காலத்தின் ஆளுமை பற்றி வாலி அவர்கள் அசத்தலாகச் சொன்னது!!!!
*கவிஞர் வாலி ஐயாவின் "நினைவு நாடாக்கள்"*
*செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது.*
இதைத்தான் 'விநாச காலே விபரீத புத்தி!’ என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்!
*இதனை எண்ணுங்கால் - திரைத் துறையில் சிலரது தாழ்வு - என்னைத் திகைக்கவைக்கிறது!*
'இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!’இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்தபோதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்!
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்; அவருக்கா இப்படிஒரு சிரமம்?
ஒரு கம்பெனியில் பாட்டு 'கம்போஸிங்’. எம்.எஸ்.வி-யுடன் அமர்ந்திருக்கிறேன்.
அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் 'ஹாய்! வாலி!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்கச் சிரிக்க அளவளாவிவிட்டு, ''வாலி! உன் டிரைவரைவிட்டு, ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!''
எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்; சிவாஜி படங்களில் அவர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கி யவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி - பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?
என் வீட்டு வாசலில் ஒரு Taxi; ஒரு நடிகை! என்னைப் பார்க்க வந்தவர், 'வாலி சார்; எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்!’ என்று சொன்னதும் - நான் நூறு சுக்கல்களாய் நொறுங்கிப் போனேன்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.
நான் கவனித்துவிட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, 'நமஸ்காரம் அண்ணா! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன்தான்; இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி!’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை வணங்குகிறேன்.
'ஓ! நீங்கதான் அந்த வாலியா?’ என்று என் கைகளைப் பற்றுகிறார். அவர் தொட மாட்டாரா என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன் -
அவர் தொட்டதால் அல்ல; அவரை மக்கள் கவனியாது விட்டதால்!
காலம் எப்படியெல்லாம் காட்டுகிறது - தன் ஆளுமையை! இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை!
என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய *திரு.இளங்கோவன்!*
என்னிடம் சிகரெட் கேட்டவர் 'மாடி வீட்டு ஏழை’யான *திரு.சந்திரபாபு அவர்கள்!*
நாடகம் எழுதித் தரக் கேட்டவர் - நடிகையர் திலகம் *திருமதி.சாவித்திரி அவர்கள்!*
எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் - தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - *திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்!*
இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: *அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!*
-------------------------------------------------------
படித்ததில் நெகிழ்ந்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: *அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!*
ReplyDeleteஅருமையான பதிவு அய்யா....
அன்புடன்
விக்னசாயி.
=================================
அருமை ... அருமை...
ReplyDelete