கூட்டுக் குடும்ப வாழ்க்கையை ஏன் காணமுடிவதில்லை?
மனவளக் கட்டுரை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். கோடி நன்மைகளைப் பட்டியல் இட முடியாது. பத்து நன்மைகளையாவது டக்’கென்று சொல்லலாம்.
முதல் நன்மையாக நெருங்கிய உறவுகளுடன் சேர்ந்து வாழ்வதால் கிடைக்கும் மன நிம்மதி மற்றும் மகிழ்ச்சியைச் சொல்லலாம்.
விட்டுக் கொடுத்துப் போகும் மனப் பான்மை, அனுசரித்துப் போகும் தன்மை போன்ற நற்பண்புகள் உண்டாகி, நம்மை நல்ல மனிதனாக்கும் அந்தப் பண்புகள்.. பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும். வீட்டிலுள்ள பெரியவர்களால், குழந்தைகளின் வாழ்க்கை சீராகும். அவர்களுக்கிடையே விலை மதிப்பில்லாத அன்பு, பாசம், பரிவு எல்லாம் உண்டாகும்.
வீட்டிலுள்ள பெரியவர்கள் பல கதைகளையும் நற்சம்பவங்களையும் சொல்லிக் குழந்தைகளை நெறிப்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு சாதத்தோடு இறையுணர்வையும் ஊட்டுவார்கள். தேவாரம், திருக்குறள் பாடல்களைச் சொல்லிக் கொடுத்து குழந்தைகளை மனப்பாடம் செய்ய வைப்பார்கள். குழந்தைகளின் தன்னம்பிக்கை வளரும். ஒழுக்கம் மேம்படும்.
நமது வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் எல்லாம் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் தெரியவரும்!
மேலே சொல்லியுள்ள அனைத்தும் கூட்டுக் குடும்பம் அல்லாத தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்காது. பெற்றோர்களுக்கு பொருள் தேடுவதில் மட்டுமே கவனம் இருக்கும். நேரம் இருக்கும், பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்த நேரம் ஏது?
அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பெருந்தன்மையோடு பெரிய, பெரிய, பிரம்மண்டமான வீடுகளைக் கட்டினார்கள். தம் வாரிசுகள் எல்லாம் ஒற்றுமையாக பாதுகாப்போடு ஒன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அத்தனை பெரிய வீடுகளைக் கட்டினார்கள். இப்போது அந்த வீடுகளைப் பராமரிப்பதிலேயே வாரிசுதாரர்களுக்குள் பல சிக்கல்கள்
அவர்களுடைய நோக்கம் எல்லாம் கடந்த 40 ஆண்டுகளாக சிதைந்து கொண்டே வந்து அல்லது தேய்ந்து கொண்டே வந்து இன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பது அரிதாகிவிட்டது. எல்லாம் சிறு சிறு குடும்பங்களாகி, மைக்ரோ சிப்பைப் போல மைக்ரோ ஃபாமிலிகளாகிவிட்டன.
என்ன காரணம்? முக்கியமான காரணம் சுயநலம்தான்!
அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் எட்டுப் பிள்ளைகள், பத்துப் பிள்ளைகள் என்பது சர்வசாதாரணமான விஷயம். இப்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகளுக்கு மேல் கிடையாது என்பதே உண்மை! நாம் இருவர்; நமக்கிருவர் என்று குடும்பக் கட்டுப்பாட்டை என்றைக்கு அரசாங்கம் வலியுறுத்தியதோ, அன்றே மக்களும் அதைக் கடைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தொழில் அல்லது வேலை வாய்ப்பின் காரணமாக பலரும் வெளியூரில், அல்லது வெளி மாநிலத்தில் அல்லது வெளி நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் வசிக்கும் ஊர்களில், வசிக்கும் இடங்களில் பெற்ற தாய், தகப்பனாரையே வைத்துக் கொள்ளப் பலரும் விரும்புவதில்லை.மகன் விரும்பினாலும், மருமகள் ஒப்புக்கொள்வதில்லை. மனைவியை மீறி எதுவும் செய்ய முடியாத சூழ்நிலைக் கைதியாக கணவன் இருப்பதால், அவன் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. சொல்லப்போனால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.
நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன்:
ஒரு செட்டிநாட்டு சம்சாரி, காலை நேரத்தில் தன் வீட்டில் உட்கார்ந்து மணியார்டர் படிவம் ஒன்றை நிரப்பிக் கொண்டிருந்தார். அருகில் வந்து அவர் என்ன செய்கிறார் என்பதை எட்டிப் பார்த்த மனைவி, கேட்டார்:
”யாருக்குப் பணம் அனுப்புகிறீர்கள்?”
”என் தாயாருக்கு”
”இத்தனை நாட்களாக இல்லாமல் இன்று என்ன புதுப் பழக்கம்?”
”இத்தனை நாட்களாகக் கேட்காதவர்கள். நேற்றுக் கேட்டு போன் செய்தார்கள். அதனால் அனுப்புகிறேன்”
”எவ்வளவு?”
”முவ்வாயிரம் ரூபாய். மாதா மாதம் முவ்வாயிரம் ரூபாய் அனுப்புவதாக உள்ளேன்”
”மாதம் முவ்வாயிரத்திற்கு அவர்களுக்கு என்ன செலவு இருக்கிறது?”
”மளிகைக்கடை பில் உனக்கு எவ்வளவு ஆகிறது?”
