மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.10.10

மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை!

இன்றைய வாரமலரை, மனதால் என்றும் இளைஞராக இருக்கும் ஒரு பெரியவரின் உண்மைக் கதை அலங்கரிக்கின்றது. யார் அந்தப் பெரியவர்? பதிவை முழுவதும் படித்தால் தெரியும். படித்தே அறிந்து  கொள்ளுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Over to his posting!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை!

சந்நியாசி சந்நியாசி என்று சொன்ன‌வன் தடித‌டியா இரண்டு பிள்ளையைப் பெற்றானாம்'' என்பார்கள் ருக்குமணிப்  பாட்டி. அவர்கள் என் அம்மம்மா. இதுபோல பல சொல்லடைகள் அவர்களிடம் எப்போதும் 'ஸ்டாக்'கில் இருக்கும்.

அவ்வப்போது சமயம் பார்த்து எடுத்து வீசுவார்கள்.நாம் தான் 'கேட்ச்'  பிடித்துக் கொள்ள‌ வேண்டும். அம்மம்மா சொன்ன சொல்லடை மற்ற எந்த ச‌ந்நியாசிக்குப்  பொருந்திய‌தோ தெரியவில்லை, எனக்குப்  பொருத்தமாகப் போய்விட்டது. இரண்டுக்கு மூன்றாகக் குழந்தைச் செல்வம் எனக்கு வாய்த்துவிட்டது.

"அதுசரி! நீ எப்போது சந்நியாசி ஆனாய்?" என்று வாத்தியாரும் ஜப்பான் மைனரும் கொக்கி போடுவது எனக்கு  அசரீரி போலக் கேட்கிறது. சொல்கிறேன், சொல்கிறேன்! அதற்குத்தானே இத்தனை அடித்தளம் அமைக்கிறேன்.

முன்பே ஒரு முறை கூறியுள்ளது போல என் தந்தையார் சுதந்திரப்போராட்ட‌ வீரர். 1947ல் சுதந்திரம்  கிடைத்தவுடன் மஹாத்மா காந்திஜி காங்கிரஸைக் கலைக்கச் சொன்னார்கள். அவர் அறிவுறுத்தியபடி காங்கிரஸ் கலைக்கப்படா விட்டாலும், பல உண்மை தேசத்தொண்டர்கள் அரசிய‌லை விட்டு விலகிக் கொண்டார்கள்.அதில் என்  அப்பாவும் ஒருவர். சுமார் 40 வருட காலம் சுறுசுறு என்று பொதுப்பணி செய்துவிட்டு அதன் பின்னர் சோம்பிக் கிடக்க அப்பாவால் முடியவில்லை. ந‌டு வயதினையும் கடந்த பின்னர் இயல்பான ஆன்மீக நாட்டம் அவரை  ஆட்கொண்டது.ஆன்மீகத்துடன் மக்கட்தொண்டும் செய்துவந்த டறீ இராமகிருஷ்ண இயக்கம் அவரை உள்வாங்கிக் கொண்டு விட்டது.

நான் 1949 ஆகஸ்டு 22ந் தேதி சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் பிறந்தேன். அந்த‌ வீட்டு எண் 100. சுதந்திரப்போர் முடிந்து 2 ஆண்டுகள் முடிந்தபின்னரே பிறந்தேன். ஒருநாள் கூட நான் அடிமை இந்தியாவில்  வாழவில்லை என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. நான் பிறக்கும் சமயம் அப்பா சேலம் டறீ
இராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார். அந்த ஆகஸ்டு மாதம் 21ந் தேதி மாலை அப்பா ஆஸ்ரமத்திலிருந்து சீக்கிரம் கிளம்பியிருக்கிறார்.காரணம் கேட்ட சந்நியாசிகளிடம்  "என்  மனைவிக்குப் பிரசவ நேரம். இனி எந்த நேரமும் குழந்தை பிறக்கலாம். அதுவும் இல்லாமல் கர்ப்பிணிக்கு வைசூரி  வேறு போட்டிவிட்டது.அவளும் குழந்தையும் பிழைப்பார்களா என்று கவலையாக உள்ளது" என்று சொல்லி  இருக்கிறார்.

"உனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்று எதிர் பார்க்கிறாய்?"என்று ‍சந்நியாசி கேட்டுள்ளார்.

அதற்கு அப்பா, "எனக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. அப்புறம் ஆண், பின்னர்  பெண், மீண்டும் ஆண்;எனவே இப்போது பெண் பிறக்கலாம்"

"இல்லை!  நாளை காலை உனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும்.நான் சொல்வது போல் கேட்டால் குழந்தையும்  தாயும் காப்பாற்றப்படுவார்கள்" என்கிறார் சந்நியாசி.

"என்ன செய்ய வேண்டும்?" என்று அப்பா கேட்டுள்ளார்.

"முதலில் அந்தக் குழந்தைக்கு டறீ குருதேவரின் திருப் பெயரை வைக்க வேண்டும்"

"சரி அப்படியே செய்கிறேன்"

"அந்தப் பையனை வயது வந்தவுடன் ஆஸ்ரமத்தில் சேர அனுமதிக்க வேண்டும்"

"அவன் ஆசிரமத்தில் சேர்வதில் எனக்கு வருத்தம் ஏற்படாது. நான் தடை செய்யமாட்டேன். ஆனால் அவன் எந்த  பிராரப்த கர்மாவுடன் வந்து பிறக்கிறானோ யாருக்குத் தெரியும்? அப்படித்தான் டறீ குருதேவர் விரும்புகிறார்  என்றால் அப்படியே நடக்கட்டும்" என்று சொல்லிவிட்டு அவச‌ரமாக வீட்டுக்கு வந்துவிட்டார்.

மறு நாள் விடியற்காலை 5.05க்கு நான் ஆண் மகவாகப் பிறந்துவிட்டேன். என் உடலில் வைசூரி முத்துக்கள்  இருந்ததாம் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு முடி காணிக்கையும்,பிள்ளைக்கு முத்து என்று பெயரும் சூட்டுவதாக
அம்மா வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்பா ஆஸ்ரமத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி ராமகிருஷ்ண‌ன் என்ற பெயரும், அம்மா வேண்டியபடி முத்து  என்ற பெயரும் சேர்ந்து நான் "முத்துராமகிருஷ்ணன்" என்று அறியப்படலானேன்.

"நீ பிறக்கும் முன்னர் நடந்த விஷயமெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?" என்று நண்பர் ஹாலாஸ்யம்  முணுமுணுக்கிறார்.

அது எப்படி என்றால் அப்பா வீட்டுக்கு வரும் எல்லா விருந்தினர்களிடமும் இந்த செய்தியை சலிக்காமல், என்னையும் வைத்துக்கொண்டு சொல்லிக்கொண்டே இருப்பார்.அதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே நான்
நேர்ந்து விட்டவன் என்ற உணர்வு மனதில் பதிந்துவிட்டது.

