மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.12.11

பாரதி விழா - ஒரு சிறப்புக் கண்ணோட்டம்


 மாணவர் மலர் - பகுதி 2
 மலரின் முதல் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் சுட்டி இங்கே. க்ளிக் செய்து படிக்கவும்
----------------------------------------------------------------------

பாரதி விழா - ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

இன்று (11.12.2011) மகாகவி பாரதியாரின் 130ஆவது பிறந்த நாள். அதைக் கொண்டாடும் விதமாகத் தஞ்சையில் சென்ற வாரம் நடைபெற்ற விழா நிகழ்வுகளை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறார், நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி). அவருக்கு நம் நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்! படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------
இந்திய ஒலிபரப்புக் கழகம்,அகில இந்திய வானொலி நிலையம், திருச்சிராப்பள்ளி, பாரதி சங்கம், தஞ்சாவூர்,பாரதி இயக்கம், திருவையாறு இணைந்து நடத்திய "மகாகவி பாரதியாரின் 130 வது பிறந்த நாள் விழா"

நாள்; 4.12.2011 ஞாயிறு. இடம்:பெசண்ட் அரங்கம், தஞ்சாவூர்.

லால்குடிக்கும் தஞ்சாவூருக்கும் திருக்காட்டுப்பள்ளி வழியாகப் பயணம் செய்தால் 55 கிமி தூரம்தான்.திருச்சி வழி என்றால் 80km  வீட்டை விட்டுக் கிளம்பி தஞ்சையில் பெசண்ட் அரங்கம் சென்று அடைய காலை 10:30 ஆகிவிட்டது. தொடக்க விழாத் தலைமை உரையை மூத்த வழக்கறிஞர்
வி சு ராமலிங்கம் நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

அவர்தான் தஞ்சாவூர் பாரதி சங்கத்தின் அமைப்பாளர். கடந்த 26ஆண்டுகளுக்கும் மேலாக மாதம்தோறும் "பென‌ல்டிமேட் சண்டேயில்" மாலை 6 முதல் 8 வரை "தமிழ் மூதறிஞர் வாழ்வும் வாக்கும்"என்ற தொடர் சொற்பொழிவைப் பல அறிஞர் பெரு மக்க‌ளைக் கொண்டு நிகழத்திக் கொண்டு இருப்பவர்.

ஏ ஐ ஆரின் திருச்சி நிலைய இயக்குனர் வெ.ஸ்ரீனிவாசன் தொடக்கவுரையும்,திருவையாறு தருமை ஆதீனக் கட்டளை விசாரணைத் தம்பிரான முனைவர் (டாகடர்)குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் சிறப்புரை ஆற்ற துவக்க விழா நிகழ்ச்சி காலை 11:45 மணிக்கு முடிவுற்றது.

உடனே துவங்கியது கருத்தரங்கம்.

கருத்தரங்கத் தலைப்பு "வான் புகழ் கொண்டபாரதி."

கருத்தரங்கத் தலைவர் முனைவர் இரா. கலியபெருமாள் தன் நீண்ட தலைமை உரையை வாசித்தார். எப்படி பாரதி நமது தமிழ்ச் சங்ககால மரபில் இருந்து முகிழ்த்தனன் என்பதைப் பரக்க நிறுவினார்.மரபில் இருந்து விலகாமல் புதுமையைப் புகுத்தினார் பாரதியார் என்பது அவர் உரையின் சாராம்சம். அவர் உரையே நீண்ட நேரம் ஆகிவிட்டதால் அடுத்துப் பேசவுள்ளவர்களுக்கு தலைவர் ஆகிய அவரே கால‌க்கெடு விதிக்க வேண்டியதாயிற்று.

"ஒவ்வொருவரும் 15 மணித்துளிகள் பேசுமாறு காலநிர்ண‌யம் செய்ய வேண்டிய கேடு காலம் எனக்கு"என்று நயம் பட உரைத்தார்.

கருத்த‌ரங்கத்தில் நமது தஞ்சை பெரியவர் திருவாளர் வெ.கோபாலன் ஐயா அவர்கள் 'பாரதியின் பாஞ்சாலி'என்ற தலைப்பில் உரையாற்றி னார்கள். பாஞ்சாலி சபத‌த்தையும், அபிராமி அந்தாதியையும் மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் வாய்ந்தவர்.

'எரிதழல் கொண்டுவா தம்பி, அண்ணன் கையை எரித்திடுவோம்' என்று பெரியவர் முழங்கியபோது அந்த பார'தீ'கையில் தீப்பந்ததுடன்
அர‌ங்கினுள் நுழைந்ததை என் மனக் கண்ணால் கண்டேன்.அற்புதமான உரை. கேட்கக் கொடுத்து வைத்தேனே என்று மகிழ்ந்தேன்.

அடுத்து திரு குப்பு வீரமணி 'பாரதிவிரும்பிய சமுதாயம்' பற்றிப் பேசினார்.அருமையான உரை. ஒரே ஒரு நயத்தினை மட்டும் சொல்கிறேன். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவவோம்' என்ற பாரதி வரியில் "தம்மை" என்பதற்கு 'மாதர்கள் தம்மைத் தாமே இழிவு செய்து கொள்ளும் மடமை' என்று பெண்கள் மேலேயே அதனைத் திருப்பிவிட்டு புது விளக்கம் கொடுத்தார். நன்றி:ஜெயகாந்தன்.

அடுத்து வந்தவர் முனைவர் ப. உமாமகேஸ்வரி(திருவையாறு இசைக் கல்லூரி முதல்வர்). அவர் 'பாட' வந்தது 'பாரதியும் தமிழிசையும் 'என்ற
தலைப்பில்.இசையைப் பற்றிப் பேசினால் போதுமா? பேச்சுக் குறைவாகவும் பாட்டு அதிகமாகவும் நல்ல முன் யோசனையுடன் பாரதியின் பாட்டைப் பாடிக் காண்பித்தார்.  பாரதியின் காவடிசிந்து, நொண்டிச்சிந்து எல்லாம் கேட்டு
உள்ளம் கொள்ளை போனது.

)'பாட்டுக்கொரு புலவன் பாரதியடா; அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா;
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேனடா'
என்பார் தேசிக விநாயகம் பிள்ளை. அப்படி ஒரு 'கிறு கிறுப்பு'த் தோன்றி மயங்கிவிட்டேன். உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.

பாரதியின் தேசியம் என்ற பொருளில் பேச வந்தார் திரு.நா.விஸ்வநாதன்.கொஞ்சம் புதுக்கவிதை, கொஞ்சம் ஜேகே,ஜென் புத்திசம்,ஹைக்கூ என்று ஒரு சுற்று சுற்றி வந்தார். பாரதியை ஊறுகாய் மாதிரி தொட்டுக் கொண்டார்.

ஒரு ஜென் புத்தத் துறவிக்கு இறுதி நாள் நெருங்குகிறதாம் அப்போது செர்ரிமலர்கள் பூத்துக் குலுங்கும் காலம். ஒரு ஹைக்கூ:"செர்ரிப் பூக்கள்
பூத்துக் குலுங்கும் போதா என்சாவு?"

செவிக்குணவுடன் வயிற்றுக்கும் உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள்.சூப்பர் சாம்பார் சாதம், ஒரு உருளைக் காரக்கறி, சிப்ஸ், மணமான தயிர் சாதம் எலுமிச்சை ஊறுகாய் என்று பசி நேரத்து உணவு வேண்டும் அளவு 150 பேருக்கு அளிக்கப்பட்டது.

சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பெரியவர் உயர்திரு கோபால்ஜி அருகில் வந்தார். "இந்த அன்னதாதா யார் என்று தெரியுமா?"என்று புதிர் போட்டார்."சொன்னால் தானே தெரியும்" என்றேன்.'அரியூர் ஆலன்தான்' என்றார். நான் ஆச்சரியப்படுவேன் என்று நினைத்திருப்பார் போலும்.நான் சிறிது கூட ஆச்சரியப் படவில்லை.

எனக்கு சிங்கப்பூர் திரு. ஹாலாஸ்யத்தப் பற்றி இப்படி நல்ல செயல்களுக்குப் பொருள் உதவி செய்பவர் என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை நான் தஞ்சையில் செய்துவந்த மன நலமற்ற‌ தெரு வாசிகளுக்கு மதிய உணவளித்தல் என்ற திட்டத்திற்கு பெரும் உதவி அளித்துள்ளார். இப்போது  இந்த விழா செலவுக்கு அளித்து பெருமை சேர்த்தார். மேலும் பெரியவர் வகுப்பறையில் கூறிய கடுவெளி ஆதரவற்றோர் இல்லத்திற்கும் கணிசமான‌ நன்கொடை அனுப்பியுள்ள தகவலையும் பெரியவர் கூறினார். மனம் மகிழ்ந்தேன்.சிங்கைச் சிங்கம்  நண்பர்
ஹாலாஸ்யத்திற்கு வகுப்பறை மாணவர்கள் சார்பில் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். அன்னதாதா சுகி பவ!(அன்னதானம் செய்தவர் சுகத்தை அடையட்டும்)

மீண்டும் பிற்பகல் நிகழ்ச்சி 2:30 மணிக்குத்துவங்கியது.

திருவையாறு இசைக்கல்லூரி முதல்வர், பேராசியர்கள், மாணவர் மாணவியர் சேர்ந்திசை விருந்து அளித்தனர்.சுமார் 2 மணி நேரம் கால‌ம் நின்று
விட்டது. பாரதியின் பாடல்களுக்கு 'மெட்'டமைத்துப் பாடினர்.'அல்லா அல்லா அல்லா' என்று  அவர்கள் பாடியது, இஸ்லாமியரின் 'ஆதான்' அழைப்புப் போலவே அமைந்தது. அதனை மீண்டும் பாடச் சொல்லிப் பெரியவர் கேட்டு ரசித்தார்.

காலை நிகழ்ச்சி முழுவதும் அகில இந்திய வானொலி பதிவு செய்தனர். ஏனோ இசை நிகழ்ச்சியைப் பதிவு செய்ய அவர்கள் வரவில்லை. எனக்கு அது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த அற்புதமான இசை குழுவுக்கும் அந்த மனக்குறை இருந்தது என்பதை அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததிலிருந்து கேட்டு உணர்ந்தேன்.அவர்களுக்கு ஆறுதல் கூற‌ நினைத்து  இசை நுணுக்கங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் என் இசை மேதாவித்த்னத்தையும் அப்படியே 'ஷோ கேஸ்' செய்து கொண்டேன்.

"அந்த பெஹாக் ராகத்தில் பாடிய பாரதி பாடல்,'ஆடும் சிதம்பரமோ... ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ' பாடலினை அப்படியே நினைவுக்குக் கொண்டு வந்தது..அதுவும் பெஹாக்தானே...?" இப்படி பேசியவுடன் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. ஒரு கலைஞனுக்கு வேண்டியது பாராட்டு. பண‌மல்ல.பாராட்டைக் கொடுத்தவுடன் அவர்களுடைய ஏமாற்றம் சற்றே குறைந்தது.

அடுத்துப் பட்டி மன்றம்.

"மகாகவியின் ஆன்மீகப்பாடல்களில் மேலோங்கியிருப்பது வேண்டுதலா? விடுதலையா?' என்பது தலைப்பு.

பட்டி மண்டபத்தில் கவிஞர் ந முத்துநிலவன்,தலமையில், திரு இரா மாது முனைவர் ந.தமிழரசி, திரு டி.இராமனாதன்,திரு. பாரதிநேசன், கவிஞர்
சாமி.ம‌ல்லிகா முனைவர் இரா.காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

எல்லோரும் நனகு பேசினர். சாதாரணமாகப் பட்டிமன்றம் இப்போதெல்லாம் கருத்துக்கள் இல்லாமல் நகைச்சுவைத் துணுக்குகளாக இருக்கும். இங்கே வித்தியாசமாக எல்லாம் கனமான கருத்துக்களோடு சிறந்து விளங்கியது. பட்டி மன்றம் முழுவதும் இங்கே எழுதினால் 4 கட்டுரைகளில் எழுத வேண்டும். காதில் விழுந்த  கருத்து நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.

"பாரதி : முண்டாசு கட்டிய பட்டாசு! சின்னசாமிக்குப் பிறந்த பெரிய சாமி! லட்சுமிக்குப் பிறந்த சரஸ்வதி".

"பறவைகளும், விலங்குகளும் எவ்வளவோ உயர்ந்தவை. சுய மரியாதை உடையவை. ம‌னிதனுக்குத்தான் தன்மானம், சுய மரியாதை,எதுவும் கிடையாது. இருக்கிறது என்று சொன்னால் மனிதன் கோவில் முன்னே அமர்ந்து பிச்சை எடுப்பானா? குருவியோ, பருந்தோ, அவ்வாறு பிச்சையெடுக்கிறதா? மனிதனோடு ஒத்துழைப்புக் கொடுபதற்காக யானையை மனிதன் பிச்சை எடுக்க வைக்கிறான்."

நிறைவு விழாதான் இந்த ஒரு நாள் விழாவில் முத்தாய்ப்பு.

தலைமை ஏற்றுச் சிறப்பித்தவர் சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் உயர்திரு தி.ந.இராமச்சந்திரன்.சென்ற ஆண்டு தமிழக அரசின் பாரதி விருது பெற்ற பேரறிஞர். அவருடைய உரையை முற்றிலும் யாராலும்  அவ்வளவு சுலபமாக உள் வாங்கிக் கொள்ள முடியாது.'பல சொல்லக் காமுற மாட்டேன்'என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு ரத்தினச்சுருக்கமாக நிறைய புதுக் கருத்துக்களைச் சொல்வார்.இம்முறை சைவ சித்தாந்தக் கருத்துக்களை எப்படி பாரதி நன்கு புரிந்து கொண்டு தன் கவிதைகளை அதன் விளக்கங்களாக கூடச் செய்துள்ளமை பற்றிக் கூறினார்.

"அந்தநித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
 நீழலடைந் தார்க்கில்லையோர் தீது -- என்று
 நேர்மைவேதம் சொல்லும் வழி யீது."

இந்த பாரதி வரிகளுக்கு அவர் கூறும் பல விள‌க்கங்களைக் கேட்க இரு காதுகள் போதா.அந்த அறிஞரை நீண்ட நாட்கள், மாதங்கள் சென்று கண்டது மிக்க மகிழ்ச்சி அளித்தது. ஆலிவர் கோல்டுஸ்மித் எழுதிய கிராமப்பள்ளி ஆசிரியர் என்ற பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. கிராமத்தின் மக்கள் அந்த ஊர் ஆசிரியரைக் காணும் போது 'இந்தச் சிறிய தலைக்குள் எப்படி இவ்வள‌வு தகவல்கள் இருக்கின்றன. தலை கனக்குமே! எப்படி அந்த கனத்த தலையுடன் நடமாடுகிறார்!' என்று வியப்பார்களாம். அந்தப் பாமரர்கள் நிலைக்கு திரு டி என் ஆர் நம்மை ஆக்கி விடுவார்.

