மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.12.11

இருவிழியாலே மாலை இடுவது எப்படி?




 இருவிழியாலே மாலை இடுவது எப்படி?

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

இளகும் மாலைப் பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்...
இரு விழியாலே மாலையிட்டான்
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

காதல் கோயில் நடுவினிலே கருணைத் தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே...
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
இறைவன் அவனே அவனே எனப் பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

பாடல்: ஆலயமணியின் ஓசையை
திரைப் படம்: பாலும் பழமும் (1961)
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்
வாழ்க வளமுடன்!

53 comments:

  1. "உன் தலைவன் அவனே அவனே என்னும் தாயின் மொழிகேட்டேன்"

    இறைவனைத் தலைவனாகப் பாவிப்பது எங்கிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?

    "அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!"=கம்ப நாட்டாழ்வார்.

    ஆலய மணிகள் மயிலாடுதுறை அருகில் ஒரு சிற்றூரில் இன்றும் வார்க்கப்படுகின்றன‌. வெண்கலத்திற்கு அந்த நாதம் வருவதற்குச் சில பக்குவங்கள் உள்ளன.பழமை மாறாத அதே 'டெக்னிக்'தான் இன்றுவரை பயன்படுகிறது.எதிர்பார்க்கும் நாதம் கிடைக்காவிடில் மீண்டும் மீண்டும் உருக்கி வார்ப்பார்கள்.

    வெளி நாட்டு 'சர்ச்சு'களுக்குக் கூட கப்பலில் ஏற்றுமதி ஆகிறது.
    மெடல்லெர்ஜியில் நாம் சிறந்து விளங்கியது அங்கு சென்று பார்த்தால் விளங்கும்.

    ReplyDelete
  2. ஒரு பாடலைக் கேட்கும்போதே அந்தப் பாடலின் கருத்து நம் மனதில் படமாக விரிய வேண்டும்; அந்தச் சூழ்நிலைக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட பாடல்களை அந்தக் காலத்தில் எம்.எஸ்.வி.யின் இசையும், கவிஞர் கண்ணதாசன் பாடல்களும் கொடுத்தார்கள். இந்தப் பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள், கண்களை மூடிக்கொண்டு கேளுங்கள், ஒரு மலைக் கோயிலும், அங்கு எழும்பும் ஆலய மணியின் 'டாண்' 'டாண்' என எதிரொலியுடன் கிளம்பும் ஒலியும், சுற்றிலுமுள்ள பசுமையான தோட்டங்களிலிருந்து வரும் பறவைகளின் 'கீச்''கீச்' ஒலியும் நம் செவிவழி புகுந்து மனத்தை ஆக்கிரமிக்கிறது. காலத்தால் அழியாத பாடல், அதற்கேற்ற இசை. "இனி நினைந்து இரக்கமாகின்று ....."

    ReplyDelete
  3. நல்ல பாட்டு, ஒலி/ஒளி பரப்பியதற்கு நன்றி ஐயா. அப்பா, அம்மா அவர்களது அந்த காலத்து இளவயது காலப் பாட்டு. இந்த அமைதியான பாடல் காட்சியைப் பார்க்கும் பொழுது, அந்த காலங்களில் வாழ்க்கையில் எவ்வளவு எளிமையாக, பெரிய எதிர் பார்ப்புகளின்றி, சின்ன சின்ன ஆசைகளிலேயே திருப்தியடைந்தவர்களாக, சிக்கல்கள் இன்றி மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தோன்றும். பாடல் முடிந்தவுடன் தற்கால அவசர வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்த்து ஏக்கமாக கூட இருக்கும். மிகவும் அமைதியான இனிமையான பாட்டு. நன்றி, நன்றி.

    ReplyDelete
  4. நாயகி இறைவனைக் காதலனாக போற்றுகிறாள்.....
    ஆலயமணியின் ஓசை நான் கேட்டேன், அப்போது எனக்குள் தோன்றிய அந்த உணவிற்கு ஆமோதிக்கும் வகையிலே பறவைகளின் ஒலிகள் எல்லாம்; ஆம், உன் இறைவன் அவன் தான் என்றேக் கூறும் அருள் மொழிகளாகவே கேட்டது...

    அடுத்ததாக வழக்கப் படியே தோடுஅணிந்த திருச் செவியோடு இடபாகத்தே இருக்கும் தாயை வணங்கினேன் அவளும் என்னை ஆற்றுப் படுத்தினால் ஆம், அவன் தான் உனது தலைவனென்றும், ஆம், அவனே உனது தலைவன் என்றும் எனக்கு கூறினாள்....

    தேரேறி வந்தான் (உண்மையும், அன்பும் ஒருங்கே பெற்ற பத்தியை மெச்ச இறைவனே தேடியும் வருவானல்லவா! ஞான சம்பந்தனுக்கு அமுதூட்டிய அம்மையப்பனைப் போலவே) எனது வீடு வந்தான், உண்மையான ஏழை பக்தையை என்னை அவனது அருள் விழிகள் இரண்டால் மாலையும் இட்டான்.

    அடுத்து தான் கவிஞர் அழகாக கூறுகிறார்.... தலைவன் இறைவன்; எனது காதலென்னும் கோவிலிலே கருணைக்கடலாக அமர்ந்திருக்கிறான் அவன் மடியிலே நான் அமர்ந்து அவனோடு ஐக்கியமானேன் அவனின் ஆத்மாவோடு சங்கல்ப்பமானேன்.. ஆம், என்று மறுபடியும் கூறுகிறார் ஐக்கியமானேன் முடிவினிலே என்று....

    இது மனிதர் புரிந்து கொள்ள மனிதக் காதல் அல்ல.... அதையும் தாண்டி புனிதமானது.... புனிதமானது... புனிதமானது...

    அற்புதமானப் பாடல் திருவாளர் தஞ்சைப் பெரியவர் கூறியது போல்... கண்களை மூடிக் கொண்டு கேட்கும் போது அதுவும் செவிப் புலனை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு கேட்கும் போது... கவிஞர் எழுதும் போது பெற்ற அந்த உணர்வைப் பெற முடியும் என நம்புகிறேன்....

    அருமையானப் பாடல் பதிவிற்கு நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  5. ஐயா வ்ணக்கம்,
    உங்களின் பதில் கண்டேண். எழுத்தால் வடிக்கமுடியவில்லை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.மிக்க நன்றிகள் அய்யா.உங்களின் நேரமின்மை புரியும் உங்களின் நினைவில் இருந்தால் போதும்.உங்கள் வசதிப்படி செய்யவும்.
    மற்றும்,கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் என்றும் சாகா வரம் பெற்றவை.எமது இளம்பிராயத்தில் இலங்கை வானொலியில் எப்பொழுதும் கவிஞரின் பாடல்கள் ஒலிபரப்புவார்கள்.அதுவும் இரவு 10மணி தொட்க்கம் இரவு 11 மணிவரை இரவின்மடியில் நிகழ்ச்சி கண்ணதாசனின் தத்துவப்பாடல்,காதல் பாடல் என்று இரவின் அமைதியில்கேட்டு ரசிக்க‌ வெகுஅருமையாக இருக்கும்.இப்பொழுதும் you tஉபெ கவிஞரின் பாடல்க‌ளை கேட்கும்பொழுது பல பாடல்கள் ஏதோ எமக்காக எழுதிய மாதிரி இருக்கிறது.வாழ்க்கையின் எல்லாப்பக்கங்களையும் வாழ்ந்து அனுபவித்து,ரசித்து எழுதிய கவிஞர்.அதுதான் உலகின் எங்கோ ஒரு முலையில் அவரது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
    "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை ‍எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்று கவிஞரால் எழுதமுடிந்தது. நன்றிகள்.


    சுதன்,கனடா.

    ReplyDelete
  6. இறைவனை நினைத்து இன்னுமொரு பாடல் .
    அந்த இறைவனை போலவே இனிமையான பாடல் இது.

    இருவிழியாலே மாலை இடுவது எப்படி?
    இருநூறை தாண்டியபோது விழி விரிந்ததே அப்படி!
    விரேந்திர
    நீ வீறுகொண்டு வந்தது
    வீச்சருவாள் கைகொண்டா.
    வெட்டி விழ்த்து விட்டாய்.! விருந்தும் வைத்து விட்டாய்!
    வயிறு நிறைந்ததையா.
    வீர வணக்கத்துடன்
    வகுப்பறையின் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயா வணக்கம்.

    கடந்த சில தினமாக வகுப்புக்கு வர முடியாமால் போனதீர்க்கு ஆத்தார்தமான வகையில் மன்னிப்பு வேண்டுகின்றேன்.

    07 / 12 / 2011 அன்று தாங்கள் கூறி உள்ளீர்கள் பெண்ணீற்க்கு 16 வயதும் ஆணிற்கு 21 வயதும் கல்யாண வயது என்றும் மேலும் தாத்தா, முப்பாட்டன் காலத்தில் நடந்ததை தான் தாங்கள் கூறி உள்ளீர்கள் . இந்த கூற்று தங்களுடைய தனிபட்ட கூற்று அல்ல,

    அன்று நடந்த உண்மையை இன்று கூறுகின்றீர்கள் அவ்வளவிதான் ஒழிய வேறு ஒன்றும் அல்ல.

