மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.11.14

பழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நாங்கள் பல்லாண்டு ஏங்கிவிட்டோம் வா முருகா!


பழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நாங்கள்
பல்லாண்டு ஏங்கிவிட்டோம் வா முருகா!

மனவளக் கட்டுரை

”உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டால் பலருக்கும் சட்டென்று சொல்லத் தெரியாது. ஏனென்றால் பலருக்கும் அதீதமாக, பலவிதமான தேவைகள் உள்ளன. கேட்டால் பட்டியல் போட்டு அவர்கள் எழுதித் தரவே
பல மணித்துளிகளாகும்.

அனால் ஒரு கவிஞனைக் கேட்டபோது சட்டென்று இரண்டே வரிகளில்
அவன் பதில் சொன்னான்.

கேட்கப்பெற்ற  கேள்வி: மனிதனுக்கு என்ன தேவை? அவன் சொன்ன
பதில்:

காலையில் மலச்சிக்கலும்
இரவில் மனச்சிக்கலும் 
இல்லாத வாழ்க்கை வேண்டும்!”

என்னவொரு அசத்தலான பதில் பாருங்கள்.

ஆமாம். காலை எழுந்தவுடன், வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள Bowl விரிவடைந்து மலம் வெளியேறி விடவேண்டும். அப்போதுதான் மற்ற காலைக் கடன்களை எல்லாம் சுறுசுறுப்பாகச் செய்து, அன்றைய
வேலைக்கு நம்மை நாம் தயார் செய்துகொள்ள முடியும். அதுபோல
இரவில் மனச் சிக்கல் இல்லாமல் இருந்தால்தான் நித்திராதேவி
நம்மை சீக்கிரம் அணைத்துக் கொள்வாள். இல்லை என்றால் அவள் போய்விடுவாள். நம்பாடு திண்டாட்டம்தான்!

இப்போதெல்லாம், பூவன் வாழைப்பழம், விளக்கெண்ணெய் போன்ற
இயற்கை மருந்துகளுடன், Acelac, Dulcolax, போன்ற அலோபதி
மருந்துகளும் உள்ளன. வயதானவர்களுக்கு மட்டுமே அவைகள்
சரியாக இருக்கும்.

சிக்கன் மஞ்சூரியா, மட்டன் கிரேவி. பரோட்டா என்று இரவில் வெட்டி
விட்டு காலை எட்டு மணி வரை தூங்கும் இளைஞர்களுக்கும், மத்திய வயதினருக்கும், அந்த மருந்துகள் எல்லாம் தேவைப்படாது.

சரி, சொல்லவந்த மேட்டருக்கு வருகிறேன்:

மனிதனுக்கு முதலில் என்ன வேண்டும்?

சின்ன வயதில் அரவணைத்து வளர்க்ககூடிய நல்ல தாய் வேண்டும்.

இளைஞனாக, நன்றாகப் படித்து, வேலையில் சேர்ந்த பிறகு, நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும். அதாவது அன்பான மனைவி வேண்டும்.
நல்ல மனைவி அமைந்துவிட்டால் வாழ்க்கையில் பாதிப் பிரச்சினைகள் தானாகச் சரியாகி விடும்.

நல்ல மனைவிக்கு அளவுகோள் என்ன? அதற்கு அளவுகோள், ஸ்கேல், அவுன்ஸ்கிளாஸ் எல்லாம் கிடையாது.

ஒரே வரியில் சொன்னால், அவனைப் புரிந்து நடந்து கொள்ளக்கூடிய
மனைவி வேண்டும். அவனுடைய நிலைமை தெரிந்த மனைவி
வேண்டும்.

”உங்களைக் கல்யாணம் செய்துகொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்?”
என்று அவள் ஒருநாளும் புலம்பக்கூடாது.

மாதம் 20,000 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவனுக்குக்கூட,
இன்றைய விலைவாசிப் பேயால் பல உபத்திரவங்கள் உண்டு.
அதை உணராமல் பண்டிகை விசேடங்களுக்குப் பத்தாயிரம்
ரூபாயில் பட்டுப் புடவை கேட்டு நச்சரிக்கும் மனைவி கூடாது.

அதைத்தான் ஞானி ஒருவன் பாட்டில் வைத்தான். பாடலைப்
பாருங்கள்!