வீட்டில் நல்ல ஆன்மீகச் சூழல். அம்மா நன்றாகப்  பாடக்கூடியவர்க‌ள். எப்போதும் நல்ல செய்திகளும், நல்ல  பாட்டும், நல்ல நடவடிக்கைகளுமே நிரம்பியிருக்கும். பல சேவைகளில் என் பெற்றோர் ஈடுபட்டு எங்களையும்
ஈடுபட வைப்பர்.

இயற்கையான உடல் வளர்ச்சியும் ஹார்மோன் சுரப்புக்களும் என் மனதில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வந்தன. வகுப்புத் தோழர்களில் சிலர் வேறு வகையான சூழலில் வள‌ரக்கூடியவர்கள். அவர்கள் சொல்லும் ரகசியங்கள் என்
மனதில் பெரிய குழப்பத்தையும் சூறாவளியையும் ஏற்படுத்திவிட்டது. "வாலிப வயோதிக அன்பர்களே.." போன்ற  விள‌ம்பரங்கள் குழ்ப்பத்தை அதிகப்படுத்தியது.

என் வீட்டுச் சூழலுக்கும் வெளியில் இருக்கும் நடைமுறைக்கும் உள்ள முரண்பாடு என்னை மன அழுத்தத்தில்  தள்ளி விட்டது.அப்போது நான் இளங்கலை 2ம் ஆண்டு படித்துவந்தேன். உலகத்தில் வாழ்வது மிக ஆபத்தானது  என்ற எண்ணம் தோன்றிவிட்டது. உடனே ஆஸ்ரமத்தில் சேர்வது என்று அவசர முடிவு எடுத்தேன். சேலம்  ஆசிரமத்தில் சேர்ந்தால் வீட்டுக்கு மீண்டும் அழைத்துப் போய்விடுவார்கள் என்று முடிவு செய்தேன். எனவே
ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ள நாட்டறம்பள்ளி மடத்தில் சேர்வது என்று முடிவு செய்து யாரிடமும்  சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் காலை வெஸ்ட்டு கோஸ்டு எக்ஸ்பிரஸில் ஏறி நாட்டறம்பள்ளி மடம் போய்ச்
சேர்ந்தேன்.

டறீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சந்நியாசிகள் மிகவும் பொறுப்பானவர்கள். நான் வந்த நோக்கம் அறிந்த அம்மடத்தின் தலைவர் எனக்குத் தங்குவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு, சில டூட்டியெல்லாம்  கொடுத்துவிட்டு, நான் அறியாமலேயே என் அப்பாவுடன் தொலைபேசியில்  பேசிவிட்டார். ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி விடுவதாகவும், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறிவிட்டார் என்பதைப் பின்னர் அறிந்தேன்.

நாட்டறம்பள்ளி மடத்தில் எல்லா வேளைகளிலும் பாகற்காய் உப்பு கூடப்போடாமல், நறுக்காமல் மீன் வடிவில் முழுதாகப் பறிமாறப்பட்டது. அங்குள்ள சந்நியாசிகள் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது போல பாகற்காயை  ருசித்துச் சுவைத்தார்கள்.என் முகத்தில் அசடு வழிவதைக்கண்டு தங்க‌ளுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டார்கள்.  சாப்பிடும் போதெல்லாம் அம்மாவின் கைமணம் கமழும் சாப்பாடு நினைவுக்கு வந்தது.

500 மரக்கன்றுகளையும், 500 பனங்கொட்டைகளையும் கொடுத்து, துணைக்கு ஒரு வேலை ஆளை மட்டும்  அனுப்பி எல்லாவற்றையும்  இட்டேரி க‌ரையில் ஒரே நாளில் ந‌ட‌வேண்டும் என்று வேலை கொடுத்தார்க‌ள்.  எல்லாவ‌றையும் பொறுமையுட‌ன் ச‌கித்துக்கொண்டேன். நான்  உற்சாக‌த்துட‌ன் இருப்ப‌தைக் கண்ட‌ ம‌ட‌த்துத்  த‌லைவ‌ர் என்னைத் த‌னிமையில் ச‌ந்தித்து அறிவுரை கூறினார்:

"இதோபார்! இந்த‌ இய‌க்க‌த்திற்கு ந‌ல்ல‌ ப‌டித்த‌ இளைஞ‌ர்க‌ளே தேவை. நீயோ ப‌ட்ட‌ப் ப‌டிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வ‌ந்துவிட்டா‌ய். உன்னால் இய‌க்க‌த்தில் ச‌ரியாகப் ப‌ணி செய்ய‌ முடியாது. ப‌ட்ட‌ப்ப‌டிப்பை பாதியில் 
விட்ட‌து போல்  இய‌க்க‌த்தையும் பாதியில் விட்டு விட‌ மாட்டாய் என்ப‌த‌ற்கு என்ன‌ உத்திர‌வாத‌ம்?
என‌வே முத‌லில்  உன் கையில் இருக்கும் த‌லையாய‌ ப‌ணியான ப‌டிப்பை முடித்துவிட்டு, பெற்றோரின் அனும‌தி பெற்றுக்கொண்டு  ம‌ட‌த்தில் சேர‌லாம். உன்பெற்றோர்க‌ள் ம‌ற்ற‌வ‌ர் க‌ளைப்போல‌அல்ல‌. இல‌ட்சிய‌வாதிக‌ள்.நீ விருப்ப‌ப்ப‌ட்டா‌ல்  க‌ட்டாய‌ம் அவ‌ர்க‌ளே முன்வ‌ந்து உன்னை ம‌ட‌த்தில்  ஒப்ப‌டைப்பார்க‌ள்.இப்போது போய் ப‌டிப்பை முடி. ஊருக்குத் திரும்பிப்போ" என்றார்

நான் எவ்வ‌ள‌வோ பேசிப்பார்த்தும் என்னை திருப்பி அனுப்புவ‌திலேயே அவர் குறியாக‌ இருந்தார். "தேர்வு எழுத‌ப் ப‌ய‌ந்து ஓடி  வ‌ந்துவிட்ட‌டாயா?" என்று அவ‌ர் கூறிய‌து என்  'ஈகோ'வைத் தொட்டுவிட்ட‌து. "முத‌ல்  வ‌குப்பில் தேறிய‌ பின்ன‌ர் திரும்பி வ‌ருகிறேன்" என்று சொல்லிவிட்டு ரோஷ‌த்துட‌ன் வீடு திரும்பினேன்.

அத‌ன் பிறகு என்னென்ன‌மோ வாழ்க்கையில் ந‌ட‌ந்து விட்டது; ந‌ல்ல‌ வேளையாக‌ நான் ம‌ட‌த்தில் சேர்ந்து அவ‌ர்க‌ள்  பேரைக் கெடுக்காம‌ல் இருந்தேனே என்று இப்போது ஆறுத‌ல் அடைகிறேன். 

ம‌ரியாதையாக‌ முறை‌ப் பெண்ணைக் க‌ட்டிக்கொண்டு மூன்று ம‌ணியான‌ பெண்க‌ளைப் பெற்று க‌ன்னிகாதான‌ம் செய்துவிட்டு நிம்ம‌தியாக‌ இருக்கிறேன்.

