மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.12.11

கேது வரும் முன்னே, கேடுகாலம் வரும் பின்னே!

 --------------------------------------------------------------------------------------------------
கேது வரும் முன்னே, கேடுகாலம் வரும் பின்னே!

மாணவர் மலர் - பகுதி ஒன்று

நிறைய ஆக்கங்கள் வந்துள்ளதால், நீங்கள் சலிப்படையாமல் படிப்பதற்காக மாணவர் மலரை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். முதல் பகுதி இப்போது.  படித்து மகிழுங்கள்.  

அடுத்த பகுதி - முண்டாசுக் கவிஞனின் பிறந்த நன்நாளை நினவுகூறும்  விதமாகப் பல ஆக்கங்களுடன்  நாளை வெளிவரும்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------------------------
விதி எழுதி வைத்த எழுத்துக்கள் மாறாது!
ஆக்கம்: தேமொழி
கேது திசை வரும் முன்னே, கேடுகாலம் தொடர்ந்து வரும் பின்னே!

சற்று ஓய்வெடுக்கலாம், இன்று விடுமுறை நாள்தானே மதியம் முழுவதும் ஏதாவது தொலைக்காட்சி பார்த்தால் போயிற்று என்று ரிமோட்   கன்ட்ரோலு டன்  இருக்கையில் சரிந்து உட்கார்ந்து ரிமோட் பட்டனை கிளுக்கினேன்.  "உங்கள் டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?" என்ற கேள்விக்கு  பதில் சொல்ல விருப்பமின்றி; அடுத்து "கிளிக்", வீட்டில் சகல ஐஸ்வர்யமும் கிடைக்க ஸ்ரீ தனலக்ஷ்மி எந்திரம் வாங்கு என்று ஆலோசனை  சொன்னது அடுத்த வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி; மீண்டும் "கிளிக்", இங்கே ஏதோ ஒரு பாட்டுக்கு சீருடையில் ஒரு கூட்டமே நடனம் என்ற  பெயரில்  நடுத் தெருவில் குதித்துக் கொண்டிருந்தது.  இது உதவாது என்ற எரிச்சல் வந்து மறுபடியும் "கிளிக்", திரையில் இப்பொழுது இடுப்பில்  இடது கையை முட்டுக் கொடுத்தவண்ணம் அந்த மனிதர் படியில் இறங்கி வந்தார்.  தலையை தலையை ஆட்டிய வண்ணம் ஒரு விரக்தி சிரிப்பு  சிரித்தவாறு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.  அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த மனிதரை முன்பே பார்த்திருக்கிறேன். இப்பொழுது சின்னத் திரையை கண்கள் வெறுமனே வெறித்து பார்த்துக் கொண்டிருக்க, என் கவனம்
அந்த மனிதரின் கடந்த கால வாழ்க்கையை நினைக்க ஆரம்பித்தது.  பார்த்தால் ஒரு முப்பது அல்லது முப்பத்திரண்டு வயது போன்ற தோற்றம்.

என் கணிப்பு சரியாக இருக்குமா என யோசித்தேன்.  இருக்கலாம்... கல்லூரியில் விரிவுரையாளர் வேலையில் இருந்தவர், அதனால் இருபது
வயதில்  இளம்கலை பட்டம், இருபத்திரண்டில் ஒரு முதுகலை பட்டமும் வாங்கியிருக்கலாம்.  கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்க்க ஒரு
முனைவர் பட்டமும் கூட வாங்கியிருக்ககூடும், அப்படிஎன்றால் படித்து முடிக்க ஒரு இருபத்தி ஐந்து  அல்லது இருபத்தி ஆறு வயதாகியிருக்கும். 

கல்லூரியில் ஆசிரியர் ஆனவுடன் மாணவர்கள் மிகவும் மதித்து விரும்பும் ஆசிரியராக கருதப்பட்டார். ஆனால், திருமண வாழ்க்கையோ  பெண்களோ அவரைக் கவராமல் போனது.  காலத்தை இப்படி கொஞ்ச நாள் தள்ளினார் (அப்போ... நான் நினைத்தது சரி, அவருக்கு முப்பதுகளின் ஆரம்ப வயதுதான்).  கவுரவமான, மதிப்பான வாழ்க்கை எல்லாம் கொஞ்ச நாள்தான்.  என்று அந்த பெண்ணின் மேல் விருப்பம்  வந்து காதலிக்க ஆரம்பித்தாரோ அன்று தொலைந்தது நிம்மதி, காதலியை அடைய அவள் குடும்பம் முட்டுக்கட்டை போட்டது, பின் அவளும்  நீரில் மூழ்கிவிட மனிதர் மேல் கொலைப்பழி விழுந்தது.  நீதிமன்றம்,  வழக்கு என அலைந்தார், வேலை போனது, மதிப்பு போனது,

சமுதாயத்தில் கவுரவக் குறைவு என வாழ்வு அவரை புரட்டிப் போட்டுவிட்ட பின் இப்பொழுது சந்நியாசி போல ஊர் ஊராக அலைகிறார். 

எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டார், என்ன ஒரு பரிதாப நிலை. 

திடீரென வகுப்பறையில் படித்த பாடம் நினைவு வந்தது.  ஒரு வேலை இவருக்கு கேது திசை நடக்கிறதோ?  என்று தோன்றியது.  கேது திசை
ஞானம் கொடுக்கும் என வாத்தியார் சொல்லியிருக்கிறாரே என்ற எண்ணம் வர உடனே கணினியைதட்டி, இணையத்தில் கலந்து, வகுப்பறைக்கு
நுழைந்து கேது திசை பற்றி தேடலானேன். 

"பொதுவாக கேது திசை 90% பேர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்காது. கேது ஞானகாரகன். திசை முழுக்கப் பலவிதமான கஷ்டங்களுக்கு ஜாதகனை உட்படுத்தி இறுதியில், திசை முடிவில் ஜாதகனுக்கு ஞானத்தைக் கொடுப்பான். கஷ்டப்படாமல் ஞானம் எங்கிருந்து வரும்?  இழப்புக்கள், பிரிவுகள், நஷ்டங்கள்,  துயரங்கள், துரோகங்கள், துன்பங்கள், உடல்வலி, மனவலி என்று பலவிதமான வலிகளைக் கொடுத்து  முடிவில் ஜாதகனை மேன்மைப் படுத்துவான். ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து வலியின் அளவுகள் மாறுபடும்,"  என்று கேது தசா புத்தி பாடம் ஆரம்பிக்கும் பொழுது வாத்தியார் சொன்னார்.

மேலும், "தீயவன் எங்கிருந்தாலும் தீமையையே செய்வான். அவன் எதைச் செய்தாலும் தீமையே விளையும். ஆனால் கேது  ஞானகாரகன்
என்பதால்,  அவனுடைய தீமைகளால், நமது புத்தி தெளிவுறும். நல்லது கெட்டது உறைக்கும். நமது எதிரிகளையும், நமக்குத் துரோகம்
செய்பவர்களையும் அடையாளம் காணமுடியும். மொத்தத்தில் கேது திசை  முடிவில் நமக்கு ஞானம் உண்டாகும்," என்றும் அந்த தசா புத்தி
பாடம் நிறைவும் பொழுது வாத்தியார் சொன்னார். 

சரி... ஒவ்வொரு தசா புத்திக்கும் புலிப்பாணி பாடல் படிக்கலாம் என்று படித்தேன்.  கேது மகாதிசையில் கேதுவின் சுய புத்திக்குப் பிறகு

வருவது கேதுவில் சுக்கிரபுத்தி, சுக்கிரனால் ஒரு சில  சந்தோஷங்கள் இருந்தாலும், புத்திக்காலம் பாங்கில்லாமல் இருக்கும் என்றார் வாத்தியார்.
" ... நாரிழையாள் தன்னுடனே அபமிருந்துகாணும்
    வகையான ராசாவால் மனமகிழ்ச்சியாகி
    மனைவி மக்கள் தன்னுடனே வாழ்வான் காணே!"
என்று பாடினார்  நம் புலிப்பாணி.

அப்போ, நம்ம மனிதர் அப்பத்தான் அந்த பொண்ணு பக்கம் திரும்பியிருக்காரு போல...என்று நினைத்தேன்.

நடுவில், மற்றொரு பாடத்தில், கேது மகா திசையில் மனகாரகன் சந்திரனு டைய  புத்தி நன்றாக இல்லை என்று புலிப்பாணி சொல்கிறார் என்றார்
வாத்தியார்:

"... ஆயிழையாள் விலகி நிற்பாள் அற்பமாகும்
தோணுவான் தோகையரும் புத்திரரும் பாழாம்
தொகுதியுடன் பொருளதுவுஞ் சேதமாகும்
நாணுவான் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து
நன்றாக மடிந்திடுவாள் நலமில்லைதானே"
என்று பாடினார் புலிப்பாணி

வரிகளை படித்தவுடன் கொஞ்சம் அதிர்ச்சி.... என்னது? .... நாரிகையும் சலத்தில் வீழ்ந்து நன்றாக மடிந்திடுவாளா? 

தசா புத்தி பாடல்களில், இங்கொன்று அங்கொன்று என பொருந்த, நம்ம ஆளுக்கு கேது திசை தான் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். 

கேது மகா திசை மொத்தம் 7 ஆண்டுகள் காலம் நடைபெறும், கேது திசை முடியும் போது வாழ்கையைப் பற்றி ஒரு தெளிவான ஞானம் வந்துவிடுமாம்.  அப்படியானால், நம்ம ஆளும் ஞானம் வந்தவர் போல் அலைவதைப் பார்த்தால் உத்தேசமாக ஒரு இருபத்தி ஐந்து வயது  போல் கேது திசை அவருக்கு ஆரம்பிதிருகக் கூடும்.  இருபத்தி ஐந்து வயது போல கேது திசை ஆரம்பம் என்றால் என்ன நட்சத்திரத்தில்  பிறந்திருப்பார் என்று அடுத்த கேள்வி தோன்றியது.  

உடனே நம் மாமாவிற்கு சின்ன வயதில்  கேது திசை  வந்ததே என யோசித்து, அவருடைய ஜாதகத்தை பார்த்ததில் முப்பதுகளில் அவருக்கு கேது திசை.  ஆனால் இதை அவரிடம் சொல்லமல் விட்டு விடுவது நல்லது. எத்தனை ராசிகள் இருக்கிறது, ராசிக் கட்டத்தில் எத்தனை கட்டம்  என்ற விபரமெல்லாம் தெரியாதவர் அவர்.  உங்களுக்கு முப்பது வயது முடிந்து கொஞ்ச காலத்தில் கேது திசை ஆரம்பம் என்று சொன்னால்,  அதனால் என்ன? என்பார். கேது திசைனா கெட்டகாலம் அப்படின்னு அர்த்தம் என்று விளக்க வேண்டி வரும்.  அவருக்கு முப்பது  வயதானபின்  எங்கள் திருமணம் நடந்ததால், உடனே இடக்காக கல்யாணம் ஆனவுடனே கெட்ட நேரம் ஆரம்பம்னு எனக்கு தெரியும், இதுக்கு  போய் ஜோசியம் பார்க்க தேவையில்லைன்னு சொல்லலாம்.  சொல்லிவிட்டு அவர் நகைச்சுவைக்கு அவரே சிரித்து மேலும் எனக்கு
வெறுப்பேற்றலாம், எதுக்கு வீண் வம்பு, சண்டை, சச்சரவு எல்லாம்.

மீண்டும் பாடத்தை பார்க்க ஆரம்பிதேன். "புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய  ஒன்பது நட்சத்திரக்காரர்களும் கேது திசையைச் சந்தித்தாக வேண்டும். அஸ்விணி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு, பிறக்கும்போதே கேது திசை இருக்கும். ஏனென்றால் அம்மூன்று நட்சத்திரங்களுக்கும் கேது அதிபதி".  அப்படியானால் அஸ்விணி, மகம், மூலம்  ஆகிய நட்சத்திரங்களை விலக்கி விடலாம்.  ஜஹன்நாத ஹோரவை திறந்து அதில் இருக்கும் ஜாதகங்களைப் பார்வையிடலானேன்.  அதில்  யாருக்காவது 25 வயதில் கேது திசை ஆரம்பித்திருக்கிறதா என பார்க்கத் தொடங்கினேன்.  அப்பொழுது 'டொயிங்" என்ற சத்தத்துடன் "amma :-) "  என்று மாதவி இணைய வழி அரட்டைக்கு என்னை அழைத்து என் கவனத்தை திசை திருப்பியிருக்காவிட்டால், அந்த மனிதரின்
ஜாதகத்தை இன்னமும் எவ்வளவு குடைந்திருப்பேனோ தெரியாது.    

யார் அந்த மனிதர் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக  இருந்தால் இந்த சுட்டியை கிளிக் செய்யவும்!  http://youtu.be/vuvxwn4F5lE

ஆக்கம்: தேமொழி


 --------------------------------------------------------------------------------------
2
ஒ மைனா ....ஒ மைனா!
ஆக்கம் 2
By தேமொழி.



இரண்டும் கெட்டான் பதின்ம வயது மைனாவிற்கு.  அவளது நைனாவிற்கு அவள் ஒரு அருமை மகள்.  பல சமயம் அவள் சொல்ல  நினைப்பது பலருக்குப் புரியாது. சில சமயம் அவள் என்னதான் நினைக்கிறாள் என்று அவள் நைனாவிற்கே கூடத் தெரியாது.   அவளது  மூளை அசாதாரணமாக சிந்திக்கும்.  சிறுமி 'சிந்தனைச் செல்வி' மைனாவிற்கு தன் தந்தை தன்னைப் பார்த்து பெருமை பட வேண்டும், என்  அன்பு மகள் போல உண்டா!!! என ஆனந்தப் பட வைக்க வேண்டும் என்ற தணியாத ஆசை நிறைந்த நல்ல மனம் உண்டு.  ஆனால்,  அதற்காக அவள் எடுக்கும் முயற்சிகள் மட்டும் ஏனோ நேர் எதிர்மறை பலனைக் கொடுத்துவிடும்.