அவர் உரை ஒரு ஆய்வு நூல் வாசிப்புக் கேட்டதை போல் இருந்தது.

சிறப்புப் பேச்சாளர் அமுத சுரபி ஆசிரியர் திரு. திருப்பூர் கிருஷ்ண‌ன், 'எக்காலத்திற்கும் பாரதி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஆர்பாட்டம் இல்லாத அமைதியான பேச்சு. ஆனால் சற்று கவனக் குறைவாக இருந்தாலும் முக்கியமான செய்திகளை விட்டு விடுவோம். பாரதியைப் பற்றி அவர் கூறியவை நாம் பெரும்பாலும் அறிந்தவைதான். மற்ற துணுக்குகளை இங்கே தருகிறேன்.

"தமிழ் உணர்வு என்பதில் பயன் ஒன்றும் இல்லை."தமில் வால்க" என்ற கோஷம் போடச் சொல்லிக் கொடுத்து விட்டு தமிழை அம்போ என்று விட்டு விட்டார்கள் திராவிட மரபு பேசுபவர்கள்.தமிழைக் கற்றலே நாம் தமிழுக்குச் செய்யும் தொண்டு"

"மக்கள் தொலைக் காட்சியில் என் பெயரை 'கிருட்டிணன்' என்று கூறினார்கள். அதே முறையாக 'சுடாலின்' என்றல்ல‌வோ ஸ்டாலினைச் சொல்ல வேண்டும்? அப்படிச் சொல்லாமல் அவரை மட்டும் 'ஸ்டாலின்' என்றே சொல்கிறார்கள். அவர்கள் தமிழ்ப்படி குஷ்பு, 'குசுபு' ஆனால் ஊர் நாறிவிடாதா?"

" சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவருக்கும் ராமரைக் காட்டிலும் கிருஷ்ணர் மேலேயே பக்தி அதிகம். இது ஏனப்படி?"

"சுவாமியார் வாயிலிருந்து லிங்கம் எடுத்தார். பாராட்டினார்கள். கையிலிருந்து விபூதி எடுத்தார். இப்படி எதையெல்லோமோ எடுத்துக் காட்டும்
சுவாமியாரை ஜாமீனில் எடுக்க பக்தர்களால்தான் முடியும்."

"பாரதியின் சீடர் வ‌.ராமசாமி (அய்யங்கார்) நாத்திகம் பேசியவர். அக்கிரஹாரத்து அதிசயப்பிறவி என்று அறிஞர் அண்ணாவால் பாராட்டப் பட்டவர். அப்படிப்பட்டவர் தன் இறுதிக் காலத்தில் 'முருகா முருகா' என்று உருகுகிறார். மாற்றத்திற்குக் காரணம் கேட்டபோது'என் நாடி தளர்ந்து,உடல் தளர்ந்து, கண் பார்வை மங்கி, பல்லும் சொல்லும் போய் இறுதிப் பயணத்திற்கு நான் வந்துவிட்ட போது இந்தக் கைத்தடி உடலுக்கும், உள்ளத்திற்கு முருக நாமமுமே ஊன்றுகோல்' என்றாராம். இதை கு.அழகிரிசாமி எழுதியுள்ளார்"

"நாத்திகம் பேசு. வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆத்திகம் பேசு. எல்லோரும் செய்வது அது. இர‌ண்டிலுமே உண்மையாக இருங்கள் போலித்தனம் வேண்டாம்."

"கபிர்தாசர் முக்தி அடைகிறார். அவருடைய உடலை வைத்துக்கொண்டு இந்துக்கள் எரிப்போம் என்கிறார்கள். முஸ்லிம்கள் புதைப்போம் என்கிறார்கள்.அந்த இறந்த உடல் விழித்து எழுந்து 'மத ஒற்றுமைக்காக நான் பாடுபட்டேன். நீங்களோ என் உடலை வைத்துக் கொண்டே சண்டை இடுகிறீர்களே' என்று சொல்லி விட்டு மீண்டும் விழுந்து இறந்துபட்டது.அந்த‌ உடல் மீது போர்வை போர்த்தினார்கள். மீண்டும் திறந்த போது உடலுக்கு பதில் ரோஜா மலர்கள் இருந்தன. அந்த ரோஜா மலர்களையும் பாதிப் பாதியாக எடுத்து ஒரு பகுதி எரியூட்டப்பட்டது மற்றொரு பகுதி புதைக்கப்பட்டது.இதுதான் நமது மத ஒற்றுமை"

"ஒரு தமிழ்ப்பணிக்காக எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணன் வெளியூர் வந்துள்ளார்.அவ‌ர் மகன் இறந்த செய்தி அவருக்குத்தெரிவிக்கப்படுகிறது. உடனே அவர் கிளம்பவில்லை. தான் ஆற்ற வந்த தமிழ்ப் பணியினை முடித்துவிட்டே கிளம்புகிறார்."

"வாஞ்சிநாதன் போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்கள் பற்றி நூல் எழுதிய எழுத்தாளர் ரகமி பாரதி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது உணர்ச்சி மேலிட்டு இறந்தார்."

"சம்பந்தம் என்ற எழுத்தாளர். நாத்திகர். தன் உடலை தானம் செய்ய எழுதி வைத்து இருந்தார்.அதன்படி அவர் இறந்தபின்னர் உடல் மருத்துவக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது.அதே போல கண்ணதாசனின் உதவியாளராக இருந்த ஒரு எழுத்தாளர் இற்ந்தார். அவர் உடலும் தானம்
செய்யப்பட்டது. ஏனெனில் அவர் உடலை எடுத்துச் சென்று சாங்கியங்கள் செய்யப் பணம் இல்லை."

"எழுத்தாளர்களை ஆதரிப்பதே நாம் பாரதிக்குச் செய்யும் தொண்டு.பாரதி காலத்தில் இருந்த நிலைதான் முழு நேர எழுத்தாளர்களுக்கு
இன்றும். புத்தகங்கள் வாங்குவதன் மூலம் எழுத்தாளர் வறுமையை நீக்குங்கள்"

குழந்தைகளுக்குப் பரிசு அளிப்புடன் விழா நிறைவுற்ற‌து.அதற்கும் சிங்கைச் சிங்கம் ஹாலாஸ்யம் அவர்கள் அனுப்பிய தொகை பயன் ஆனது என்றார் தஞ்சாவூரார்.

இந்த நிகழ்ச்சிகளின் வானொலி ஒலிபரப்பு(திருச்சி அலைவரிசை கே ஹெச் 936) கீழ்க்க‌ண்ட அட்டவணைப்படி நடக்கும்.
========================================================================
பட்டிமன்றம்:18 12 2011 ஞாயிறு மாலை 3 மணி.
கருத்தரங்கம்: 07,14,21, 28 12 2011, 04 01 2012 காலை 7 மணி.
திருப்பூர் கிருஷ்ணன் உரை: 04 01 2012 புதன் இரவு 9 30 மணி.
தி ந. இராமச்சந்திரன் உரை: 11 01 2012 புதன் காலை 7 மணி.
========================================================================
மறு நாள் 5 12 2011 அன்று தஞ்சாவூரார் இல்லத்திற்குப் போனேன். அவர் கையாலேயே 'மடி'யாகச் சமைத்து உருளைக் கிழங்கு
கறி, பாகற்காய் சாம்பார், தக்காளி ரசம், கட்டித்தயிர் என்று உணவு அளித்தார். பசிக்கு தேவாமிர்தமாக இருந்தது.

