை ஒரு வேலைக்காரியை 
வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அப்படி.”

அவளின் அதிரடிப் பேச்சில் சரவணன் அதிர்ந்து போய் விட்டான்.

 உள்ளே அதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்தப்ப செட்டியாரின் கண்கள் பனித்து விட்டன.
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. அருமை ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் இதுமாதிரி மருமகள் வாய்ப்பதில்லை.

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Touching story....

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,மனமிருந்தால் மார்கம் உண்டு.எந்த பிரச்சினைக்கும் தீர்வு உண்டு.தெளிவாக எடுத்து சொல்லிய கருத்தாழம்.கதையல்ல இது வாழ்வியல்.நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    கலக்கி விட்டீர்கள்,ஐயா!
    நாங்களும் கதையில் நனைந்து
    குளித்து விட்டோம்!
    நடைமுறையில், எத்தனை குடும்பங்கள் இதுபோன்ற இக்கட்டில்
    மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி மீள
    முடியாமல் தவிக்கின்றன என்பது
    பலருக்கு தெரியாது!
    காலம் கனியும் போது நினைக்க
    முடியாதது கூட நடந்தேறும் என்பதற்கு உதாரணமாக தங்களின் கதையில் 'சரவணன்,மீனாட்சி'யே
    சான்று!
    திருமணத்துக்கு முன்னும் பின்னும்
    குடும்பத்தை நிர்வகிக்கும் பாங்கை
    மிக சிறப்பாக முத்தப்ப செட்டியார்
    செய்கிறார் என்பதை நுணுக்கமாகச்
    சொல்லி, கதையைப் படிப்பவர்களுக்கு அதன் அழுத்தத்தை
    மனதில் ஏற்றி உள்ளீர்கள்!
    நீங்காத இடம் பெற்ற கதையைக்
    கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாத்தியார் ஐயா!

    ReplyDelete
  5. /////Kalai Rajan said...
    அருமை ஆனால் நடைமுறையில் எல்லோருக்கும் இதுமாதிரி மருமகள் வாய்ப்பதில்லை.////

    உண்மைதான்! உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very excellent story////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  7. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Touching story....
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete
  8. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மனமிருந்தால் மார்கம் உண்டு.எந்த பிரச்சினைக்கும் தீர்வு உண்டு.தெளிவாக எடுத்து சொல்லிய கருத்தாழம்.கதையல்ல இது வாழ்வியல்.நன்றி///

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    கலக்கி விட்டீர்கள்,ஐயா!
    நாங்களும் கதையில் நனைந்து
    குளித்து விட்டோம்!
    நடைமுறையில், எத்தனை குடும்பங்கள் இதுபோன்ற இக்கட்டில்
    மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி மீள
    முடியாமல் தவிக்கின்றன என்பது
    பலருக்கு தெரியாது!
    காலம் கனியும் போது நினைக்க
    முடியாதது கூட நடந்தேறும் என்பதற்கு உதாரணமாக தங்களின் கதையில் 'சரவணன்,மீனாட்சி'யே
    சான்று!
    திருமணத்துக்கு முன்னும் பின்னும்
    குடும்பத்தை நிர்வகிக்கும் பாங்கை
    மிக சிறப்பாக முத்தப்ப செட்டியார்
    செய்கிறார் என்பதை நுணுக்கமாகச்
    சொல்லி, கதையைப் படிப்பவர்களுக்கு அதன் அழுத்தத்தை
    மனதில் ஏற்றி உள்ளீர்கள்!
    நீங்காத இடம் பெற்ற கதையைக்
    கொடுத்தமைக்கு மிக்க நன்றி வாத்தியார் ஐயா!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    Very nice story Sir.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com