கோடை விடுமுறையின் போது, வருங்காலத்தில் பெப்சி இந்திரா நூயி போல ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் தலைவியாக மாற என்னென்ன
தகுதி தேவையோ அவைகளை கற்று செயல் படுத்த நினைத்தாள்.   நைனாவிடம் தன் விருப்பத்தை சொல்லவும், நைனாவிற்கு மகிழ்ச்சி
தாங்கவில்லை.  உருப்படி இல்லாத தொலைக்காட்சி பார்த்து வீணடிக்கும் தன் சமவயது பெண்கள் போல் இல்லாமல் ஆக்கபூர்வமாக சிந்திக்கிறாளே  என் அருமை மைனா என்று நைனா மகிழ்ந்தார்.  அவளை ஊக்குவிப்பதற்காக தன் பையில் இருந்து ஒரு ஐந்து ரூபாய்  நாணயத்தை எடுத்து முதலீடாகக் கொடுத்தார்.  மகளே மைனா எங்கே உன் சமர்த்தைப் பார்க்கலாம், இந்த ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை பல  மடங்காக்கிக் காட்டு பார்ப்போம் என்றார்.

மைனா உடனே செயலில் இறங்கினாள்.  தன் மிதி வண்டியில் அடுத்த தெருவில் இருக்கும்  நீலாவிடம் போனாள்.   நீலா, இந்தா இந்த ஐந்து
ரூபாய்க்கு இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்கள் கொடு என்று சொன்னாள்.  மைனாவை நன்கு அறிந்த நீலா மறு பேச்சு பேசாமல் இரு  இரண்டு ரூபாய் நாணயங்களைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு ஐந்து ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொண்டாள்.  மைனாவிற்கு தன் திறமையை  எண்ணி மகிழ்ச்சி தாளவில்லை.  என்ன சுலபமாக ஒரு நாணயத்தை இரண்டு நாணயங்களாக மாற்றிவிட்டாள்.

அடுத்து எதிர் வீட்டு பாட்டியிடம் சென்று,  பாட்டி என்னிடம் இருக்கும் இரு இரண்டு ரூபாய்கள் தருகிறேன், நீ எனக்கு மூன்று ஒரு ரூபாய்  நாணயங்கள் கொடுக்கிறீர்களா என்று பேரம் பேசினாள்.   பாட்டியும் அதுக்கென்னடிம்மா கொடுதிட்டாப் போச்சு என்று சொல்லி மூன்று ஒரு ரூபாய் நாணயங்களைக் கொடுத்துவிட்டு இரண்டு இரு ரூபாய் நாணயங்களைப்  பெற்றுக் கொண்டாள்.  மற்றுமொரு வெற்றி மைனாவிற்கு.

அடுத்து தெருவில் பழவண்டி வைத்திருக்கும் வியாபாரியிடம் சென்றாள்.   அவரிடமும் அவள் பேரம் உடனே படிந்துவிட்டது.  மூன்று ஒரு
ரூபாய்களைக் கொடுத்து நான்கு ஐம்பது பைசா நாணயங்களைப் பெற்றுக் கொண்டாள்.  வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் பக்கத்துக்கு வீட்டு
விவேக்கிடம் நான்கு ஐம்பது பைசாகளைத் தள்ளிவிட்டு பதிலுக்கு ஐந்து இருபத்தி ஐந்து பைசா நாணயங்களைப் பெற்றுக் கொண்டாள். 

இப்பொழுது வீட்டில் தன் நைனா வேலை முடிந்து வருவதற்காகக் காத்திருக்கிறாள்.  நைனா வந்தவுடன் எப்படி ஒரு நாணயத்தை ஐந்து
நாணயமாக பெருக்கினாள்  என்று தன் வியாபாரத் திறமையை விளக்க காத்துக் கொண்டிருக்கிறாள். 

(குறிப்பு: இது கவிஞர் "ஷெல் சில்வர்ஸ்டீன்" அவர்களின் "ஸ்மார்ட்" என்ற கவிதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பட்ட கதை, அந்தக்
கவிதையைப் படிக்க விரும்பினால், அந்த வலை தளத்தின் சுட்டி இங்கே: http://www.marketplace.org/topics/life/poetry-project/poem-smart-shel-silverstein)

ஆக்கம் :By தேமொழி.
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 3

சேற்றில் முளைத்த செந்தாமரை!
ஆக்கம்: செல்வி. ஸ்ரீஷோபனா ராஜ்குமார்


காலை கதிரவன் விழித்தெழஆரம்பித்தான்.ஆனால் அவரையும் முந்திக் கொண்ட ‌லக்ஷ்மி பாட்டி, வீட்டில் தன் வேலைகளை எல்லாம் முடித்துக்
கொண்டு அதிகாலையிலேயே பூக்கூடையும், சாப்பாட்டுத் தூக்குடன் வேகமாக நடக்கத் துவங்கினார். அவரை பார்த்ததும் வாசலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மி பாட்டி வளர்க்கும் நாய் வாலை குலைத்தபடியேஅவர் அருகில் வந்து நின்றது.

அந்த அறுபது வயதிலும் இருபது வயது குமரியை விடவும் என்ன ஒரு வேகம். சென்னையின் "குமரி எக்ஸ்பிரஸ்" என்று அவருக்கு ஒரு  பட்டப்பெயர் வைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்!

"என்ன லட்சுமிபாட்டி, இந்த இராத்திரியிலே எங்க இந்த ஓட்டம்? எனக்கு டீ வாங்கின்டு வரவா..." என்று தலையை சொறிந்தபடியே  திண்ணையிலிருந்து எழுந்தான் மணி.

"ம்...ஏன் கேட்க மாட்ட,போனாபோகட்டும்ன்னு மழைக்கு ஒதுங்கிட்டுப் போகட்டுமேன்னு பார்த்தா, வீட்டுக்கே "ஓனர்" மாதிரில்ல‌ என்னையே
கேள்விக் கேட்குற? அதான் ஒரு பழமொழி சொல்லுவாங்கடா,"நரி படுக்க..."

"ஆமா...அந்த காக்கா‍ நரி கதையெல்லாம் உன்ன மாதிரி எத்தனையோ பாட்டிங்க சொல்லி கேட்டாச்சு,வேற புதுக்கதையே உங்களுக்கெல்லாங்
கிடைக்காதா?"

"டேய்,பாவம்டா உன் அம்மா, உன்ன வளர்க்குறதுக்கு அவப்பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமாடா உனக்கு? ஆனா நீ சும்மா இப்படி வெட்டி கதை பேசிக்கிட்டு ஊரை சுத்திக்கின்னு திரியிரியேடா"

"சரி...சரீ...இத உன் மாப்பிள்ளைக்கு சொல்றது தானே?"என்று அவன் கூறியவுடன் அவரது முகம் வாடிய‌ பிச்சுப்பூவைப் போன்றே வாடினாலும்
சற்றே தன்கவலைகளை மறைத்துக் கொண்டு, "அவனை மாதிரி நீயும் ஆகிடாதேன்னு தான்டா உன்..."

"சரி பாட்டி...என்னோட‌ சொந்த பாட்டி சொல்லியும் கேட்காத இந்த மணி, இப்போ இந்த பூக்காரப் பாட்டியால நொந்து போய் முதல் தடவ வேலை செய்ய போறேன்"

"நீ திருந்தினா இந்த திண்ணைக் கூட சந்தோஷபடும்டா"

உடனே திண்ணையை விட்டு வீரமாக எழுந்து சென்று பக்கத்தில் இருந்த வேறொரு திண்ணையில் போய் மீண்டும் படுத்துக் கொண்டான்.

"அட போக்கற்ற சண்டாள படுபாவி, இதுக்குத்தான் இவ்வளவு மிடுக்கா? உங்கிட்ட நின்னு பேசினதுக்குப் பதிலா நாலு பூவ வித்திருந்தா இந்த
நாய்க்கு ஒரு வேளை சோறு போட்டிருப்பேன்டா" என்று நொந்துகொண்டு புலம்பியபடியே தன் "எக்ஸ்பிரஸை" ஓட்ட ஆரம்பித்தார்.

"ம்...நீ நம் வீட்டுத் திண்ணையில் போய் வீட்டை காவல் பார்த்துக்க, அவன் பக்கம் போயிடாதே உன்னையும் அவனைப் போல மாத்திடுவான்" என்றபடியே அதை தடவி கொடுத்து அனுப்பினார்.

வேகமாக சென்று கொண்டிருந்த அவரது கால்கள் ஏனோ இப்போது பிளாட்பாரத்தை நெருங்கும் ரயில் வண்டியைப் போலவே வேகம் குறைய
ஆரம்பித்தது.

முன்தினம் மதியம் தன் ஒரே மகள் கல்பனா கண்ணீருடன் வந்து நின்றது மன‌தில் நிழலோடியது.

"ம்...மா" என்று தயங்கியபடியே லக்ஷ்மி பாட்டியின் பூக்கடை வாசலில் நின்றுக்கொண்டிருந்தாள் கல்பனா.

வாடிய முகமும், ஒட்டிய கன்னங்களுமாய் இருந்தாலும் அவளது வயிறு மட்டும் இயல்பை விட பெருத்திருந்தது அவள் நிறைமாதக் கர்ப்பிணி
என்பதைத் தெளிவாகக் காட்டியது.

மகளைக் பல மாத‌ங்களுக்குப் பிறகு கண்டதும் பாசத்தில் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள மனம் துடித்தாலும் அவள் செய்த காரியம் லக்ஷ்மி பாட்டியை எட்டி நிற்க செய்தது.

"இப்போ யாரு இருக்காங்கன்னு இங்கவந்திருக்கே"

"அம்...மா...நான் தப்பு பண்ணிட்டேன்ம்மா"

“ச்சே... பேசாதேடி...நானும் உங்க அப்பாவும் இதே கோயில் வாசல்லயே பத்து வருஷமா தவமாயிருந்த பிறகுதான் நீ பொறந்ததும்...உங்கப்பா விபத்துல இறந்ததும் அவர் வீட்டிலிருந்தவங்க‌ என்னை விரட்டின பிறகு கைப்புள்ள உன்னை வச்சுக்கிட்டு ஒரு வேளை சோறுக்காக நான் பட்ட கஷ்டம் இருக்கே...அது இந்த ஈஸ்வரனுக்கு தான் தெரியும்"

"வசதியான வீட்டில பிறந்தாலும் விதியால நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் உன் முகத்தை பார்த்து மருந்தாப் போட்டுப்பேன்டி...ஆனா நீ  அந்த மனுஷன் தான் வேணும்ன்னு, போலீஸ் ஸ்டேஷன்லே வைச்சு, நான் ஒரு அனாதை’ ன்னு ஒரு வார்த்தை சொன்ன பாரு...ம்ம்ம் -  அன்னிக்கே என் பாதி உசிறு போச்சுடி...இப்போ மீதியையும்எடுத்துட்டு வரச் சொல்லிருக்கானா அந்த படுபாவி" என்று அழுதபடியே லக்ஷ்மி பாட்டியின் வார்த்தைகள் அனலாய் வந்து விழுந்தன.

மதியவேளை என்பதால் கோவிலிலும்தெருவிலும் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அப்படி அங்கே சென்ற ஓரிருவரும் இவர்களை
வெரித்தப் பார்த்த படியே சென்றனர்.

"அம்மா...நான் அன்னிக்குப் பண்ண பாவத்தால தான் இன்னிக்குக் கஷ்டப் படறேனம்மா" என்று  கதறியழுதாள்

"உன்னை பிரிஞ்சிட்டு நான் மட்டும் இங்கே என்ன நல்லாவாயிருக்கேன்னு நினைக்கிறியா?" அப்படின்னு உள்மனம் சொல்ல துடித்தாலும் ஸ்தூல
வாயானது சொல்ல மறுத்தது.

"உன்னோட நினைப்பேயில்லாம நிம்மதியா இருக்கேன், அதுவும் பொறுக்கலியா உனக்கு” எரிந்து விழுந்தார் லக்ஷ்மி பாட்டி. தொடர்ந்து
சொன்னார்: "உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கலே, போடி...இங்கேயிருந்து"

"அம்மா...என்னை நீங்களும் வெறுத்திடாதீங்கம்மா...நான் செஞ்ச தப்புக்கு கடவுள் எனக்கு நல்ல தண்டனையைக் கொடுத்துட்டாரு...உங்களைப்
பார்க்கனும் போலவேயிருந்தது; இனியும் உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன், நான் போறேனம்மா" என்று அழுதுபடியே நடக்க சிரமப‌ட்டுக்  கொண்டே சென்ற அவளது உருவம் கடைத்தெருவை விட்டு மறைந்தது.

மகளைக் கண்ணாக வைத்து வளர்த்தவர் இன்று அவளை கண்ணீரால் நனைய வைத்ததைப் பார்த்து அருகில் இருந்த மற்ற பூக்கடைக்கார பெண்களும் அதிர்ந்து தான் போயினர். ஆனாலும் அவர்கள் அசை போடுவதற்கு பெரிய விஷயம் கிடைத்த‌தால் மனதிற்குள் ஒரு உற்சாகம்.
           &&&&&&&&&&&&&&&&&&&&&

மிதந்தோடிக் கொண்டிருந்த தன் எண்ணங்களில் இருந்து எதிரே வந்த ஒரு பெண்மணியின் மீது மோதிய பின்பே கலைந்தார். அன்று கார்த்திகை
மாதத்தில் சோமாவாரமும் சேர்ந்து வந்ததால் பெண்களின் கூட்டம் கோவிலில்அலை மோதியது.

