மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.10.10

ஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன?

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இன்று சரஸ்வதி பூஜை தினம். சரஸ்வதியை வணங்கிப் பூஜிக்கும் தினம்.

அறிவிற்கான, கலைகளுக்கான கடவுள் சரஸ்வதி. Sarasvatī is the goddess of knowledge, music and the arts வேதங்களின் தாய். பிரம்மாவின் துணைவி.

தேவியின் அருட்பார்வை கொஞ்சமேனும் இருப்பதால்தான் நான் ஜோதிடத்தைக் கற்றுணர்ந்தேன். உங்களுக்குப்  பயிற்றுவிற்கிறேன். உங்களுக்கும் சரஸ்வதியின் அருட்பார்வை இருப்பதால்தான் ஆர்வமுடன் அரிய கலையான ஜோதிடத்தைக் கற்றுக்கொள்கிறீர்கள்.

சரஸ் என்றால் வடமொழியில் தங்குதடையின்றி சீரான ஓட்டத்துடன் இருக்கக்கூடியது என்றும் வதி என்றால்  ‘பெண் என்பதையும் குறிக்கும். "saras" (meaning "flow") and "wati" (meaning "a woman").

அறிவு தங்குதடையின்றி வளர வேண்டும். வெளிப்பட வேண்டும். பயன்பட வேண்டும். தேவிக்கு சரியான  பெயர்தான் உள்ளது.

இன்று தேவியை வணங்கும் முகமாக, தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியின் பாடலைப் பதிவிடுகிறேன்.  அனைவருக்கும் தெரிந்த பாடல்தான். இருந்தாலும், அதை நினைவுறுத்தி இன்று தருவதில் மிக்க மகிழ்ச்சி  கொள்கிறேன்.

எதெதில் தேவி இருப்பாளாம்?

பாரதி அழகாகச் சொல்லியுள்ளார்:

வெள்ளைத் தாமரைப் பூவில் அவள் இருப்பாளாம். வீணையின் இனிய நாதத்தில் இருப்பாளாம். மனதை மயக்கும்  கவிதைகளைக்கூறும் கவிஞர்களின் உள்ளத்திலே இருப்பாளாம். இப்படி, தேவி இருக்கும் இடங்களை எல்லாம்  பட்டியல் இட்டிருக்கிறார் பாரதியார். படித்து, பொருள் உணர்ந்து மகிழுங்கள்!!!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
ராகம்-ஆனந்த பைரவி                                                                    
தாளம்-சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.                                   
(வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.                                              
(வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.                                                     
(வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்                 
(வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.                                           
(வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,                                  
(வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.                                         
(வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!                                               
(வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்                
(வெள்ளைத்)

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!                                    
(வெள்ளைத்)   

+++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

41 comments:

  1. ஆயூத பூஜை அருமையான விளக்கம் ஐயா....பாடல் அருமை..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  2. Anbu Aiyya,
    Intha Paadalai sameeba kaalamaga thedi varugiren. pona varuda Saraswathi poojai andru vagupparayil irunthathu . Pinnar athai thedi kandu pidipathu kashtamai poivittathu. Padalukkaga migavum nandri. Sarawathi poojai vaazhthukkal.

    Anbudan Manavan,

    Saravanakumar R,
    CMB

    ReplyDelete
  3. பண்பை, பக்குவத்தை பாலூட்டிய என் அன்னை சரஸ்வதிதான் எனக்கு ஐந்தாண்டுகள் வரை பள்ளிப்பாடமும் பயிற்றுவித்தாள்...
    இன்னமும் எனக்கு எவ்வளவோ பாடங்கள் சொல்லித்தந்து கொண்டுதான் இருக்கிறாள்..
    இந்நன்னாளில் வாழும் தெய்வமாம் என் அன்னையை வணங்குறேன்.

    என்னதான் பிறரின் அனுபவத்தில் பாடம் படிப்பவன் புத்திசாலியா இருந்தாலும்
    என் சொந்த அனுபவத்தில் பாடம் படித்து அனுபவசாலியா இருப்பதையே என்றும் விரும்புகிறேன்..
    (இப்பிடி டைலாக் வுடக் காரணம் வேறொண்ணுமில்லை..எங்கம்மா பேரு சரஸ்வதிதான்...
    ஸ்கூல்லேருந்து ஆரம்பிச்சு இன்னிக்கும் டெய்லி chat அட்வைஸ் எக்கச்சக்கம்..சொல் பேச்சு என்னிக்கு நாம கேட்டோம்..அதான்.. )

    ஆமா... 'வெள்ளைத்தாமரையில் வீற்றிருப்பாள்' ன்னு ஒரு பாட்டைப் போட்டுட்டு
    இப்பிடி ஏதோ பாறாங்கல்லுலே உக்கார வெச்சு அந்தம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்களே சார்..

    தஞ்சாவூரார் வந்து சரஸ்வதி பத்தி பாரதி என்ன சொன்னாருன்னு சொல்வதைக் கேட்க ஆவலாக உள்ளேன்..
    (ஏன்னா எங்கக்கா பேரு பாரதி..ஹி..ஹி..)

