மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.1.12

Old is Gold என்பது உண்மையா? பொய்யா?

பூமிக்கு வெளிச்சமெல்லாம்....!
Old is Gold என்பது உண்மையா? பொய்யா?

பேராசிரியர் அறிவொளி அவர்கள் மேடைகளில் பேசும் போது உண்மைகளில் பல விதங்கள் உள்ளது என்பார்.

தெரிந்த உண்மை, தெரியாத உண்மை, பாதி உண்மை, முழு உண்மை என்று உண்மைகளை வகைப்படுத்துவார்.

உலகில் மூன்று பங்கு நீர் உள்ளது என்பது பாதி உண்மை. நீர் எங்கிருந்தாலும் அதற்கடியில் பூமி உள்ளது என்பதுதான் முழு உண்மை. வலிகளில் அதீதமான வலி பிரசவ வலி என்பது நம்மில் பாதிப்பேர்களுக்கு (அதாவது ஆண்களுக்கு) தெரியாத உண்மை. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பது தெரிந்த உண்மை.

அதுபோல Old is Gold என்பது உண்மையா? என்றால் அது பாதி உண்மை. பழையது தங்கம் என்பதுபோல புதியதிலும் தங்கம் உள்ளது. Sometime, new things are also gold

எத்தனை நாட்களுக்குத்தான் பழையதையே தங்கம் என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?

50 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கேட்டால் பழைய பாடல்களைத்தான் தங்கம் என்பார்கள்

“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே”


என்பதுபோன்ற பாடல்களுக்கு இப்போது உள்ள பாடல்கள் இணையில்லை என்பார்கள்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடலான   “தீன கருணாகரனே நடராஜா.....நீலகண்டனே!”  என்ற பாடலைக் குறிப்பிட்டால் முகத்தைச் சுளிப்பார்கள். பாடல் அக்காலத்தில் பிரபலமானது. அனைவராலும் முணுமுணுக்கப்பெற்ற பாடல். படம். திருநீலகண்டர், ஆண்டு 1939 பாடலாக்கம். பாபநாசம் சிவன். எங்கள் அப்பா காலத்துப் பாடல்!

அதனால் காலத்தை வைத்துப் பாடல்களை ஒதுக்காதீர்கள். இன்றும் சில நல்ல பாடல்கள் வருகின்றன. அதையும் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

அன்று மூன்று அல்லது நான்கு இசைக்கருவிகளை வைத்துப் பாடலை வடிவமைத்தார்கள். பிறகு பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளும், 50ற்கும் மேற்பட்ட வாத்தியக்காரர்களும் சேர பாடல்களைக் கேட்பதற்கு ரம்மியமாக அமைத்தார்கள். இன்று பல மின்னணு இசைக்கருவிகள் சேர்ந்து கொண்டுள்ளது. இன்று பல பாடல்கள் அதன் இசையால் மனதைக் கிறங்க வைக்கின்றன!

உங்களுக்காக இந்தப் பகுதியில் இன்று ஒரு புதுப் பாடலைப் பதிவு செய்துள்ளேன். வாரம் ஒரு புதுப் பாடலைத் தேடிப்பிடித்துத் தரவுள்ளேன். கேட்டு மகிழுங்கள். பாடல் வரிகளையும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஒன்று

பூமிக்கு வெளிச்சமெல்லாம்......!
----------------------------------------------

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காலம் வந்தபிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்


------------------------------------------------------------------------------------------------
பூமிக்கு வெளிச்சமெல்லாம் சூரியனால்தான். ஆனால் காதல் வயப்பட்டவர்கள் உன்னால் என்று பிதற்றிக்கொள்வார்கள். காதல் மயக்கம் உச்ச நிலை அடையும்போது என்ன எழுதுகிறோம், என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பது தெரியாது. அதேபோல் காதலில் சற்று சருக்கல் ஏற்பட்டாலும் பிதற்றுவார்கள். எங்கே மனிதன் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்பார்கள். எனது கைகள் தீண்டும்போது மலரும் சுடுகின்றது என்பார்கள். மலர் எப்படிச் சுடும்? ஆனால் தன் நிலையை வெளிப்படுத்த அதைவிடச் சிறந்த வரி கிடையாது. நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை என்பார்கள்.
நாம் பார்க்காத காதலா? கவியரசர் கண்ணதாசன் எழுதாத காதற்பாடல்களா?

ஆகவே பூமிக்கு வெளிச்சமெல்லாம் அவன் கண் திறப்பதினால்தான் என்பதை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்வோம்!

