மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.1.17

சைவசித்தாந்தம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!!!

சைவசித்தாந்தம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!!!!

70 வினாவிடையில் சைவசித்தாந்த சுருக்கம்*

*சைவம்*

*1. சைவம் என்றால் என்ன?*
மனிதன் வாழ்வை வழிப்படுத்துவது சமயம்.

*2. சைவம் என்றால் என்ன?*
சைவம் என்றால் சிவ சம்பந்தமுடையது என்பது பொருள்.

*3. சைவ சமயம் எப்போது தோன்றியது?*
சைவ சமயம் அநாதியானது. அநாதி என்றால் ஆதி அற்றது (தொடக்கமில் காலம் தொட்டு) என்பது பொருள்.

*4. யார் சைவர்?*
சிவபெருமானை முழுமுதற் கடவுள் என உணர்ந்து வழிபடுபவரே சைவர்.

*5. சைவ சமயத்தின் முக்கிய நூல்கள் யாவை?*
பதினான்கு சாத்திரங்களும், பன்னிரண்டு திருமுறைகளும்.

*6. சமயக் குரவர்கள் யாவர்?*
1. திருஞான சம்பந்த நாயனார்
2. திருநாவுக்கரசு நாயனார்
3. சுந்தரமூர்த்தி நாயனார்
4. மாணிக்கவாசகர்

*7. அகச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. திருநந்தி தேவர்
2. சனற் குமாரமுனிவர்
3. சத்திய ஞான தரிசினிகள்
4. பரஞ்சோதி முனிகள்

*8. புறச்சந்தானக் குரவர்கள் யாவர்?*
1. ஸ்ரீ மெய்கண்டதேவ நாயனார்
2. அருள்நந்தி சிவாச்சாரியார்
3. மறைஞான சம்பந்தர் சுவாமிகள்
4. உமாபதி சிவாச்சாரியார்

*9. திருமுறை மற்றும் சாத்திரங்களின் அமைப்பு எவ்வாறு உள்ளது?*
திருமுறைகள் சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் புகழ் நூல்களாக் அமைந்திருக்கின்றன.
சாத்திரங்கள் சைவ சமயத்தின் கொள்கைகளை விளக்கும் பொருள் நூல்களாக அமைந்துள்ளன.

*10. திருமுறை என்ற சொல்லுக்குப் பொருள் யாது?*
முறை என்னும் சொல் நூல் என்னும் பொருளை உடையது. திருமுறை என்பது மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பது பொருள்.
இந்நூல் 12 பகுதிகளாக தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை என்று போற்றப்படுகிறது.

*11. திருமுறைகள் பிரணவத்துள் அடங்கும் என்பதை விளக்குக?*
பன்னிரு திருமுறையில் முதல் பாடல் 'தோடு' என்னும் சொல்லுடன் தொடங்கி, இறுதிப் பாடலில் 'உலகெலாம்' என்ற சொல்லுடன் முடிகிறது. தோடு என்பதில் முதல் எழுத்து ஓ உலகெலாம் என்பதில் ஈற்றெழுத்து ம் ஆகும்.

*12. திருமுறைகளை முறையாக வகைப்படுத்தியவர் யாவர்?*
திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருக்குப் பூசைகள் செய்து அவரிடம் நேரடியாக உபதேசம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள்.
இராசராச சோழர் காலத்தில் பொல்லாப் பிள்ளையார் அருளினால் நம்பியாண்டார் நம்பிகள், மறைத்து வைக்கப்பட்டிருந்த தேவாரங்களை எடுத்து தொகுத்து அருளினார்கள்.

*13. திருமுகப் பாசுரம் யார் அருளிச் செய்தது?*
திருமுகப்பாசுரம் சிவபெருமானால் அருளிச் செய்யப்பட்டது. இப்பகுதி பதினொராம் திருமுறையில் அமைந்திருக்கிறது.

