மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.5.25

Astrology: எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

Astrology: எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்!

ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எட்டேகால் லட்சணத்தை எடுத்துக்கொள்வோம். எட்டேகால் லட்சணம் என்றால் என்னவென்று தெரியுமா? 

தமிழின் எண் வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். தமிழில்  ‘அ’ என்று எண்ணால் குறிபிட்டால் எட்டு என்று பொருள். ‘வ’ என்ற எழுத்திற்கு கால் (1/4) என்று பொருள் எட்டேகால் என்பதை ‘அவ’ என்று குறிப்பிடுவார்கள். எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று பொருள்படும்

ஒரு பையனோ அல்லது பெண்ணோ அழகில்லாமல் இருந்தால், அவலட்சணமாக இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்லாமல் எட்டேகால் லட்சணம் என்பார்கள்.
எங்கள் பகுதியில் (காரைக்குடியில்) சற்றுக் கெள்ரவமாகச் சொல்வார்கள். உள்ளதுபோல இருக்கிறான் அல்லது இருக்கிறாள் என்று சொல்வார்கள். நாம அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமன் ஏறும் வாகனம் என்பது எருமை மாட்டைக் குறிக்கும். படு சுட்டியாக இருக்கும் பையனைக் கிராமப் புறங்களில் ‘எமப் பயலாக’ இருக்கிறான் என்பார்கள். எமன் கொண்டு போவதைப் போல அசந்தால் பையனும் கொண்டு போய்விடுவான் என்று பொருள். சற்று மந்தமாக இருக்கும் பையனை எமன் ஏறும் வாகனம்போல பையன் இருக்கிறான் என்பார்கள்.

வாரியார் சுவாமிகள் சொல்வார்கள்  “இன்று எல்லோரும் எருமைப் பாலத்தான் குடிக்கிறார்கள். அதனால் தெருவில் பொறுப்பில்லாமல் எருமைகள் போலதான் நடந்து போகிறார்கள். வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்குவதில்லை”

மாடுகளிலும் பலவகை உள்ளன. உழுகின்ற மாடு, வண்டி மாடு. கோயில் மாடு என்று அவற்றையும் வகைப்படுத்தலாம். அவற்றைப் பற்றி சுவாரசியமாக எழுதலாம். அதைப் பின் ஒரு நாளில் எழுதுகிறேன். இப்போது பாடத்தைப் பார்ப்போம்

சனீஷ்வரன் சில வீடுகளில் இருக்கும்போது அழகான தோற்றத்துடன் இருப்பார். உதாரணம் துலாம் வீடு. அது அவருக்கு உச்ச வீடு. அங்கே இருக்கும்போது ஃபுல் மேக்கப்புடனும், பட்டு வேஷ்டி சட்டையுடனும், கையில் ஆறு பவுன் தங்க பிரேஸ்லெட்டுடனும், கழுத்தில் தங்கச் சங்கிலியுடனும் அழகாகக் காட்சியளிப்பார். மேஷத்தில் இருக்கும்போது சுய ரூபத்துடன் இருப்பார். எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வரும் பெண்ணைப்போல சுயரூபத்துடன் இருப்பார். அது அவருக்கு நீச வீடு.

அவர் அவலட்சணமாகக் காட்சியளிக்கும் வீடு ஒன்றும் உள்ளது. அது என்ன வீடூ?

எட்டாம் வீடு அது!

அதுதான் ஜாதகத்தில் உள்ள எட்டாம் வீடு

எட்டாம் வீட்டிற்கும் சனிக்கும் உள்ள உறவைப் பற்றி 4 பக்கங்களுக்கு விவரமாக எழுதலாம். எழுதியிருக்கிறேன், மேல்நிலைப் பாட வகுப்பில் (classroom2013) நேற்றுதைப் பதிவிட்டுள்ளேன். அதை இங்கே கொடுத்தால், பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக, அதாவது துவைத்த ஈரம் காயுமுன்பாகவே அதைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இணையத்தில் அத்தனை நல்லவர்கள் திரிகிறார்கள். ஆகவே இங்கே காயப் போடவில்லை. மேல் நிலைப் பாடங்கள் அடுத்த ஆண்டு புத்தகமாக வரும் அப்போது அனைவரும் படிக்கலாம்.