கோவிலுக்கு சற்று தாமதமாக வந்தாலும் அவரிடம் எப்பொழுதும் இருக்கும் அந்த வேகம் அன்று இல்லை.

"என்ன பாட்டி,இன்னிக்கு உங்க வீட்டு சேவல் என்ன தூங்கிடுச்சோ?" பாட்டியை வேண்டுமென்றே சீண்டிப் பார்த்தாள் பொறாமை எண்ணம்  கொண்ட பக்கத்துப் பூக்கடைப் பெண். லக்ஷ்மி பாட்டி வழக்கம் போல் மெளனம் சாதித்தார்.

கோவிலுக்கு வரும் பலருக்கும் லக்ஷ்மி பாட்டி மிகவும் பரீட்சயமானவர். அதற்கு அவரது அன்பான பேச்சும் கனிவாக அவர் பழகும் விதமும் தான் காரணம். இதுவே அங்குள்ள மற்ற பூக்கடைக்கார பெண்கள் பாட்டி மீது பொறாமை கொள்வதற்க்குக் காரணமாகவும் இருந்தது.

கோவிலில் உச்சிகால பூஜை முடியவே மக்களின் கூட்டமும் குறையத் துவங்கியது.

"என்ன சொர்ணம், எவ்ளோ கல்லா கட்டியிருக்கே?"

"ஆ...ஆமாடி, இது ரங்கநாதன் தெரு பாரு, நோட்டு நோட்டா எண்ணிப் பார்க்கறதுக்கு...நீ வேற இருக்கிற வயித்தெரிச்சலைக் கிளப்புற"

"ஆமா நீ தான் அப்பிடி சொல்ற...அங்க அந்த "சரவணா ஸ்டோர்ஸ்" ஓனரைப் பாரு, கூடையெல்லாம் பணமாத்தான் நிரம்பிக் கிடக்குது"

"அதென்னவோ "கரிக்டா" தான்டி சொன்னே, அதெப்பிடிடீ...இங்கே வரவளுங்கெல்லாம் இந்த கிழவிக்கிட்டேயே போயி சாவுதுங்கோ"

"ஏன்டி, அசிங்கமா இல்ல உங்களுக்கெல்லாம்...இப்படியா கோயில் வாசல்ல வச்சுப்பேசறது? முதல்ல பொம்பளைங்க மாதிரி பேசக் கத்துக் கோங்க" அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பாட்டி கொதித்தெழுந்தார்.

"ஏய்...கிழவி, ஓடிப் போன உன் பொண்ணைவிடவா நாங்க மோசம்...அவ போலீஸ் ஸ்டேஷன்லே வச்சு நல்லா ஆப்பு வச்சும் உனக்கு இன்னும்
கொழுப்பு அடங்குதா பார்த்தீயா?"

லக்ஷ்மி பாட்டிக்கு அந்த உச்சி வெயிலை விடவும் சுட்டெரித்தது அந்த சொர்ணத்தின் வார்த்தைகள்.

"அட...அதுமட்டுமா சொர்ணம், நேத்திக்கு இந்தக் கிழவி பொண்ணு வந்தா...ஒன்பது மாசம் கர்ப்பம் வேறயாம். ஆனா இந்த "கர்ணன்”
பரம்பரை பாட்டியம்மா அடிச்சி விரட்டிடுச்சு"

"ம்...ம்க்கும்...ஏதோ காந்தி மாதிரி ஊர்ல உள்ளவங்களுக்கு ஓடி ஓடிஉதவி பண்ணுற மாதிரி நடிச்சுக்கிட்டுத் திரியுறது...ஆனா பாரு"

"போதும் நிறுத்துங்கடி...என்னைப்பத்தியோ என் பொண்ணைப்பத்தியோ பேசறதுக்கு உங்களுக்கெல்லாம் தகுதியே கிடையாது" கண்களில்
கண்ணீர் நிரம்பி கனத்த குரலில் லக்ஷ்மி பாட்டி.

"ஏய்,கிழவி...ஊர்ல ஏமாத்து வேலைப் பண்ணுற உனக்கு தான் பேச யோக்கியதை இல்ல"

அதற்கு மேலும் அங்கு நிற்க பிடிக்காது லக்ஷ்மி பாட்டி தன் கடையை எடுத்து வைத்து விட்டு தன் கூடையுடன் வேகமாகக் கிளம்பினார்.

"ஈஸ்வரா, நீ தான் இனி எல்லாரையும் திருத்தி நல்லபடியாவாழ வைக்கனும்"

வழக்கம் போல வீட்டுக்கு செல்லும் முன் கபாலீஸ்வரரை வெளியில் நின்று வணங்கிவிட்டு நடக்கத் தொடங்கினார்.

"ஆமா...மனசிலே பெரிய ஒளவையாரு பேத்தின்னு நினைப்பு"  முணு முணுத்தாள் சொர்ணம். ஆனால் உள்ளுக்குள் குளுகுளுவென்றுயிருந்தது

அவளுக்கு, பாட்டியை மனம் குளிர வசை பாடிய சந்தோஷமும் கூடவே அவரை விரட்டியதால் சாயங்காலத்திற்கு மேல் நன்றாக பணம்
பார்க்கலாம்  என்றும் தான்.

கோவிலைக் கடந்து தன் வீட்டை நோக்கிச் சென்ற லக்ஷ்மி பாட்டிக்குத் தன் அன்பு மகளை நேற்று வேதனைப்படுத்தி அனுப்பியது நெருஞ்சி  முள்ளாய்த் தைத்தது.

கண்களில் வழிந்தோடிய நீர்த் துளிகளை உதறிவிட்டு, மனதில் ஏதோ தீர்மானம் கொண்டவராய் அருகில் இருந்த ஒரு கடைக்குள் சென்று தன்  மகளுக்குப் பிடித்த வண்ணங்களில் சேலை, வளையல்கள் மற்றும் சில பழங்களையும் வாங்கிக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினார்.

"இங்கேதானே எங்கேயோ இருக்குன்னு அந்த மணி சொன்னான் " தன் மகளின் வீட்டின் முகவரியை முன்பு அந்த "தூங்குமூஞ்சி” மணி  கூறியதை நினைவில் கொண்டுவந்து ஒரு வழியாக பலரிடம் விசாரித்து கூவம் ஆற்றின் கரையோரமாயிருந்த சில வீடுகளை நோக்கி சென்றார்.

"ஏய்...நாயே...எழுந்திடு. டீ...மணி இன்னாச்சு? எந்த வூட்டுபொம்பளையாவது மதியம் வரைக்கும் தூங்குவாளாடீ" குடிக்காரக் கணவனின்  வார்த்தைகள் ஒரு வீட்டின் அருகே லக்ஷ்மி பாட்டியின் காதுகளில் வந்து விழுந்தன. இந்த வீடாகஇருக்காது வேறு வீட்டில் பார்ப்போம் என்று  திரும்பி நடக்கத் தொடங்கினார்.

"ஏய்...உன் புருசன் தண்ணியடிக்கக் காசுயில்லாம துடிக்கிறேன். உனக்கு என்னடி தூக்கம்?" என்று எதையோ வீசியெறியும் சத்தமும்கேட்டது.

இப்பொழுது ஒரு குழந்தை அழும் சத்தமும் பாட்டி அந்த வீட்டை விட்டு அகலவிடாமல் செய்தது.

"எந்த எடுபட்ட பய இப்படி நடந்துக்குறானே தெரியலியே...இவனுங்களை எல்லாம் நாலு கேள்வி கேட்டாத்தான் புத்தி வரும்" கோபத்துடன்
வீட்டிற்குள் பாட்டி சென்றார்.

வீட்டினுள்ளே சென்ற பாட்டி உறைந்தே போய்விட்டார். அங்கே அவர் கண்ட காட்சி அவர் மூர்ச்சையாகி விழும்படி இருந்தது.

வீட்டின் ஒரு மூலையில் அவருடைய அன்பு மகள் கல்பனா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாள். சுவர் எங்கிலும் இரத்தத் துளிகள் தெறித்து
உறைந்து போயிருந்தன.

"நான் பெத்த என் தங்கமே! இப்படிப் பார்க்கவா உன்னை அரும்பாடு பட்டு வளர்த்தேன்" மகளை தூக்கி மடியில் கிடத்தி வைத்து அழுத‌ பாட்டியின் குரலைக் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

"அடப்பாவமே...இந்த குடிக்காரப் பாவி இராத்திரி சண்டை போடும்போதே நினைச்சேன். அவனைப் பிடிங்க, ஓடப் போறான்" பக்கத்து வீட்டுப்
பெண் பதைபதைத்தாள்.

கல்பனா தன்னிடம் பேசிய வார்த்தைகள் லக்ஷ்மி பாட்டியின் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது. சில ஆண்கள் அந்த குடிக்காரனை அடித்து
காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்ல முயன்றனர்.

"யோவ்...இருங்கய்யா...என்னை எங்கேய்யா இட்டுகுன்னு போறீங்க? ஓ...டாஸ்மாக் கடைக்கா.ஓக்கே - என் பொண்டாட்டி கிட்டே ஒன்னே
ஒன்னு சொல்லனும்ய்யா" கூடியிருந்தவர்கள் திகைத்தப்படியே அவனைப் பார்த்தனர்.

"ஏய் கல்பனா...மாமன் வெளியில போய்ட்டு வர்றேன், சூடா நெத்திலி மீன் குழம்பு வச்சு வை...க்க்க்க்க...இன்னாடி கேக்குதாடீ..தூங்குமூஞ்சி சனியனே" இப்பொழுது அடி மேலும் பலமாக விழுந்தது அந்த குடிக்காரனுக்கு.

நேற்றைய இரவு அந்தக் குடிக்காரனின் களேபரத்தில் கல்பனா என்னும் விருட்சம் சாய்ந்து விழுந்தாலும் அருகில் ஒரு துளிர் மலர்ந்திருந்ததை
லக்ஷ்மி பாட்டி மெதுவாகவே உணர்ந்தார். லக்ஷ்மி பாட்டிதான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் தன் அன்பு மகளுக்கு இறுதியாக அலங்கரித்தார்.

"பாட்டி கவலைப்படாதீங்க...உங்க மகள் இப்போ பேத்தியா வந்து பொறந் துருக்கா பாருங்க" என்றுஅருகில் இருந்த பெண் பிள்ளையை எடுத்து
பாட்டியிடம் கொடுத்தாள்.

அழகான பெண் குழந்தை கல்பனாவின் சாயலில் இருந்தது. பாலையைக் கட‌ந்து சோலையை அடைந்த மானாய் அவரது மனமும்குளிர்ந்தது. தன்
மகள் தன்னிடமே மீண்டும் வந்ததைப் போலவேயிருந்தது லக்ஷ்மி பாட்டிக்கு.

ஆக்கம்: செல்வி. ஸ்ரீஷோபனா ராஜ்குமார்
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
 4

ஆபிஸ் டைம் ஓவர் (அத்தியாயம் இரண்டு)
ஆக்கம் By ஜப்பான் மைனர்!

MD மோகனசுந்தரம் ஒரு டேபிளில் இருந்த ஃபைலை புரட்டிய வண்ணம் சற்று தீவிர சிந்தனையாக அமர்ந்திருந்தார்.ரிம்லெஸ் ரீடிங் க்ளாஸ் போட்டி ருந்தார்..கொஞ்சம் நிழல்கள் ரவியையும் கொஞ்சம் பாலாஜியையும் சாயலில் கொண்டிருந்தார். இன்று சாக்கலேட் கலர் ஃபுல்சூட்டில் வந்திருந்தார். ஆங்காங்கே ஊடுருவியிருந்த நரையோட்டத்தை டை அடித்து மறைக்காமல் இருந்தது  இயற்கை இயல்புப் படியே இருக்கட்டும் என்ற எண்ணம் படைத்தவராகக் காட்டியது. மெலிதான கைவிரலில் ஒரு வைரமோதிரம் போட்டிருந்தார். எப்படியும் இரண்டு காரட்டுக்குக் குறையாது. சவ்வியாக சுக்ரதேஜஸ்சுடன் களையாக இருந்த அவருக்கு இந்த வைரம் பொருந்தி நல்ல பலன்களைத்தான் தந்திருக்கவேண்டும். பெயர்கூடப் பொருந்தித்தான் இருந்தது. ஒருவேளை நியுமராலாஜி பார்த்து வெச்சிருப்பாரோ என்னவோ? ஆமாம், இப்படியொரு கம்பெனிக்கு இப்படியொரு டைரெக்டரை வைத்துக்கொண்டு  பணத்தைத் தண்ணீராக செலவழிக்க அவருக்கு வேறெங்கிருந்தோ பணம் கொழித்துக் கொட்டிக்கொண்டிருக்க வேண்டுமே..

தனஞ்செயனும் ராகவனும் உள்ளே வந்ததும் டைரக்டர் ராகவனைக் கண்டதும் கொஞ்சம் வெறுப்பாக முகத்தைத் திருப்பிக் கொண்டார். நேருக்கு நேர் பார்ப்பதை ராகவனும் தவிர்க்கவே விரும்பியதால் வசதியாகிப் போனது.

"வாங்க..உட்காருங்க.." என்று அவருக்கு முன்னாலிருந்த சீட்டை நோக்கி கைகாட்டினார் MD. அவரின் குரல் என்னவோ அடித் தொண்டை யிலிருந்து கொஞ்சம் கரகரப்பாக முன்னாள் பிஜேபி தலைவர் இல.கணேசனின் குரலை இரவல் வாங்கியதுபோல இருந்தது.