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை
அரும்பசிக்கு உதவா அன்னம்
தாகத்தைத் தீராத் தண்ணீர்
தரித்திரம் அறியாப் பெண்டிர்
கோபத்தை அடக்கா வேந்தன்
குரு மொழி கொள்ளாச் சீடன்
பாபத்தை தீராத் தீர்த்தம்
பயனில்லை, ஏழும் தானே!
           - விவேக சிந்தாமணி

தரித்திரம் அறியாப் பெண்டிர்’ என்று சொன்னான் பாருங்கள்.
அதுதான் சத்தியமான வார்த்தை. கணவனின் பொருளாதார
நிலைமை தெரியாத மனைவி என்று பொருள். சூழ்நிலை தெரியாத
பெண். அவளை வைத்துக்கொண்டு அவன் எப்படி அல்லல்பட
வேண்டும். சற்று யோசித்துப் பாருங்கள்!

தரித்திரம் அறியாத பெண் மனைவியாக வந்தால், கணவனின்
டெபாஸிட் காலியாகிவிடும்.

எந்த உணவாக இருந்தாலும் தொண்டைவரைதான் ருசி. அது
பாசுமதி அரிசி சாதமாகட்டும் அல்லது ஐ.ஆர் எட்டில் வடித்த
சாதமாகட்டும், கிடைப்பதை உண்ணப் பழகிக்கொள்ள வேண்டும். பசிக்குத்தான் உணவு: ருசிக்கு அல்ல!

தூக்கம்தான் முக்கியம். ஏ.ஸி அறையிலும், பஞ்சு மெத்தையிலும்
படுத்துப் பழகக்கூடாது. பாயில் படுத்துப் பழக வேண்டும். எங்கே
போனாலும் பாய் கிடைக்கும்.

உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க சிறு வீடு இது மட்டும்தான்
அன்றாட வாழ்விற்குத் தேவை. ரோட்டி கப்டா மக்கான் என்று வட
இந்தியர்கள் சொல்வார்கள் அதுதான் முக்கியம். அதில் வசிதிக்கும்  ஆடம்பரத்திற்கும்  ஆசைப் படக்கூடாது.

பட்டினத்தடிகளைவிடவா பெரிய செல்வந்தர் இருக்க முடியும்.
கடைசியில் இறைவனின் பெருமையறிந்து, துறவறம் பூண்டு,
இறைவனைத் தேடியதோடு, எளிய வாழ்க்கையும் அவர்
மேற்கொண்டார்.

அந்தத் துறவு நிலையிலும், அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.
பாடலைப் பாருங்கள்

உடைகோ வணம் உண்டு, உறங்கப் புறந்திண்ணையுண்டு, உணவிங்கு
அடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம்உண்டு இந்தமேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே?

எத்தனை அருமையாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள்!

மனித வாழ்க்கையில் என்ன மிச்சமாகும்?

தாசியின் மார்பிலும் தவுல்கொண்ட தோளிலும்
       தழும்புதான் மிச்ச மாகும்
சன்யாசி பையிலும் சாவுண்ட மெய்யிலும் 
       சாம்பல்தான் மீத மாகும்
                          - கவியரசர் கண்ணதாசன் 

என்று கவியரசர் மீதத்திற்குக் கணக்குச் சொன்னார்!

அது இறக்கும் போது வரும் கணக்கு: இருக்கும்போது என்ன இருக்கும்? எப்போதும் ஏக்கம்தான் மேலோங்கி இருக்கும். அதுதான் முடிவில் மிச்சமுமாகும். நிறைவேறாத ஆசைகளால் ஏற்படும் ஏக்கம்தான்
அதிகமாக இருக்கும். ஆசைகளையும் அதனால் ஏற்படும்
ஏக்கங்களையும் விட்டொழியுங்கள். எளிய வாழ்க்கையில் அது சாத்தியமாகும். இருப்பது போதும் என்ற மனதில் ஏக்கத்திற்கு
இடமே இருக்காது.

ஆகவே எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அதில்தான் நிமதியும் சந்தோஷமும் இருக்கும்

அது இல்லாதவர்கள், தலைப்பில் உள்ள பாடல் வரியையைத்தினமும்
பாடி முருகப் பெருமானைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பழநிமலையில் இருக்கும் வேல்முருகா - நான்
பல்லாண்டு ஏங்கிவிட்டேன் வா முருகா!

கண்டிப்பாக அவர் உங்களுடைய வாழ்க்கையை சீராக்குவார்.
செம்மைப் படுத்துவார்.

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.11.14

உங்களுக்காகத் தனியாக மின்சாரம்!


உங்களுக்காகத் தனியாக மின்சாரம்!

ஒவ்வொருவருக்கும் தனியாக சம்சாரம் இருப்பதைப்போல மின்சாரத்தையும் தனியாக வைத்துக்கொள்ளலாம். ஆச்சரியமாக இருக்கிறதா?
செய்தி கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.

மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
முழுவதும் படிக்க..

செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டுகண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டு விடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர்.

அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி,அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது.

இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில் நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர்.
அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டு பிடித்த தொழில் நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும் போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.

எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில் நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில் நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.

நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக் குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள் ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்''என்கிறார் ஸ்ரீதர்.

ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது.

வால் மார்ட் நிறுவனமும் 400கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7முதல் 8 லட்சம் டாலர்! அட,  அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது.

தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லலை.

Source: http://www.sinthikkavum.net/2011/09/blog-post_1763.html 
----------------------------------------------
இணையத்தில் படித்தது. செய்தி முக்கியமானதாகவும், மகிழ்வைத் தரக்கூடியதாகவும் இருந்தால், உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.11.14

Short Story: சிறுகதை: அப்பத்தாவின் அணுகுமுறை!


Short Story: சிறுகதை: அப்பத்தாவின் அணுகுமுறை!

Approach means a way of dealing with a situation or problem.
Appaththa means Grand mother from father's side
----------------------------------------------------------
அடியவனால் எழுதப்பெற்று, மாத இதழ் ஒன்றில் வெளியாகி. பலரது பாராட்டுக்களையும் பெற்ற சிறுகதை இது. அதை  இன்று உங்களுக்கு
அறியத்தரும் முகமாக பதிவில் ஏற்றியுள்ளேன். அனைவரையும்
படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------
கதையின் தலைப்பு: அப்பத்தாவின் அணுகுமுறை!

“ஆணை அடக்கி வள; பெண்ணைப் பொசுக்கி வள, என்று சொல்லி, எங்க காலத்தில் பிள்ளைகளை வளர்த்தார்கள். இப்போது அப்படியா நடக்கிறது?
பிள்ளைகள்தான் பெற்றோர்களைப் பொசுக்கி வைத்துள்ளன” என்று தன்னுடைய அப்பத்தா உமையாள் ஆச்சி சொல்லியவுடன், ஆச்சியின்
பேரன் முத்தப்பன் மெல்லிய குரலில் சொன்னார்.

“அப்பத்தா, உங்க காலத்தில் வீட்டில் எட்டுப் பிள்ளைகள், பத்துப் பிள்ளைகள் என்று நிறையப் பிள்ளைகள். கண்டிப்புடன் வளர்த்தார்கள். ஒன்று
அப்பச்சி கண்டிப்புடன் இருப்பார். இல்லையென்றால் ஆத்தா கண்டிப்பு மிக்கவராக இருந்தார். செல்வந்தர் வீடாக இருந்தாலும் எளிமையான
வாழ்க்கை. இப்போது அப்படி இல்லை. வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான். செல்லமாக வளர்க்கிறார்கள். அவர்கள் சொன்னது
கேட்பதில்லை. அதுதான் குறை!”

“கேட்டதை உடனே வாங்கிக் கொடுக்கிறார்கள். அதுவும் குறைதான். படிக்கும் காலத்தில் செல்போன் எதற்கு?”

“பெண் குழந்தைகளுக்கு அது அவசியம் அப்பத்தா. ஒரு பாதுகாப்பிற் காகத்தான்.”

“பேசுவதற்குத்தானே - சாதாரண போன் பத்தாதா? பதினைந்தாயிரம்
ரூபாயில் ஸ்மார்ட்போனாமே - அது எதற்கு? அத்துடன் இணைய
இணைப்பு, டாப் அப் என்று பிள்ளைகள் மாதம் ஐநூறு ரூபாய்களைக்
கறந்து விடுகின்றன. அதெல்லாம் தேவையா? அதனால் படிக்கின்ற
காலத்தில் எத்தனை கேடுகள் தெரியுமா? பணத்தின் அருமை
இப்போது பிள்ளைகளுக்கு எங்கே தெரிகிறது?

“உண்மைதான். கண்ணைக் கசக்குகிறார்களே என்று வாங்கிக்
கொடுக்க வேண்டியதாக உள்ளது”

“கண்ணைக் கசக்கினால் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் விட்டு வைப்போமா? உரிய மதிப்பெண்களை வாங்கவில்லை - அதனால் பொறியியல் படிப்பு உனக்குக் கிடையாது. என்னால் லட்சக்கணக்கில்
பணம் கொடுத்து சீட் வாங்க முடியாது என்று சொல்கிறோமா? பணம் செலவழித்து ஏற்பாடு செய்கிறோமா இல்லையா?”