வாழ்க வளமுடன்!
நிகழ்ச்சியை உங்களுக்காகத் தொகுத்து வழங்கியவர்: கே.முத்துராமகிருஷ்ண‌ன் (லால்குடி)அகில இந்திய வானொலி நிலைய அன்பர்கள்
நம் கோபாலன் ஐயா உரை நிகழ்த்திய காட்சி
நிகழ்ச்சியில் பங்கு கொண்ட இசைக்குழுவினர்
தம்பிரான் அவர்கள் உரை நிகழ்த்தும் காட்சி
முதுமுனைவர் உயர்திரு தி.ந.இராமச்சந்திரன் உரையாற்றும் காட்சி
அமுத சுரபி ஆசிரியர் உரை நிகழ்த்தும் காட்சி

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
மீண்டும் வா மகாகவியே
----------------------------------------------
ஆக்கம்: தனூர்ராசிக்காரன்

புதுக் கவிதையைத்
தேரேற்றி  வந்த
முதல்  சாரதியே,
உயிர்  பாரதியே
உமக்கொரு  குரு  வணக்கம்!

கல்லுக்கும்  மண்ணுக்கும் முன்பாகத் தோன்றி
கவி சொல்லெடுத்து தந்த பெண்ணை
பட்டுடுத்தி பொன்போர்த்தி
மாசறு தங்கமாய்
தந்தாய் தமிழாய்.

அன்று
அடிமையை அறுத்து குடிமை பெற
பாரத போருக்கு நீ பாடினாய் பாஞ்சாலி சபதம்.

இன்று
எங்களை மீண்டும்
தமிழுக்கு  அடிமையாக்கி தலை வணங்க வைக்க - நீ
இன்னுமொரு சபதம் எடுத்து வரவேண்டும் .

ஈனப் பிறவிகளால் என் தமிழுக்கு  இழுக்கு.
சில்லறைக்கு நாவைவிற்கும் நவீன விலைமாதர்கள்
பால் குடித்த மார்பை அறுக்கிறார்கள்
தூங்க வைத்த  தாலாட்டை தீயிலிடுகிறார்கள்.  

பன்மொழிப் புலமை வேண்டும் அதற்காக
என் பைந்தமிழ் பரலோகம் போக வேண்டுமா?
பிற மொழியை பல்லக்கில் தூக்க
என் செந்தமிழ் செக்கிழுக்க வேண்டுமா?

"தமிழை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்"
"வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்"
என்றுரைத்த வர்க்கத்தில் வந்தோம்
வந்தென்ன செய்தோம்?

உள்ளுக்குள் எரிகிறது தணல்
கொதிக்கிறது குருதி
அன்னையாம்  தமிழின் நலம் இகழ்வோரின்
நாக்கறுப்பேன்  உயிர் நாடியையும் அறுப்பேன். 

மீசையை முறுக்கி
மீண்டும் என் தமிழை
தாயாய்  மூச்சாய் அகண்ட காவிரியாய்
தலையில் வைத்துக் கொண்டாட
மீசை கவிஞனே  மீண்டும் வா
இன்னொரு சபதம் பாடிவா!

-தனூர் ராசிக்காரன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
3
அழகான ராட்சஷியே.!
ஆக்கம் by தேமொழி

"அழகான ராட்சஷியே அடிநெஞ்சில் கொதிக்கிறியே
 முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
 அடி மனச அருவாமணையில் நறுக்குறியே"


என்று கதாநாயகன் பாடும்பொழுது, "வீட்டுக்கு வீடு வாசப்படின்னு சொல்றது ஏன்னு இப்பல்ல புரியுது", என்று பெருமூச்சு விட வேண்டாம்.  தோழர்களே, உங்கள் அழகான ராட்சஷி உங்களை வார்த்தையால் நையப் புடைக்கும்பொழுது மனம் வெறுத்து அவளிடம் கோபம் கொள்ளவேண்டாம்.  அவள் அவ்வாறு  செய்வதற்கும் காரணம் இருக்கிறது.  காரணம் வேறு இருக்கிறதா இதற்கெல்லாம்? என்று வெகுண்டெழ வேண்டாம்.  இதை நான் சொன்னால், அதாவது ...ஒரு பெண்குலத்தின் பிரதிநிதி சொன்னால், ஒத்துக் கொள்ள உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம்.  ஆனால், தமிழுலகம் போற்றும் பாரதியார் சொன்னால் மறுக்காமல் ஒத்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.  நம்ப முடியவில்லையா?  பாரதியாரின் "சந்திரிகையின் கதை" என்ற கதையில் அவ்வாறுதான் அவர் எழுதியுள்ளார்.

நான் கதைக்கவில்லை, பாரதியார் சந்திரிகையின் கதை என்று ஒரு கதையை எழுதினார்.  ஒரு மழை, புயல், பூகம்பம் நாளில் பிறந்து, பிறந்த அன்றே குடும்பம் முழுவதையும், தாய் உட்பட, இயற்கையின் சீற்றத்திற்கு வாரி வழங்கிய குழந்தை சந்திரிகைதான் அந்தக் கதையில் கதாநாயகி.  அந்தக் குழந்தை சந்திரிகை, இளம்கைம்பெண் ஆன அத்தை விசாலாட்சியிடம் வளர்கிறாள்.  அந்த அத்தைக்கும் மறுமணம் நடக்கிறது, கதைப்படி 1905ஆம் ஆண்டு, நூறு வருடங்களுக்கு முன்னே நடந்த கதையாகும் இது.  ஆனால், நம் துரதிர்ஷ்டம், ஒன்பதாம் அத்தியாயம் வரை எழுதிய பாரதியார் கதையை முடிக்கும் முன்னே மறைந்துவிட்டார்.  ஒன்பதாம் அத்தியாயத்தின் தலைப்பு "பெண்டாட்டிக்கு ஜயம்". அகால மரணத்தினால் பாரதியாருக்கு கதாநாயகி குழந்தை சந்திரிகை பற்றி அதிகம் அந்தக் கதையில் எழுத வாய்ப்பில்லாமல் போனது. அத்தை விசாலாட்சி பற்றி எழுதியவையே அதிகம்.

கதையின் எட்டாம் அத்தியாயத்தில், மயிலாப்பூர் லஸ் சர்ச் வீதியில் வசிக்கும் சோமநாதய்யர்  என்ற (அத்தை விசாலாட்சியின் உறவினர்) உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தன் மனைவியின் சொல்லம்புகளினால் நொந்து போய், பெண்களின் கோபச் சொற்களைப் பற்றி சிந்திப்பதாக கூறுவதன் மூலம் பாரதியார் தன் கருத்தை நமக்குத் தெரிவிக்கிறார்.  பெண்கள் துணைவர்களிடம் கோபம் கொள்வதேன்? தெரிந்து கொள்ள மேலே படிக்கவும் (பாரதி எழுதியவரை, அதாவது முற்றுப் பெறாத அக்கதையைப் படிக்க விரும்புபவர்கள், இந்த சுட்டியின் வழியேசென்று படிக்கவும்  -  http://projectmadurai.org/pmworks.html.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதியாரின் "சந்திரிகையின் கதை" என்ற கதையின் ஒரு பகுதி கீழே கொடுக்கப் பட்டுள்ளது
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
''வில்லம்பு சொல்லம்பு மேதினியிலே யிரண்டாம்;
   வில்லம்பிற் சொல்லம்பே மேலதிகம்.''

