மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

11.5.11

Astrology தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி; தனியே நிற்பேன் எனச் சொல்லடி!

-----------------------------------------------------------------------------
Astrology   தந்ததை மீண்டும் பெறச் சொல்லடி; 
                      தனியே நிற்பேன் எனச் சொல்லடி!

இதற்கு முந்தைய பதிவைப் படித்திராதவர்கள். அதைப் படித்து விட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
---------------------------------------------------------------------------------------------------
எனக்கு தினமும் காதலர்களிடம் இருந்து 3 அல்லது 4 மின்னஞ்சல்கள்  வரும். 75 சதவிகிதம் பெண்களிடம் இருந்து வரும்

“நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவர் வேறு மதத்தவர். எங்கள் காதல் நிறைவேறுமா? எங்கள் வீடுகளில் ஒப்புக்கொள்வார்களா? எங்கள் காதலை ஏற்றுக் கொள்வார்களா? என்னுடைய ஜாதகத்தை அனுப்பி வைத்துள்ளேன். ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள். அவருக்கு ஜாதகம் கிடையாது”

என்று இந்த விதமாகத்தான் பல கடிதங்கள் இருக்கும்.

சிலர் அவசரத்தில் வந்து பஸ்ஸில் ஏறிவிடுவார்கள். பஸ் பேருந்து நிலையத்தை விட்டுப் பத்துக் கிலோ மீட்டர் தூரம் வந்தவுடன், பயணச் சீட்டு எடுக்கும்போதுதான், பேருந்து மாறி ஏறிய கதை தெரியும்.. மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்ஸில் ஏறிவிட்டு, திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்டால் எப்படி இருக்கும்?

நடத்துனரின் காய்ச்சலுக்கு ஆளாகி, சக பயணிகளின் பரிதாபப் பார்வைக்கு அல்லது ஏளனப் பார்வைக்கு ஆளாகி, வழியில் விளாங்குடி தாண்டி அல்லது கொடை ரோடு தாண்டி நடு ரோட்டில் இறங்கிவிடும்படி ஆகிவிடும்.

அதுபோலத்தான் அவசரக் காதலும். காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மைதான்.

அந்தக் காலத்தில் காதலுக்கு எல்லாம் வழியில்லாமல் இருந்தது. நூற்றுக்கு ஒரு பெண்தான் மாட்டுவாள். பெண்ணிடம் பேசினாலே வெட்டி விடுவார்கள். ஓரப் பார்வை மட்டும் பார்த்துக்கொள்ளலாம் - அதுவும் திருவிழாக்கள் அல்லது கோவில்களுக்கு வரும் பெண்களை மட்டும் லுக்’ விட்டுக் கொள்ளலாம். இன்று அப்படியல்ல! நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.

Education (கல்வி)
Employment (வேலை)
Economical freedom (பொருளாதார சுதந்திரம்)
Exposure (கண்ணோட்டம்)
Ego (தன்முனைப்பு)

என்று பல மேட்டர்கள் ஒன்று சேர்ந்து பெண்களை ஆட்டிப் படைக்கின்றன.

அந்தக் காலப் பெற்றோர்கள் ஆண்களை அடக்கி வளர்த்தார்கள். பெண்களைப் பொசுக்கி வளர்த்தார்கள்   இப்போது நிலைமை தலைகீழ். பிள்ளைகள் பெற்றோர்களைப் பொசுக்கி வளர்கின்றன.

மேரி ப்ரெளவுன் அல்லது சப்வே ரெஸ்டாரெண்டுகளில் காதல் ஆரம்பிக்கும், பல்ஸர் மோட்டார் சைக்கிளிலும், கடற்கரைகளிலும், அது இல்லாத ஊர்களில் பூங்காக்களிலும், சினிமா தியேட்டர்களிலும் காதல் வளரும். SMS, email களில் சூடு பிடித்து உள்ளங்கள் உருக ஆரம்பிக்கும். இரண்டு அல்லது மூன்று வருட காலங்கள் தங்களையே மறந்து திரிவார்கள்.

யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள், மறைந்து, மறைந்து காதலிப்பார்கள். மோட்டார் சைக்கிளில் போகும்போது, கள்ளன் ஹெல்மட் போட்டுக் கொள்வான். பில்லியனில் உட்கார்ந்திருக்கும் கள்ளி, துப்பட்டவால், தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, அவன் முதுகில் முகத்தை வைத்து இறுகக் கட்டிக்கொண்டு யாரும் பார்க்க முடியாத வண்ணம் செல்வாள். மங்கலான வெளிச்சத்தில் இயங்கும் ரெஸ்டாரெண்டுகள், படம் ஓடிக் கொண்டிருக்கும் திரையரங்குகள், படகின் மறைவுப் பகுதி என்று காதல் பலவண்ணங்களில் பூத்துக் குலுங்கும்.

