மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.3.19

Short Story: சிறுகதை: சித்தநாதன் கணக்கு


Short Story: சிறுகதை: சித்தநாதன் கணக்கு

அடியவன் எழுதி இந்த மாத மாத இதழ் ஒன்றில் வெளியாகி, பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை ஒன்றை, நீங்கள் அனைவரும் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். படித்து மகிழுங்கள்!!!!

அன்புடன்
SP.VR.சுப்பையா
-----------------------------------------------------------------------------
சிறுகதை: சித்தநாதன் கணக்கு! 

"அடுத்த பிறவி என்று ஒன்று இருந்து - ஒருவர் இறந்த பிறகு,
அவரிடம் இருக்கும் சொத்துக்களை, சேமித்து வைத்துள்ள பணத்தை அடுத்த பிறவிக்கு எடுத்துக் கொண்டு போகலாம்
என்ற வசதியையும் கடவுள் கொடுத்திருந்தால் - ஒரு பேச்சுக்கு என்று வைத்துக்கொள்ளுங்களேன் - உங்கள் அப்பச்சி உங்களுக்கென்று எதை வைத்துவிட்டுப் போயிருப்பார் - எவற்றையெல்லாம் கொண்டு போயிருப்பார் - சொல்லுங்கள் பார்க்கலாம்" என்று கதிரேசன் கேட்டவுடன் அவரது நண்பர் ராமண்ணன் புன்னகைத்தார்.
யோசனையில் ஆழ்ந்து விட்டார்.

ராமண்ணனின் முழுப்பெயர் இராமநாதன் செட்டியார். வயது 50 ஆகிறது. அவர் கதிரேசனுக்கு சமவயதுக்காரர். இருவரும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள். திருப்பூரில் வாசம். அண்ணன் என்று ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வார்கள். அதெல்லாம் ஒரு மரியாதைக்காகத்தான்.

"என்ன மெளனமாக இருகிறீர்கள் - கற்பனை செய்து மனதில் தோன்றுவதைச் சொல்லுங்கள்" என்று தொடர்ந்து சொன்னார் கதிரேசன்.

உடனே பட்டென்று பதில் சொன்னார் அவர்.

"இதில் கற்பனைக்கெல்லாம் ஒன்றும் வேலையில்லை. உண்மையைச் சொன்னால் - எங்கள் அப்பச்சி எங்களுக்கு ஒன்றையும் வைத்து விட்டு போயிருக்கமாட்டார். மேலும் எங்கள் இடுப்பில் இருக்கும் பட்டுக்கயிரைக் கூட நான் கட்டியது என்று உருவிக் கொண்டு போயிருப்பார்"

"பிறகென்ன? இருக்கும் ஐம்பது கோடி ரூபாய் சொத்தும் இலவசமாக
வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்குள் ஏன் இவ்வளவு சண்டை, சச்சரவுகள்? உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து பேசி சந்தோசமாக அவற்றைப்பிரித்துக் கொள்ளுங்களேன்.

"இல்லை கதிரேசன், பிரச்சினை பிறந்தவர்களால் இல்லை. எங்கள் வீட்டிலுள்ள அண்ணன், தம்பி ஆச்சி, தங்கைகளுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை. எங்கள் அறுவருக்கும் திருமணம் என்ற ஒன்று நடக்காமல் இருந்திருந்தால் நாங்கள் சின்னவயதில் இருந்ததைப்போன்று அன்பாகப் பாசமாக, ஒற்றுமையாக இன்று
வரை இருந்திருப்போம்.பிரச்சினை எல்லாம் வந்தவர்களால்தான். எங்கள் வீட்டுப் படியேறிவந்த மாப்பிள்ளைகள், மருமகள்களால்தான் எல்லாச் சிக்கல்களுமே.
என் மனைவியையும் சேர்த்துதான் இதைச் சொல்கிறேன். அரிசி, பருப்பு, வெல்லம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் என்று சேர்ந்து இனிக்கும் பாயசமாக இருந்த எங்கள் வாழ்க்கையில் உப்பு, புளி, மிளகாய்த்தூள் என்று காலதேவன் பல பொருட்களைக் கொட்டிக் கலந்து விட்டுப் போய்விட்டான். நாங்கள் இப்போது ருசிக்கும் பாயசமாகவும் இல்லை மணக்கும் குழம்பாகவும் இல்லை!"