*14. பஞ்சபுராணம் குறிப்பு தருக.*
மூவர் தேவாரங்களில் ஒரு பாடலும், திருவாசகத்தில் ஒரு பாடலும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடலுமாக மொத்தம் ஐந்து பாடல்கள் பாடுவது பஞ்சபுராணம் எனப்படும்.

*15. அகத்தியர் தேவாரத் திரட்டு - குறிப்பு தருக*
அகத்திய முனிவர் 'அடங்கள் முறை' முழுவதையும் சிவாலய முனிவருக்கு உபதேசித்து. அவற்றில் இருந்து 25 பதிகங்களை திரட்டி ஒரு நூலாக செய்து அருளினார். அந்நூலே அகத்தியர் தேவாரத் திரட்டு ஆகும். இதில் 8 நிலைகள் உள்ளன.
1. குருவருள்
2. பரையின் வடிவம்
3. அஞ்செழுத்து
4. கோயில் திறம்
5. சிவன் உருவம்
6. திருவடிகள் பெருமை
7. அருச்சனைச் சிறப்பு
8. அடிமைத் திறம்

*16. தேவார அருள்முறைத் திரட்டு -குறிப்பு தருக.*
மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்களை திருவருட்பயன் என்னும் சாத்திர நூலில் வரும் பத்து தலைப்புகளில் உமாபதிசிவம் ஒரு நூல் அருளியுள்ளார். அந்நூலுக்கு தேவார அருள்முறைத் திரட்டு என்று பெயர். அந்நூலில் 99 தேவாரப் பாடல்கள் உள்ளன.

*17. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை பாடல்கள்?*
18,497 பாடல்கள்.

*18. மூவர் பெருமக்கள் பாடிய மொத்த பதிகங்கள் எவ்வளவு?*
மொத்தம் பாடியவை கிடைத்தவை
திருஞான சம்பந்த சுவாமிகள் 16,000 383
திருநாவுக்கரசு சுவாமிகள் 49,000 312
சுந்தரமூர்த்தி சுவாமிகள் 38,000 100=மொத்தம் 1,03,000 795

*19. நால்வர் பெருமக்களின் அவதாரத் தலங்கள் எவை?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - சீர்காழி
திருநாவுக்கரசு சுவாமிகள் - திருவாமூர்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - திருநாவலூர்
மாணிக்கவாசகர் - திருவாதவூர்

*20. நால்வர் பெருமக்கள் இப்பூவுலகில் வாழ்ந்த காலம் எவ்வளவு?*
திருஞான சம்பந்த சுவாமிகள் - 16 ஆண்டுகள்
திருநாவுக்கரசு சுவாமிகள் - 81 ஆண்டுகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் - 18 ஆண்டுகள்
மாணிக்கவாசகர் - 32 ஆண்டுகள்

*21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?*
சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

*22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?*
அறுபத்து மூவர்.

*23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் ் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?*
சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப•றொடை
தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்

*24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?*
பரஞ்சோதி முனிகள்

*25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?*
49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

*26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?*
திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

*27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?*
1. சிவஞான சித்தியார்
2. இருபா இருப•து

*28. சித்தாந்த அட்டகம் - விளக்குக*
பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.
1. சிவப்பிரகாசம்
2. திருவருட்பயன்
3. உண்மை நெறி விளக்கம்
4. போற்றிப் ப•றொடை
5. கொடிக்கவி
6. வினா வெண்பா
7. சங்கற்பநிராகரணம்
8. நெஞ்சு விடுதூது
என்பவையே அந்த எட்டு நூல்கள்.

*29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?*
வாகீச முனிவர்

*30. வேதங்கள் - குறிப்பு தருக.*
வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

*31. ஆகமங்கள் - குறிப்பு தருக.*
ஆகமங்களும் சிவபிரானால் சிறப்பாக சைவர்களுக்கு அருளிச் செய்யப்பட்டன. சிவ ஆகமங்கள் 28 உள்ளன. சைவசமயம் வேதத்தைப் பொது எனவும், ஆகமத்தை சிறப்பு எனவும் கருதுகிறது.