“எப்பிடி இருக்கீங்க? பிசினஸ் எப்பிடிப் போகுது ராகவன்?" என்று சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்தியவர் ராகவனை சிநேக பாவத்துடன் பார்த்துச் சிரித்தார். ராகவனுக்கோ கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்தது..

'இந்த மாசம் ஒண்ணும் சொல்றாப்பலே ஒன்னும் ஆர்டர் கிடைக்கலையே சார்..' என்று ராகவனும் இயல்புக்கு வந்து பேச்சைத் துவக்கினான்.

'அது சம்பந்தமாத்தான் காலையிலேருந்து ஹாட்டா டைரக்டரோட டிஸ்கஷன் போயிட்டிருந்துச்சு. நல்ல நேரம்..நீங்களே வந்துட்டீங்க..' மேலும் தொடர்ந்தான் ராகவன்.

'எல்லாம் கேள்விப்பட்டேன்..'என்று சொல்லி இயல்பாகவே சிரித்தார் MD.

"இந்தமாதிரி செட் அப்லே என் மேல் பிரஷர் கொடுத்தா என்னாலே அவுட்புட் கொடுக்க முடியாது சார். அதுபத்தித்தான் உங்களுக்கு ஏற்கனவே ஒரு 'ஃபீசிபிளிட்டி ஸ்டடி based on மார்க்கெட் ரிவிய்யு' சப்மிட் பண்ணி யிருந்தேன்..பார்த்தீங்களா சார்?" என்றான் ராகவன் இயல்பாய் சிரித்தபடியே.

'படிச்சேன் ராகவன், உங்ககிட்டேயிருந்து இப்படி ஒரு ஆர்ட்டிகிள் நான் எதிர்பார்க்கலை..நல்லாப் பண்ணியிருந்தீங்க..மார்க்கெட் ட்ரென்ட் தெளிவா சொல்லியிருந்தீங்க.. படிச்சுட்டு நானே உங்களைக் கூப்பிட்டுப் பேசணும்ன்னு  நினைச்சுருந்தேன். டைம்தான் கிடைக்கலே. பிசி ச்செட்யூல்லே அக்டிவ்வா இருந்ததாலே இங்கவந்து பார்க்கமுடியலே. மத்தபடி எல்லாமே நீங்க சொல்றதுபோல மேற்கொண்டு ப்ரோசீட் பண்ணவேண்டிய டைம் வந்தாச்சுன்னு நினைக்குறேன்..' என்றபடியே கொஞ்சம் கைகளைக் கோர்த்து நெட்டி முறித்தவர் மூவருடனும் பார்வையைச் சுழலவிட்டு ஒருகணம் பேச்சை நிறுத்தி ராகவனைப் பார்த்து விழிகளில் பொங்கித் ததும்பிய உற்சாகத்துடன் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

'நான் நினைச்சு வெச்சுருந்த பிசினெஸ் ஸ்ட்ராட்டேஜி வேற. அதத்தான் ட்ரீம்லே வெச்சுருக்கேன். அதை எக்ஸிக்யுட் பண்ணத்தான் டைரக்டருக்கு சொல்லியிருந்தேன். அப்போதான் நீங்க வந்து சேர்ந்தீங்க. எனக்கு வேண்டியது சிம்பிளான வேலையைப் பார்த்து முடிச்சு அதிகமான லாபம். ரொம்ப toughஆன வேலையை எடுத்துட்டு எக்ஸ்சிக்யூட் பண்ணத் திணரக்கூடாது. அதுக்கு வேண்டிய டீம் நமக்கு இன்னும் பில்ட்அப் ஆகலே. அத நான் டார்கெட் பண்ணவும் இல்லே. ஆனா நீங்க தீவிரமா இருக்குறதைப் பார்த்ததும், உங்க ரிவிய்யு பார்த்ததுமே மூடை மாத்திக்கிட்டேன்..மனுபாக்ச்சரிங் பிளான்ட் அவசியம்தான்னு முடிவுக்கு வந்துட்டேன்.. பத்து வருஷத்துக்கு முன்னாடி கும்மிடிப்பூண்டிக்கு பக்கத்துலே பத்து கிரவுண்டு இடம் வாங்கிப் போட்டு வெச்சுருந்தேன். அதிலே பண்ணிக்கலாம்.'  MD பேசப் பேச தனஞ்செயனுக்கு ஆச்சரியத்தில் விழிகள் விரிந்தன. ராகவனுக்கும் எதிர்பாராத விஷயமாகத்தான் இருந்தது..

அடிக்கடிமேவாயை நீவிவிட்டுக் கொள்வது MDக்கு மேனரிசமாக இருந்தது. ‘மனுபாக்ச்சரிங் யூனிட்டுக்கு என்னென்ன மெஷின் வேணும் லேயவுட் பில்டிங் பிளான் எல்லாம் போட்டு கொஞ்சம் கொஞ்சமா கம்பெரடிவ் கொடேஷன் வாங்கி வேலைகளை ஆரம்பிச்சு ஸ்பீட் அப் பண்ணுங்க ராகவன். உங்க ட்ரீம்லே இது மட்டும்தான் இருக்கணும். சீக்கிரம் ப்ராஜெக்ட் ப்ரோபோசல்  ஆக்க்ஷன் பிளான்  என் டேபிளுக்கு வர்றாமாதிரிப் பாருங்க..’  MD  பேச்சைக் கேட்ட ராகவன் அடைந்த ஷாக்கிலிருந்து மீண்டு வர கொஞ்சம் நேரம் பிடித்தது.

‘ஓவர்சீஸ் ப்ராஜெக்ட் மார்க்கெட்டிங் எல்லாமே டைரக்டரின் வேலை..நீங்க அதிலே வரவேண்டிய அவசியமே இல்லை ராகவன்..நீங்க இங்க எக்ஸ்சிக்யூட் பண்றதுலே மட்டும் கான்சென்ட்ரெட் பண்ணுங்க..ஓவர்சீஸ் ஆர்டர் கிடைச்சதும் நாம திணரக் கூடாது அதுதான் முக்கியம்..என்ன டைரெக்டர்?  என்று தொடர்ந்து அடுக்கிக் கொண்டே போனவர் இந்த முறை டைரக்டரைக் கொக்கி போட்டு நிறுத்தினார்..டைரக்ட்டரும் அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் 'ஓகே சார்' என்று தலையாட்டிக் கொண்டிருந்தார்.

சூழலின் இறுக்கம் முற்றும் தளர்ந்திருந்ததை உணர்ந்த தனஞ்செயன் தானும் அங்கே இருப்பதை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பியவராய் 'அதெல்லாம்  நாங்க பார்த்துக்குறோம் சார்..எக்ஸ்சிக்யூஷன்லே எல்லாமே கரெக்டாப் பார்த்துக்கிட்டிருக்கேன் சார்..ராகவனையும்   சேர்த்துக்கிட்டு இன்னும் நல்லாவே பில்ட்அப் பண்ணிர்றேன் சார்.. ' என்று சீட்டை விட்டு கொஞ்சம் எழுந்து சரி பண்ணிக் கொண்டவராக   டயலாக் அடித்தார் தனஞ்செயன். 

தன் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போன அவரை நோக்கிக் கையை உயர்த்திய MD 'தனஞ்செயன், நீங்க ராகவன்கிட்டே  எல்லாத்தையும் விட்டுடுங்க..அவர் பார்த்துப்பார்.

அவர் எப்படிக் கொண்டு போறார்ன்னு நீங்க அப்சர்வ் பண்ணுங்க.. அவரோட வொர்கிங் ஸ்டைலை பிடிங்க, கத்துக்கங்க. நமக்குக் கண்ணன், நீல வண்ணக் கண்ணன் நேரா வரம் கொடுக்க வந்துருக்கார். அவரைக் கேட்டீங்கன்னா உங்களுக்கு என்ன வரம் வேணுமோகிடைக்கும்' என்று நீலக்கலர் போட்டிருந்த ராகவனைக்  கையைக் காட்டினார் MD . 'என்ன ராகவன்?' என்று ராகவனை நோக்கி புருவத்தை உயர்த்தினார் MD . ராகவன் தர்ம சங்கடத்தில் நெளிவதைத்தவிர வேறு வழியே இல்லாதபடிக்கு அடித்துவிட்டார்.

ராகவனும் தனஞ்செயனும் டைரக்டரும் எதிர்பாராத வகையில் MD இப்படிப் பேசிச் சென்றது அவரவர் மனதில் ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளும் தாக்கங்களும் கடுமையாகியிருந்தது.

ராகவன் 'இந்த ஆளைப் போய் என்னென்னவோ நினைத்துவிட்டோமே? டைரக்டர் சொல்பேச்சு கேட்டு ஆடும் தலையாட்டி பொம்மையோ என்று கூட சந்தேகப் பட்டுவிட்டோமே' என்றெல்லாம் கூட சில கணங்கள் வருத்தப்பட்டான்.

அதோடு விடாமல் தொடர்ந்தும் MD பேசத் தொடங்கினார்.

'சம்பளத்தை உயர்த்துவது என்பது குறித்து எனக்கென்று தனி பாலிசி உள்ளது. தொடர்ந்து நீண்டகாலம் என் கம்பெனியில் வேலையில் இருந்து பெர்ஃபார்மன்ஸ் பண்றவுங்களையும் கொஞ்ச காலம் இருந்துட்டு வாராவாரம் ஹிண்டு விளம்பரம் பார்த்துட்டு சில ஆயிரம் ரூபாய்களுக் கெல்லாம் கம்பெனி தாவும் ஆட்களையும், கட்டின பெண்டாட்டியையும்  எப்பவாவுது என்ஜாய் பண்றதுக்குன்னு வெச்சுருக்குறமத்தவுங்களுக்கும் எப்பிடி வித்தியாசப் படுத்திப் பார்க்கிறோமோ அதே பாணியில்தான் நானும் கையாளுவேன். பென்ஸ் கார் வாங்கித் தர முடியாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு சான்ட்ரோ காராவுது என் மேனேஜர்களுக்கு வாங்கித்தந்து வெச்சிக்கனுமின்னு பிளான் இருக்கு. இப்படித்தான் ஒரு ஆள்... சந்துரு தானே அவரு பேரு?' என்று டைரக்டரைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்தியவர் டைரக்டரின் ஆமோதிப்புக்குப் பின் 'என்கிட்டே மார்கெட்டிங் பண்ணிடிருந்தவர், திடீர்ன்னு ஏதோ ஃபாரின் வேலை கிடைச்சுடுச்சுன்னு சொல்லி வேலையை விட்டுட்டுப் போயிட்டார்.அங்கே வேலை செட் ஆகலைன்னு திரும்பி வந்தவர் என்கிட்டே வந்து கெஞ்சினார்.. அவரோட குடும்ப சூழ்நிலையைப் பார்த்து திரும்ப சேர்த்துக் கிட்டேன். இந்தக் கம்பெனியிலே அப்படி ஒரு பாலிசி. உலகத்துலே எங்க போனாலும் என்கிட்டே திரும்பி வந்துதான் ஆகணும். வெளியிலே அந்த அளவு ஜாப் செக்யுரிட்டி இல்லை.'  இப்படி ராகவனைப் பார்த்துப் புன்னகையை தவழவிட்டவாறேதான் MD பேசிக் கொண்டிருந்தாலும் ராகவனுக்கு முகம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிவக்க ஆரம்பித்திருந்தது.

சில நிமிடங்களுக்கு முன் தப்புக்கணக்குப் போட்டுவிட்டோம். முதலாளி வர்க்கத்தின் சுயரூபம். எதேச்சாதிகாரம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்டபஸ் தன் கரங்களை நீட்டுவது போலே ஒவ்வொன்றாக MD இடமிருந்து வெளிவருவதாக ஒரு ச்சீப் இமேஜ் ராகவனின் மனதில் பரவ ஆரம்பித்திருந்தது. இதற்கு மேல் இங்கே இருந்தால் ஏதும் ரசாபாசம் ஆகிவிடும் என்று அவன் முடிவெடுத்த அதே கணத்தில் MD 'அதுனாலே எல்லாத்தையும் மனசுல வெச்சுட்டு அடுத்தடுத்த ப்ராஜெக்ட் எக்ஸ்சிக் யுஷன்லே நல்லா கான்சென்ட்ரெட் பண்ணுங்க.. ராகவன்.. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு..கிளம்பணும்.. ஆல் தி பெஸ்ட்..'என்று வழியனுப்பி ஒருவழியாக பேச்சை முடித்தார்.

வெளியே கிளம்பி மாடிப்படிகளில் நடந்துவந்த ராகவனுக்கு ப்ளட்பிரஷர் ஏறியிருந்தது..அவனைக் குறித்து குறிவைத்துக் கூட்டப்பட்ட கூட்டம் என்பதை சொல்லாமல் சொல்லி ஏற்றவேண்டிய இடங்களில் ஏற்றி இறக்கவேண்டிய இடங்களில் இறக்கி 'என்கம்பெனியில் நான் வைத்ததுதான் சட்டம்.. நான் போட்டுக் கொடுத்த கட்டத்துக்குள் ஓடிவிளையாடும் சிறு பொம்மைதாண்டா நீ'  என்று முகத்தில் அடித்தாற்போன்று அந்த பேச்சின் தாக்கம் இருந்தது.

