Opportunity முக்கியமா? முக்கியமில்லையா?"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை!"
------- -கவியரசர் கண்ணதாசன்
வாய்ப்பு எனும் சொல் ஒன்றைப் பெறுவதற்கு அல்லது ஒன்றைச் செய்வதற்கு
உரிய அனுகூல நிலையைக் குறிக்கும். Opportunity என்பது அதற்குச்
சரியான ஆங்கிலச் சொல்!
எந்த நிலையிலும் அந்த ”அனுகூல’ நிலை என்பது மிகவும் முக்கியம்.
அந்த நிலை சிலருக்குத் தேடிவரும். சிலருக்குக் கண்ணாம்பூச்சி காட்டும்.
வாய்ப்பு என்று ஒன்று இருக்கிறது. அது இல்லாமல் ஒருவன் தன் வாழ்க்கையில்
முன்னுக்கு வரமுடியாது.
இளையராஜாவுக்கு வாய்ப்பு, கவிஞர் பஞ்சு அருணாசலம் மூலமாகக் கிடைத்தது.
பெரிய இசையமைப்பாளராக, நாடறிந்தவராக அவர் ஆனார். அவர் நுழைந்த நேரம், அன்னக்கிளி’ படம், ”மச்சானைப் பார்த்தீங்களா? மலைவாழைத் தோப்புக்குள்ளே” பாடல், அதைப் பாடிய ஜானகி அம்மாவின் குரல் என்று ஏகத்துக்கும் எல்லாம் மிகச் சிறப்பாக அமைந்தது.
அப்படி எல்லாமும் சிறப்பாக அமைந்ததும் ஒரு வாய்ப்புதான். அதை இறைச்செயல் எனலாம். அல்லது ராஜாவின் ஜாதகப் பலன் எனலாம்.
அல்லது அவர் வாங்கிவந்த வரம் எனலாம்.
எல்லோருக்கும் அப்படிக்கிடைக்கிறதா?. எத்தனை பேர் ஆர்மீனியப்
பெட்டியோடு சென்னையில் இன்றைக்கும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்?
வெறும் முயற்சி மட்டும் போதும் என்றால் அவர்கள் அத்தனை பேர்களுக்கும்
இசையமைப்பாளர்களாக ஏன் ஆகவில்லை?
"சார், இளையாராஜாவுக்கு ஒன்னும் எக்மோர் ஸ்டேசன்ல போய் இறங்கினவுடன
வாய்ப்புக் கிடைக்கல. லட்சியத்தை மனசுல வச்சிகிட்டு மனுசன் பத்து வருசம்
பாடுபட்டிருக்காரு. அதோட அந்த பத்துவருட காலத்தில் தன்னுடைய முயற்சியாலும், பயிற்சியாலும் இசையில ஏகப்பட்ட விஷயங்கள்ள கற்றுத் தேறியிருக்கார். அதுதான் முக்கியம். கிடைச்ச வாய்ப்பை வச்சுத்தான் அவர் முன்னுக்கு வந்தார்னு சொல்றது தப்பு. விடாமுயற்சியாலதான் அவர் வெற்றி பெற்றார். இல்லையின்னா இரண்டு படத்தோட அவர் ஊருக்குத் திரும்பியிருப்பார்!"
"தம்பி, இங்கே வாய்ப்புன்னு நான் சொல்றது அதிர்ஷ்டத்தை, தெய்வ அருளைச்
சொல்றேன். அது இல்லாமல் எப்படி ஒருவன் சாதிக்க முடியும்? ஒருத்தனுக்கு
முயற்சி செய்து வங்கியிலேயே வேலை கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.
எல்லா வங்கியிலயும் ஒரே மாதிரியாகவா சம்பளம் இருக்கு? கிராம வங்கி,
தனியார் வங்கி, அரசு வங்கி, பன்னாட்டு வங்கின்னு எத்தனை விதமான
வங்கியிருக்கு? கிராம வங்கியில சேர்ந்து கீழப்பூங்குடியிக் கிளையில் வேலை
செய்கின்ற ஒருத்தன், சிட்டி பாங்க்கோட சிங்கப்பூர் கிளையில் வேலை
கிடைகின்றவனோட வளர்ச்சியை எப்படிப் பெறமுடியும்? எல்லாத்துக்கும்
ஒரு அம்சம் வேண்டாமா?."
அந்த அம்சம் என்பதுதான் ஜாதகம்.
ஒருவருக்குப் படிக்கும்போதே, இறுதியாண்டில் வேலைக்கான நியமன
உத்தரவு கிடைக்கிறது. ஒருவருக்கு, படித்து முடித்து மூன்று நான்கு
ஆண்டுகளானாலும் வேலை கிடைப்பதில்லை. ஒருவருக்கு விரும்புகின்ற
வேலை, விரும்புகின்ற ஊரில் கிடைத்து விடுகிறது. வேறு ஒருவருக்கு
விருப்பமில்லாத துறையில் வேலை, வசதியில்லாத ஊரில் கிடைக்கிறது!
ஒருவருக்குக் கை நிறையச் சம்பளம். ஒருவருக்குக் கைக்கும் வாய்க்குமான
வருமானம்.
ஒருவர் திரை உலகில் நுழைந்த அன்றே இயக்குனர் (மணி ரத்தினம்)
பலர் திரை உலகில் அடியெடுத்து வைத்துப் பல ஆண்டுகளாகியும்
இன்னும் உதவி வசனகர்த்தா அல்லது உதவி இயக்குனர்.
ஏன் அப்படி? யோசித்துப் பாருங்கள்
அதேபோல் unorganized sector எனும் ஒழுங்கின்றி இருக்கும் பல துறைகளில்
வாடிக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை லட்சம் பேர்கள்.
