மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.11.11

Astrology நீங்களும் உங்கள் சந்தேகங்களும்!

---------------------------------------------------------------------------------------
Astrology  நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பகுதி ஒன்று!

“சார், நான் ரிஷபலக்கினக்காரன். சுக்கிரன் எனக்கு லக்கினாதிபதி. அத்துடன் அவனே ஆறாம் இடத்திற்கும் அதிபதி. அவன் என்னுடைய  ஜாதகத்தில் 12ல் இருக்கிறான். அதாவது விரையத்தில் மறைந்துவிட்டான். ஆனால் நவாம் சத்தில் அவன் உச்சம் பெற்றுள்ளான். அவன் எனக்கு  ஹீரோவா? அல்லது வில்லனா?”

“இரண்டும்தான். இரண்டு இடங்களுக்கு அதிபதி என்னும் போது, அவன் இரண்டையுமே செய்வான்.”

“விளங்கவில்லையே சார்! ஒன்று ஹீரோ என்று சொல்லுங்கள். அல்லது வில்லன் என்று சொல்லுங்கள். ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்கும்”

“உங்கள் வீட்டிற்கு நீங்கள் பிள்ளை. உங்கள் மாமனார் வீட்டிற்கு நீங்கள் மாப்பிள்ளை. அதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையா? அல்லது 
இரண்டுமே உண்மையா?”

“இரண்டுமே உண்மைதான்”

“அப்படித்தான் அதுவும். உங்கள் லக்கினத்திற்கு அவன் ஹீரோ. ஆறாம் வீட்டுக் காரியங்களுக்கு அவன் வில்லன். இரண்டு வீட்டு  வேலைகளையுமே அவன் கச்சிதமாகச் செய்வான். ஹீரோ என்பதால் வில்லன் வேலையை விட்டுக் கொடுக்க மாட்டான். இது எல்லாக்  கிரகங்களுக்கும் பொதுவான குணம்.”

“சரி, எப்போது செய்வான்?”

“தனது மகாதிசை, மற்றும் புத்திகளில் செய்வான்”

“ஒரே தசா புத்தியில் அவன் இரண்டு வேலைகளையும் எப்படிச் செய்ய முடியும்? ஏதாவது ஒன்றைத்தானே செய்ய முடியும்? அடுத்து எனக்கு
சுக்கிரபுத்தி வரவுள்ளது. அந்த புத்தியில் அவன் நன்மையைச் செய்வானா அல்லது தீமையைச் செய்வானா என்று எப்படித் தெரிந்து கொள்வது”

“இங்கே கோள்ச்சாரம் உங்களுக்கு உதவும். கோளாசாரச் சுக்கிரன் அல்லது சம்பந்தப்பட்ட கிரகத்தின் அன்றைய இருப்பிடம் (by placement) மற்றும் பார்வை (aspect) எந்த வீட்டின் மேல் விழுகிறதோ அந்த வீட்டிற்கான பலன்கள் கிடைக்கும். உதாரணத்திற்கு இன்றையத் தேதியில்  சுக்கிரன் கோச்சாரப்படி எங்கே இருக்கிறான் என்று படத்துடன் கீழே கொடுத்துள்ளேன். அதைப் பாருங்கள். இன்றையச் சுக்கிரன்  விருச்சிகத்தில் இருந்து கொண்டு உங்களுடைய லக்கினத்தைப் பார்க்கிறான். இப்போது அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் அது  நன்மையானதாக இருக்கும். இப்படித்தான் பார்க்க வேண்டும். விளக்கம் போதுமா?”



“இது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற வேலையாக இருக்கிறதே! குறுக்குவழி இல்லையா?”

“இருக்கிறது. அஷ்டகவர்க்கப் பாடம் நடத்தும்போது அதை எல்லாம் சொல்லித் தருகிறேன்”

“எப்போது துவங்கப் போகிறீர்கள்?

“விரிவாக எழுத வேண்டியதுள்ளது. தற்சமயம் நேரம் இல்லை! ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கலாம் என்றுள்ளேன். பொறுத்திருங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------
1. மேஷ லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே மூன்றாம் இடத்திற்கும் அதிபதி
2. ரிஷப லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லக்கினாதிபதியும் ஆவான்.
3. மிதுன லக்கினத்திற்கு வில்லன் செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
4. கடக லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
5. சிம்ம லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஏழாம் வீட்டிற்கு அதிபதியும் (7th Lord) ஆவான்.
6. கன்னி லக்கினத்திற்கு வில்லன் சனி (6th Lord) அதோடு அவனே ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியும் (5th Lord) ஆவான்.
7. துலா லக்கினத்திற்கு வில்லன் குரு (6th Lord) அதோடு அவனே மூன்றாம் வீட்டிற்கு அதிபதியும் (3rd Lord) ஆவான்.
8. விருச்சிக லக்கினத்தற்கு வில்லன் செவ்வாய் (6th Lord) அதோடு அவனே லக்கினத்திற்கும் அதிபதி ஆவான்.
9. தனுசு லக்கினத்திற்கு வில்லன் சுக்கிரன் (6th Lord) அதோடு அவனே லாபாதிபதியும் (11th Lord) ஆவான்.
10. மகர லக்கினத்திற்கு வில்லன் புதன் (6th Lord) அதோடு அவனே பாக்கியாதிபதியும் (9th Lord) ஆவான்.
11. கும்ப லக்கினத்திற்கு வில்லன் சந்திரன் (6th Lord)
12.  மீன லக்கினத்திற்கு வில்லன் சூரியன் (6th Lord)
++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

6.11.11

எதை ஊக்குவிக்க வேண்டும்?

----------------------------------------------------------------------------
மாணவர் மலர்

இன்றைய மாணவ மலரை எட்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 1
சிலேடை
By V.Gopalan, Thanjavur


இந்த ஒற்றைச் சொல்லை மட்டும் யாரிடமாவது சொன்னால், உடனடியாகப் புரிந்துகொள்வார்களா என்பது தெரியவில்லை. சிலேடைக்குக் கவி காளமேகம் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. சங்கக் கூட்டமொன்று. அதில் நான் கோபமாக "கையாலாகாதத்தனம்" என்று எதிரணி மீது குற்றம் சாட்டிப் பேசினேன். ஒரே எதிர்ப்பு. Unparliamentary word என்று அதைத் திரும்பப் பெற்றுக் கொள் என்றனர். அது என்ன பொருளா, திரும்பப் பெறுவதற்கு 'சொன்ன சொல்லும், ..... செலவிட்ட பணமும் திரும்பப் பெறமுடியுமா?" என்றேன். தொடர்ந்து அந்தச் சொல்லுக்கு பதிலாக "இவர்களது செயலிழந்த தன்மை" என்று சொன்னேன். அமைதி நிலவியது. இரண்டும் ஒரே பொருள்தான், இருந்தாலும் சில சொற்கள் ஆழப் புதைந்து புண்படுத்தும், சில பழகிப் போனவை.

சிலேடைக்கு கி.வா.ஜ.வைக் குறிப்பிட்டிருந்தார் கே.எம்.ஆர். ஆம், அவர் சாதாரண பேச்சு வழக்கில் பல சிலேடைகளை உதிர்த்திருக்கிறார். ஒரு முறை இவர் கலைவாணர் இல்லத்துக்குப் போனாராம். அங்கு இவருக்கு காபியா, டீயா என்று கேட்டனர். இவர் சொன்னார் டீயே மதுரம் என்று. அப்படியொரு கதையைச் சொல்வார்கள். (கலைவாணரின் மனைவி பெயர் டி.ஏ.மதுரம்)

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஐம்பதுகளில் மூன்றாம் பிளாட்பாரத்தில் ஸ்ரீரங்கம் பால்பண்ணை பால் இரவு எட்டு மணிக்கு மேல் கிடைக்கும். நண்பர்களோடு அங்கு போவோம். ஒருநாள் ஒரு நண்பர் எனக்கு நிர்வாணப் பால்தான் வேண்டுமென்றார். அனைவரும் விழித்தனர். அவர் சொன்னார், எனக்கு ஆடை நீக்கிய பால் வேண்டுமென்பதைத்தான் அப்படிச்சொன்னேன் என்றார்.

இன்னொரு நிகழ்ச்சியும் சொல்வார்கள். ஒரு வீட்டு விருந்துப் பந்தியில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது ரசம் நன்றாக இருக்கிறது என்று சாப்பிடுபவர் சொன்னாராம். அப்படியானால் கையைப் பிடியுங்கள் என்றாராம் பரிமாறிய பெண்மணி. கையை ஏந்தி அதில் ரசத்தைப் பிடியுங்கள் என்று சொன்னதை, இவர் அந்தப் பெண்ணின் கையை எப்படிப் பிடிப்பது என்று திகைத்துப் போய் கேட்டாராம்.

இரட்டைத் தெரு, ஒத்தைத்தெரு, நடுத்தெரு என்றெல்லாம் தெருக்களுக்குப் பெயர் உண்டு. நடுத்தெருவில் குடியிருந்த ஒருவர் புதிய வீடு கட்டிக் கொண்டு சென்றாராம். அவரை இவர் விசாரிக்கச் சென்றபோது சொன்னது, 'இதுவரை நடுத்தெருவில் இருந்தீர்கள், நல்ல காலம் இப்போது சொந்தமாக வீடுகட்டிக் கொண்டு போய்விட்டீர்கள் என்று.

ஒரு நண்பர் வீட்டுக்குப் போன இடத்தில் அவர் குழந்தைக்கு உடலில் பல கட்டிகள் இருப்பதை கவனித்தார். குழந்தையின் தந்தையிடம் இவனுக்குப் பால் வாங்கிக் கொடுங்களேன், இவைகள் உஷ்ணக் கட்டி என்றார். அதற்கு அவர் பால் வாங்கிக் கொடுத்தால் கட்டி வருமா? என்றார். தன் வருமானத்துக்கு இந்த செலவு கட்டி வருமா என்பது அவர் கேள்வி. இவர் சொன்னார், ஆமாம், கட்டி வராது அதனால்தான் பால் தரச் சொல்கிறேன் என்றார். இவர் சொன்னது பால் சாப்பிட்டால் குழந்தைக்கு கட்டி வராது என்று.

