மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.5.11

Astrology: தஞ்சை பெரிய கோவிலின் மர்ம சக்தி...! முன் கதையும், இன்றையக் கதையும்!

-------------------------------------------------------------------------------------------
Astrology: தஞ்சை பெரிய கோவிலின் மர்ம சக்தி...! முன் கதையும், இன்றையக் கதையும்!

23.01.1985ம் தேதியிட்ட ஜீனியர் விகடன் இதலில் ஒரு சுவாரசியமான அட்டைப்படச் செய்தி (cover story) வந்திருந்தது. அதை அப்படியே எனது சேகரிப்புக் கோப்புக்களுடன் பாதுகப்பாக வைத்திருக்கிறேன். சமீபத்தில் அதே நிகழ்வு மீண்டும் அரங்கேறியிருப்பதை ‘தினமலர்’ நாளிதழ் மூலம் தெரிந்து கொண்டேன். உங்களின் பார்வைக்காக அவை இரண்டையும் இன்று வலை ஏற்றியுள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------------------------
முதலில் ஜூனியர் விகடனில் அன்று (23.01.1985ல்) வந்திருந்த செய்தி:

    திருவையாறு திருவையாறு தியாகப் பிரம்ம ஆராதனை உற்சவத்தைத் துவக்கி வைத்த மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சர்.வி.என்.காட்கில் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வருவதாக ஏற்பாடாகியிருந்தது.

    பூரண கும்பம், பரிவட்டம் போன்ற மரியாதைகளுடன் பெரிய கோவில் நிர்வாகிகள் ஆவலுடனும், பரபரப்புடனும் காத்திருந்தனர்.

    காத்திருந்ததுதான் மிச்சம். மத்திய அமைச்சரின் கார் ஆலயத்தின் பக்கமே வராமல் பறந்து விட்டது.

    “சரிதான்...! அரசியல்வாதிகளுக்கும் இந்த ஆலயத்திற்கும் சரிப்பட்டு வரவில்லை என்ற ரகசியத்தை யாரோ மத்திய அமைச்சரிடம் சொல்லியிருக்க வேண்டும். அதனால் பயந்துபோய் அமைச்சர் ஆலயத்திற்குள் நுழையவில்லை போலிருக்கிறது!” என்று இந்தச் சம்பவத்தைப் பற்றித் தஞ்சை மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

    தங்கள் ஊரில் உள்ள பெரிய கோவிலைப் பற்றி எவ்வளவு பெருமைப் படுகிறார்களோ, அந்த அளவிற்கு அந்தக் கோயிலுக்கு ஏதோ மர்ம சக்தி இருப்பதையும் தஞ்சை நகர மக்களிடையே சமீபத்தில் ஒரு நம்பிக்கை வேகமாகப் பரவியிருக்கிறது. தஞ்சை நகர புகழ் மிக்க சந்து முனைகளிலும், கடைத் தெருக்களிலும் இந்த மர்ம சக்தி பற்றி பேச்சு அடிபடாத நாளே கிடையாது.

    ”நடந்த சம்பவங்களை வரிசையாகச் சேர்த்து வைத்துப் பார்த்தால் நகர மக்கள் சொல்வதில் உண்மை இருப்பது தெரிகிறது. இந்தச் செய்தியை இதுவரை நாங்கள் வெளியிடாததற்குக் காரணம் ஏதோ ஒருவகை தயக்கம்தான்” என்ற ஒரு உள்ளூர் நிருபர், பிறகு மெதுவாக, “பயம்கூட” என்றார். பெரிய கோயில் மர்ம சக்தியைப் பற்றி தஞ்சை நகரெங்கும் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் இவைதான்
----------------------------------------------------------------------------------------------------------
    பத்து வருடத்திற்கு முன்பிருந்து ஆரம்பமாகிறது இந்தக் கதை.

