Astrology ஜோதிடம்; நீங்களும் நானும் குளிகையும்!
குளிகை என்றால் என்ன? அதனை எவ்வாறு கணக்கிடுகிறார்கள்? அந்த நேரத்தில் என்ன காரியங்கள் செய்யலாம்?
ராகு காலம், எமகண்டம் போன்று குளிகை என்ற கால நேரத்தினையும் பஞ்சாங்கம் மற்றும் காலண்டர்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். சனி கிரகத்தினுடைய துணைக்கோள் குளிகன். இந்த குளிகன் ஒவ்வொரு நாளும் பூமியின் மீது உண்டாக்கும் தாக்கத்திற்கான கால அளவினை குளிகை என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள். குளிகனை சனியின் மைந்தன் என்று சொல்வோரும் உண்டு. ஒரு முகூர்த்த காலம் என்பது மூன்றேமுக்கால் நாழிகை அல்லது ஒன்றரை மணி நேரம் என்று பிரித்திருக்கிறார்கள். ஒரு நாள் என்பது பகலில் எட்டு முகூர்த்தம், இரவில் எட்டு முகூர்த்தம் ஆக மொத்தம் 16 முகூர்த்த கால அளவினை உள்ளடக்கியது ஆகும்.
சராசரியாக ஆக பகல் பொழுது 12 மணி நேரம் என்று வைத்துக் கொண்டால் ஒரு முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேர கால அளவு ஆகும். குளிகனை சனியின் மைந்தன் என்பதை நினைவில் கொண்டு சனிக்கிழமை அன்று துவக்க முகூர்த்தமான காலை ஆறு மணி முதல் ஏழரை மணி வரை குளிகனின் காலம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
அதிலிருந்து தலை கீழாக அதாவது சனி, வெள்ளி, வியாழன் என்ற வரிசையில் ஒவ்வொரு முகூர்த்தமாக கூட்டிக் கொண்டே வர குளிகையின் கால அளவு வரக் காண்பீர்கள். சனி காலை 06.00 - 07.30, வெள்ளி - 07.30 - 09.00, வியாழன் - 09.00 - 10.30, புதன் - 10.30 -12.00, செவ்வாய் - 12.00 - 01.30, திங்கள் -01.30-03.00, ஞாயிறு - 03.00- 04.30 என்று குளிகையின் கால அளவு கணக்கிடப்பட்டிருக்கும்.
இது அந்தந்த இடத்தின் சூரிய உதயத்திற்கு ஏற்ப மாறுபடும். உதாரணத்திற்கு குறிப்பிட்ட தேதியில் சேலம் மாநகரில் சூரிய உதயம் காலை 06.15 மணி என்று வைத்துக்கொண்டால் மேற்சொன்ன அளவுகளில் 15 நிமிடத்தை கூட்டிக்கொள்ள வேண்டும். பொதுவாக குளிகை நேரத்தில் செய்கின்ற காரியங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். எனவே அந்த நேரத்தில் சுபகாரியங்களைச் செய்யலாம்.
அசுப காரியங்களைச் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகிவிடும். வங்கியில் சேமிப்புக் கணக்கு துவக்குதல், சொத்து வாங்கி பத்திரப் பதிவு செய்தல், நகை வாங்குதல் முதலான செயல்களை குளிகை நேரத்தில் செய்யலாம். அடிப்படையில் குளிகையில் செய்யும் செயல் மீண்டும் மீண்டும் தொடரும் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா
NANDRI: DINAKARAN AANMEEGAM
-----------------------------------------------------
படித்தேன், பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===================================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com