    மேலும் கடந்த மூன்று வருடமாக தாங்கள் கூருகின்றிர்கள்

    " தனக்கு ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அவளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தானே ஏன் ஜாதகம் ஜோதிடம் என்று மண்டையை போட்டு குழப்புவானேன் என்று".!

    அடியவனோ தங்களுடைய அடிமட்ட மாணவன் தான், இருந்தாலும் எம்முடைய கருத்தை இங்கு கூற விருப்புகின்றேன்.

    தாங்கள் எமக்கும் கருத்து கூற வாய்ப்பு தருவீர்கள் என்ற தங்களின் மேல் உள்ள ஆத்தார்தமான நம்பிக்கையால் கூறுகின்றேன்.

    எந்த ஒரு தாய் தந்தையரும் தவம் இருந்து வேண்டி பெற்ற குழந்தைகளின் ஆசை ,விருப்பம், சுகம், இன்னும் என்ன என்று சொல்லுவது என்று எமக்கு தெரிய வில்லை ஐயா.

    மேலே கூறியவாறு எல்லாவற்றையும் கொன்று! தான் பணம், புகம், செல்வம் என்று எல்லாத்தையும் பெற்ற பின்னர் கல்யாணம் செய்ய விருப்ப மாற்றார்கள்.

    மேலும் ஜாதகம் பார்க்க காரணம் ?

    பிள்ளையின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்ற ஒரே காரணம் தான் ஒழிய வேறு காரண காரியம் அல்ல ஐயா.

    யானைக்கும் அடி சறுக்கும் என்று ஒரு சொலவடை உண்டு இல்லையா ஐயா.

    தனது குழந்தை தேர்ந்து எடுக்கும் முடிவிகள் சரியாகாமல் போகி விட கூடாது என்ற உண்மையான உம்மை காரணத்தால் தான் தனது பிள்ளை, தனது வாரிசு

    " வாழை அடி வாழையாக"!

    ஆண்டாண்டு காலம் பதினாறு பாக்கியத்தை பெற்று பெரும் வாழ்க்கை வாழ வேண்டி தான் ஜாதகம் , சாஸ்திரம் என்று பார்க்க போகி அங்கு சாஸ்திரம் நன்கு தெரிந்த வித்துவான்கள் கூறுவதை மனதில் கொண்டு பிள்ளை களுக்கு திருமணம் செய்யும் காலத்தை கடத்து கின்றார்கள் அல்லது நல்ல நேரம் வரும் வரை காத்து இருக்கின்றனர் ஐயா.

    எல்லாம் அறிந்த தாங்கள் ஒரு பெண்ணை பிடித்து விட்டால் அவளை கரம் பிடிக்க வேண்டியது தானே என்று கூறும் கூற்றை மறு பரிசீலனை செய்யும் மாறு மிகவும் பணிவுடன் வேண்டி கேட்டு கொள்கின்றேன் ஐயா .


    50 ஏக்கர் தேயிலை தோட்டம் ,
    100 ஏக்கர் நஞ்சை, 200 ஏக்கர் புஞ்சை , மாட மாளிகை என்று உண்டாக்கி வைத்து இருக்கின்ற matrum காலம் சென்ற தந்தையை நினைத்து ஒரு மனிதன் எந்த அளவீர்க்கு சந்தோசம் படுவானோ , அதே அவவீர்க்கும் கடன் அல்லது கஷ்ட பாட்டை உண்டாக்கி வைத்து சென்ற தந்தையை நினைத்து மனதார சந்தோசம் படுவது தானே நியாயம் , தர்மம், உண்மை இன்னும் எல்லாம் ஐயா.

    மேற்கண்ட வரிகள் எல்லா இடத்திலையும் பொருந்தும் என்பது தங்களின் மாணவனின் உண்மையான உம்மை வரிகள், கருத்துகள் ஐயா!.
    --

    ReplyDelete
  8. ///இறைவனைத் தலைவனாகப் பாவிப்பது எங்கிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?///

    கம்பர் காலத்திற்கு முன்னரே
    கவி வல்லுனர்கள்

    இறைவனை "தலைவராக" பாடுவது இருந்துள்ளது.. உதாரணத்திற்கு..

    நந்தனாருக்கு
    நலம்புரிந்த

    திருஞான சம்பந்தர் அருளிய
    திருப்புன்கூர் தலத்தில் வரும் பாடல்,,



    மலைய தனா ருடைய மதின்மூன்றும்
    சிலைய தனா லெரித்தார் திருப்புன்கூர்த்
    "தலைவர்" வல்ல வரக்கன் றருக்கினை
    மலைய தனா லடர்த்து மகிழ்ந்தாரே.



    அப்பர் அருளிய தேவாரத்தில்
    அற்புதமான பதிகம்...

    வக்கர னுயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
    சக்கரங் கொடுப்பர் போலுந் தானவர் "தலைவர்" போலும்
    துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
    அக்கரை யார்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே.



    சுந்தரர் பாடியருளிய திருப்பாட்டில்
    சுந்தரமான பாடல்

    விண்ணோர் "தலைவர்" வெண்புரிநூல்
    மார்பர் வேத கீதத்தர்
    கண்ணார் நுதலர் நகுதலையர்
    கால காலர் கடவூரர்
    எண்ணார் புரமூன் றெரிசெய்த
    இறைவர் உமையோ ரொருபாகம்
    பெண்ணா ணாவர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.

    (லால்)குடிகாரர் மாற்றுக் கருத்திருந்தால்
    குறித்துச் சொல்லாம்

    ReplyDelete
  9. ///(லால்)குடிகாரர் மாற்றுக் கருத்திருந்தால்
    குறித்துச் சொல்ல‌லாம்//

    நன்றி ஐயர் அவர்களே! மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை. இன்றைய பின்னூட்டங்கள் மிகவும் கனமாக‌ உள்ளன.இப்படி நிறைய பேர்கள் அமைய வேண்டும். அப்போது கற்றல் மிகவும் எளிதாகும்.

    இறைவனைத் தலைவன் என்று கூறிய 4 பாடல்கள் எளிதாக‌கக் கிடைத்து விட்டன‌ பாருங்கள்.பின்னூட்டங்கள் பாராட்டுக்களுடன் மேல் அதிகத் தகவல்கள் அளிப்பனவாகவும் இருக்க வேண்டும்.அப்படித்தான் நான் சிந்தித்துப் பின்னூட்டம்பன்னாட்களாகச் இட்டு வருகிறேன்.என்னுடைய மேதாவித்தனத்தைக் காண்பிப்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டும் இருக்கிறேன்.

    "அறிவு நமக்கு எல்லாத் திசைகளில் இருந்தும் வரட்டும்" என்ற வேத மந்திரத்தின் உட்பொருள் அறிவோம்.

    லால் குடிகாரர் காப்பிக்குடிகாரர்தான்.
    எனவே குடிகாரர் என்றஅடைமொழியை ஏற்றுக் கொள்கிறேன். டாஸ்மார்க் சரக்கானாலும், காப்பியானாலும் நாம் பழக்கப் படுத்திவிட்டால் மீள்வது கடினம்.25 வயதுவரை எனக்கு காப்பி வாசனை தெரியாது.
    காலைஎழுந்தவுடன், மாலையும் கேழ்வரகுப் பால் பாயசம்
    என் அன்னை வெல்லம் சேர்த்ததுத் தருவார்கள்.அருமையாக இருக்கும்.பசி தாங்கும். திருமணம் ஆனவுடன் மனைவி சென்னைப் பெண் ஆனதால் காப்பிப் பழக்கத்துடன் வந்தார்கள்.
    அவர்களுடன் கம்பெனி கொடுக்கக் காப்பிக்கு மாறி,இன்றுஅப்பழக்கத்திற்கு
    அடிமையானானேன்.

    ஐயரின் 'காப்பிகுடியாமை'யைப்
    பாராட்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
  10. ///லால் குடிகாரர் காப்பிக்குடிகாரர்தான்.
    எனவே குடிகாரர் என்றஅடைமொழியை ஏற்றுக் கொள்கிறேன்///

    குடிகாரார் என்பது லாலை மறைத்து
    குடிகாரர் என்றது அது பிறமொழி தானே

    கண்டனங்கள் சி சென்ற வகுப்பில்
    கண்ட உங்கள் கருத்திற்கு தந்துள்ளோம்

    முக்கண்ணனுக்கு அசைவம் தருவது
    அவர் உங்களிடம் வந்து கேட்கும் அளவிற்கு நீங்கள் கண்ணப்பர் அல்லர்
    உங்களை யாரும் சிறுத் தொண்டர் என
    பெருமை படுத்தவும் இல்லை
    பரஞ்சோதியாரை சிறுமை படுத்தவும் இல்லை
    கடல் கடப்பது வேதத்தில் இல்லாதது
    என பல .. பல.. சொல் அம்புகள் உள்ளது

    அதனையும் அன்பு கூர்ந்து ஏற்றுக் கொள்க...
    விரும்பினால் பின் ஊட்ட பதில் இடுக..

    அன்பான வணக்கங்களும்
    அருமையான வாழ்த்துக்களும்

    வழக்கம் போல்...
    வருகிறது உங்களுக்கு..