"வந்தவர்களை மட்டும் குறை சொல்லாதீர்கள் ராமண்ணே! உங்கள் ஆறு பேர்களுக்கும் இ¢டையே தற்போது ஒரே மாதிரியான எண்ணங்கள், சிந்தனைகள், செயல்பாடுகள் உள்ளனவா சொல்லுங்கள்!"

"எங்கள் ஆறுபேர்களுடைய எண்ணம், சிந்தனை, செயல்பாடுகள் எல்லாம் கெட்டுப் போய் விட்டன. ஒப்புக்கொள்கிறேன். அதற்குக் காரணம் நான் சொன்னதுதான். எங்களைக் கட்டிக் கொண்டவர்களால் ஏற்பட்டதுதான் அது!"

புன்னகைத்த கதிரேசன் அழுத்தமாகச் சொன்னார்.

"சாவியில்லாத பூட்டை யாரும் தயாரிப்பதில்லை. அதுபோல இறையமைப்பில் தீர்வு இல்லாத பிரச்சினையே கிடையாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைதான் உங்கள் பிரச்சினைக்கான சாவி. அதாவது தீர்வு!"

"நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் எங்களிடம் சாவிகள் இல்லை. சாவிகளெல்லாம் வந்தவர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது. வைக்கப்போரில் கட்டியிருக்கும் நாயைப் போல அவர்களும் திறந்து விடமாட்டார்கள். எங்களையும் திறக்க விடமாட்டார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவர்களிடம் இல்லை. அதை எங்களால் உண்டாக்கவும் முடியாது. அவர்களை மீறி ஒன்றும் செய்யவும் முடியாது"

"மற்றவர்களை விடுங்கள். நீங்கள் சொன்னால் உங்கள் மனைவி கேட்பாரா? மாட்டாரா?"

"சொந்த விஷயம் என்றால் கேட்பாள். பெரிய வீட்டுப் பிரச்சினை என்றால் கேட்க மாட்டாள். இல்லாத வீட்டில் இருந்து வந்தவள் என்பதற்காக, தன் நாத்தினார்கள் இருவரும் தன்னைக் கழுதையை விடக்கேவலமாக நடத்தினார்கள் என்கின்ற ஆதங்கம் அவள் மனதில் ஆறாத ரணமாக இன்றைக்கும் உள்ளது. அதை எப்படி ஆற்றுவது நீங்களே சொல்லுங்கள்?''

"சரி இந்த நாற்றச் சண்டையால் எதை இழக்கிறோம்? எதெது முடங்கிக் கிடக்கிறது என்பதை ஒருவர்கூட உணரவில்லையா?"

"என்னைத் தவிர யாரும் உணரவில்லை. உணரும் நிலையிலும் இல்லை. எல்லாவற்றிற்கும் தன்முனைப்புதான் (ego) காரணம். ஒருமுறை எடுத்துச் சொன்ன போது என்ன சொன்னார்கள் தெரியுமா?"

"என்ன சொன்னார்கள்?"

"உனக்கு மனசிருந்தால் ஒன்றும் வேண்டாம் என்று நீ விட்டுக்கொடுத்துவிட்டுப்போ. மற்றதை சட்டப்படி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். பழநியாண்டவன் சித்தம் அதுவாகத்தான் இருக்கும் என்றால் அதற்கும் நான் தயார் என்று சொல்லி விட்டுவந்தேன்"

"எப்போது சொன்னீர்கள்? யாரிடம் சொன்னீர்கள்?"

"எங்கள் பெரிய அண்ணனும், இரண்டாவது அண்ணனும் ஒரு கூட்டணியாக உள்ளார்கள். அவர்களிடம்தான், சென்ற வாரம் நடந்த தர்க்கத்தில் சொல்லிவிட்டு வந்தேன்"

"ஆண்டவன் சித்தம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? பாருங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்" என்று சாமி வந்ததைப் போல சொன்னார் கதிரேசன்.

ராமண்ணன் வியப்பு மேலிடக் கேட்டார், "எப்படிச் சொல்கிறீர்கள்?"

