மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.10.11

உலகை மயக்கிய மற்றுமொரு மந்திரப் பெயர்

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உலகை மயக்கிய மற்றுமொரு மந்திரப் பெயர்

நம்ம ஊர் தமிழ்நாட்டிலுள்ள இளவட்டங்களெல்லாம் நமீதாவை விரும்புகிற அளவில், அவருக்காகச் செலவிடுகின்ற நேரத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூடத் தொன்மையான கலையான ஜோதிடத்தைத் தெரிந்துகொள்வதில் செலுத்துவதில்லை.

1,500 ஆண்டுகளாக இருக்கும் அக்கலையின் மேலான்மையைப் புரிந்து கொள்ளாததோடு, நமக்கு அதன் மீதுள்ள நம்பிக்கையை அசைக்க வேண்டுமென்ற நோக்கோடு அரைகுறையான கேள்விகளைக் கேட்டு எரிச்சலையும் உண்டாக்குவார்கள்.

ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கு வந்து இங்கே மகாராஷ்டிராவில் ஒரு அந்தனர் வீட்டில் இரண்டாண்டு காலம் தங்கி, ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டதோடு, திரும்பிச் சென்று சுமார் 40 ஆண்டு காலம் அக்கலையில் புகழ்பெற்று உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆங்கிலேயரைப் பற்றிய உண்மைச் செய்திகளை இன்று (மறு) பதிவிடுகிறேன்.

பதிவு சற்றுப் பெரிதாக இருக்கும். நீளமாக இருக்கும். பொறுமை இல்லாதவர்கள் பதிவை விட்டு இப்போதே விலகி விடலாம். ரசித்துப் படிப்பவர்கள் மட்டும் தொடரவும்.

உலகை மயக்கிய அந்த மந்திரப் பெயர்: வில்லியம் ஜான் வார்னர் - மற்றும் ஒரு பெயர் கவுன்ட் லூயி ஹாமோன். ஆனால் சீரோ என்று சொன்னால்தான் அவரை அனைவருக்கும் தெரியும். His name, Cheiro, derives from the word cheiromancy -- meaning palmistry

அவர் வாழ்ந்த காலம்: November 1, 1866 - October 8, 1936 (சுமார் 70 ஆண்டு காலம்)

ஜோதிடம், கைரேகை, எண் ஜோதிடம் என்று அத்தனை துறையிலும் உலகைக் கலக்கியவர் அவர்.

அவருடைய ரசிகர்கள் அல்லது அவரை ஆதரித்துக் கெளரவித்தவர்களைப் பட்டியலிட்டு மாளாது.

King Edward VII (இங்கிலாந்தின் பேரரசராக இருந்தவர்), William Gladstone, Charles Stewart Parnell, Henry Morton Stanley, Sarah Bernhardt, Oscar Wilde, Professor Max Muller, Blanche Roosevelt, the Comte de Paris, Joseph Chamberlain, Lord Russell of Killowen,Robert Ingersoll
(இவர் பிரபல நாத்திகர் - லண்டனில் வாழ்ந்தவர்) Ella Wheeler Wilcox, Lillie Langtry, Mark Twain, W.T. Stead, Richard Croker, Natalia Janotha என்று சிலரைக் குறிப்பிடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சீரோ, தனது கணிப்பை அது நன்மையோ அல்லது தீமையோ- அப்பட்டமாகச் சொல்லி விடுவார்.

பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டிய சீரோ ஐரீஷில் பிறந்தவர், ஆனால் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தவர். அவருடைய கணிப்பு என்றுமே தவறானது கிடையாது.

யுத்த நாயகன் என்று புகழ் பெற்ற ஃபீல்ட் மார்ஷல் லார்ட் கிச்சென்னரின் கையைப் பார்த்த சீரோ வழக்கமான தகவல்களைக் கூறிவிட்டு, இறுதியாகச் சொன்னார்,"நீங்கள் நீரில் மூழ்கி மரணமடைவீர்கள்" நீச்சல் தெரியாத, பயந்துபோன கிச்சென்னார், உடனே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நீச்சலும் கற்றுக் கொண்டார்.