    ReplyDelete
  4. மகாகவி பாரதியார் புதுச்சேரியில் இருந்த சமயம் வி.எஸ்.குஞ்சிதபாதம் என்பவர் அவருடைய நெருங்கிய நண்பாராயிருந்தார். இந்த குஞ்சிதபாதத்தின் தந்தையார் வி.எஸ்.சுவாமிநாத தீக்ஷிதர் திருநெல்வேலியில் பாரதி அந்த நாட்களில் படித்த இந்து காலேஜில் ஆசிரியர். அவர் பாரதியிடம் இந்து காலேஜ் நிதிப் பற்றாக்குறை காரணமாக மூடிவிடும் நிலைக்கு வந்துவிட்டது, பாரதி மக்களுக்கு வேண்டுகோளாக நிதி வேண்டி ஒரு பாடல் இயற்றிக் கொடுத்தால் அதனை ஆசிரியர்களும், மாணவர்களும் ஊர் ஊராகச் சென்று பாடி நிதி வசூல் செய்து அந்தக் கல்லூரியைத் திரும்ப நடத்த முடியும் என்றார். பாரதியும் உடனே ஒரு பாடலை இயற்றி அன்றே கொண்டுபோய் தீக்ஷிதரிடம் கொடுத்து தனது 'தாய் மன்றத்துக்காகத் தான் செய்யும் கைங்கரியம்' என்று சொல்லி அந்தப் பாடலையும் பாடிக் காட்டினார். இந்தப் பாட்டின் கடைசி பகுதி இந்த நோக்கைத்தைப் பறைசாற்றும் விதமாக "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்" என்று முடிந்திருப்பதைப் பார்க்கலாம். சரஸ்வதி பூஜையன்று இதனை நினைவு படுத்தி அந்தப் பாடலை பிரசுரம் செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா!

    ReplyDelete
  5. என்னுடைய முந்தைய பின்னூட்டத்துக்கு ஆதாரம்: "நண்பர்கள் பார்வையில் பாரதி" எனும் நூல்.

    ReplyDelete
  6. //"வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
    வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
    வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
    வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
    மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
    வீர மன்னர்பின் வேதியர் யாரும்
    தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
    தரணி மீதறி வாகிய தெய்வம்."//

    மஹாகவி வேதம் வேதியரைக் காட்டிலும், தொழில் தொழில் முனைவோர், தொழிலாளர்களுக்கே முதல் இடம் அளித்துச் சிறப்பித்தவர்.இந்த வரிகளில் முதன்மையைக் கொல்லர்,சிற்பிகள்,தச்சர் என்று அடிப்படைத் தொழிலாளர்களுக்கும், அதன் பின்னர்,பிஸினஸ்மேன்(வணிகர்), அதன் பின்னர் ஆள்பவர்கள்(க்ஷத்திரியர் என்னும் ம‌ன்னர்) இறுதியாக வேதியருக்கும் இடமளித்தது ஒரு புரட்சியாகும். வேதமும், உபநிஷதமும்,காவியங்க‌ளும், பகவத் கீதையும்,சமஸ்கிருத மொழியிலேயே நன்கு கற்ற அந்தணரான மஹாகவியை, அவர் புரட்சிக் கருத்துக்களுக்காக ஜாதிப் பிரஷ்டம் செய்து
    பார்த்தது அவர் பிறந்த சமூகம்."குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
    என்று முழங்கியவர்களில் முதல் வரிசையில் மஹாகவி நின்றார்.அவரை நினைவு படுத்தியது அருமை. தஞ்சாவூர் பெரியவர் கோபால்ஜி வருவார் பாருங்கள் மேல் அதிகத் தகவல் களோடு!நன்றி!

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா!

    கல்வி தாயிக்கு கண்ணீர் கடிதம்!

    தந்தையின்!
    கண்ணீர் ததும்பும் கடின உழைப்பில்
    படித்து பட்டம் வாங்க மனம் வராமல்
    சுய புத்திகொண்டு!
    கல்வி அறிவை பெருக்கி
    இவ்வுலகை!
    வெற்றி வாகை சூட கிளம்பி
    அறியான்மை!
    என்னும் படும் பாதாளத்தில் விழுந்து
    இளமையை!
    மாயை உலகில் தொலைத்து
    பலி ஏற்று,மதி இழந்து,விழி பிதிங்கி,

    இனி என் செய்வது என்று அறியாமல்
    பத்து இருபது வருடகாலமாக
    வேதனை அன்றி!
    " ஒரு சுகமும் அறியாது!"
    பரிதவிக்கும் ஒரு பாமரனுக்கு
    கருணை காட்டு கல்வி தாயே!

    " நன்கு கற்றறிந்த அறிஞர்கள்
    வாய்மொட்சும் அளவிற்கு
    பெரும் சாதனை செய்ய! "

    ReplyDelete
  8. பாரதியின் பாடல் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் நான்தான் ஸ்க்ரோல் டவுன் செய்து விட்டேன். ஒரு காலத்தில் அவருடைய பாடல்கள் எல்லாம் மனப்பாடம் செய்தது போய் இப்போது எல்லாம் மறந்து விட்டது.

    சரஸ்வதி பூஜை காலையிலேயே வடை, பாயசத்துடன் முடிந்து விட்டது.