திருமண விருந்தொன்றில் உணவருந்தி கைகழுவச் சென்றவிடத்தில் ஒருவர் குவளையில் தண்ணீர் மொண்டு கொடுத்தார். கை கழுவும்போது இவர் சொன்னார், தண்ணீரில்தான் குவளை இருக்கும், இங்கு குவளையில் தண்ணீர் இருக்கிறதே என்று. குவளை என்பது மலரையும் குறிக்கும், நீர்மொள்ளும் குவளையையும் குறிக்கும்.

நான் தஞ்சாவூரான் என்பதால் தஞ்சாவூர் செய்தியொன்று. பெரிய கோயிலில் ராஜராஜன் சதயத் திருநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெருவுடையாருக்குச் சந்தனத்தால் அபிஷேகம் நடந்தது. அதனைப் பார்க்க வந்திருந்த வி.ஐ.பி.க்கள் அனைவரும் இரு வரிசையாக சந்நிதிக்கு எதிரில் அர்த்தமண்டபத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அபிஷேகமான சந்தனத்தை ஒரு பெரிய அண்டாவில் வைத்துத் தூக்கிக் கொண்டு இருவர் வந்தனர். வரும்போதே, கூட்டத்தை விலக்குவதற்காக 'வழி, வழி' என்று சத்தமிட்டபடி வந்தனர். அப்போது அங்கு உட்கார்ந்திருந்த இவர் அந்த அண்டாவின் விளிம்பில் இருந்த சந்தனத்தை வழித்து எடுத்தார். அருகில் இருந்தவர் ஏன் இப்படி எடுக்கிறீர்கள் என்று கேட்க, இவர் சொன்னார், அவர்கள்தான் வழி, வழி என்று சொன்னார்கள் நான் வழித்தேன் என்றார்.

இப்படி எத்தனையோ சொல்லலாம், இருந்தாலும் இது போதும். சிலேடை சிரிக்க வைப்பதுதான். இருந்தாலும் அதைக் கொண்டு யாரையும் புண்படுத்தக் கூடாது.
அன்புடன்
V. கோபாலன், தஞ்சாவூர்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
 அக்காலத் தலைவர்களும், தொண்டர்களும்!
By KMRK, Lalgudi

அரசியல், கொள்கை வழி நடந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன‌. இப்போது அரசியலில் சித்தாந்தங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு சாதீயம், பணபலம், ஆள் பலம்,என்று ஆகிவிட்டது.

இது நாள் வரை கம்யூனிஸ்டுகள் தான் தங்களுக்குள்ளாவது சிறிது கொள்கை பேசிக் கொள்வார்கள் என்று எண்ணி இருந்தேன்.

ஆனால் சுதந்திரப்போராட்ட காலத்தில் எப்படி ஒரு தொண்டன் கூட தலைவர்களுடன் கொள்கை பற்றிப் பேச முடிந்துள்ளது; முரண் பட முடிந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக சில ஆவணங்களைக் காண முடிந்தது. அதனை உங்க‌ளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

(இதை அனுஷ்கா சர்மா கூடப் படிக்கப் போகிறார். எப்படி உனக்குத் தெரியும் என்கிறீர்களா?அது ரகசியம்.):):

தீரர் சத்திய மூர்த்தியை எத்தனை பேர் கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியவில்லை.கர்மவீரர் காமராஜரின் அரசியல் வழிகாட்டிதான் மறைந்த சத்தியமூர்த்தி. தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் திருமயம் என்ற ஊர் வரும். அந்த ஊர்க்காரர்  சமயத்தில் தமிழ்நாட்டில் நல்ல அறிமுகமான தலைவர்.தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் அக்கால‌த்தில் முக்கியமானவர். பார்லிமெண்டேரியன். பல அரசியல் சபைகளைக் கணடவர்.

கோவை சி ஏ அய்யாமுத்து கதர் பணியில் மஹாத்மாவின் பாராட்டைப் பெற்றவர். அக்காலத்தில் காங்கிரசின் வேலைத் திட்டமான கதரை தமிழகத்தில் முன்னெடுத்துச் சென்றவர்.

தீரர் சத்தியமூர்த்தியுடன் ஒப்பிட்டால் ,அவர் தலைவர், அய்யாமுத்து தொண்டர் என்றே சொல்ல வேண்டும்.

இவர்களுக்குள் நடந்த கடிதப் பரிமாற்றம் இது.

இருவரும் தமிழ் அறிந்திருந்தும் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டுள்ளனர். அது அக்கால வழக்கம்.

மொழி பெயர்த்து (சிறிது குறைத்துக்) கொடுத்துள்ளேன்.

தீரர் சத்தியமூர்த்தி சோசலிசத்தைப் பற்றி ஆங்கிலேயர் முன்னிலையில் இழிவாக ஏதோ கூறியிருக்கிறார். அப்போது ஜவஹர்லால் நேரு சோசலிசம் பேசி வந்துள்ள காலம். இளைஞர்களுக்கு நேருவின் சோசலிசம் பிடித்து இருந்தது. இளைஞரான அய்யாமுத்துவுக்கும் சோசலிசக் கருத்து பிடித்து இருந்தது.

எனவே சோசலிசத்தினைத் தாழ்வாகப் பேசிய சத்தியமூர்த்தியைக் கண்டித்து நாளிதழில் கடிதம் எழுதுகிறார் அய்யமுத்து.

அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார் தலைவர். பதிலுக்கு பதில் கொடுக்கிறார் தொண்டர். மேலே படியுங்கள்.

           அய்யமுத்துவுக்கு சத்தியமூர்த்தி எழுதிய கடிதம்
          =========================================
                                                                                                                                                                         1 மே 1936 
                                                                  
அன்புள்ள அய்யமுத்து! இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் உங்கள் கடிதம் இன்று காலை வாசித்தேன்.இது போன்ற கடிதங்களைப்பற்றி எனக்கு எந்த முரணும் இல்லை. சோசலிசத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் புரிந்து கொண்டிருப்பதினை நான் அறிந்தே இருக்கிறேன்.சில சோசலிசக் கருத்துக்களுக்கு என்னுடைய 'சிம்பதி', அனுதாபம் கூட உண்டு. காங்கிரஸ் மனம் போனபடியெல்லாம் (லூசாக)ப் பேசுவதை நிறுத்தித் தன் கொள்கைகளை வரையரை செய்ய வேண்டிய கால க‌ட்டம் வந்துவிட்டது. காங்கிரஸ் சோசலிசத்தைக் கொள்கையாக ஏற்கவில்லை. பண்டித ஜவஹர்லால் அதனை பரப்பி வருகிறார்.அதனை எதிர்த்துச் சொல்ல எனக்கு உரிமை உண்டு. இருப்பினும் உங்கள் கடிதத்தில் சொல்லும் சோசலிஸ்டுகளுக்கு என் ஆட்சேபம் ஏதுமில்லை.                                                                                                          
உங்கள் உண்மையுள்ள,
எஸ் சத்தியமூர்த்தி       
--------------------------------------------------------------------------------------------------------------                                                                                                            
                  சத்தியமூர்த்திக்கு அய்யாமுத்து எழுதிய கடிதம்
                 ==========================================
                                                                                                                  
                                                                                திருப்பூர், 2 ஜூன் 1936
அன்புள்ள சத்தியமூர்த்தி,

நான் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் எழுதிய கடிதத்தை நீங்கள் கண்ணுற்று, அதனைப்பற்றி எனக்கு எழுதியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

சோசலிசத்தை ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையாகப் புரிந்து வைத்து இருப்பது சோசலிசத்தின் தவறல்ல.  நீங்கள் சோசலிசத்தினை முழுமையாக எதிர்க்கவில்லை; சில கருத்துக்களைத்தான் எதிர்க்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் சோசலிசத்திப் பற்றி எதனை ஆதரிக்கிறீர்கள் எதனை எதிர்க்கிறீர்கள் என்று பொதுமக்களுக்கு வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

நீங்கள் சொல்லும்படி காங்கிரஸ் ('லூஸ் டாக்')மனம் போனபடி ஒன்றும் பேசவில்லை. இந்தியாவிற்கு பூரண சுயராஜ்யம் வேண்டும் என்று காங்கிரஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கராச்சி காங்கிரஸ்ஸில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சோசலிசத்தின் பக்கமே சாய்ந்துள்ளது.   அந்தத் தீர்மானம், வயது வந்தோர் அனைவருக்கும் ஓட்டு உரிமை,சொத்து வரி,முக்கியமான தொழில்கள், மற்றும் கனிமவளத்தின் பேரில் அரசுக் கட்டுப்பாடு, முதுமை, வேலையின்மை,நோய் ஆகியவற்றால் மக்களுக்கு ஏற்படும் பொருளாதாரப்
பின்னடைவுக்கான காப்பு ஆகியவற்றைப் பேசுகிறது.

மேற்கத்திய சோசலிசத்தின் பல கூறுகளை நீங்கள் ஏற்கவில்லை என்கிறீர்கள்.

இந்திய சோசலிஸ்டுகள் மேற்கத்திய சோசலிசத்தினைக் காப்பியடிக்க விரும்பவில்லை. நாங்கள் ரஷ்ய சோசலிசத்தை மேற்கோள் காட்டினால் அதனை அப்படியே கைக் கொள்ள விரும்புகிறோம் என்று அர்த்தமல்ல.

ஜவ‌ர்லால் சோசலிசத்தை ஆதரித்தால் நீங்கள் எதிர்க்க உரிமையுண்டு என்கிறீர்கள். நல்லது. அப்படியே எதிருங்கள்.ஆனால் சோசலிசத்தை எந்த இடத்தில் ஆதரிக்கிறீர்கள் எதில் எதிர்க்கிறீர்கள் என்று விள‌க்கமாக நிறுவுங்கள்.