உங்களுடைய மேன்மையான தகவலுக்காக அதில் உள்ள சில விதிகளை (Rules) மட்டும் சுருக்கிக் கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------
எட்டில் சனி அமர்ந்து, தன்னுடைய மூன்றாம் பார்வையாக பத்தாம் வீட்டைப் பார்ப்பது நல்ல அமைப்பல்ல! அப்படி அமையப் பெற்ற ஜாதகன் பலவிதமான சோதனை களையும், தடைகளையும் தன்னுடைய வேலையில் அல்லது தொழிலில் சந்திக்க நேரிடும்.

அத்துடன் வேலை ஸ்திரமில்லாமல் இருக்கும். ஸ்திரமில்லாமல் என்றால் என்னவென்று தெரியுமா? Instability என்று பொருள்.

எந்தத் துறையென்றாலும், ஜாதகனுக்கு அது பிடித்தமில்லாமல் போகும். கவலை அளிப்பதாக இருக்கும்.

எத்தனை திறமை இருந்தாலும், எத்தனை திறமையை வேலையில் காட்டினாலும், அந்த வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து, அதன் மேல் வெறுப்பும் கூடவே இருக்கும். வேலைக்குத் தகுந்த ஊதியம் இல்லாவிட்டால், எப்படிப் பிடிப்பு வரும்? வெறுப்புத்தானே வரும்!

பத்தாம் வீட்டில் அதிகமான பரல்கள் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டுக்காரனின் பார்வையிலும் அந்த வீடு இருந்தாலும், அல்லது சுபக்கிரகங்களின் பார்வையில் அந்த வீடு இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் நடைபெறும். அதையும் மனதில் கொள்க!


அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.5.25

Astrology: வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!

Astrology: வாலன்டைன் தினமும் வாழைக்காய் பஜ்ஜியும்!

காதலர் தினம்! (Valentine Day)

காதலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

காதலித்தவனையே அல்லது காதலித்த பெண்ணையே மணந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று மணந்து கொள்ளுங்கள். அவர்கள் இல்லாமல் நீங்கள் இல்லை. காதலுக்காக அவர்களைப் புறந்தள்ளிவிடாதீர்கள். அவர்களை அழ வைத்தால் அந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது!

ஜாதி, மதம், இனம் குறுக்கே வந்து அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

போராடுங்கள். உள்ளிருப்புப் போராட்டம் நடத்துங்கள். அவர்களைச் சம்மதிக்க வையுங்கள். ஒரு கள்ளியை அல்லது மங்கையாக இருந்தால் ஒரு கள்ளனை வசப்படுத்திக் கைக்குள் போட்டுக்கொண்ட உங்களுக்கு, பெற்றோர்களை வசப்படுத்துவதா கஷ்டம்?

ஆனால் ஜாதகப் பொருத்தம் மட்டும் பார்க்காதீர்கள். பார்த்துப் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது? பாதியில் விட முடியுமா? பாதியில் விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

எத்தனை ஆயிரம் குறுஞ்செய்திகள் (SMS), புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், நண்பர்கள் வட்டாரம் என்று சாட்சியாக மாட்டிக்கொண்டு உள்ளனவோ? அவற்றை எல்லாம் எப்படி விலக்க முடியும்? அத்துடன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் அறை அல்லது காட்டேஜ் எடுத்து, போட்ட ஆட்டங்கள் எத்தனையோ? கணக்கு வைத்துக் கொள்ள முடியுமா என்ன? டூ வீலரில் அல்லது பஸ் பயணத்தில் உரசிய உரசல்கள் எத்தனையோ? ஆகவே ஜாதகத்தை எல்லாம் இருவரும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, திருமணம் செய்து கொள்ளுங்கள்.

திருமணத்திற்குப் பிறகு அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான குணம் மற்றும் குடும்ப பாரம்பரியம் முழுமையாகத் தெரியும்போது, பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?

காதல் புனிதமானது. ஒரு வருடம் அல்லது ஒரு மாதம் ஏன் ஒருவாரம் வாழ்ந்தாலும் போதும். காதலித்தவனையே மணந்து கொள்ளுங்கள்.

ஜாதகம் பார்க்காமல் மணந்து கொள்ளும்போது, அவனுடைய அல்லது அவளுடைய ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்கிரமாகி அல்லது நீசமாகி ஒன்றுக்கும் லாயக்கில்லாமல் இருந்தால் என்ன செய்வது? அல்லது ஆயுள் பாவம் அடிபட்டுப்போயிருந்தால் என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஒன்றும் செய்ய முடியாது. இந்த வியாக்கியானம் எல்லாம் காதலில் குதிப்பதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும்.