”மாதம் ஆறாயிரம் ரூபாய். பிள்ளைகளையும் சேர்த்து நாம் நான்கு பேர்கள் இருக்கிறோம். அவர்கள் ஒற்றை ஆள்தானே?
”கேஸ் சிலிண்டர் என்ன விலை?
”நமக்கு மாதம் ஒரு சிலிண்டர் ஆகிறது. அவர்களுக்கு ஒரு சிலிண்டர் நான்கு மாதங்களுக்கு வரும்!
”பால் ஒரு கவர் வாங்கினாலும் தினமும் இருபது ரூபாய் ஆகுமே!
”அவர்கள் பாக்கெட் பால் எல்லாம் வாங்குவதில்லை. சைக்கிள்காரனிடம் ஒரு டம்ளர் பால் வாங்கி, காலையிலும் மாலையிலும் காப்பி போட்டுக் குடிக்கிறார்கள்.அவ்வளவுதான். அத்துடன் ஊரைச் சுற்றி உங்களுக்குச் சொந்தங்கள் அதிகம், கல்யாணம், சாந்தி, சடங்கு என்று விஷேசக்காரர்கள் வீடுகளில் நாளும் பொழுதும் நல்ல சாப்பாடு போடுகிறார்கள். வருடத்தில் 55 முகூர்த்த நாட்கள். எல்லா நாட்களிலும் ஊரில் பல திருமணங்கள் நடக்கின்றன. சொல்லப்போனால் உங்கள் ஆத்தா வருடத்தில் பாதி நாட்கள் சமைப்பதே இல்லை. அதை நினைத்துப் பார்த்தீர்களா?”
இப்படியே தொடர்ந்த பேச்சை முடிவிற்குக் கொண்டுவர, கணவன் கேட்டான்: “சரி, எவ்வளவுதான் அனுப்பலாம் என்று நீ நினைக்கிறாய்?”
“மாதம் ரூபாய் ஆயிரத்தைநூறு அனுப்புங்கள். அதுவே எதேஷ்டம். அதுபோதும்!”
மனைவியின் வாதம்தான் வென்றது. அதன்படியே கணவனும் செய்தான்.
ஒரு மாதம் சென்றது. கணவனின் போதாத நேரம் அடுத்த மாதம் முதல் தேதியன்று தாயாருக்கு பணம் அனுப்புவதற்காக, வீட்டில் உட்கார்ந்து மணியார்டர் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தான்.
அருகில் வந்த மனைவி, கணவனை முறைப்புடன் பார்த்தாள்.கணவன் சொன்னான்:
”அதுதான் போனமாதம் முடிவு செய்தோமே. அதன்படிதான் பணம் அனுப்ப உள்ளேன்.”
”போன மாதம் நீங்கள் அனுப்பிவிட்டீர்கள் அல்லவா? இந்த மாதம் உங்கள் தம்பியை அனுப்பச் சொல்லுங்கள்”
”பாவம்டி அவன். எனக்கு வங்கியில் வேலை. நல்ல சம்பளம் வருகிறது. அவன் ஒரு பேப்பர் கடையில் வேலை பார்க்கிறான். வருகிற சம்பளம் கைக்கும் வாய்க்குமாகத்தான் இருக்கும். அதனால் நான் அனுப்புவதே உசிதம்!”
”நல்ல கதையாக இருக்கிறதே! அதனால் உங்கள் ஆத்தா உங்களுக்கு என்ன மெடலா தரப்போகிறார்? கையில் வைத்திருக்கிற 25 கிலோ வெள்ளிச் சாமான்களையும் உங்களுக்கே தரப்போகிறாரா? பாதியைப் பிரித்து உங்கள் தம்பிக்கும் கொடுப்பாரா, மாட்டாரா? சொல்லுங்கள்! ஆகவே உங்கள் தம்பிக்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்லி, அவரையே அனுப்பச் சொல்லுங்கள்.
இந்த முறையும் மனைவியே வென்றார்.
இதுதான் இன்றைய மைக்ரோ குடும்பங்களில் நடக்கும் நடப்பு ஆகும்.
நமக்கும் வயதாகும். நமக்கும் ஒரு நாள் முதுமை வரும். நமக்கும் ஒருநாள் இயலாமை வரும். நாம் இன்று செய்வதை நம் பிள்ளைகள் நமக்குச் செய்வார்கள். என்பதை ஒருவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உணர்ந்து திருந்துவதாக, உதாரணமாக இருப்போம் என்று நினைப்பதாகத் தெரியவில்லை.நாம் பெரியவர்களைப் போற்றினால், நம் பிள்ளைகளும் நம்மைப் போற்றுவார்கள் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் உணரவேண்டும்.
உணர்வார்களா?
இறைவன்தான் உணர்த்த வேண்டும். கூட்டுக் குடுங்களின் மேன்மையை அனைவரும் உணரும் வண்ணம் செய்ய இறையருளால்தான் முடியும்!
கூட்டுக் குடும்பங்கள் மலருட்டும். குறைந்த அளவு தங்கள் பெற்றோர்களையாவது தங்களுடன் வைத்துக் கொள்ளும் நிலைமை உண்டாகட்டும். பெண்கள் ஒற்றுமையாக இருந்தால் முதியோர் இல்லங்களுக்கு இடம் ஏது?
மின்னியலில் வேண்டுமென்றால் மைக்ரோக்கள் இருக்கட்டும். இல்லங்களில் வேண்டாம். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். இது அன்பான வேண்டுகோள்!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!