பூத்த பூக்கள் காயாகி, கனியும்போதுதான் பல பிரச்சினைகள் உருவாகும். பல இடங்களில் இரு புறமும் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

காதலுக்கு மட்டும்தான் சுக்கிரன் வருவார். திருமணத்திற்கு, ஏழாம் வீட்டு அதிபதி, லக்கினாதிபதி, தந்தைக்குக் காரகன் சூரியன், தாய்க்குக் காரகன் சந்திரன் என்று அத்தனை பேரும் வந்து நிற்பார்கள். அவர்களின் ஆசி இல்லாமல், டக்’ கென்று திருமணம் நடந்து விடாது.

அந்த நிலையில் ஜாதகத்தையும் பார்த்தால் என்ன ஆகும்?

இருவரின் ஜாதகமும் பொருந்தினால் பரவாயில்லை. பொருந்தா விட்டால் என்ன செய்வது?

அவனை அல்லது அவளை வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா?

சென்னை சில்க்ஸிலும், போத்தீஸிலும் வாங்கிய சேலை பிடிக்கவில்லை என்றால், அடுத்த நாள் சென்று மாற்றிக் கொண்டு வருவதைப் போல, காதலனையும் மாற்றிக் கொண்டுவிட முடியுமா?

கழற்றிவிட்டால் அவன் சும்மா இருப்பானா? மூன்று வருட அல்லது நான்கு வருடத் தொடர் காதலுக்கு, எத்தனை ஆதாரங்கள் அவனிடம் சிக்கி இருக்கும்? அவற்றை வைத்துக் கொண்டு அவன் பிரச்சினை செய்ய மாட்டானா?

திருமணத்திள் பிரச்சினை என்றால், விவாகத்தை ரத்து செய்யக் கோரி நீதி மன்றப் படி ஏறலாம். காதலில் பிர்ச்சினை என்றால் எந்தப் படியில் ஏறுவது?

ஆகவே காதல் என்று வந்து விட்ட பிறகு, ஜாதகத்தைத் தொடாதீர்கள். வருவது வரட்டும் என்று ஜாதகத்தைப் பார்க்காமல் காதலித்தவனையே அல்லது காதலித்தவளையே திருமணம் செய்து கொள்ளூங்கள். துணிச்சலாக எடுத்துச் சொல்லிப் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுத் திருமணம் செய்து கொள்ளுங்கள். சம்மதிக்காவிட்டால், போராடி, உண்ணாவிரதம் இருந்து சம்மதத்தைப் பெறுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும், பெற்றோர்களுக்குத் தெரியாமல், திருட்டுத் தனமாகத் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

குறைந்தது 21 ஆண்டுகள் உங்களைத் தூக்கி வளர்த்தவர்கள், போற்றி வளர்த்தவர்கள் அவர்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களின் மன வேதனைக்கு ஆளாகாதீர்கள். அதிலும் குறிப்பாக அன்னையின் மன வேதனைக்கு ஆளாகிவிடாதீர்கள். அன்னையின் மன வேதனை உங்களைச் சும்மா விடாது. அதை மனதில் வையுங்கள்.

காதலுக்கு உதாரணம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார். இறைவனை அவள் காதலித்தாள். மாயக் கண்ணன்தான் தனக்கு மனாளனாக வர வேண்டும் என்று ஏங்கினாள். உருகினாள். அனுதினமும் கண்ணன் நினைவாக வாடினாள்.

கண்ணன் வந்து தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கனவு கண்டாள். அதை, அந்தக் கனவை,” வாரணமாயிரம் சூழவலம் செய்து” என்று தொடங்கிப் பாடினாள். ஆண்டாள் நாச்சியார் கண்ட வாரணமாயிரக் கனவு அப்படியே பலித்தது.

”இம்மைக்கும் ஏழேஏழ் பிறவிக்கும் பற்றாவான்
    நம்மை உடையவன் நாராயணன் நம்பி
 செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
    அம்மி மிதிக்கக் கனாக்கண்டே தோழிநான்’


என்று அவள் பாடினாள். பாடியது நடந்தது.

மாதவனைத் தவிர வேறொரு நாதனை மனதில் நினைக்காமல் வாழ்ந்தவள் ஆண்டாள். தேவர்களுக்கு உரிய  வேள்விப் பொருட்களை, ஒரு முறை நரி ஒன்று நுழைந்து முகர்ந்து பார்த்ததாம். எம்பெருமான் கண்ணனுக்கு என்று வளர்ந்த உடம்பு இது. எந்த மானிடனும் இதைத் தொட விடமாட்டேன் என்று மனவுறுதியோடு இருந்தவள் ஆண்டாள். அதையும் ஒரு பாசுரத்தில் அற்புதமாக அவள் வெளிப்படுத்தினாள்.