இப்படிப்பட்ட கருத்து மோதல்கள் நல்ல புரிதலுக்கு வழி வகுக்கும். ஆன‌மலையில் நீங்கள் பேசியுள்ளது முற்றிலும் நீங்கள் சோசலிசத்திற்கு எதிரானவர் என்று காட்டுகிறது.

நான் கூறும் சோசலிசத்தினை நீங்கள் ஒப்புக் கொள்வதாகத் தெரிகிறது.என‌வே இன்னும் கொஞ்ச‌ம் அதனை நான் விவரிக்க அனுமதியுங்கள். அதன் மேல் உங்கள் அபிப்ராயத்தைத் தெரிவியுங்கள்.

சோசலிசம் என்பது சட்டத்தை உடைப்பதோ, வன்முறையோ,நுண்ணிய மன உணர்வுகளினை அழிப்பதோ அல்ல.

வரலாற்றுப் பின்னணியில் நிர்மாணிக்கப்பட்ட சமூக,பொருளாதாரக் கொள்கையாகும்.நடைமுறை வாழ்க்கைகாக அமைக்கப்பட்ட ஓர் அறிவியல் சோசலிசம்.  மானுட முன்னேற்றத்தினை வேகம் கொள்ளச் செய்யவும், இந்த பூமியை நல்லதோர் வாழ்விடமாக்கவும் சோசலிசம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

பொதுவில் பயன் படும் அனைத்தையும் பொது உடமையாக்க சோசலிசம் நினைக்கிற‌து.   தனி நபர் தன் சுய‌ உழைப்பால் அடைந்ததை சோசலிசம் பொதுவில் வைக்கச் சொல்லவில்லை. ஆனால் நிலம்,ரயில்வே, பெரிய தொழில்கள், சுரங்கங்கள் ஆகியவை தனி உடமை ஆவதை சோசலிசம் அனுமதிக்காது.

ஒரு நெசாவாளி தானும் 6 பேர் உள்ள குடும்பமும் பட்டினியுடன் வேலையின்றி தெருவில் அலைகிறான். பண முதலை நடத்தும் ஒரு மில்லுக்குள் மற்றொரு தொழிலாளி தன் சக்திக்கு மீறிய வேலை செய்ய நிர்பந்திக்கப் படுகிறான்.வெளியில் வேலையின்றி இருப்பவனை முதலாளி உள்ளே அனுமதிக்க மாட்டான். பட்டினி கிடப்பவன் பட்டினி கிடந்தே சாக வேண்டியதுதானா?அவனைப் பார்த்து நீங்கள் மனம் இறங்கவில்லையா?

ஒரு நூறு கூலித் தொழிலாளிகள் நிலத்தில் பாடுபடுகிறார்கள்.அவர்களுக்கு நான்கு மாத வேலையே கிடைக்கிறது. மீதி எட்டு மாதங்கள் அவர்கள் வேலையின்றித் தவிக்கிறார்கள். அவர்களின் முதலாளியோ அந்த உற்பத்தியின் மீது அழுத்தமாக அமர்ந்து அனுபவிக்கிறான். போலீசும் சட்டமும் அவர்களை த‌ற்கொலை செய்யவும் அனுமதிக்காது. திருடவும் அநுமதிக்காது எப்படித்தான் அவர்கள் உயிர் வாழ்வது? இதனைப் பார்த்தும் அது அவர்களுடைய கர்ம பலன், விதி, கடவுளின் இச்சை என்பீர்களா?

கிறித்துவக் கோட்பாட்டின் படி ஆதாமும் ஏவாளும் உழைத்தே உண்ண அவர்களின் கடவுள் விதித்துவிட்டார்.ஆனால் அந்த வெள்ளையர்களில் எல்லோரும் அவர்கள் கடவுள் சொன்ன படி உழைத்துச் சாப்பிடுகிறார்களா?

அவர்களுடைய அரசாங்கம் சொத்துள்ளவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாங்கம்; அவர்கள் முன்னிலையில் நீங்கள் சோசலிசத்தைக் குறை கூறி எவ்வாறு பேசலாம்? அது அவர்களை ஆதரிப்பது ஆகாதா?....

தங்கள் உண்மையுள்ள,
சி ஏ அய்யமுத்து.

========================================
இந்தப் பதிவு சோசலிசக் கருத்துக்களை எடுத்துச்சொல்ல நான் எழுதவில்லை. எப்படி சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு தொண்டன் கூடக் கொள்கைப் பிடிப்புடன் தலைவர்களுடன் உரையாட முடிந்துள்ளது என்பதைக் காட்டவே எழுதினேன்.

அந்த சமயத்தில் சத்தியமூர்த்தி காங்கிரஸ்ஸில் இல்லை என்று நினைக்கிறேன். அவர் சுயராஜயக் கட்சி என்பதில் இருந்து அரசு பதவியில் இருந்திருக்கலாம். சரியான வரலாறு தெரிந்தவர்கள் ,தஞ்சாவூர் பெரியவர் போல, கூறலாமே!
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++                                                  

----------------------------------------------------------------------------
3
மழை
Short story by Srishobana

அடர்ந்த மேகங்களுக் கிடையில் மிதந்து வந்த ஈரக்காற்றில் லயித்துப்போனவளாய் நின்று ரசித்துக்கொண்டிருந்தாள் ஆறு வயது குட்டிப்பெண் லயா. ங்கும்,அங்கும் கலைந்தோடிக் கொண்டிருந்த மேகங்களைப்போன்றுஓடிக்கொண்டிருந்ததுஅவள் சிந்தனையும்.

"லயா குட்டி,என்ன பண்ற நீ இன்னும் கிளம்பலையா?" என்ற அப்பாவின் குரலில் நினைவலைகளில் இருந்து வந்தாள்.

"சரிப்பா" என்ற அவளது குரலில் தெரிந்த வாட்டத்தை லயாவின் அப்பா கவனிக்கத் தவறவில்லை.

மேகங்கள் இன்னும் ஒன்றை ஒன்று அருகில் நெருங்கிக் கொண்டே கறுத்துப்போயிருந்தது.

அம்மா லயாவைஅலங்கரித்து குட்டி தேவதையாக அழைத்து வந்தாள்.காற்றின் வேகம் இன்னும் அதிகரித்திருந்தது.

"அம்மா,மழை வந்திடுமாம்மா?"என்ற அவளது குரலில் சோகம் நிறைந்திருந்தது.

"ஆமாம்டா செல்லம், நாம சீக்கிரமா கிளம்பிட‌னும்"என்று அம்மா அவசரம் காட்டினாள்.

"அப்பா, வண்டி வந்துவிட்டது" என்று துள்ளியபடியே ஓடி வந்தான் லயாவின் அண்ணன் சரண்.

வீட்டின் வாசலில் புகையை கக்கியபடியே வந்து நின்ற ஆட்டோவைப் பார்த்த பின்னரே அனைவரும் நிம்மதியடைந்தனர், லயாவைத் தவிர.

வானம் இப்பொழுது முழுவதும் மூடி தூறல் விழ ஆரம்பித்தது.

சரணும் அம்மாவும் முதலில் ஏறி அமர்ந்தார்கள். லயாவை அப்பா மடியில் வைத்து அம்ர்ந்துகொண்டார்.

"அப்பாடா,ஒரு வழியாவண்டியிலே ஏறிட்டோம்.இன்னும் கொஞ்சதூரம்தான் தியேட்டருக்குப் போயிட‌லாம்" என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார் அப்பா.

"எங்கே வராமல் இன்னிக்கும் ஏமாத்திவிடுவீங்களோன்னு நினைச்சேன், நல்ல வேளை வந்துடீங்க‌" என்றாள் அம்மா.

"நானும் அப்ப‌டித்தான் நினைச்சேன், மேன‌ஜ‌ர்கிட்டே அப்ப‌டி இப்ப‌டிச் சொல்லி பெர்மிஷ‌ன் வாங்கிட்டு வ‌ந்தேன். எல்லாம் லயாவிற்க்காகதான்" என்று கூறிக்கொண்டே லயாவிடம் "இப்போ சந்தோஷந்தானே" எனக் கேட்ட அப்பாவிற்குக் கிடைத்த பதில், "ம்" மட்டுமே.

"லயா என்ன ஆச்சு உனக்கு? உனக்காகத் தானே நான் இன்னிக்கு முதல் தடவையா உங்க எல்லோரையும் தியேட்டருக்குக் கூட்டிகிட்டுப் போகிறேன்!"

"அப்...ப்..பா" என தயக்கத்துடன் அவள் ஆரம்பிக்கையில் டிராஃப்க் சிக்னலில் சிகப்பு லைட் எரிய தொடங்கியது. ஆட்டோவின் சத்தம் தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டது.

வண்டி நின்றவுடன்லயாவின் கண்கள் தெருவோரங்களில் எதையோ தேடி அலைந்து கொண்டேயிருந்தது. இப்பொழுது வானம் பொத்துக் கொண்டு மழை பெய்யத் தொடங்கியது.

"சொல்லுமா, என்ன ஆச்சு உனக்கு" என அப்பா சற்று வாடிய குரலில் கேட்க, பேச ஆரம்பித்தாள் லயா,

"ப்பா,இன்னிக்கு சாயங்காலம் ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு வரும்போது இங்கே தானப்பா நாலு நாய்க் குட்டிங்களைப் பார்த்தேன், அது”என ஆரம்பிக்கும் போதே அப்பாவுக்கு லயாவின் வாடிய முகத்தின் காரணம் புரிந்தது.

அதற்குள் அம்மா குறுக்கிட்டு "ஆரம்பிச்சிட்டியா, நாய் பூனைன்னு.சாயங்காலமேஉங்கிட்டே என்ன சொன்னேன்,ஆங்" என அத‌ட்டினாள்.