கானொளி - http://youtu.be/xTxRwwuX96I


நன்றி: இப் பாடலை வலையேற்றிய முகம் தெரியாத அந்த நண்பருக்கு  நம் நன்றி உரித்தாகுக! (Our sincere thanks to quality clipz.com)

பாடலாக்கம்: கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார்
நடிப்பு: ஜீவா & சந்தியா
இசையமைத்தவர்: விஜய் ஆண்ட்டனி
இயக்குனர்: சசி
படம்: டிஷ்யூம் (2006)

பாடலில் நெஞ்சைத் தொட்ட வரிகள் சிகப்பு நிற எழுத்துருவில் கொடுக்கப்பெற்றுள்ளன!

காலம் வந்தபிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை


என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்

வாழ்க வளமுடன்!

6.1.12

அப்பனுக்குப் பாடம் சொன்னவன்

-------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------
 அப்பனுக்குப் பாடம் சொன்னவன்

இந்த ஆண்டின் முதல் பதிவு இது. பழநிஅப்பன் இல்லாமல் வாத்தியார் இல்லை. என்னை எழுதப்பணிக்கின்றவன் அவன். எனக்கு எழுதும் வல்லமையையும் ஊக்கத்தையும் கொடுப்பவன் அவன்தான். அவன் தாளை வணங்கி, இன்றையப் பதிவாக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய முருகன் பாமாலை ஒன்றைப் பதிவிடுகிறேன். அனைவரும் படித்து மகிழுங்கள்

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜோதிடப் பாடங்கள் 9.1.2012 திங்கட்கிழமை முதல் தொடர்ந்து வெளிவரும்.

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா!

அப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா - வெறும்
ஆண்டியாகிப் பழனிவந்த வேலய்யா
கற்பனையைத் தாண்டி நிற்கும் கந்தய்யா - உனைக்
காண்பதற்கு நடந்துவந்தோம் நாமய்யா.

மலையினிலே அரசமைத்த மன்னனே - எங்கள்
மடியினிலே குழந்தையான கந்தனே
தலைஇருக்கும் வரையிலுன்னை வணங்குவோம் - உன்
சந்நிதியில் பாடிபாடி மயங்குவோம்.

காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனம் - அங்கு
கந்தனையே எண்ணி வாழ்ந்தனம்
பூவிரித்த பாண்டினாட்டில் வாழ்ந்தனம் - உன்
பொன்னடியைக் கண்டுகண்டு மகிழ்ந்தனம்.

ஏறுகிறோம் இறங்குகிறோம் வாழ்விலே - மயில்
ஏறிவரும் நீயறிவாய் நேரிலே
மாறிவரும் நாகரீக உலகிலே - நாங்கள்
மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே

இலங்கையிலும் உனதுகோவில் கட்டினோம் - பர்மா
எங்கணுமே உனதுசிலை நாட்டினோம்
மலையநாட்டில் உனதுகோவில் ஆக்கினோம் - எங்கள்
மனதிலுள்ள பயத்தையெல்லாம் போக்கினோம்

தண்டபாணி கோவிலின்றி ஊருண்டோ - உன்னைத்
தண்டனிட்டு வணங்கிடாத பேருண்டோ
கொண்டுவிக்கப் போனஎங்கள் கொள்கையே - உனைக்
கொண்டுவைக்கப் போனகொள்கை யல்லவா

செந்திலாளும் பழனியாண்டி முருகவேள் - எங்கள்
செட்டிமக்கள் தருமங்காக்க வருகவே
அந்தமிலா அழகுத்தெய்வம் கந்தவேள் - உன்
அன்புமக்கள் வாழ்வுகாக்க வருகவே.

ஆண்டுதோறும் ஆண்டுதோறும் வருகிறோம் - நீ
ஆண்டுவரும் பழநிநோக்கி வருகிறோம்
வேண்டிவரும் நலங்களெல்லாம் அருளுவாய் - உன்
வீட்டுமக்கள் போல எமை ஆளுவாய்.


பழநி தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாகச் செல்லும் செட்டிநாட்டுப் பகுதி மக்களுக்காக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிக்கொடுத்தபாடல்.
-------------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

1.1.12

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும்
வாத்தியாரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
------------------------------------------------------
வாழ்க்கை வசப்பட வாழ்த்துக்கள்
--------------------------------------------
தனூர்ராசிக்காரன்

புத்தாண்டு பிறப்பது நமக்காக
புத்துணர்வு தோன்றுவதும் நமக்காக
புதுப்பாதை தேடும் என்தோழா - ஒரு
வார்த்தை உரைப்பேன் கேள்தோழா!