*32. சமயங்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?*
அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறபுறச்சமயம் என நான்கு வகைப்படும்.
அகச்சமயம் அகப்புறச்சமயம்
1. பாடாணவாத சைவம் 1. பாசுபதம்
2. பேதவாத சைவம் 2. மாவிரதம்
3. சிவசமவாத சைவம் 3. காபாலம்
4. சிவசங்கிராந்தவாத சைவம் 4. வாமம்
5. ஈசுவர அவிகாரவாத சைவம் 5. பைரவம்
6. சிவாத்துவித சைவம் 6. ஐக்கியவாத சைவம்
புறச்சமயம் புறப்புறச்சமயம்
1. நியாயம் 1. உலகாயதர்
2. சாங்கியம் 2. சமணர்
3. யோகம் 3. செளத்திராந்திகர்
4. மீமாஞ்சை 4. யோகசாரர்
5. வேதாந்தம் 5. மாத்யமிகர்
6. பாஞ்சராத்திரம் 6. வைபாடிகர்

*33. சைவசித்தாந்தம் - ஒரு வார்த்தையில் விளக்கம் தருக.*
முடிந்த முடிபு.

*34. சைவ சித்தாந்தர் என்ற குறிப்பினைத்தரும் திருமுறை எது?*
திருமந்திரம்
"கற்பனைக் கற்று கலைமன்னும் மெய்யோகம்
முற்பத ஞானம் முறைமுறை நண்ணியே
சொற்பதங் கடந்து துரிசற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித்தாந்தரே"

*35. சைவ சித்தாந்த தத்துவத்தின் சிறப்பு யாது?*
1. தர்க்க ரீதியானது (Logic)
2. அறிவியற் பூர்வமானது (Scientific)
3. வரலாற்றுத் தொன்மையுடையது (Historic)
4. நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt)
5. உலகளாவியது (Universal)
6. முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic)
இன்னும் பல.

*36. சற்காரிய வாதம் - சிறுகுறிப்பு தருக.*
'உள்ளது அழியாது, இல்லது தோன்றாது' என்ற விஞ்ஞான அடிப்படையில் தான் சைவசித்தாந்த தத்துவம் தனது கொள்கைகளை நிலைநிறுத்துகிறது.

*37. அளவை - குறிப்பு தருக.*
நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை போல உலகப் பொருள்களை அளப்பதற்கு பலவிதமான அளவை முறைகள் இருப்பவை போல சமய உலகிலும் பல அளவைகள் பேசப்படுகின்றன. குறிப்பாக மூன்று அளவைகள்.
1. காட்சி அளவை - (பிரத்தியட்சப் பிராமணம்)
2. கருதல் அளவை - (அனுமானப் பிராமணம்)
3. உரை அளவை - (ஆகமப் பிராமணம்)
மேலும் பல அளவை முறைகள் இருப்பினும் பொதுவாக அவைஎல்லாம் மேற்சொன்ன மூன்றில் அடங்கும்.

*38. சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்கள் யாவை?*
1. இறைவன் - பதி
2. உயிர் - பசு
3. மலம் - பாசம்
இம்மூன்று பொருள்களுக்கும் உரிய தொடர்பினை கீழ்வரும் திருமந்திரப் பாடல் விளக்குகின்றது.
"பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு, பாசம் அநாதி
பதியினைச் சென்று அணுகா பசு பாசம்
பதி அணுகிற் பசு பாசம் நில்லாவே"

*39. முப்பொருள்களும் அறிவுடைப் பொருள்களா?*
இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

