Astrology. வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!
இன்று காதலர் தினம்! (Valentine Day)
காதலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
காதலித்தவனையே அல்லது காதலித்த பெண்ணையே மணந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று மணந்து கொள்ளுங்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் இல்லை. காதலுக்காக அவர்களைப் புறந்தள்ளிவிடாதீர்கள். அவர்களை அழ வைத்தால் அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது!
ஜாதி, மதம், இனம் குறுக்கே வந்து அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது?
போராடுங்கள். உள்ளிருப்புப் போராட்டம் நடத்துங்கள். அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். ஒரு கள்ளியை அல்லது மங்கையாக இருந்தால் ஒரு கள்ளனை வசப்படுத்திக் கைக்குள் போட்டுக்கொண்ட உங்களுக்கு, பெற்றோர்களை வசப்படுத்துவதா கஷ்டம்?
ஆனால் ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்க்காதீர்கள். பார்த்துப் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது? பாதியில் விட முடியுமா? பாதியில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் (SMS), புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், நண்பர்கள் வட்டாரம் என்று சாட்சியாக மாட்டிக்கொண்டு உள்ளனவோ? அவற்றை எல்லாம் எப்படி விலக்க முடியும்? அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் அறை அல்லது காட்டேஜ் எடுத்து, போட்ட ஆட்டங்கள் எத்தனையோ? கணக்கு வைத்துக் கொள்ள முடியுமா என்ன? டூ வீலரில் அல்லது பஸ் பயணத்தில் உரசிய உரசல்கள் எத்தனையோ? ஆகவே ஜாதகத்தை எல்லாம் இருவரும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளுங்கள்.
திருமணத்திற்குப் பிறகு அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான குணம் மற்றும் குடும்ப பாரம்பரியம் முழுமையாகத் தெரியும்போது, பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?
காதல் புனிதமானது. ஒரு வருடம் அல்லது ஒரு மாதம் ஏன் ஒருவாரம் வாழ்ந்தாலும் போதும். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.
ஜாதகம் பார்க்காமல் மணந்து கொள்ளும்போது, அவனுடைய அல்லது அவளுடைய ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அல்லது நீசமாகி ஒன்றுக்கும் லாயக்கில்லாமல் இருந்தால் என்ன செய்வது? அல்லது ஆயுள் பாவம் அடிபட்டுப்போயிருந்தால் என்ன செய்வது?
நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒன்றும் செய்ய முடியாது. இந்த வியாக்கியானம் எல்லாம் காதலில் குதிப்பதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.
என்னிடம் கேட்டிருந்த ஒரு பெண்ணிற்கு இதை எழுதியபோது, சட்டென்று அவள் பதில் அனுப்பினாள்: “சார், எனக்கு அவனைப் பற்றிக் கவலை இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவன் முரண்டு பிடித்தால், அவனைப் பிடித்துக் கொடுத்து, மகளிர் காவல் நிலைத்தில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணி விடுவேன். எனக்குப் பிரச்சினை எல்லாம் என் பெற்றோர்களை வைத்துத்தான். என்னுடைய காதலுக்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்னுடைய திருமணம் அவர்கள் ஆசியுடன் நடக்குமா? அதை மட்டும் நீங்கள் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் ப்ளீஸ்....!”
எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!
அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டுவதா? அல்லது அவளிடம் மாட்டிக்கொண்டுள்ள அப்பாவி ஜீவனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதா நீங்களே சொல்லுங்கள்!
பத்து சதவிகிதம் இப்படியும் இருக்கலாம். ஆகவே காதலர்களே ஜாதகத்தை மறந்து விட்டு, பெற்றோருடைய ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்
உங்கள் திருமண வாழ்வு வெற்றிபெற வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------
“வாத்தி (யார்) கட்டுரைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?”
“இருக்கிறது ராசா, காதலிக்க வழியில்லாமல் (அதாவது ஒருத்திகூடக் கிடைக்காமல்) அல்லது காதலுக்கு வாய்ப்பில்லாம்ல் நேரடியாக திருமண பந்தததில் மாட்டிக்கொண்டு விட்டவர்கள், அல்லது மாட்டிக்கொண்டு விட்டதாக நினைப்பவர்கள் எல்லாம், வருந்தாமல் சூடாக வாழைக்காய் பஜ்ஜி இரண்டைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு கோப்பைஃபில்டர் காப்பியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டுத் தங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்க்கலாம். அதில் காதல் மறுக்கப்பட்டுள்ளது தெரியவரும்! டென்சன் இல்லாமல் பார்ப்பதற்குத்தான் வாழைக்காய் பஜ்ஜி & ஃபில்டர் காப்பி! சம்ஜே க்யா?
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com