முட்டுக்கட்டை போடும் - எந்த
முகம்தெரியா தடை கண்டும்
மூச்சடைத்து நிற்காதே. - உன்
முடிவை மாற்றாதே.


நித்தமும் தடைகள்.
மொத்தமும் தோல்விகள் .
எதிலும் ஏமாற்றம்
எனும் சோதனையை, வேதனையை - நீ
எதிர்கொண்டால் - அவை
சொல்லாமல் ஓடிவிடும்.

விடாமுயற்சி எனும் சூத்திரங்கள்
தெரிந்து கொண்டால்
பாதைகள் பணிந்துவிடும்.

உன்னைச் சூழும் நெருப்பை - நீ
அள்ளிப் போட்டு அனைத்தால் - அங்கோர்
உலகம் உனக்கென்று தோன்றும்!

எண்ணித் துணிந்தால் கருமம்
துணிந்தபின் எண்ணுதல் இழுக்கு - என்னும்
வள்ளுவன் கருத்தை மனதில்வை
வாழ்க்கை உன் வசப்படும்!

-தனூர்ராசிக்காரன்

-----------------------------------------------------------


முல்லைப்பெரியாறும் மண்பானையும்!
--------------------------------------------------
கே. முத்துராமகிருஷ்ணன்!

முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமான போராட்டங்களில் அரசியல் கட்சிகளைப் புறந்தள்ளி விட்டு மக்களாகவே போராடத் துவங்கி விட்டனர்.5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதால் யாரோ போராடட்டும் என்று கருதாமல் தாங்களாகவே கேரளாவை நோக்கி சாரி சாரியாக மக்கள் கால்நடையாகக் கிளம்பி விட்டனர். உயிருக்கும் அஞ்சாத ஒரு மனப் போக்கைக் காண முடிந்தது.

விதவிதமான போராட்டங்கள் மூலம் தங்கள் மனக் கொந்தளிப்பை மக்கள் காண்பித்தனர்.

உருவ பொம்மை எரிப்பு, கொடும்பாவி எரிப்பு இவற்றையும், மனிதச் சங்கிலி, பட்டினிப் போராட்டம், ஓலமிடும் போராட்டம், ஊர்வலம் போவது இவையெல்லாம் புரிந்து கொள்ள முடிந்தது.

இப் போராட்டங்களுக்கு நடுவே "பானை உடைப்புப் போராட்டம்" ஒன்றும் ஓர் ஊரில் நடந்ததாம். இதற்குத்தான் எனக்குப் பொருள் புரியவில்லை.
பிரதமர் "மவுனமோகன்சிங்"(நன்றி:தினமலர்)அவர்கள் வருகைக்கு எதிராக பானைகள் உடைபட்டன.ஏன் பானைகளை உடைக்க வேண்டும்? அது எப்படி அவர்கள் மன வருத்தத்தினைக் காண்பிக்கும்?

இதைப் பற்றிச் சிந்தனையில் ஆழ்ந்தேன்.

இந்த மனித உடலையே ஒரு மண் பாண்டமாக சித்தர்களும் ஞானிகளும் சொல்கிறார்கள்.

"என்பெற்ற தாயாரும் என்னைப்‘பிண’மென்று இகழ்ந்து விட்டார்;
பொன்பெற்ற மாதரும் ‘போ’ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்;
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே!"

இது பட்டினத்தாரின் வரிகள்.

"மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்"

என்பது எரிக்கும் வழக்கம் உடைய சாதியார் அனைவரும் மயானத்தில் செய்யும் ஒரு சடங்காகும்.இறந்த உடலைச் சுற்றி மூன்று முறை வல‌மும் இடமுமாக இறந்தவரின் மைந்தர்கள் சுற்றி வருவர். அப்போது முன்னால் சாங்கியங்களைச் செய்யும் தனயன் தோளில் மண்குடம் நீர் நிரப்பித் தூக்கிச்செல்வார். அப்பானையில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு துளை அரிவாளால் பொத்து விடப்படும்.அந்த ஓட்டையிலிருந்து நீர் குழாய் போலக் கொட்டும். மூன்று சுற்றுக்குப் பின்னர் அந்த ஓட்டைப் பானை முதுகுப் புறமாகத் தரையில் வீசப்பட்டு நீருடன் உடைக்கப்படும்.

இதைத்தான் பட்டினத்தார் 'மைந்தரும் குடம் உடைத்தார்' என்கிறார்.

"பனிக்குடம் உடைத்து வந்தவன்,மட்குடம் உடைத்துப் போகிறான்"என்பார் கவிஞர் வைரமுத்து.

"விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு)
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்."