    ReplyDelete
  11. ///இறைவனைத் தலைவன் என்று கூறிய 4 பாடல்கள் எளிதாக‌கக் கிடைத்து விட்டன‌ பாருங்கள்.///

    4 பாடல்கள் மட்டுல்ல.. பின் ஊட்ட நீளம் கருதி 3 பாடலுடன் நிறுத்திக் கொண்டோம்

    குறிப்பாக ஆடுதுறை பாடலை குறித்து சொன்னதற்கு காரணம்

    மணிஓசை தான்..

    நீங்கள் சொன்னது மயிலாடுதுறை..
    நாங்கள் சொன்னது திருவாவடுதுறை

    இரண்டும் அருகாமையி உள்ளதால் இருக்கட்டுமே என பதிவிட்டோம்

    ///பின்னூட்டங்கள் பாராட்டுக்களுடன் மேல் அதிகத் தகவல்கள் அளிப்பனவாகவும் இருக்க வேண்டும்.///

    அந்த வகையில் தான் அய்யரும்
    ஆனால் புரியாத தகவல் என்றே

    பாராட்டுக்கள் பல பெற்றுள்ளோம்
    புரிந்தவர்களுக்கு புரியும் மற்றவருக்கு

    புரிந்த பின் புரியும்..அய்யரின் அன்பும்
    புரிந்த கொள்ள சொன்னதின் பொருளும்

    மாசில்லா அன்புடன் இந்த
    மன்றதில் சுழல விடுகிறோம்

    சுவைத்து மகிழ
    சுவையான பாடல்


    இதய வீணை தூங்கும் போது
    பாட முடியுமா?

    இரண்டு கண்கள் இரண்டு காட்சி
    காண முடியுமா?

    உதடு சிரிக்கும் நேரம்
    உள்ளம் சிரிக்குமா?

    உருவம் போடும் வேஷம்
    உண்மை ஆகுமா?

    விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?

    வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால் பாட்டுப்பாடுமா பாட்டுப்பாடுமா?

    மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில

    மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே

    அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே

    அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே

    அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே

    உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது
    உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?

    பழுதுபட்டகோவிலிலே தெய்வமேது?
    பனி படர்ந்த பாதையிலே பயணமேது?

    ReplyDelete
  12. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இப்படி எல்லா பாடல்களையும் சுழல விடும் ஐயர் அவர்கள் இவற்றை மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்கிறாரா? அல்லது தேடி எடுக்குமளவுக்கு அந்தப் பாடல்களைக் கைவசம் புத்தகங்களாக வைத்திருக்கிறாரா? அல்லது வலையில் தேடி எடுத்துக் கொடுக்கிறாரா? எதுவாக இருந்தாலும் அருமை. கேட்டதும் கிடைக்கும் வகையில் நல்ல பாடல்கள் அவருக்குக் கிடைப்பது, நமக்கு ஒரு நல்ல வாய்ப்பே! நான் உணர்ந்தவரை ஐயர் அவர்கள் ஓர் தகவல் களஞ்சியம்தான். வாழ்க அவர் பணி!

    ReplyDelete
  13. நல்ல அருமையான பாடல். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அதன் ராகம், பல்லவி அத்துடன் அதன் பொருள். நேரமின்மை காரணமாக எப்போதும் போல் சாவகாசமாக வந்து பின்னூட்டமிடுகிறேன்.

    ReplyDelete
  14. ஐயர் அவர்களே!
    நான் லெள்கீகனே. வேதம் அறிந்தவன் அல்ல.சமஸ்கிருதம் படிக்க மட்டும் அறிவேன். மெதுவாக எழுத முடியும். பொருள் அறிய அகராதியைத்தான் தேட வேண்டும்.ஆகவே வேதத்திலிருந்து ஆதாரம் காட்ட இயலவில்லை.
    நடைமுறையில் காலா பாணியைத் தாண்டினால் பரிஹாரம் என்று ஒரு பழக்கம் இருந்துள்ளது.இப்போது இல்லை.

    நான் சிறுத்தொண்டரும் இல்லை, கண்ணப்பரும் இல்லை என்று உறுதியாகச் சொன்னதற்கு நன்றி.

    சிவனைப் பற்றி(பரமசிவனா,சதாசிவனா சாதாசிவனா என்று தெரியவில்லை)
    மாமிசத்துடன் தொடர்புப‌டுத்தி நிறைய பேசப்படுகிறது.யானையைக் கொன்று கஜசம்ஹாரமூர்த்தியாகவும், புலித்தோலை அரைக்கிசைத்ததாலும்
    அவர் ஒரு வேட்டைக்காரர் தெய்வம் என்றும் பின்னர் அவர் பெருந்தெய்வமாக ஆக்கப்பட்டார் என்றும் ஓர் பார்வை உண்டு.ஆதி சங்கரருக்கு எதிரில் மாமிசங்களைத் தோள் மீது போட்டுக் கொண்டு வந்து, அதன் மூலம் மனீஷா பஞ்சகம் பாடப் பெற்றது.
    ராமர் குகன் அளித்த மீன் முதலியவைகளை உண்டதாகக் காண்கிறது.எனவே அசைவம் இங்கு ஒரு பிரச்சனையே இல்லாமல் இருந்துள்ளது.ஜைன‌ மதம்
    புகழ் பெற்றுக் கொல்லாமையை வலியுறுத்தியது.

    பிராமண‌ர்களைப் பற்றிய விமர்சனம் பொதுவில் வைப்பது நீங்கள் விரும்பவில்லை என்று தோன்றுகிறது.ஆனால், 'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா...?' போன்றவற்றைப் பார்த்து கை தட்டிவிட்டுப் போன பிராமண சமுதாயம், என்னையும் கண்டு கொள்ளாது.தன் போக்கில் செல்லும் ஒரு சமூகம்.சலசலசப்புக்கு அஞ்சாத சமூகம்.

    ReplyDelete
  15. ///எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இப்படி எல்லா பாடல்களையும் சுழல விடும் ஐயர் அவர்கள் இவற்றை மனப்பாடமாகத் தெரிந்து வைத்திருக்கிறாரா? .....
    ..... நான் உணர்ந்தவரை ஐயர் அவர்கள் ஓர் தகவல் களஞ்சியம்தான். வாழ்க அவர் பணி!///

    தங்களின்அன்பானவாழ்த்திற்குநன்றிகள்
    தயக்கம் என்ன தங்களிடம் சொல்ல ,,

    அன்று நடந்தது நினைவு திறன் போட்டி
    அகில இந்திய அளவில் பரிசு பெற்றவன்

    உங்களின் பாசமிகு அய்யர்..
    உள்ளபடியே சொன்னால்

    ஒரு முறை படித்தவுடன் மனதில்பதிய
    ஓர்மை உள்ளவன் உங்கள் அன்புஅய்யர்

    சிறிதளவு "கண்ணதாசன் பாடல்களில்
    சித்தாந்தம்" என ஆய்வினை தொடங்கி

    அதை அப்படி செய்ய வேண்டியதில்லை
    அவ்வப்போது மேற்கொள் காட்டலாம்

    என

    எமது ஞான தந்தை அறிவுறுத்தியதால்
    எழுதியதை தொடராமல் விட்டது..

    இந்த பணிக்காக சேகரித்த பாடல், தவிர
    இன்னமும் எமது மனதில் பதிந்த பாடல்

    எழுத்தை எண்ணி படித்தது
    என்பதால் சூழ்நிலைக்கேற்ற பாடல்

    என

    மவுசை தட்டியதும் கிடைப்பது போல்
    மனதை தட்டியதும் கிடைக்கும்

    நல்வாய்ப்பினை தந்த திருவருளுக்கு
    நன்றி சொல்லி அமைதி கொள்கிறோம்

    பாரதி விழாவின் இடையில் கிடைத்த
    பகுதி நேரத்தில் அவசர பின்ஊட்டம்,,

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  16. ///ராமர் குகன் அளித்த மீன் முதலியவைகளை உண்டதாகக் காண்கிறது.///

    "உண்டணன் என கொள் "
    என்றே கம்பராமயண பதிவு

    சாப்பிட்டதாக வைத்துக் கொள் என
    சொன்னதாகவே பல உரையாசிரியர் தந்துள்ளனர். உண்டதாக இல்லை..

    சோழ நாட்டு சகோதரர்
    மேல் அதிக தகவல் தருவார்..

    ///ஜைன‌ மதம்
    புகழ் பெற்றுக் கொல்லாமையை வலியுறுத்தியது.///

    ஜைன மதம் கொல்லாமையை வலியுறுத்தியது உண்மையானால்
    சம்பந்தருடன் போட்டியிட்டு தாங்கள் கழு ஏறியது ஏன்...?

    நாவுக்கரசரை
    விஷம் வைத்து கொல்ல
    விரைவாக துணிந்தது ஏன்...?

    நீற்று அறையில்
    நீர்த்துப் போகும்படி பணித்தது ஏன்..?

    கல்லில் கட்டி
    கடலில் இட்டது ஏன்...?

    சமணத்தில் உள்ள
    திகம்பரரும் ஸ்வெதம்பரரும்

    சொல்லும் கருத்துக்களை வேறுமாதிரியானவை..