"பழநியப்பன் சித்தநாதன். சித்தர்களுக்கெல்லாம் நாதன் அவன். அரிய சக்திகளை உடையவன். தன்னை நம்பியிருக்கும் பக்தர்களுக்கெல்லாம் அருள்பாலிப்பவன் அவன். அவன் சித்தம் என்று சொல்லிவிட்டீர்கள் அல்லவா? என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்" என்று உணர்வு மேலிடச் சொன்ன கதிரேசன் தங்களுடைய உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவாறு எழுந்து விட்டார்.

என்ன நடந்தது?

மேலே படியுங்கள்!

***********************************************************8

ராமநாதனின் அப்பச்சி மெய்யப்ப செட்டியார் அவர்கள் தான் உயிரோடு இருந்த காலம்வரை எல்லாவற்றையும் தன் காலடியிலேயே வைத்திருந்தார். விளங்கச்
சொன்னால் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார்.

அபரிதமான சம்பாத்தியம். பங்கு வணிகத்தில் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. மண் கூடப் பொன்னானது. உப்புமா கம்பெனிகூட அவர் பங்கை வாங்கினால் உலகளாவிய கம்பெனியாக மாறியது. நான்கு மகன்களையும் நன்றாகப் படிக்க வைத்தார். இரண்டு மகள்களையும் நன்றாகப் படிக்க வைத்ததோடு, கொட்டிக் கொடுத்துப் பெரிய இடங்களில் மணம் செய்தும் வைத்தார்.

பத்து வருடங்களுக்கு முன்பு, அதாவது தன்னுடைய 72வது வயதில், ஒரு நாள் பொட்டென்று போய்விட்டார். வீட்டோடு இருந்த நெடுங்குடிச் சமையற்காரரின் சாப்பாட்டை மத்தியானம் சாப்பிட்டு விட்டுப் படுத்தவர். எழுந்திரிக்கவேயில்லை.
அவருக்கு முன்பாகவே அவரது மனைவியும் போய்ச் சேர்ந்திருந்ததால், அவரை எழுப்பவும் ஆள் இல்லை.

அடுத்தவீட்டுச் செட்டியார்தான், அவரின் முகப்பு அறைக் கதவைத் தட்டிக் கண்டு பிடித்து அனைவருக்கும் தகவல் சொன்னார்.

கேதத்திற்கு வந்தவர்கள் 'நல்ல சாவு' என்ற சான்றிதழை வழங்கிவிட்டுப் போனார்கள்

மரணத்திற்கு மட்டும்தான் முன்னுரிமையும் இல்லை, வயது வரிசையும் இல்லை. எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. அவருக்கு ஆயுசுப் பலனை எழுதிக் கொடுத்த ஜோதிடர்கூட 90 வயது வரை வாழ்வார் என்று எழுதிக்
கொடுத்திருந்தார்.

பதினெட்டு ஆண்டுகளை எந்தக் கணக்கில் பற்று எழுதினான் காலதேவன் என்பது தெரியவில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது? போனவர் போனவர்தானே!

இருந்தவரை திடகாத்திரமாகத்தான் இருந்தார். அதனால்தான் எதையும் தன் மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கவில்லை. உயிலும் எழுதிவைக்கவில்லை.பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தார். எதற்கும் வாய்ப்பே இல்லாமல் காலதேவன் அவரை அள்ளிக் கொண்டு போய்விட்டான்.

அதற்குப் பிறகுதான் சிக்கல் ஆரம்பமானது. அவரின் இறப்பை அறிந்த வங்கி அதிகாரிகள் அவர் பெயரில் இருந்த வங்கிக் கணக்குகள், வைப்புத் தொகைகளிலெல்லாம் சிவப்பு மையால் சுழி போட்டுவிட்டார்கள். அதுவே ஆறு கோடிக்குமேல் தேறும். பிள்ளைகளில் ஒருவர் கூட அந்தப் பணத்தில் கைவைக்க
முடியவில்லை. வாரிசுச் சான்றிதழ், ஆட்சேபனையின்மைக் கடிதம், உரிமை கோரும் கடிதம் என்று ஏகத்துக்கும் கெடுபிடி.