*40. பொருள்களின் இரண்டு இயல்புகள் யாவை?*
பொருள்களுக்கு பொது இயல்பு, சிறப்பு இயல்பு என இரண்டு இயல்புகள் உண்டு.
பொது இயல்பு
ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் சார்பால் உண்டாகி, அச்சார்பு நீங்கிவிடும் போது நீங்கி விடும் இயல்பு.
(எ.கா) நீரில் வெம்மை
சிறப்பு இயல்பு
ஒரு பொருளுக்கு எச்சார்ப்புமின்றி இயற்கையாகவே அமைந்திருக்கும் இயல்பு.
(எ.கா) நீரின் குளிர்ச்சி

*41. இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் யாவை?*
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

*42. மும்மூர்த்திகள் யாவர்?*
படைத்தல் தொழிலைச் செய்யும் - பிரமன்
காத்தல் தொழிலைச் செய்யும் - திருமால்
அழித்தல் தொழிலைச் செய்யும் - உருத்திரன்
இவர்களே மும்மூர்த்திகள். இம்மும்மூர்த்திகளின் மேம்பட்டவர் சிவபெருமான். இவர்கள் சிவபெருமான் அருளினால் இந்தத் தொழிலைச் செய்யும் உருத்திரன் குணிஉருத்திரன். சிவபெருமான் மகாஉருத்திரன். இவ்வேறுபாட்டினை சிவஞான மாபாடியத்தில் சிவஞான சுவாமிகள் தெளிவாக விளக்குகிறார்கள

*43. இறைவனின் எண்குணங்கள் யாவை?*
1. தன் வயம் உடைமை.
2. தூய உடம்பு உடைமை.
3. இயற்கை உணர்வு உடைமை.
4. முற்றுணர்வு உடைமை.
5. இயல்பாகவே பாசமின்மை.
6. பேரருள் உடைமை.
7. முடிவில் ஆற்றல் உடைமை.
8. வரம்பில் இன்பம் உடைமை.

*44. உயிர்களைத் தோற்றுவித்தவர் யார்?*
உயிர்களை யாரும் தோற்றுவிக்கவில்லை. அவை தோற்றமில் காலந்தொட்டே இருப்பவை என்று சைவசித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*45. உயிர்கள் எத்தனை வகைப்படும்?*
ஆணவமலம் மட்டும் உடைய விஞ்ஞான கலர், ஆணவம் மற்றும் கன்ம மலம் உடைய பிரளயா கலர், ஆணவம், கன்மம் மற்றும் மாயை என்ற மூன்று மலங்களும் உடைய சகலர் என உயிர்கள் மூவகைப்படும்.

*46. கேவலம், சகலம், சுத்தம் - குறிப்பு தருக.*
கேவலம்:
உயிர்கள் தம்மையும் அறியாமல், தமக்கு மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அறியாமல், தன்னை ஆணவம் என்ற மலம் முழுமையாக மறைத்திருக்கின்றது என்பதை அறியாத உயிரின் நிலை.
சகலம்:
கேவலநிலையில் இருந்த உயிர்களுக்கு மாயை மற்றும் கன்மத் தொடர்பினால் அறியாமை சிறிது குறைந்த நிலை.
சுத்தம்:
உயிர்கள், பாச நீக்கம் பெற்று இறைவனின் திருவடிகளை அடைந்து பேரானந்தத்தை அனுபவிக்கும் நிலை.

*47. உயிர்கள் அனுபவிக்கும் ஐந்து நிலைகள்(ஐந்தவத்தை) யாவை?*
1. நனவு - சாக்ரம்
2. கனவு - சொப்னம்
3. உறக்கம் - கழுத்தி
4. பேருறக்கம் - துரியம்
5. உயிர்ப்பு அடங்கல் - துரியாதீதம்

*48. மலங்கள் எத்தனை வகை? அவை யாவை?*
ஆணவம், கன்மம், மாயை என்று மூன்று வகைப்படும். மாயேயம், திரோதாயி என்று இரண்டையும் சேர்த்து மலங்கள் ஐந்து என்றும் விரித்துச் சொல்வார்கள்.

*49. ஆணவ மலத்தின் வேறு பெயர்கள் யாவை?*
இருள்மலம், மூலமலம், சகசமலம் என்று எல்லாம் ஆணவமலம் நூல்களில் பேசப்படுகின்றன. சாத்திர நூல்களில் 'இருள்' என்ற சொல்லால் பேசப்படும்.