இந்த‌ ம‌கிழ்ச்சி மாறாம‌ல் ஆண்ட‌வ‌ன் என்னை அழைத்துக் கொள்வானா? அவ‌னுக்கே அது வெளிச்ச‌ம்.!

ருக்கும‌ணீப் பாட்டி சொன்ன‌து ப‌லித்துவிட்ட‌து! "சந்நியாசி சந்நியாசி என்று சொன்ன‌வன் தடித‌டியா இரண்டு பிள்ளையைப் பெற்றானாம்''

இர‌ண்ட‌ல்ல‌ பாட்டி!  மூன்று பேத்திக‌ளை உங்க‌ளுக்குக் கொடுத்துவிட்டேன்!

சொர்க்க‌த்தில் இருந்து அவ‌ர்க‌ளை ஆசீர்வ‌திப்பீர்க‌ள்தானே!?
- ஆக்கம்: முத்துராமகிருஷ்ணன், தஞ்சாவூர்
=====================================================


படத்தில் காட்சியளிப்பது கட்டுரையாளரின் 
அன்புத்தந்தை காந்தி ஆசிரமம் திரு.கிருஷ்ணன் அவர்களும்,  அன்புத்தாயார் திருமதி. ஸ்ரீவரலக்ஷ்மி என்னும் மங்களம் அம்மையார் அவர்களும்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ---------------------------------------------------------------------------
 இன்று காந்தி ஜெயந்தி. தேசப் பிதாவின் பிறந்த நாள். 
இந்த தினத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், காந்திஜியின் வழியைப் பின்பற்றிய பெருந்தகையையுமான, திரு. கிருஷ்ணர் அவர்களையும், அவருடைய குடும்பத்தாரையும் நினைவுகூர்வது எத்தனை பொருத்தமாக உள்ளது பாருங்கள். எல்லாம் இறையருள்.
வாழ்க காந்திஜியின் புகழ்! வளர்க அவர்தம் பெருமை!
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 இந்தப் படத்தில் காட்சியளிப்பது கட்டுரை ஆசிரியர் 
திரு. முத்துராமகிருஷ்ணன் அவர்களும், 
அவருடைய  அன்புத் துணைவியார் 
திருமதி ஜெயா அம்மையார் அவர்களும். 
படம் 1975ஆம் ஆண்டு எடுக்கப்பெற்றதாகும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக்கம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். பின்னூட்டத்தில் அவரைப் பாராட்டிவிட்டுச் செல்லுங்கள். பாராட்டுவது என்பது எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்தாகும்.(Tonic) அதைக் கொடுப்பதால்
உங்களுக்கு எந்தவிதச் செலவும் ஏற்படாது.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

37 comments:

  1. super, young age incidents not forgettable.

    ReplyDelete
  2. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் வாழ்ந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ சேவையொன்றை நடத்தினார். இலவசமாகவே மருந்துகளையும் கொடுத்து வந்தார். இலவசம் என்றால் மதிப்பு இல்லை என்பதால் ஒரு உண்டியல் வைத்து அதில் இரண்டு ரூபாய் பாடவைத்து வைத்தியமும் மருந்தும் கொடுக்கப்பட்டன. அங்கு இலவசமாக சேவை செய்த இளம் டாக்டரை கிராம மக்கள் "2 ரூபாய் டாக்டர்" என அழைக்கத் துவங்க அவர் ஓடியே போய்விட்டார். அந்த காலகட்டத்தில் மாலையில் இவரைப் பார்த்தவர்கள் சந்நியாசி என்று நினைத்து 'சுவாமி' என்றுதான் அழைத்தார்கள். நல்ல காலம்! இவர் காவி அணியாமல் இருந்து வருகிறார். இளமைக் காலத்தின் இனிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டது 'இனி நினைந்து இரக்கமாகின்று' எனும் தொடித்தலை விழுத்தண்டூன்றினார் எனும் புலவரின் புறநானூற்றுப் பாடலை நினைவு படுத்துகிறது.

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    திரு.முத்துராமகிருஷ்ணன் அவர்களின் ஆக்கம்
    "மடத்தின் பெயரைக் கெடுக்காமல் விட்ட கதை" மிக நன்றாக இருந்தது.
    ///ப‌ட்ட‌ப்ப‌டிப்பை பாதியில் விட்ட‌து போல் இய‌க்க‌த்தையும் பாதியில் விட்டு விட‌ மாட்டாய் என்ப‌த‌ற்கு என்ன‌ உத்திர‌வாத‌ம்?
    "தேர்வு எழுத‌ப் ப‌ய‌ந்து ஓடி வ‌ந்துவிட்ட‌டாயா?" என்று அவ‌ர் கூறிய‌து என் 'ஈகோ'வைத் தொட்டுவிட்ட‌து. "///
    அவரின் வாழ்க்கையின் திருப்பு முனைக்கான வரிகள்.மறக்க முடியாத வரிகள்.
    நன்றி !
    தங்களன்புள்ள மாணவன்,
    வ.தட்சணாமூர்த்தி
    2010-10-03

    ReplyDelete
  4. கிருஷ்ணன் கதை என்றால் சும்மாவா?படத்தை பார்த்தால் சினிமாவிலே சேர்ந்திருக்கலாம் போல இருக்கு. ஹிரோ மாதிரி இருக்காரு. ஆமா காந்தி யாரு, காமராஜர் யாரு?

    ReplyDelete
  5. அய்யா,

    இன்றைய வாரமலர் மிகச் சிறப்பாக இருந்தது.
    அன்பர் திரு.முத்து ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக படைத்திருந்தார்.

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  6. வணக்கம்.

    எப்போது நான் ஒவ்வொரு நாளின் வேலைகளைத் தொடங்கும் அதிகாலை வேலையில் உங்கள் கட்டுரைகள் வெளிவரும். அமைதியாக உள்வாங்கிக் கொள்வதுண்டு.

    நீங்கள் செய்து கொண்டுருக்கும் இந்த வலையுலக சேவை என்பது வேறொரு வகையில் பாராட்டலாம்.

    ஈழம் தொடர்பாக புத்தகத்திற்கு குறிப்பிட்ட விசயங்களை தேடி அலைந்து அதன் குறிசொற்களை கொடுத்த போது எவரோ எப்பொழுதோ தன்னுடைய அத்தனை வேலைகளையும் விட்டு விட்டு எழுதிய ஒவ்வொரு கட்டுரைகளும் சகாவரம் பெற்றது போல் இணையத்தில் நிரம்பி வழிகின்றது.

    ஆனால் இவற்றை எல்லாம் விட இந்தியா நாட்டில் அதிகமான சகிப்புத்தன்மையுட் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏதோ ஒரு சமயத்தில் உங்களின் தன்னலமற்ற சேவை உதவக்கூடும்.

    என்னவொன்று அந்த நேரத்தில் அவர்கள் வாழ்க்கை அனுபவம் கற்றுக் கொடுத்த பக்குவம் அவர்களை வந்து சேர்ந்து இருக்க வேண்டும்.

    அதைத்தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கீங்க.