ஆனால் சீரோ சொன்னதுதான் நடந்தது.

1916-ஆம் ஆண்டு ஹம்ப்ஷயர் என்ற கப்பலில் ஃபீல்டு மார்ஷல் பயணம் செய்தார். அக்கப்பல் கடற் கண்ணி ஒன்றில் மோதிச் சேதமுற்று மூழ்கியது. லார்ட் கிச்சென்னர் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.

சீரோவை நேரில் பார்த்து தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ள மக்கள் கூட்டம் அலை மோதியது. நாள் ஒன்றிற்கு இருபது பேர்களுக்குக் குறையாமல் சந்தித்துப் பலன்களைச் சொல்லி வந்தார்.

பெரிய இடங்களிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன!

இங்கிலாந்தின் மாமன்னர் ஏழாம் எட்வர்டின் உடல் நிலை மிகவும் மோசமாகி மரணத்தின் விளிம்பில் அவர் இருந்த நேரம், மூச்சிவிடத் திணறிக் கொண்டி ருந்தார் அவர். மருத்துவர்கள் எல்லாம் கை விட்டு விட்டனர். அரசரின் இறுதி நேரம் நெருங்கி விட்டது என்றனர்.

சீரோ வரவழைக்கப்பட்டார். அரசரின் கையை ஆராய்ந்த பிறகு சீரோ சொன்னார்.

"உங்கள் உயிருக்கு இப்போது ஒன்றும் ஆபத்தில்லை. 69வது வயதில்தான் உங்களுக்கு மரணம் ஏற்படும்"

அதன்படி 1841ல் பிறந்த அரசர், 1910ஆம் ஆண்டு மே மாதம் - தனது 69 வது வயதில்தான் காலமானார்.

அதேபோன்று பிறிதொரு சமயம், அரச குடும்பத்தினர் அனைவரையும் உட்காரவைத்து ஒவ்வொருவர் கையாகப் பார்த்துப் பலன் சொல்லும்போது, பட்டத்து இளவரசன் எட்டாம் எட்வர்ட் வேல்ஸின் கையைப் பார்த்துவிட்டு, சீரோ சொன்ன செய்தியால் மொத்த அரச குடும்பமும் திடுக்கிட்டுப் போய் விட்டது.

சீரோ சொன்னது இதுதான்."இளவரசனே, நீ பதவிக்கு வரமாட்டாய்.அரசனாகும் வாய்ப்பு உனக்கு இல்லை!"

அதன்படிதான் பின்னால் நடந்தது. திருமதி சிம்ப்சன் என்ற விவாகரத்தான - தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை - அந்த இளவரசன்
காதலித்ததையும் - தன் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது, காதலிதான் முக்கியம் எனக்கு - நாடும் பதவியும் முக்கியமில்லை என்று ஒரு
பெண்ணிற்காக ஒரு மிகப் பெரிய சாமராஜ்ஜியத்தையே (அப்போது பிரிட்டனின் கீழ் 26 நாடுகள் இருந்த காலம்) உதறிவிட்டுத் தன் காதலியோடு நாட்டையே விட்டு வெளியேறினான் அந்த இளைஞன் (அது மிகவும் சுவாரசியமான கதை - 40 ஆண்டுகளுக்கு முன்பு சாவி அவர்கள் ஆனந்த விகடனில் தொடராக அதை எழுதினார் - படித்தவர்களுக்கு நினைவிருக்கும்)

23 -06 - 1894 ஆண்டு பிறந்த - முடி துறந்த அந்த இளவரசன், பிறகு பிரான்ஸ் நாட்டில் 28 .05.1972 வாழ்ந்து தன்னுடைய 79 வது வயதில் இறந்து போனான். விக்டோரியா மகாராணியின் பேரன் அவன் என்பது உபரிச்செய்தி.