    தஞ்சை பெரிய கோவிலில் ராஜ ராஜ சோழன் சிலை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுடன் மோதினார் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதையொட்டி பெரிய பிரச்சினை எழும்பியது. சிலையை உள்ளே வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தபோது, “நினைவுச் சின்னமாக தொல்பொருள் இலாகாவால் பாதுகாக்கப்படும் கோயில் அது. புதிய சிலை ஒன்று வைப்பதற்கு அதற்கான சட்டத்தில் வழி இல்லை” என்று காரணம் கூறியது.

    அதே நேரத்தில் கோயிலுக்குள் உள்ள வராஹி அம்மனுக்குப் புதிய மண்டபம் கட்டப் பட்டிருந்தது. இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே வராஹி அம்மன் அங்கே இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. வராஹி அம்மனுக்கும் புது மண்டபம் எழுப்பி, முதலில் அதற்குக் குடமுழுக்குச் செய்ய நினைத்திருந்தார்கள்.

    “புதிதாக ராஜ ராஜன் சிலை கோயில் உள்ளே வைக்கக் கூடாது என்றால் வராஹி அம்மனுக்கு மட்டும் புதிதாக மண்டபம் கட்டலாமா? சட்டம் அதற்கு மட்டும் இடம் தருகிறதா?” என்று கலைஞர் தரப்பிலிருந்து இதைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பப் பட்டது. இதனால் வராஹி அம்மனின் புதிய மண்டபத்தை இடிக்கும்படி மத்திய அரசு சொல்லிவிட்டது.

    இந்தப் பிரச்சினை கிளம்பிய சிறிது காலத்திற்குள் கலைஞர் அரசு பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கடைசியில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. “அதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வராஹி அம்மனின் புதிய மண்டபம் இடித்து முடிக்கப்பட்ட அன்றுதான் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது” என்றார் பிரபல உள்ளூர் நிருபர் ஒருவர்.

    மர்ம சக்தி அதோடு தன் வேலையை நிறுத்தவில்லை....!

    “எமர்ஜென்ஸியை அடுத்து வந்த தேர்தலில் வராஹி அம்மன் மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திராவும் தோற்றுப் போய், அவரது ஆட்சியும் போயிற்று. பெரிய கோயில் பிரச்சினையில் சம்பந்தப் பட்ட இரு தலைவர்களும் இப்படி பாதிக்கப்பட்டது முதல் நிகழ்ச்சி” என்கிறார்கள் ஊர் மக்கள்

    சென்ற ஆண்டு ராஜராஜ சோழன் முடிசூட்டு விழா நடந்தது நினைவிருக்கும். மாமன்னது ஆயிரம் ஆண்டு பூர்த்தி விழா என்று சொல்லப்பட்டது. பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சதய விழா என்று கொண்டாடப் படுவது வழக்கம். அது ராஜ ராஜ சோழனது பிறந்த நட்சத்திரத்தையொட்டி வரும் விழா. அதன்படி பார்த்தால் ராஜ ராஜ சோழனுக்கு சென்ற ஆண்டு 998 -வது சதய விழாதான் (பிறந்த நாள்) கொண்டாட வேண்டும்.

    அரசியல் காரணத்திற்காகவோ அல்லது வேறு என்ன காரனத்திற்காகவோ, 998 -வது பிறந்த நாள் என்பதைக் கண்டு கொள்ளாமல், இந்த ஆயிரம் ஆண்டு நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.

    பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில், ராஜ ராஜ சோழன் செப்புச் சிலையை அலங்கரித்து எடுத்துச் சென்று முடிசூட்டு விழா நடத்த வேண்டும் என்பது முதல் ஏற்பாடாம். ஆனால் வைதீகர்கள் இதற்கு உடன்படவில்லை. ராஜ ராஜ சோழன் செப்புச் சிலை, ஆலயங்களில் உள்ள நாயன்மார்கள், ஆழ்வார்களின் செப்புச் சிலைகளுக்குத் தரப்படும் பக்தி மரியாதைகளுடன் தினமும் வழிபாட்டுக்கு உரியதாக இருக்கிறது. அதை இவ்வாறு பொதுக்கூட்டங்களுக்கு எடுத்துச் சென்று வைப்பது என்பது சரியல்ல என்று வைதீகர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கவே, ஆலய சந்நிதியிலேயே முடிசூட்டு வைபவத்தை நடத்த முடிவு செய்யப்பட்டதாம். பிரதமர் இந்திரா தனது கையால்  முடிசூட்டுவது என்று செய்யப்பட்ட ஏற்பாட்டையும் வைதீகர்கள் முதலில் ஏற்கவில்லை. ஆனால் பிறகு பேசாமல் இருந்துவிட்டார்களாம்.

    இந்த முடிசூட்டு வைபவத்திற்கு வரும்போதுதான் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கோயிலேயே சற்று மயக்கம் அடைந்தார்.

    “அதன் பிறகு சில நாட்களில் முதல்வரின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அன்னை இந்திரா காந்தியின் எதிர்பார்க்காத சோக மரணமும் நிகழ்ந்தது. இந்த அடுத்தடுத்து நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து தஞ்சை மக்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள்” என்றார் ஒரு நகரப் பிரமுகர்.

    வருடம் தோறும் தஞ்சைக் கோயிலில் நடக்கும் சதயத் திருவிழா சென்ற ஆண்டு நடக்கவில்லை. “ ஆயிரம் ஆண்டு விழா என்று சொல்லி விட்டு, 998 -வது பிறந்த நாள் விழா எப்படிக் கொண்டாடுவது என்ற தயக்கம் மட்டும் காரணமல்ல. அந்த சதய விழாவை விரும்பினாலும் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் சதய விழாநடக்க வேண்டிய அன்றுதான் அன்னை இந்திராவின் இறுதியாத்திரை நடந்த நாளாக அமைந்தது. இப்படி நடந்தது மர்ம சக்தியின் வேலைதான் என்று மக்கள் நம்புகிறார்கள்” என்ரார் அந்தப் பிரமுகர்.

    பிறகு முதலமைச்சர் பூரண குணம் அடைய இந்தக் கோயிலில் மிகப் பெரிய பூஜைகள் நடத்தப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

    இந்த முக்கிய சம்பவங்களைத் தவிர, தஞ்சை மக்கள் மர்ம சக்திக்கு ஆதாரமாக வேறு சில நிகழ்ச்சிகளையும் குறிப்பிடுகிறார்கள்

    (அவற்றை எல்லாம் படிக்க விரும்புவர்களுக்காக செய்தி வந்த பக்கங்கள் ஸ்கேன் செய்தி கொடுக்கப் பெற்றுள்ளது.!)
-----------------------------------------------------------------------------



படங்களின் மீது கர்சரை வைத்து அமுக்கினால், 
படங்கள்  பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்!





 நன்றி: ஜூனியர் விகடன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்று தினமலரில் வந்த செய்தி:

தி.மு.க., ஆட்சி பறிபோன பரிதாபம் : தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட்
(தினமலர் செய்தி)

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலுக்குள் பதவியில் இருப்பவர்கள் வந்து சென்றால், பதவி பறிபோகும் என்பது, இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

"தஞ்சை பெரிய கோவிலுக்கு வி.ஐ.பி.,க்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும்' என, பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால், இங்கு வரும் பெரும்பாலான வி.ஐ.பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை தவிர்ப்பர்.இதற்கு, பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாகக் கூறுவர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இச்சம்பவம் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலின் நேர் வழியாக வராமல் பக்கவாட்டு வாசல் வழியாக வந்து, கோவிலுக்குள் செல்லாமல், சம்பவ இடத்தை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். இதுபோல, பல உதாரணங்களை கூறலாம்.

கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர். அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசிச் சென்றார்.

கடந்த நவம்பரில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது.

தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு.க.,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு.க.,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது என்பது, இந்த சென்டிமென்ட் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மீண்டும் முணுமுணுக்க வைத்துள்ளது.

நன்றி: தினமலர்
சுட்டி

வாழ்க வளமுடன்!

21 comments:

  1. நான் வசிக்கும் நாட்டில் சமீபத்தில் தேர்தல் நடந்தது..... அதில் மிகச்சிறந்த மந்திரி ஒருவரும் தோற்றுப் போனார் அதில் என்போன்றோருக்கு வருத்தமும் கூட.... அவர் இந்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின் அழைப்பை ஏற்று சென்ற வருடம் தமிழகப் பயணம் சென்று வந்ததார்.... சென்ற இடங்கள் பல வென்ற போதிலும் நமது பெரியக் கோவிலும் (மே - 7 - 2011 ) ஓன்று.. அது தொடர்பான செய்தியையும் படங்களையும் தாங்கிய செய்தித்தாள்; அச்செய்திக்கு கீழே ஒருக் கட்டம் கட்டி.... தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வந்த அரசியல் தலைவர்கள்; தொடர்ந்து வரும் தேர்தலில் தோற்றுப் போனதற்கு சான்றான செய்திகளை போட்டிருந்தது....

    நாட்டை ஆண்டது போதும்... துறவு கொள் (அரசியல்) என்பது தான் ஆண்டவன் சித்தமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.....

    "அன்பின் வழியது உயிர்நிலை" அன்பான ஆசிரியருக்கும், சக, மூத்த, இளைய மாணாக்கர்களுக்கும் புத்த மகானை நினைவு கூறும் இன்றைய விசாக தின வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  2. பழைய செய்தி பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா

    ReplyDelete
  3. இந்த பயம் பகுத்தறிவு வாதிகளுக்கும் வந்திருப்பதுதான் அதிசயம்.என் உறவினர் ஒருவர் மரைன் எஞ்சினியர்.ஆண்டுக்கு ஒருமுறை விடுப்பில் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செய்வார்.ஒருமுறை தஞ்சை வந்திருந்தார்.பெரியகோவிலுக்கு அழைத்துச்செல்லும் சமயத்தில் சென்னையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.உடனே அவர் கோவிலுக்கு வராமல் உடனே கிளம்பி அடுத்த ஊருக்குச் சென்றுவிட்டார்.'அரசியல் வாதிக்குதான் அதெல்லாம்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை.என்னதான் பெரியகோவிலில் இருக்கு?ஏன் அரசியல்வாதிக்கு அந்தக் கோவில் ஆகவில்லை?

    ReplyDelete
  4. அன்புடன் வணக்கம் ..
    நீங்கள் கூறிய அனைத்து பேருக்கும் நடந்த சம்பவங்கள் சரி என்றால் ...அங்கு சென்று எம்பிரானை வழிபடும் மக்களுக்கு ஏதாவது நடை பெற வேண்டுமே..??
    இல்லை?? ஆங்கு திருமூலர் ஜீவ சமாதி உள்ளது பணிவ......அடக்கம்..மரியாதை கலந்த பக்தி.. உள்ளே இருபபது பெருவுடியார் என்ற பயம்.!! இது எம்பெருமான் எழுந தருளி இருக்கும் வீடு .. என் எண்ணி சென்றால் நல்லது நடக்கும் .. ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தும்போது தீ பிடித்தது .. செருப்பு காலுடன் சென்று விசாரித்தார்கள்.. ???பின்னே எப்பிடி இருக்கும்.. ??இப்பிடித்தான்..இன்று வைகாசி விசாகம் தினம் அப்பன் முருகனை எண்ணி வழிபாடு செய்வோம்(இந்த வைகாசி மாதம் இரண்டு விசாகம் வருகிறது இரண்டாவது விசாகத்தில் முருகன் உதித்த விசாகம் விழா )நன்றி..