*50. கன்ம மலத்தின் காரியங்கள் யாவை?*
சஞ்சிதம், பிரார்த்தம், ஆகாமியம் என மூன்றாகும்.
சஞ்சிதம்: (பழவினை)
பலபிறவிகளில் சேர்த்த வினைக்குவியல்
பிரார்த்தம்: (நுகர்வினை)
இப்பிறவியில் அனுபவிப்பதற்காக இறைவனால் நமக்குத் தரப்பட்ட வினைகள் (நம்மால் முன்செய்த வினைகளின் ஒரு பகுதி)
ஆகாமியம்: (வருவினை)
இப்பிறவியில் நாம் புதிதாக செய்யும் வினைகள்.

*51. வினை என்றால் என்ன?*
நாம் செய்யும் செயல்களே வினை எனப்படும். வினைகள் நல்வினை, தீவினை என இரண்டு வகைப்படும்.

*52. இன்ப துன்பத்திற்கான காரணம் என்ன?*
முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களுக்குத் தகுந்தவாறு பலன்களை இப்பிறவியில் அனுபவிக்கின்றோம். இறைவன் பெருங்கருணையின் காரணமாக நாம் செய்துள்ள மொத்த வினைகளையும் ஒரே பிறவியில் அனுபவிக்கத் தருவதில்லை. இப்பிறவியில் அனுபவிப்பதற்கு எனக் கொடுக்கப்பட்ட பிரார்த்த வினையின் வழி இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணம் நாம் முன்பு செய்த செயல்கள் தான் என சைவ சித்தாந்தம் தெளிவாக விளக்குகிறது.

*53. வினைக்குத் தகுந்தவாறு பலன்களை யார் நமக்குத் தருகிறார்கள்?*
வினைக்குத் தகுந்த பலன்களை வினைகளின் காரணமாகிய கன்மம் தர முடியாது. ஏனென்றால் அது சடப்பொருள். உயிர் தாமே சென்று வினைகளுக்குத் தகுந்த பலன்களை நுகர்வதில்லை. இறைவனே அந்த அந்த உயிர்கள் செய்த வினைக்குத் தகுந்த பலன்களைக் கூட்டி வைக்கிறான்.

*54. நாம் வாழும் இவ்வுலகைத் தோற்றுவித்தவர் யார்?*
மாயை என்னும் மலத்திலிருந்து உயிர்கள் நன்மை பெறும் பொருட்டு இறைவன் உலகத்தைப் படைத்தார்.

*55. மாயை - குறிப்பு தருக.*
மாயை என்பது மும்மலங்களில் ஒன்று. இம்மாயையின் காரியங்கள் 36 தத்துவங்களாக் விளங்குகின்றன. இம்மாயை சுத்தமாயை, அசுத்தமாயை என இரண்டு பகுதிகளாக நிற்கும். பிரகிருதி மாயை என்பது அசுத்தமாயைக்குள் அடங்கி நிற்கும். சுத்தமாயை, அசுத்தமாயை மற்றும் பிரகிருதி மாயை என மூன்றாகவும் கொள்வர். நாம் வாழும் இவ்வுலகம் பிரகிருதி மாயையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

*56. சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணிமுடி நூலாக விளங்குவது எது?*
சிவஞான போதம், சிவஞான சித்தியார் இதனுடைய வழிநூல் எனவும், சிவப்பிரகாசம் இதனுடைய சார்பு நூல் எனவும் போற்றப்படும்.

*57. கடவுளுக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு சைவ நூல்களில் எவ்வாறு சொல்லப்படுகிறது?*
'அத்துவிதம்' என்ற சொல்லினால் குறிக்கிறார்கள்.