தெரியாதவர்கள் அக்கதையைப் படிக்க சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்

The story of Edward Eight

சீரோ எழுதிய நூல்கள்தான் இன்று ரேகை சாஸ்திரம் மற்றும் எண் கணித நிபுணர்களின் வேத புத்தகங்களாகும். நீங்களும் வாங்கிப் படியுங்கள்!
-------------------------------------------------------------------------------------
ரேகை சாஸ்திரஸ்தில் அவருக்குள்ள மேதைத்தனத்தையும், தனித்தன்மையையும் அறிந்து கொள்ளவும், உலகிற்கு அதை நிருபிக்கவும்
அமெரிக்காவில் இவருக்கு டெஸ்ட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள்.

மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும், புகழ் பெற்ற அறிஞர்களையும் கொண்ட கூட்டுக் குழு அதை நடத்தியது. ஏராளமான
பத்திரிக்கையாளர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

புகை படர்ந்த காகிதத்தில் பன்னிரெண்டு பேருடைய கை ரேகைகளைப்பதிவு செய்து சீரோவிடம் கொடுத்தார்கள். கை ரேகைகளைத் தவிர அவற்றில் எந்த விதமான குறிப்போ அல்லது அடையாளமோ கிடையாது.

சீரோ அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துவிட்டு, மற்றவற்றிற்கு குறிப்புகள் எழுதிக் கொடுத்தார்.

அத்தனையும் உண்மை.

இறுதியாக தனியாக எடுத்துவைத்திருந்த ரேகையை எடுத்தார். "இது ஒரு கொலைகாரனின் கை ரேகை" என்றார். அனைவரும் ஆச்சரியத்தால் அதிர்ந்து போயினர்.

அதற்குக் காரணம், உண்மையிலேயே ஒரு கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர் நோக்கிச் சிறையில் காத்திருக்கும் டாக்டர் மேயர் என்பவனின் கைரேகைதான் அது!

"ஆனால் இவனுடைய மரண தண்டனை நிறைவேறாது. ரத்தாகிவிடும்" என்றார் சீரோ.

அதன்படிதான் நடந்தது.

இறுதிவரை அந்தக் கணிக்கும் திறமை சற்றும் குறையாமல் இருந்தது

சீரோவிடம். தனது ஆயுள் நெருங்குவதை உணர்ந்த சீரோ, பதிப்பாளர்களிடம் தீவிரம் காட்டி, தன்னுடைய கண்டுபிடிப்புக்கள், கணிப்புக்கள், அனுபவங்கள் அத்தனையையும் புத்தகமாக வெளியிட்டு விட்டுத்தான் மறைந்தார்.

தன்னுடைய இறுதி நாளையும் சரியாகக் கணித்துத் தன் மனைவியிடமும், நண்பர்களிடமும் சொன்ன சீரோ, தன்னுடைய வாழ்நாளின் கடைசி
தினத்தன்று தன் நண்பர்களுக்கு மிகப் பெரிய விருந்தையும் அளித்தார்.

அன்று இரவு படுத்தவர்தான் அடுத்த நாள் காலையில் எழுந்திரிக்கவில்லை. அவர். படுக்கையிலேயே உயிர் பிரிந்திருந்தது. (3.10.1936) தான் கற்றுக் கொண்ட கலைக்காக, இந்தியாவின் புகழை அவர் தன்னுடைய நூல்களில் நன்றிக்கடனாக குறிப்பிடத்தவறவில்லை! That is his greatness!

The Story of Cheiro - Click here for the link

எண் கணிதத்தில் சீரோ எழுதிய பல சுவையான செய்திகள், மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய பல குறிப்புகள் என்னிடம் உள்ளன. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன். பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


*************************************
சேர்க்கை
--------------------------
புதிய அட்டவணை!

திங்கள் முதல் வெள்ளிவரை வகுப்பறை நடைபெறும். ஐந்து நாட்களும் வாத்தியாரின் ஆக்கங்கள் வெளியாகும். சனிக்கிழமை விடுமுறை.