    ReplyDelete
  5. ////"ஆங்கு திருமூலர் ஜீவ சமாதி உள்ளது"///

    பெரியகோவிலில் ஜீவசமாதியில் உள்ளது கருவூராரா, திருமூலரா?

    சிதம்பரத்தில் கருவூரார் திருமூலருக்கு சமாதி அமைத்ததாகச் சொல்கிறரகளே!

    எது சரி?

    ReplyDelete
  6. மூட நம்பிக்கை என்பது இதுவா..
    மூத்தோர் வாக்கு தான் எங்கே..

    திருவருள் அருளும்
    திருக்கோயிலிலுக்கு 'அ'பெயரா?

    நம்பினார் கெடுவதில்லை இது
    நான்கு மறை தீர்ப்பன்றோ-பாரதிவாக்கு

    இன்னலை துடைக்கும்
    இறை இல்லத்தில் இப்படியா என

    எண்ணுகையில் இவர்கள் எண்ணத்தில்
    என்னவோ செய்கிறது..

    தோல்விக்கு தான் காரணம் எனாமல்
    தோற்க வைத்ததாக அவரை சொல்வது

    அறியாமையா..
    முயலாமையா..

    ReplyDelete
  7. Vanakkam,
    This notes from Singapore Ex. Minister Mr. George Yeo.

    http://www.facebook.com/note.php?note_id=388791543615

    He and his team lost their group constituency last 7th May 2011.

    Does this related to our prestegious temple? Is it a myth?

    But facts are proving its real and we need to beleive.

    thanks

    ReplyDelete
  8. Vanakkam,

    The following notes from Singapore Minister Mr. George Yeo.

    He and his team lost his group constituency last 7th May 2011.

    Is it a myth or story, but facts makes it real and need to beleive.

    http://www.facebook.com/note.php?note_id=388791543615

    thanks

    ReplyDelete
  9. ஆஹா செம செண்டிமெண்டா இருக்கே, இதுவரையில் நான் கேள்விப்படாத விஷயம். இப்பதான் என் மாமாகிட்ட இது பத்தி கேட்டேன். அவரும் ஆமாம்னு சொன்னார். அதுக்கு அவர் சொன்ன காரணம், ராஜராஜ சோழன் தற்கொலை செய்துகொண்டார் (ஏதோ சில காரணங்களுக்காக) என்ற ஒரு வதந்தி இருக்கிறதாம். அதனால்தான் பதவியில் இருப்பவர்கள் அங்கே வந்தால் பதவி போய்விடுகிறது என்று சொன்னார். எது எப்படியோ இதையெல்லாம் நம்பாமலும் இருக்கமுடியவில்லை. இலங்கைத் தமிழர்களின் அழிவுக்கும் ஸ்ரீரங்கம் கோயிலின் ஒரு கோபுரத்தைக்கட்டியதால்தான் என்று சொல்கிறார்கள். அதனால் அந்த கோபுரத்தை பலகாலம் கட்டாமல் வைத்திருந்ததாகவும் படித்தேன். இன்னொரு அதிர்ச்சியான விஷயம் கூட கேள்விப்பட்டேன், அதை இங்கே எழுதமுடியாது.

    ReplyDelete
  10. இன்னொண்ணு தஞ்சைப் பெரிய கோயிலில் இருக்கும் யானைகூட அம்மா கொடுத்ததுதானாம்.