    சுப்பையா வாத்தியார் எந்த நாள் வரைக்கும் இந்த உலகில் இருப்பாரோ? ஆனால் சுப்பையா வாத்தியாரின் இந்த வலைதளம் உலகம் அழியும் வரைக்கும் தமிழ் மொழி இருக்கும் வரைக்கும் ஒவ்வொரு உணரும் வாய்புள்ள ஒவ்வொரு ஜீவனையும் வாழ வைத்துக்கொண்டுருக்கும்.

    இந்த கட்டுரையின் மூலம் பல விசயங்களை புரிந்து கொண்டேன்.

    உங்கள் பித்ருக்களின் ஆத்மா உங்களை வழிநடத்துவது போல காசு பணத்திற்கு ஆசைப்படாத உங்களின் தன்னலமற்ற இந்த தயாள குணம் உங்கள் வாரிசுகளை வழிநடத்தும்.

    வாழ்த்த வயதில்லை.
    வணங்குகின்றேன் உங்களை.

    ஜோதி கணேசன்.

    ReplyDelete
  7. //////////////////////"அதுசரி! நீ எப்போது சந்நியாசி ஆனாய்?" என்று வாத்தியாரும் ஜப்பான் மைனரும் கொக்கி போடுவது எனக்கு அசரீரி போலக் கேட்கிறது. \\\\\\\\\\

    KMRK சாருக்கு நல்லா ஜோசியம் பாக்கத்தெரியும்னு எனக்குத் தெரியும்..
    ஆனால் டெலிபதி கூட தெரியும்னு இன்னிக்குத்தான் தெரியும்..

    ReplyDelete
  8. மிகவும் அருமையான நினைவுப் பதிவு.
    திரு. கிருஷ்ணன் சாருக்கு எனது நன்றிகள்.
    தங்களின் பெயருக்குப் பின்னால் உள்ள அந்த
    தெய்வ சங்கல்பம் தான் உங்களின் வாழ்வின்
    பல நிலைகளின் போது உங்களுக்கு தனி உத்வேகத்தையும்
    புது வழியையும் காண்பித்து இருக்கும் குறிப்பாக
    சத்தியத்தின் பாதை இது என முன்னிறுத்திக் காண்பித்து இருக்கும்
    என நான் உறுதியாக நம்புகிறேன். தொடர்ந்து எழுதவேண்டும்.
    நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றும்
    ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

    நன்றிகள் சார்.

    (பின் குறிப்பு, ஆணுக்கு ஆணே பேராசைக் கொள்ளும் அளவு கொண்ட
    உங்களது இளமை காலப் பேரழகு, ஒப்பனை கொண்ட திரைப் பட கதாநாயகர்களை விஞ்சிவிட்டது...
    கோபியர்களின் தொந்தரவுக்கு இடமளிக்காமல் முறைப் பெண்ணையே மணந்து தப்பித்து விட்டீர்கள் என நம்புகிறேன்.)

    ReplyDelete
  9. ருக்மணிப் பாட்டியின் போட்டோ இல்லையா?
    அவுகதானே கதைக்கே மெயின் பாயின்ட்..

    ReplyDelete
  10. கதை நன்றாக இருந்தது...
    வாத்தியார், மைனர்வாள், ஆலாசியம் சார் இவங்கள எல்லாம் பக்கத்துல வெச்சு கதை சொல்லுற மாதிரி இருந்துச்சி...

    மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்.

    என்ற குறள் தான் நியாபகம் வருகிறது...

    ReplyDelete
  11. " இயற்கையான உடல் வளர்ச்சியும் ஹார்மோன் சுரப்புக்களும் என் மனதில் பல குழப்பங்களை ஏற்படுத்தி வந்தன. வகுப்புத் தோழர்களில் சிலர் வேறு வகையான சூழலில் வள‌ரக்கூடியவர்கள். அவர்கள் சொல்லும் ரகசியங்கள் என்
    மனதில் பெரிய குழப்பத்தையும் சூறாவளியையும் ஏற்படுத்திவிட்டது. "வாலிப வயோதிக அன்பர்களே.." போன்ற விள‌ம்பரங்கள் குழ்ப்பத்தை அதிகப்படுத்தியது."
    யதார்த்தத்தை இதற்கு மேல் தெளிவாக சொல்லுவது என்பது கடினமே.
    ருக்குமணிப் பாட்டி அவர்களின் ஆசிர்வாதம் என்றென்றைக்கும் உங்களுக்கு பரிபூரணமாக உண்டு
    நண்பர் திரு.முத்துராமகிருஷ்ணன் அவர்களே
    வாழ்த்துக்களுடன்
    நந்தகோபால்

    ReplyDelete
  12. ''கதை நன்றாக இருந்தது...
    வாத்தியார், மைனர்வாள், ஆலாசியம் சார் இவங்கள எல்லாம் பக்கத்துல வெச்சு கதை சொல்லுற மாதிரி இருந்துச்சி..''///.
    மைனர்வாள் என்ன சொல்ல போகிறார் என்று கட்டுரையாளர் உள்பட இந்த உலகமே
    ஏன் கூர்ந்து கவனிக்கறது என்று
    எனக்கு ரொம்ப நாளா இருந்துவந்த சந்தேகம் இப்போதுதான் தீர்ந்தது
    வாழ்த்துக்களுடன்
    நந்தகோபால்

    ReplyDelete
  13. ஐயா !!!
    காலைவணக்கம் .

    அப்பம்!

    இந்த விடுமுறைக்கு ஜப்பானுக்கு வந்தா சகோதரி வீட்டில் அத்தான்
    ( minorwall said... ) கையால் அறுசுவை சாப்பாடு உண்டு அப்படிதானே :-)

    ReplyDelete
  14. உள்ளேன் ஐயா

    திரு. முத்துராமகிருஷ்ணன் அவர்களுக்கு, உண்மையிலையே தங்களுடைய வாலிப வயதினில் நல்ல வாட்டம் சாட்டம் ஆக தான் இருந்து உள்ளீர்கள்.

    யாம்! தங்களை பற்றி கருத்து கூறும் அளவிற்கு வயது தகுதி இல்லை என்பதனால் வணக்குகின்றேன்.

    ReplyDelete
  15. " கிருபானந்த வாரியார் சுவாமி"களின் சொற்பொழிவில் கூறிய உள்ள தகவல்.

    ஏன் முருகன், கணேசன், சக்தி என குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர் என்றால் மற்றவரை அழைக்கும் பொழுது கூட நீ இறைவனை நினைக்க வேண்டும் என்பதனால்.

    ReplyDelete
  16. உள்ளேன் ஐயா

    அறம், தர்மம், புண்ணியம், மற்ற ஜீவன்களுக்கு உதவும் நல்ல எண்ணத்தில் கூட தான் சார்ந்து உள்ள அல்லது தான் உருவாக்கிய
    " கொள்கை கோட்பாட்டில் " உள்ளவர்களுக்கு தான் உதவ நினைப்பது ஆண்டவனின் முன்னர் or ஆன்மிகத்தின் படி அறமா! அறம் இல்லையா?

    ReplyDelete
  17. உள்ளேன் ஐயா

    திரு. முத்துராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த தருணத்தில் தங்களிடம் ஒரு வேண்டு கோளை(எதிர்பார்ப்பை) முன் வைக்கின்றேன்.
    தங்களுக்கு மனம் உண்டு எனில் செயல் படுத்தவும்.

