Astrology: யோகங்களின் முக்கியத்துவம்
ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் அற்புதமாக உள்ளது. அல்லது அருமையாக உள்ளது. அல்லது நன்றாக உள்ளது அல்லது சுமாராக/சாதாரணமாக உள்ளது. அல்லது மோசமாக உள்ளது. மிகவும் மோசமாக உள்ளது. என்று கூறுவதற்கு ஜாதகத்தில் உள்ள யோகங்கள் பயன்படும்.
நமது முனுசாமிகள் (அதாங்க நமது முனிவர்கள்) அவற்றை எல்லாம் தொகுத்து சிறப்பாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
யோகங்கள் இரண்டு வகைப்படும். நல்ல யோகங்கள் (Good yogas). கெட்ட யோகங்கள் (ava yogas)
நன்மை செய்யும் கிரகங்களின் கூட்டணி நன்மையான யோகங்களைத் தரும். தீய கிரகங்களின் கூட்டணி தீமையான (அவயோகங்கள்) யோகங்களைக் கொடுக்கும்.
நல்ல பெற்றோர்கள். நல்ல வீடு, மேன்மை மிக்க கல்வி, நல்ல வேலை, அன்பான மனைவி அல்லது கணவன், நல்ல குழந்தைகள், பெயர், புகழ், உடைமைகள், மதிப்பு மரியாதை செல்வாக்கு அதிகாரம் இவை எல்லாம் அல்லது இவ்ற்றில் சிலவாவது கிடைக்க ஜாதகத்தில் நல்ல யோகங்கள் இருக்க வேண்டும்
அதைவிடுத்து, வாழ்க்கை அவலமாக, வறுமையாக இருந்தால் அது அவயோகக் கணக்கில் வரும். வறுமை, உடல் ஊனம், கல்வியின்மை, விபத்துக்கள், தீர்ர்க்க முடியாத நோய்கள், அடிமைத்தனமான வாழ்க்கை, புத்திக்குறைவு அல்லது புத்தியின்மை அல்லது பேதமை சுருக்கமாகச் சொன்னால் பைத்தியக்காரத்தனம் (madness) எல்லாம் இதில் அடங்கும்.
ஒருவருடைய ஜாதகத்தில் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால், உச்சம் பெற்ற நிலையில் அந்த சுக்கிரன் ஜாதகருக்கு சொகுசான (Luxurious) வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார். அதாவது எல்லா செள்கரியங்களையும், வசதிகளையும் கொடுப்பார். அது விதி (Rule) ஆனால் அதே சுக்கிரன் அதே ஜாதகத்தில் நவாம்சத்தில் நீசமடைந்திருந்தால், முன் சொன்னது அனைத்தும் ஊற்றிக்கொண்டுவிடும்!
ஆனால் ஜாதகத்தில் அமைந்திருக்கும் யோகங்கள் ஊற்றிக் கொள்ளாமல் தங்கள் பணிகளை தங்களுடைய தசாபுத்திக் காலங்களில் செவ்வனே செய்துவிடும்.
பிருஹத் ஜாதகம், சரவளி போன்ற நூல்களில் ஏராளமான யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான யோகங்கள், அவற்றின் முக்கியத்துவத்தை வைத்து வரிசையாகப் பின்னொரு சமயம் பார்ப்போம். அவைகள் தனிப் பாடங்கள்.
யோகங்கள் எப்படி உண்டாகின்றன?
அமரும் இடத்தைவைத்து அல்லது கூட்டு சேரும் இடத்தை வைத்து அவைகள் உண்டாகும்
ராசியில் இருக்கும் இடத்தை வைத்து யோகங்கள் இருப்பதைப் பார்க்கலாம். நவாம்சத்தை வைத்து அவைகள் செல்லுமா? அல்லது செல்லாதா? என்பதைப் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு ராசியில் சுக்கிரன் உச்சமடைவது ஜாதகனுக்கு சொகுசான வாழ்க்கையைக் கொடுக்கும். எல்லா விதமான வசதிகளையும் கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில், அதே ஜாதகத்தில் சுக்கிரன் நவாம்சத்தில் நீசம் பெற்றிருந்தால் அவைகள் அனைத்தும் கேன்சலாகிவிடும்.
அஸ்தமனம் பெற்ற கிரகங்கள் யோகத்தைத் தராது. யோகங்கள் ஒரு ஜாதகத்திற்கு நன்மை செய்யும் கிரகங்களாலும், நன்மையான வீடுகளில் அவைகள் அமர்வதாலும் அல்லது நன்மை செய்யும் இன்னொரு கிரகத்தின் கூட்டணியாலும் அல்லது பார்வையாலும் கிடைக்கும். ஆகவே அவை அனைத்தையும் அலசிப் பார்க்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த்து ஒரு முடிவிற்கு வரக்கூடாது!
எத்தனை யோகங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட முக்கியமான 5 யோகங்கள் இருப்பது ஜாதகத்தின் மேன்மையை அல்லது சிறப்பைக் கணிக்க உதவும்.
அவை என்னென்ன?
1.குருவால் ஏற்படும் ஹம்ச யோகம்
2.செவ்வாயால் ஏற்படும் ருசக யோகம்
3.புதனால் ஏற்படும் பத்ர யோகம்
4.சுக்கிரனால் ஏற்படும் மாளவ்ய யோகம்
5.சனியால் ஏற்படும் சச யோகம்
மேற்கண்ட அந்த 5 யோகங்களும் ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகனை தெய்வப்பிறவி என்று சொல்லலாம். தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பெற்றவன் என்று சொல்லலாம். அதற்கு பஞ்சமகா புருஷ யோகம் என்று பெயர்
ஆகவே அவைகள் உங்கள் ஜாதகத்தில் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். இருந்தால் கவலையை விடுங்கள். அவைகள் உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றங்களைத் தரும்.
எப்போது தரும்?
தங்களுடைய தசா புத்திகளில் தரும்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++