    ReplyDelete
  11. Dear Sir,

    I am not able to read the scan copy. it is not clear and visible. Kindly send the details to my mail

    ReplyDelete
  12. அன்புடன் வணக்கம் திரு Kmr.K.
    """"பெரியகோவிலில் ஜீவசமாதியில் உள்ளது கருவூராரா, திருமூலரா?
    சிதம்பரத்தில் கருவூரார் திருமூலருக்கு சமாதி அமைத்ததாகச் சொல்கிறரகளே!
    எது சரி?*****

    மன்னிக்கவும்.sri.kmrk.. தஞ்சாவூரில் உள்ளது கருவூரார்..திருமூல நாயனார்சமாதி திருவாவடு துறை கோவிலில் தென் மேற்கு திசையில் உள்ளது..

    ReplyDelete
  13. தஞ்சை பெரிய கோயில் பக்தர்களுக்குத் தீங்கு செய்யவா கட்டப்பட்டது? மன்னன் ராஜராஜன் சோழ நாட்டுக்குப் பெருமை சேர்க்கத் தன் வாணாள் முழுதும் சேர்த்த சொத்துக்களை வைத்து, பிறர் கையை எதிர்பார்க்காமல், அவ்வளவு ஏன், தன் மனைவிகளின் உதவியைக்கூட எதிர்பார்க்காமல் கட்டிய ஆலயம் பெரிய கோயில். இது மக்களுக்குத் தீங்கு விளைக்கும் என்பதை நம்பமுடியவில்லை. எனினும் ஒரு செய்தி நம்பக்கூடியதாக இருக்கிறது. நமது ஆலயங்கள் ஆகம சாத்திரங்களின் அடிப்படையில் கட்டப்பட்டவை. எந்தவொரு கோயிலிலும் மூலஸ்தானம் எனப்படும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் உருவம் அல்லது லிங்கத்தின் அளவைப் போல ஐந்து மடங்கு ஒவ்வொரு நாளும் அவற்றிற்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். அதற்கு ஏற்ப மன்னன் பல நிவந்தங்களை விட்டுச் சென்றான். பின்னாளில் நம் மக்கள் அவற்றை சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டார்கள். பல நாட்கள் அவ்வாலயத்தில் நைவேத்தியம் செய்ய உணவு இல்லாமலிருந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து அறுபது எழுபதுகளில்கூட அங்கு கூட்டம் வருவது அரிது. மாலை ஏழு மணியானால் உள்ளே இருக்க பயமாகக்கூட இருக்கும். இப்போது மக்களுக்குத் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கேற்ப ஜோசியர்கள் பரிகாரம் செய்யச்சொல்லி அதனால் கூட்டம் அலை மோதுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் சிலகாலம் யுத்த சமயத்தில் இவ்வாலயத்தின் அர்த்த மண்டபத்தில் சிப்பாய்கள் முகாமிட்டிருந்தார்கள். இதெல்லாம் ஆலயத்தின் புனிதத்தைக் கெடுத்து விடுகின்றன. இக்காரணங்களால், சுவாமிக்கு பூஜை இல்லாமலும் நைவேத்தியம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த காரணத்தால் மன்னனை (ஜனநாயகத்தில் ஆள்வோரை) பழிவாங்குகிறது, தன் உணவை பிறர் பறித்துக் கொண்டதால் இப்படி நேர்கிறது என்கிற எண்ணம் சிலரிடம் இருக்கிறது. இது உண்மையோ, பொய்யோ, நமக்குத் தெரியாது. ஆனால் ஏராளமான இவ்வாலயத்தின் சொத்துக்களை அபகரித்து இன்று அன்பவிப்பவர்கள் அவற்றைத் திரும்பக் கொடுத்துவிட்டால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படாது என்றும் எண்ணத் தோன்றுகிறது. செய்வார்களா?

    ReplyDelete
  14. திருமூலரின் சமாதி திருப்பனந்தாள் ஆலயத்தின் துவஜஸ்தம்பத்தின் அடியில் அமைந்திருப்பதாகப் படித்திருக்கிறேன். கருவூராரின் சமாதி கரூர் ஆனிலையப்பர் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் இருக்கிறது. மன்னன் ராஜராஜனோடு கருவூராருக்குத் தொடர்பு இருந்ததாக எழுதப்படுகிறது. இந்தக் கருத்தில் கூட சிலர் மாறுபடுகிறார்கள். கருவூராரின் காலமும் ராஜராஜனின் காலமும் வேறு என்று. இதெல்லாம், நாம் வரலாற்றைச் சரியாக எழுதி வைக்காததன் பலன்.