ஞாயிற்றுக்கிழமை மாணவர் மலர். அன்று உங்களின் ஆக்கங்கள் வெளியாகும். அனைவரையும் பங்குகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கதை, கவிதை, கட்டுரை, நகைச்சுவை என்று எழுத்தின் எல்லா பரிமாணத் திலும் எழுதியனுப்புங்கள். தமிழில் சரளமாக எழுதமுடியாதவர்கள்
ஆங்கிலத்தில் எழுதியனுப்பலாம். தகுதியுடையவைகள் அனைத்தும் வெளியாகும். எழுத்தில் உங்கள் அனைவரையும் ஊக்குவிற்பதற்காக இந்தப் பகுதி. அன்று வரும் பின்னூட்டங்களுக்கு நீங்கள் (ஆக்கங்களை எழுதியவர்கள்) பதில் எழுதலாம்.

ஆக்கங்கள் உங்கள் சொந்த எழுத்தாக இருக்கட்டும். பிறர் எழுதியதை வெட்டி ஒட்டும் வேலையைச் செய்ய வேண்டாம். நீங்கள் எங்காவது படித்ததில் பிடித்தவற்றை உங்கள் மொழியில் எழுதியும் அனுப்பலாம்.

திருவாளர்கள் கே.எம்.ஆர்.கே, கோபாலன் சார், தமிழ் விரும்பி, மலேசியா ஆனந்த், விசு அய்யர், தில்லி உமா, ஜப்பான் மைனர், துபாய் கண்ணன், கோவை சகோதரி, யு.எஸ்.ஏ. ராமுடு, தேமொழி, ஸ்ரீசோபனா போன்ற முன் பெஞ்ச் மாணவியர், மாணவர்களுடன் மற்ற அனைவரையும் பங்கு  கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வாத்தியார் கலகலப்பான ஆசாமி. டேக் இட் ஈஸி’ கொள்கை உடையவர். ஆகவே பின்னூட்டங்கள் கலகலப்பாக இருப்பதில் தவறு இல்லை. யாரையும் காயப்படுத்தும்படி, குறை சொல்லும்படி இருக்கவேண்டாம்.

வரும் பின்னூட்டங்களில், பிரச்சினையான  பின்னூட்டங்களைத் தவிர மற்ற அனைத்துப் பின்னூட்டங்களும்  வெளியாகும்.

அன்புடன்
வாத்தியார்
20.10.2011

வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------

19.10.11

Astrology: உலகைக் கலக்கிய பெண்ணின் ஜாதகம்!

-----------------------------------------------------------------------------------
Astrology: உலகைக் கலக்கிய பெண்ணின் ஜாதகம்!

உலகை எப்படிக் கலக்க முடியும் என்பவர்கள் பதிவைவிட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்!

ஆமாம். சாதாரணப் பெண் அல்ல அவர். உலகையே கலக்கிய அழகான பெண். அவருடைய அந்த அழகுதான் உலகையே கலக்கியது. பலரைக் கிறங்கடித்தது. The Most Photographed lady of the century' என்ற பெயரைப் பெயரைப் பெற்றுத்தந்தது. அவருடைய பெயரே ஒரு மந்திரச் சொல்லாக விளங்கிய காலம் உண்டு.

போதும் சஸ்பென்ஸ்! யாரென்று சொல்லுங்கள் என்கிறீர்களா?

சரி, சொல்கிறேன். அவருடைய பெயர் ‘மர்லின் மன்றோ’

தெரியுமல்லவா? தெரியாவிட்டால் அவரைப் பற்றிய முழு விவரங்களுக்கான வலைத்தளத்தின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துவிட்டுப் பிறகு இங்கே வாருங்கள். அதுதான் நம் இருவருக்கும் நல்லது!