“அவர்களுடைய எதிர்காலத்திற்காக அதை எல்லாம் செய்ய
வேண்டியதாக உள்ளது!”

“செய்ய வேண்டியதை, செய்யக்கூடியததைத்தான் செய்ய வேண்டும்.
நேற்று உன் அண்ணன் முருகப்பன் வந்து கலங்கி விட்டுப் போனான். என்னையும் கலக்கிவிட்டுப் போனான். என்னவென்று தெரியுமா
உனக்கு?”

“தெரியாது அப்பத்தா! நீங்கள் சொன்னால்தான் தெரியும்? அண்ணனும் அண்ணமிண்டியும் கசடுகள். அடுத்தவன் வீட்டு விஷயத்தை
ஆர்வத்துடன் விசாரிப்பார்கள். ஆனால் அவர்கள் வீட்டு விஷயத்தை அப்படியே அமுக்கிவிடுவார்கள். அத்துடன் கோபப்படுவார்கள்.
அதனால் அவர்கள் வீட்டு விஷயத்தில் நான் தலையிடுவதில்லை”

“எல்லாவற்றையும் எப்படி அமுக்க முடியும்? அவனுடைய மகள் நீலா
உடன் வேலை பார்க்கும் பையனைக் காதலிக்கிறாளாம். அவனைத்தான் மணம் செய்து கொள்வேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறாளாம்.
உங்கள் சம்மதம் தேவை. நீங்கள் சம்மதித்தால் மட்டுமே திருமணம்.
இல்லை என்றால் நான் திருமணம் செய்து கொள்ளாமல் உங்களு
டனேயே இருந்து விடுகிறேன் என்கிறாளாம். என்ன செய்யலாம் என்று கேட்டார்கள்?”

“அடடா, என்ன சொன்னீர்கள்?”

“சொல்வதற்கு என்ன இருக்கிறது? குடும்ப கெளரவத்தைக் கெடுக்கப் பிறந்ததுகள். போனால் போகட்டும் என்று விட்டு விடுங்கள் என்று சொன்னேன்.”

“அதற்கு அவர்கள் என்ன சொன்னார்கள்?”

“என்ன நீ? கதை கேட்பது போல ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்? என்ன செய்தால் நல்லது என்று நீ சொல்!”

“காதலித்தவளுக்குக் கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தெரியாதா?"

"நானும் அதைத்தான் சொன்னேன். அவளையே வீட்டை விட்டுப்போய் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லுங்கள் என்றேன். அதற்கு அவர்கள்.
இருபத்திநான்கு ஆண்டுகள் வளர்த்த பெண்ணை ஒரே நாளில் எப்படித்
தலை முழுக முடியும்? ஆகவே. நாங்கள் முன்னின்று அவளுடைய
திருமணத்தை நடத்தி வைப்பதாக உள்ளோம். வீட்டிற்குப் பெரியவர்கள் நீங்கள், உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்பதற்காகத்தான் முதன்
முதலில் உங்களிடம் சொல்கிறோம் என்றார்கள். நான் ஆசீர்வதிப்பதற்கு அதில் என்ன இருக்கிறது? எல்லாம் தலை எழுத்து. உங்கள் இஷ்டப்படி
செய்யுங்கள். என்னை இழுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டேன்.
நம்முடைய பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காததினால் ஏற்படும் அவலம் என்று சொன்னேன்.
அத்துடன் இன்னொன்றையும் சொன்னேன். சின்னத்தா மகன் சிவநேசன்  முன்பு செய்தானே - அது போல பங்காளிகள், தாய பிள்ளைகள் என்று எல்லோரையும் அழைத்து, பஸ் வைத்துக் கூட்டிக்கொண்டுபோய்,
நீங்கள் செய்வதை ஊர் அறிய நியாயப் படுத்தாதீர்கள். நகரத்தார்களின்
நீண்ட வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் இது ஒவ்வாதது. அத்துடன் இதை நியாயப்படுத்தி மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழாதீர்கள். அது சமூகக் கேடாகும். காதலிப்பவன்
ஒரு காஷ்மீர்க்காரன் என்றால் நீங்கள் அங்கே சென்று அவளுடைய திருமணத்தை நடத்தி வைப்பீர்களா? அல்லது அவன்தான் தன்னுடைய உறவினர்களுடன் சென்னைக்கு வந்து உங்களுடைய பெண்ணைத்
திருமணம் செய்து கொள்வானா? இதை எல்லாம் சொல்வதனால் நான் காதலுக்கு எதிரியல்ல. காதல் வேண்டியதுதான். ஆனால் அது திருமணத்திற்குப் பிறகுதான் வரவேண்டும். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் காதலிக்க வேண்டும். அதானால்தான்
கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் ஒன்றில் அதை நன்றாக வெளிப்படுத்தினார். இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் அறிவுரையாகச் சொன்னார்.