ஆக,குடம் உடைப்பது ஒரு துக்க நிகழ்ச்சியில்தான். முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மனமோகன் சிங் மவுனம் காப்பது பிடிkகாத மக்கள் அவருடைய வருகையை துக்கமாக நினைத்து, துக்கத்தின் போது செய்யும் சாங்கியத்தைச் செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்
நால் ஆறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைதாண்டி,.."

என்பது சித்தர்(?) பாடல்.இதில் நாலாறு மாதம் என்பது பத்து மாதங்கள்.குயவன் படைப்புக் கடவுள்.தோண்டி என்பது உட‌லுக்கான உவமை.


நாற்ற ம‌டிக்கும் பாண்டம் என்றும், சோறும் கறியும் நிரப்பும் பாண்டம் என்றும் உடலை மட்பாண்டமாகச் சொல்லுவார் பட்டினத்தார்.


பானை உடைப்பு என்பது தீட்டுப் படுதலோடு சம்பந்தப் படுகிறது. போராட்டக்காரர்கள் மனமோகன்சிங் வந்ததால் தீட்டாயிற்று என்று கருதி பானையை உடைத்துப் போராடியிருக்க‌லாம் அல்லவா?



பானை உடைப்பது பற்றிச் சொல்லும் போது பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் பற்றி நினைவு வந்தது.


ஒரு குறிப்பிட்ட நாளில் மண் பிள்ளையார்களை வாங்கி முச்சந்தியில் போட்டு உடைத்தார்கள் தி க விசுவாசிகள். தங்கள் மனம் புண் பட்டு விட்டதாகவும், தங்கள் மதம் சார்ந்த கடவுளின் உருவம் இழிவு படுத்தப் பட்டு விட்டதாகவும் பெரியார் மீது வழக்கு வந்தது.



பெரியாரின் வக்கீல், பெரியார் வழிபாட்டில் உள்ள எந்தக் கோவில் பிள்ளையாரையும் உடைக்கவில்லை என்றும்,தான் காசு கொடுத்து வாங்கி வழிபடப் படாத, பிள்ளையாரை, ஆவாகனம் செய்யாத மண் பிள்ளையார் பொம்மையையே உடைத்ததாகவும் எனவே யார் மனதையும் புண்படுத்த‌வோ மத நம்பிக்கையை அவமதிக்கவோ இல்லை என்றும் வாதிட்டார்.சுவார‌ஸ்யமான வழக்கு அது.
--------------------------------------------------------------------
இறுதியாக சுயபுராணம் சிறிது.

நான் ஏழாவது படிக்கும் சமயம் நடந்தது. வகுப்பறையில் ஒரு மூலையில் தண்ணீர் பானை வைத்து தினமும் தண்ணீர் முகர்ந்து வைப்பது வழக்கம். அதற்கு மாண‌வர்களுக்கு 'டூட்டி' போடுவார்கள். பானை வாங்கும் செலவு மாணவர்களுடையதே.


வருடக் கடைசியில் இறுதி நாள் தேர்வு முடிந்தவுடன் மாண‌வர்களுக்கு உற்சாகம் அதிக மாகிவிடும். இன்னது செய்கிறோம் என்று தெரியாத வானரப் படையாக மாறிவிடுவார்கள். முதலில் உடைபடுவது வகுப்பின் தண்ணீர்ப் பானைதான்.

அந்த ஆண்டு நான் பானையை மீட்டு உடை ப‌டாமல் வைக்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொன்டேன். பானை அருகில் போய் அதனை அணைத்தார்ப் போல அமர்ந்து கொண்டேன்.


அவர்களோ 44 பேர்கள்.நானோ தனி ஆள். நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 10 நிமிடப் போராட்டத்திற்குப் பின்ன‌ர் பானையைப் பிடுங்கி என் தலையில் போட்டு உடைத்தனர்.



பானையின் கழுத்து மட்டும் எனக்கு மாலையாகத் தொங்க ஊர்வலமாக அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டுச் சென்றனர்.

இது எப்படி இருக்கு?

வாழ்க வளமுடன்! HAPPY NEW YEAR 2012 TO ONE AND ALL !!!