    ReplyDelete
  9. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கும், ஜப்பான் மைனர்வாள் மற்றும் கே.எம்.ஆர்.கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. இன்று சரஸ்வதி தேவி பற்றியும் பாரதி பற்றியும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள். சரஸ்வதிக்கும் பாரதி என்ற பெயர் உண்டு. "வாக்தேவி" என்றொரு பெயரும் உண்டு. வாக்கை தெய்வமாக சொல்லியிருக்கிறார்கள். தேவியை "பாஷாரூபிண்யை" அதாவது மொழிகளின் வடிவமாக இருப்பவள் என்றும் "அக்ஷரரூபிண்யை" எழுத்து வடிவமானவள் என்றும் குறிப்பிடப்படுகிறாள். உள்ளத்து ஒளியைத் தூண்டுபவள் கலைமகள், அறிவு எனும் செல்வத்தைத் தருபவள், மதியில் இருள் சூழாமல் காப்பவள் என்றெல்லாம் சரஸ்வதி போற்றப்படுபவள். இதையெல்லாம் மகாகவி பாரதி தன்னுடைய கட்டுரைகளில் எழுதியிருக்கிறான். அவன் மேலும் சொல்வதைச் சற்று பார்க்கலாம். "வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தில்" வீற்றிருக்கும் கலைமகளைப் பூஜிக்கும் முறை என்ன தெரியுமா? நாம் 'எப்போதும், எவ்விடத்திலும் உண்மை பேசுதல்; பிறர் பேசும் உண்மைகளை விருப்பத்தோடு கேட்டல் ஆகியவைகளாம். இது தவிர நாம் தவிர்க்க வேண்டியவை சிலவும் உண்டு. அவை நிந்தை, பழி, சாபம், பயம், அசுசி (பிறரிடம் வெறுப்பு கொள்ளுதல்) இவைகள் நம் உள்ளத்தை மாசுபடுத்தும். 'வாக்தேவி' சரஸ்வதி நமக்குப் பரிபூரண தீரமும், வலிமையும், உண்மையும், திருத்தமும், தெளிவும் பொருந்திய வாக்கை அருளட்டும்' அதுவே தேவவாக்கு. மனித ஜாதிக்குத் தேவ வாக்குப் பிறந்திடுக. இதுதான் பாரதி சரஸ்வதி பூஜைக்கு நமக்கு அளிக்கும் தேவவாக்கு.

    ReplyDelete
  10. எல்லாமும் வியாபாரமாகிவிட்ட சூழலில்..
    இப்படி நாம் சொல்லிக் கொள்வதினைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும்?
    ஏதாவது செய்ய நினைத்தால் வாழத் தெரியாதவராகவோ ஏமாந்த மனிதராகவோ இருக்க முடியும் . . .

    தினமும் இறைவனுக்கு
    நன்றி சொல்லும்
    நமக்கு வேண்டாமே
    இந்த சரஸ்வதி ஆயுத பூஜை . .

    ReplyDelete
  11. இன்றைய நவீன வியாபார உலகத்தின் டாப் 10 தொழிலதிபர்களில்
    10 இல் 7 பேர் பள்ளிப்படிப்பை கூட முடித்திருக்கவில்லை என்பதை
    ஒரு ஆய்வின் மூலம் அறியும்போது ஸ்ரீ சரஸ்வதி தேவியானவள்
    சப்பரமிட்டு அமர்ந்திருப்பது அவர்களின் ஞானத்தில் தானே தவிர
    ஒருவர் கல்லுரி படிப்பை முடித்து பெறும் பட்டத்தில் அல்ல என்பது
    தெள்ளத்தெளிவாக புலனாகிறது. ஆகவேதான் திரு ராஜாஜி அவர்கள்
    இப்படி குறிப்பிட்டார்கள்:
    " When intelligence matures and lodges securely in the mind, it becomes wisdom.
    When wisdom is integrated with life and issues out in action, it becomes bhakthi.
    Knowledge, when it becomes fully mature is bhakthi.
    If it doesnot get transformed into bhakthi, such knowledge is useless tinsel.
    To believe that gnyana and bhakthi, knowledge and devotion are
    different from each other, is ignorance. "
    ஆகவேதான் அப்படிப்பட்ட ஞானத்தை நம்
    எல்லோருக்கும் ஸ்ரீ சரஸ்வதி அன்னை வழங்கிட
    இந்த திருநாளில் பிரார்த்திப்போமாக.
    பி.கு. திரு மைனர்வால் "ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான் "
    என சொல்வது டெலிபதி மூலம் எனக்கு கேட்டாலும் நாம்
    எந்த பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தாலும் போய்ச்
    சேருமிடம் பக்தி என்கிற எல்லையற்ற பேரானந்த உலகமாயிற்றே.
    என்னை என்ன செய்யச் சொல்கிறீர் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.
    நந்தகோபால்

    ReplyDelete
  12. வர வர யாரும் ஞாயிறு மலர் எழுதி வாத்தியாருக்கு அனுப்பி வைக்க மாட்டிருங்க வத்தியார் ஐயா நாளைக்கு வகுப்பு இருக்குதா(போடுவிங்களா. பதிவு)உமா நீ வடை பாயசம்மா சாப்பிட்டே நான் சாப்பிடவில்லை தோசை முருங்கைகீரை சாம்பார் சாதம் சாப்பிட்டேன் Minorwall ur comment is super u r joker man i donot hurt u sorry

    ReplyDelete
  13. saraswathi pooja started with a very good note of poetic song from our great subramaniya bharathiyar, thankyou for both of them.