    ReplyDelete
  15. மன்னிக்கவும். திருமூலரின் சமாதி அமைந்திருக்கும் இடம் திருவாவடுதுறை, திருப்பனந்தாள் அல்ல. தவறுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  16. அன்புடன் வணக்கம் திரு tanjavoorar....
    ***பிரதிஷ்டை செய்யப்படும் உருவம் அல்லது லிங்கத்தின் அளவைப் போல ஐந்து மடங்கு ஒவ்வொரு நாளும் அவற்றிற்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.***
    உண்மை...இனின்ன காலங்களில் இன்னின்ன வகை நெய்வேத்தியம் என்று கூட உண்டு.. .மக்கள் தவறு செய்தால் !!அந்த ஊர் தலைவன் தட்டி கேட்பான்!! அவன் தவறு செய்தால் ராஜா கேட்பான் !!!ராஜா செய்தால் இறைவன் கேட்பான்!!!.[ திருகோவிலினுள் நடக்கும் தவறுகளை அந்த ஊர் மக்கள் தட்டி கேட்க வேண்டு என ஒரு நியதி உண்டு.!!! ]. இப்போ யார் எங்கே கேட்க .. இதே விஷயத்தை நாம் போய் சொன்னால் உன் வேலை போய் பாருயா ??வந்துட்டான் .???.ஆனாலும் நீ கேட்பதை விடாதே என்கிறது?
    . thanks..

    ReplyDelete
  17. தஞ்சை பேரரசின் அரசகுருவாக இருந்த சித்தர் கருவூறாருக்கும்
    ராஜராஜ சோழனுக்கும் கி.பி. 1040 வாக்கில் கருத்து வேற்றுமை ஏற்ப்படுகிறது.
    இதனால் சித்தர் கருவூறார் ராஜராஜனை சபித்து விடுகிறார் தனது மனைவி
    பொன்னிறப்பாவையுடன் தஞ்சை கோயிலில் அமைந்த நிலவறையில் நீள் தவத்தில்
    இருக்க சென்று விடுகிறார். ராஜராஜன் தவற்றை உணர்ந்து கோபுரம் மீதேறி
    குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தான் கர்ணபரம்பரையாக வரும் செய்தி.
    தஞ்சை கோயிலின் மர்மம் இது தான்.

    ReplyDelete
  18. சென்ற ஆண்டு நான் ஜனவரி மாதம் தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றேன். இரண்டே மாதங்களில் என்னுஉடைய அரசாங்க வேலை இழந்தேன் . அரசாங்க அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தும். நம்முஅடைய இசை ஞானி அவர்கள் இது குறித்து குமுதம் பத்திரிகையில் எழுதியது குறிப்பிட தக்கது.

    ReplyDelete
  19. தஞ்சை பெருவுடையார் - கருவூறார் added 5 new photos.
    July 6 at 2:40am ·
    தமிழர்பால் மொழி அழிப்பும் , இன அழிப்பும் , இட அழிப்பும் இன்று நேற்று தொடங்கியது அல்ல...

    ✪தமிழன் ஓர் அற்புத & அருமையான இனம் .... தங்கத்திலும் , வெள்ளியிலும் & நவரத்தினங்களிலும் .... இப்படி

    ✪சுமார் 1500 / 2000 ஆண்டுகளாக நடந்து வரும் தமிழ்மொழி / தமிழர் இன அழிப்பு போருக்கு தீர்வு என்ன ?

    தமிழ் மக்களே ....