“காதலைக் காவியத்திற்கு விட்டுவிடுங்கள்
கல்யாணத்தை பெற்றோர்களிடம் விட்டுவிடுங்கள்”

என்றார்”

”உண்மைதான் அப்பத்தா! நீங்கள் சொன்னால் சரிதான்” என்று முத்தப்பன் அத்துடன் முடித்துக் கொண்டான்.

                                          ***************************

பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதை நாற்காலி போட்டு உட்கார வைக்காதீர்கள். அவ்வப்போது, என்ன, ஏதென்று பார்த்து அனுப்பி
விடுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்று அப்பத்தா அடிக்கடி சொல்வார்.

முருகப்பனும் அதைத்தான் செய்தார்.

பையனின் பெற்றோர்கள் பொள்ளாச்சியில் இருந்தார்கள்.
 பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள
ஜமீன் முத்தூர் என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
பெரிய தென்னந்தோப்பு இருந்தது. வசதியான குடும்பமாக இருந்தது.

அவர்களுடைய முதல் கேள்வியே அதிரடியாக இருந்தது.

“பெண்ணிற்கு என்ன சீர் செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். உடன்
சென்ற முருகப்பனின் மனைவி வள்ளி ஆச்சிக்கு அது அதிர்ச்சியாக
இருந்தது.

காதல் திருமணம்தானே? கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியது
தானே? இதை எல்லாம் எதற்குக் கேட்கிறார்கள் என்று நினைத்தார்.

ஆனால் முருகப்பன் நிலைமையை உணர்ந்து நிதானமாகப் பேசினார்.

”ரொக்கமாகப் பத்து லட்சமும், இரண்டு வைர நகைகளையும்
கொடுப்பதாக உள்ளோம்.”

பையனின் தந்தை தொடர்ந்து கேட்டார்: “பூமியாக எத்தனை ஏக்கர் கொடுப்பீர்கள்?”

பூமியா? முருகப்பன் திகைத்துப்போய் விட்டார். ஏன்டா பேசப்
போனோம் என்று ஆகிவிட்டது!

”எங்கள் பகுதியில் பூமியைச் சீராகக் கொடுக்கும் வழக்கமில்லை”
என்று மெதுவாகச் சொன்னார்.

அதுவுமில்லாமல் பெண்ணிற்காக எடுத்துவைத்துள்ள பணத்தில்,
அதுவும் இன்று உள்ள விலைவாசி நிலவரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தைக்
கூட வாங்க முடியாது.

”உங்களுக்காக நானும் இறங்கி வருகிறேன். பெண்ணிற்குச் சீராக நான்கு
ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுங்கள். தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில்
வேண்டுமென்றாலும் வாங்கிக் கொடுங்கள். அத்துடன் வைர நகைகள் எல்லாம் எங்களுக்கு ஆகாது. எல்லாவற்றையும் தங்கமாகவே
கொடுத்து விடுங்கள். நூறு பவுனிற்கு நகைகளைக் கொடுங்கள்”

முருகப்பன் சட்டென்று மனதிற்குள்ளேயே  கணக்குப் போட்டார். மன்னார்குடிக்கு அருகே பூர்வீகச் சொத்தாக வந்த நிலம் இருக்கிறது.
பத்து ஏக்கர். அதில் நான்கு ஏக்கர்களைக் கொடுத்துவிடலாம் என்று
முடிவு செய்தார். அத்துடன் வைரத்திற்குப் பதிலாகத் தங்கம் எனும்
போது அதில் பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை!

சரி என்று சொன்னவர். சட்டென்று கேட்டார்.”பையனுக்கு நீங்கள்
என்ன செய்வீர்கள்?”

பையபின் தந்தை கடகடவென்று சிரித்தார்.” எங்களுக்கு அவன் ஒரே
பையன். ஆகவே எங்கள் சொத்துக்கள் எல்லாம் அவனுக்குத்தான்!”

பிறகு மெதுவாகத் தனக்குள்ள ஆஸ்திகளைப் பட்டியலிட்டார். ஜமீன் முத்தூரில் இருக்கும் நூறு ஏக்கர் தென்னந்தோப்பு, அங்கே உள்ள
பெரிய வீடு, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் இருக்கும் பங்களா, மனைவியிடம் இருக்கும் இருநூறு பவுன் நகைகள், பழநி ரோட்டில்
இருக்கும் தேங்காய் நார்த் தொழிற்சாலை.