"கொஞ்ச‌ம் அமைதியாயிரு. அவ‌ளை ஏன் திட்டுறே. அவ‌ சொல்ற‌தை கேட்போமே - நீ சொல்லுமா"

"அப்பா, நாலு நாய்க்குட்டிங்க இங்கே தான் இருந்துச்சுப்பா...அதுங்க‌ எல்லாம் குட்டியா ரொம்ப‌ அழ‌கா இருந்துச்சுப்பா...அம்மா அதை எடுக்க‌க் கூட‌ விட‌லை"

"ல‌யாம்மா,உன்னை பார்க்காம‌ நானும்,அம்மாவும் இருக்க‌ முடியுமா, அது மாதிரி தானே அந்த‌ குட்டிங்க‌ளோட‌ அம்மாவுக்கும்"

"ம்...சரிப்பா...ஆனா மழை பெய்யுதே...குட்டிங்க மழையில"

“ஒண்ணும் ஆகாது, இப்போ நீ சும்மா இருக்கியா இல்லையா" அம்மா சற்று எரிச்சலுடன் கத்தினாள்.

"ஏன் குழந்தையை திட்டுற...அந்த குட்டிங்க மழையில நனையிதுன்னு வாடி போயிருக்கிற அவளோட முகத்தைப் பாரு! அந்த வாயில்லாத ஜீவன்களுக் காக எப்படி இரக்கப்படறா பாரு ஹேமா, பிள்ளைங்களைஇன்னிக்கு இந்த வயசில்ல‌ நாம நல்லதை செய்ய‌ ஊக்கப்படுத்தினா தானே நாளைக்கு நல்லவங்களாஅவங்க‌வளர முடியும்"

"இப்படியே எதையாது சொல்லி என் வாயை அடைங்க, நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு"

"அ..ப்பா...அதோ அங்க‌ குட்டிங்க மழையில நனைஞ்சுட்டு இருக்குப்பா, பாவம்ப்பா"என்றுகூறிக்கொண்டே அவள்அப்பாவின் மடியில் இருந்து இறங்கி ஓட நினைத்தவளாய்எழுந்தாள்.சுதாரித்துக் கொண்ட அவளது தந்தை ஆட்டோவை ஓரமாக நிறுத்த சொல்லி, பின் தான் எடுத்து வந்திருந்த‌ குடையை விரித்து ஒரு கையில் வைத்து கொண்டும் மறு கையில் அவரது செல்லப்பிள்ளை லயாவை பிடித்துக் கொண்டும் வண்டியிலிருந்து அவள் கைக்காட்டிய இடத்தை நோக்கை நடந்தார்.

குட்டிகளின் தாய் மழைக்கு பயந்து ஒரு கடை வாசலில் ஒதுங்கி நின்று கொண்டு குட்டிகளையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
அடுத்து என்ன செய்வது என்று சற்று யோசித்தபடியே இங்கும்,அங்கும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அப்பாவின் மூளையில் திடீரென எடிச‌னின் பல்ப் பிரகாசமாய் எரிந்தது.

"லயா,இந்தா நீ குடையைபிடிச்சுக்கோ அப்பா குட்டிங்களையெல்லாம்  தூக்குறேன், சரியா"

"ம்.சரிப்பா" குடையை லயா வாங்கிக் கொண்டாள்.

பின்பு, அப்பா முத‌லில் இரண்டு குட்டிகளை தூக்கி செல்ல,அப்பாவுக்கு குடை பிடித்துக்கொண்டே லயாவும் அப்பாவை பின்தொடர்ந்தாள் .அருகில்  இருந்த  நிழற் குடையை நோக்கி நடந்தார்.அங்கே பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தவர்கள் அவரை வியப்புடன்பார்த்தனர். நிழற்குடையில் ஒரு ஓரத்தில் இரண்டு குட்டிகளையும் வைத்தார். பின்னர் மற்ற இரண்டு குட்டிகளையும் அந்த குட்டிகளுடன் கொண்டு வந்து சேர்த்தார். குட்டிகள் எல்லாம் மழையில் நனைந்து போனதால்நடுங்கிக்கொண்டிருந்தன.

"அப்பா, மழையிலே குட்டிங்களுக்கு ஜுரம் வந்துடும், இந்த கர்சீஃபை வ‌ச்சு போர்த்தி விடுங்கப்பா" என்று தன் கைக்குட்டையை நீட்டினாள் லயா. அப்பா லயாவைப் புன்சிரிப்புடன் பார்த்தார்.

"ம்.சரி,கொடு"

கைக்குட்டையை வாங்கி தரையில் விரித்து அதன் மேல் குட்டிகளை படுக்க வைத்தார் லயாவின் அப்பா.

"ரொம்ப அழகா இருக்குதுப்பா" என்று குட்டிகளை தடவி கொடுத்தாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக நின்று பார்த்து கொண்டிருந்த குட்டிகளின் வயதான‌ தாய் குட்டிகளிடம் ஓடி வந்தது.குட்டிகளைஅணைத்துக் கொண்டு அவைகளுக்கு பாலூட்டத் தொடங்கியது.

"ஓகே,குட்டீஸ்...உங்க அம்மா வந்துட்டாங்க. உங்க புது வீட்ல நல்லா தூங்குங்க...பை...பாய்"

அவர்களை வியந்து பார்த்தவர்கள் எல்லாம் ஆச்சரியத்தில் வெட்கி மெளனமாகினர்.

"சென்னையிலேயும் எப்போதாவது அடைமழை எப்படி பெய்யுதுன்னு இப்போதான் புரியுதுப்பா" என ஒரு வயதான பெரியவர் கூறியபடியே சென்றார்.

நான்கு குட்டிகளையும் காப்பாற்றிய சந்தோஷத்தில் லயாவும், தன் மகளின் இரக்கக் குணத்தையும்,உதவும் பண்பையும் எண்ணி மகிழ்ந்தபடியே தன் மகளை தோளில் தூக்கிக் கொண்டு பெருமையுடன் ஆட்டோவை நோக்கி நடந்தார்கள்.

"இது நாள்வரை நான் தான் தவறு செய்துவிட்டேன்...என் குழந்தையின் நல்ல குணத்தை ஊக்குவிக்காமல் இருந்து விட்டேன்...என் பிள்ளை இன்னிக்கு எனக்கு நல்ல வாழ்க்கை பாடம் கற்று கொடுத்து இருக்கிறாள்"  அம்மாவின் மனம் சந்தோஷத்திலும் கலங்கியது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
 மழைக்காலம்

வருண பகவானே - உன்
ஆட்சி நடக்கிறது - இன்று
உனக்கோர் விண்ணப்பம்
உவந்து செவிமடுக்க!

படைத்தளபதி  புயலாரோடு - நீ
பயணித்து வருகையில் - உன்
வேகத்தில் சிக்கிச் சீரழிவது
வாழை மட்டுமல்ல - ஏழையும் தான்!

விளைச்சலை விட்டாயா?
விவசாயியை விட்டாயா?
மாணவனும் விலக்கில்லை
மீனவனும் விலக்கில்லை

விரல்பிடித்து விளையாடும்
சேய்மழையாய் வந்துசெல்!
வீட்டை இழந்து  ஓலமிடும்
பேய்மழையைப் பொழியாதே!  .

"கோடை’யில் விருந்தாய் வா
குளிர்காலத்தில் கணக்காய் வா.
எக்காலத்திலும் கன்னியாய் வா
எழில்கொஞ்சும் பெண்ணாய் வா!

உன்னை நேசிக்கின்றோம்
உளமாறச் சொல்கின்றோம்
நீரின்றி உலகில்லை
நீயின்றி வாழ்வில்லை
 
மழையாய் மட்டும்  வா!
மகிழ்ச்சியை மட்டும் தா!
பிழை  ஏதும்  செய்யாமல் - எங்களை
பிழைக்க விடு! கோடி வணக்கம்!

- தனூர்ராசிக்காரன்,  Brunei
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5
 ஒரு தலைவரின் கதை!
By Minorwall alias Kailasam Gnanaprakasam Nepolean, Japan

கண்ணில் ஏதோ உறுத்தலாகத் தோன்ற கறுப்புக்கண்ணாடியை  கழட்டி டேபிளில் இருந்த செய்தித்தாளின் மீது மடித்து வைத்தவர், நிலைக்
கண்ணாடிக்கு முன் சென்று என்ன விழுந்தது கண்ணில் என்று கொஞ்சம் உற்றுப் பார்க்கத் தொடங்கினார்..அப்படி ஒன்றும் பெரிதாக பிரச்சினை
இல்லை என்று உறுத்தல் அடங்கியதால் உறுதி செய்துகொண்டவராக இருக்கைக்குத் திரும்ப எத்தனித்த பெரியவருக்கு கண்ணாடியில் தன்
உருவம் ஏதோ உறுத்தலாகப் படவே ஆழ்ந்து பார்த்தவருக்கு முகத்தில் ஆங்காங்கே கவலை ரேகைகள் ஆழமாக ஊடுருவி ஓடிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது..வழக்கத்துக்கு மாறாக விழிகளில் பிரகாசம் குன்றிப்போய் நம்பிக்கை இழந்து நாடி தளர்ந்த முதியவனாக அவரை அந்தக் கோலத்தில் நீண்ட நேரம் பார்க்க அவருக்கே பிடிக்கவில்லை.

வீட்டில் எல்லோரையும் ' என்னைக் கொஞ்சம் தனிமையில் விடுங்கள்' என்று சொல்லி அனுப்பிவிட்டபடியால் இன்னபிற பெரிசுகள்,பேரக் குழந்தைகளின் பேச்சுச் சத்தமின்றி ஆழ்ந்த மவுனம் மட்டுமே தலைவருடன் அங்கே குடிகொண்டிருந்தது..கனத்த இதயத்தோடு இருக்கைக்குத் திரும்பியவருக்கு மேசையில் இருந்த செய்தித்தாள் செய்தி கண்ணுக்குப் பட்டது..சில மாதங்களுக்கு முந்திய செய்தித்தாள் அது..மாதங்கள்தான் முடிந்திருந்ததே  தவிர அதிலே வந்திருந்த செய்திதான் தலைவரின் இந்த சலனத்துக்குக் காரணம்..ஆரம்பம்..அதன்பின் ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு செய்தி என்று தலைவருக்கு தொடர்ந்து தலைவலிதான்..தலைவலி என்ற நினைப்பு வந்ததுமே கோடாலித் தைல பாட்டில் எங்கே  என்று தேடி எடுத்து கொஞ்சம் நெத்தியிலே தடவிவிட்டுக் கொண்டார்..ஈசி சேரில் சாய்ந்து கண்ண யர்ந்தார்..உறக்கம் கொள்ளவில்லை..கண்கள்  மட்டுமே மூடியபடி..மனசுக்குள் ஒவ்வொன்றாக காட்சிகளும் கேள்விகளும் வந்து அலை மோதின..