ஒரு வார்த்தை கூட யாரையும் பேசவிடாமல் தன் வார்த்தை ஜாலத்தில் கட்டிப் போட்டு வைத்திருந்த அந்த திறமைதான் அவரை அந்த அளவுக்கு உயர்த்தி இருந்தது என்கிற எதார்த்தத்தை எல்லாம் மீறி ராகவனுக்கு 'மனைவியையும் மத்தவளையும் என்று தன்னிடம் வேலைபார்க்கும் எல்லோரையும் எந்த விதத்தில் கம்பேர் பண்ணிப் பாக்குறான் இந்தாளு, லாங் டெர்ம்ல இறக்குற ஆளுங்க எல்லாம் பொண்டாட்டி போலவாம். மத்தவுங்கலெல்லாம் வேற மாதிரியாம்..(கிட்டத்தட்ட கம்பெனியிலே பாதிப்பேரு வேற நல்ல வேலைகிடைச்சா தாவலாம் என்று இருப்பவர்கள்தான்..) அப்போ இப்புடி வேறமாதிரி ஆளுங்களை வெச்சுப் பிசினஸ் நடத்தும் இந்தாளை என்னன்னு கூப்பிடுறது?இதுக்கு ரெண்டு எடுபிடிவேற..ச்சே. என்ன ஒரு ச்சீப் மென்ட்டாலிட்டி..?' தன்மானமுள்ளவன் எவனையும் சீண்டிப்பார்க்கும் பேச்சைக் கேட்டுக்கொண்டு கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் மட்டும் என்னிடம் இருங்கள்’ என்று அறை கூவல் விடும் முதலாளி வர்க்கத்திமிர்.
'இதுல எங்க போனாலும் இங்கதாண்டா வரணும். என்னை விட்டா உனக்கு வேறு நாதியில்லை..'என்கிற ரீதியில் பேசிய மிரட்டல் பேச்சு வேறு. ஆத்திரத்தை அதிகமாக்கி லோக்கல் பண்ணையார்களுக்கும் MNC முதலாளிகளுக்கும் எல்ல்லளவும் வித்தியாசமில்லை என்று உடலில் ஏக டென்ஷனை ஏற்படுத்தியிருந்தது.

பல்சரை  ஃபுல் திராட்டிலில் விரட்டி வீட்டுக்கு வந்தவன் எனக்கு  சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிப்படுக்கையில் சரிந்தவன் தூங்க வெகுநேரம் ஆனது. ஏழு மணி காலை அலாரம் அடித்தும் எழுந்திருக்காத ராகவனைத் தட்டி எழுப்பி 'என்னங்க, எழுந்திரிங்க என்னாச்சு, இப்பிடி ஒரு தூக்கம்? இன்னிக்கு ஆபிஸ் போகலே..?' என்ற மகாராணியின்  கேள்விக்கு 'ஆபிஸ் டைம் ஓவர்' என்று முன்தினம் பியூன்  சொன்ன, அப்போதே மனதில் அபசகுனமாகப்பட்ட அதே வசனத்தை தூக்கக் கலக்கத்தில் 'ஒரேயடியா ஆபிஸ் டைம் ஓவர்' என்று சொல்லி சோம்பல் முறித்தவாறே புரண்டு  படுத்தான்.

பதறிப் போய் 'என்னங்க இப்புடிச் சொல்றீங்க..'என்றவளை, ‘அந்த கம்பெனி செட் ஆகலை.. நான் இனிமே அங்க போகப் போறதில்லே.  அத்தோட இந்த மேட்டரை விடு. என்னைக் கொஞ்சம் தனியா விடு..’ என்று அத்தோடு பேச்சை முடித்துக்கொண்டான்.

'என்ன சொல்றாரு உங்க புள்ளைன்னு வந்து கேளுங்க அத்தை' என்று ஊரைக் கூட்டி விசாரணையைத் துவக்க ஆரம்பிக்க விஷயத்தைக் கேட்ட அம்மா சரசு 'ஜோசியக்காரன் சரியாத்தான் சொல்லியிருக்கான்.' என்று களவாணி பட ரேஞ்சில் முகத்தைத் தூக்க அன்று லஞ்ச்         ப்ரேக்கில் வெங்கட்டிடமிருந்து வந்த போன்காலுக்கு வெங்கட் சொன்ன பதிலே வேறு.

"வெங்கட்.. MD ரொம்பத் திறமையாப் பேசி குறைச்ச சம்பளத்துக்கு பெரிய வேலை பார்க்க ஆள் தேடிட்டு இருக்கார். இந்த டைரக்டரையும் மேனேஜரையும் வளைச்சுப் போட்டதுபோல என்னையும் லைஃப்டைம் காண்ட்ராக்ட்லே மாட்டிடலாம்னு கணக்குப் பண்ணியிருக்கார். இவுங்க ரெண்டு பேரும் தங்களுக்கு முடியாததுனாலேதான் என்னைப் போட்டுப் பிறாண்டறாங்க. இந்த ரெண்டு போரையும் தூக்கிடச் சொன்னாக் கூட MD செய்வாரு. ஆனா அதுக்கப்புறம் யாரு கம்பெனியை நடத்துறது..நான் என் தலையிலே ஃபுல் லோடையும் எத்திக்க மாட்டேன்.அவுங்களா நானான்னு பார்த்தா இந்த கேம்ல நான் விலகிக்குறதுதான் புத்திசாலித்தனம். இந்த ரிமோட் கண்ட்ரோல்லே கம்பெனி நடத்த நினைக்குற ஆளுங்க கதையெல்லாம் இப்படித்தான் இருக்கும். அதுல மாட்டிக்கிட்டு சொச்சம் இருக்கும் என் லைஃபை வேஸ்ட் பண்ண நான் விரும்பலை. எனக்குன்னு வேற வழி இந்நேரம் திறந்திருக்கும். நான் அந்த வழியைப் பார்த்துப் போயிட்டே இருக்கேன். நீயும் நல்ல கம்பெனியாத் தேடு. நான் பானுவைப் பத்தி சொல்லலே.."

அங்கே கம்பெனியில்  தனஞ்செயனின் ஜால்ரா:  'ராகவன் சார். எப்போதுமே போனும் கையுமாவேத்தான் இருப்பார்.கம்பெனிக்கு வர்ற போன்கால்லே பாதிக்குமேல அவருக்குத்தான்..ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரம் அவுட்டிங். ஆனாலும் இருந்தவரைக்கும் செமை ஆட்டம் போட்டாரு சார்..' (மார்க்கெட்டிங் வேலைன்னா என்னன்னு தெரியாத கூமுட்டை)
 
தனஞ்செயன்: 'இதுக்குத்தான் ஓவர் ஆட்டமா ஆடக்கூடாதுன்னு சொல்றது. ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான்..கேக்காமலா இருப்பான்?அதான்.' (ராகவன் உள்ள வந்திருந்தா MD சொன்னபடி எக்ஸ்சிக்யுஷன் செக்ஷன்லே அவன் ஆர்டர் போடுறதை இவருல்லே 'அப்செர்வ்' பண்ணிக்கிட்டு இருந்திருக்கணும்..)

ஆக்கம்: நெப்போலியன் ஞானப்பிரகாசம் (மைனர்) ஜப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5




காஃபி என்னும் பிசாசு நம்மைப் பிடித்துக்கொண்ட கதை!
ஆக்கம் By  கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

காஞ்சி மாமுனிவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிராமணனின் இழி நிலைக்குக் காரணமாக நாத்திகவாதம் பரப்பப் பட்டதைக் கூறவில்லை. பிராமணன் தன்னைத் தானே அழித்துக் கொண்டதற்குக் காரணம் காஃபி ஆசை, பட்டுப்புடவை ஆசை, நகை ஆசை, வரதட்சணை ஆசை, சினிமா ஆசை, பத்திரிகைகள் அதிக வாசிப்பு ஆசை, ஓட்டலில் வெங்காய பஜ்ஜி, வெங்காய சாம்பார்  சாப்பிடத் தோன்றிய ஆசை.அத்துடன் தன் வழிபாடுகளை ஆங்கிலபாணி நாகரிகத் தாக்கத்தால் துறந்தது.

அதில் முதல் இடம் வகிப்பது காஃபி ஆசை.

வணிகர்களான ஆங்கிலேயர்களால் நமது நாட்டில் காஃபி அறிமுகப் படுத்தப்பட்டது.

காஃபி என்று எப்படி இதற்கு எப்படிப் பெயர் வந்தது? எதியோப்பியாவில் இருந்த‌ 'கிங்டம் ஆஃப் கஃபா'வில் முதலில் கண்டறியப்பட்டதால் இது காஃபி ஆயிற்றாம். ஆனால் அந்நாட்டில் இது பன்னா என்றே அழைக்கப் பட்டுள்ளது.

முதல் முதலாக ஆங்கில அகராதியில் காஃபி இடம் பெற்றது 1598ல்தான்.

அந்த காஃபி என்ற சொல் அடிப்படையில் அரபுச் சொல்லான 'குவாத்து அல் பன்'(பீன்ஸிலிருந்து கிடைக்கும் மது)என்ற சொல்லாகத் துவங்கி, துருக்கியில் 'காஹ்வே' என்று அழைக்கப்பட்டு,டச்சு மொழியில்' கோஃபே' என்று சொல்லி அப்புறம் ஆங்கிலத்தில் 'காஃபி' ஆயிற்று (நன்றி:விக்கிபீடியா)

எதியோப்பியாவில் ஆடுமேய்க்கும் சிறுவனான கல்டி தன் ஆடுகள் ஏதோ ஒரு தாவரத்தைத் தின்ற பின்னர் மிகுந்த உற்சாகத்துடன் குதிப்பதைக் கண்டான். இது 9 ஆம் நூறாண்டில் நடததாக 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது. அந்த பீன்ஸுகளைத்தானும் தின்று பார்த்து அதே புத்துணர்ச்சி பெற்றதை வெளியில் கூறினான்.

எப்படியோ காஃபி ந‌மது நாட்டில் வந்து புகுந்துவிட்டது. காலையில் நல்ல நீராகாரம் சாப்பிட்டவர்கள் எல்லாம் காஃபிக்கு மாறினர்.

மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்துதல்) ஒரு கலையாகவே ஆகிப் போய்விட்ட சூழலில் காஃபியை சந்தைப் படுத்திய முறையும் காஃபியைப் போலவே சுவையானது.

அப்போது ஆங்கிலேயர் காலத்தில் மாதச் சம்பளம் பெறுபவர்கள் நிறையப் பேர் அக்கிரஹார வாசிகள். எனவே காஃபி பழக்கத்தை அவர்களிடம் அறிமுகப் படுத்துவ‌துதான் உடனடியகத் தங்க‌ளுக்கு லாபம் தரும் என்பதை ப்ரூக்பாண்ட்,  ஸ்டேன்ஸ் போன்ற கம்பெனிகள் ஆய்ந்து முடிவு செய்தனர்.

அடுத்த கட்டமாக அக்கிரஹாரத்திலிருந்தே ஒரு வாய்ச் சவடால் விருதாப் பையனை தங்களது விற்பனையாளனாகத் தேர்வு செய்தனர்.

அவனுக்கு மணமாகக் காஃபி தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.ஒரு சுப முகூர்த்த நாள் அன்று அக்கிரஹாரத்தில் ஒரு அகலத் திண்ணையில் இலவசக் காஃபிக் கடை திறக்கப்பட்டது.

மதியம் 3:30 மணிக்கு சுடச்சுட மணமான காஃபி இலவசமாகக் கொடுக்கப்பட்டது.

எல்லோருக்கும் அறிமுகமான  பையன்."மாமி வாங்கோ, மாமாவையும் அழைச்சுண்டு வாங்கோ" என்று நமது விருதாப் பையன் கூவிக்க்கூவி  அழைப்பான்.

"சும்மா வேண்டும் மட்டும் சாப்பிடுங்கோ. காசா பணமா கம்பேனிக்காரன் சும்மா தரான்; நன்னாச் சாப்பிடுங்கோ..."

"மாமி காஃபி எப்படி இருக்கு?"

"மாமா, காஃபி சாப்பிட்டப்பறம்  தெம்பா இருக்கோல்லியோ?"

காஃபி நரம்புகளில் ஒரு துடிப்பை ஏற்படுத்தியதை அந்த அம்மாமி, அம்மாஞ்சிக் கூட்டம் உணர்ந்தது.

மயிலுக்கு ஒரு குறிப்பீட நேரத்துக்கு சிறிது அபின் கொடுத்துப் பழக்கினால், சரியாக அந்த நேரத்திற்கு அது வந்துவிடுமாம். அதுபோல ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:30 மணிக்காகக் காத்திருந்தது 'ஓசி'க் காஃபிக்குக் கூட்டம் கூடியது.

பையனும் சளைக்காமல் 'சப்ளை' பண்ணினான். இரசாயன உரம் போட்டுப் பயிர் பண்ணாத காலம். எனவே நல்ல பச்சைப் புல்லை சாப்பிட்ட பசுவின் மணமான, சுவையான பால்.தரமான காஃபிக் கொட்டை. இவைகளால் காஃபியின் மணம் ஊரைத் தூக்கும்.

"மாமா,மாமி இன்னிக்கு காஃபி எப்படி?" கேட்பான் விருதா ஐயர் பையன்.

"ஆகா! தேவாமிர்தம்னா! பலே பேஷ்!"என்பார் கோபாலய்ய‌ர்

"ஓய்! இதுதானோ தேவாள் சாப்பிட்ட  சோம பானம்?"என்று கேட்பார் முத்தண்ணா பாகவதர்.

"இல்லை ஓய்! இது சுராபானம்தான்.அதோட குணம்தான் இதுக்கு இருக்கு.." என்பார் நாராயண ஐயங்கார்.