அப்பச்சியின் சவண்டிக்குள்ளாகவே இவர்களுக்குள் ஒற்றுமை போய்விட்டது. முதலில் வீட்டில் இருந்த 200 கிலோ வெள்ளிப் பாத்திரத்தில் ஆரம்பித்த சண்டை,
இரண்டு இடங்களில் அப்பச்சிக்குத் திரேக்கியம் செய்யும் நிலைமையில் முடிந்தது. கடைசியில் வங்கி லாக்கர்களில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.

பெட்டகத்தில் இருந்த இடம், பூமி கிரயப்பத்திரங்கள் எல்லாம் ஒரு மகன் கைக்குப் போய்விட்டது. பிரோ நிறைய இருந்த பங்குப் பத்திரங்கள் எல்லாம் இன்னொரு மகன் கைக்குப் போய்விட்டது. மொத்தத்தில் யாரும் எதையும் விற்கமுடியாத நிலைமை. யாரும் எதையும் அனுபவிக்க முடியாத நிலைமை.

நடப்புச் சண்டைகளால் அனைவருக்கும் பொழுது மட்டும் நன்றாகப் போகிறது!

***************************************************************

மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவிற்குச் சென்று விட்டுத் திரும்பிய இராமநாதன் செட்டியாரை, வக்கீல் நோட்டிஸ் வரவேற்றது. அவருடைய கூட்டணியில் இருந்த மூன்றாவது அண்ணன்தான் அதை அனுப்பியிருந்தார்.

பத்து ஆண்டுகளாகப் பிரிபடாமல் இருக்கும் தங்கள் குடும்பச் சொத்தைத் தன் காலத்திற்குள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாலும், அதற்குரிய சூழ்நிலை தங்கள் குடும்பத்தில் இல்லாததாலும், அசையாத சொத்துக்களில் தனக்குரிய பங்கைப் பிரிபடாத பங்காகத் (undivided share in the properties) தான்
விற்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாட்டில் தான் இறங்கியிருப்பதாகவும், அப்படி விற்கும் நிலையில் குடும்பத்தில் உள்ள மற்ற பங்குதாரர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லை என்றும் எழுதியிருந்தார்.

ராமநாதனுக்குச் சள்ளையாக இருந்தது. திருப்பூரில் தனது வியாபரத்தைக் கவனிப்பதா? அல்லது இதுபோன்ற நச்சரவுகளில் சிக்கிக் கொண்டு உழல்வதா?

தன் மனைவியை அழைத்து நோட்டிஸைக் காண்பித்தார்.

ஆச்சி தெளிவாகப் பேசினார்கள்.

"என்னை மட்டும்தான் உருட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது உங்களையும் உருட்ட ஆரம்பித்து விட்டார்கள். வீட்டில் ஐம்பது அறைகள் இருந்தாலும் ஒரு அறையில்தான் படுக்க முடியும். ஆயிரம் மாடுகள் இருந்தாலும் வேளைக்கு ஒரு ஆழாக்குப் பால்தான் குடிக்க முடியும். நமக்கு நீங்கள் தற்போது சம்பாதிப்பது போதும். சம்பாதித்துச் சேர்த்துவைத்திருப்பது போதும். உங்கள் அப்பச்சியின்
சொத்து ஒன்றுகூட வேண்டாம். எனக்கு ஒன்றுகூட வேண்டாம் என்று அத்தனை பேருக்கும் நீங்கள் நோட்டிஸ் கொடுத்துவிடுங்கள். அப்போதுதான் அடங்குவார்கள்"

செவிட்டில் அரைந்தாற்போன்று இருந்தது மனைவின் சொற்கள்.

மின்னலென ஒரு முடிவிற்கு வந்தார் ராமநாதன்.

அடுத்த இரண்டு நாட்களில் செட்டிநாட்டிலுள்ள தன் சொந்த ஊருக்குச் சென்று அதைச் செயல்படுத்தத் துவங்கினார்.

*********************************************************************
சிவன் கோவில் காரியக்காரரும், மற்றும் கூடியிருந்த அறங்காவலர்களும் திகைத்துப் போய்விட்டார்கள்.