என்று பழைய பாட்டொன்று சொல்லுகிறது.  இந்தச் சொல்லம்பைப் பிரயோகிப்பதில் ஆண் மக்களைக் காட்டிலும் பெண்கள் அதிகத் திறமையுடையவர்களென்று தோன்றுகிறது.  இதற்கு முக்கியமான காரணம் ஆண் மக்கள் பெண்மக்களுக்குச் செய்யும் சரீரத் துன்பங்களும், அநீதிகளும், பலாத்காரங்களுமே போலும். 

வலிமையுடையோர் தம் வலிமையால் எளியாரைத் துன்பப்படுத்தும்-போது எளியோர் வாயால் திரும்பத் தாக்கும் திறமை பெறுகிறார்கள்.கை வலிமை குறைந்தவர்களுக்கு அநியாயம் செய்யப்படுமிடத்தே அவர்களுக்கு வாய்வலிமை மிகுதிப்படுகின்றது. 

மேலும், மாதர்கள் தாய்மாராகவும் சகோதரிகளாகவும் மனைவியராகவும் மற்ற சுற்றத்தாராகவும் இருந்து ஆண் மக்களுக்கு சக்தியும் வலிமையும் மிகுதிப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் வேலை செய்கிறார்கள்.அவ்வலிமையும் சக்தியும் தமக்கு விரோதமாகவே செலுத்தப்படுமென்று நன்கு தெரிந்த இடத்திலும், மாதர்கள் தம்மைச் சேர்ந்த ஆண் மக்களிடம் தமக்குள்ள அன்பு மிகுதியாலும், தாம் ஆடவர்களின் வலிமையை சார்ந்து வாழும்படி நேர்ந்திருக்கும் அவசியத்தைக் கருதியும், அவர்களிடத்தே மேற்கூறிய குணங்களேற்படுத்தி வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இடையின்றி முயற்சி பண்ணுகிறார்கள். 

இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ளவேண்டிய குணங்களெல்லாவற்றிலும் மிக மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை.  மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்குந்திறனும், பாயுந்திறனும் கொண்டிருப்பது மட்டுமேயன்றி ஒட்டகத்தைப் போலே பொறுக்குந் திறனும் எய்தவேண்டும். அவ்விதமான பொறுமை பலமில்லாதவர்களுக்கு வராது.  மனத்திட்டமில்லாதோரின் நாடிகள் மிகவும் எளிதாகச் சிறகடிக்கக் கூடியன.  ஒரு இலேசான எதிர்ச்சொல் கேட்கும்போதும், இலோசன சங்கடம் நேரும்போதும் அவர்களுடைய நாடிகள் பெருங் காற்றிடைப்பட்ட கொடியைப் போல் துடித்து நடுங்கத் தொடங்குகின்றன.  மனத்திட்பமில்லாதோருக்கு நாடித் திட்பமிராது. அவர்களுக்கு உலகத்தில் புதிய எது நேர்ந்தபோதிலும், அதை அவர்களுடைய இந்திரியங்கள் சகிக்குந் திறமையற்றவனவாகின்றன.

மனவுறுதியில்லாத ஒருவன் ஏதேனும் கணக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, கக்கத்திலே ஏதேனும் குழந்தை குரல் கேட்டால் போதும், உடனே இவனுடைய கணக்கு வேலை நின்றுபோய்விடும்.  அல்லது தவறுதல்களுடன் இயல்பெறும்.  அடுத்த வீட்டில் யாரேனும் புதிதாக ஹார்மோனியம் அல்லது மிருதங்கம் பழகுகிற சத்தம் கேட்டால் போதும், இவனுடைய கணக்கு மாத்திரமேயன்றி சுவாசமோ ஏறக்குறைய நின்று போகக் கூடிய நிலைமை எய்திவிடுவான்.  புதிதாக யாரைக் கண்டாலும் இவன் கூச்சப்படுவான்; அல்லது பயப்படுவான்; அல்லது வெறுப்பெய்துவான்.  மழை பெய்தால் கஷ்டப்படுவான்.  காற்றடித்தால் கஷ்டப்படுவான்.  தனக்கு சமானமாகியவர்களும் தனக்குக் கீழ்ப்பட்டவர்களும் தான் சொல்லும் கொள்கையை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், இவன் செவிக்குள்ளே நாராச பாணம் புகுந்தது போலே பேரிடர்ப்படுவான்.

பொறுமையில்லாதவனுக்கு இவ்வுலகத்தில் எப்போதும் துன்பமேயன்றி, அவன் ஒரு நாளும் இன்பத்தைக் காண மாட்டான்.  ஒருவனுக்கு எத்தனைக்கெத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ, அத்தனைக்கத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றியுண்டாகிறது.  இது பற்றியேயன்றோ நம் முன்னோர் ''பொறுத்தார் பூமியாள்வார், பொங்கினார் காடாள்வார்'' என்று அருமையான பழமொழியேற்படுத்தினார்.

இத்தகைய பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.  கோபம் பிறக்கத் தக்க வார்த்தைகள் சொல்லுகிறார்கள்.  வீட்டுப் பழக்கந்தான் ஒருவனுக்கு நாட்டிலும் ஏற்படும்.  வீட்டிலே பொறுமை பழகினாலன்றி, ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமையேற்படாது. பொறுமை எவ்வளவுக்கெவ்வளவு குறைகிறதோ, ஒருவனுக்கு அத்தனைக்கத்தனை வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றியுங் குறையும். 

அவனுடைய லாபங்களெல்லாம் குறைந்து கொண்டேபோம்.  பொறுமையை ஒருவனிடம் ஏற்படுத்திப் பழக்க வேண்டுமானால் அதற்கு உபாயம் யாது? சரீரத்தில் சகிப்புத் திறமையேற்படுத்தும் பொருட்டாக ஜப்பான் தேசத்தில் ஒரு குழந்தையாக இருக்கும்போதே ஒருவனுடைய தாய் தந்தையார் அவனை நெடு நேரம் மிக மிகக் குளிர்ந்த பனிக்கட்டிக்குள் தன் விரலை அல்லது கையைப் புதைத்து வைத்துக் கொண்டிருக்கும்படி செய்து பழக்குகிறார்கள்.  மிக மிகச் சூடான வெந்நீரில் நெடும்பொழுது கையை வைத்துக் கொண்டிருக்கும்படி ஏவுகிறார்கள்.  இவை போன்றன உடம்பினால் சூடு குளிரைத் தாங்கும்படி பயிற்றுவதற்குரிய உபாயங்களாம். 

இது போலவே சுக துக்கங்களை சகித்துக் கொள்வதாகிய மனப்பொறுமை ஏற்படுத்துவதற்கும், சூடான சொற்களும் சகிக்க முடியாத பேதைமைச் சொற்களும் சொல்லிச் சொல்லித்தான், ஒருவனைப் பழக்க வேண்டும். அவற்றைக் கேட்டுக் கேட்டு மனிதனுக்குக் காதும் மனமும் நன்கு திட்பமெய்தும், இங்ஙனம் பொறுமை உண்டாக்கிக் கொடுக்கும் பொருட்டாகவும், மனிதனுடைய மனத்தில் அவனாலேயே அடிக்கடி படைத்துக் கொள்ளப்படும் வீண் கவலைகளினின்றும் வீண் பயங்களினின்றும் அவன் மனத்தை வலிய மற்றொரு வழியில் திருப்பிவிடும் பொருட்டாகவும், ஒருவனுடைய மாதா அல்லது மனைவி அவனிடம் எதிர்பார்க்கப்படாத, பேதைமை மிஞ்சிய, கோபம் விளைக்கக்கூடிய சொற்கள் உரைக்கிறார்கள். 