காஃபி சோமபானமா, சுராபானமா என்று பெரிய விவாதம் ஆகிவிடும். அதற்கு ஒரு வித்வத் சபை கூட்டி, சோம, சுராபானங்கள் சமவிகிதத்தில் கலந்ததுதான் காஃபி என்று தீர்ப்பாகும்.

இப்படி ஒரு மண்டலம் ஆயிற்று.ஒரு மண்டலம் 40, 45, 48 என்று ஒவ்வொருவர் ஓவ்வொரு மாதிரி நாள் கணக்குசொல்வர். அப்படி அந்த நாட்கள் கடந்தன.

வழக்கம் போல ஓசிக் காஃபி அருந்த‌ அகலத் திண்ணைக்கு அம்மான்ஜிகள் அம்மாமிகளுடன் வந்தனர்.சரியாக பிற்பகல் 3 30. ஓசிக் காஃபிக்கடை திறக்கவில்லை.

"எங்கடா அந்த விருதாப்பயல்?" கத்தினார் ஒரு கன பாடி(BODY)

காணலயே! அவன் வீட்டை முற்றுகையிட்டனர்.

அவன் தாயார் கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு, "பிள்ளையாண்டன் பட்டணத்துக்கு டிரைனுங்குன்னு போய்ட்டான். நாளை கழிச்சுத்தான் வருவான்" அப்படின்னாள்.

எல்லோரும் தலையில் கையை வைத்துக்கொண்டு அங்கேயே உட்கார்ந்தனர்.

"காஃபி சப்பிடலைன்னா மயக்கமா வருதேன்னார்" கோதண்டமைய்யர்.

"ஆங்காணும்!தலைவலி உச்ச மண்டையப் பிளக்கிறதே!"என்றார் கைலாச குருக்கள்.

இப்படி மாமா,மாமிகளும் ஒவ்வொரு புகார்கள்  சொல்லிக்கொண்டு வீட்டைப்பார்க்கப் போனார்கள்.

இரவு தூக்கம் வரவில்லை.

'ராமா, ராமா' என்று ஜபம் பண்ணியவர்கள் 'காஃபி, காஃபி' என்று ஜபம் பண்ணத் துவங்கினர்.

இரண்டு நாள் கழித்து விருதா அம்பி ஊருக்குள் வந்தான்.

அவனை எல்லோரும் அடிக்காத குறைதான்.

"நா  என்ன பண்ண‌ட்டும்? கம்பேனிக்காரன் சப்ளையை நிறுத்திட்டான். ஆனா பாருங்கோ அந்த மூலக்கடையில காப்பி வில்லை கிடைக்கும் இரண்டு வில்லை ஒரணதான். வாங்கிண்டு, பாலை பொங்காமக் காய்ச்சிண்டு, இந்த வில்லையப் போட்டு... நா போட்டதைத்தான் பார்த்திருப்பேளே.. அதே மாதிரி காஃபி போட்டு சாப்பிடுங்கோ மாமா மாமிகளே!"

அன்று காஃபி வில்லை வாங்க‌போன ஐயர் அகங்களில் எல்லாம் மூத்த‌தேவி காலெடுத்து வைத்தாள்.காஃபிக்காக கடன், லஞ்சம்,அன்பளிப்பு எல்லாம் பெருகியது.

'பிராமணாள் காப்பி கிளப்' கொடிகட்டிப் பறந்தது.

இப்படியாகத்தானே காஃபி என்ற பைசாசம் பிர‌மணாளை  வந்து பிடித்துக் கொண்டது.

சேலம் வில்வாத்ரி பவன், தஞ்சாவூர் ஆனந்தா லாட்ஜ், மாயவரம் காளியாக்குடி என்று எந்த எந்த‌ ஊர் ஓட்டல்கள் காஃபி நன்றாக இருக்கும் ஒரு பட்டியல் தயாரானது.

காஃபி குடிக்கும் யாருக்கும் மது குடிப்பவர்களை விமர்சனம் செய்ய உரிமை கிடையாது.

தஞ்சாவூர் பேச்சு நயம் இப்படி: 'காஃபி தரவா?' என்று கேட்டால் 'அறுத்தது போதும் கிளம்பு' என்று பொருள்!

இதை எழுதும்போது கற்பனை நன்றாக வர ஒரு கோப்பை காஃபி மாமியிடம் கெஞ்சி வாங்கி சப்பி சப்பிக் குடித்து விட்டுத்தான் எழுதினேன்.

('கோப்பையில் தோன்றிய புயல் கரையைக்கடந்தது' என்ற ஐயாவின் ஆக்கத்தை 1 12 2011 அன்று வெளியானதைப் படித்துவிட்டு ஏற்பட்ட எண்ணங்கள்)
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தொடரும்: (மாணவர் மலர் இரண்டாவது பகுதி நாளை வெளிவரும்)

---------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்

35 comments:

  1. இன்றைய வகுப்பிற்கு
    அய்யர் விடுமுறை..

    வணக்கமும்
    வாழ்துக்களும்

    ReplyDelete
  2. ஐயா, எனது ஆக்கங்களை வெளியிட்டதற்கு மிக்க நன்றி. ஆனால், இரண்டு ஆக்கங்களை அடுத்தடுத்து பார்த்தவுடன் கொஞ்சம் கை கால்கள் கட்டுப்பாடின்றி உதறுகிறது. உங்கள் பெருந்தன்மை நான் அறிந்ததுதான். இருத்தும் அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லை போலிருக்கிறது. நன்றி ஐயா.

    தனுசுவின் கட்டளைக் கவிதையை எதிர் பார்த்து ஏமாந்துவிட்டேன். நாளை மலரில் வரும் என்று நம்பிக்கையடன் இருக்கிறேன். சென்ற சந்திரகிரகணம் தனுசுவினால் ஏற்பட்டதோ என்ற சந்தேகம் இன்னமும் எனக்கு :)

    ஸ்ரீஷோபனா அருமையாக எழுதுகிறார், பூக்காரப் பாட்டியுடன் சென்று நிகழ்சிகளை கூட இருந்து பார்த்தது போன்ற உணர்வைக் கொடுத்தது அவர் நடை. ஏதோ வாரப் பத்திரிகளில் வரும் கதாசிரியர்கள் போல் வெளுத்துக் கட்டுகிறார். வயதான காலத்தில் கைக்குழந்தையை பராமரிக்க வேண்டிய நிர்பந்ததிற்குள்ளான பாட்டியின் நிலையைப் பார்த்து வருத்தமேற்படுகிறது.

    மைனர்வாள் கதாபாத்திரங்களைப் புனைவதில் திறமைசாலி. பாத்திரங்கள் அனைவரயும் முன்பே எங்கோ பார்த்தது போன்ற உணர்வைக் கொண்டு வருகிறார். ஆசிரியர் ஐயா தெரிவு செய்த படத்தில் இருப்பதுதான் மோகனசுந்தரமோ? என் தந்தையும் ராகவனைப் போன்ற (விபரீத)முடிவுகளை எடுத்திருப்பது தெரியுமாதலால் முடிவை ஒத்துக்கொள்ள முடிந்தாலும், நான் சராசரி இனத்தை சேர்ந்த ஆளாக இருப்பதால் முடிவு ஏனோ மனதை நெருடுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    KMRK ஐயாவின் இந்தியாவில் காஃபி நுழைந்த ஆக்கம், அவர் நடையினால் ஒரு வரலாற்றுப் பிண்ணனி நிகழ்ச்சி, ஒரு கதையின் உருவம் பெற்று சிறக்கிறது. ஆங்கிலேயர்களின் இந்த வியாபார யுத்தியைப் பற்றி நான் எங்கும் படித்ததில்லை இதுவரை.

    ReplyDelete
  3. ஐயா இது உங்கள் கவனத்திற்கு மட்டுமே.... மைனா கதையின் சுட்டி தகராறு செய்கிறது

    ReplyDelete
  4. கேதுவை வைத்து சொன்ன ஆராய்ச்சி ஜாதகக் கதை அருமை. இணைய தொடர்பு பிரச்சினை உள்ள என் போன்றோருக்கு விடுகதை போடாமல் விடையை சொல்லிவிடுங்கள் தோழி.மைனாகதை அச்சச்சோ ரகம்.எப்படி இருக்க கூடாது என்பதை, இருக்க வைத்து எழுதியது. மொழி மாற்றமாக இருந்தாலும் நல்ல நடையில் வந்த கதை.

    மைனர் சார் , கதையில் வரும் நடைமுறை பேச்சு வார்த்தை கதையோடு நன்கு சேருகிறது "எப்படி கொண்டு போறார்ன்னு அப்சர்வு பண்ணுங்க .அவரோட வொர்கிங் ஸ்டைலை கத்துக்குங்க" இதெல்லாம் அதிகாரிகளுக்கு தேவையான அணுகுமுறைதான் .மேலும் "கட்டின பொண்டாட்டியையும் எப்பவாவது என்ஜாய் பண்றதுக்கு வச்சிருக்கிற மத்தவங்களும் " ஆஹா" போடவைத்தது

    ஷோபனாவின் குமரி எக்பிராஸ் .மனித உணர்வுகள் தொட்டு அவர் எழுதும் இந்த கதையும் மனசை தொட்டது. சீரான நடையில் வந்தது. கதை எழுதிய நடைக்காகவே இரண்டு முறை படித்தேன்.
    காப்பியின் ஆத்திசூடி கதை நல்ல மணமாகவே வந்தது. இந்த கதையை படிக்கும்போது கடந்த இரண்டு நாளாய் வந்த பின்னூட்டத்தின் தொடர்ச்சி தான் கதையாக வருகிறது என்று நினைத்தேன் .கதையின் முடிவில் என்னத்தை மாற்றி கொண்டேன் . அந்த குறிப்பு வரிகளை பார்த்த பின்.

    ReplyDelete
  5. தேமொழி அவர்களின் "கேது திசை" ஆராய்ச்சிக் கட்டுரை மிக அருமை.உங்களது ஆராயும் எண்ணத்திற்கு "வானமே எல்லை".நீங்களே வகுப்பறையின் "சின்சியர்"மாணவி...
    இரண்டாவது ஆக்கமும் நன்றாக இருந்தது...முடிவில் மைனாவை நைனா பாராட்டினாரா இல்லையா என்று என்னையும் "ஆராய்ச்சி" செய்ய வைத்துவிட்டீர்கள்...

    ReplyDelete
  6. மைனர் அவர்களின் "இரண்டாம் பாகம்" சுபம்...இதே முடிவைத் தான் நான் முதல் பாகத்தின் முடிவில் நினைத்தேன்...ஆனால் இன்று கதையின் ஆரம்பத்தில் படிக்கும் பொழுது தவறோ என்று எண்ணினேன்,பிறகு என் கணிப்பு சரியாகவே இருந்தது...
    நாட்டில் ராகவன் போன்று இருப்பவர்கள் ஒரு சிலரே இருக்கின்றார்கள் ஆனால் தனஞ்செயன் போன்ற "ஜால்ரா"க்கள் 99% இருப்பதினால் தான் மோகனசுந்தரம் போன்றவர்கள் எல்லாம் கவலையின்றி பணம் பார்க்க முடிகிறது.நல்ல முதலாளிகளும் இருக்கவே செய்கிறார்கள் ஆனால் அவர்களும் ராகவனை போலவே 1% மட்டுமே.அதனால் தானே "சென்னையிலும் ஒரு மழைக்காலம்" வருகிறது!

    ReplyDelete
  7. kmrkஅவர்களின் "காஃபி"யின் வரலாறும் அவர் எழுதிய நடையும் சுவையாக இருந்தது.நல்லதொரு "தேநீர் விருந்து"தந்துமைக்கு நன்றி...
    எனக்கு காஃபி அவ்வளவாக பிடிக்காது,ஆனால் என் அம்மா செய்யும் "சுக்கு டீ" இல்லாமல் வேறு வேலையே செய்ய ஆரம்பிக்க மாட்டேன்.ஆனால் கட்டுரையின் முதல் பத்தியில் வரும் காஞ்சி பெரியவர் கூறிய வார்த்தைகள் அனைத்து சமூகத்தினருக்குமே பொருந்தும் என்று நினைக்கின்றேன்...அதுவே என் மூளையை படத்தில் வருபவரைப் போல "shake" செய்கிறது.

    ReplyDelete
  8. //ஸ்ரீஷோபனா அருமையாக எழுதுகிறார், பூக்காரப் பாட்டியுடன் சென்று நிகழ்சிகளை கூட இருந்து பார்த்தது போன்ற உணர்வைக் கொடுத்தது அவர் நடை. ஏதோ வாரப் பத்திரிகளில் வரும் கதாசிரியர்கள் போல் வெளுத்துக் கட்டுகிறார். வயதான காலத்தில் கைக்குழந்தையை பராமரிக்க வேண்டிய நிர்பந்ததிற்குள்ளான பாட்டியின் நிலையைப் பார்த்து வருத்தமேற்படுகிறது//
    தங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி தேமொழி...எல்லாம் வாத்தியார் ஐயா காட்டிய வழிகள் தான்...
    //ஷோபனாவின் குமரி எக்பிராஸ் .மனித உணர்வுகள் தொட்டு அவர் எழுதும் இந்த கதையும் மனசை தொட்டது. சீரான நடையில் வந்தது. கதை எழுதிய நடைக்காகவே இரண்டு முறை படித்தேன்.//
    என‌து ஆக்க‌த்தை ப‌டித்து பின்னூட்ட‌த்துட‌ன் பார‌ட்டிய‌மைக்கு மிக்க நன்றிகள்.‌

    ReplyDelete
  9. ///////// தேமொழி said...