என்னிடம் கேட்டிருந்த ஒரு பெண்ணிற்கு இதை எழுதியபோது, சட்டென்று அவள் பதில் அனுப்பினாள்: “சார், எனக்கு அவனைப் பற்றிக் கவலை இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவன் முரண்டு பிடித்தால், அவனைப் பிடித்துக் கொடுத்து, மகளிர் காவல் நிலைத்தில் வைத்து முட்டிக்கு முட்டி தட்டி சரி பண்ணி விடுவேன். எனக்குப் பிரச்சினை எல்லாம் என் பெற்றோர்களை வைத்துத்தான். என்னுடைய காதலுக்கு அவர்கள் சம்மதிப்பார்களா? என்னுடைய திருமணம் அவர்கள் ஆசியுடன் நடக்குமா? அதை மட்டும் நீங்கள் என் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள் ப்ளீஸ்....!”

எப்படி இருக்கிறது நிலைமை பாருங்கள்!

அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டுவதா? அல்லது அவளிடம் மாட்டிக்கொண்டுள்ள அப்பாவி ஜீவனுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதா நீங்களே சொல்லுங்கள்!

பத்து சதவிகிதம் இப்படியும் இருக்கலாம். ஆகவே காதலர்களே ஜாதகத்தை மறந்து விட்டு, பெற்றோருடைய ஆசியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்

உங்கள் திருமண வாழ்வு வெற்றிபெற வாழ்த்துக்கள்!
-----------------------------------------------------------
“வாத்தி (யார்) கட்டுரைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கிறது ராசா, காதலிக்க வழியில்லாமல் (அதாவது ஒருத்திகூடக் கிடைக்காமல்) அல்லது காதலுக்கு வாய்ப்பில்லாம்ல் நேரடியாக திருமண பந்தததில் மாட்டிக்கொண்டு விட்டவர்கள், அல்லது மாட்டிக்கொண்டு விட்டதாக நினைப்பவர்கள் எல்லாம், வருந்தாமல் சூடாக வாழைக்காய் பஜ்ஜி இரண்டைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு கோப்பைஃபில்டர் காப்பியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டுத் தங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்க்கலாம். அதில் காதல் மறுக்கப்பட்டுள்ளது தெரியவரும்! டென்சன் இல்லாமல் பார்ப்பதற்குத்தான் வாழைக்காய் பஜ்ஜி & ஃபில்டர் காப்பி! சம்ஜே க்யா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.5.25

Astrology: யார் யார் எங்கே இருக்கக்கூடாது?

Astrology: யார் யார் எங்கே இருக்கக்கூடாது?

நமக்கு வேண்டியவர்கள் வேண்டாத இடத்தில் இருக்கக்கூடாது. வேண்டாதவர்கள், நமக்கு வேண்டிய இடத்தில் இருக்கக்கூடாது.

ஜோதிடத்தில் சுபக்கிரகங்கள் மூவர். சந்திரன், குரு, சுக்கிரன் ஆகியோர் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். அவற்றுள் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் மிகவும் நல்லது. அத்துடன் தனித்திருக்கும் அதாவது தீய கூட்டணி இல்லாத புதனும் நமக்கு வேண்டியவர்தான். அவர்கள் நல்ல இடங்களில் இருக்க வேண்டும். அதாவது கேந்திரம் அல்லது திரிகோண வீடுகளில் இருக்க வேண்டும். அதோடு ஒருவருக்கொருவர் எழில் இருந்தாலும் நல்லதுதான்.

அத்துடன் அவர்கள் காரகர்களை விட்டு விலகியும் இருக்ககூடாது.

குரு தனகாரகன். சந்திரன் மனகாரகன். இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால் பணம் இருந்தாலும் அல்லது பணவரவு இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது.

அதேபோல சூரியன் உடல்காரகன். அவருக்கு எட்டில் குரு சென்று அமரக்கூடாது. உடல் நலத்திற்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டுமல்லவா?

சனியும், சுக்கிரனும் நண்பர்கள். சனி கர்மகாரகன். சுக்கிரன் சுகபோகங்களுக்கு அதிபதி. இருவரும் ஒருவருக்கொருவர் எட்டு/ஆறு நிலைப்பாட்டில் அதாவது அஷ்டம சஷ்டம ஸ்தானங்களில் இருக்கக்கூடாது. இருந்தால், ந்ல்ல வேலை அல்லது தொழில் அமைந்தாலும், அது நாம் சுகப்படும்படி இருக்காது.