    அவர்கள் மனம் வருந்தக் கூடாது என
    அதனை இங்கு சொல்ல விரும்பலை

    ///ஆனால், 'அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா...?' போன்றவற்றைப் பார்த்து கை தட்டிவிட்டுப் போன பிராமண சமுதாயம், என்னையும் கண்டு கொள்ளாது.தன் போக்கில் செல்லும் ஒரு சமூகம்.சலசலசப்புக்கு அஞ்சாத சமூகம்.///

    அதனால் தான்
    பாரதிராஜா "வேதம் புதிது" என்ற தன் படத்தில் இப்படி ஒரு வசனத்தை சேர்த்துள்ளது தாங்களும் அறிவீர் தானே

    அந்த வசனத்தை கேளுங்க...

    "நீங்க என்ன சொன்னாலும் சொம்மா கேட்டுகிட்டு இருக்க நாங்க ஒன்னும் ரத்தம் செத்துப்போன அக்கிராகரத்து ஆளுங்க இல்லையா நாம..."

    உங்களுக்காக இந்த பாடலினை
    சுழல விடுகிறோம்...

    ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
    கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
    சுத்தமாக சொன்ன தெல்லாம் போதலியா
    மொத்தமாக காதுல தான் ஏறலியா


    உன் மதமா என் மதமா
    ஆண்டவன் எந்த மதம்

    நல்லவங்க எம்மதமோ
    ஆண்டவன் அந்த மதம்.

    அட போங்கடா போங்கடா போங்கடா
    பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா

    கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
    சொல்லாத சங்கதி சொல்லுறன்கேளுடா

    அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா முஸ்லிமா இல்லை இந்துவா

    மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்
    நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா

    மனிதனென்னும் போர்வையிலிருக்குது
    பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா

    அட யாரும் திருந்தலையே
    இதுக்காக வருந்தலையே

    நீயும் நானும் ஒன்னு
    இது நெசந்தான் மனசுல என்னு

    பொய்யையும் புரட்டையும் கொன்னு
    இந்த பூமிய புதுசா பன்னு

    சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
    "சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா.."

    அட உன்னதா நம்புறன் நல்லவா
    உன்னால மாறுதல் வந்திடுமல்லவா

    கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
    வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா

    கூட்டல் மட்டும் வாழ்க்கையில்நடக்குது
    பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா

    இப்ப புதுசா கணக்கெழுது இங்கு
    வரட்டும் நல்ல பொழுது

    அடியே ஞானத்தங்கம்
    இங்கு நானொரு ஞானச்சிங்கம்

    இதைப் பார்த்தா பொய்களும் ஓடும்
    இரண்டு போட்ட உலகமும் மாறும்

    அட பத்திரம் பத்திரம் பத்திரம்
    தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது

    இது சத்தியம் சத்தியம் சத்தியம்
    சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது

    ReplyDelete
  17. ///இறைவனைத் தலைவனாகப் பாவிப்பது எங்கிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?///
    வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்னவென்றல் ,
    " அதிபதி , மித்ரபதி, சத்ரபதி , ஸ்வபதி , தனபதி," - சாம வேதம் - ஆரண்யா காண்டம் - ருத்ர சம்ஹித - 213
    பதி என்றால் தலைவன் , அதிபதி என்றால் முதல் தலைவன் ஈஸ்வரனே .
    மித்ரபதி என்றால் சூரியனுக்கும் தலைவன் ஈஸ்வரனே.
    சத்ரபதி என்றால் விஷ்ணு , இந்த்ரனுக்கும் தலைவன் ஈஸ்வரனே.
    ஸ்வபதி என்றால் ஸ்வர்கத்திற்கும் தலைவன் ஈஸ்வரனே
    தனபதி என்றால் செல்வத்திற்கும் தலைவன் ஈஸ்வரனே
    என்று பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
    சந்திரசேகரன் சூர்யநாராயணன்.

    ReplyDelete
  18. ///பதி என்றால் தலைவன்///

    ஆம் நண்பரே..
    பதி பசு பாசம் என்ற முப்பொருள் உண்மையை சொல்லும் வைச சித்தாந்தம் இதைத் தான் சொல்கிறது..

    முதலை விட்டு விட்டு
    எதையோ தேடுவதால் தான் பிரச்சனை..

    மையம் இல்லாது ஆரமில்லை..
    வையம் உய்ய வழி தெரிந்தும்

    மறந்து செல்லும் தன்னை
    மறைத்து செல்லும் உயிர்கள் மாறும்

    காத்திருக்கும் இறைவன் போல
    காதில் போட்டு வைப்பதே நம் செயல்..

    உமது பின் குறிப்புகளுக்கு
    உள்ளபடியே நன்றிகள் சொல்கிறோம்

    ReplyDelete
  19. //எமது ஞான தந்தை அறிவுறுத்தியதால்
    எழுதியதை தொடராமல் விட்டது..//

    தங்கள் குருநாதரைப் பற்றிக் கூறலாம் என்றால் கூறலாமே!

    ஐயரும் அந்த நாசரேத் காரரும் ஒன்று போல.'கேளுங்கள் தரப்படும்!' கொஞ்சம் கொஞ்சமாக, மொட்டு அவிழ்வது போல ஐயரை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். தட்சிணாமேரு சுவாமிகள், நா.போலியன்,
    செங்கோட்டை பார்வதி,அரியூர் ஆலன் அனைவரும் உதவிக்கரம் நீட்டுமாறு
    வேண்டுகிறேன்.

    ReplyDelete
  20. //4 பாடல்கள் மட்டுல்ல.. பின் ஊட்ட நீளம் கருதி 3 பாடலுடன் நிறுத்திக் கொண்டோம்//

    மீதி நினைவில் வரும் பாடல்களையும் கூறிவிட்டால் அவற்றைத்தொகுத்துக் குறித்துக் கொண்டு சரக்கை வேண்டும் இடத்தில் அவிழ்த்து விட வசதியாகுமே!எனவே மீதிப் பாடல்களையும் தொகுத்து ஒரு கட்டுரையாகத் தாருங்கள் ஐயர் அவர்களே!

    ReplyDelete
  21. //ஜைன மதம் கொல்லாமையை வலியுறுத்தியது உண்மையானால்
    சம்பந்தருடன் போட்டியிட்டு தாங்கள் கழு ஏறியது ஏன்...?
    நாவுக்கரசரை
    விஷம் வைத்து கொல்ல
    விரைவாக துணிந்தது ஏன்...?
    நீற்று அறையில்
    நீர்த்துப் போகும்படி பணித்தது ஏன்..?
    கல்லில் கட்டி
    கடலில் இட்டது ஏன்...?//

    'மதம்'என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டல்ல‌வா?
    யானைக்கு வரும் மனநோய்க்கு மதம் என்று பெயர்.
    'மதமான பேய்' என்ற சொல்லாடலும் உண்டு.(அதற்கு வேறு பொருளும் சொல்லுவர். என்னைப்போன்ற பாமரன் வெளியில் தெரியும் பொருளையே கொள்வோம். உட்பொருள், மறை பொருள் அறிய மாட்டோம்.)

    எனவே சமணர்கள் அந்த மத நோய் பிடித்து ஆட்ட ஏதேதோ செய்தனர்.

    கழுவில் தாங்களாக ஏறினர் என்பது சைவர்கள் கூறும் கூற்று. சோழர்களிடம் இருந்த செல்வாக்கால் சைவம் அவர்களைக் கழுவில் ஏற்றியது என்பது அவர்கள் பக்க வாதம்.

    அவர்களாகவே கழு ஏற முன் வந்தாலும் வேண்டாம் என சைவம் தடுத்திருக்கலாம்தானே? அப்படி நடந்திருந்தால் கிருத்துவத்திற்குக் கருணையால் கிடைத்த புகழ் சைவத்திற்குக் கிடைத்து உலக மதமாக ஆகியிருக்குமே!?

    ReplyDelete
  22. //பாரதி விழாவின் இடையில் கிடைத்த
    பகுதி நேரத்தில் அவசர பின்ஊட்டம்,,//

    எங்கே பாரதி விழா? கையில் 'லேப் டாப்'புடந்தான் போவீர்களா ஐயரே?
    பாரதிவிழாவில் யார் முக்கியப் பேச்சாளர்?

    நாளை வகுப்பறையில் ஒரு பாரதிவிழா நடக்க உள்ளது.அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  23. //"நீங்க என்ன சொன்னாலும் சொம்மா கேட்டுகிட்டு இருக்க நாங்க ஒன்னும் ரத்தம் செத்துப்போன அக்கிராகரத்து ஆளுங்க இல்லையா நாம..."//

    ஆம்!ஒருவகையில் பாரதிராஜா சரிதான்.

    ஆனால் ராமநாதபுரம்,நெல்லை போன்ற இடங்களில் நடக்கும் சாதிக் கலவரங்களைப் பார்க்கும் போது, அங்கே நடக்கும் சாவுகளை எண்ணினால்,
    இந்த விஷயத்தில் ரத்தம், நாக்கு இரண்டுமே செத்துப்போவதே மேல் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  24. //" அதிபதி , மித்ரபதி, சத்ரபதி , ஸ்வபதி , தனபதி," - சாம வேதம் - ஆரண்யா காண்டம் - ருத்ர சம்ஹித - 213//

    மிக்க நன்றி சந்திரசேகர் சூர்யநாராயணன் அவர்களே. தங்களுக்கு வேதம் பரிச்சயமெனில், சமஸ்கிருதம் நன்கு அறிவீர்கள் எனில் அவற்றை கட்டுரைகள் ஆக்கி இங்கே அளியுங்கள்.