    மைனர்வாள் கதாபாத்திரங்களைப் புனைவதில் திறமைசாலி. பாத்திரங்கள் அனைவரயும் முன்பே எங்கோ பார்த்தது போன்ற உணர்வைக் கொண்டு வருகிறார். ஆசிரியர் ஐயா தெரிவு செய்த படத்தில் இருப்பதுதான் மோகனசுந்தரமோ? என் தந்தையும் ராகவனைப் போன்ற (விபரீத)முடிவுகளை எடுத்திருப்பது தெரியுமாதலால் முடிவை ஒத்துக்கொள்ள முடிந்தாலும், நான் சராசரி இனத்தை சேர்ந்த ஆளாக இருப்பதால் முடிவு ஏனோ மனதை நெருடுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.////////////


    நன்றி..தேமொழி..


    ஆசிரியர் நல்லதொரு படத்தை இணைத்திருக்கிறார்..அவருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி..


    சராசரி என்று 'பழைய பல்லவி'யைப் பாடவேண்டாம்..அது கடந்த பாகத்துக்குரிய கமென்ட்..எல்லோருமே அறிவுப் பூர்வமாக ஆராய்ந்து முடிவுகளை எடுப்பதுதான் சிறந்தது என்றாலும் உணர்வுப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் தொலைநோக்குப் பார்வையிலும் என்று கலவையாக சில சமயங்களில் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருகிறது..முடிவெடுக்க வேண்டியதன் அழுத்தத்தைக் கொடுக்கவென்று சூடான சம்பவங்கள் இணையும் போது அது சூடானதொரு உடனடிக் காரணமாக அமைந்துவிடுகிறது..


    ஆனால்..இங்கே ராகவன் எடுத்திருப்பது முடிவல்ல..ஆரம்பம்..


    இந்தப் பார்வைதான் அவனை முன்னோக்கி நகர்த்துகிறது..மீண்டும் நன்றி..

    ReplyDelete
  10. /////////thanusu said...
    மைனர் சார் , கதையில் வரும் நடைமுறை பேச்சு வார்த்தை கதையோடு நன்கு சேருகிறது "எப்படி கொண்டு போறார்ன்னு அப்சர்வு பண்ணுங்க .அவரோட வொர்கிங் ஸ்டைலை கத்துக்குங்க" இதெல்லாம் அதிகாரிகளுக்கு தேவையான அணுகுமுறைதான் .மேலும் "கட்டின பொண்டாட்டியையும் எப்பவாவது என்ஜாய் பண்றதுக்கு வச்சிருக்கிற மத்தவங்களும் " ஆஹா" போடவைத்தது///////

    நன்றி..தனுசுக்காரரே..இந்த சாரெல்லாம் வேண்டாமே....

    மற்றபடி கதையில் சில இடங்களைச் சுட்டி பாராட்டியிருப்பதற்கு நன்றி..அதிலே 'ஆஹா' போட வைத்த விஷயம்தான், வசனம்தான் ராகவனை உணர்ச்சிப் பூர்வமான தீர்மானத்துக்கு இட்டுச் சென்றது..

    அதே 'ஆஹா' வசனத்தில் உங்களின் சென்ற பாகத்துக்கான விசுவாசம் பற்றிய கேள்வியும் பதிலும் இணைந்தே இருக்கிறது..படித்து விமர்சித்த தங்களின் பெருந்தன்மைக்கு மீண்டும் நன்றி..

    ReplyDelete
  11. ////R.Srishobana said...
    மைனர் அவர்களின் "இரண்டாம் பாகம்" சுபம்...
    ////////

    நன்றி சோபனா..

    //////////R.Srishobana said...
    இதே முடிவைத் தான் நான் முதல் பாகத்தின் முடிவில் நினைத்தேன்...ஆனால் இன்று கதையின் ஆரம்பத்தில் படிக்கும் பொழுது தவறோ என்று எண்ணினேன்,பிறகு என் கணிப்பு சரியாகவே இருந்தது...////////

    இந்தத் தவறைத் தன் பேச்சால் சரி செய்து சென்ற MD கடைசியில் தன் முதலாளிவர்க்கத் திமிர் பேச்சால் தவறுசெய்து ராகவன் மூலம் தனக்கு வந்து சேரவிருந்த நல்ல லாபகரமான ப்ராஜெக்டை இழந்தார் என்பதுதான் உண்மை..
    அவர் கணிப்பு தவறிப் போனது..
    உங்கள் கணிப்பு சரியானது..

    ///////R.Srishobana said...

    நாட்டில் ராகவன் போன்று இருப்பவர்கள் ஒரு சிலரே இருக்கின்றார்கள் ஆனால் தனஞ்செயன் போன்ற "ஜால்ரா"க்கள் 99% இருப்பதினால் தான் மோகனசுந்தரம் போன்றவர்கள் எல்லாம் கவலையின்றி பணம் பார்க்க முடிகிறது.நல்ல முதலாளிகளும் இருக்கவே செய்கிறார்கள் ஆனால் அவர்களும் ராகவனை போலவே 1% மட்டுமே.அதனால் தானே "சென்னையிலும் ஒரு மழைக்காலம்" வருகிறது!/////

    புள்ளிவிவரம் கொடுப்பதில் தேமொழியை மிஞ்சி விட முயற்சி எடுக்கிறீர்கள் என்று தோன்றுகிறது..

    ReplyDelete
  12. /////@தேமொழி
    சற்று ஓய்வெடுக்கலாம், இன்று விடுமுறை நாள்தானே மதியம் முழுவதும் ஏதாவது தொலைக்காட்சி பார்த்தால் போயிற்று என்று ரிமோட் கன்ட்ரோலு டன் இருக்கையில் சரிந்து உட்கார்ந்து ரிமோட் பட்டனை கிளுக்கினேன். "உங்கள் டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?" என்ற கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமின்றி; அடுத்து "கிளிக்", வீட்டில் சகல ஐஸ்வர்யமும் கிடைக்க ஸ்ரீ தனலக்ஷ்மி எந்திரம் வாங்கு என்று ஆலோசனை சொன்னது அடுத்த வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி; மீண்டும் "கிளிக்", இங்கே ஏதோ ஒரு பாட்டுக்கு சீருடையில் ஒரு கூட்டமே நடனம் என்ற பெயரில் நடுத் தெருவில் குதித்துக் கொண்டிருந்தது. இது உதவாது என்ற எரிச்சல் வந்து மறுபடியும் "கிளிக்", /////////////

    தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் தரமானவையா இல்லையா என்பதை விடுத்து அதிலே நமது கவனம் செல்கிறதா இல்லையா என்ற ரீதியிலேதான் நான் இதனைப் பார்க்கிறேன்..எண்ணற்ற படைப்பாளிகள் தங்கள் கற்பனைகளை கொட்டி உருவாக்குகிற எழுத்து, பேச்சு,நடனம் என்று படைப்புக்கலையை மக்களுக்கு விருந்தாக்கும் இவர்களின் முயற்சிகளில் நம்மைக் கவராது போன அபத்தங்கள் அதிகம் என்பதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை..விலகிப் போய்க் கொண்டிருக்கிறேன் என்பது பட்டும் புரிகிறது..உலகத்தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளை உலகத்தர டிவி சோனி ப்ரேவியா HX 720 விலே ப்ளு-ரே யிலே பார்த்தாலுமே மனம் அதில் லயிக்காத விஷயங்கள் அதிகம் இருப்பதால் எங்கோ விலகுகிறேன் என்பது மட்டும் புரிகிறது..

    அதனால் உங்களின் நிலையம் புரிகிறது..


    நம் படைப்புகள் இதே விதத்தில் பிறரின் கவனத்தைக் கவராமல் இருக்கவாய்ப்புள்ள காரணங்கள் அவர்களிடம்தான் கேட்கவேண்டும்..

    ReplyDelete
  13. //@தேமொழி_முதல் ஆக்கம்..///

    ஆங்காங்கே பல ஆக்கங்களில் லிங்க்குகள் கொடுக்கப்பட்டாலும் எல்லாவற்றையுமே படிக்க ஆர்வம் இருப்பதில்லை..ஆனால் இந்த லின்க்கை லிங்க்கி தொடர்ந்து முழுப்பாட்டையும் கேட்டேன்..காரணம் தேமொழி எழுத்திலே அந்த லிங்க்கை பார்க்கத் தூண்டியிருந்தார்..

    வீரமங்கைக்குக் கிடைத்த வெற்றி.

    சோதிடம் தொடர்பான விஷயங்களை இணைத்து வகுப்பறைக்குத் தகுந்த ஆக்கத்தை ஆர்வத்துடன் கொடுத்திருக்கும் தேமொழிக்கு ஒரு 'ஓ' போடலாம்..

    ReplyDelete
  14. தேமொழியின் இரண்டாவது ஆக்கம் மைனாவின் அபத்தம் சிரிப்பை வரவழைத்தது.கடைசியில் மைனா தன் கையில் வைத்திருந்த தொகை எவ்வளவு? லாபம் அடைந்தாளா? இல்லையா என்றெல்லாம் எதாவது கேள்விகள் கேட்டுவிடுவாரோ..
    இன்னும் ஒருமுறை படிக்கவேண்டியதாகிவிடுமே என்று கவலைப்பட்டேன்..நல்லவேளை அப்படியெல்லாம் ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளாக்கவில்லை..நன்றி..

    ReplyDelete
  15. தொடர்ந்து ஷோபனா கதைஎழுதுவதில் போட்டியை உருவாக்கும் நோக்கில் சென்று கொண்டிருக்கிறார்..போட்டி போட்டியாக இருந்து இன்னும் பலர் உருவானால் நல்லது..

    மாறாக 'நமக்கு இப்படி எழுத வரவில்லையே' என்று தன்னிரக்கத்தைத் தூண்டி பொறாமையாக மாறி தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சிலரும் வராமல் போய் விடுவார்களோ என்ற பயமும் கூடவே எழுவதால் ஷோபனாவை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்..

    பொறாமையுடன் வெளியில் காட்டி யாராவது பின்னூட்டம் இடுவார்களேயானால் கதையில் அவர் காட்டியிருக்கும் காட்டமான சென்னை கூவப் பகுதி வசவு வார்த்தைகள் அவருக்கு கைவந்த கலை..ஜாக்கிரதை..

    ReplyDelete
  16. நல்ல ஆக்கம்..சலிப்புத்தட்டாமல் சுவாரஸ்யத்தைத் தூண்டி படிக்க வைத்தார் KMRK .நன்றி...

    அக்கிரஹாரத்துக்கு விசிட் அடித்ததில் ஓசிக் காப்பி சாப்பிட பெரும்பாலும் வயசான மாமிகள் மட்டுமே வந்திருந்தது ஏமாற்றத்தை அளித்தது..விளம்பரத் திறமையற்ற ப்ருக்பான்ட்,ஸ்டேன்ஸ் கம்பெனிக்காரா மேலும் KMRK மேலும் கோபத்தையும் வரவழைத்தது..

    சோம பானம், சுறா பானம் என்றால் ஏதோ விஸ்கி, பிராண்டி என்று நினைத்திருந்தேன்..

    தொடர்ந்து KMRK புதுப் புது விஷயங்களை சொல்கிறார்..உண்மையில் அந்த பானங்கள் எதில் தயாரிக்கப்பட்டன என்று தகவல்களை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  17. துர்ஸ்தான அதிபதியாக குறிப்பாக 8ம் அதிபதியாக வரும் குருவோ, சுக்கிரனோ எப்படி பலன் கொடுப்பார்கள் என்று சகோதரி தேமொழி பார்த்திருக்க அல்லது அனுபவித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். என் வகுப்பறைக்கு வரும் சகோதரி ஒருவர் சுக்கிர தசையில் பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு ஆளானதாக சொல்லியிருக்கிறார். இருந்தாலும் பாடத்தை கூர்ந்து கவனித்து இவ்வளவு சொன்னதைப் பாராட்டதான் வேண்டும்.

    ReplyDelete
  18. தடுக்கி விழுந்தால் ஒரு மியூசியம் அல்லது பழைய சர்ச், இல்லாவிட்டால் காபி – பிஸா கடைகளில் தான் விழவேண்டும். நகரமெங்கும் காபி மணம் அடித்துக் கொண்டே இருக்கிறது. இத்தாலியர்களுக்கு காபி என்றால் நல்ல ஸ்ட்ராங்கான கடுங்காப்பி, சர்க்கரை இல்லாமல், ஒரு மடக்கு – அவ்வளவு தான். அந்த வாசனையும், கசப்பும் பல மணி நேரம் தங்கும். நான் 30மில்லி அளவுள்ள அந்தக் காப்பியைக் குடித்துவிட்டு கசப்பு தலைக்கேறி கபாலத்தை இடிக்க, சாமி வந்தது போல தலையைச் சிலுப்பிக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். மூச்சு, நாடி, நரம்பெல்லாம் காபி ஓடுவது போலிருந்தது. நமக்கு 'ஆத்துல கலந்த பசுமாட்டுப் பாலில், டிகாஷன் சேர்த்து, வட்ட டபராவில் நுரைவர ஆற்றிக் குடிக்கும் நரசூஸ் காபி தான் பேஷ்..பேஷ்..' என நினைத்துக் கொண்டேன். வீட்டுக்கு வருபவர்களுக்கு இந்தக்காபி கொடுப்பது பாரம்பரியமான விருந்தோம்பல். மற்றபடி கப்புசினோ, பால் காபி (கஃபே லாட்டே), இத்யாதிகள் அவர்கள் விரும்புவதில்லை. அதெல்லாம் இத்தாலி பெயரைச் சொல்லி வெளியே பிரபலம்.

    FROM http://jyeshtan.blogspot.com

    this link is a very good.prkash sankaran writes well.his stories are touching.