அத்துடன் அரசகிரகமான சூரியனுக்குக் கேந்திர வீடுகளில் அதாவது 4, 7 மற்றும் பத்தில் ராகு இருக்கக்கூடாது. நமக்கு சூரியனால் கிடைக்ககூடிய அரச செல்வாக்குள், பெயர், புகழ் ஆகியவற்றை ராகு கிடைக்காமல் செய்து விடுவான்

இதை எல்லாம் யார் சொன்னது?

வேறு யார் சொல்வார்கள்? நம் முனிசாமி (அதாங்க நம் முனிவர்களில் ஒருவர்) சொல்லியிருக்கிறார்.  அவர்களுக்குத்தான் எதையும் உரையாகச் சொல்லும் பழக்கம் இல்லாததால், பாடலாகச் சொல்லியிருக்கிறார். பாடல் கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்

குடியவனாட்சியாகக் குருவுதையத்தினிற்க
அடியவனுக்குச் சமமாகியவர்க் கேழில்ப் பிறையுதிக்க
வெடியவன்காரி சேய்க்கு விண்ணரவியவரைப்பாரார்
கொடியிடைனிற்பனூறாய்க் குறியிதுப்பாமாதே!

குருவுக்கு எட்டாமிடத்தில் சந்திரனும் இருக்கலாகாது
சூரியனுக்கு எட்டில் குருவும் இருக்கலாகாது
சனிக்கு எட்டில் சுக்கிரனுமிருக்கலாகாது
சூரியனுக்கு ஏழாம் இடத்திலும் நான்காமிடத்திலும் ராகுவும் இருக்கலாகாது
----------------------------------------------

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.5.25

Astrology: பாவ சந்திப்பில் இருக்கும் கிரகத்திற்கு என்ன சாமி பலன்?

Astrology: பாவ சந்திப்பில் இருக்கும் கிரகத்திற்கு என்ன சாமி பலன்?

ஒரு பாவத்திற்கு அல்லது ஒரு வீட்டிற்கு அல்லது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஒரு வீட்டின் முடிவுப் பகுதியில் அதாவது 28 பாகைகள் அல்லது அதற்கு மேலான பாகையில் இருக்கும் கிரகம் பாவசந்தியில் இருப்பதாகக் கொள்வார்கள். அதாவது ஒரு பாவத்திற்கும் அடுத்த பாவத்திற்கும் இடையில் இருப்பதாகக் கொள்வார்கள். Border Postion என்று கொள்ளலாம். சில ஜாதகங்களில் இந்த நிலைமை இருக்கும்.

அதாவது வீட்டிற்கு உள்ளேயும் இல்லாமல் அல்லது வெளியேயும் இல்லாமல், நிலைப்படி அருகே உட்கார்ந்திருக்கும் நிலைமை.

திருக்கணிதம் அல்லது வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜாதகங்களைக் கணிக்கும்போது, இந்த நிலைப்படி கிரகங்கள் படுத்தி எடுக்கும்.

ஒரு அட்டவணையில் (Chart) சிம்மத்தில் இருக்கும் கிரகம் அடுத்த அட்டவணையில் (Chart) கன்னியில் இருப்பதாகக் காட்டும். ஜாதகன் குழம்பிப்போவான்.

எதை எடுத்துக்கொள்வது?

நம் முனிசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) எழுதி வைத்துவிட்டுப்போனபடி வாக்கிய பஞ்சாங்கக் கணிப்புக்களையே எடுத்துக்கொள்வது நல்லது.

பாவசந்திப்பில் இருக்கும் கிரகம் எவ்வாறு பலன் கொடுக்கும்?

ஒரு பாவத்தின் மத்தியில் இருக்கும் கிரகம அந்த பாவத்திற்கு உரிய முழுப்பலனையும் கொடுக்கும். அதாவது உதாரணமாக ஒன்பதாம் வீட்டின் மத்தியில் இருக்கும் கிரகம்  தன் தசாபுத்தியில் தனக்குரிய பலனை முழுமையாகக் கொடுக்கும். (Both by placement and by ownership) 

உதாரணமாக ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் (திரிகோண வீடு) அமர்ந்திருந்தால், ஐந்தாம் வீட்டிற்கான பலனையும், ஒன்பதாம் வீட்டிற்கான பலனையும் ஒருசேரத் தன்னுடைய தசாபுத்திகளில் தருவார். அதேவீட்டில் அவர் வாசற்படியில் அமர்ந்திருந்தால் பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும். மத்தியப் பகுதியில் இருந்து வாசற்படி நோக்கி ந்கர ந்கரவே அதற்குத் தகுந்தாற்போல பலன்கள் குறைந்து கொண்டே வரும் 

ஆசாமி வாசற்படியில் அமர்ந்திருப்பதைக் கவனிக்காமல் பலன் சொன்னால, பலன்கள் தவறாகிப் போகும்.