    நான் சாம வேதி. நீங்கள் சாம வேததில் இருந்து கூறியது இரட்டிப்பு மகிழ்ச்சி.

    தமிழில் வேதம் மொழிபெயர்க்கப்பட்டதாக அறிகிறேன்(ரா. வீழிநாதன்)புத்தகம் இப்போது கிடைக்கிறதா?

    ReplyDelete
  25. ஆனால், சந்திரசேகரன் சூரிய நாராயணன் அவர்களே!ஐயர் கேட்பது என்னவென்றால் கடல் கடந்து பிராமணன் செல்லக்கூடாது என்பதற்கு வேதப் பிரமாணம் உண்டா(?) என்பதே.

    ReplyDelete
  26. ///தங்கள் குருநாதரைப் பற்றிக் கூறலாம் என்றால் கூறலாமே!//

    தன்னை பற்றி அறிந்தகொள்வதை விட
    பிறரை பற்றி அறிந்து கொள்ளும்

    எண்ணம் உள்ளவர் அதிகம்
    அந்த வரிசையில் நிற்பவர் நான் என்பது போல உள்ளது

    குடிகாரரின் இந்த வரிகள்..

    ///ஐயரை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். தட்சிணாமேரு சுவாமிகள், நா.போலியன்,
    செங்கோட்டை பார்வதி,அரியூர் ஆலன் அனைவரும் உதவிக்கரம் நீட்டுமாறு
    வேண்டுகிறேன்.////

    அய்யர் வெளியில் தானே இருக்கிறார்.. பின் ஏன் வெளியில்...

    கண்களை மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று சொன்னால் திறக்க வேண்டியது கண்களை தான் சூரியனை அல்ல..

    சூரியனை பார்த்து குறைக்கும் நாய் என்றே ஒரு முறை நம் லால்குடிகாரர் எழுதிய பின் ஊட்டம் நிழலாடுகிறது..

    அய்யரை ஜாமினில் இருந்து வெளிக் கொண்டுவருவது போல் உள்ளது

    ஹி..ஹி.. (என்று எழுத அய்யர் மற்றவர் அல்லர்)

    ReplyDelete
  27. ////மீதி நினைவில் வரும் பாடல்களையும் கூறிவிட்டால் அவற்றைத்தொகுத்துக் குறித்துக் கொண்டு சரக்கை வேண்டும் இடத்தில் அவிழ்த்து விட வசதியாகுமே!எனவே மீதிப் பாடல்களையும் தொகுத்து ஒரு கட்டுரையாகத் தாருங்கள் ஐயர் அவர்களே!///

    அந்த முயற்சியை படிப்பவர்கள் எடுத்து கொள்ளவேண்டும் திருமுறைகளை படிக்க வேண்டும் என்பதற்காகவே மற்றவைகளை தரவில்லை..

    அதையும் அள்ளிக்கிட்டு போகனும்னு நினைச்சா எப்படி,,,?

    ReplyDelete
  28. ///அவர்களாகவே கழு ஏற முன் வந்தாலும் வேண்டாம் என சைவம் தடுத்திருக்கலாம்தானே? அப்படி நடந்திருந்தால் கிருத்துவத்திற்குக் கருணையால் கிடைத்த புகழ் சைவத்திற்குக் கிடைத்து உலக மதமாக ஆகியிருக்குமே!?///

    குடிகாரரின் கேள்விகள் வாதிற்கு அழைப்பது போல் உள்ளது...

    ஆரோக்கியமில்லாத வாதத்திற்கு
    இடம் கொடுப்பதில்லை...

    பதில் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் (மனதின்) உள்ளுக்குள் தேடுங்கள்..

    முன்னர் தந்த அதே தகவலை மீண்டும் தருகிறோம்..

    கலங்கிய குட்டையில்
    கால் வைக்காமலிருந்தால்

    குளம் தெளிவடைகிறது மனக்
    குளமும் அப்படித்தான்..


    சிலரோடு கவிதைகளை துய்க்க வேண்டும் என்ற கவிஞர் வைர முத்துவின் வரிகளை நினைவில் கொண்டு அமைதி கொள்கிறோம்..

    ReplyDelete
  29. ///பாரதிவிழாவில் யார் முக்கியப் பேச்சாளர்?..///

    சுப்பிரமணிய பாரதி தான்
    வேறு யாராக இருக்கும் என எதிர்பார்த்தீர்கள்?

    ReplyDelete
  30. ///ஆம்!ஒருவகையில் பாரதிராஜா சரிதான்.///

    ஒரு வகையில் பாரதி ராசா சரியில்லை
    ஒராயிரம் வகையில் சரி..


    ///ஆனால் ராமநாதபுரம்,நெல்லை போன்ற இடங்களில் நடக்கும் சாதிக் கலவரங்களைப் பார்க்கும் போது,///

    சாதிகள் இல்லை என்ற பாரதியும்
    சாதியை உயர்த்தி பாடிய அகசான்று

    உண்டு எனச் சொன்னால் புருவத்தை
    உயர்த்தும் சிலர் ஏற்க மறுப்பர்

    சாதிகள் ஒழியக் கூடாது ..என
    சத்தியம் சொல்ல தயார் நிலையில் நாம்



    ///அங்கே நடக்கும் சாவுகளை எண்ணினால்,இந்த விஷயத்தில் ரத்தம், நாக்கு இரண்டுமே செத்துப்போவதே மேல் என்று தோன்றுகிறது.///

    சாவுக்கு பயந்த கோழைகளா...?
    வெட்கம்... வெட்கம்...

    கசாப்பு கடைகளை நோக்கி செல்லும்
    கட்டவிழ்த்த ஆட்டு மந்தைகளா நாம்..?

    தவறுகளை நியாயப்படுத்தும்
    தரங்கெட்டவர் பட்டியலிலா நாம்..?

    தன்னை அறிய மறந்து..
    தன் தகுதியை ஒப்பீடு செய்யும்

    தாழ்வு மனப்பாண்மை கொண்ட
    துரியோதனர்களா நாம்..?

    ஓமத் தீயில் நெய் ஊற்றும்
    உத்தமர் போல நம்மை

    காட்டிக் கொள்வது
    கோழைதனமல்லவா

    ஏழையாக வாழலாம்
    கோழையாக வாழாமா..?

    இங்கே பாருங்கள்..

    பழம் வேண்டி கல்லெறிந்தவனுக்கு
    பழம் கல்லுடன் விழுந்தது

    சாக்கடைசகதியிலே..இதனை
    சற்று யோசிப்போம் சிந்தையிலே

    கல்லை போல் சிலர் எத்தனை
    கரங்கள் பட்டாலும் மாறத தன்மையவர்

    சிலர்..

    பழம் போல் சிலர்..
    பழுத்து அழுகி சகதியோடு

    அவர் அப்படி... உலகம் அப்படி அதனால்
    அவரைப் போல் நானும் அப்படி என

    தான் மாறியதற்கு மற்றதை காரணம் காட்டி
    தமக்கு சாதகமாக்கி தப்ப நினைப்பவர்

    பலர்...

    விழுந்த இடம் எதுவானாலும்..
    வித்தை கொண்டு முளைத்துவரும்

    விருட்சமாய் நாளை விரிந்து நிற்கும்
    விதைகள் போல் சிலர் அவர்களும்

    ஒரு சிலர்..

    இவர்களில் நாம் யார்..
    யோசித்து பாருங்கள்..

    என சொல்லி.. இந்த திருக்குறளினை தந்து நிறைவு செய்கிறோம்..

    இது குறித்து
    இனி எதுவும் பேசாமாலே..

    அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத் துண்ணாமை நன்று.

    வழக்கம் போல்
    வளமான வாழ்த்துக்களும்

    மாசில்லா அன்பினை
    மனம் நிறைய கொண்டு

    அமைதி கொள்கிறோம்
    ஆரவாரமின்றியே..