Link URL: http://en.wikipedia.org/wiki/Marilyn_Monroe
-----------------------------------------------------
அவருடைய சிறுவயது வாழ்க்கை மிகவும் அவலமாக இருந்திருக்கிறது. தந்தையும் சரியில்லை. தாயும் சரியில்லை. வளர்ப்புப் பேற்றோர் களிடமும், பிறகு வளர்ப்புக் காப்பகங்களிலும் வளர்ந்தார். இருபது வயதில் விமான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்து வயிற்றைக் கழுவினார். அதிர்ஷ்டம் ‘டேவிட் கொனோவர்’ என்னும் இராணுவ புகைப்படக்காரர் மூலம் வந்தது. இவரின் அழகைப் பார்த்த அந்த நபர், இவரை விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்துப் பத்திரிக்கைகளுக்குக் கொடுக்க, அதன் மூலமாக விளம்பர மாடலாகமாறி, கடைசியில் அமெரிக்கத் திரைஉலகம் இவரை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டுபோய் விட்டது.

அதற்குப் பிறகு?

சுமார் 15 ஆண்டு காலம் 32 திரைப்படங்களில் நடித்துப் பேரும் புகழும் பெற்றதோடு உலகம் முழுவதும் எண்ணற்ற இரசிகர்களையும் பெற்றார்
The seven years itch (1955), Bus Stop (1956), Let us make Love (1960), The misfits (1961) போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

20th Century Fox, The Columbia Pictures, United Artists, Metro-Goldwyn Mayer போன்ற ஹாலிவுட்டின் பிரபல திரைப்பட நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரை வைத்துப் படங்களை எடுத்தன

நடிகை, பாடகி, மாடல்பெண், ஷோ கேர்ள் என்று பன்முகத்திறமை கொண்டவர். அதைவிட முக்கியமாக major sex symbol (இந்தத் தகவல் மைனர்/களுக்காக) 50 - 60 களில் வியாபார ரீதியில் வெற்றிகரமான பல திரைப்படங்களில் நடித்துக் கலக்கியவர்

ஆனால் அவரது 36ஆவது வயது முடிந்தவுடன், ஆயுள்காரகன் சனீஷ்வரன் அவருக்குப் போர்டிங் பாஸைக் கைகளில் திணித்து, இந்த உலகைவிட்டே அவரை அனுப்பி வைத்துவிட்டான். தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அதிக அளவு உட்கொண்ட தூக்க மாத்திரைகள் அதற்குக் காரணம். (Over dose of sleeping pills). சிலர் அதை விபத்து என்றும் சொல்வார்கள். எதாக இருந்தால் என்ன? பல ரசிகர்களைக் கலங்க வைத்துவிட்டு அம்மணி போய்விட்டார்!


அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம் (எல்லாம் ஒரு பயிற்சிக்காகத்தான்)
--------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------


பெயர்: மர்லின் மன்றோ
பிறந்த தேதி 1.6.1926
பிறந்த ஊர்: லாஸ் ஏஞ்சல்ஸ், யு.எஸ்.ஏ
பிறந்த நேரம்: காலை 9:30 மணி
நட்சத்திரம்: அவிட்டம்
லக்கினம்: கடகம்
கர்ப்பச்செல் இருப்பு: செவ்வாய் மகா திசையில் 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 15 நாட்கள்
காலமான தேதி 5.8.1962
வாழ்ந்த காலம்: 36 ஆண்டுகள் 2 மாதங்கள் 4 நாட்கள்
முதல் 30 ஆண்டுகள் கிறிஸ்துவ மதத்தையும், கடைசி ஆறு ஆண்டுகள் யூத மதத்தையும் தழுவினார்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால், பிறந்த வீட்டில் தவிட்டுப் பானை கூட மிஞ்சாது என்பார்கள். அது வெறும் சொல்லடை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் அம்மணி ஜாதகத்தில் அது உண்மையாகியிருக்கிறது.

ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்.