ஆக்கம்:கே.முத்துரமகிருஷ்ணன்(லால்குடி)
----------------------------------------------------------------------------------------

என்னை விட்டுப் போனவை என்று வரும்?
------------------------------------------------------
கவிதை ஆக்கம்: செந்தில்குமார், புதுச்சேரி

வண்டல்மண் படுகை எங்கே
வரப்புயர்ந்த கதிர்கள் எங்கே
வண்ணமலர்ச் சோலை எங்கே
வட்டமடிக்கும் புள்ளினம் எங்கே

மாரிமழை பெய்தகாலம் எங்கே
மாடுமேய்ந்த புல்வெளி எங்கே
வேரில்பழுத்த பலா எங்கே
வேப்பமரத் தோட்டம் எங்கே

சாலையோரப் பெருமரம் எங்கே
சடுகுடுவிளையாடிய திடல் எங்கே
காளைமாடு கட்டைவண்டி எங்கே
களத்துமேட்டு நெற்குவியல் எங்கே

வயல்வெளி குலவைப்பாட்டு எங்கே
வற்றாத குளங்கள் எங்கே
கயல்விழி மீன்கள் எங்கே
கருவேல மரங்கள் எங்கே

கஞ்சிசுமந்த வஞ்சியர் எங்கே
கண்டாங்கிச் சேலைகள் எங்கே
மஞ்சள்பூசிய மங்கையர் எங்கே
மருதாணி விரல்கள் எங்கே

வஞ்சமின்றி உழைத்தவர் எங்கே
வலைவிரித்து மீன்பிடித்தவர் எங்கே
பஞ்சமின்றிவளமை தந்தவர் எங்கே
பண்புசொன்ன மூத்ததலைகள் எங்கே

அஞ்சுகாசு பொறியுருண்டை எங்கே
அந்தநாள் தோழிமார் எங்கே
பஞ்சுமிட்டாய் விற்றவன் எங்கே
பகிர்ந்துண்ட தோழன் எங்கே

தாயம்விளையாடிய தடம் எங்கே
தர்மர்களின் அரசமரம் எங்கே
தாய்பாடும் தாலாட்டு எங்கே
தாவணிக் கன்னியர் எங்கே

புளியமரத் தேநீர்க்கடை எங்கே
புங்கமரக் குயில்கள் எங்கே
கோலியாடிய சிறுவர் எங்கே
கொம்புத்தேன் ஆலமரம் எங்கே

கும்மியடித்த குமரிகள் எங்கே
கொஞ்சித்திரிந்த கிளிகள் எங்கே
அம்மியரைத்த அன்னையர் எங்கே
அதிகாலை நீராகாரம் எங்கே

கோலாட்டச் சத்தம் எங்கே
கோலமிடும் வஞ்சியர் எங்கே
வேலாட்ட வழிபாடு எங்கே
வேப்பம்பூக் குழம்பு எங்கே

கொட்டாங்குச்சி சிரப்பை எங்கே
கொடுக்காப்புளி மரங்கள் எங்கே
தொட்டாச்சிணிங்கிச் செடிகள் எங்கே
தொன்னையிலைக் கஞ்சி எங்கே

ஊணாங்கொடி ஊஞ்சலாட்டம் எங்கே
ஊத்துநீர்ப் பள்ளம் எங்கே
கோணாங்கிக் குறிசத்தம் எங்கே
கொல்லைப்புறக் குறும்புகள் எங்கே
அஞ்சறைப்பெட்டிச் சீதனம் எங்கே
அள்ளிமுடிசூடும் அழகு எங்கே
மிஞ்சியணி மனையாள் எங்கே
மின்னல் மூக்குத்தி எங்கே

கத்தும் கறவைமாடு எங்கே
கன்றுக் குட்டி எங்கே
சுத்துப்பட்டி வரலாறு எங்கே
சுள்ளிபொறுக்கும் காடு எங்கே

கம்மங்கொல்லை பரணி எங்கே
கதிராடும் சோளம் எங்கே
கம்மாக்கரை கலிங்கி எங்கே
கரைதொடும் நீரலைநுரை எங்கே

மஞ்சுவிரட்டு மாவீரன் எங்கே
மத்தளப் பறையாட்டம் எங்கே
நெஞ்சுர இளவட்டக்கல் எங்கே
நெடுந்தூர நடையாளன் எங்கே

தேரோட்டத் திருநாள் எங்கே
தெப்பக்குளத் தாமரை எங்கே
கரகாட்டம் ஒயிலாட்டம் எங்கே
கந்தன்வள்ளி நாடகம் எங்கே

பூமிதித்திருவிழா அக்கினி எங்கே
பூத்துக்குலுங்கிய வனம் எங்கே
சாமியாடிய பரம்பரை எங்கே
சாப்பிடும் அன்னதானமடம் எங்கே

எங்கே எங்கே எங்கேயென்று
என்மனம் வாடுது இங்கே
பங்குனிபோனால் சித்திரை வருமிங்கே
பழையதுகிட்டுமா எனக்கினி இங்கே?

----புதுகை செந்தில் குமார்.



செந்தில் குமார், புதுச்சேரி

+++++++++++++++++++++++++++++++++++++++