ஏன்? ஏன் இப்படி நடந்தது? நடக்கத்தான் முடியுமா? இந்த மக்கள் இப்படி செய்வார்கள் என்று நினைக்கவேயில்லையே. இப்படி ஒரு மாபெரும்
தோல்வியை எனக்குக் கொடுக்க இவர்களுக்கு எப்படி மனசு வந்தது?அப்படி இவர்களுக்கு நான் என்ன கொடுமை செய்துவிட்டேன்?சென்ற  முறை ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு சராசரி ஆளையும் கணக்கில் வைத்து அரும்பாடுபட்டு ஒவ்வொன்றாய் நல்லநல்ல திட்டங்களாய்ப்  பார்த்துப் பார்த்து செய்து இதுவரையில் நாம் செய்திராதது, வரலாற்றில் யாருமே செய்திருக்க முடியாதது என்றெல்லாம் செய்தேனே..என்னைப்  போய் இப்படிக் கவிழ்த்துவிட்டார்களே?என்று ஆற்றாமையும் கோபமும் எழுந்தது.

எதிர்க்கட்சிகள் என்னதான் புரட்டுப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டாலும் இந்த மக்களுக்கு, எனது திட்டங்களை அனுபவித்த மக்களுக்கு  எங்கே போச்சு புத்தி?

'நான் ஏமாற்றுக்காரனாம்..ஊழல் பேர்வழியாம்..குடும்பத்துக்கே எல்லாவற் றையும் தாரை வார்த்துவிட்டேனாம்..’என்னவெல்லாம் புழுதிவாரித்
தூற்றுகின்றன இந்தப்பத்திரிகைகள்..இதை எழுதுபவனுக்கெல்லாம் இதயம் என்பதே இருக்காதோ? இவர்களுக்கு எதிர்கட்சியின் ஆட்சிகள் நடந்த போது இருந்த அடக்குமுறை, கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, ஃபாசிசப் போக்கு என்றெல்லாம் என்னிடம் வந்து கெஞ்சியவர்களாயிற்றே? அப்படியே மறந்துவிட்டு, துடைத்துப் போட்டுவிட்டு எதிர்க்கட்சியின் ஆட்சியைப் புகழவும், நம்மை இகழ்ந்து எழுதவும்  செய்கிறார்களே..என்ன ஆத்மாக்கள் இவர்கள் என்று மக்கள் மேலும் பத்திரிகையாளர்கள் மேலும் பொத்தாம் பொதுவிலே வேகமும் கோபமும்  தொடர்ந்தவண்ணமே இருக்க  BP வேறு எகிறுகிறதோ என்ன சொல்லப் போகிறாரோ வரவிருக்கிற டாக்டர் என்று அந்தக்கவலை வேறு  தொற்றிக்கொள்ள மேசையின் மீதிருந்த தண்ணீரை எடுத்து ஒரு மடக்குக் குடித்தார்..

தொண்டையில் கொஞ்சம் இறுக்கமாக இறங்க திடீர்வலி சுரீரென்று..அடுத்த மிடக்கைக் குடிக்க எத்தனித்தவர் அதைக் கைவிட்டு தொண்டையை  கைகளால் நீவிவிட்டவண்ணம் அங்கேயும் கொஞ்சம் கோடாலித் தைலத்தை தடவிக்கொண்டு சற்று வசதியான போஸில் சாய்ந்து படுத்தார்..
யோகா மாஸ்டர் சொல்லிக் கொடுத்த மனஅமைதி..அதன்பின் தூக்கம் வரவழைக்கும் முயற்சியாக கண்களை இருக்க மூடி பின் இமைகளைத்
தளர்த்தி என்று நான்கைந்துமுறை செய்து கறுப்புத் திரையை மனதில் கொண்டுவந்து அப்படியே ஒண்ணு..ரெண்டு..மூணு..எண்ணிக்
கொண்டே..ஒரு இருபத்துநாலு வரை எண்ணியிருப்பார்..திடீரென்று காலைவாரிவிட்ட பேரூராட்சித் தலைவரு  கண்ணுக்குள் வந்தார்..ச்சே..என்ன

மனிதர்கள் இவர்கள்..இந்தாளைப் பத்தி நினைக்கவே கூடாது  என்றிருந்தேன். .நினைப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லையே..என்னவெல்லாம்
சொன்னாரு  இந்தாளு? இன்னிக்கு 'ஈ' ன்னு வாயெல்லாம் பல்லாக என்னை எதிர்த்து ஜெயித்திருக்கும் ஆளோட வெக்கமேயில்லாம போஸ்  வேறு..

கேட்டால் 'கர்ட்டெசி' யாம். கருமாந்திரம்..எல்லாம் பச்சோந்திக் கூட்டங்கள்..ஊரிலே என்னையும் எனக்கு எதிர்க்கட்சி நடத்துகிற ஆளையும்
தவிர வேறெல்லா கட்சிநடத்துகிற ஆட்களும் அங்குமிங்கும் அலை பாய்கிறார்களே தவிர நாங்களிருவரும் என்றாவது இதுபற்றி
யோசித்திருப்போமா? யோசிக்கத்தான் முடியுமா? எனக்கு நான்தான்..உனக்கு நீதான் என்று எதிரெதிர் துருவங்களாய் நின்று எந்தக் காலத்திலும்
கொஞ்சம் கூட சளைக்காது இந்த போரை மாற்றி மாற்றி நடத்தி வருகிறோமே?இதனால் என்ன பலன்? எங்களுக்கு பலன் இல்லேன்னு
சொல்லலை.. ரெண்டு பேருக்குமே இழப்புகள்,அவமானங்கள் மன உளைச்சல்கள் கொஞ்சமா? நஞ்சமா? இது புரியாம வெறும் பத்திரிக்கை
செய்தியைப் படிச்சிட்டு இந்த மக்களும் இந்த இடையிலே முளைத்துவிட்ட, நான் வளர்த்துவிட்ட ஆட்களுமல்லவா கிடந்து துள்ளுகிறார்கள்..
கொஞ்சம்கூட நாக்கில் நரம்பில்லாமல் என்னவெல்லாம் பேசுகிறார்கள்..? பக்கத்து ஊரு பிரச்சினையில் நான் தலையிட்டு சரிசெஞ்சு  வெக்கலையாம்..  ஏன்யா?..நடக்குற காரியமாய்யா அது? ஒரு தடவையா?ரெண்டு தடவையா.. எத்தினி தடவை இந்தப் பிரச்சினையிலே என் தலை  உருண்டது..?இங்க உள்ள பிரச்சினையே தலைக்கும்மேலே..இதுல பக்கத்து ஊரை நான் எப்புடி? எத்தினி காலம்தான் இந்தப் பிரச்சினையிலே  நான் அல்லாடுறது..?அந்த பக்கத்து ஊரு நம்ம இனத்துக்காகப் போராடின தலைவரு என்னதான் நம்மாளுங்கதான் என்றாலுமே சூதானமாப்  பார்த்துப் பண்ணாமே பொதுவுல வெச்சு நாம எல்லோருமே பழிகிடையா நம்பிக்  கிடக்குற முன்னாள் பேரூராட்சித் தலைவரை போட்டுத்  தள்ளிட்டாங்கன்னு எல்லோருக்குமே பகிரங்கமாயிப் போச்சேப்பா?..

மறைஞ்ச இந்த ஆளோட மனைவி கஸ்டடியிலேதானே பேரூராட்சியே நடக்குது..அட..இப்போ இருக்குற பேரூராட்சித் தலைவரு இந்தம்மா  சொல் பேச்சு கேட்டு ஆடுற வெறும் தஞ்சாவூரு தலயாட்டிப் பொம்மைதானே?   பக்கத்தூரு இப்போதைய வேற இனத்து தலைவரு  நம்மாளுங்களையே   பாதிப்பாதி இங்குமங்குமாப் பிரிச்சு ஒண்ணுக்கும் இல்லாமப் பண்ணிப் புட்டானே?..அவுரு உசுரோட இருந்து இந்தாளுக்கெதிராப் போராடுனப்போ நானும் எவ்வளவோ சொல்லியும் கேக்காம இந்தம்மா அடம் புடிச்சு அவரையும் அந்த ஊர்க்காரங்களையுமே  கங்கணம் கட்டிக்கிட்டு ஒண்ணுக்கும் ஆகாமப் பண்ணிடிச்சு..இந்த வேகத்தை என்கிட்டே காட்டினா நா என்னதான் பண்ணமுடியும்?  இந்தக் கோவத்தை மனசுலே வெச்சுகிட்டு இப்போ நம்மூருலே எதிர்க்கட்சி ஆளை ஆட்சியிலே உக்கார்த்தி வெச்சீங்கல்லே... அவுகதான் என்ன  பண்ணமுடியும்? பார்க்கத்தானே போறோம்..இந்தப் பேரூராட்சியிலேருந்து நாம தனியாப் பிரியாதவரைக்கும் இந்த பிரச்சினைக்கு ஒரு  விடிவுகாலமும் வரப்போறதில்லே..அது முடியவும் முடியாது..இதப் புரிஞ்சுக்காமே என்மேலே வெறுப்பைக் காமிச்சு தோற்கடிச்சு உங்க தலயிலே
நீங்களே மண்ண வாரிப் போட்டுக்கிட்டீங்க..வேறென்னத்தச்  சொல்றது. .குடும்பத்துக்கு தாரை வார்த்துக் குடுத்துட்டேனாம்..இதை யார்
யாரெல்லாம்  சொல்றாங்கன்னு கொஞ்சம் நிதானிச்சுப் பார்த்தா தெரியலே. .என்ன நடக்குது இங்கேன்னு?  ஒவ்வொரு குடும்பத்துலேயும் தேவை, விழா  எதாவுது செஞ்சுருப்பீங்க..மொய் எழுதுற பழக்கமும் எல்லோருக்குமே நம்மாளுங்களுக்கு  இருக்கும்..அங்க வரவு பண்ற இடத்துலே யாரை  வெப்பீங்க..ரோட்லே போற ஆளையா கூப்பிட்டு  வெப்பீங்க?உங்களுக்கு ஒரு நியாயம்  எனக்கு ஒரு நியாயமா?பேங்க் அக்கவுன்ட்டுலே பணம் போடச் சொல்லிப் பணத்தை குடுத்து வுட்டா தன் பேருலே போட்டுகிட்ட ஆளுங்க
எல்லோரடயும்தானே அரசியல் பண்ணவேண்டியிருக்கு?