    ReplyDelete
  14. ////வேலன். said...
    ஆயூத பூஜை அருமையான விளக்கம் ஐயா....பாடல் அருமை..
    வாழ்க வளமுடன்.
    வேலன்./////

    நல்லது. நன்றி வேலன்!

    ReplyDelete
  15. /////R.Saravanakumar said...
    Anbu Aiyya,
    Intha Paadalai sameeba kaalamaga thedi varugiren. pona varuda Saraswathi poojai andru vagupparayil irunthathu . Pinnar athai thedi kandu pidipathu kashtamai poivittathu. Padalukkaga migavum nandri. Sarawathi poojai vaazhthukkal.
    Anbudan Manavan,
    Saravanakumar R,
    CMB////

    நல்லது. நன்றி சரவணன்!

    ReplyDelete
  16. /////minorwall said...
    பண்பை, பக்குவத்தை பாலூட்டிய என் அன்னை சரஸ்வதிதான் எனக்கு ஐந்தாண்டுகள் வரை பள்ளிப்பாடமும் பயிற்றுவித்தாள்...
    இன்னமும் எனக்கு எவ்வளவோ பாடங்கள் சொல்லித்தந்து கொண்டுதான் இருக்கிறாள்..
    இந்நன்னாளில் வாழும் தெய்வமாம் என் அன்னையை வணங்குறேன்.
    என்னதான் பிறரின் அனுபவத்தில் பாடம் படிப்பவன் புத்திசாலியா இருந்தாலும்
    என் சொந்த அனுபவத்தில் பாடம் படித்து அனுபவசாலியா இருப்பதையே என்றும் விரும்புகிறேன்..
    (இப்பிடி டைலாக் வுடக் காரணம் வேறொண்ணுமில்லை..எங்கம்மா பேரு சரஸ்வதிதான்...
    ஸ்கூல்லேருந்து ஆரம்பிச்சு இன்னிக்கும் டெய்லி chat அட்வைஸ் எக்கச்சக்கம்..சொல் பேச்சு என்னிக்கு நாம கேட்டோம்..அதான்.. )
    ஆமா... 'வெள்ளைத்தாமரையில் வீற்றிருப்பாள்' ன்னு ஒரு பாட்டைப் போட்டுட்டு
    இப்பிடி ஏதோ பாறாங்கல்லுலே உக்கார வெச்சு அந்தம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்களே சார்..////////

    ரவிவர்மா அவர்களின் படம் அது. கால்மேல் காலைப் போட்டுக்கொண்டு, வீணையுடன் கம்பீரத்தோற்றம் வேண்டுமென்றால், தாமரையில் அமர்ந்து அதைச் செய்ய முடியாது மைனர்!
    .>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    தஞ்சாவூரார் வந்து சரஸ்வதி பத்தி பாரதி என்ன சொன்னாருன்னு சொல்வதைக் கேட்க ஆவலாக உள்ளேன்..
    (ஏன்னா எங்கக்கா பேரு பாரதி..ஹி..ஹி..)/////

    அம்மா பெயர் சரஸ்வதி. அக்கா பெயர் பாரதி - அதனால் உங்களுக்கு ஞானம் என்று சூட்டியுள்ளார்கள்.
    கச்சிதமாக உள்ளது மைனர்.

    ReplyDelete
  17. /////Thanjavooraan said...
    மகாகவி பாரதியார் புதுச்சேரியில் இருந்த சமயம் வி.எஸ்.குஞ்சிதபாதம் என்பவர் அவருடைய நெருங்கிய நண்பாராயிருந்தார். இந்த குஞ்சிதபாதத்தின் தந்தையார் வி.எஸ்.சுவாமிநாத தீக்ஷிதர் திருநெல்வேலியில் பாரதி அந்த நாட்களில் படித்த இந்து காலேஜில் ஆசிரியர். அவர் பாரதியிடம் இந்து காலேஜ் நிதிப் பற்றாக்குறை காரணமாக மூடிவிடும் நிலைக்கு வந்துவிட்டது, பாரதி மக்களுக்கு வேண்டுகோளாக நிதி வேண்டி ஒரு பாடல் இயற்றிக் கொடுத்தால் அதனை ஆசிரியர்களும், மாணவர்களும் ஊர் ஊராகச் சென்று பாடி நிதி வசூல் செய்து அந்தக் கல்லூரியைத் திரும்ப நடத்த முடியும் என்றார். பாரதியும் உடனே ஒரு பாடலை இயற்றி அன்றே கொண்டுபோய் தீக்ஷிதரிடம் கொடுத்து தனது 'தாய் மன்றத்துக்காகத் தான் செய்யும் கைங்கரியம்' என்று சொல்லி அந்தப் பாடலையும் பாடிக் காட்டினார். இந்தப் பாட்டின் கடைசி பகுதி இந்த நோக்கைத்தைப் பறைசாற்றும் விதமாக "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்" என்று முடிந்திருப்பதைப் பார்க்கலாம். சரஸ்வதி பூஜையன்று இதனை நினைவு படுத்தி அந்தப் பாடலை பிரசுரம் செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா!//////

    மேலதிகத்தகவல்களுக்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  18. /////Thanjavooraan said...
    என்னுடைய முந்தைய பின்னூட்டத்துக்கு ஆதாரம்: "நண்பர்கள் பார்வையில் பாரதி" எனும் நூல்.////

    ஆதாரம் எல்லாம் எதற்கு? நீங்கள் சொன்னால் போதும்!