    மனித சக்தியையும் மீறிய
    ஒரு பெரிய சக்தி தானே!
    அனைத்து ஜீவராசிகளையும் ஆட்டி படைக்கின்றது.

    அவ்வாறு இருக்க மனிதன் ஏன்
    குரங்குகள் போல் அங்கும் இங்கும் அலைமோதுகின்றானே!

    மனிதனை, சக மனிதனே அநியாயமாக அலைகளிக்கின்றானே அநியாயமாக
    அறியாயமை பயன்படுத்திக்கொண்டு.

    அதனில் இருந்து அதாவது
    "அங்கும் இங்கும் அலைமோதுவதில்!"
    இருந்து தப்பிக்க நமதுபெரியோர்கள்
    கூறியதை ஆதாரத்துடன்விளக்குகளேன்
    ஐயா.

    " கானல் நீரை! நீர் என்று நினைத்து கொண்டு படும் பாதாளத்தில்! தான் மட்டும் அல்லாது மொத்த
    " ஆட்டு கூட்டத்தையே!" ஏன் இனத்தையே பலி கொடுக்கும்
    " ஆடுகளை காக்கும் பொருட்டு தான்!".

    இது தற்பொழுது உயிருடன் உள்ளவர்களுக்கும்! இன்னும் எதிர்காலத்தில் வரப்போகும் நமது எதிர்கால தூண்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்கின்றேன் எம்பெயர் உடைய ஐயா திருவாளர் அவர்களே!

    ReplyDelete
  18. nice . Also teacher . finally you got ads .. hehe .. so happy to see that..

    ReplyDelete
  19. கட்டுரை சிறப்பாகவுள்ளது.மைனர்வாள் சொன்னதுபோல ருக்மணி பாட்டி கட்டுரையில் எவ்வளவு பிரதானமோ, அவரின் சொல்லடை முக்கியமாய், அதுவும் பேரனில் உண்மையானது தெய்வ ஆசீர்வாதமாக எண்ணுகின்றேன்.
    கள்மமைத்துக் கொடுத்த வாத்தியாருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  20. கிருஷ்ணன் சார், செம காமெடி. எழுத்து நடை மிகவும் இயல்பாக இருந்தது. தொடர்ந்து இன்னும் எழுதுங்கள். (மாமி ரொம்ப அழகா இருக்காங்க, நான் சொன்னதாக மாமிட்ட சொல்லிடுங்கோ)

    ReplyDelete
  21. /////////
    G.Nandagopal said...

    மைனர்வாள் என்ன சொல்ல போகிறார் என்று கட்டுரையாளர் உள்பட இந்த உலகமே
    ஏன் கூர்ந்து கவனிக்கறது என்று
    எனக்கு ரொம்ப நாளா இருந்துவந்த சந்தேகம் இப்போதுதான் தீர்ந்தது
    வாழ்த்துக்களுடன்
    நந்தகோபால்\\\\\\\\\\

    ஏது உலகமே கூர்ந்து கவனிக்குதாம்லே?
    தாங்கல மாமூ..
    இது உங்க கிருஷ்ணருக்கே அடுக்காது சாமி..

    ReplyDelete
  22. ' Made for Each Other '
    Filter Wills (ஒரு காலத்துலே நம்ம favorite brand ) couples போல தெரியுது KMRK சார்..உங்க ரெண்டு பேரோட போட்டோ..

    ReplyDelete
  23. நல்ல ஆரோக்கியமான மனிதருக்கு உடல் உணர்ச்சிகள் என்பது இயல்பானதுதான்..
    என்பதுதான் உடலியல் சொல்லும் கருத்து..
    இதில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்று கதைவிட்டு
    இரட்டைவேடம் போட்டு திருட்டுத்தனமாக நடந்துகொண்டு கடைசியில் ஊர் முழுக்க
    தூற்றும்படி நடந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் பரிதாப நிலைக்கு ஆளாக்கும் மடங்களும்( எல்லா மதங்களின்)
    மடாதிபதிகளும் நல்லதொரு மானிட சமுதாயத்துக்கு தேவைதானா?
    (ராம கிருஷ்ண பரமஹம்சரே கூட தியான நிலைக்கு உட்பட கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டார்
    என்ற விஷயம் முன்னாளில் எழுத்தாளர் ஜெகாந்தனாலேயே சொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது..)

    ReplyDelete
  24. ////////// kannan said...
    இந்த விடுமுறைக்கு ஜப்பானுக்கு வந்தா சகோதரி வீட்டில் அத்தான்
    ( minorwall said... ) கையால் அறுசுவை சாப்பாடு உண்டு அப்படிதானே :-)\\\\\\\\\\\

    வாங்க கண்ணன்..u are allways welcome..
    உங்க மெயில் ID முதல்லேயே கேட்டுருந்தேன்..உங்க blog லிங்க்லே கொடுத்து விட வேண்டியதுதானே?

    ReplyDelete
  25. அந்த காலத்தில் புதிய திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது விளம்பரங்களில் சில முக்கியமான
    தியேட்டர்களின் பெயரை போட்டுவிட்டு கடைசியில் 'மற்றும் தென்னாடெங்கும்' என்று போடுவார்கள்.
    அதுமாதிரி minorwaal கமென்ட் வந்தால் போதும் உடனே சொல்லிரலாம்
    இலங்கை, துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, டெல்லி (போனவாரத்திலிருந்து
    டெல்லியும் foreign ஆயிடுச்சாம் மாப்பு...பாத்துகிடுங்க ) மற்றும் உலகெங்கும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
    minorwaal அவர்களின் கமெண்ட் அப்பிடின்னு சொல்லாம் இல்லீங்க
    அந்த ரேஞ்சுக்கு போயிடுச்சு மாப்பு
    நந்தகோபால்

    ReplyDelete
  26. //ராம கிருஷ்ண பரமஹம்சரே கூட தியான நிலைக்கு உட்பட கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டார்
    என்ற விஷயம் முன்னாளில் எழுத்தாளர் ஜெகாந்தனாலேயே சொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது..)//
    செய்திகளை இன்னும் பக்குவமாகச் சொல்லக்கூடிய ஆற்றல் ஜப்பான் மைனர்வாளுக்குக் கை வர வேண்டும் என்று சரஸ்வதிதேவியை வேண்டுகிறேன்.தற்காலத்தில் மகான்க‌ளைப்பற்றி அவ‌தூறுகளைப் பரப்புவது
    ஒரு 'ஃபேஷன்' ஆகிவிட்டது.ஜெயகாந்தன் போன்ற்வர்களின் சொல்லுக்கு இருக்கும் மதிப்புக் கூட பரமஹம்சரின் உப‌தேசஙளுக்கு இல்லை என்பது நம்முடைய துரதிர்ஷ்டமே.ஜெயகாந்தன் ஆய்வாளர் இல்லை.கதை சொல்லி.
    கதைசொல்லிகள் அனைவருமே சுவாரஸ்யம் கருதி "காது மூக்கு" வைத்து
    கதை விடக்கூடியவர்களே! அவரையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு மகான்க‌ளை எடைபோடக்கூடாது.


