மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.5.22

பல வெற்றிகளைக் கண்ட ஸ்டுடியோ!!!!


பல வெற்றிகளைக் கண்ட ஸ்டுடியோ!!!!

ஜெமினி_ஸ்டுடியோஸ் - 

தமிழ் சினிமாவில் தன் தடயத்தை ஆழப் பதித்த பெரிய நிறுவனம் ஜெமினி ஸ்டுடியோ. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களையும் எடுத்து சாதனைப் பட்டியலை அடுக்கிக்கொண்டே சென்றது. 1941ல் ‘மதன காமராஜன்’ என்ற படம் ஜெமினி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது, அக்கால பிரபல கர்நாடக சங்கீதக் கலைஞர் வி.வி.சடகோபன், அன்றைய பேரழகி கே.எல்.வி.வசந்தா ஆகியோர் இணைந்து இந்த படத்தில் நடித்தனர். பிரபல டைரக்டர் பி.என்.ராவ் இயக்கினார்.

‘மதன காமராஜன்’ படத்தைத் தொடர்ந்து ‘மிஸ் மாலினி’ வரையில் 7 ஆண்டுகளில் 11 திரைப்படங்களை எடுத்து வெற்றிக்கண்டது. வாசன் தன் 12-வது படமாக தனது ஜெமினி ஸ்டுடியோவின் நிரந்தர ஆஸ்தான ஹீரோ நடிகரான எம்.கே.ராதா, ரஞ்சன் மற்றும் அன்றைய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரை வைத்து, ஆங்கிலப்படங்களுக்கு நிகரான ஒரு பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலும், லட்சியத்திலும் 1948ல் ‘சந்திரலேகா’வைத் தொடங்கினார்.

ஆங்கிலப் படங்களுக்கு நிகரான அற்புதக் காட்சிகள் நிறைந்த, தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக 30 லட்ச ரூபாய்களுக்கு மேல் செலவு செய்து, பதினெட்டாயிரம் அடிகள் நீளத்தில் தயாரிக்கப்பட்டு, தமிழ்ப் புத்தாண்டுக்கு 5 நாட்கள் முன்னதாக 9.4.1948ல் ரிலீசானது ‘சந்திரலேகா’ திரைப்படம். தமிழ் சினிமா ரசிகர்கள் பிரமித்து திகைத்துத் திரும்பத் திரும்ப அந்தப் படத்தைக் கண்டுகளித்தனர். ‘சந்திரலேகா’ போன்ற பல பிரமாண்டமான திரைப்படங்களையும் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களையும் தயாரித்து சரித்திரச் சாதனை படைத்தது ஜெமினி ஸ்டுடியோ.

அன்றைய சினிமாவின் பிதாமகரும், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஸ்டுடியோ அதிபருமான கே.சுப்ரமணியம் அவர்கள், மவுன்ட் ரோட்டில் தனக்குச் சொந்தமான ஸ்டுடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அதை விற்றுவிடத் தீர்மானித்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட எஸ்.எஸ்.வாசன், எண்பத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கி ‘ஜெமினி ஸ்டுடியோஸ்’ என்று பெயரிட்டு அதன் கீழே ‘மூவிலேண்ட்’ என்றும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்தார்.

ஜெமினி - ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு சொற்களுக்கும் இடையில் ‘இரட்டை’ என்பதைக்  குறிப்பதன் பொருட்டு கோவணம் கட்டிக்கொண்டு குழலூதும் இரண்டு குழந்தைகளின் அழகிய உருவத்தையும் வரைந்து வைத்தார்... 78 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ‘சதிலீலாவதி’ திரைப்படம் அது சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்குமே அறிமுகப்படமாகவும், ஒரு லட்சியப் படமாகவும் அமைந்தது. அந்தப் படத்தின் ஒரு சாதாரண கதாசிரியராகத்தான் எஸ்.எஸ்.வாசன் தனது திரைப்படப் பயணத்தையும், திக் விஜயத்தையும் தொடங்கினார்!

1958ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி தென்னக திரை வரலாற்றில் முதன்முதலாக ஜெமினி கலர் லெபாரட்டரி திறக்கப்பட்டது அதன் தனிச்சிறப்பு. ஜெமினி ஸ்டுடியோவில் தமிழில் 28 படங்களும், தெலுங்கில் 19 படங்களும், இந்தியில் 24 படங்களும், குஜராத்தி, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் 7 படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. சந்திரலேகாவைப்போல மற்றொரு பிரமாண்ட படைப்பாக 1953ல் ‘அவ்வையார்’ படத்தை வாசன் தயாரித்து வெற்றி பெற்றார்.

சினிமாவிற்கான எந்தச் சிறப்பம்சமும் இல்லாத அவ்வையாரின் வரலாற்றை அனைத்துத் தரப்பு ரசிகர்களும் பார்த்துப் பாராட்டும்படியான ஒரு வெற்றிப்படத்தை தந்தது. அவ்வையார் பாத்திரத்தில் தோன்றி நடிக்க அன்றைய பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியாகப் புகழ் பெற்ற ‘கொடுமுடிக்கோகிலம்’ என்று அழைக்கப்பெற்ற கே.பி.சுந்தராம்பாளை வாசன் தேர்ந்தெடுத்தார். அவ்வையார் வேடம் அணிந்து அற்புதமாகப் பாடி, அருமையாக நடிக்கவல்ல ஒரு நடிகை இன்றுவரையில் வேறு எந்தப் பெண்ணும் பிறக்கவில்லை என்று அனைவருமே கூறும் அளவிற்கு கே.பி.சுந்தராம்பாள் வயதிலும், தோற்றத்திலும் அப்படிப் பொருந்தி அமைந்திருந்தார்.