அப்புறம்..இன்னொன்னு..ஆ..ன்னா..ஊ..ன்னா..சொக்கன், ராமராசர். வாழ்ந்தாரு, எப்புடி இருந்தாரு, தனக்குன்னு ஏதும் சொத்து சேர்த்து  வெச்சுட்டுப் போனாரா? ன்னு ஒரு கேள்வி.. அவுங்களுடைய குடும்பமெல்லாம் இப்போ எங்கே எப்பிடித் தத்தளிக்குதுன்னு தேடித் புடிச்சுப்  பார்த்தாத்தான் தெரியும்.. பாவம்.. அரசியல்லே ஈடுபட்ட ஒரே காரணத்துக்காக என் குடும்பத்தையும் இப்புடித் தவிக்கவுடணுமா? குடும்பம்  இருக்குறா ஆளுங்க எல்லோரும் கொஞ்சம் மானசீகமா யோசிக்கவேணாம்?  இதையெல்லாம் கேக்கக் கேக்க எனக்கு கொஞ்சம் கொஞ்சமாப்  பொறுமை எல்லை கடக்கிறது..பொது மனுஷன்.. ரொம்ப காலமா  ஊர்த் தலைவனா இருந்துட்டோம்..அப்பிடிங்குற காரணத்தாலேதான்  அடங்கிப்போறேன்..சாதாரண ஆளா..இருந்தா..என்ன ஆகும்ன்னு நினைச்சுப் பாருங்கையா..உங்க ஊரு ரவுடி ஆளுங்களோட கம்பேர்
பண்ணிப் பாருங்கையா..

உங்க குடும்பத்தை எல்லாம் பசி,பட்டினி, பொழுதுபோக்கு,மெடிகல் வசதின்னு செஞ்சு குடுக்காமலா என் குடும்பத்துக்கு செஞ்சுப்புட்டேன்? அட..என்னைய்யா  இப்புடி ஒரு பொறாமை புத்தி? கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியவருக்கு கோபம் உச்சிமண்டைக்குப் போகிறது.. இன்னொரு மிடறு தண்ணீரை எடுத்துக் குடிக்கிறார்..இன்னும் தாகம்..வேகம் எதுவுமே அடங்கவில்லை..

ஊழல் பண்ணிட்டேனாம்..என்னா? உங்க வூட்டு பீரோவிலே நீங்க கஷ்டப்பட்டு சேர்த்து வெச்சுருந்த பணம் நகையையா களவாடிட்டேன்? ஏன்யா..கொஞ்சம் கூட நாக்குலே நரம்பில்லாமேப் பேசுறீங்க..எழுதுறீங்க.. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க..கட்சி நடத்தப் பணம்  வேணும்..பிரச்சாரம்..பண்ண  தெருக்கூத்து, நாடகம் எல்லாம் போடணும் அதுக்கெல்லாம்  பணம் வேணாமா?.. பணம்..பணம்..பணம்..எதை தொட்டாலும் பணம்.. பணம் வேணும்யா..பணம்.. பணம் இல்லேன்னா இன்னிக்குக் காலத்துலே பொணம்தான்..சாதாரண ஆளுக்குக் கூடப்  புரியுற இந்த விஷயம் உங்களுக்கு ஏன் புரியாமப் போச்சு?

பணம் வெச்சுருக்குற ஆளுங்க கடனாக் குடுத்தாங்க? திருப்பிக் கொடுத்து ட்டேன்..இதைக் காரணமா சொல்லி என் குடும்பத்துமேலே பழி போட்டா என்ன நியாயம்..? இன்னிக்கு என் கூடவும், எதிர்த்தும் அரசியல் பண்ற எல்லோருமே ஏதோ வகையிலே வேறு வழியில்லாமே இந்தத் தப்பை செஞ்சுக்கிட்டேதானே இருக்கோம்..உங்களையும் சேர்த்துதான் சொல்றேன்..எனக்கென்னமோ நான் இதுவரைக்கும் எந்த தப்பும் என்  மனசாட்சியறிய செய்யலேன்னுதான் தோணுது..அதுதான் உண்மை..எனக்குள்ள சூழ்நிலையிலே இருந்து பார்த்தா ஒருநாள் கூடத் தாங்க  மாட்டீங்க..நீங்களெல்லாம்..

அரசியல்னா..அவ்வளோ கேவலமாப் போச்சா?ஆளாளுக்கு வாயிலே அவல் மெல்லுற கதையா இஷ்ட்டத்துக்குப் பேசிக்கிட்டு.. எழுதிக்கிட்டு..  என்னை நம்பி வந்தவங்களை என்னாலே முடிஞ்ச அளவுக்கு கைவிடாம காப்பாத்த முயற்சி பண்றேன்..இது என் கடைசி மூச்சு உள்ளவரைக்கும் மாறாது..இதைச் சொன்னா, எழுதினாக் கூட அதுக்கும் ' நல்லா நாடகம், கதை வசனம் எழுதுவான்யா இந்தாளு'ன்னு கமென்ட் அடிப்பீங்க.. எல்லாம் என் ஜாதகம்..வேறென்னத்தைச் சொல்ல..

திட்டம் போட்டு திட்டம் போட்டு போட்ட திட்டமெல்லாம் தவிடுபொடியானா நான் வேறென்னத்த சொல்ல? தாங்கவொண்ணாத சோகமும்  துக்கமும் கோபமும் ஆற்றாமையும் கலந்த ஒரு மோசமான உணர்வு மேலீட்டால் விடை தெரியாத யாரிடம் கேட்பது பதில் யார் சொல்வது  என்று புரியாத கேள்விகளின்,  எண்ணங்களின் அலை மோதலால் தலைவலி தாங்கமுடியாமல் டாக்டருக்குப் போன் போடலாமா என்றால் அவர்
வருவதாகச் சொல்லியிருந்த நேரம் சில நிமிடங்களுக்குக் குறைவாகவே இருந்ததால் எதுவும் செய்யமுடியாமல் கைகள் கட்டப்பட்டதைப்
போன்றுணர்ந்து அங்கலாய்த்தபடியே சோர்ந்துபோய் ஈசிசேரில்..களைத்து துவண்டு கிடக்கிறார் இந்தத் தலைவர்..

இவர் நமக்கு அவசியமா என்று நீங்களும் இவருக்கு நீங்களெல்லாம் இனி அவசியமா என்று அவரும் நினைத்திருக்க, எல்லோரையும் இந்தச்
சுழலில் தள்ளிய காலம்தான் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டும்..

ஆக்கம்: மைனர்வாள் என்கிற கைலாசம் ஞானபிரகாசம் நெப்போலியன், ஜப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
சிறுகதை by தேமொழி

காரை விட்டிறங்கிய சிவகுமார் மெதுவாக கழுத்து டையை தளர்த்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். மதிய உணவிற்காகவும் , குட்டித் தூக்கத் திற்காகவும் அவர் வீட்டிற்கு வருவது வழக்கம்.  இந்த ஊருக்கு வந்து பதினைந்து ஆண்டுகளில் மருத்துவமனையும், மருத்துவ தொழிலும் துவங்கி ஊரே அதிசயிக்கும் வண்ணம் நல்ல கைராசிக்காரர் எனப் பெயரும் புகழும் பெற்றுவிட்டார். அவர் மருத்துவமனையும்  நகரப் பேருந்து வழித்தடத்தில் ஒரு முக்கிய நிறுத்தும் என ஆகிவிட்டது.

களைப்புடன் உள்ளே வந்தவர் முன்னறையில் கூடை நாற்காலியில் அமர்ந்து ஆனந்த விகடன் படித்துக்கொண்டிருந்த சின்ன மைத்துனரின் மனைவி தமிழ்ச்செல்வியை  அப்பொழுதான் பார்த்தார். சின்ன மைத்துனரின் பெண் இவர் வீட்டில்தான் தங்கி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள்.  மைத்துனர் இருப்பது சிறிய ஊர், அத்துடன் கல்லூரி வசதியும் இல்லாததால் இந்த ஏற்பாடு. ஊர் பக்கத்தில்தான் என்பதால் வார இறுதியில் தன் பெண்ணைப் பார்க்க மைத்துனரோ அல்லது அவரது மனைவியோ தவறாது வருவார்கள்.

"என்னம்மா எப்ப வந்தீங்க? சின்னவர் நல்லா இருக்காரா?"

"பதினோரு மணி பஸ்ல வந்தேன், அவரும் சவுக்கியம்தாண்ணே"

"சரி சாப்பிட்டீங்களா?"

"நீங்க போய் சாப்பிட்டு தூங்குங்கண்ணே, நானும் ஜனனியும் அப்புறம் சாப்பிடறோம்"

சரி என்று சொல்லி சிவகுமார் உள்ளே சென்றதும் விகடனில் விரல் அடையாளம் வைத்திருந்த இடத்தில் இருந்து  சிவசங்கரியின் "ஒரு மனிதனின் கதை"யை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வி.

உடை மாற்றிக்கொண்டு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த அவர் டிரான்சிஸ்டர் ரேடியோவை திருப்பினார் "வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான் மணக்குது ரோஜாச் செடி" என்ற அவருக்கு பிடித்த புதுப்பாடல் ஒலித்தது.  மனைவி ஜனனி கையில் சாம்பார் பாத்திரத்துடன் வந்த பொழுது அவர் முகம் சரியில்லாததைக் கண்டு பாடல் ஒலியைக் குறைத்தார்.