    ReplyDelete
  19. தேமொழி அவர்களே! கேதுதசா எனக்கு வருவதற்கு முன்னரே புததசா குருபுக்தியில் என் மூத்த சகோத‌ரரையும்,புத தசா சனி புக்தியில் என் விதவை அண்ணியையும் இழந்தேன்.அண்ணன் அண்ணியின் 3 குழந்தைகள் எங்கள் பொறுப்பில் வந்தனர்.கேது தசா முழுதும் ஓர் இல்லற சந்நியாசியாக வாழ்ந்தேன்.
    அந்தக் கால கட்டத்தில் என் மூலம் பல அற்ச் செயலகளை இறைவன் நடத்த அருள் புரிந்தான். கிட்டத்தட்ட என் உடல் எனக்கு இருக்கும் நினைவே இல்லாமல் இருந்த கால கட்டம் அது. என்னை ஒரு காற்று(ஆவி?) என்றே எண்ணிச் செயல் பட்டேன். அப்போது என்னால் எல்லாம் முடிந்தது. முடியாது என்ற சொல்லே என் அகராதியை விட்டு நீங்கிவிட்டது.நான் கேட்காமலேயே கிராமத்து மக்கள் என் காலைத் தொட்டுக் கும்பிடத் துவங்கினர்.அவர்களை விட்டு விலகி ஓடினால் விடாமல் துரத்தினர். இரவு 12 மணிக்கு வீட்டுக் கதவைத் தட்டி 'பிள்ளை பயந்து அழுவறான் உன் கையால் துண்ணூறு இடு சாமி'ன்னு வந்து நிற்பவர்களைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று எனக்குத் தெரியவில்லை.'நான் சாமியாரில்லை' என்று எவ்வளவு கத்தினாலும்,
    கோபித்தாலும்,'உன் மக‌மை உனக்குத் தெரியாது சாமியோவ்' என்பவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்கள் அன்புக்கு நான் அடிமையானேன்.சுக்கிர தசா சுக்கிர புக்தி வரை 9 ஆண்டுக் காலம் என்னை சுவாமிகளாக ஆக்கி அழகு பார்த்தது எது? கேதுதசையா? அல்லது பாமர‌ மக்களா?

    ReplyDelete
  20. தேமொழியின் 'ஓ மைனா மைனா'வும் சிந்தனையைத் தூண்டும் பதிவு.

    அந்தக் காலத்தில் 'வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்' என்று ஒரு கதை உண்டு. பண்ட மாற்றில் இப்படித்தான் ஆகிறது..

    நீங்கள் சொல்வது நகைக் கடைக்காரரகள் நடைமுறையில் கடைப் பிடிக்கிறார்கள்.
    வாங்கும் போது செய்கூலி சேதாரம், விற்கும் போதும் செய் கூலி சேதாரம்.
    ஒரு நகையை 3 முறை மாற்றி விட்டால் அந்த நகை நம்முடையது இல்லை.

    இதற்கான லிங்க் 'நாட் ஃபெள்ண்ட்' என்று வருகிறது.
    கோர்வையாக நன்றாக எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்!

    ReplyDelete
  21. 'பாட்டி கவலைப்படாதீங்க!உங்க பெண்ணே பேத்தியா வந்து பிறந்திருக்கா..'என்று

    'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு'என்று ஐயன் திருவள்ளுவனின் சொல்லை நினைவு படுத்தியது.

    நல்ல கதை. ஷோபனா அவர்களே நல்ல 'கதை சொல்லி'தான் தாங்கள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. "ஜோசியக்காரன் சரியாத்தான் சொல்லியிருக்கான்.." இது பழமையின் உள்ளிழுப்பு/அவநம்பிக்கை.

    "எனக்குன்னு ஒரு வழி இப்போ திற்ந்திருக்கும்" இது இளமையின், புதுமையின்
    வெளிப்பாடு/தன்னம்பிக்கை.

    நல்ல 'கான்டிராஸ்ட்' மைனர். கதை சொல்வதில் தேறிவிட்டீர் ஐயா!

    பொறாமை எனக்கு வராது. ஏனெனில் கொட்டும் வண்டல்லாவா நான்?!(குஞ்சைப் பலம் பெறச் செய்ய வண்டு கொட்டுமாம்)

    ReplyDelete
  23. என் காஃபி ஆக்கத்தைப் பாராட்டிய/பாராட்டப் போகும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.வெளியிட்டுப் பெருமைப்படுத்திய ஐயாவிற்கு வந்தனங்கள் பல‌ப்பல.

    ReplyDelete
  24. "என்றுரைத்த வர்க்கத்தில் பிறந்தோம்; வந்தென்ன செய்தோம்?"

    நல்ல கேள்வி புருனை மன்னரே! இதையேதான் திருப்பூர் கிருஷ்ண‌னும் கேட்டார்.

    ஆண்டுக்கு 200/‍= உருபா புத்தகம் வாங்குவது என்று ஒவ்வொரு தமிழனும் செய்தால் எழுத்தாளன் பட்டினியால் சாவானா? தமிழினை எப்படித்தான் வாழ வைப்பது? படிக்காமல், பேசாமல், உரையாடாமல் தமிழ் வளருமா?

    'தமில் வால்க!' என்ற கோஷம் மட்டும் போதுமா?

    ReplyDelete
  25. எனக்கு மனைவியிடம் கோபம் வரும் போதெல்லாம் 'சோமநாத‌ ஐயர்' என்று ஜபம் செய்வேன்.

    சந்திரிகையின் கதை முற்றுப் பெறாதது நமது துரதிர்ஷ்டமே!
    சுட்டிய தேமொழிக்கு நன்றி!

    நாம் ஐவர் மட்டுமே நடத்தும் mutual admiration society
    ஆகப்போய்க்கொண்டு இருக்கிறது.
    2800 பேரில் யாராவது வாசிக்கிறார்களா இதையெல்லாம்?

    ReplyDelete
  26. என் ஆக்கங்களை படித்த அனைவருக்கும், கருத்து தெரிவித்தவர்களுக்கும் நன்றி. ஆனந்த் அவர்களின் கருத்து மகிழ்ச்சியைத் தந்தது. முக்கியமாக அவர் வகுப்பின் சின்ன வாத்தியார் என்பதால் ஜோதிடத்தைப் பற்றிய ஆக்கத்திற்கு அவர் இட்ட பின்னூட்டம் மகிழ்ச்சியளித்தது. மற்றவர்கள் கருத்திற்கும் நன்றி, ஆனால், நம் கருத்துகள் ஒரு வகையில் ஒருவருக்கொருவர் முதுகு சொறிவதுபோல் இருக்கிறதே என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

    ReplyDelete
  27. ///பிசி ச்செட்யூல்லே அக்டிவ்வா இருந்ததாலே இங்கவந்து பார்க்கமுடியலே////

    நண்பர், சகோதரர் ஜப்பான் மைனர் இந்த வரிகளை இங்கு நானும் கூறிக் கொண்டு பின்னூட்டம் தொடர்கிறேன்... கதை அல்ல இந்து நிஜம் என்றே அமைந்த அற்புத கதையின் வெளிப்பாடு... இதன் முதற்பகுதிக்கும் பின்னூட்டம் இட முடியாமல் போனது...

    திறமைசாலிகள் எங்கும் வரவேற்கப் படுவார்கள் அது அவர்கள் புத்திசாலிகளிடம் இருக்கும் போது... அதே நேரம் ஒரு நல்ல எதிர்காலம் உள்ள இடம் நோக்கி யாவரும் நகர்த்தப் படுகிறார்கள் அவர்களுக்கு நல்ல காலம் வரும் போது....

    மிகவும் திறமையாக.. நேர்த்தியாக தேர்ந்த கதையாசிரியரைப் பிரதிபலிக்கும் வகையில்...
    அற்புதமாக கதை சமைத்து இருக்கிறீர்கள்.. பகிர்விற்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
    அன்புடன்,
    உங்கள் நண்பன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  28. சகோதிரி தேமொழியும், திருவாளர் கே.எம்.ஆர்.கே யும் நல்ல ஆக்கங்களை தந்துள்ளீர்கள்.... மிக்க நன்றி...

    சகோதிரி ஷோபனா... தங்களின் கதையும் தமிழும் அருமை... தொடர்ந்து எழுதவும்... பகிர்விற்கு, பாராட்டுக்களும் நன்றியும்.

    ReplyDelete
  29. very long post but nice

    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  30. //மாறாக 'நமக்கு இப்படி எழுத வரவில்லையே' என்று தன்னிரக்கத்தைத் தூண்டி பொறாமையாக மாறி தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சிலரும் வராமல் போய் விடுவார்களோ என்ற பயமும் கூடவே எழுவதால் ஷோபனாவை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்..

    பொறாமையுடன் வெளியில் காட்டி யாராவது பின்னூட்டம் இடுவார்களேயானால் கதையில் அவர் காட்டியிருக்கும் காட்டமான சென்னை கூவப் பகுதி வசவு வார்த்தைகள் அவருக்கு கைவந்த கலை..ஜாக்கிரதை..//
    மைனர்வாள் அவர்களே தங்கள் பாராட்டிற்கு நன்றி...
    உண்மையில் "சென்னை செந்தமிழை" எழுதுவதற்கு மிகவும் யோசித்து ஒரு வழியாக தட்டுத்தடுமாறி எழுதினேன்...நீங்கள் புரியாத ஜப்பான் பாஷையில் வசைபாடாமல் இருந்தால் சரிதான்...

    ReplyDelete
  31. /////
    தமிழ் விரும்பி said...
    ///பிசி ச்செட்யூல்லே அக்டிவ்வா இருந்ததாலே இங்கவந்து பார்க்கமுடியலே////

    நண்பர், சகோதரர் ஜப்பான் மைனர் இந்த வரிகளை இங்கு நானும் கூறிக் கொண்டு பின்னூட்டம் தொடர்கிறேன்... கதை அல்ல இந்து நிஜம் என்றே அமைந்த அற்புத கதையின் வெளிப்பாடு... இதன் முதற்பகுதிக்கும் பின்னூட்டம் இட முடியாமல் போனது...

    திறமைசாலிகள் எங்கும் வரவேற்கப் படுவார்கள் அது அவர்கள் புத்திசாலிகளிடம் இருக்கும் போது... அதே நேரம் ஒரு நல்ல எதிர்காலம் உள்ள இடம் நோக்கி யாவரும் நகர்த்தப் படுகிறார்கள் அவர்களுக்கு நல்ல காலம் வரும் போது....

    மிகவும் திறமையாக.. நேர்த்தியாக தேர்ந்த கதையாசிரியரைப் பிரதிபலிக்கும் வகையில்...
    அற்புதமாக கதை சமைத்து இருக்கிறீர்கள்.. பகிர்விற்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
    அன்புடன்,
    உங்கள் நண்பன்,
    ஆலாசியம் கோ./////

    நன்றி ஆலாசியம் அண்ணே..

    உங்கள MDன்னு கூப்பிடுறதா? அண்ணேன்னு கூப்பிடுறதா?ஒண்ணுமே புரியலே..

    ரெம்ப பிசி போலே..

    அப்பபோ இங்கிட்டும் கொஞ்சம் தலையைக் காமிக்கிறதுதானே?

    ReplyDelete
  32. //////kmr.krishnan said...

    நல்ல 'கான்டிராஸ்ட்' மைனர். கதை சொல்வதில் தேறிவிட்டீர் ஐயா!/////

    நன்றி KMRK சார்..



    ////kmr.krishnan said..நாம் ஐவர் மட்டுமே நடத்தும் mutual admiration society
    ஆகப்போய்க்கொண்டு இருக்கிறது.
    2800 பேரில் யாராவது வாசிக்கிறார்களா இதையெல்லாம்?/////


    /////தேமொழி said... நம் கருத்துகள் ஒரு வகையில் ஒருவருக்கொருவர் முதுகு சொறிவதுபோல் இருக்கிறதே என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.//////


    கடமையைச் செய்.. பலனை எதிர்பாராதே..


    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
    எது நடக்க இருக்கிறதோ,
    அதுவும் நன்றாகவே நடக்கும்
    உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
    எதற்காக நீ அழுகிறாய்?
    எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
    எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
    இன்று கமென்ட் அடிக்காதவர் நாளை கமென்ட் அடிக்கலாம்..
    நாளை அவர் படைப்புக்கு நீ கமென்ட் அடிக்காமல் போகலாம்..
    முதுகு அரிப்பவருக்கு மட்டுமே சொரிந்துவிடுதல் நல்லது..

    கடமையைச் செய்.. பலனை எதிர்பாராதே..

    ReplyDelete
  33. //////R.Srishobana said...
    உண்மையில் "சென்னை செந்தமிழை" எழுதுவதற்கு மிகவும் யோசித்து ஒரு வழியாக தட்டுத்தடுமாறி எழுதினேன்...நீங்கள் புரியாத ஜப்பான் பாஷையில் வசைபாடாமல் இருந்தால் சரிதான்...////

    கூவம் பாஷை எனக்கு நல்லாவே வரும்..லோக்கலாவே பேசிக்கிடலாம்..எதுக்குப் புரியாத பாஷையிலே?

    /////R.Srishobana said...
    'வானமே எல்லை', 'தேநீர் விருந்து', 'சென்னையிலும் ஒரு மழைக்காலம்', 'சென்னை செந்தமிழ்'.......

    ச்சும்மா..அதுவா வருதில்லே..

    இன்னா ஃப்ளோ..லே கிரீங்கோ....
    கலக்றீங்க...பா..

    ReplyDelete
  34. இந்தப் பதிவிற்குப் பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி உரித்தாகுக!
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  35. இந்தப் பதிவிற்குப் பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி உரித்தாகுக!
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com