    ReplyDelete
  31. ////பதி பசு பாசம் என்ற முப்பொருள் உண்மையை சொல்லும் வைச சித்தாந்தம் இதைத் தான் சொல்கிறது..
    முதலை விட்டு விட்டு எதையோ தேடுவதால் தான் பிரச்சனை..
    மையம் இல்லாது ஆரமில்லை.. வையம் உய்ய வழி தெரிந்தும்
    மறந்து செல்லும் தன்னை மறைத்து செல்லும் உயிர்கள் மாறும் ////

    என் நண்பர் ஐய்யர் அவர்களுக்கு
    நன்றி. தங்களுடைய தமிழ் நடை எனக்கு மிகவும் பிடித்து ஊள்ளது .
    30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்போஷுது தமிழில் எழுதுகிறேன் .
    தங்களுடைய பின் ஊட்டங்களை தவறாமல் படித்து கொண்டுஇருக்கிறேன் .
    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete
  32. /// சமஸ்கிருதம் நன்கு அறிவீர்கள் எனில் அவற்றை கட்டுரைகள் ஆக்கி இங்கே அளியுங்கள்///
    மிக்க நன்றி கிருஷ்ணன் அவர்களே .
    எனக்கு சமஸ்கிருதம் பரிச்சியம் தான், ஆனால் , இடம் , பொருள் , கவனிக்க வேண்டும் .
    இந்த இடம் தமிழை சார்ந்த இடம் .தமிழ் மக்கள் சார்ந்த இடம்.
    இதன் உரிமையாளர் வாத்தியாரிடம் உத்தரவு வங்க வேண்டும் . அவர் அனுமதித்தால் எனக்கு எந்த ஒரு ஆட்சேபனை இல்லை .
    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  33. ////தமிழில் வேதம் மொழிபெயர்க்கப்பட்டதாக அறிகிறேன்(ரா. வீழிநாதன்)புத்தகம் இப்போது கிடைக்கிறதா?///
    என் நண்பர் கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க மகிழிச்சி.
    என்னிடம் தமிழில் வேத புத்தகம் கிடையாது . நான் வேதம் படித்ததோ சமஸ்கிருதம் (45 வருடங்களுக்கு முன் )
    என்னிடம் உள்ளது சமஸ்கிருதம் வேத புத்தகம் மட்டுமே , இப்போஷுது நான் படித்து கொண்டு இருப்பது வேதம் வேதாந்தம்.
    மட்டுமே .என்னுடைய தொழில் (Electrical engineer in USA., Studied Guindy Engg. college Chennai. Worked Executive engineer in Chennai for 20 years. My company sent me to USA 12 years back for company developments.) Remaining time, I am learning horoscope, sanskrit vedic pashiyam reading. tamil writting etc...
    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete
  34. ///கடல் கடந்து பிராமணன் செல்லக்கூடாது என்பதற்கு வேதப் பிரமாணம் உண்டா(?) என்பதே.///

    பிராமணன் என்ற சொல்லுக்கு சுயநலம் அற்றவன் , உண்மையை சொல்பவன் , மற்றவர்களுக்காக உழைப்பவன் .
    தன் இச்சைக்கு இடம் கொடுக்காமல் இருத்தல் .எந்த நிலையலும் மாறாமல் இருத்தல்.
    இதைத்தான் ஆத்த்ரியய பிரமாணம் , சாம வேத பிரமாணம் கூறுகிறது .
    பிராமணன் என்ற சொல் பிரமனுக்கு சாமனமானவன் .
    இதை ஒவ்வுறு மனிதனும் கடைபிடிபதற்காக கூறப்பட்டுள்ளது.
    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete
  35. ஐயா, ஐயர் அவர்கள் குகன் ராமனுக்கு அளித்த மீனை உண்டதாக எண்ணிக்கொள் என்று ராமன் சொன்னார் என்று எழுதி கே.எம்.ஆரின் குகன் அளித்த மீனை உண்டதாகச் சொன்னதற்கு மறுதளித்திருந்தார். கம்ப ராமாயண உரைநடையை எனது www.kambaramayanam-thanjavooraan.blogspot.com வலைத்தளத்தில் கொடுத்திருக்கிறேன். அதிலிருந்து இது சம்பந்தமான பகுதியைக் கீழே தந்திருக்கிறேன்.

    //உள்ளே நுழைந்த குகன் கண்கள் களிக்கும்படி இராமனை தரிசனம் செய்து, மேனி வளைத்து, கைகளால் வாய் பொத்தி பணிவோடு நின்றான். இராமன் அவனை அமரும்படி சொல்லியும் குகன் அமரவில்லை. "ஐயனே! தேவரீர் அமுது செய்தருளும்படி தங்களுக்காக தேர்ந்தெடுத்த தேனும், மீனும் இங்குக் கொண்டு வந்தேன், தாங்கள் தயைகூர்ந்து அவற்றை ஏற்றுக்கொண்டு அமுது செய்தருள வேண்டும்" என்றான்.

    புன்சிரிப்போடு இராமன் முனிவர்களை நோக்கினான். தவவொழுக்கம் பூண்ட நான் உண்ணுதற்கு முடியாதவற்றைக் கொணர்ந்த அவன் வெள்ளை உள்ளத்தையும் மிகுதியான அன்பையும் எண்ணி இராமன் நெகிழ்கிறான். "உள்ளார்ந்த அன்போடு நீ கொணர்ந்த இவற்றை நாம் உண்டதாகவே எண்ணிக்கொள்" என்றான்.//

    ReplyDelete
  36. //தன்னை பற்றி அறிந்தகொள்வதை விட
    பிறரை பற்றி அறிந்து கொள்ளும் //

    உண்மைதான். தன்னைப்பற்றி அறிந்தவர்கள் குளம், வனம், மலை என்று தனிமையை நாடுவார்கள்.வகுப்பறைக்கெல்லாம் வர மாட்டார்கள்.நான் வகுப்பறைக்கு வருகிறேன் என்றாலே தன்னைப் பற்றி அறியாதவன்தான் என்பது வெள்ளிடைமலை.மற்றவர்களைப் பற்றி அதையே சொல்ல மாட்டேன். தாங்கள் தன்னைப்பற்றி அறிந்தவராக இருந்தும் கூட வகுப்பறைக்கு எங்க‌ளுக்கெல்லாம் ஞான உபதேசம் அளிக்க‌ வந்து கொண்டு இருக்கலாம்.எப்படித்தெரியும் எனக்கு?

    ReplyDelete
  37. //புரிந்தவர்களுக்கு புரியும் மற்றவருக்கு

    புரிந்த பின் புரியும்..அய்யரின் அன்பும்
    புரிந்த கொள்ள சொன்னதின் பொருளும்//

    புரியாவிட்ட‌லும் புரியும்
    புரிந்தாலும் புரியாது.

    தெரிந்தாலும் தெரியும்
    தெரியாவிட்டாலும் தெரியும்.

    விரிந்தாலும் விரியும்
    விரியாவிட்டாலும் விரியும்.

    நானும் தத்துவஞானி ஆக முயற்சிக்கிறேன்.ஹி ஹி ஹி....

    ReplyDelete
  38. //கண்களை மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று சொன்னால் திறக்க வேண்டியது கண்களை தான் சூரியனை அல்ல..

    சூரியனை பார்த்து குறைக்கும் நாய் என்றே ஒரு முறை நம் லால்குடிகாரர் எழுதிய பின் ஊட்டம் நிழலாடுகிறது..

    அய்யரை ஜாமினில் இருந்து வெளிக் கொண்டுவருவது போல் உள்ளது

    ஹி..ஹி.. (என்று எழுத அய்யர் மற்றவர் அல்லர்)//

    ஹி..ஹி..ஹி..ஹி.. நான் ஐயர் அல்ல. மற்றவந்தான்.ஹி ஹி ஹி ஹி..

    ஐயர் சூரியந்தானோ? பல சூரியன்கள் பற்றிச் சொல்கிறார்களே!ஐயர் ஞான சூரியனோ என்று அறியத்தான் பல்லாற்றானும் முயற்சிகள் செய்து வருகிறோம்.

    'Let barking dogs bark while the caravan moves on '

    என்று எழுதியுள்ளது நினைவுக்கு வருகிறது.அந்த ஆங்கிலப் பழமொழிக்குப் பொருள் 'போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் எடுத்த காரியம் நிறைவேறும் வரை படை நில்லாமல் செல்லட்டும்' என்பதாகும்.இங்கே 'காரவன்' என்பது வகுப்பறையைக் குறிக்கும்.'டாக்' என்பதற்கு 'லிடரல் மீனிங்' கொள்ளக் கூடாது.எந்தத் தனிப்பட்ட நபரையும் அது சுட்டுவது அல்ல. அப்படித் தவறாகப் பொருள் படும்படி நான் எழுதியிருந்தால் நிபந்தனை அற்ற‌ மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு மனிதரும் ஒரு தீவு என்று ஒரு கருத்து உண்டு. மனிதன் தன்னை
    மறைத்துக் கொள்ளவே வெளியில் பல வேடங்கள் போடுகிறான்.கண்ணால் காண்பதும் பொய் என்பார்கள். ஆழ் மனதின் தன்மையை அறிய அந்த நபரின் சொற்கள்தான் நமக்குக் கிடைக்கும் ஒரே (அகச்)சான்று.. அதனால் தான் தங்களை அறிய சிறிது பேச்சுக் கொடுத்துப் பார்க்கிறோம்.உள்ளிழிப்பு உடனே நடப்பதால் வெளிக் கொணர முயற்சிக்கிறோம். "ஆதிமூலமே!"

    ReplyDelete
  39. //அதையும் அள்ளிக்கிட்டு போகனும்னு நினைச்சா எப்படி,,,?//

    அள்ளிக்கொண்டு எங்கே போகப் போகிறோம்? நீங்கள் எஙளுக்குத் தருவதால் உங்கள் அறிவு மட்டுப்பட்டு(குறைந்து) விடுமா என்ன?
    தீயால் எரிக்கவோ, நீரால் அடித்துச் செல்லவோ, திருடரால் திருடவோ முடியாத தல்லவோ அறிவு?தொட்டனைத்தூறும் மணற்கேணியல்லாவோ அறிவு?