   “வானிடை வாழும் அவ்வானவர்க்கு
       மறையவர் வேள்வியில் வகுத்த அவி
    காளிடை திரிவதோர் நரிபுகுந்து
       கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
    ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க் கென்று
       உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
    மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
       வாழகில் லேன் கண்டாய் மன்மதனே!


ஆண்டாளின் இந்த நிலைப்பாட்டைக் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாகத் திரைப் பாடல் ஒன்றில் பதிவு செய்தார். எளிமையாகப் பதிவு செய்தார்

    கண்ணன் முகம் கண்ட கண்கள்
       மன்னர் முகம் காண்பதில்லை
    கண்ணனுக்குத் தந்த உள்ளம்
       இன்னொருவர் கொள்வதில்லை
    கண்ணன் வரும் நாளில்
       கன்னி இருப்பேனோ - காற்றில் மறைவேனோ!


காதல் என்று வந்து விட்டால் ஆண்டாளாக மாறிவிடுங்கள். காதலித்தவனையே திருமணம் செய்து கொள்ளுங்கள். காதலிக்கும் முன்பு, காதலனைப் பற்றிய எல்லா விவரங்களையும் நன்கு தெரிந்து கொண்டு, காதலிக்கத் துவங்குங்கள். அவசரக் காதல், மேட்னி ஷோக் காதல் எல்லாம் வேண்டாம். வேண்டவே வேண்டாம். காதலிக்கும் முன்பாகவே அவன் ராமனா அல்லது ராவணனா என்று தெரிந்து கொண்டு காதல் செய்யுங்கள். உங்கள் மொழியில் சொன்னால், அவன் நாயகனா அல்லது வில்லனா என்று தெரியாமல் அவன் மீது காதல் வயப்பட்டுவிடாதீர்கள்.

காதல் புனிதமானது. காதல் கல்யாணத்தில்தான் முடிய வேண்டும். பயணம் போய்ச்சேர வேண்டிய இடத்தில்தான் (destination) முடிய வேண்டும். வழியில் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் முடியக்கூடாது.

அகவே காதலில் மூழ்கிக் கிடப்பவர்கள், ஜாதகங்களைத் தேடாதீர்கள்.

ஜாதகங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், காதல் என்ற சூறாவளியில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

காதல் திருமணங்களுக்கான ஜாதக அமைப்பு என்ன? காதல் திருமணமாகட்டும் அல்லது பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணமாகட்டும், அது தோல்வியில் முடியாமல் இருக்க, ஜாதக அமைப்புக்கள் என்னென்ன என்பன பற்றி தொடர்ந்து அலசுவோம். பொறுத்திருந்து படியுங்கள்.

கட்டுரையின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும், என்னுடைய தட்டச்சும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்.

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

6 comments:

kmr.krishnan said...

ஏற்கனவே தங்கள் க‌ருத்தை நாங்கள் அறிவோம். இந்த அறிவுரை பிரசுரமானதுதான். மீள்வாசிப்பும் சுவையாகவே உள்ளது.அதுவும் ஆண்டாள்
பாசுரத்தை இளைஞிகளுக்கு அறிமுகப்படுத்தியது அருமையிலும் அருமை.

Unknown said...

///// “வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
காளிடை திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க் கென்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன் கண்டாய் மன்மதனே////

என்ன ஒரு சுய மரியாதை... தன்னைப் பற்றிய ஒரு உயர்ந்த சிந்தனை...
நான் வேள்விப் பொருள், ஆகுதி என்னை நரிகள் முகர அனுமதிக்க மாட்டேன்...
என்று ஒரு மானுடப் பெண், தெய்வத்தை மணக்க சூடிக் கொடுத்தே தவமிருந்தால்...

இந்த எண்ணம் (அது கர்வமாக கூட இருக்கலாம்) தன்னையும்,
தான் சார்ந்த குடும்பத்தையும் (தாய், தந்தை),
பற்றிய ஒரு உயர்ந்த நினைப்பு உள்ளவர்கள் பெரும்பாலும்
இதை சரியாக கையாள்வார்கள்....

உணர்ச்சி என்னும் வெள்ளத்தில் தத்தளிக்கும் போது அறிவென்னும் படகேறினால்
அது பக்குவமாக காதலூர் வழியாக திருமணம் என்னும் சொர்க்கபுரிக்கு அழைத்துச் செல்லும்....

