காரைக்குடி சொல்வழக்கு !!!!
ஆத்தீயும் , ஆத்தாடீயும்...
செட்டி நாட்டுச் சொல்வழக்கு அழகானது. எதையுமே இழிவான மொழியில் சொல்வதில்லை. தரக் குறைவான வார்த்தைகள் என்பதே இருக்காது. எதைச் சொன்னாலும் அது மொழி அழகோடு சொல்லப்படுவதாகும் என்பதே அதன் சிறப்பு.
220. எசகேடு - இடைஞ்சல்
217. ஊருணி, ஊரணி,கம்மாய் - குளம்
221. வெள்ளன்ன - விடியக்காலம்பற
222. தெங்கணம் - அரை வேக்காடு. சமய சந்தர்ப்பம் தெரியாமல் நடந்து கொள்பவர்களைக் குறிப்பது.
223. ஒச்சம்- குறை. ( கை கால் போன்ற உடலுறுப்பில் குறை)
224 . புட்டா மாவு.- நம்ம பாஷைல பவுடர். ( டால்கம் பவுடர் )
225. கழுசடை - கீழ்த்தரமான
226. கடகால் - வாளி- கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் வாளி.
227. வழுவட்டை - நறுக்கென்று சேதி சொல்லாமல் வழ வழ கொழகொழ என்று பேசுபவரைச் சாடுவது. சரியான வழுவட்டை என்று..
228. பிரிசுபிடிப்பது, பிருசுபுடி - பிகு செய்வது , தான் செய்ய வேண்டியஒரு செயலைச் செய்ய மற்றவர்கள் தன்னை அளவுக்கதிகமாகத் தாங்கிக் கேட்கவேண்டும் என நினைப்பது. கெஞ்சி கொஞ்சியபின் செய்வது.
229. மலுக்கிக்குவா - இதுவும் பிகு செய்வதுதான்.
230. மெனக்கெட்டு - வலிய வந்து,செய்யும் வேலையை விட்டுட்டு வந்து அடுத்தவருக்காக உதவுவது,
231. ஆத்தீ - ஒரு செயல் நிகழந்தவுடன் அச்சத்திலோ ஆச்சர்யத்திலோ விஷயத்தின் வீரியம் பொறுத்துச் சொல்லப்படும் வார்த்தை. அடியாத்தீ அப்பிடியா என்றும் சொல்வதுண்டு.
232. ஆத்தாடி, ஆத்தாடீ -ஒரு விஷயம் அவசரமாய் நிகழ்கிறது அல்லது நிகழப் போகிறது . அல்லது நிகழ்ந்த ஒரு விஷயத்தை நிகழ்காலத்தில் கூறும்போது சொல்லப்படும் ஒரு வார்த்தை. அதிர்ச்சியிலும் சொல்லப்படும் வார்த்தை.
233. . கூதரை - புரியாமல் சேதி கேட்டு செயல் செய்வது ( ரெண்டுங்கெட்டான்)
234. பொக்குன்னு- அவசரமாக. சீக்கிரமாக ( பொக்குன்னு வேலை பார்த்திருவா )
235. பொக்கை வாய்ச் சிரிப்பு - பல் இல்லாத ஒருவரின் சிரிப்பு, வயதானவர்களின் / குழந்தைகளின் சிரிப்பு.
236. ஊத்தை.- பல்லில் இருக்கும் அழுக்கு, அதே ஒரு மனிதரின் கீழ்ப்பட்ட குணத்தையும் குறிக்க அது ரொம்ப ஊத்தைப் பிடிச்சது என்பார்கள். உடல் சம்பந்தமான சுத்தமின்மை உள்ளவர்களையும் குறிக்கும்.
237. மொதும்பி - ஊறி. பருப்பு வகையறாக்களை நீரில் போட்டால் ஊறி மொதும்பி நிற்கும். அதே போல பஞ்சு அடைத்த தலையணைகள் மெத்தைகள் நீரில் ஊறிவிட்டால் மொதும்பி நிற்கும். அதை வெய்யிலில் காயவைத்து எடுப்பார்கள். ஒரு பொருள் அதிகமாகி விட்டாலும் அதை மொதும்பிப் போச்சு என்பார்கள்.
238. அசமஞ்சம் - சோம்பேறி. மஞ்சத்தில் படுத்துக் கொண்டு அசையாமல் இருப்பவர்.
239.பொச கெட்ட - உணவு குறித்து அதீதமான ஆசையுள்ள. அல்லது ஏதேனும் ஒரு பொருள் குறித்து - தனக்கு உரியது இல்லாத ஒரு பொருளை அடைய ஆசை கொண்டு நடந்து கொள்வது பொசகெட்டதனம் எனப்படும்.
240. இஞ்சே -பெண்களைக் கூப்பிடுவது. சில ஊர்களில் சில சமயங்களில் கணவன் மனைவியை ஆசையுடன் விளிப்பதும் கூட.
241. அடம் - அடம் செய்யும் குழந்தைகளைக் குறிப்பது.
242. சீண்ட்ரம் - எது கேட்டாலும் கோபத்தோடு கத்தும் குழந்தைகளைக் குறிப்பது.
243. பொல்லாப் பூடம்.. - சேட்டை செய்யும் குழந்தைகளை குறிப்பது.