    முதுமுனைவர் தி.ந. ராமச்சந்திரன் அவர்கள் எப்போது யார் அவர் சார்ந்த துறைகளில் எந்த வினா எழுப்பினாலும் அதற்குத் தக்க விளக்கங்களை அளிப்பார். புத்தகங்களையும் அளித்து மகிழ்வார்.

    நாம் அறிந்ததை பிறருக்கு அளிப்பதும், பிறரிடமிருந்து அறிந்து கொள்வதுமே
    கற்றலை எளிதாக்கும்.

    பகிர விருப்பம் இல்லை எனில் யார் உங்களை நிர்பந்திக்க முடியும்?

    சிதம்பரம் அந்தண்ர்கள் பூட்டிவைத்து வெளிப்பட்டதுதானே திருமுறை?

    ReplyDelete
  40. //குடிகாரரின் கேள்விகள் வாதிற்கு அழைப்பது போல் உள்ளது...

    ஆரோக்கியமில்லாத வாதத்திற்கு
    இடம் கொடுப்பதில்லை...

    பதில் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் (மனதின்) உள்ளுக்குள் தேடுங்கள்..

    முன்னர் தந்த அதே தகவலை மீண்டும் தருகிறோம்..//

    (லால்)குடிகாரர் என்று தமாஷுக்கு எழுதினீர்கள் என்று அதனை ஏற்று காஃபி குடிகாரன் தான் என்று குடிகாரப் பட்டத்தை ஏற்றுக்கொண்டேன்.அதனையே தமாஷு இல்லை என்று ரெகுலர் 'குடிகார'ப் பட்டத்தை அளித்ததற்கு நன்றி!

    வாதம் ஆரோக்கியமானதா இல்லையா என்பது வாதம் துவங்கு முன்னரே எப்படி அறிவது? வாதம் நடந்த முடிந்த பின்னரே அல்லது நடுவில் திசை மாறினால்தான் ஆரோக்கியமானதா, நோய் பிடித்ததா என்பது புரியும்.

    சமணர்களின் கழுவேற்றம் என்பது ஒரு வாதப் பொருளே. அது சைவத்தின் மீது ஏற்பட்ட ஒரு குற்றச்சாட்டே. அதேபோல சோழமன்னர்கள் ஸ்ரீ ராமானுஜரை நாடுகடத்தியதும் சைவத்தின் மேல் ஒரு களங்கத்தையே சுமத்தியுள்ளது.

    இவற்றிற்கு விளக்கம் கேட்பது தவறில்லை என்பது அடியவனின் கருத்து.

    நம் பாரத மரபே கேள்வி=பதில் மரபுதான்.'என்கொயரி'தான் அறிவியல்.
    வாதம், விதண்டா வாதம், சம்வாதம் என்று பல உண்டு. விதண்டாவாதம் செய்யக் கூடாது. சம்வாதம் செய்யலாம். நான் விரும்புவது அதுவே.

    ReplyDelete
  41. //சுப்பிரமணிய பாரதி தான்
    வேறு யாராக இருக்கும் என எதிர்பார்த்தீர்கள்?//

    நல்ல சமத்காரமான பதில். பாராட்டுக்கள்.

    ஏதோ விழாவில் இருந்து அவசரமாகப் பின்னூட்டம் இடுவதாக எழுதியதால் விழா பற்றிக் கேட்டோம்.

    ReplyDelete
  42. //சாதிகள் இல்லை என்ற பாரதியும்
    சாதியை உயர்த்தி பாடிய அகசான்று

    உண்டு எனச் சொன்னால் புருவத்தை
    உயர்த்தும் சிலர் ஏற்க மறுப்பர்

    சாதிகள் ஒழியக் கூடாது ..என
    சத்தியம் சொல்ல தயார் நிலையில் நாம்//

    இதனை வாதத்திற்கான அறை கூவல் என்று கொள்ளலாமா?

    பாரதியின் சாதி பற்றிய உங்கள் கருத்துக்களை ஏற்கனவே பலரும் சொல்லக் கேட்டதுதான்.அதுவும் முதுமுனைவர் தி.ந. ராமச்சந்திரன் அவர்களுடன் பல்லாண்டுப் பழக்கம்.

    பாரதியின் கருத்து 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்' பாவம் என்பதே என்று பன்முறை கேட்டுள்ளோம்.

    செங்கோவியின் பிளாகில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2011 ல் எட்டு பகுதிகளாக "பிராமண‌ நண்பர்களுக்கு வர்ணம், ஜாதி,இடஒதுக்கீடு..."என்ற தலைப்பில் கட்டுரைகள் வந்தன. அதற்கு முதலில் நானும், பின்னர் டெல்லி உமாவும், 'யார் பிராமணன்?"என்று கேள்வி எழுப்பிய‌ சிங்கப்பூர் ஹாலாஸ்யமும், காரணம்.அந்தக்கட்டுரைகளின் பின்னூட்டத்தில் பிராமண‌ர்களின் பக்கலுக்காக நான் ஒரு வக்கீலைப் போல வாதாட வேண்டி வந்தது. அதனைக் கண்ணுறுமாறு ஐயரையும் மற்ற நண்பர்களையும் வேண்டுகிறேன்.
    http://sengovi.blogspot.com

    ReplyDelete
  43. //சாவுக்கு பயந்த கோழைகளா...?
    வெட்கம்... வெட்கம்...

    கசாப்பு கடைகளை நோக்கி செல்லும்
    கட்டவிழ்த்த ஆட்டு மந்தைகளா நாம்..?

    தவறுகளை நியாயப்படுத்தும்
    தரங்கெட்டவர் பட்டியலிலா நாம்..?//

    சரி. மோதி மண்டையை உடைத்துக் கொள்ளுங்கள்.

    சாதிச் சண்டையில் பங்குபெற்று நாமும் நம் ப‌ங்குக்கு பல இன்னுயிர்களை
    இழக்கலாம் என்றால் எனக்கு என்ன வந்தது? தாரளமாகச் செய்யுங்கள். நான் கோழையாகவே இருந்து விடுகிறேன்.

    வேகமா? விவேக‌மா? உங்களின் எழுத்துக்க‌ள் எதைச் சொல்கின்றன‌?

    மற்ற இரண்டு இரண்டு வரிகள் எனக்குப் புரியவில்லை. சி எஸ் சேகருக்குபுரிந்தால் விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  44. //ஆனால் , இடம் , பொருள் , கவனிக்க வேண்டும் .
    இந்த இடம் தமிழை சார்ந்த இடம் .தமிழ் மக்கள் சார்ந்த இடம்.
    இதன் உரிமையாளர் வாத்தியாரிடம் உத்தரவு வங்க வேண்டும் .//

    முதுமுனைவர் தி.ந ராமச்சந்திரன் அவர்கள் சொல்லுவார்
    "தமிழ் எனது தாய் மொழி. சமஸ்கிருதம் எனது தந்தை மொழி.
    சமஸ்கிருதம் தேவ பாஷை. தமிழ் மகாதேவ பாஷை"

    ஏற்கனவே ஒருமுறை வகுப்பறை ஐயா அவர்கள் என்னை 'பிரம்ம சூத்திரம்' பற்றி எழுதுங்கள் என்று கூறினார்கள்.நான் நன்கு அறியாததைப்பற்றி எழுதத் தயங்கினேன்.

    நீங்கள் முதலில் முக்கியமான 10 உபநிடதங்கள் பற்றி எளிமையான கட்டுரை எழுதுங்கள். என்க்கு அனுப்பிக் கொடுத்தால், எனக்குத் தோன்றும் மாற்றங்களை, ஆலோசனைகளைக் கூறுகிறேன்.பின்னர் ஐயாவுக்கு அனுப்பலாம்.கட்டாயம் கட்டுரை ந‌ன்றாக இருந்தால் ஐயா வெளியிடுவார்.
    சுவையாக கதை போல எழுத வேண்டும்.முயற்சியுங்கள்.

    தாங்களாகவே ஒரு பிளாக் ஆரம்பித்தும் எழுதலாம். கட்டாயம் நான் அங்கு வந்து வாசிக்கிறேன்.

    வகுப்பறையில் எழுதினால் கூடுதலாக வாசிப்போர் கிடைக்கலாம்.

    ReplyDelete
  45. // நான் வேதம் படித்ததோ சமஸ்கிருதம் (45 வருடங்களுக்கு முன் )
    என்னிடம் உள்ளது சமஸ்கிருதம் வேத புத்தகம் மட்டுமே , இப்போஷுது நான் படித்து கொண்டு இருப்பது வேதம் வேதாந்தம்.மட்டுமே //

    நீங்களே சரியான நபர். வேத வேதாந்தங்கள் பற்றி எழுத. எனவே சிறிய, எளிமையான, சுவையான கட்டுரைகள் எழுதுங்கள். ஐயாவுக்கு அனுப்புங்கள். ஐயா விரும்பினால் வெளியிடட்டும்.மகிழ்ச்சி.!

    ReplyDelete
  46. // நான் வேதம் படித்ததோ சமஸ்கிருதம் (45 வருடங்களுக்கு முன் )
    என்னிடம் உள்ளது சமஸ்கிருதம் வேத புத்தகம் மட்டுமே , இப்போஷுது நான் படித்து கொண்டு இருப்பது வேதம் வேதாந்தம்.மட்டுமே //

    நீங்களே சரியான நபர். வேத வேதாந்தங்கள் பற்றி எழுத. எனவே சிறிய, எளிமையான, சுவையான கட்டுரைகள் எழுதுங்கள். ஐயாவுக்கு அனுப்புங்கள். ஐயா விரும்பினால் வெளியிடட்டும்.மகிழ்ச்சி.!