அவனுடைய அன்பு எத்தனை ஆழமானதென்று சோதிக்கும் பொருட்டாகவும் அங்ஙனம் பேசுகிறார்கள். அன்பு பொறுக்கும். அன்பிருந்தால் கோபம் வராது.  அன்றி ஒருவேளை தன்னை மீறிக் கோபம் வந்தபோதிலும் மிகவும் எளிதாக அடங்கிப் போய்விடும்.  இத்தகைய அன்பைக் கணவன் தன் மீதுடையவனா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு மாதர் பல சமயங்களில் கோபம் விளைக்கத் தக்க வார்த்தைகளை மனமறியப் பேசுகிறார்கள். 

நம்முடன் பிறந்து வளர்ந்து நம்மைத் தாயாகவும் மனைவியாகவும் சகோதரியாகவும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டும், கவனித்துக் கொண்டும், நம்மிடம் தீராத அன்பு செலுத்திக்கொண்டும் வருகிற மாதர்கள் சில சமயங்களில்-அனேக சமயங்களில் - நமக்குப் பயனற்றனவாகவும், கழி பெரும் பேதைமையுடையனவாகவும் தோன்றக் கூடிய மொழிகளைப் பேசுவதினின்றும் ஆடவர்களாகிய நம்முடை பலர் அம்மாதர்களை மகா மடைமை பொருந்தியவர்களென்று நினைப்பது தவறு. 

அங்ஙனம் நினைத்தல் நமது மடைமையையே விளக்குவதாம். ஆண்மக்கள் பிரத்யேகமாகக் கற்கும் வித்தைகளிலும், விசேஷமாகப் பயிலும் தொழில்களிலும், பொதுவாக சரீர பலத்திலும் மாதரைக் காட்டிலும் ஆண்மக்கள் உயர்ந்திருக்கக் கூடுமேயெனிலும், சாதாரண ஞானத்திலும், யுக்தி தந்திரங்களிலும், உலகப் பொது அனுபவத்தால் விளையும் புத்திக் கூர்மையிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாக இருப்பார்களென்று எதிர்பார்ப்பதே மடமை.

ஆதலால், குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்விக குணத்தையும், ஆதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய் மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும்போது, வாயை மூடிக்கொண்டு பொறுமையுடன் கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும்.  அங்ஙனமின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே , அவள் தாயாயனினும், உடம்பிலும் உயிரிலும், பாதியென்று அக்கினியின் முன் ஆணையிட்டுக் கொடுத்த மன¨வியாயினும், அவள் மீது புலிப் பாய்ச்சல் பாய்ந்து பெருஞ் சமர் தொடங்கும் ஆண்மக்கள் நாளுக்கு நாள் உலக விவகாரங்களில் தோல்வி எய்துவோராய்ப் பொங்கிப் பொங்கித் துயர்ப்பட்டுத் துயர்ப்பட்டு மடிவார்.

ஆக்கம் by தேமொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

20 comments:

thanusu said...

மிக பொருத்தமாக கவிதையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அய்யா.ஊக்கிவித்த தஞ்சாவூர் அய்யா அவர்களுக்கும் நன்றி .

பாரதியே
உன் பெண் விடுதலை கனவு
நனவாகிறது.

தேமொழிகள்
ஷோபனாக்கள்
மேயர்கள்
முதல்வர்கள்
முதல் குடிமகள் என பரிணமித்து

இன்று....
நோபல் பரிசு பெரும்
எல்லோன் ஜான்சன்
லிம்போவீ
தவாக்கல்
என விருட்ச்ச்சகமாய் வளர்ந்து
உன் கனவு மெய்பட வைத்து விட்டார்கள்.
அய்யனே
உன்னால் பெருமை அடைகிறோம்

R.Srishobana said...

மகாகவியின் பிறந்தநாள் இதழ் மிக அருமை.பாரதியின் புகழ் இம்மண்ணை விட்டு என்றும் அகலாது என்பதற்கு இது போன்ற விழாக்களே சான்று.

//பறவைகளும், விலங்குகளும் எவ்வளவோ உயர்ந்தவை. சுய மரியாதை உடையவை. ம‌னிதனுக்குத்தான் தன்மானம், சுய மரியாதை,எதுவும் கிடையாது. இருக்கிறது என்று சொன்னால் மனிதன் கோவில் முன்னே அமர்ந்து பிச்சை எடுப்பானா? குருவியோ, பருந்தோ, அவ்வாறு பிச்சையெடுக்கிறதா? மனிதனோடு ஒத்துழைப்புக் கொடுபதற்காக யானையை மனிதன் பிச்சை எடுக்க வைக்கிறான்//
என்னவொரு அருமையான உண்மையான வரிகள்...
kmrk அவர்களின் தொகுப்பு நம்மை விழாவிற்கே அழைத்து செல்கிறது.அவ்வளவு தெளிவாக இருந்தது.நன்றிகள் ஐயா.

minorwall said...

பாரதி பற்றிய விழாவை முன்னெடுத்து நடத்தியதில்,தொகுத்து எழுதி விளம்பரப்படுத்தியதில்
நெருங்கித் தொடர்பு கொண்டிருந்தவர்களில் சிலரை நமக்குத் தெரிந்திருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டேன்..
ஆனால் அந்த அளவுக்கு பாரதியைப் படிக்கவில்லையே என்ற உணர்வும் கூடவே எழுகிறது..
இனிவரும் காலங்களில் வாய்ப்பு கிடைக்கும்போது படிக்க முயற்சிக்கிறேன்..

minorwall said...

தனுசுக் கவிதை அருமை..

தேமொழியார் மாமா அப்படி என்ன செய்துவிட்டாரென்று
முண்டாசுக் கவிஞனைத்
துணைக்கழைத்து இப்படி பிலுபிலு வென்று பிடித்துக் கொண்டுவிட்டார் என்று தெரியவில்லை..

மாமா பாடு திண்டாட்டம்தான்..

தேமொழி said...

"புதுக் கவிதையைத் தேரேற்றி வந்த முதல் சாரதியே, உயிர் பாரதியே உமக்கொரு குரு வணக்கம்!" என்ற முதல்வரியே அமர்க்களமாக ஆரம்பிகிறது. தனுசு, உங்கள் மற்ற பாரதி கவிதைகளை பாரதி பயிலகம் வலைப்பூவிலும் படித்தேன். நல்ல கவிதைகள் இவை அணைத்தையும் ஒரு கவிதை தொகுப்பாக நீங்கள் வெளியிடவேண்டும் என விரும்புகிறேன்.

பாரதி விழாவில் பங்கு பெற முடியாமல் போனாலும் KMRK ஐயா அவர்களின் ஆக்கத்தின் மூலம் விழாவின் சிறப்பம்சங்களின் சாரத்தை அறிந்து கொண்டு திருப்தியடைகிறேன்.

KMRK ஐயா தஞ்சையை விட்டு கிளம்புமுன் பொதுதொண்டிற்கு வழங்கியதை தஞ்சாவூர் ஐயா வகுப்பில் தெரிவித்தார்கள். இப்பொழுது சகோதரர் ஆலாசியம் அவர்களின் நன்கொடைகளை KMRK ஐயா அறிவிக்கிறீர்கள். பொது நலன் கருதி உழைக்கும் நீங்களனைவரும் மேலும் இதுபோன்ற பணிகளைத் தொடரும் வண்ணம் உடல் நலத்துடனும், பொருள் வளம் குறையாமல் சிறப்புடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

தேமொழி said...