*58. சைவ சித்தாந்தம் காட்டும் அத்துவிதம் யாது?*
இறைவன் ஒன்றாய், வேறாய் மற்றும் உடனாய் உயிர்களோடு கலந்து இருக்கின்றான். அந்தந்தப் பொருளுக்கு அந்தந்த பொருளாய் - அதுஅதுவாய் நிற்பதுவே ஒன்றாய் நிற்றல் ஆகும். இறைவன் உயிர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு உயிர்களின் வேறாய் நிற்கின்றான்.
உயிர்கள் தாம் விரும்பியவற்றை செய்வதற்கு இறைவனுடைய துணை தேவைப்படுகிறது. எனவே, உயிர்களோடு உடனாய் கூடி நிற்கின்றான்.

*59. சைவ சமயம் கூறும் வழிபாட்டு முறைகள் யாவை?*
குரு, லிங்க, சங்கம, வழிபாடு.
குரு வழிபாடு: நம்மிடம் உள்ள அறியாமையைப் போக்கும் ஞான ஆசிரியரையே சிவமாகவே கருதி வழிபடுவதாகும்.
லிங்க வழிபாடு: திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை லிங்க திருமேனியில் வழிபடுதல்.
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவமாகவே கருதி வழிபடுவது.

*60. சரியை, கிரியை, யோகம், ஞானம் - விளக்குக*
சரியை: உடலால் வழிபடுவது.
கிரியை: உடலாலும், உள்ளத்தாலும் வழிபடுவது.
யோகம்: உள்ளத்தால் வழிபடுவது.
ஞானம்: எங்கும் எதிலும் இறையருளையே காண்பது.

*61. திருவைந்தெழுத்து விளக்கம் தருக.*
திருவைந்தெழுத்து என்பது சிவாயநம என்னும் மந்திரமாகும்.
சி-சிவன்
வ-சக்தி(அருள்)
ய-உயிர்
ந-மறைப் பாற்றல்
ம-ஆணவ மலம்
என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளைக் குறித்து நிற்கிறது.
திருவைந்தெழுத்து மூவகைப்படும். நமசிவாய, சிவாய நம, சிவயசிவ என்பவை. இம்மந்திரமே பஞ்சாட்சர மந்திரம் என்று கூறப்படும்.

*62. தீக்கை என்றால் என்ன?*
தீக்கை என்பது தீட்சை என்னும் வடமொழி சொல்லின் திரிபு ஆகும்.
தீ-கெடுத்தல் ஷை-கொடுத்தல்
பாசப்பற்றைக் கெடுத்து மோட்சத்தை கொடுப்பது தீட்சை எனப்படும்.
இது மூன்று வகைப்படும் அவை
1. சமயம் 2. விசேடம் 3. நிருவாணம்

*63. இருவினை ஒப்பு என்றால் என்ன?*
நல்வினையின் பயனாகிய இன்பத்தில் விருப்பும், தீவினையின் பயனாகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாது. அவற்றால் உள்ளம் வேறுபடாது, இரண்டையும் ஒன்றுபோல் கருதி அவற்றின்மேல் பற்று இல்லாமல் நிற்கும் நிலையே இருவினை ஒப்பு எனப்படும்.

*64. மலபரிபாகம் என்றால் என்ன?*
கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர் அறிவை தடைப்படுத்தியும் திரிபுபடுத்தியும் செயல்படுவதால் படிப்படியே மெலிவடைந்து பின் மறைத்தலை செய்யமாட்டாத நிலையை அடையும். உயிர் அறிவை தடுத்து வைத்திருந்த அதன் பிணிப்பு நெகிழ்ந்து நீங்கும் நிலை அடையும். இந்நிலையே மலபரிபாகம் எனப்படும்.

*65. சத்திநிபாதம் என்றால் என்ன?*
மலரிபாகம் சிறிது, சிறிதாக நிகழ, நிகழ அதற்கு ஏற்ப இதுகாறும் உயிரில் மறைத்து இருந்து பக்குவப்படுத்தி வந்த இறைவனது திரோதான சக்தியும் சிறிது, சிறிதாக தன் தன்மை மாறி அருள் சக்தியாக உயிரின் கண் விளங்கித் தோன்றும். அந்நிகழ்ச்சியே சத்திநிபாதம் எனப்படும்.