    ReplyDelete
  47. //தவவொழுக்கம் பூண்ட நான் உண்ணுதற்கு முடியாதவற்றைக் கொணர்ந்த அவன் வெள்ளை உள்ளத்தையும் மிகுதியான அன்பையும் எண்ணி இராமன் நெகிழ்கிறான். "உள்ளார்ந்த அன்போடு நீ கொணர்ந்த இவற்றை நாம் உண்டதாகவே எண்ணிக்கொள்" என்றான்.//

    இராமன் குகன் அளித்தவற்றை உண்ணவில்லை, சும்மா ஏற்றுக் கொண்டான்
    என்று அறிவுறுத்திய ஐயருக்கும், கோபாலன்ஜிக்கும் நன்றி.

    கம்பராமாயணத்தில் அப்படி. வால்மீகியில் எப்படி?

    ReplyDelete
  48. ///அள்ளிக்கொண்டு எங்கே போகப் போகிறோம்? நீங்கள் எஙளுக்குத் தருவதால் உங்கள் அறிவு மட்டுப்பட்டு(குறைந்து) விடுமா என்ன?
    தீயால் எரிக்கவோ, நீரால் அடித்துச் செல்லவோ, திருடரால் திருடவோ முடியாத தல்லவோ அறிவு?தொட்டனைத்தூறும் மணற்கேணியல்லாவோ அறிவு?///


    கல்வி வேறு ,,
    அறிவு வேறு..

    அதேனை இதனோடு ஒப்பிடுவது
    அப்படியே ஏற்க முடியாது நண்பரே..

    கற்க முயற்சி தேவை
    அறிவு இயல்பாக வரும்..

    இடத்திற்கு ஏற்ப மாறும் தன்மையது
    இடமாறாமலிருக்க கல்வி துணைபுரியும்

    ReplyDelete
  49. ///வாதம் ஆரோக்கியமானதா இல்லையா என்பது வாதம் துவங்கு முன்னரே எப்படி அறிவது? வாதம் நடந்த முடிந்த பின்னரே அல்லது நடுவில் திசை மாறினால்தான் ஆரோக்கியமானதா, நோய் பிடித்ததா என்பது புரியும்...///

    அடிப்படையில்லாத வாதங்கள்
    படிப்படியாக ஆரோக்கியமில்லாதவையே

    தாங்கள் சொல்லும் தொடங்கிய பின்னர்
    தவறானவையே என்பதே கருத்து..

    ReplyDelete
  50. ///பாரதியின் கருத்து 'குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்' பாவம் என்பதே என்று பன்முறை கேட்டுள்ளோம். ///

    அகச்சான்று என உங்கள் அன்பு
    அய்யர் குறிப்பிட்டது இதுவல்ல..

    அதை எடுத்துச் சொன்னால்
    அன்று போல் இன்றும்

    விலகி செல்வர் அல்லது
    விலக்கி வைப்பர் ..

    அவர்கள் எண்ணப்படியே
    அவர்கள் வாழட்டும்..

    அவ்வளவில் அவன் மகிழ்க என்ற
    அப்பர் வாக்கினை மனதில் கொண்டு

    நலமான வணக்கமும்
    வளமான வாழ்த்துக்களும்..

    தனுர் மாதம் தொடங்கியபின்
    திரும்புவோம் வகுப்பிற்கு..

    அதுவரை பயண ஓய்வு
    அந்த ரயில் கிழக்கே போகட்டும்..

    ReplyDelete
  51. /// தன்னைப்பற்றி அறிந்தவர்கள் குளம், வனம், மலை என்று தனிமையை நாடுவார்கள்.வகுப்பறைக்கெல்லாம் வர மாட்டார்கள்.///

    அப்படி சொன்னது யார்
    அப்படித் தான் இருப்பார்கள் என

    தாங்கள் நினைத்தால் அந்த
    தவறுக்கு யார் பொறுப்பு..

    குளம் வனம் மலையிலும் தனிமையா?
    இயற்கை உடன் தானே இருப்பர்..

    உங்களுக்காக இந்த பாடலினை
    உள்ளபடியே சுழல விடுகிறோம்

    இனியது கேட்பின் தனிநெடுவேலோய் இனிது இனிது ஏகாந்தம் இனிது

    அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
    அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

    அதனினும் இனிது அறிவுள்ளோரைக்
    கனவிலும் நனவிலும் காண்பது தானே

    ReplyDelete
  52. குழப்பமாக இருக்கிறது ஒன்றும் புரியவில்லை என்பவ்ர்களுக்காக பொருள் கூறி விளக்குகின்றோம்..

    மாற்று கருத்து உள்ளவர்கள்
    மறுத்தும் எழுதலாம்..



    //புரியாவிட்ட‌லும் புரியும்
    புரிந்தாலும் புரியாது. ///

    நமக்கு "புரியவிட்டாலும் (அறிவுள்ளவர்களுக்கு நமக்கு புரியவில்லை என்பது) புரியும்"


    நமக்கு "புரிந்தது (போல் நடித்தாலும் நமக்கு உண்மையிலேயே) புரியாது"



    ///தெரிந்தாலும் தெரியும்
    தெரியாவிட்டாலும் தெரியும்.///

    நாம் செய்யும் தவறு நமக்கு "தெரிந்தாலும் (அறிவும் அன்பும் உள்ளவர்களுக்கு) தெரியும்" நாம் செய்த/செய்கின்ற தவறு


    இது தவறு என நமக்கு "தெரியவிட்டாலும் (மீண்டும் அதே தவறு செய்யத்) தெரியும்.."



    //விரிந்தாலும் விரியும்
    விரியாவிட்டாலும் விரியும்.///


    அறிவு "விரிந்தாலும் விரியும்.."
    நமக்கு அறிவு "விரியாவிட்டாலும் (அன்பு மட்டும்) விரியும்"

    முயற்சிப்பதால் மட்டும்
    யாரும் அப்படி ஆக முடியாது..

    அன்பான வணக்கமும்
    அந்த வாண் உயர வாழ்த்துக்களும்

    ReplyDelete
  53. //முயற்சிப்பதால் மட்டும்
    யாரும் அப்படி ஆக முடியாது..//

    தங்களைப் போல் யாருமே ஆகமுடியாது என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

    இங்கே வருவோரெல்லாம் அறிவில் குறைந்தவர்கள் என்றும், தொடர்ந்து உங்களுடைய கருத்துக்கள் மிகவும் மேம்பட்டவை எனவும், அவற்றை விரித்துரைத்தால் ஏதோ ஆகிவிடும் என்றும் பல மாதங்களாகச்சொல்லி வருகிறீர்கள். நானும், சில சமயம் மற்றவர்களும் உங்களைக் கட்டுரைகளாக உங்கள் கருத்துக்களைத் தாருங்கள் என்று சொல்லியாகிவிட்டது. மீண்டும் மீண்டும் கேட்டு விட்டோம்.பலனில்லை.

    முன்னர் விவேகானந்தரும் பெரியாரும் ஒன்று என்றீர்கள்.காரணம் என்ன என்று கேட்டோம். பதில் இல்லை. பாரதியைப் பற்றி ஏதோ சொன்னீர்கள். தஞ்சாவூர் ஐயா அவர்கள் ஒரு பாரதி பாடலைக் கொடுத்து அதற்கு விளக்கம் அளிக்க்க் கேட்டார்கள். பதில் இல்லை.இது போல பல சுட்டலாம்.

    சாதி தேவைதான் எனில் அதைப்பற்றி விரிவாக எழுதி நிறுவுங்கள். பாரதியும் அப்படிச் சொல்லியிருக்கிறார் எனில் அதையும் சுட்டுங்கள். சந்தேகம், கேள்வி கேட்பவர்களுக்குப் பொறுமையாகப் பதில் எழுதுங்கள்.

    தெற்கே நடப்பதுபோல் சாதி அடிதடி சண்டையில் பிராமணனும் கலந்து கொண்டு ரத்தம் சிந்த வேண்டும் என்பது உங்கள் கருத்தானால் அது பற்றி விரிவாக எழுதுங்கள்.

    உங்கள் சொற்களை யார் எடுத்துச் சொன்னலும் அதனை புரட்டிப் போட்டு வேறு பொருள் சொல்லும் போக்கினைக் கைவிடுங்கள்.

    முழு வாக்கியங்களாக திட்டவட்டமாக எழுதுங்கள். கருத்துக்களும், சொற்களும்
    தொங்கலில் நிற்காமல் எழுதுவதே குழப்பங்களைத் தவிர்க்கும்.

    விமர்சனம் என்பதே ஒரு கலை. நீங்கள் ஒரு விமர்சகர் மட்டுமே எனில் அதனைச் சரி வரச் செய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

    உங்களுடைய போக்கினை மாற்றிட நினைத்து பல சொற்களையும், நேரததையும் வீணாக்கி விட்டேன்.

    இனி அத் தவற்றைச் செய்யவில்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com