பேருந்து, லாரி, ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள்.
ஜவுளி, மளிகைக் கடைகளில் வேலை பார்ப்பவர்கள்.
தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்.
கட்டுமானத்துறையில் கொத்தனார் மற்றும் சித்தாள் பணிகளைச்
செய்பவர்கள்.
பாரம் தூக்கும் தொழிலாளர்கள்.
நூற்பாலைகள், விசைத்தறிகளில் வேலைபார்க்கும்
(வாரக் கூலித்) தொழிலாளர்கள்
வயல்களில் தினக்கூலி அடிப்படையில் உழவு வேலையில்
ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்.....இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.
அவர்கள் எல்லாம் முழு விருப்பத்துடனும், முழு ஊதியத்துடனுமா அங்கே
பணி செய்கிறார்கள்?
பட்டுக்கோட்டையார் உழவுத்தொழிலாளர்களைப் பற்றி அசத்தலாக இரண்டே
வரிகளில் இப்படிச் சொன்னார்:
“ஆடிப்பாடிக் கதிரறுப்போம் ஆனந்தத்தோடு - ஆனா
அறுத்த கதிரு போற இடம் வேறொருவீடு!”
பட்டுக்கோட்டையார் இன்னொன்றையும் சொன்னார்:
“வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விடமாட்டான்”
அது அவர் வாழ்ந்த காலத்துச் சிந்தனை!
இன்று வசதி படைத்தவனுக்கு எல்லாம் நடக்கிறது.
சட்டம் உட்பட சர்வமும் வளைந்து கொடுக்கிறது!
==============================================
நமது பிறப்பிலேயே ஒரு Opportunity அமைந்திருக்கும்.
பணக்காரர் வீட்டில் மூத்த பிள்ளையாகப் பிறக்க வேண்டும்
ஏழை வீட்டில் கடைசிப் பிள்ளையாக பிறக்க வேண்டும்
என்பார்கள்
பணக்காரர் வீட்டில் மூத்தவன் தட்டி அனுபவித்தது போக மீதி
உள்ளதுதான் இளவல்களுக்குக் கிடைக்கும்.
அதுபோல ஏழைவீட்டில் மூத்த பிள்ளையின் மேல் எல்லாபாரமும்
ஏறிக்கொண்டுவிடும். அந்த வீட்டு இளவல் தப்பித்து விடுவான்
இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தி வீட்டில் பிறந்திருந்தால் நீங்கள்
எதற்காக வேலை தேட வேண்டும்?
ஷாரூக்கான் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காகச்
சம்பாதிக்க வேண்டும்?
அமிதாப் பச்சன் வீட்டில் பிறந்திருந்தால், நீங்கள் எதற்காக வரன் தேட
வேண்டும்? வந்து க்யூவில் நிற்கமாட்டார்களா?
ஆகவே வாய்ப்பு முக்கியம். மற்றதெல்லாம் அடுத்தபடிதான்!
-----------------------------------------------------------------------
பத்தாம் வீடு, அதன்காரகன் சனீஷ்வரன் ஆகியவை பற்றி நிறைய
எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களில் அவைகள் உள்ளன.
புதிதாக வந்துள்ள மாணவர்களை, அவற்றைப் படிக்க வேண்டுகிறேன்.
------------------------------------------------------------------------
சரி, இன்றைய பாடத்திற்கு வருகிறேன்.
வேலைக்கு உரிய இடம் 10ஆம் வீடு.
அதைப் பலவிதமாக அலசினால், மேற்கூறிய விவரங்கள் எல்லாம் தெரியும்.
அதைப் பிறகு ஒரு நாள் அலசுவோம்.
இப்போது வேலையின்றி இருப்பவர்களுக்கும், அல்லது நல்ல வேலை
எப்போது கிடைக்கும் என்று ஏக்கத்துடன், ஆதங்கத்துடன் இருப்பவர்களுக்கும்
ஒரு நல்ல தீர்வைச் சொல்லும் முகமாக இந்தப் பதிவை எழுதத் துவங்கினேன்.
வேலை கிடைக்குமா?
நாம் விரும்பும் வேலை கிடைக்குமா?
எப்போது கிடைக்கும்?
எதனால் தாமதம்?
என்பது போன்ற விஷயங்களை அலசவுள்ளேன். அந்த அலசலை முன் மாதிரியாக வைத்து ஒவ்வொருவரும் அவர்களுடைய ஜாதகத்தை ஈஸியாக அலசிப் பார்க்கலாம்.
அதென்ன சார், ஈஸியாக?
ஆமாம், ஒரு குறுக்குவழி உள்ளது. அதைச் சொல்லித் தருகிறேன்.
ஆனால் இங்கே அல்ல! மின்னஞ்சல் பாடமாக மட்டுமே!
பொறுத்திருங்கள். இன்னும் 24 மணி நேரத்திற்குள் பாடம் உங்கள் மின்னஞ்சல்
பெட்டியில் வந்து இறங்கும்!
இங்கே ஏன் ஏழுதக் கூடாது?
தேவையில்லாத கேள்விக் கணைகளைத் தவிர்ப்பதற்காகத்தான்!
அதோடு அது மேல் நிலைப் பாடம். புதிய வரவுகளுக்கு அது பிடிபடாது!
வகுப்பறையில் இது என்னுடைய 350வது பதிவு!
உங்களைப் போன்ற ஆத்மார்த்தமான வாசகர்கள் எனக்குக் கிடைத்ததும்
Opportunity தான். அதனால்தான் 30 மாதங்களில் என்னால்
350 இடுகைகளை வலையேற்ற முடிந்தது.
அன்புடன்,
வாத்தியார்
--------------------
வாழ்க வளமுடன்!