முருகப்பனுக்கும் ஒரளவிற்குத் திருப்தியாக இருந்தது. தன்னுடைய மனப்பூர்வ சம்மதத்தைத் தெரிவித்தார்.

பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை. அடுத்த மாதம் வந்த ஒரு
வளர்றை முகூர்த்த நாளில், பழநி தண்டாயுதபாணி சந்நிதியில்
நீலாவின் திருமணம் நடந்தேறியது.

                                  **********************************************

"எங்கே வாழ்க்கை தொடங்கும் -  அது 
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் 
என்பது யாருக்கும் தெரியாது"

என்று கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையின் போக்கை இரண்டே
வரிகளில் அற்புதமாக எழுதி வைத்தார்.

பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பித்த நீலாவின்
திருமண வாழ்க்கை ஒரு முட்டுச் சந்தில் போய் முடிந்துவிட்டது.
ஆமாம், கணவனுடன் பிணக்கமாகி மூன்றே மாதங்களில் தாய்
வீட்டிற்கே திரும்பி வந்துவிட்டாள்.

எதைக்கேட்டாலும் ஓ வென்று அழுகை. இரண்டு நாட்கள் விட்டுப்
பிடித்த முருகப்பன் அவளைத் தேற்றி, நடந்ததைத் தெரிந்துகொள்ள முயன்றார்.

தன்னுடைய கணவனைப் பிடிக்கவில்லை. அவனுடன் வாழ முடியாது
என்று திரும்பத் திரும்பச் சொன்னாள்.

முருகப்பன் பேச்சுக் கொடுத்தார்:

”குடிக்கிறானா....?”

”இல்லை!”

”போதைப் பொருள் பழக்கம் இருக்கிறதா....?”

”இல்லை!”

”உறவுகள் நார்மலாக உள்ளதா? அல்லது இரவு நேரங்களில் முரட்டுத்
தனமாக நடந்து கொள்கிறானா....?”

”அதிலெல்லாம் பிரச்சினை இல்லை!”

”பின்னே என்ன பிரச்சினை?”

”என்னை அநியாயத்திற்குக் கட்டுப் படுத்துகிறார். எனது சுதந்திர
உணர்வுகளை மதிப்பதில்லை. அடிமைபோல் நடத்துகிறார்

”அப்படி என்ன செய்கிறார்?”

“ஒரு வாரத்திற்கு முன்பு என் மேக்கப் சாமான்களை எல்லாம் கொண்டு
போய்த் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்து
விட்டார். அவைகள் மொத்தம் பத்தாயிரத்திற்கு மேல் விலை
உள்ளவை. கேட்டால் திருமணத்திற்கு முன்புதான் அவைகள் எல்லாம்
ஒரு பெண்ணிற்குத் தேவைப்படும். இப்போது தேவை இல்லை
என்கிறார்”

முருகப்பனுக்குப் புரிந்தது. படிக்கிற காலத்திலேயே அவள் மாதம்
ஐயாயிரம் ரூபாய்க்கு மேக்கப் சாமான்களை வாங்குவாள். குளிக்கு
முன்பாகப் பூசிக் கொள்வது. குளித்த பிறகு பூசிக்கொள்வது என்று வகைவகையாக இருக்கும். எல்லாம் ஸ்ப்ரேயருடன் உள்ளவை.
கண்ணிற்குப் போடும் கண்மை செட்டே பிரமாதமாக இருக்கும்.
கண்ணிற்கு ஒன்று. இமைக்கு ஒன்று.புருவத்திற்கு ஒன்று. எல்லாம் பிராண்டட் அயிட்டங்கள். கண்ணிற்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் செலவாகும்.

“பியூட்டி பார்லருக்கு சென்று முடியை வெட்டக்கூடாது என்கிறார்.
எங்கள் அம்மாவைப் போல முடியை நன்றாக வளர்த்து சடை
போட்டுக்கொள் என்கிறார். நடக்கிறகாரியமா?”

முருகப்பன் மனதிற்குள் நினைத்துக்கொண்டார். “ஆஹா..இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம்  ரூபாய்மிச்சமாகுமே!”

“இவ்வளவுதானா?”