சுபக்கிரங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்றும் வலுவாக உள்ளன.
சந்திரன் கேந்திரத்தில் உள்ளார்
சுக்கிரனும் அவ்வாறே உள்ளார்
குரு பகவான் எட்டில் போய் உட்கார்ந்து கொண்டாலும், கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாயுடன் கூட்டணி போட்டு வலுவாக உள்ளார். கடக லக்கினத்திற்கு 5, மற்றும் 10ஆம் இடங்களுக்கு உரியவன் செவ்வாய். ஒரு திரிகோண இடம் மற்றும் ஒரு கேந்திரத்திற்கு அதிபதியான செவ்வாய்தான் கடகத்திற்கு யோககாரகன்.அதை மனைதில் கொள்க!
கர்மகாரகன் (Authority for Profession) சனீஷ்வரன் உச்சம் பெற்றுள்ளான்.
எந்த கிரகமும் கிரக யுத்தத்தில் சிக்கவில்லை!

சசமகா யோகம், சுனபா யோகம், அமலா யோகம், சதா சஞ்சார யோகம் போன்ற துக்கடா யோகங்கள் மட்டும் உள்ளன. குறிப்பிடும்படியாக பலத்த யோகங்கள் எதுவும் இல்லை.

கிரகங்களின் சுயவர்க்கப்பரல்கள்:
குரு - 7 பரல்கள்
புதன் - 5 பரல்கள்
சூரியன் - 4 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
சந்திரன் - 3 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்
சனி - 2 பரல்கள்

முதல் 2 கிரகங்கள் நல்ல பரல்களுடன் இருக்கின்றன. மற்ற கிரகங்கள் by placement அதை ஈடு கட்டிவிட்டன. சனி (உச்ச வீடு) சந்திரன் (கேந்திரம்) சுக்கிரன் (கேந்திரம்) செவ்வாய் (யோககாரகன் பதவி) சூரியன் (லாபஸ்தானம்)  ஆக மொத்தம் எல்லாக் கிரகங்களுமே வலுவாக உள்ளன!
===============================================

ராசிச் சக்கரம்
 சுயவர்க்கப்பரல்கள் கட்டம் கட்டிக்க் காட்டப்பெற்றுள்ளன!
-------------------------------------------------------------------------------

சரி இப்போது அலசுவோம்:

1. ஜாதகி கடக லக்கினக்காரர். கடக லக்கினம் அரச கிரகங்கள் இரண்டில் ஒன்றான சந்திரனுக்கு உரிய வீடு. இவர் ஜாதகத்தில் சந்திரன் கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேர் பார்வையில் வத்திருக்கிறார். அதனால் ஜாதகிக்கு நிற்கும் சக்தியைக் (Standing Power) கொடுத்தார்.

2. லக்கினத்தில் சந்திரன் இருந்தாலும் அல்லது லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். ஜாதகிக்குப் பேரழகை ஏழில் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கும் சந்திரன் கொடுத்தது.

3. புத்தி மற்றும் வித்தைகளுக்கு உரிய நாதன் புதன், தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருப்பதைக் கவனியுங்கள். ஜாதகிக்கு நல்ல புத்திசாலித்தனத்தை - கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் புத்திசாலித்தனத்தை புதன் வழங்கினார்.

4. சரி, அம்மணியின் மார்க் ஷீட்டைப் பார்ப்போம். மொத்த மதிப்பெண்கள் 337ல்:

அவருடைய ஜாதகத்தில் தீய இடங்களான 3, 6, 8 & 12 ஆம் இடங்களின் பரல்களைக் கூட்டுங்கள்.

3ல் -  28
6ல் -  36
8ல் -  31
12ல் - 23
------------------
     118

இந்த 4 இடங்களுக்கும் சேர்ந்து 112 ஐத் தாண்டக்கூடாது  (337 வகுத்தல் 3 = 112) ஆனால் எத்தனை இருக்கிறது பார்த்தீர்களா? 118 உள்ளது. தீமைகள் அதிகமாக இருந்துள்ளன.