///மாமா பாடு திண்டாட்டம்தான்..///

ம்க்கும் ... மைனர்வாள் இதைப் படித்தால் நான் ஒரு "சொர்ணாக்கா" போல் இருக்கிறது. மாமாவிற்காக வருத்தப் பட வேண்டாம், உண்மையில் நான் கும்ப ராசி, மாமா விருச்சிக ராசி, ராசிகேற்ற குண நலன்களுடன்தான் இதுவரை காலத்தை ஓட்டிகொண்டிருக்கிறோமாக்கும்.

Thanjavooraan said...

ஆசிரியர் ஐயா அவர்களுக்கும், தஞ்சை பாரதி விழாவின் தொகுப்பினை மிக அழகாக வடிவமைத்த கே.எம்.ஆர். அவர்களுக்கும், பாராட்டுகளைத் தந்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி. கடந்த பத்து நாட்களாக பாரதியில் திளைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது எனது பாக்கியமாக நினைக்கிறேன். இந்த விழாவை நினைக்கும் போதே நண்பர் ஆலாசியம் அவர்களையும், நல்லதொரு கவிதையைத் தந்த புருனெய் தனுசு அவர்களையும் நினைத்து பெருமைப் படுகிறேன். திருச்சி வானொலி கேட்கும் வாய்ப்பு உள்ளவர்கள் கட்டுரையில் கண்டுள்ள தேதிகளில் அவற்றைக் கேட்டு மகிழுமாறு அன்போடு வேண்டுகிறேன். எங்கள் பாரதி சிறுவர் மன்றம் சார்பில் சிறுவர்களே நிர்வகித்து, அவர்களே தலைமை ஏற்று, அவர்களில் பதினோரு பேர் பாரதி பற்றி கருத்துரை ஆற்றியதொரு சிறப்பு நிகழ்ச்சி திருவையாற்றில் நடந்தது. அதில் முன்னிலை வகித்து அவர்களிடையே இறுதியில் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. பாரதி எக்காலத்துக்கும், எவருக்கும் பொருத்தமானவர் என்பது மிகவும் சரியே!

தமிழ் விரும்பி said...

மகாகவிக்கு ஒரு இனியவிழா!
மகத்தான அறிஞர்கள் கூடியவிழா!
மாணிக்க ஒளியவன் கவிதையிலா,
மாமன்ற பேச்சும் மனதில் நில்லா!

கவிதை வானில் அவன் கவிநிலா,
காலங்கள் கடந்தும் வந்திடும் உலா!
வேதங்கள் புதுமைச் செய்த கலா!
வேதாந்த லட்சியம் விளம்பிய முழா!

அவன்கவி வேரிலே பழுத்தப் பலா,
வெடித்து தேனிலே நனைந்தச்சுளா!
அடிமைத் தலையை அசைத்ததிலா
ஆணோடு பெண்ணையும் அமர்த்தியதிலா

அன்னைத் தமிழை போற்றியதிலா
அகிலமெலாம் உயர எண்ணில்லா
அறிவுத்தரவே மண்ணில் வந்தநிலா
மகாகவி இவனோ உலக கவிஉலா!

மகாகவி பாரதி! ஒரு யுகபுருஷன் இவன் புகழ்
வாழிய! வாழிய!! வாழியவே!!!

மகாகவிக்கு நடந்த இந்த அற்புதமான, அழகான விழாவை மிகவும் அற்புதமாக வருணனையை அதன் உண்மையினை அது தரும் சாரத்தை மிகவும் அருமையாக வகுப்பறையில் தந்த பெரியோர்களுக்கு நன்றிகள். நேரில் சென்று கன்னுற்றதைப் போன்றே இருந்தது.... வோனொலியில் ஒலிபரப்பாகும்போதாவது கேட்பதற்கு வழி உண்டு.... அதற்கான பிரத்தியோக வானொலி பெட்டியை தேட வாங்கி கேட்டு இன்புற என்னமுருகிறேன்... மிகவும் சொற்பமாகவே மகாகவியின் புகழுக்கு அவனது மனிதநேய பற்றுக்கு மரியாதை செய்யும் பொருட்டு.. எனது பங்கை செய்து இருந்தேன்... இது போன்று யாவரும் நற்காரியங்கள் செய்யத் துணியவேண்டும் அது தான் நாம் இது போன்ற பெரியவர்களுக்கு செய்யும் மரியாதை என்று நம்மில் யாவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே வெளியிட்டதாக நினைத்து அமைதி கொள்கிறேன்.

/////"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவவோம்' என்ற பாரதி வரியில் "தம்மை" என்பதற்கு 'மாதர்கள் தம்மைத் தாமே இழிவு செய்து கொள்ளும் மடமை' என்று பெண்கள் மேலேயே அதனைத் திருப்பிவிட்டு புது விளக்கம் கொடுத்தார். நன்றி:ஜெயகாந்தன்./////

இது பேருண்மை... அருமை...

////"நாத்திகம் பேசு. வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆத்திகம் பேசு. எல்லோரும் செய்வது அது. இர‌ண்டிலுமே உண்மையாக இருங்கள் போலித்தனம் வேண்டாம்."////

அருவமும் உருவமும் ஆனவன் ஆக, இரண்டு விசயங்களுக்கும் அவன் தான் கதாநாயகன்...

////"வாஞ்சிநாதன் போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்கள் பற்றி நூல் எழுதிய எழுத்தாளர் ரகமி பாரதி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது உணர்ச்சி மேலிட்டு இறந்தார்."////

நான் இப்பொழுது அறிந்துக் கொண்ட புரிய தகவல் என்றாலும்... நான் பொறாமை கொள்கிறேன், மகாகவியின் மீது இவ்வளவு காதலா!பற்றா!.. என்று...வாழ்க அவர்தம் புகழ்.

அவனின் கவிதையை படிக்கும் போதெல்லாம், ஏன்?அவனை நினைக்கும் போதெல்லாம் அவனின் கொள்கை, உணர்வில் கவியில் மூழ்கியவர்கள் அவனை நினைத்து கரைவது தான் இயல்பு.... இந்த தமிழன்னை ஒரு பெரும் கவியை அவனது இளமையிலே பரிகொடுத்தாள்... ஆனால் இந்த உலகம்... புவியிலே உலாவந்த குளிர்கொட்டிய சூரியனை சுட்டெரிக்க பறிகொடுத்து விட்டது.., பாரதியின் புகழ் இந்த உலகெல்லாம் பரவ வேண்டும்.... இன்னும் ஆயிரமாண்டுகள் ஆனாலும்... அவனின் கவியில் நவீனத்துவமும், மனிதநேயமும், அன்றைய தேவையின் கருத்தாழமும் நிச்சயம் இருக்கும்....

வாழ்க! வளர்க!! மகாகவியின் புகழ்!!!

தமிழ் விரும்பி said...

மகாகவி பாரதியைப் பற்றிய தனுசுராசிக்காரரின் கவிதை அருமை...
மீண்டும் பாராட்டுக்கள்...

சகோதிரி தேமொழி....
பாரதியின் சிந்தனையில் பூத்த
கற்பக மலர்கள் அனைய
வேதகால நிலையை மீண்டும்
புதுபித்து இப்புவியில் மீண்டும்
வேதம் புதமை செய்த வித்தகன்...
மனித நேயப் பித்தன்...
கவி சித்தன்...
அன்னை சக்தியின் முக்தன்...
அவனின் செவ்விய சிந்தனையை
கொடுத்து 'உங்களின் கடமையை'
அழகுற செய்து பாரதிப் பிரியர்களுக்கு
பரவசம் தந்து விட்டீர்கள்...