“என்ன இவ்வளவுதானா என்கிறீர்கள்? ஜீன்ஸ் பேண்ட், ஸ்டாக்கிங்ஸ்,
 டி’ சர்ட் எல்லாம் அணியக்கூடாது என்கிறார். சூடிதார் அல்லது சேலை
மட்டும்தான் உடை என்கிறார்.”

“இரண்டு பேரும் ஒரே நிறுவனத்தில், ஒரே இடத்தில்தானே வேலை பார்க்கிறீர்கள். அதனால் மற்றவர்களின் பார்வைகளை வைத்து அப்படிச்
சொல்கிறார். நல்லதுதானே! குடும்பம் என்று வந்துவிட்ட பிறகு, குடும்பப்பெண் என்று வந்துவிட்ட பிறகு அதெல்லாம் தேவைதானே
ஆத்தா?”

”திருமணத்திற்கு முன்பு நான் அப்படித்தானே இருந்தேன். அப்போது
ஒன்றும் சொல்லாமல் உருகி உருகிக் காதலித்தவருக்கு இப்போது
என்ன ஆயிற்று? இப்போது ஏன் இந்த வக்கிரம்? கட்டுப் படுத்தும்
ஆணாதிக்கக் குணம்?”

"ஆணாதிக்கம் என்று சொல்லாதே ஆத்தா! அது தனக்கு என்று வரும் பொசஸிவ்னெஸ் - தனக்கு மட்டும் உரியது என்ற சுயகுணம் என்றும்

சொல்லலாம். அது இயற்கையானதுதான். தன் மனைவியை
மற்றவர்கள் ரசிக்கக்கூடாது என்ற ஆதங்கமாகவும் எடுத்துக்
கொள்ளலாம்!”

“நீங்கள் சப்பைக் கட்டுக் கட்டாதீர்கள் அப்பா! என்னைச் சற்றுத் தனியாக இருக்க விடுங்கள்” என்றாள்.

அத்துடன் தங்களுடைய பேச்சிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு,
பிறகு இதைப் பார்த்துக்கொள்ளலாம் என்று அவளுடைய தந்தையும்
எழுந்து சென்று விட்டார்.

                                  ************************************

எங்கே சுற்றினாலும் கடைசியில் அம்பாளைத்தான் சேவிக்க
வரவேண்டும் என்பார்கள் மதுரைக்காரர்கள். மேற்படி செய்திகள்
எல்லாம் இரண்டே நாளில் அப்பத்தாவின் காதுகளுக்கு எட்டியது.

தொலைபேசியில் தன் பேரன் முருகப்பனோடு பேசியவர், நீலாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்து சேர். நான் அவளைச் சமாதானப்
படுத்துகிறேன் என்றார்.

முருகப்பனும் அடுத்த நாள் காலையிலையே தன் மகள் நீலாவுடன்
வந்து சேர்ந்தார்.

வந்த கொள்ளுப் பேத்தியைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்து, அப்பத்தா
தன் அன்பை வெளிப் படுத்தியவுடன், அவள் கண் கலங்கியதோடு, குரல்
கொடுத்து அழுக ஆரம்பித்து விட்டாள்.

அப்பத்தா, சமாதானப் படுத்தியோடு சொன்னார்கள்: ”அழுகாதே!
அழுவதற்காக இந்தப் பிறவியை யாரும் எடுக்கவில்லை. எது
வந்தாலும் நின்று  சாதிக்க வேண்டும்! என்ன பெரிதாக நடந்துவிட்டது இப்போது?”

”உங்கள் பேச்சை எல்லாம் கேட்காமல் போய்விட்டதற்கு இப்போது வருந்துகிறேன்”

”என்ன செய்வதாக உத்தேசம்?”

”என்னுடைய குணத்திற்கும் அவருடைய குணத்திற்கும் ஒத்து வராது.
ஆகவே பிரிந்து வந்துவிடலாம் என்றுள்ளேன்!”

“எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று எதையும் செய்யக்கூடாது. ரத்து செய்யக்கூடிய அளவிற்கு அவர் ஒன்றும் குணக்கேடான ஆளாகத் தெரியவில்லை.

வெற்றிகரமான வாழ்க்கை என்பது உடன் இருப்பவர்களை ஒருவருக்கொருவர் அனுசரித்துக் கொண்டு போவதில்தான்
இருக்கிறது! ஆகவே நன்றாக யோசித்துப்பார். சரி, ரத்து செய்வதாகவே வைத்துக்கொள்வோம். அதனால் உனக்கு ஏற்படப்போகும் இழப்புக்களை நீ நினைத்துப் பார்த்தாயா?”

“இழப்பு என்று எதைச் சொல்கிறீர்கள்?”