*66. சத்திநிபாதத்தின் வகைகள் யாவை?*
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்.

*67. முத்தி என்றால் என்ன?*
ஒவ்வொரு சமயமும் அதன் வழிபடு தெய்வம், வழிபாட்டு முறைகள் மற்றும் அடிப்படை நூல்கள் போன்ற சில அடிப்படைக் கருத்துக்களை சொல்கிறார்கள். அவற்றில் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் உயிரின் முடிவான நிலை முக்தி என்று சொல்லப்படுகிறது.

*68. சைவ சித்தாந்தம் காட்டும் முக்தி யாது?*
உயிர்கள், மலநீக்கம் பெற்று இறைவனுடைய திருவடிகளில் ஒன்றாய் கலந்து பேரானந்தத்தை அனுபவித்தல். இந்நிலைக்கு சிவமாம் தன்மை என்று பெயர். சிவமாம் தன்மை என்று சொன்னாலும் சிவனோடு சமமாய் நிற்றல் என்பது பொருள் அல்ல. இறைவனுக்கு அடிமையாய் ஐந்தொழில்கள் செய்யும் ஆற்றல் அற்றதாய் என்றும் பேரானந்தத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருக்கும். முக்தி பெற்ற உயிர்கள் மீண்டும் பிறவிக்கு வருவதில்லை.

*69. சீவன் முக்தர் - குறிப்பு தருக.*
முக்தி பெற்றும் இவ்வுடலோடு இவ்வுலகில் வாழும் ஆன்மாக்களுக்கு சீவன் முக்தர்கள் என்று பெயர்.

*70. தசகாரியம் என்றால் என்ன?*
ஞான சாதனையில் முன்னேறும் ஆன்மாக்களிடத்து நிகழும் பத்து வகை செயல்பாடுகளாகும்.
தத்துவரூபம்
தத்துவ தரிசனம்
தத்துவ சுத்தி
ஆன்ம ரூபம்
ஆன்ம தரிசனம்
ஆன்ம சுத்தி
சிவ ரூபம்
சிவ தரிசனம்
சிவயோகம்
சிவபோகம்
🙏 *திருச்சிற்றம்பலம்*
--------------------------------
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. வணக்கம் குருவே!
    "சைவ சித்தாந்தம்" பற்றிய பட்டப்படிப்பு
    சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளது
    அதில் வரும் பாடங்கள் போல உள்ளது தங்களின் இன்றைய பதிவு!
    இவையனைத்தும் advanced studies..
    ஒருமுறை படித்தவுடன் மனதில் பதியாது.மனதில் தீவிரம் வேண்டும்...
    முழுவதும் படித்தேன்.கடினமான பாடம்
    எனக்கு!
    நன்றி குருநாதா!

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... holy article...

    Thanks for sharing...

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    "சைவ சித்தாந்தம்" பற்றிய பட்டப்படிப்பு
    சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளது
    அதில் வரும் பாடங்கள் போல உள்ளது தங்களின் இன்றைய பதிவு!
    இவையனைத்தும் advanced studies..
    ஒருமுறை படித்தவுடன் மனதில் பதியாது.மனதில் தீவிரம் வேண்டும்...
    முழுவதும் படித்தேன்.கடினமான பாடம்
    எனக்கு!
    நன்றி குருநாதா!///////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  4. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... holy article...
    Thanks for sharing...
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!

    ReplyDelete
  5. //////Blogger kmr.krishnan said...
    very useful Thank you.
    kmrk/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா,ஏராளமான தகவல்கள்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.ஆசிரியரின் பணிக்கு அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
  7. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஏராளமான தகவல்கள்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.ஆசிரியரின் பணிக்கு அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.நன்றி.////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com