அந்த ஒரு சினிமா சிந்தனையே அவருடைய அறிவிற்கும், அனுபவத்திற்கும் மாபெரும் வெற்றியை தந்தது. தஞ்சாவூர் பகுதியில் அமைந்த திருத்துறைப்பூண்டியில் 1904ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி ஒரே மகனாகப் பிறந்தார் ஸ்ரீநிவாசன் என்னும் வாசன். நான்கு வயது இளம் பருவத்திலேயே தன் தந்தையை இழந்து தாயாருடன் அவருடைய உடன் பிறந்த மூத்த சகோதரியின் வீட்டில் தங்கி ஆரம்பக் கல்வி கற்று வந்தார்.

ஏழ்மை நிலையின் காரணமாக சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த தாய் வாலாம்பாள், அந்தக் காலத்தில் கைம்பெண்களுக்குக்கென்றே ஏற்பட்ட இட்லி வியாபாரம் செய்து கொண்டு தன் மகனை வளர்த்து அருகிலிருந்த எலிமென்டரி ஸ்கூலில் படிக்க வைத்தார். உயர்நிலைப்பள்ளிக் கல்வி முடிந்து மேற்கொண்டு பட்டப்படிப்பிற்காக சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பு நிறைவு பெற்று அரசாங்க உத்தியோகம் பார்ப்பதைவிட தொழில் செய்து முன்னேற்றம் அடையலாம் என்ற நோக்கத்துடன் பலவிதமான சிறு சிறு தொழில்களை மேற்கொண்டு அதில் கணிசமான லாபமும் பெற்ற வாசன் ஜெமினி ஸ்டுடியோவையும் வரலாற்றில் இடம்பெறச் செய்தார்.

ஜெமினி ஸ்டுடியோ குறித்து பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி கூறுகையில், ‘‘என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒரு நிறுவனம் ஜெமினி ஸ்டுடியோ. 19வது வயதிருக்கும் போது ஜெமினி சார் என்னுடைய திறமையைக் கண்டு அழைத்தார். அவர் மூலமாகத்தான் எஸ்.எஸ்.வாசன் அவர்களை சந்தித்தேன். தெலுங்கில் ‘மூன்று பிள்ளை’ தொடங்கி தமிழில் ‘ஒளி விளக்கு’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘இருகோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’ ஆகிய படங்கள் எல்லாம் ஜெமினி ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதுதான்.

வாசன் சார் பெண்களுக்கு கொடுத்த அந்த முக்கியத்துவம் இன்று வரை எந்த நிறுவனமும் அளிக்கவில்லை என்றுதான் சொல்லுவேன். என்னுடைய திறமைகளை கண்டறிந்து அதை சரியான முறையில் பயன்படுத்தி வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது ஜெமினி ஸ்டுடியோதான். ஒழுக்கமும், பாதுகாப்பும் நிறைந்தது. முக்கியமாக பெண்களுக்கு கொடுக்கப்படவேண்டிய மரியாதை அங்கு கொடுக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்ததில் எல்லோருமே பெருமைப்படுவார்கள்.

ஒவ்வொரு துறையையும் வாசன் சார் அவர்கள் தனது நேரடி பார்வையில் வைத்திருப்பார். பணியாற்றக்கூடிய அனைத்து ஊழியர்களிடமும் அன்போடும் பழகக்கூடியவர். ஜெமினி ஸ்டுடியோவில் ஆண்-பெண் அனைவரும் சமம். இது ஒரு நிறுவனமாக இருந்தது என்பதை விட ஒரு குடும்பமாகத்தான் இருந்தது. கடைநிலை ஊழியரின் கருத்துக்களையும் கூட கேட்பவர் வாசன். ஒரு தந்தையை விட அதிகமாக அக்கறை எடுத்துக்கொள்ளும் மனிதாபிமானம் மிக்க மனிதர். ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது.

ஒரு நாள் படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து விட்டேன். அப்போது நான் குழந்தை பெற்று மூன்று மாதங்கள் இருக்கும். உடல்நிலை கொஞ்சம் பலவீனமாக இருந்தது. உடனே அவருக்கு தெரிந்த மருத்துவரை அழைத்து வந்து மருத்துவம் பார்த்து, நான் எழுந்தவுடன்  என்னை அழைத்து என்னுடன் உரையாடி, கவலைப்படாமல் உன்னை நீ கவனித்துக்கொள்ள வேண்டும். உனக்கு இருக்கின்ற திறமை கண்டிப்பாக உன்னை உயர்த்தும் என்று தன்னம்பிக்கையை தந்தார். என்னுடைய வாழ்நாளில் அப்படி ஒரு தயாரிப்பாளரையும் ஒரு நிறுவனரையும் நான் இதுவரை பார்த்ததில்லை’’ என்றார்.

- ஜெ.சதீஷ்
------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com