செய்யாதே! என்பது இந்த கால நிலையில் சாத்தியமில்லை என்றாலும்....
என்ன செய்யவேண்டும்!! என்ற உங்களது ஆலோசனை அருமை ஐயா!
காலகாலமாக வாத்தியார்கள் சொல்லிக் கொண்டே தான் வருகிறார்கள்....
புத்தி உள்ளவர்கள் புரிந்து கொள்ளட்டும்!!!!............ நன்றி.

Unknown said...

//எந்த மானிடனும் இதைத் தொட விடமாட்டேன் என்று மனவுறுதியோடு இருந்தவள் ஆண்டாள். அதையும் ஒரு பாசுரத்தில் அற்புதமாக அவள் வெளிப்படுத்தினாள்.//

தன் உடல் என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. தன் உடலில் ஒரு உறுப்பை சுட்டி காட்டி அதைச் சொல்கிறார் பாருங்கள்.

”ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க் கென்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்”

இது போல் வரிக்கு வரி ரசித்து படிக்கவும் அல்லது படித்து ரசிக்கவும் சுக்கிரனின் அருள் வேண்டும்.

Unknown said...

///தன் உடல் என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. தன் உடலில் ஒரு உறுப்பை சுட்டி காட்டி அதைச் சொல்கிறார் பாருங்கள்.

”ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க் கென்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்”

இது போல் வரிக்கு வரி ரசித்து படிக்கவும் அல்லது படித்து ரசிக்கவும் சுக்கிரனின் அருள் வேண்டும்.///
யாவரும் அறிந்தது என்றாலும் இதனை இங்கே மீண்டும் சொல்லத் தகும்...
நமது இலக்கியங்களில் அதுவும் புராண இதிகாசப் படைப்புகளிலும், மேலே கூறியது போன்ற
பக்திப் பாடல்களிலே மனித உறுப்பைக் கூறுங்கால்..... எந்த பேதமும் இல்லாமல் எல்லா உறுப்புகளையும்
ஒரே மாதிரியாகவே கருதி இருக்கிறார்கள் என்பதாகும்....

சில உதாரன்களைப் பார்ப்போம்...

//முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு /// - நல்வழி ஒளவையார்.

//கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்./// - தகையணங்குறுத்தல் - திருவள்ளுவர்.

///42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே. -அபிராமி அந்தாதி அபிராம பட்டர்.

இதற்கு கவியரசின் உரை கீழே.

அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே .

கம்ப ராமாயணத்தில் கபர் தரும் காட்சிகளும் விஞ்சி நிற்கும்... ஸ்ரீ ராமனை வீதியில் கண்ட பெண்டிரின் நிலையை படம் பிடிப்பார்..

சீவக சிந்தாமணி பாடல்களை விவரித்தால் வகுப்பறையில் இடம் கிடைக்காது....

காலம் மாறியது.. காட்சியும் மாறியது என்பதாக... இன்றைய நிலை வேறு...

சமநிலையோடு... மன நிலை இன்று நம்மிடம் (என்னையும் சேர்த்து) யாருக்கும் இல்லை கலியுகம் இப்படித்தான் போலும்..

நண்பர் ஆனந்த் சொன்னது போல் சுக்கிரன் மட்டும் அல்ல.. புதனும் வக்கிரம் பெறாமலும் சனியும் லக்னத்தில் அமராமலும் இருக்க வேண்டும்

Unknown said...

ரெண்டு நாளா கிளாஸ்ரூம் களைகட்டி எல்லோரையும் ஏகத்துக்கும் உசுப்பேத்திவிட்டாப் போலத்தெரியுதே..
வாத்தியாருக்கே இது நல்லதாப் படுதா?

வேப்பிலை said...

காதல் ...
காலம் காலமாக தொடர்வது.. அது

தொட்டவரையும் அவர்களோடு
தொக்கி நிற்கும் உறவுகளையும்

தொடவிடாமல் செய்து விடுவது
தொடர்புடைய காதலால் அல்ல..

தோற்பதெல்லாம் காதல் அல்ல-காதல்
தோற்பதும் இல்லை என்றால் ..

காதலை புரிந்து கொண்டு
காதலை காதலித்தால்..

காதலில் களிக்கும்
காதலர்களுக்கும் இனிக்கும்

எத்தனை பேரை பார்த்தாலும்
ஏனோ ஒருவர் மீது மட்டும் காதல்

அது

உணர்வு நிலையா இல்லை
உறவு முறையா..

அறிந்து கொண்டால்
அனுபவம்துளிர்க்கும்

புரிந்து கொண்டால்
புதிதாய் இனிக்கும்

தெரிந்து கொண்டால்
தெளிவாக மனம் களிக்கும்

உணர்ந்து கொண்டால்
உண்மையிலே பூக்கும்..