"சின்னண்ணி  என்ன சொல்றாங்க?" என்று பேச்சுக் கொடுத்தார்.

இதற்காகவே காத்திருந்தது போல் பொரிந்து தள்ளினார் ஜனனி.

சமீபத்தில் ஜனனியின் பெரியண்ணன்; அவர் குடும்பமும் சின்ன அண்ணன் இருக்கும் அதே ஊர்தான், தன் மாமனாருக்கு உடல் நலம் சரியில்லாததால் ஜனனியின் கணவரிடம் அழைத்து வந்து அவர் மருத்தவ மனையிலேயே சேர்த்து சிகிச்சை பெற வைத்தார்.  மீண்டும் அதே காரணம், இந்த ஊரில் மருத்துவ வசதி அதிகம் அத்துடன் மைத்துனர் மருத்துவமனையில் சிறப்பு கவனிப்பும் கிடைக்கும் என்பதால்.  நீரழிவு, இரத்த கொதிப்பு என ஏகப்பட்ட உடல் உபாதைகளுடன் இருந்த அந்த மாமனாரும் மிகவும் வயோதிகர்.  இரண்டு வாரம் தீவிர சிகிச்சை.  ஊரில் இருந்து உறவினர் குடும்பம் ஒவ்வொன்றாக வந்து நலம் விசாரிக்க என்று தங்கிச் சென்றவண்ணம் இருந்ததால் ஜனனி வீட்டில் எப்பொழுதும் ஒரே கூட்டம் அலை மோதியது, சளைக்காத தொடர்ந்த வேலை ஜனனிக்கு.  தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததால் நோயாளியை யாராலும் பார்க்க முடியாத வருத்தம் அனைவருக்கும்.   பெரிய அண்ணனின் மாமியார் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டார்.  அதுவும் சில வேலைகளில் மட்டும்.  நோயாளியின் உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.

உறவினார்கள் விசாரணைகளுக்கு, அதெல்லாம் சரியாகி விடுவார் என்று சிவகுமார் ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.  தேவையில்லாமல் யாரையும் கவலையடையச் செய்வது அவருக்குப் பழக்கமில்லை.  இரண்டு வாரம் தாண்டியபின் ஒரு நாள் அந்த வயோதிகர் கோமாவில் விழுந்ததுடன் நிலைமை மோசமானது.  உடனே சிவகுமார் பெரிய மைத்துனரை அழைத்து நிலைமையை விளக்கினார்.  பெரியவருக்கு இனிமேல் எந்த சிகிச்சையும் பலனளிக்காது.  உயிருடன் இருக்கும்பொழுதே ஊருக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என்று தன் மருத்துவமனை ஊர்தியில் செவிலியர் உட்பட சகல வசதிகளுடன் ஊருக்கும் அனுப்பி வைத்தார்.   அந்த மாமனாருக்கு சொந்த மகன்கள் ஊரிலேயே இருந்தாலும் பெரிய அண்ணி தன் தந்தையின் மீது உள்ள அதீத அன்பால் அவரைத் தன்னுடனையே வைத்து பராமரித்து வந்தவர் மீண்டும் பராமரிப்பைத் தொடர்ந்தார்.  ஆனால் அவரது வயோதிக தந்தை ஓரிரு நாட்களில் மரணமடைந்தார். ஜனனியும் குடும்பத்துடன் இறுதி மரியாதை செலுத்தி விட்டு வந்தார்.  இது நடந்து ஒரு மாதம் இருக்கும்.

அந்த வயோதிகர் மறைந்த பின் குடும்பத்தில் ஒரு களேபரமே நடந்திருக்கிறது.  என்ன எல்லாம் சொத்து தகராறுதான், வேறென்ன?  பெரிய அண்ணியின் தந்தை உயில் எதுவும் எழுதவில்லை.  சொத்தில் ஆண் பெண் அணைத்து வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் இல்லாத காலம் அது.  பெரிய அண்ணி மற்ற மகன்களை விட அன்பும் பாசமும் வைத்து தன் தந்தையை பராமரிதிருந்தாலும், உயில் இல்லாததால் அவர் சகோதரர்கள் ஆண் வாரிசுகளுக்குள் சொத்தை பிரித்துக் கொண்டு சகோதரிக்கு பெரிய நாமம் போட்டு விட்டார்கள்.   ஆத்திரம் தாளாத பெரிய அண்ணிக்கு சிவகுமார் தன் தந்தையின் நிலையை முன்பே எச்சரித்திருந்தால் அப்பாவிடம் உயில் எழுதி வாங்கியிருக்கலாம் என ஆதங்கம்.   கோமாவில் இருந்தவரிடம் என்ன எழுதி வாங்க முடியும்.  வெறுப்பின் உச்சத்தில் இருந்தவர் ஊரில் துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சிவகுமார்தான் தன் தந்தையை கொன்றுவிட்டார்(?) என்று பழி போட ஆரம்பித்தார்.  தன் நாத்தனாரின் கணவரின் மேல் வீண் பழி போடுகிறோம் என்ற எண்ணம் அவருக்குக் கொஞ்சமும் இல்லை. ஜனனியின் பெரிய அண்ணனும் தன் மனைவியை கண்டித்தபாடில்லை.

இதனால் ஜனனியின் பிறந்த ஊரில் அவரையும், அவர் கணவரைப் பற்றியும், அவரது தொழில் திறமையைப் பற்றியும்  ஊரே ஒரேப் பேச்சாக வதந்தி உலாவ ஆரம்பித்திருந்தது.  சின்னஅண்ணி தமிழ்ச்செல்வியைப் பார்ப்பவர்கள் எல்லோரும் சிவகுமாரின் தொழில் திறமையை, கைராசியைப் பற்றி கேள்வி கேட்டுத் துளைக்க அவர் நிலைமை தர்ம சங்கடமானது. ஊரில் இருந்து வந்த தமிழ்ச்செல்வி முதல் வேலையாக இதை ஜனனியிடம் சொல்லி பெரியவர் குடும்பத்தின் பழிபோடும் படலத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கச் சொன்னார்.  தன் கணவரின் புகழையும், திறமையையும் கண்டு பெருமையாக இருந்த ஜனனிக்கு இதைக் கேட்க சகிக்கவில்லை.  பெரிய அண்ணனிடமும், பெரிய அண்ணியின்மேலும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.  யாரோ சொன்னால் பரவாயில்லை தன் சொந்த அண்ணன் குடும்பமேவா இதைச் செய்கிறது என்ற வேதனை ஜனனிக்கு.  கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டே ஆத்திரமும் அழுகையும் தொண்டையை அடைக்க, வார்த்தை தடுமாற சொல்லி முடித்தார்.  ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலும் மடை திறந்தது போல் அழுதுவிடும் நிலையில் இருந்த ஜனனியைப் பார்த்து, சரி, சரி விடு,  சொத்து கிடைக்காம போன  ஏமாற்றம் அவங்களுக்கு,  என்று சமாதானமாக சொல்லிவிட்டு ட்ரான்சிஸ்டருடன் படுக்கை அறைக்குப் போய்விட்டார் சிவகுமார்.  எதற்கும் அசராத குணம் அவருடையது.

அதன்பின் சாப்பிட அமர்ந்த ஜனனியும் தமிழ்செல்வியும் உரையாடலைத் தொடர்ந்தார்கள்.  மேலும் விபரம் கேட்க கேட்க வெறுப்பின் உச்சியில் இருந்த ஜனனி, தமிழ்செல்வியிடம், சின்னண்ணி, இப்படியெல்லாம் பேசறாங்களே, இவங்க கும்புடுற திருப்பதிசாமி இவங்கள என்னன்னு கேட்பாரு பாருங்க, என்று நொந்து போய்ச் சொன்னார்.  ஜனனியின் குடும்பம் தெய்வ நம்பிக்கை உள்ள குடும்பம்.  ஆனால் அதற்காக எப்பொழுதும் கடவுளைப் பற்றியே பேசிக் கொண்டும்,  நினைத்துக் கொண்டிருக்கும் தீவிர பக்தி வகையைச் சேர்ந்தவர்கள் இல்லை.  அவர்கள் வீட்டில் சிலருக்கு சாமி பெயர் இருக்கும், சிலருக்கு மத சார்பற்ற பெயரும் இருக்கும். கடவுள் பெயர்களில் சைவப் பெயர்களும் இருக்கும், வைணவப் பெயர்களும் இருக்கும்.  முக்கியமான நாட்களில் முடிந்தால் கோவிலுக்குப்  போவார்கள்.  சிவனோ, விஷ்ணுவோ, ஏசுவோ அதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. போக முடியாவிட்டால் அதற்காக வருத்தப்பட மாட்டார்கள். விரதம், நோன்பு  இது போன்ற எதையும் கடை பிடிப்பதில்லை.  அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவார்கள்.  கடவுள், மதம் இவற்றைப் பொறுத்தவரை மிதவாதிகள் எனக் கூறலாம்.

ஆனால் பெரிய அண்ணி ஊர்மிளாவின் குடும்பம் அதற்கு நேர் மாறானது.  பரம்பரை பரம்பரையாக அதி தீவிர வைணவர்கள்.  மருந்துக்கும் குடும்பத்தில் ஒருவருக்கும் வைணவப் பெயர் தவிர வேறு பெயர் இருக்காது.  திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிர பக்தர்கள்.  பெரியண்ணன்  சிவநேசன் பெயரையும் சிவராமனாக்கி விட்டார்கள்.   ஒவ்வொரு சனிக்கிழமையும், விரதம் நோன்பு என அமர்களப் படுத்துவார்கள். புரட்டாசி ஆரம்பித்தால் வெங்கட்ரமணா கோவிந்தா என்ற கோஷம்தான்.  ஆண்டுக்கு ஒரு முறையாவது திருப்பதி செல்லாமல் இருக்கமாட்டார்கள்.