244. அட்டணக்கால் - கால் மேல் கால் போட்டு அமர்தல்.
245. அலக்கழிக்கிது - கேலி செய்யுது
246.ஒறண்டை - வம்புக்கு இழுப்பது
247.ஆக்கங் கெட்ட கூவை - புத்தியில்லாமல் செயல் செய்பவர்.
248.தன்னப்போணி - சுயநலம் பிடித்தவர். தன்னை மட்டுமே பேணுபவர்.
249. ஒள்ளத்தி - கொஞ்சூண்டு
250.மூதலிப்பது - நிரூபிப்பது
251.மருக்கொளி - மக்கு, விபரம் இல்லாதவர்.
252.வெளம் - கோவம்
253.நசுவுளி - கள்ளத்தனம் கொண்ட செய்கை. ( நசுவுளித்தனம் பிடிச்சது )
254.கிருத்துருவம் - சேட்டை
255.லண்டி/ லண்டிமட்டை - சொல் பேச்சு கேளாத பெண்.
256. சகடை - இழு இழுவென்று வேலை செய்பவர். செய்த வேலையையே செய்துகொண்டு இருப்பவர்.
257.தாக்கல்- ஒரு செய்தியை மற்றவர்களுக்கு சொல்வது.
258. பாயிவரப்பான் - கெடுமதி கொண்டவர்களைக் குறிப்பிடுவது. வரைமுறையற்ற பாவி எனத் திட்டுவது.
.
259. பட்டுக்கிடப்பான் - இதுவும் ஒரு திட்டுதான்.. கஷ்டப்படவேண்டும் எனது திட்டுவது. ஆனால் பட்டில் கிடப்பான் என வாழ்த்துவதாகவும் வரும்.
260 . அரசாளுவ - இது ஒரு திட்டு.. அட அரசாளுவ என்று செல்லமாகத் திட்டுவார்கள். ஆனால் திட்டினாலும் அரசை ஆளுவாய் என்பதன் மரூஉ.
272. கடுகடுன்னு - கோபமாக இருத்தல், கோபமாகப் பேசுதல், கோபமாகப் பார்த்தல். மூஞ்சியைக் கடுப்பாக வைத்துக் கொள்ளுதல்.
273. வலுசாறு - பொல்லாத மனிதரைக் குறிப்பிடுவது. பொதுவாக பெண்கள் அல்லது பெண் குழந்தைகளைத்தான் குறிப்பிடப் பயன்படுவது. அது ரொம்ப வலுசாறு. பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளையும் குறிப்பிடுவார்கள். “ அது ரொம்ப வலுசாறு, நெனைச்சதச் சாதிக்கும் “ என்று.
274.கோணங்கி - கிறுக்குத்தனமாகச் செயல் செய்பவரைக் குறிப்பிடுவது. பொதுவாக ஆணைக் குறிப்பிடுவது. அவன் ஒரு கோணங்கிப் பய என்று.
275. குசும்பு - குறும்பு மிக அதிகமானால் அது குசும்பு எனக் கொள்ளப்படும். வம்பு என்றும் பொருள். வம்படியாகப் பேசுவதையும் குசும்பு என்பார்கள்.
276.தெளியாது - ஒரு விஷயத்தில் மனம் தெளியாமல் இருப்பதைத் தெளியாது என்பார்கள். அடுத்தவருக்கு ஒரு பொருளைக் கொடுப்பதற்கு மனம் ஒப்பாதவரையும் தெளியாது என்பார்கள்.
277. பிசினாரி/கசம்/தைக்கசம் - கஞ்சம் பிடித்தவரைக் குறிப்பது. யாருக்கும் எதையும் கொடுக்க மனமில்லாதவர். தனக்கே எதையும் மனசாரச் செய்துகொள்ளாதவரையும் பிசினாரி , கஞ்சப் பிசினாரி எனச் சொல்வதுண்டு. உலோபி என்றும் சொல்லலாம். ”அதுவா தைக் கசம் என்பார்கள். தைக் கசம் என்றால் ”அய அது ஒரு கஞ்சம் ”என்று அர்த்தம்
278.தைக்கருமம் - தைக்கசம் என்பது போலத்தான் தைக் கருமமும். அய்ய கருமம் பிடிச்சது என்பதைக் குறிப்பிடுவது. ஒரு விஷயம் மனதுக்கு ஒப்பவில்லை என்றால் தைக்கருமம் எனச் சொல்வார்கள். பிடிக்காத ஒருவரை “தைக் கருமம் அது ஒரு சர்வ பாடாவதி” எனச் சொல்வதுண்டு.
279. கொணக்கேடு - குணக் கேடு. குணத்தால் திரிந்தவரைச் சொல்வது. ஒரு சமயம் அன்பாகவும் ஒரு சமயம் வம்பாகவும், சண்டைக் கோழியாகவும் நடந்து கொள்பவரைக் குறிப்பது.
280. குந்தாணி/குந்தாணி மட்டை - (ஒரு வேலையும் செய்யாமல் ) இருந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருக்கும் பெண். குண்டாக இருக்கும் பெண்ணையும் குறிப்பதுண்டு.
இதில் விடுபட்ட மற்றும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை கமெண்டில் தெரிவியுங்கள்.
-----------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com