சரி கேந்திர, கோணங்களைக் கூட்டுங்கள்
1ல் -  29
5ல் -  29
9ல் -  33
4ல் -  28
7ல் -  24
10ல் - 22
-------------------
      165

இந்த ஆறு இடங்களுக்கும் சேர்ந்து இருக்க வேண்டியது 168 (337 வகுத்தல் 2 = 168) ஆனால் அதிலும் 3 பரல்கள் குறைவாக இருந்திருக்கிறது. அதாவது ஜாதகத்தில் தீமைகளே அதிகமாக இருந்திருக்கின்றன

5. நான்கில் சனி நல்ல தாய் அமையவில்லை. ஒன்பதாம் வீட்டின் அதிபதி குரு அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அத்துடன் நவாம்சத்தில் சூரியனுடன் சனியின் சேர்க்கை அதனால் நல்ல தந்தை அமையவில்லை.

6. ஏழாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் கேது மறுபக்கம் செவ்வாய். அத்துடன் ஏழாம் வீட்டில் குறைவான (24) பரல்களே உள்ளன. நல்ல திருமண வாழ்க்கை அமையவில்லை. அம்மணி 3 முறைகள் திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தன.

கணவர்களின் பட்டியல்:
1. James Dougherty (1942 - 1946)
2. Joe DiMaggio (1954 - 1954)
3. Arthur Miller (1956 - 1961)

7. எட்டாம் வீட்டில் செவ்வாய். களத்திர தோஷம். உடன் குரு இருக்கிறாரே என்று கேட்காதீர்கள். அவனுக்கு ஆறாம் இடத்து வில்லன் வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயம். எட்டில் செவ்வாய் இருந்தால் திருமணம் பிரிவில் (Separation) முடியும் என்பது விதி. அம்மணி வாழ்வில் அது மூன்று முறைகள் அரங்கேறியுள்ளது.

8. குழந்தை பாக்கியத்திற்கான ஐந்தாம் வீடும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியுள்ளது. ஒரு பக்கம் சனி. மறுபக்கம் கேது. அத்துடன் இந்த ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாயும், புத்திரகாரகனான (Authority for Children) குருவும் ஒன்றாக எட்டில் போய் அமர்ந்து விட்டார்கள். அதனால் இரண்டு முறை கருவில் உருவான குழந்தைகள் கருவிலேயே சிதைந்துவிட்டன.

9. தொழில் ஸ்தானத்தில் (பத்தாம் இடத்தில்) சுக்கிரன். சுக்கிரன் இருந்தால் கலைத்தொழில். அத்துடன் கர்மகாரகன் சனியின் நேரடிப்பார்வையில் - அதுவும் உச்சம்பெற்ற சனியின் நேரடிப் பார்வையில் பத்தாம் இடம் உள்ளது. அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஜாதகியை உலகப் புகழ் பெற்ற நடிகையாக்கினார்கள். ஜாதகி தான் நுழைந்த துறையின் சிகரத்தை எட்டிப் பிடித்தார்
Venus in the 10th house is considered one of the best indicators for success. Those with Venus in the tenth will contribute something positive and loving to the world, and pleasure comes from their career or professional life. 

10. கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், தனகாரகன் குருவுடன் சேர்ந்து இரண்டாம் வீட்டை தன் பார்வையால் மேன்மைப் படுத்தி ராகு திசையில் ஜாதகிக்குக் கிடைக்காத பணத்தை குரு திசையில் வாரி வழங்க உதவினான்.

11. ஆறில் கேதுவும் மூன்றில் மாந்தியும் அமர்ந்து ஜாதகிக்கு அசாத்திய துணிச்சலை வழங்கினார்கள். உலகப் புகழ் பெற்ற நடிகை என்றால் எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டியது இருக்கும் அதற்குத் துணிச்சல் வேண்டாமா?