தன் தந்தை வழிப்பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தையும் சிவன் கோவிலுக்குத் தானமாக அளிக்கிறேன் என்று அவர் எழுதிக் கொண்டுவந்து கொடுத்த பத்திரத்தை ஒன்றிற்கு இரண்டுமுறை படித்துப் பார்த்தவர்களுக்கு வியப்பாகவும் இருந்தது. எழுதிக் கொடுத்த பத்திரத்துடன் சொத்து விவரம் பற்றிய லிஸ்ட்டும் விலாவரியாக இருந்தது. தற்போதைய மதிப்பும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் அறுபது கோடி ரூபாய்கள். வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்கும் சேர்த்து சம பங்காகப் பிரித்தால்கூட கோவிலுக்கு பத்துக் கோடி ரூபாய் வந்து சேரும்.

வந்தவர் தன் மனைவி, மகன், உடன் ஒரு வழக்குரைஞர் சகிதமாக பக்கா ஏற்பாட்டுடனேயே வந்திருந்தார்.

முதலில் சமாதானப் படுத்த முயன்றவர்கள், அவர் தெளிவாக இருந்ததால் முறைப்படி கோவிலின் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தார்கள்.

அடுத்து நடந்ததெல்லாம் முக்கியமில்லை. கோவிலின் அறங்காவலர் ஒருவர் மிகுந்த அரசியல் செல்வாக்கு உடையவர். தில்லியில் செளத்பிளாக் எனப்படும் மத்திய அரசின் பிரதான அலுவலகத்தில்கூட கோவில் மடப்பள்ளியில் நுழைவதைப் போன்று சர்வ சாதாரணமாக நுழைந்து திரும்பக்கூடியவர்.

ஆகவே எல்லாம் கைச் சொடுக்கிலேயே நடந்து முடிந்தது

ராமாநாதனின் வீட்டு உறுப்பினர்கள் அழைக்கபெற்றார்கள், நடந்த ஒரு வாரப் பஞ்சாயத்தில் அனைத்தும் சீரானது. மூன்று மாத காலத்தில் அனைத்தும் நேரானது. ராமநாதனின் சொத்துக்களை உடன்பிறப்புக்கள் எடுத்துக் கொண்டு பணம் கொடுக்க கோவிலுக்கும் சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாய் வந்து சேர்ந்தது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன, கதை முடியவில்லையா?

அதெப்படி முடியும்? சித்தநாதன் கணக்கு ஒன்று பாக்கியிருக்கிறதே!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து வந்த ஆவணியில், ராமநாதனின் மகனுக்கும், கதையின் துவக்கத்தில் வந்தாரே கதிரேசன் - அவருடைய ஒரே மகளுக்கும் விமரிசையாகத் திருமணம் நடந்தேறியது.

ராமநாதன், தோது, பணம், வற்றல் வரளி, முறுக்கு, மாவுருண்டை வரதட்சினை என்று எதுவும் வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டதால், நொந்துபோன கதிரேசன், சும்மா விடக்கூடாது என்று நினைத்து, திருப்பூர் பெருமாநல்லூர் ரோட்டில் இருந்த அதுவும் புஷ்பா தியேட்டர் அருகில் இருந்த, தனக்குச் சொந்தமான இரண்டு
ஏக்கர் காலி மனையைத் தன் பெண்ணிற்குச் சீதனமாக எழுதிக் கொடுத்து விட்டார். அதன் சந்தை மதிப்பு முப்பது கோடி ரூபாய்.

காலி இடத்தை அப்படியே வைத்திருந்தால் யாராவது குடிசை போட்டுக் கொடி ஏற்றிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி, ராமநாதனும், அவருடைய மகனுமாகச் சேர்ந்து அங்கே பெரிய வணிக வளாகம் கட்டுவதற்கான ஏற்பாட்டில் இறங்கி யிருக்கிறார்கள்.

அதைவிடுங்கள். விஷயம் தெரிந்தவர்கள் ஊரில் என்ன பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா?

"சிவன் கோவிலுக்குப் போன ராமநாதனின் பங்கு, சித்தநாதன் மூலம் இரட்டிப்பாகத் திரும்பி வந்துவிட்டது. அதுதான் சித்தநாதனின் மகிமை!"