    ReplyDelete
  19. //////kmr.krishnan said...
    //"வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
    வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
    வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
    வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
    மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
    வீர மன்னர்பின் வேதியர் யாரும்
    தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
    தரணி மீதறி வாகிய தெய்வம்."//
    மஹாகவி வேதம் வேதியரைக் காட்டிலும், தொழில் தொழில் முனைவோர், தொழிலாளர்களுக்கே முதல் இடம் அளித்துச் சிறப்பித்தவர்.இந்த வரிகளில் முதன்மையைக் கொல்லர்,சிற்பிகள்,தச்சர் என்று அடிப்படைத் தொழிலாளர்களுக்கும், அதன் பின்னர்,பிஸினஸ்மேன்(வணிகர்), அதன் பின்னர் ஆள்பவர்கள்(க்ஷத்திரியர் என்னும் ம‌ன்னர்) இறுதியாக வேதியருக்கும் இடமளித்தது ஒரு புரட்சியாகும். வேதமும், உபநிஷதமும்,காவியங்க‌ளும், பகவத் கீதையும்,சமஸ்கிருத மொழியிலேயே நன்கு கற்ற அந்தணரான மஹாகவியை, அவர் புரட்சிக் கருத்துக்களுக்காக ஜாதிப் பிரஷ்டம் செய்து பார்த்தது அவர் பிறந்த சமூகம்."குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
    என்று முழங்கியவர்களில் முதல் வரிசையில் மஹாகவி நின்றார்.அவரை நினைவு படுத்தியது அருமை. தஞ்சாவூர் பெரியவர் கோபால்ஜி வருவார் பாருங்கள் மேல் அதிகத் தகவல் களோடு!நன்றி!////

    உங்கள் வாக்கு மேன்மையானது. கோபால்ஜி வந்து விளக்கங்களையும், மேலதிகத்தகவல்களையும் தந்து மகிழ்வுற வைத்துவிட்டார்!

    ReplyDelete
  20. //////kannan said...
    வணக்கம் ஐயா!
    கல்வி தாயிக்கு கண்ணீர் கடிதம்!
    தந்தையின்! கண்ணீர் ததும்பும் கடின உழைப்பில்
    படித்து பட்டம் வாங்க மனம் வராமல்
    சுய புத்திகொண்டு! கல்வி அறிவை பெருக்கி
    இவ்வுலகை! வெற்றி வாகை சூட கிளம்பி
    அறியான்மை! என்னும் படும் பாதாளத்தில் விழுந்து
    இளமையை! மாயை உலகில் தொலைத்து
    பழி ஏற்று, மதி இழந்து,விழி பிதுங்கி, இனி என் செய்வது என்று அறியாமல்
    பத்து இருபது வருடகாலமாக வேதனை அன்றி! " ஒரு சுகமும் அறியாது!"
    பரிதவிக்கும் ஒரு பாமரனுக்கு கருணை காட்டு கல்வி தாயே!
    " நன்கு கற்றறிந்த அறிஞர்கள் வாய்மெட்சும் அளவிற்கு
    பெரும் சாதனை செய்ய! "/////

    அதெல்லாம் (சாதனை) செய்வீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. //////Uma said...
    பாரதியின் பாடல் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் நான்தான் ஸ்க்ரோல் டவுன் செய்து விட்டேன். ஒரு காலத்தில் அவருடைய பாடல்கள் எல்லாம் மனப்பாடம் செய்தது போய் இப்போது எல்லாம் மறந்து விட்டது.
    சரஸ்வதி பூஜை காலையிலேயே வடை, பாயசத்துடன் முடிந்து விட்டது.////

    அடடா பாயசமா? என்ன பாயாசம்? எங்கள் பகுதியில் பாதாம்/பழப் பாயாசம் மிகவும் பிரபலம். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகள் அற்புதமாகச் செய்து பறிமாறுவார்கள்

    ReplyDelete
  22. தஞ்சாவூராரின் வரிகளில் பதிந்து கிடக்கும் விஷயங்கள் வாழ்வில் பாரதி நமக்கு இவர் வாயிலாக விட்டுச் சென்றிருக்கும் பாடம்..
    எப்போதும் சரஸ்வதி பூஜைக்குப் பின் சிறிது நேரம் ஏதாவது பாடங்களைப் படிக்கச் சொல்லுவார்கள்.. இன்றைக்குரிய அந்தப் பாடம் இதுதான்..