    அத்தனை காலம் பின்னோக்கி போக விருப்பம் இல்லையெனில்... விரும்பவில்லையெனில் மிக அண்மைக்கே வந்துவிடுவோம் .

    ✪சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் -

    பாரதியார் பொங்கி எழுந்தது ஏன் ?
    பாரதிதாசன் பொங்கி எழுந்தது ஏன் ?
    பாவாணர் தாய் தமிழே என்று தவித்தது ஏன் ?.

    ✪வாழ்நாள் முழுதும் பரிதவித்த ஆன்றோர் சான்றோர் பட்டியல் நீண்டு கொண்டு போகும்... ; இப்போதும் நம் வாழ்நாள் காலத்தில் நம் கண்முன்னே தமிழும் தமிழ் நிலங்களும் & தமிழரும் அழிந்து கொண்டிருப்பது ஏன் ?

    ✪அந்த அடிப்படையில் அன்று தஞ்சை பெரிய கோயில் சந்தித்தது தமிழர் அழிப்பு & தமிழ் மொழி அழிப்பு நடவடிக்கையின் உச்ச கட்ட கொடுமை ஆகும். அதற்கு சாட்சியாக இருப்பது ராச ராச கோயில் கல்வெட்டுக்களில் இருக்கும் தூய தமிழை அழிக்க வந்த சம்ஸ்கிருத மயமான கிரந்த எழுத்து முறை பதிக்கப் பட்டிருக்கும் சாட்ச்சியாகும் .

    ✪தமிழர்கள் , சமசுருதமயமான மணிப்பிரவாளம் எனும் தமிழ் உச்சரிப்பு முறையை ஏற்காதவர்கள்... அப்படி இருக்கும் போது அதே நிலையில் தமிழ் எழுத்தியல் உருவை சீர்குலைக்க வந்த சமசுகிருத மயமான தமிழ் கிரந்த முறையை எப்படி ஏற்று இருப்பார்கள்....;

    -மணிப்பிரவாளம் என்பது தமிழை சமசுகிருதமாக பேசுவது....உச்சரிப்பது & எழுதுவது.

    -தமிழ் கிரந்தம் என்பது தமிழ் எழுத்துக்களை அதன் அடிப்படையில் இருந்தே எழுத்தியல் உருமாற்றம் செய்து சமசுகிருதம் ஆக்குவது.

    ✪மேற்கண்ட 2 முறையுமே தமிழை , அதன் செம்மையை , தூய்மையை அழிக்க பேரளவில் போராடிய கீழறுப்பு சமசுகிருதவாதிகளின் தொடர் முயற்சியாகும் ... ; அந்த முயற்சிகளை மிகுந்த கடப்பாடோடு இருந்து தமிழின் தூய்மையைக் காத்தவர்கள் தமிழ் அறிஞர்கள் , ஆனால் , அப்படியொரு உச்சகட்டப் போராட்டத்தில் வெகு ஆதியாக நின்று தோற்றுப் போனவரே தஞ்சைப் பெரிய கோயில் அமைக்க காரணமாக இருந்த அம்மாபெரும் சித்தர் ...

    அதன் விளைவாக எவ்வளவு துயரங்கள் நிகழ்ந்திருக்கும் என சிந்திக்க வேண்டும் நமது இன்றைய தமிழர்கள்.....

    http://books.gurudevar.org/…/boo…/11th-peedam1/docu0009.html

    http://books.gurudevar.org/…/boo…/11th-peedam1/docu0010.html

    http://books.gurudevar.org/…/boo…/11th-peedam1/docu0011.html

    http://books.gurudevar.org/…/boo…/11th-peedam1/docu0012.html

    http://books.gurudevar.org/…/boo…/11th-peedam1/docu0013.html

    ReplyDelete
  20. தஞ்சை பெரிய கோவில் இன்று தமிழரிடம் இல்லை.அங்கே பல அழிப்புகள் நடந்தது உண்மை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com