அது முக்கியம் இல்லை; இதுதான் முக்கியம்:
விட்டுக் கொடுத்தவர்கள் என்றும் கெட்டுப்போனதில்லை! அதுதான் வாழ்க்கை!
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. Good morning Sir excellent what a miracle of lord palaniyappan as your words when god is with us who can be against us Thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Your story telling is superb Sir.All positive. Nothing negative.

    ReplyDelete
  3. Respected sir,

    Good afternoon sir. A very good story. It teaches everything will see by Sithanaathan(THE GOD) Really good story. Everybody may not like Sri Ramanathan Chettiyar. Thank you sir.

    Visvanathan N

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    தாங்கள் மனத்தால் சுத்தமானவர்கள்
    அதனால் தான் இப்படி சித்தனாதன் கதையை அழகாக எழுத முடிகிறது!

    *சாவியில்லாத பூட்டை யாரும் தயாரிப்பதில்லை. அதுபோல இறையமைப்பில் தீர்வு இல்லாத பிரச்சினையே கிடையாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைதான் உங்கள் பிரச்சினைக்கான சாவி. "
    எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்!
    பிரச்சனைகளை அலசி ஆரய்ந்து
    முடிவு எடுத்து அவை சுபமாக முடியும்போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை!
    உங்கள் கதையும் அப்படிப்பட்டதுதான்
    மிக நல்ல கதை, ஆசானே!
    வாழ்க உமது எழுத்துத் திறன்!
    வளர்க உமது இரைப் பணி!

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning Sir excellent what a miracle of lord palaniyappan as your words when god is with us who can be against us Thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    Your story telling is superb Sir.All positive. Nothing negative./////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  7. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good afternoon sir. A very good story. It teaches everything will see by Sithanaathan(THE GOD) Really good story. Everybody may not like Sri Ramanathan Chettiyar. Thank you sir.
    Visvanathan N//////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!!!

    ReplyDelete
  8. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    தாங்கள் மனத்தால் சுத்தமானவர்கள்
    அதனால் தான் இப்படி சித்தனாதன் கதையை அழகாக எழுத முடிகிறது!
    *சாவியில்லாத பூட்டை யாரும் தயாரிப்பதில்லை. அதுபோல இறையமைப்பில் தீர்வு இல்லாத பிரச்சினையே கிடையாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைதான் உங்கள் பிரச்சினைக்கான சாவி. "
    எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்!
    பிரச்சனைகளை அலசி ஆரய்ந்து
    முடிவு எடுத்து அவை சுபமாக முடியும்போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை!
    உங்கள் கதையும் அப்படிப்பட்டதுதான்
    மிக நல்ல கதை, ஆசானே!
    வாழ்க உமது எழுத்துத் திறன்!
    வளர்க உமது இரைப் பணி!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  9. சார்,
    5000 வாசகர்கள் படிக்கும் தளத்தில் ஒரிருவரே பின்னோட்டமிடுகின்றனர் என்பது வருத்தமாக உள்ளது. நான் அப்பப்போது வந்துபோகும் நபர். தங்களின் கதை எப்பொழுதும் சொத்துச் சன்டையை மையமாகவும், கடவுள் தந்த தீர்வு பற்ரியும் தான். அதுவும் சரி, காய் கரி மார்க்கெட்டுக்கு வந்தால், அதை தானே வாங்கமுடியும்.
    சரி கதைக்கு வருகிரேன், ஆமாம் எதர்க்கு எடுத்தாலும் பழநியாண்டவனயே ஏன் யிலுக்கின்ரீர்கள். செட்டினாட்டு வீட்டில் நிலவும் பிரக்ஷனைத் தீர்ப்பதே அவருக்கு முதர்கன் வேலைபோலும். அதனால் தான் நாங்கள் எல்லாம் அருபடைக்கும் பொய் கும்பிட்டாலும் எங்ககளை பற்றி யோசிக்க கூட அவருக்கு நெரமில்லை.