    ஒரு புகழ்மிக்க புல்லாங்குழல் இசை மேதை, குரு இல்லாமல் தானாகவே கற்றுக்கொண்டு 6 வ்யதில் மேடை ஏறி இன்றளவும் நீங்காத புகழ் பெற்றார்.
    அவர் மேடையிலேயே மது அருந்துவார்.மது உள்ளே போகப் போகத்தான்
    இசையில் அவ‌ர் க‌ற்ப‌னை வ‌ள‌ம் கூடும்.என‌க்கு அவ‌ருடைய‌ இசைம‌ட்டுமே
    வேண்டும். இதை நான் ந‌ன்கு உண‌ர்ந்தே அவ‌ர் க‌ச்சேரிக்குப் போவேன்.ம‌துவை ம‌ன‌தில் வாங்கிக்கொண்டு இசையை இழ‌க்க‌ நான் விரும்ப‌வில்லை.‌

    என‌க்கு தோசை கிடைத்தால் ஆன‌ந்த‌மாக‌ச் சா‌ப்பிடுவேன்.துளையை எண்ணிக்கொண்டு இருக்க‌ மாட்டேன்.

    என்னுடைய‌ க‌ட்டுரையின் நோக்க‌ம் என் இய‌லாமையை, என் தோல்வியை
    ஒப்புக்கொள்வ‌துதான்.மைன‌ர்வாளின் பின்னூட்ட‌ம் திசைதிருப்பி விடுவ‌தாக‌வும்,பொருத்த‌ம‌ற்ற‌ விம‌ர்ச‌ன‌மாக‌வும்,ஒரு சில‌ ப‌க்த‌ர்க‌ளையாவ‌து ம‌ன‌ம் வ‌ருந்தும்ப‌டியாக‌ச் செய்வ‌தாக‌வும் உள்ள‌து என்ப‌தைப் ப‌ணிந்து
    தெரிவித்துக்கொள்கிறேன்.

    மைன‌ர்வாள் ப‌க்குவ‌ம் அடைய‌ ப‌க‌வானைப் பிரார்த்திக்கிறேன்! ‌

    ReplyDelete
  27. /////minorwall said...
    நல்ல ஆரோக்கியமான மனிதருக்கு உடல் உணர்ச்சிகள் என்பது இயல்பானதுதான்..
    என்பதுதான் உடலியல் சொல்லும் கருத்து..
    இதில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்று கதைவிட்டு
    இரட்டைவேடம் போட்டு திருட்டுத்தனமாக நடந்துகொண்டு கடைசியில் ஊர் முழுக்க
    தூற்றும்படி நடந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் பரிதாப நிலைக்கு ஆளாக்கும் மடங்களும்( எல்லா மதங்களின்)
    மடாதிபதிகளும் நல்லதொரு மானிட சமுதாயத்துக்கு தேவைதானா?
    (ராம கிருஷ்ண பரமஹம்சரே கூட தியான நிலைக்கு உட்பட கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டார்
    என்ற விஷயம் முன்னாளில் எழுத்தாளர் ஜெகாந்தனாலேயே சொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது..)/////

    ஆரோக்கியமான விஷயங்களை மட்டுமே, இங்கே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் மைனர். அந்த மடத்தில் சேர முடியாமற்போனதைப் பற்றிதான் திருவாளர் KMRK குறிப்பிட்டுள்ளார்.
    Controversy யான விஷயங்கள் - அது எதைப் பற்றியதாக இருந்தாலும், யாரைப் பற்றியதாக இருந்தாலும் நமக்கு வேண்டாம் மைனர்! வகுப்பறையில் பனி மட்டுமே பெய்யட்டும். புயலோ, புழுதியோ இங்கே வேண்டாம் மைனர்!

    ReplyDelete
  28. /////minorwall said...
    நல்ல ஆரோக்கியமான மனிதருக்கு உடல் உணர்ச்சிகள் என்பது இயல்பானதுதான்..
    என்பதுதான் உடலியல் சொல்லும் கருத்து..
    இதில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்று கதைவிட்டு
    இரட்டைவேடம் போட்டு திருட்டுத்தனமாக நடந்துகொண்டு கடைசியில் ஊர் முழுக்க
    தூற்றும்படி நடந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் பரிதாப நிலைக்கு ஆளாக்கும் மடங்களும்( எல்லா மதங்களின்)
    மடாதிபதிகளும் நல்லதொரு மானிட சமுதாயத்துக்கு தேவைதானா?
    (ராம கிருஷ்ண பரமஹம்சரே கூட தியான நிலைக்கு உட்பட கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டார்
    என்ற விஷயம் முன்னாளில் எழுத்தாளர் ஜெகாந்தனாலேயே சொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது..)/////

    ஆரோக்கியமான விஷயங்களை மட்டுமே, இங்கே பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் மைனர். அந்த மடத்தில் சேர முடியாமற்போனதைப் பற்றிதான் திருவாளர் KMRK குறிப்பிட்டுள்ளார்.
    Controversy யான விஷயங்கள் - அது எதைப் பற்றியதாக இருந்தாலும், யாரைப் பற்றியதாக இருந்தாலும் நமக்கு வேண்டாம் மைனர்! வகுப்பறையில் பனி மட்டுமே பெய்யட்டும். புயலோ, புழுதியோ இங்கே வேண்டாம் மைனர்!