    ReplyDelete
  23. //////Thanjavooraan said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கும், ஜப்பான் மைனர்வாள் மற்றும் கே.எம்.ஆர்.கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. இன்று சரஸ்வதி தேவி பற்றியும் பாரதி பற்றியும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள். சரஸ்வதிக்கும் பாரதி என்ற பெயர் உண்டு. "வாக்தேவி" என்றொரு பெயரும் உண்டு. வாக்கை தெய்வமாக சொல்லியிருக்கிறார்கள். தேவியை "பாஷாரூபிண்யை" அதாவது மொழிகளின் வடிவமாக இருப்பவள் என்றும் "அக்ஷரரூபிண்யை" எழுத்து வடிவமானவள் என்றும் குறிப்பிடப்படுகிறாள். உள்ளத்து ஒளியைத் தூண்டுபவள் கலைமகள், அறிவு எனும் செல்வத்தைத் தருபவள், மதியில் இருள் சூழாமல் காப்பவள் என்றெல்லாம் சரஸ்வதி போற்றப்படுபவள். இதையெல்லாம் மகாகவி பாரதி தன்னுடைய கட்டுரைகளில் எழுதியிருக்கிறான். அவன் மேலும் சொல்வதைச் சற்று பார்க்கலாம். "வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தில்" வீற்றிருக்கும் கலைமகளைப் பூஜிக்கும் முறை என்ன தெரியுமா? நாம் 'எப்போதும், எவ்விடத்திலும் உண்மை பேசுதல்; பிறர் பேசும் உண்மைகளை விருப்பத்தோடு கேட்டல் ஆகியவைகளாம். இது தவிர நாம் தவிர்க்க வேண்டியவை சிலவும் உண்டு. அவை நிந்தை, பழி, சாபம், பயம், அசுசி (பிறரிடம் வெறுப்பு கொள்ளுதல்) இவைகள் நம் உள்ளத்தை மாசுபடுத்தும். 'வாக்தேவி' சரஸ்வதி நமக்குப் பரிபூரண தீரமும், வலிமையும், உண்மையும், திருத்தமும், தெளிவும் பொருந்திய வாக்கை அருளட்டும்' அதுவே தேவவாக்கு. மனித ஜாதிக்குத் தேவ வாக்குப் பிறந்திடுக. இதுதான் பாரதி சரஸ்வதி பூஜைக்கு நமக்கு அளிக்கும் தேவவாக்கு.////

    அன்னையின் தேவவாக்கை அற்புதமாக எடுத்துரைத்தமைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  24. அன்பர் நந்தா ஒரு வழிப்பாதையை காண்பித்திருக்கிறார்..அவர் கைவிளக்கைப் பிடித்தவண்ணம் முன்னே சென்று கொண்டிருக்கிறார்..
    பின்பற்றி பின் செல்வோருக்கு இந்த பக்தி வழியில் வெளிச்சம் கிடைத்தால் நல்லதுதானே?

    ReplyDelete
  25. /////iyer said...
    எல்லாமும் வியாபாரமாகிவிட்ட சூழலில்..
    இப்படி நாம் சொல்லிக் கொள்வதினைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும்?
    ஏதாவது செய்ய நினைத்தால் வாழத் தெரியாதவராகவோ ஏமாந்த மனிதராகவோ இருக்க முடியும் . . .
    தினமும் இறைவனுக்கு நன்றி சொல்லும்
    நமக்கு வேண்டாமே இந்த சரஸ்வதி ஆயுத பூஜை./////

    இது புண்ணியபூமி - எதையும்
    மறுத்தல் நல்லதல்ல சாமி!

    ReplyDelete
  26. //////G.Nandagopal said...
    இன்றைய நவீன வியாபார உலகத்தின் டாப் 10 தொழிலதிபர்களில்
    10 இல் 7 பேர் பள்ளிப்படிப்பை கூட முடித்திருக்கவில்லை என்பதை
    ஒரு ஆய்வின் மூலம் அறியும்போது ஸ்ரீ சரஸ்வதி தேவியானவள்
    சப்பரமிட்டு அமர்ந்திருப்பது அவர்களின் ஞானத்தில் தானே தவிர
    ஒருவர் கல்லுரி படிப்பை முடித்து பெறும் பட்டத்தில் அல்ல என்பது
    தெள்ளத்தெளிவாக புலனாகிறது. ஆகவேதான் திரு ராஜாஜி அவர்கள்
    இப்படி குறிப்பிட்டார்கள்:
    " When intelligence matures and lodges securely in the mind, it becomes wisdom.
    When wisdom is integrated with life and issues out in action, it becomes bhakthi.
    Knowledge, when it becomes fully mature is bhakthi.
    If it doesnot get transformed into bhakthi, such knowledge is useless tinsel.
    To believe that gnyana and bhakthi, knowledge and devotion are
    different from each other, is ignorance. "
    ஆகவேதான் அப்படிப்பட்ட ஞானத்தை நம் எல்லோருக்கும் ஸ்ரீ சரஸ்வதி அன்னை வழங்கிட
    இந்த திருநாளில் பிரார்த்திப்போமாக.
    பி.கு. திரு மைனர்வால் "ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான் " என சொல்வது டெலிபதி மூலம் எனக்கு கேட்டாலும் நாம் எந்த பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தாலும் போய்ச் சேருமிடம் பக்தி என்கிற எல்லையற்ற பேரானந்த உலகமாயிற்றே. என்னை என்ன செய்யச் சொல்கிறீர் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.
    நந்தகோபால்/////

    வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் அன்னை ஞானத்தை வழங்குவார். உங்கள் சார்பாக நான் பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  27. //////sundari said...
    வர வர யாரும் ஞாயிறு மலர் எழுதி வாத்தியாருக்கு அனுப்பி வைக்க மாட்டிருங்க வத்தியார் ஐயா நாளைக்கு வகுப்பு இருக்குதா(போடுவிங்களா. பதிவு)உமா நீ வடை பாயசம்மா சாப்பிட்டே நான் சாப்பிடவில்லை தோசை முருங்கைகீரை சாம்பார் சாதம் சாப்பிட்டேன் Minorwall ur comment is super u r joker man i donot hurt u sorry/////

    நாளைக்கு விடுமுறை சகோதரி!

    ReplyDelete
  28. /////vprasanakumar said...
    saraswathi pooja started with a very good note of poetic song from our great subramaniya bharathiyar, thankyou for both of them./////

    நல்லது. நன்றி பிரசன்னா!

    ReplyDelete
  29. சகோதரி சுந்தரியின் ஆங்கிலம் எனக்குப் புரியும்..என்ன சொல்ல வருகிறீர் என்றும் புரிகிறது..தவறாக ஏதும் நினைக்கவில்லை..

    நீங்கள் முடிந்தவரை எழுத்துப் பிழையின்றி தமிழிலேயே சொல்ல நினைத்ததை தெளிவாக சொல்வது நல்லது..

    ReplyDelete
  30. ////minorwall said...
    தஞ்சாவூராரின் வரிகளில் பதிந்து கிடக்கும் விஷயங்கள் வாழ்வில் பாரதி நமக்கு இவர் வாயிலாக விட்டுச் சென்றிருக்கும் பாடம்..
    எப்போதும் சரஸ்வதி பூஜைக்குப் பின் சிறிது நேரம் ஏதாவது பாடங்களைப் படிக்கச் சொல்லுவார்கள்.. இன்றைக்குரிய அந்தப் பாடம் இதுதான்..//////

    நெஞ்சை டச் பண்ணீட்டிங்க மைனர்! இதுதான் ...இதுதான் மைனர் டச்! பெரியவர்களை மதிக்கும் டச். நம் கவுண்டமணி அண்ணன் மொழியில் சொல்லப்போனால் டச்சிங் டச்! டச்சிங்கோ டச்!

    ReplyDelete
  31. /////Blogger minorwall said...
    அன்பர் நந்தா ஒரு வழிப்பாதையை காண்பித்திருக்கிறார்..அவர் கைவிளக்கைப் பிடித்தவண்ணம் முன்னே சென்று கொண்டிருக்கிறார்..
    பின்பற்றி பின் செல்வோருக்கு இந்த பக்தி வழியில் வெளிச்சம் கிடைத்தால் நல்லதுதானே?////

    பக்தி என்றாலே ஒளியுடையது என்று எடுத்துக்கொள்ளலாம் மைனர்!

    ReplyDelete
  32. ///////////////
    SP.VR. SUBBAIYA said...

    அம்மா பெயர் சரஸ்வதி. அக்கா பெயர் பாரதி - அதனால் உங்களுக்கு ஞானம் என்று சூட்டியுள்ளார்கள்.
    கச்சிதமாக உள்ளது மைனர்.\\\\\\

    என் பேரு நெப்போலியன்தான்..எங்கப்பா பேருதான் ஞானம்..
    வாத்தியார் தயவிலே இன்னிக்கு நாங்க குடும்பத்தோட வகுப்பறையிலே சரஸ்வதி பூஜையைக் கொண்டாடிட்டோம்..

    இந்த படம் ரவிவர்மாவின் ஓவியமென்று இன்றுதான் தெரியும்..நன்றி..

    ReplyDelete
  33. தஞ்சாவூரார் உயர்திரு கோபால்ஜி அவர்களே!தங்கள் மேல் அதிகத் தகவல் அருமை. இதுபோலவே பாரதியின் பல பாடல்களும் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பாடப்பட்டவையே என்பதை நான் அறிவேன்.இங்கு வரும் இளைஞர்களுக்குப் புதிய தகவலாக இருக்கக்கூடும்.ஒவ்வொன்றாக வாரமலருக்கு எழுதுங்க‌ளேன்.

    வாத்தியார் சார்! கோபால்ஜி எழுதி அனுப்பினால் வாரமலரில் வெளியிட வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  34. minorwall said...
    சகோதரி சுந்தரியின் ஆங்கிலம் எனக்குப் புரியும்..என்ன சொல்ல வருகிறீர் என்றும் புரிகிறது..தவறாக ஏதும் நினைக்கவில்லை..
    நீங்கள் முடிந்தவரை எழுத்துப் பிழையின்றி தமிழிலேயே சொல்ல நினைத்ததை தெளிவாக சொல்வது நல்லது..////

    கரெக்ட்! தமிழிலேயே எழுதுங்கள் சகோதரி!