பதிவிற்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.

Sathish K said...

Sir thank you very much for yet another fabulous weekend edition and 'BHARATHI' edition.
My wishes and thanks to all contributors. (Themozhi Ji, KMRK Sir, Minor ji, Sri Shobana Madam and Thanur ji)
Thank you.

thanusu said...

பாரதி விழாவுக்கு ஒரு தினம் ஒதுக்கிய வாத்தியார் அய்யா அவர்களுக்கு முதல் நன்றி.

kmrk அவர்களே பாரதி விழாவுக்கு எனக்கும் தஞ்சாவூர் அய்யா அவர்கள் அழைப்பு அனுப்பி இருந்தார்கள்.அனால் என்னால் தான் செல்ல முடியவில்லை. நான் சென்றிருந்தாலும் விழாவின் அத்தனை நிகழ்சிகளையும் இத்தனை உன்னிப்பாகவோ சிரைத்தையுடனோ கவனிதிருப்பேனா அல்லது அதில் என்னை முழுமையாக ஐக்கியபடுதிருப்பேனா எனபது சந்தேகமே அவ்வளவு அருமையாக நிகழ்சிகளை தொகுத்து கொடுதுள்ளிர்கள் பாராட்டுகள்! பாராட்டுக்கள்!!பாராட்டுக்கள்!!!

துணுக்குகள் என்று எழுதி இருந்தீர்களே "பாரதி என்ற பட்டாசு. சின்னசாமிக்கு பிறந்த பெரிய சாமி, லட்சுமிக்கு பிறந்த சரஸ்வதி அருமை! அருமை!!

திருப்பூர் கிருஷ்ணனின் உரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது .வரிக்கு வரி விமர்சித்து பின்னூட்டமிடலாம் போலிருக்கிறது.

விழாவை நேரடி ஒளிபரப்பாக கொடுத்த தாங்களுக்கு மென்மையான நன்றிகள்

சிறப்பு நன்றிகள் தமிழ் விரும்பி அவர்களுக்கு.

thanusu said...

அழகான ராட்சசியை கொடுத்த தோழிக்கு மீண்டும் பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.

thanusu said...

தமிழ் விரும்பி அவர்களே பாரதி எனும் நிலா உலா கவிதை நீங்கள் சொன்னது போல் அவன் வேரில் பழுத்த பலா தான்.

thanusu said...

என் கவிதையை படித்து பின்னூட்டமிட்ட மைனர், தேமொழி, ஷோபனா, தமிழ் விரும்பி, சதீஷ் யாவருக்கும் நன்றிகள்

R.Srishobana said...

தேமொழி சகோதரியின் கட்டுரை மிக அருமை...யதார்த்த உண்மைகளை பதார்த்தமாக பரிமாறிவிட்டீர்கள்...அருமையான நடை...இது நிச்சயம் ஆண்களுக்கு பிடிக்காத "பாகற்காய்" விஷயம் தான்,ஆனால் உண்மையை துணிச்சலாக மேடையேற்றிய தங்களுக்கு பாராட்டுக்கள் பல...

மகாலிங்கம் said...

ச‌கோத‌ரி தேமொழி அவர்க‌ள் விட்டுக்கார‌ரை எப்படி நடத்துகிறார்கள் என்று நினைத்தேன். கதையை படித்தேன் "ஆத்தாடி இந்த‌ காத்தாடி பெருங்கூத்தாடி"
//பொறுமையை ஒருவனுக்குச் சமைத்துக் கொடுக்கும் பொருட்டாகவே, அவனுடைய சுற்றத்து மாதர்களும், விசேஷமாக அவன் மனைவியும், அவனுக்கு எதிர் மொழிகள் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.// குளந்தையைக்கிள்ளி தொட்டிலும் நன்றாக‌ ஆட்டுவார் போல :)

எங்க‌ள் கிராமத்தில் தெருச்சண்டையிடும் பெண்க‌ளை ப‌ஜாரி என்று ச‌ட்றே த‌ர‌க்குறைவாக‌ கூறுவார்கள், அத்தகய பெண்களின் வளர்ந்த சூளலை யோசிப்பேன். அவர்களின் பெற்றோர்கள் இப்படி சொன்னால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். போraaலிப்பட நாயகிகள் போல.ப‌லே கில்லாடி, ஒரு வகையில் நீங்கள் சொல்வதும் சரிதான் போல. தாங்க‌ள் ஒரு அபாரமான‌ பேச்சாள‌ர்தேன். தவ‌ராக‌ என்ன‌ வேண்டாம் என‌து க‌ருத்தை ச‌ற்றே வெளிப்ப‌ட‌யாக‌ சொல்ல‌ நினைத்தேன். ம‌ற்ற‌ப‌டி ம‌ரியாதை குரைவாக‌ சொல்லியிருன்தால் ம‌ன்னிக்க‌வும்.

minorwall said...

KMRK அவர்களின் தொகுத்து எழுதியிருக்கும் விதமும் விமர்சனமும் அருமை..அருமை..அருமையோ அருமை..

உதாரணத்துக்கு டைமிங் அல்லாட்மென்ட் பற்றி..
பிறகு பாரதியின் தேசியம் பேசவந்தவர் பாரதியை ஊறுகாயைத் தொடுக்கொண்டவிதம்,
செவிக்குணவோடு வயிற்றிற்கும்,
வகுப்பறைப் பதிவென்பதால் அன்னதாதா அரியூர் ஆலன் பற்றி சிறப்புசெய்து கடைசியில்
தன் கர்நாட்டிக் மேதாவித்தனத்தை வெளிக்காட்டி அசத்திவிட்டார்..
'எல்லாப் புகழும் பாரதிக்கே' என்று இருக்கவேண்டிய இடத்தில் தன் எழுத்துத் திறத்தால்
'எல்லாப் புகழும் KMRK வுக்கே' என்று புகழ்பாடும்படி செய்துவிட்டார்..
வாழ்க KMRK . ஓங்குக அவர் புகழ்..

SP.VR. SUBBAIYA said...

from Uma S umas1234@gmail.com
to "SP.VR.SUBBIAH"
date 12 December 2011 16:35
subject comments

ஜோதிடத்தோடு தொடர்புபடுத்தி எழுதிய தேமொழியின் ஆக்கம் நன்று.
ஷோபனாவின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. சோகமான முடிவு.
சுயமரியாதை மிக்க ராகவன் இப்படித்தான் ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று ஊகித்தேன்.
காபி பற்றி தெரியாத தகவல்கள், அறியத்தந்ததற்கு நன்றி.
பாரதி விழாவின் தொகுப்பு அருமை. அமுதசுரபி ஆசிரியரின் பேச்சு சிறப்பானதாக அமைந்திருக்கும் என்பதை தாங்கள் கொடுத்த சாம்பிளிலிருந்து ஊகிக்க முடிகிறது.
தனுர்ராசிக்காரரின் கவிதை வழக்கம்போல சிறந்த ஒன்று.

S.உமா, தில்லி

minorwall said...

//////// Uma Said

சுயமரியாதை மிக்க ராகவன் இப்படித்தான் ஒரு முடிவை எடுத்திருப்பார் என்று ஊகித்தேன்.//////

மேடம் உமா அவர்களின் கணிப்புப் படியே நடந்து கொண்ட ராகவனுக்கு நன்றி..

SP.VR. SUBBAIYA said...

இந்தப் பதிவிற்குப் பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி உரித்தாகுக!
அன்புடன்
வாத்தியார்