    ReplyDelete
  29. /////Blogger kmr.krishnan said...
    //ராம கிருஷ்ண பரமஹம்சரே கூட தியான நிலைக்கு உட்பட கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டார்
    என்ற விஷயம் முன்னாளில் எழுத்தாளர் ஜெகாந்தனாலேயே சொல்லப்பட்டது நினைவுக்கு வருகிறது..)//
    செய்திகளை இன்னும் பக்குவமாகச் சொல்லக்கூடிய ஆற்றல் ஜப்பான் மைனர்வாளுக்குக் கை வர வேண்டும் என்று சரஸ்வதிதேவியை வேண்டுகிறேன்.தற்காலத்தில் மகான்க‌ளைப்பற்றி அவ‌தூறுகளைப் பரப்புவது
    ஒரு 'ஃபேஷன்' ஆகிவிட்டது.ஜெயகாந்தன் போன்ற்வர்களின் சொல்லுக்கு இருக்கும் மதிப்புக் கூட பரமஹம்சரின் உப‌தேசஙளுக்கு இல்லை என்பது நம்முடைய துரதிர்ஷ்டமே.ஜெயகாந்தன் ஆய்வாளர் இல்லை.கதை சொல்லி.
    கதைசொல்லிகள் அனைவருமே சுவாரஸ்யம் கருதி "காது மூக்கு" வைத்து
    கதை விடக்கூடியவர்களே! அவரையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு மகான்க‌ளை எடைபோடக்கூடாது.
    ஒரு புகழ்மிக்க புல்லாங்குழல் இசை மேதை, குரு இல்லாமல் தானாகவே கற்றுக்கொண்டு 6 வ்யதில் மேடை ஏறி இன்றளவும் நீங்காத புகழ் பெற்றார்.
    அவர் மேடையிலேயே மது அருந்துவார்.மது உள்ளே போகப் போகத்தான்
    இசையில் அவ‌ர் க‌ற்ப‌னை வ‌ள‌ம் கூடும்.என‌க்கு அவ‌ருடைய‌ இசைம‌ட்டுமே
    வேண்டும். இதை நான் ந‌ன்கு உண‌ர்ந்தே அவ‌ர் க‌ச்சேரிக்குப் போவேன்.ம‌துவை ம‌ன‌தில் வாங்கிக்கொண்டு இசையை இழ‌க்க‌ நான் விரும்ப‌வில்லை.‌
    என‌க்கு தோசை கிடைத்தால் ஆன‌ந்த‌மாக‌ச் சா‌ப்பிடுவேன்.துளையை எண்ணிக்கொண்டு இருக்க‌ மாட்டேன்.
    என்னுடைய‌ க‌ட்டுரையின் நோக்க‌ம் என் இய‌லாமையை, என் தோல்வியை
    ஒப்புக்கொள்வ‌துதான்.மைன‌ர்வாளின் பின்னூட்ட‌ம் திசைதிருப்பி விடுவ‌தாக‌வும்,பொருத்த‌ம‌ற்ற‌ விம‌ர்ச‌ன‌மாக‌வும்,ஒரு சில‌ ப‌க்த‌ர்க‌ளையாவ‌து ம‌ன‌ம் வ‌ருந்தும்ப‌டியாக‌ச் செய்வ‌தாக‌வும் உள்ள‌து என்ப‌தைப் ப‌ணிந்து
    தெரிவித்துக்கொள்கிறேன்.
    மைன‌ர்வாள் ப‌க்குவ‌ம் அடைய‌ ப‌க‌வானைப் பிரார்த்திக்கிறேன்! /////

    Take it easy sir, ஒருவர் சொல்வதற்காக ஒருவருடைய புகழ் கூடுவதும் கிடையாது. குறைவதும் கிடையாது.
    மைனர் அவருடைய கருத்தைச் சொல்லியதாக எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய கருத்து சரிதானா அல்லது இல்லையா என்பதைப் பின்னூட்டத்தைப் படிப்பவர்கள் அறிவார்கள்.

    “ஜோதிடம் பொய். அதற்கு நீர் ஏன் துணை போகின்றீர்?” என்று எனக்குப் பல கண்டனங்கள் வருவதுண்டு. அதை நன் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஏன்? உண்மை என்னவென்று எனக்குத் தெரியும்! அதுபோல உண்மை தெரிந்தவர்கள் சர்ச்சைக்குச் செல்லக்கூடாது. சென்றால் உண்மை இல்லை என்று வாதிடுபவர்களுடன் நாமும் சமமாகிவிடுவோம்.

    ReplyDelete
  30. நன்றி அய்யா! தங்கள் நடுவு நிலை பின்னூட்டத்திற்குத் தலை வண‌ங்குகிறேன். என் கட்டுரையைப் படித்துப் பாராட்டிய அனைவருக்கும்,சிறப்பாக மைனர்வாளுக்கும், என் நன்றி!

    ReplyDelete
  31. விவாதத்துக்குள்ளாகும் விமர்சனம்தான் என்பது தெரியும்..
    மகான் என்பவருக்குரிய ஆரோக்கிய உடல்கூறு தகுதிகள் என்ன என்று ஆராயப் போனால் இந்த விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும்..
    சரி..விவாத மேடையாக்காமல் கதைசொன்ன அளவிலே கட்டுரையாளரின் நடையைப் பாராட்டி விலகுகிறேன்..

    ReplyDelete
  32. Minorwall said:
    விவாதத்துக்குள்ளாகும் விமர்சனம்தான் என்பது தெரியும்..
    மகான் என்பவருக்குரிய ஆரோக்கிய உடல்கூறு தகுதிகள் என்ன என்று ஆராயப் போனால் இந்த விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும்..
    சரி..விவாத மேடையாக்காமல் கதைசொன்ன அளவிலே கட்டுரையாளரின் நடையைப் பாராட்டி விலகுகிறேன்//////

    நெப்போலியன் சார்,
    ஞானிகளுக்கும் மகான்களுக்கும் மட்டுமே தெரிந்த எத்தனையோ
    சூட்சுமங்களும் பரம ரகசியங்களும் இந்த பரந்த உலகில் ஏராளமாக உண்டு.
    அதை சமுதாய நலன் கருதியும் குறிப்பாக இளைஞ்சர்களின் எதிர்கால நலன்
    கருதியும் அவர்கள் அதை வெளிப்படுத்தியதில்லை.
    இதை தான் " ஒரு யோகியின் சுயசரிதம்" என்ற தனது நூலில்
    ஞானி சுவாமி ஸ்ரீ யோகானந்தா அவர்கள் தனது குருநாதரும்
    தெய்வத்துடன் இணைந்துவிட்ட ஞானி சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்
    அவர்கள் தனது மரணத்திர்க்கப்புறம் தன்னிடம் நேரில் தோன்றி
    மேலுலகம் பற்றியும் இன்ன பிற ரகசியங்களையும் தெரிவித்திருப்பதாகவும்
    அதை சமுதாய நலன் கருதி வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும்
    எழுதியிருப்பார்கள்.
    ஒருவேளை இத்தகைய குறிப்புகள் வளரும் இளஞ்சர்கள் பார்க்க நேர்ந்தால்
    தடம்புரள அடிகோலிவிடும் என்பதற்காக வெளிப்படுத்த வேண்டாம் என்றிருந்திருக்கலாம்.
    அதனால் இந்த விவகாரத்தை இதற்குமேல் பெரிதுபடுதத்தேவையில்லை என்பது என் கருத்து
    நந்தகோபால்

    ReplyDelete
  33. மாமூ, நீங்களே சொல்லிட்டீங்க..உங்க சுயரூபத்துலே இன்னிக்குத்தான் வெளிலே வந்துருக்கீங்க..
    உங்க பக்தியோக சாப்டர் எப்போ பதிவிடப் போறீங்கோ?
    அதுவும் நான் நம்ம KMRK சார் கதையிலே இந்த டாபிக்கை இழுத்துருக்கக் கூடாது..
    கதையோட தலைப்பு என்னை இழுத்துக்கிட்டுப் போயிடுச்சு..
    இதுமாதிரி எதினாவுது வில்லங்கத்துலே விடுகின்ற எழுத்தின் வலிமை கண்டுதான்
    நான் பதிவு எதுவுமே எழுத வேண்டாம் என்று விலகியே இருக்கிறேன்....கொஞ்ச நாள் கமென்ட் பக்கமே எட்டிப் பாக்கலை..
    அபிடியும் எதாவுது இப்பிடி கமென்ட்லே சிக்கிடுறேன்..
    சரி..ஏதோ ஜாலியா கலாய்ச்சிட்டு ஓட்டிடுவோம்..உங்க எல்லோரையும் உசுப்பிவிட்டு அந்த சைடுக்கு பாயின்ட் எடுத்து கொடுக்க
    நான் ஒரு விதத்துலே use ஆயிருக்கேனில்லே..இல்லாட்டி ஜெயகாந்தனையும் அவரு சொன்ன கதையையும் இன்னிக்கு எத்தினி பேருக்குத் தெரியும்..?
    அத மறுத்துப் பேச KMRK சாருக்குத்தான் எப்படி வாய்ப்பு கிடைக்கும்..?
    so take it easy .. .all for good ...