”ஒரு கார்  விற்பனை நிலையத்தில் இருக்கும்வரைதான் புதுக்கார். 
ஒருவர் ஒரு காரை வாங்கிக்கொண்டுபோய்விட்டு ஒரு மாதம் 
கழித்துத் திருப்பிக் கொண்டுவந்தால் அது புதுக்கார் கணக்கில் வராது. 
அதை செகண்ட் கார் என்றுதான் சொல்வார்கள். திருமணமான பெண், திரும்பக் கன்னிப் பெண் என்ற நிலைக்குத் திரும்பி வரமுடியாது. 
கன்னிப் பெண்ணிற்கு உள்ள திருமண வாய்ப்புக்கள், இரண்டாவது திருமணத்திற்குக் கிடைக்காது. அது தெரியுமா? காம்ப்ரமைஸ் 
அதாவது சமரசம் செய்து கொள்ள வேண்டும். அதையும் யோசித்துப்பார்!”

தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவளுக்கு அறிவுரை சொன்னார்கள். அவர்கள் காலத்தில் பெண்கள் எப்படி பல கசப்பான

நிகழ்வுகளையும் சகித்துக் கொண்டு குடும்பம் நடத்தினார்கள்
என்பதையும் விபரமாகச் சொன்னார்கள். கதையின் நீளம் கருதி
அதை நான் விவரிக்கவில்லை.

சொல்லச் சொல்ல புடம் போட்ட தங்கம் போல, ஒரு தெளிவான
சூழ்நிலைக்கு வந்த நீலா, தன் கசப்புக்களை மறந்ததோடு, தன்
குணத்தை மாற்றிக்கொண்டு தன் கணவனிடமே போய்
அடைக்கலமானாள். நாகரீகம் என்று தான் நினைத்துக்
கொண்டிருந்ததை எல்லாம் விட்டொழித்தாள்.

எல்லாவற்றையும் கேள்விப்பட்ட அவளுடைய கணவனும் தன்
மனைவி நீலாவுடன் செட்டிநாட்டிலுள்ள ஊருக்கு வந்து
அப்பத்தாவையும் வணங்கி ஆசீர்வாதம் பெற்றுச் சென்றான்.
நல்லதொரு விருந்தை அவர்களுக்கு நல்கிய அப்பத்தா, அவர்கள்
புறப்படும் சமயம் தன் கணவர் பயன் படுத்திய
அந்தக் காலத்தில் பிரபலமான ஷெஃபர்ஸ் (Sheaffer) பேனா
ஒன்றையும் பரிசாகக் கொடுத்தார். 1928ம் ஆண்டில் வாங்கப்
பட்டதாகும் அது முழுவதும் தங்கத்தினால் ஆனது. இரண்டு லட்ச
ரூபாய் கொடுத்தால் கூட அதுபோன்ற பேனா இப்போது கிடைக்காது.

நீலாவின் கணவனுக்கும் மிக்க மகிழ்ச்சியாகிவிட்டது. அதற்காக
மீண்டும் ஒருமுறை அப்பத்தாவின் காலில் விழுந்து வணங்கினான்.
அத்துடன்  சென்னைக்கு வந்து தங்கள் வீட்டில் ஒரு பத்து நாட்களாவது
தங்கிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

”நல்ல பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொடுங்கள். அந்தக்
குழந்தை பிறக்கும் சமயத்தில் சென்னைக்கு வந்து ஆறுமாத காலம் உங்களுடனேயே தங்கி விடுகிறேன்”

நீலாவின் கண்கள் கலங்கிவிட்டன!

தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அப்பத்தாவின் அணுகுறைக்கு 
ஈடு இணையே கிடையாது. முதலில் தன்னுடைய திருமணத்திற்கு, 
பண்பாடு, கலாச்சாரம் என்று சம்மதத்தைத் தெரிவிக்காதவர்கள், 
பிரச்சினை என்று தெரிந்தவுடன் தானாகவே தலையைக் கொடுத்து, பிரச்சினையை எப்படித் தீர்த்தார்கள் என்பதை நினைக்கும்போது 
வியப்பாக இருந்தது.

எல்லோருக்கும் அனுபவங்கள் இருக்கின்றன. சரியான அணுகுமுறைகள் இருக்கின்றனவா? இருந்தால் இந்த உலகத்தில் பிரச்சினைகளுக்கு 
இடமேது? அதை இறையருள் என்றும் சொல்லலாம்! இறையருள்
இருந்தால் எதுதான் சரியாக இருக்காது? எல்லாமே சரியாக இருக்கும்!!!
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!