இது நடந்து ஏறத்தாழ ஓராண்டு ஓடியிருக்கும்.  கணவரையிழந்த ஊர்மிளாவின் தாயாரும் அந்த சோகத்தை தாங்க முடியாமல் உடல் நலிவுற்றார்.  வழக்கம் போல் பெற்றோரின் மேல் பாசமுள்ள பெரிய அண்ணி ஊர்மிளா தன் தாயை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.  ஆனால் உறவு நலிவடைந்ததால் சிவகுமாரிடம் மருத்துவத்திற்கு அழைத்துவர விரும்பவில்லை.  வீட்டிலேயே மருத்துவ வசதி செய்துகொடுத்தார்கள். ஆனாலும் அந்த வயதான மூதாட்டியும் போகும் நேரம் வந்ததால் தன் கணவரைத்தேடி வைகுண்டப் பதவியடைந்தார்.  சிவகுமார் என்ன சொல்லியும் ஜனனி தன் பெரிய அண்ணனை துக்கம் விசாரிக்க செல்லவும் இல்லை, மரியாதை நிமித்தமாக செல்ல நினைத்த சிவகுமாரையும் போக விடவுமில்லை.  கோபமாக அவங்க உறவே நமக்கு வேண்டாம் என்று சொல்லித் தடுத்து விட்டார்.   சொத்திற்கு மதிப்பு கொடுத்து உறவுகளை இழித்துப் பேசிய பெரிய அண்ணன் குடும்பத்தை உறவினர் என்று ஏற்றுக் கொள்ள அவர் விரும்பவில்லை.

வழக்கம் போல் தன் பெண்ணைப் பார்க்க வந்த ஜனனியின் சின்ன அண்ணன் ஆனந்தனும், சின்ன அண்ணி தமிழ்செல்வியும் ஒருவித பரபரப்புடன் ஜனனியிடம் வந்தார்கள்.  காபியை கலந்து கொடுத்தவண்ணம் அவர்களை நலம் விசாரித்தார் ஜனனி.

"ஜனனி, இதக் கேட்டியா? உனக்கு ட்ரங்கால் போடாம நேராவே வந்து சொல்லனும்னு நினைச்சேன்"

"என்ன அண்ணி, என்ன ஆச்சு? உங்க பொண்ணுக்கு வரன் ஏதும் வந்திருக்கா?"

"அட, அதில்லைங்கறேன்,  நீ சொன்ன மாதிரியே திருப்பதிசாமி பாடம் கத்து கொடுத்திட்டாரு பெரியவர் வீட்டுக்கு."

பிறகு அண்ணனும் அண்ணியும் ஜனனியிடம் சொன்ன தகவல் இது.  பெரிய அண்ணி ஊர்மிளாவின் தாய் இறக்கும் முன் அவரிடம் கையிருப்பாக கணிசமான தொகை இருந்தது.  தன் கணவரின் நிதி நிர்வாகத்தில் குறிப்பிடக்கூடிய வகையில் பங்கு வகித்த அந்த மூதாட்டி தன் கைவசம் பல ஆயிரங்களுக்கு ஒரு நல்ல  தொகையைப்  பல ஆண்டுகளாகவே சேமித்து வைத்திருந்தார்.  பேரப்பிள்ளைகளுக்கு அந்த பணத்தில் பரிசுகளாகவும் வாங்கித் தரும் பணக்கார அன்பு பாட்டி அவர்.  மேலும் அவரும் பெரிய இடத்தில பிறந்து வளர்ந்ததால் கொத்து, கொத்தாக தங்க, வைர நகைகளும்; அத்துடன் அவர் கணவர் வருமான வரி காரணமாகவும், அவர் பெயரில் துவக்கினால் ராசி என்று நம்பிக்கையில் ஆரம்பித்த சில வியாபார நிறுவனங்களையும் சட்டபூர்வமாக அவர் வசத்தில் வைத்திருந்தார்.  இவை அனைத்தும் உயில் மூலம் பெரிய அண்ணி ஊர்மிளாவின் கைவசம் இப்பொழுது.  தாய்  இறந்த பின்பே  இதைத் தெரிந்து கொண்ட ஊர்மிளாவின் சகோதரர்கள் சொத்து கைவிட்டு போன கொதிப்பில் தன் சகோதரி மேல் பழி போட ஆரம்பித்துள்ளார்கள், அதுவும் எப்படி?

சொத்துக்காக அலைந்த ஊர்மிளா எப்படியும் தன் தாய் வசம் இருக்கும் சொத்தினைக் கைப்பற்ற எண்ணி, அவரை தன் வீட்டிலேயே பராமரிக்கிறேன் என இருத்திக் கொண்டு, உடல் நலமில்லாதவரிடம் உயில் எழுத நிர்பந்தித்து, உயில் கையில் கிடைத்தவுடன் மற்றவர்கள் உயில் எழுதிவிட்ட விபரம் அறியக் கூடாதென்று விஷம் வைத்து கொன்று விட்டார்.  மாறாக, அந்த தாயே தன் மகளுக்கு குடும்ப சொத்தில் ஒன்றும் இல்லாது போனதை எண்ணி வருந்தி உயில் எழுதி வைத்திருக்ககூடும்.  எது எப்படியோ, ஆனால், இப்பொழுது ஊர் முழுவதும் ஊர்மிளாவின் சகோதர்கள் பரப்பிவிடுவது சொத்துக்கு ஆசைப்பட்டு எங்கள் சகோதரியே எங்கள் அம்மாவிற்கு விஷம் வைத்து விட்டார் என்பதே.  ஊர் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தியாகப் போனது இது.

பின்குறிப்பு: இது கதையல்ல, உண்மைச் சம்பவம்.  எங்கள் குடும்பத்திற்கு எண்பதுகளில் நேர்ந்த அனுபவம்.  அந்த அனுபவம் பெற்றவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

தீதும், நன்றும், பிறர் தர வாரா - கணியன் பூங்குன்றனார்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - ஒளவையார் பாடிய கொன்றை வேந்தன்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் - பழமொழி

நன்றி, வணக்கத்துடன்
தேமொழி

++++++++++++++++++++++++++=
7

Jokes from.S.Sabari Narayanan, Chennai
1
Wife to Doctor: My Husband has the Habit of Talking in his Sleep
What Should I give to cure him?
Doctor: Give him an Opportunity to Speak when He is awake
++++++++++++++++++++++++++
2
common between clouds and wife !!!!!!!

When both are not around,
+
+
we call it a bright day.
++++++++++++++++++++++++++++++
8
Video clipping sent by Mrs.Themozhi
Nostradamus's Prediction of 2011 Japan Earthquake, Tsunami and Nuclear Disaster
http://youtu.be/8vpQ7pYvWjc



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படித்தவர்கள், தங்களுடைய விமர்சனங்களை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். எழுதுபவர்களுக்கு அதுதான் ஊக்க மருந்து!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

4.11.11

Astrology வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

----------------------------------------------------------------------------------------
Astrology வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

ஆன்மிகம் cum ஜோதிடக் கட்டுரை!
---------------------------------------------------------
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒருவித துணிச்சல் உண்டு.

பணம் வைத்திருப்பவன் பணம் நம்மைக் காப்பாற்றும் என்று எதற்கும் கவலைப் படாமல் தெனாவெட்டாக இருப்பான். பணம் இல்லாதவன் நம்மைப் படைத்தவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை யோடு துணிச்சலாக இருப்பான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பான்.

அதெல்லாம் பொது நம்பிக்கை. மனித குணம்.

ஆனால் ஜாதகப்படி நேரம் சரியில்லாத போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்றே சொல்ல முடியாது.

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, உங்களுடைய வாகனத்தை, எதிரில் வரும் டிப்பர் லாரிக்காரன் முத்தமிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? யோசித்துப் பாருங்கள். கண நேரத்தில் உங்கள் உதட்டைச் சிவக்க வைத்து விடுவான்.

‘spot out' என்றால் பிரச்சினை இல்லை. சிவலோகம் அல்லது வைகுண்டம் போய்விடலாம். குற்றுயிரும் குளை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் என்ன செய்ய முடியும்?

இன்றையத் தேதியில் சாதாரண சிகிச்சை என்றால், வங்கி இருப்பை வழித்துக் கொடுக்க வேண்டும். சீரியசான சிகிச்சை என்றால் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்!

அதிர்ஷ்டம் வாசல் வழியாகத்தான் வரும். ஆனால் துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வளியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.

“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.

அதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.

தீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகமே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது.

ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள். தினமும் இறைவனை வழிபடுங்கள். குறிப்பாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். அவர்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் - குளக்கரை, அரசமரத்தடி என்று எங்கும் இருக்கிறார்.

27 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் ஜன்ம நட்சத்திர நாள் அன்று சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை அர்ச்சித்து வழிபடுங்கள். நம்பிக்கையோடு மனம் உருக வழிபடுங்கள்.

அந்த நம்பிக்கைதான் வழிபாட்டில் முக்கியம்!
----------------------------------------------------------------------
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்னும் சிவஸ்தலம், இரண்டு விதங்களில் முக்கியமானது.

பார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில் உள்ளது.

அங்கே உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் அவர்! Fees எதுவும் வாங்காத மருத்துவர் அவர். இந்திய மருத்துவக் கழகத்தின் (Medical Council of India) அனுமதியைப் பற்றிக் கவலைப் படாமல் வைத்தியம் பார்க்கின்றவர். Blood Test, Urine Test, ECG Test, CT Scan என்று நம்மிடம் பணம் பிடுங்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கெல்லாம் அவரிடம் வேலை இல்லை!

நம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.

இரண்டு அந்த ஊரில் உறையும் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உண்டு. அங்கார தோஷம் உள்ளவர்கள் அங்கே சென்று வழிபட வேண்டும்.

முருகப்பெருமான் முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அங்கே இருக்கிறார். அவரை வழிபட்டால் கிரகக் கோளாறுகளை எல்லாம் அவர் நீக்குவார்!

வைத்தீஸ்வரன் கோவில் எங்கே உள்ளது? எத்தனை தூரத்தில் உள்ளது? அதன் தலபுராணம் என்ன? அதன் முழுச் சிறப்பு என்ன? என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான பக்கம் இணையத்தில் உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். இங்கே க்ளிக்கிப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!