12. ஏழில் இருந்த லக்கினாதிபதி ஜாதகிக்கு நேர்மையான குணத்தை நல்கினான். இளம் வயதில் எடுக்கப்பெற்ற தன்னுடைய நிர்வாணப் படங்களைத் தான் புகழ் பெற்றிருந்த காலத்தில், படங்களை எடுத்த புகைப்படக்காரர் அவற்றைப் பணத்திற்காக பத்திரிக்கைக்காரர்களிடம் கொடுத்துவிட அவைகள் பெரிய களேபரத்தை உண்டாக்கின. பட நிறுவனங்கள் அதை மறுத்து அறிக்கைவிடச் சொன்னபோது ஜாதகி மறுத்துவிட்டார். அவரே பத்திரிக்கை நிருபர்களை வரவழைத்து, அவை தன்னுடைய படங்கள்தான் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டார். வறுமையால் தான் வாடிய காலத்தில் பணத்திற்காக அதைச் செய்ய வேண்டிய சூழலில் சிக்கினேன் என்று சொன்னார். அந்த நிகழ்வு மக்களிடையே அவருக்குப் பெரும் அனுதாபத்தை உண்டாக்கியது.

13. தசா புத்திகள் எப்படி விளையாடியுள்ளன என்பதைப் பார்ப்போம். தசா புத்திகள்தான் உரிய பலன்களை உரிய நேரத்தில் தரக்கூடியவை. அதை மனதில் கொள்க!

பிறந்த தேதி : 1.6.1926 + செவ்வாய் மகாதிசை இருப்பு 5 ஆண்டுகள் 5 மாதங்கள் 15 நாட்கள் + ராகு மகா திசை 18 ஆண்டுகள் ஆக அவருடைய 23ஆவது வயதுவரை பல சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறார். (ராகு 12ல்) அதற்குப் பிறகு பாக்கியாதிபதி குரு பகவான் வந்து  கைகொடுத்திருக்கிறார். சுமார் 13 ஆண்டு காலம் சுகமான வாழ்க்கை. செல்வச் செழிப்பான வாழ்க்கை. செல்வச்செழிப்பு என்றால் சுகம் இருக்காதா என்ன?

14. அதே குரு திசையில் செவ்வாய் புத்தி துவங்கியதும் ஜாதகியை கேடுகள் சூழ்ந்தன. புத்தி துவங்கி 20 நாட்களில் ஜாதகி மரணமடைந்தார்.
குரு மகா திசையில் செவ்வாய் புத்தி 16.7.1962இல் துவங்கியது. ஜாதகி 5.8.1962ல் உயிர் நீத்தார். எட்டில் செவ்வாய் இருந்தால் பொதுவாகத் துர் மரணம். எட்டாம் இடத்தில் இருந்த செவ்வாய் தனது புத்தியில் (ஆறாம் இடத்தானின் மகா திசையில் அதை செய்து முடித்தான்) அந்த வீட்டில் இருவரும் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் ஜாதகத்தில் ஆயுள்காரகன் சனி இரண்டு பரல்களை மட்டுமே கொண்டு பலவீனமாக உள்ளான். அதனால் ஜாதகிக்கு அற்ப ஆயுள். 36 வயதில் அந்தப் பேரழகியின் கதை முடிந்து விட்டது.

The eighth house indicates death, losses, adversity, misery, misfortune, separation etc. If Mars in the 8th house in the horoscope is likely to cause his own death. 

அலசலில் ஏதாவது விடுபட்டிருந்தால், வகுப்பறையின் மூத்த மாணவர்களான திருவாளர்கள் KMRK யும், திருவாளர் மலேசிய ஆனந்த் அவர்களும் வந்து சொல்வார்கள்.

தேவையான அளவு அலசிவிட்டேன். இன்னும் அலசினால் உங்களுக்கும் போரடிக்கும். ஆகவே இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

18.10.11

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

------------------------------------------------------------------------------------
Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?


ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக் கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித் தந்திருக் கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக் கொள்வோம்.

அன்புடன்
வாத்தியார்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை:

1  நம் மதிப்பிற்குரிய பெரியவரின் கடிதம் உங்கள் பார்வைக்கு:

2
வகுப்பறைக் கண்மணியின் கடிதம் உங்கள் பார்வைக்கு:

இவை இரண்டிற்கும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்
நட்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!