    ReplyDelete
  35. //////minorwall said...
    ///////////////
    SP.VR. SUBBAIYA said...
    அம்மா பெயர் சரஸ்வதி. அக்கா பெயர் பாரதி - அதனால் உங்களுக்கு ஞானம் என்று சூட்டியுள்ளார்கள்.
    கச்சிதமாக உள்ளது மைனர்.\\\\\\
    என் பேரு நெப்போலியன்தான்..எங்கப்பா பேருதான் ஞானம்..
    வாத்தியார் தயவிலே இன்னிக்கு நாங்க குடும்பத்தோட வகுப்பறையிலே சரஸ்வதி பூஜையைக் கொண்டாடிட்டோம்..
    இந்த படம் ரவிவர்மாவின் ஓவியமென்று இன்றுதான் தெரியும்..நன்றி..//////

    நல்லது. நன்றி திருவாளர் நெப்போலியன் ஞானப்பிரகாசம்!

    ReplyDelete
  36. /////kmr.krishnan said...
    தஞ்சாவூரார் உயர்திரு கோபால்ஜி அவர்களே!தங்கள் மேல் அதிகத் தகவல் அருமை. இதுபோலவே பாரதியின் பல பாடல்களும் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் பாடப்பட்டவையே என்பதை நான் அறிவேன்.இங்கு வரும் இளைஞர்களுக்குப் புதிய தகவலாக இருக்கக்கூடும்.ஒவ்வொன்றாக வாரமலருக்கு எழுதுங்க‌ளேன்.
    வாத்தியார் சார்! கோபால்ஜி எழுதி அனுப்பினால் வாரமலரில் வெளியிட வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்./////

    ஆகா, அவர் எழுதினால் வெளியிடாமல் இருப்போமா? வகுப்பறையில் அவருக்குச் சிறப்பு இடம் உண்டு!

    ReplyDelete
  37. சுந்தரி, வெறும் வடை, பாயசம்னு சொன்னதுக்கே பீல் பண்ணா எப்படி? மீதி ஐட்டம்லாம் நான் சொல்லவே இல்லியே?

    ReplyDelete
  38. அடடா பாயசமா? என்ன பாயாசம்?//

    சேமியா

    ReplyDelete
  39. Iyyer said :
    வாழத் தெரியாதவராகவோ ஏமாந்த மனிதராகவோ இருக்க முடியும் . . .
    G .Nandagopal says :
    தேடிச் சோறு நிதந்தின்று -பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
    வாடி துன்பமிக உழன்று -பிறர்
    வாட பல செயல்கள் செய்து -நரை
    கூடி கிழப்பருவமெய்தி
    கொடுங்கூற்றிட்கிரையெனப் பின் மாயும்
    பல வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேனென்று நினைத்தாயோ.
    -மகாகவி பாரதியார்
    ஐயர்வாள்,
    மேலே சொன்ன கவிதை ..ஹுஹும் கவிதை அல்ல
    அது ஒரு சிங்கத்தின் உறுமல்.
    இப்படி உறுமிய அந்த சிங்கத்திற்கு கூட
    வாழத்தெரியாத ஏமாந்த மனிதர் என்ற பெயர் இருந்தது.
    பெயர்களில் என்ன இருக்கிறது ஐயர்வாள்
    அது வெறும் அழைப்பதற்கு என்று உண்டான அடையாளச்சொல்
    மட்டுமே. ஆகையால் பெயர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம்
    தர வேண்டிய அவசியம் இல்லை.
    மனம் தான் முக்கியம். அது மட்டும் மகாகவி உறுமியபடி
    இருக்க வேண்டும். அது போதும். மற்ற விசயங்களைப்பற்றி
    கவலைப்படத்தேவையில்லை.
    நந்தகோபால்

    ReplyDelete
  40. /////Uma said...
    அடடா பாயசமா? என்ன பாயாசம்?//
    சேமியா/////

    நல்லது. பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  41. /////G.Nandagopal said...
    Iyyer said :
    வாழத் தெரியாதவராகவோ ஏமாந்த மனிதராகவோ இருக்க முடியும் . . .
    G .Nandagopal says :
    தேடிச் சோறு நிதந்தின்று -பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
    வாடி துன்பமிக உழன்று -பிறர்
    வாட பல செயல்கள் செய்து -நரை
    கூடி கிழப்பருவமெய்தி
    கொடுங்கூற்றிட்கிரையெனப் பின் மாயும்
    பல வேடிக்கை மனிதரைப்போல் நான்
    வீழ்வேனென்று நினைத்தாயோ.
    -மகாகவி பாரதியார்
    ஐயர்வாள்,
    மேலே சொன்ன கவிதை ..ஹுஹும் கவிதை அல்ல அது ஒரு சிங்கத்தின் உறுமல்.
    இப்படி உறுமிய அந்த சிங்கத்திற்கு கூட வாழத்தெரியாத ஏமாந்த மனிதர் என்ற பெயர் இருந்தது.
    பெயர்களில் என்ன இருக்கிறது ஐயர்வாள் அது வெறும் அழைப்பதற்கு என்று உண்டான அடையாளச்சொல்
    மட்டுமே. ஆகையால் பெயர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை.
    மனம் தான் முக்கியம். அது மட்டும் மகாகவி உறுமியபடி இருக்க வேண்டும். அது போதும். மற்ற விசயங்களைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை.
    நந்தகோபால்/////////

    கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com