    ReplyDelete
  34. //அதுவும் நான் நம்ம KMRK சார் கதையிலே இந்த டாபிக்கை இழுத்துருக்கக் கூடாது..//

    இது...இது..இதுதான் வேண்டும் மைனர்வாள்! என்கட்டுரையின் அடிப்ப‌டை நோக்க‌ம் என் தோல்வியை ஒப்புக்கொள்வ‌து ம‌ட்டுமே.த‌ன் வாழ்க்கையை ல‌ட்சிய‌ தாக‌‌த்துட‌ன் தியாக‌ம் செய்து ம‌ட‌த்தில் சேர்ந்து பொதுப்ப‌ணி ஆற்றிவ‌ரும் பிரம்ம‌ச்சாரிகள், சந்நியாசிகள் ஆகிய‌வ‌ர்க‌ளை நான் மதிக்கிறேன்,வணங்குகிறேன். அதுபோல் நம்மால் உறுதிப்பட நிற்க முடியவில்லையே என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே என் கட்டுரை.அதைத் தாங்கள் வேறு திசையில் திருப்பிவிட எத்தனித்தது .....?

    ReplyDelete
  35. //இல்லாட்டி ஜெயகாந்தனையும் அவரு சொன்ன கதையையும் இன்னிக்கு எத்தினி பேருக்குத் தெரியும்..?
    அத மறுத்துப் பேச KMRK சாருக்குத்தான் எப்படி வாய்ப்பு கிடைக்கும்..?//

    திரு.ஜெயகாந்தன் புகழ்பெற ஆரம்பித்த சமயம் நான் கல்லூரி மாணவன்.கொஞ்சம் எல்லாம் புரியத் துவங்கிய வயது.குழந்தைத்தனம் விலகி"அடல்ட்"டும் ஆகாமல் இரண்டும் கெட்டானாக இருந்த சமயம்.ஆனந்தவிகடனில் அவருடைய யதார்த்தக் கதைகள் வெளிவந்தபோது ஆர்வத்துடன் படித்ததுண்டு.அப்புறம் அவருடைய‌ புத்தகங்களை வாங்கி சேமித்துவைத்து ந்ண்பர்களுக்கு இரவல்கொடுத்து"தமிழ் இலக்கிய சேவை" செய்வதாக நானே கர்வப்பட்டதுண்டு.இதெல்லாம் அவ்ர் "சினிமாவுக்குப் போன சித்தாளு" எழுதும் வரைதான் நடந்தது.அப்போதுதான் அவருடைய உள்மனம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன்.அந்த மாயையில் இருந்து விலகினேன்.

    தமிழ் இலக்கிய உலகில் புரட்சியைக்கொண்டுவந்தவர் என்ற அளவில் அவர்மீது எனக்கு இப்போதும் மதிப்பு உண்டு. ஆனால் பொதுவுடைமை வாதியாகத் துவங்கி எங்கேபோய்நின்றார்என்பதைப்பார்க்கும் போது எழுத்து அவருக்கு
    பிழைப்பு மட்டுமே என்பதைப் புரிந்ந்து கொண்டேன்.
    "when little fishes talk they talk like whales"

    ReplyDelete
  36. KMRK Said:
    இது...இது..இதுதான் வேண்டும் மைனர்வாள்! என்கட்டுரையின் அடிப்ப‌டை நோக்க‌ம் என் தோல்வியை ஒப்புக்கொள்வ‌து ம‌ட்டுமே.த‌ன் வாழ்க்கையை ல‌ட்சிய‌ தாக‌‌த்துட‌ன் தியாக‌ம் செய்து ம‌ட‌த்தில் சேர்ந்து பொதுப்ப‌ணி ஆற்றிவ‌ரும் பிரம்ம‌ச்சாரிகள், சந்நியாசிகள் ஆகிய‌வ‌ர்க‌ளை நான் மதிக்கிறேன்,வணங்குகிறேன். அதுபோல் நம்மால் உறுதிப்பட நிற்க முடியவில்லையே என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே என் கட்டுரை.அதைத் தாங்கள் வேறு திசையில் திருப்பிவிட எத்தனித்தது .....?/////////


    சார்
    மகான்களும் ஞானிகளும் அபூர்வபிறவிகள்
    அவர்கள் எந்த நியமனங்களுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர்.
    அவர்களை எதுவும் கட்டுப்படுத்தவும் முடியாது.
    ஏனென்றால் அவர்கள் சிந்திப்பதும் செயலாற்றுவதும் சமூக நன்மைக்கே அல்லாமல்
    வேறெதற்காகவும் இருக்காது.
    அவர்களைப்பற்றி நாம் விளையாட்டாக கூறுவது கூட அவர்கள் மேன்மையை
    சிறுதும் பாதிக்காது.
    minorwall கூட ஒருவகையில் அந்த மகான் மேல் உள்ள ஈர்ப்பினால் அதை
    தெரிவித்ததாக தான் நான் எடுத்துக்கொண்டேன். நிற்க
    ஜெயகாந்தன் எழுத்துக்கள் என்னை அவ்வளவாக ஈர்த்ததில்லை
    என்ற போதிலும் அவர் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனை
    எப்படி இருக்கவேண்டும் என்று சொன்னவிதம் என்னை பிரம்மிக்க
    வைத்தது என்பதை மட்டும் என்னால் ஒப்புக்கொள்ளாமல் இருக்கமுடியாது.
    நந்தகோபால்

    ReplyDelete
  37. உற்சாகமூட்டுவதாகவும், மனமகிழ்வைத் தருவதாகவும் உள்ளது. தாங்கள் பிறந்து இரண்டு மாதங்கள் கழித்து பிறந்தேன் (அக்டோபர் 21, 1949). ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் எனக்கும் ஈடுபாடு உண்டு. அதானாலேயே இருபதாண்டுகளுக்கு முன் மதுரை மடத்தில் அப்போதைய துணைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ககனானந்தஜி மகராஜ் அவர்களிடம் மந்திர தீக்ஷை பெற்றேன். திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் மூன்றாண்டுகள் தொடர்ந்து அந்தர்யோகத்தில் (மூன்று நாட்கள் நடைபெறுவது) கலந்துகொண்டேன். 2007ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று வாழ்ந்து வருகிறேன். எறும்பும், தேனியும் போல் சுறுசுறுப்பாக இருந்துவிட்டு, இப்போது வெறுமையில் வாழ்ந்து வருகிறேன். தங்களுடைய பதிவைப் போன்ற நல்ல, சுவையான செய்திகளை படிப்பது ஆறுதலாக இருக்கிறது. இதைத் தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி, வணக்கம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com