    ஆமாம், ராமனாதன் வீட்டு ஆச்சி, அவரின் மகன், கதிரேசன் - அவருடைய ஒரே மகளுக்கும் செட்டினாட்டு வளவில் ஒரு பெயரிடாமல் மொட்டையாக எலுதியுள்ளீர்கள்.

    ம்..ம்.. ராமனாதன் மகனுக்கு சுக்ரதிசைதான்.

    கதை நன்று.

    ReplyDelete
  10. எனக்கேன் இப்படி புரிகின்றது...
    ராமனாதனுக்கும் அவரின் சகோதர, சகோதரிகளுக்கும் சொத்து பிறட்சனை.
    ராமனாதன் தனது பங்கை கோவிலுக்கு எழுதிவைத்துவிடுகிறார். அவரின் சூழ்னிலை அரிந்த நன்பர், அவரிலந்ததைப் போல இரு மடங்கு சொத்தையும் கொடுத்து, அவரின் மகனுக்கு தனது மகளையும் கட்டிக் கொடுத்தார்.
    ஆவ்.. அவ்வளவு தானே..

    ReplyDelete
  11. m..m. I missed this..
    ராமநாதனும், அவருடைய மகனுமாகச் சேர்ந்து அங்கே பெரிய வணிக வளாகம் கட்டுவதற்கான ஏற்பாட்டில் இறங்கி யிருக்கிறார்கள்.

    ReplyDelete
  12. 40‍‍ல் 1ம் இல்லை...

    ReplyDelete
  13. Blogger Sabarinaathan said...
    சார்,
    5000 வாசகர்கள் படிக்கும் தளத்தில் ஒரிருவரே பின்னோட்டமிடுகின்றனர் என்பது வருத்தமாக உள்ளது. நான் அப்பப்போது வந்துபோகும் நபர். தங்களின் கதை எப்பொழுதும் சொத்துச் சன்டையை மையமாகவும், கடவுள் தந்த தீர்வு பற்ரியும் தான். அதுவும் சரி, காய் கரி மார்க்கெட்டுக்கு வந்தால், அதை தானே வாங்கமுடியும்.
    சரி கதைக்கு வருகிரேன், ஆமாம் எதர்க்கு எடுத்தாலும் பழநியாண்டவனயே ஏன் யிலுக்கின்ரீர்கள். செட்டினாட்டு வீட்டில் நிலவும் பிரக்ஷனைத் தீர்ப்பதே அவருக்கு முதர்கன் வேலைபோலும். அதனால் தான் நாங்கள் எல்லாம் அருபடைக்கும் பொய் கும்பிட்டாலும் எங்ககளை பற்றி யோசிக்க கூட அவருக்கு நெரமில்லை.
    ஆமாம், ராமனாதன் வீட்டு ஆச்சி, அவரின் மகன், கதிரேசன் - அவருடைய ஒரே மகளுக்கும் செட்டினாட்டு வளவில் ஒரு பெயரிடாமல் மொட்டையாக எலுதியுள்ளீர்கள்.
    ம்..ம்.. ராமனாதன் மகனுக்கு சுக்ரதிசைதான்.
    கதை நன்று.
    2
    Blogger Sabarinaathan said...
    எனக்கேன் இப்படி புரிகின்றது...
    ராமனாதனுக்கும் அவரின் சகோதர, சகோதரிகளுக்கும் சொத்து பிறட்சனை.
    ராமனாதன் தனது பங்கை கோவிலுக்கு எழுதிவைத்துவிடுகிறார். அவரின் சூழ்னிலை அரிந்த நன்பர், அவரிலந்ததைப் போல இரு மடங்கு சொத்தையும் கொடுத்து, அவரின் மகனுக்கு தனது மகளையும் கட்டிக் கொடுத்தார்.
    ஆவ்.. அவ்வளவு தானே..
    3
    Blogger Sabarinaathan said...
    m..m. I missed this..
    ராமநாதனும், அவருடைய மகனுமாகச் சேர்ந்து அங்கே பெரிய வணிக வளாகம் கட்டுவதற்கான ஏற்பாட்டில் இறங்கி யிருக்கிறார்கள்.
    4
    Blogger Sabarinaathan said...
    40‍‍ல் 1ம் இல்லை.../////

    அன்பு நண்பரே! உங்களுடைய தொடர் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி!




    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com