ஏழாம் வீட்டில் சுபக்கிரகம் இருப்பதைப் பார்த்துவிட்டு, உனக்கு நல்லமனைவி, நீ விரும்பும்படி அழகான மனைவி கிடைப்பாள் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து, நம்ம நாயகன்  ஊ...லல்லல்லா என்று கனவுலகில் பாடிக்கொண்டிருப்பான். ஆனால் அதே சுபக்கிரகம் அந்த வீட்டின் வாசற்படியில் இருந்தால், அவன் பாட்டு திருமணத்தோடு முடிவிற்கு வந்து விடும். தொடராது! அதாவது ஜோதிடர் சொன்னது தவறான கணிப்பாகிவிடும்!

அர்த்தமாயிந்தா சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.5.25

Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !

Astrology.Popcorn Post: பிரதோஷமும் பில் கேட்ஸும் !

“வாத்தி (யார்), அப்துல்காதரும் அமாவாசையும் என்று சொல்வதைப்போல, பிரதோஷமும் பில் கேட்ஸும்! என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்களே - பில் கேட்ஸாவது, பிரதோஷமாவது?” என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.

Bill Gates யாரென்று தெரியாதவர்களும் பதிவை விட்டு விலகவும்!

மற்றவர்கள் தொடரலாம்!

பிரதோஷத்தைப் பற்றித் தெரியுமா உங்களுக்கு? சரி, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். பிரதோஷம் என்பது திதிகளில் 13ஆவது திதியாகும். அதன் பெயர் திரயோதசி. (அதாவது அஷ்டமி, நவமி, தசமி என்பதைப்போல) அன்றைய தினத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள காலத்தில் அல்லது நேரத்தில்), சிவனாரை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.

அதுவும் வளர்பிறை திரயோதசித் திதி மிகவும் விஷேசமானது. (வயதான) பெண்களைக் கேளுங்கள் சொல்வார்கள்.

விவரமாகத் தெரிந்துகொள்ள இந்த சுட்டியைக் கிளிக்கிப் பாருங்கள்: http://www.shaivam.org/siddhanta/Pradhosham.html, 
----------------------------------------------------------------------------------
சரி சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்!

சரி வளர்பிறை திரயோதசித் திதிக்கு இத்தனை வலிமை உண்டு என்றால், அதாவது அன்றைய தினம் சிவனாரை வழிபட்டால் மேன்மை எனும்போது, அன்றைய தினம் பிறக்கும் குழந்தைக்கு என்ன மேன்மை?

உன்னதனமான பிறவி அக்குழந்தை. முன் கர்ம வினைகள் எல்லாம் துடைக்கப்பெற்று க்ளீன் ஸ்லேட்டாகப் பிற்க்கும் குழந்தை அது.

நமது பில் கேட்ஸூம் ஒரு வளர்பிறைத் திதியன்று பிறந்தவர்தான்?

அதனால் அவர் அடைந்த நன்மைகள் என்னென்ன? அதற்கு அவருடைய ஜாதகத்தை அலச வேண்டும். அலசுவோம். பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.25

Astrology எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்ன செய்வான்?

Astrology எட்டாம் வீட்டில் அமர்ந்தவன் என்ன செய்வான்?

ஒரு கிரகம் எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அந்த கிரகத்தால் நன்மை இருக்காது. அவரே எட்டில் போய் மாட்டிக்கொண்டு உள்ளார். மாட்டிக்கொண்டு உள்ளவர் என்ன நன்மையைச் செய்ய்ப்போகிறார்?

சரி, குரு எட்டில் அமர்ந்தால் என்ன ஆகும்? அவருக்கும் அதே விதிதானா?

இல்லை. குரு நம்பர் ஒன் சுபக்கிரகம். அவர் எங்கே இருந்தாலும் நன்மையைச் செய்வார்.

உதாரணமாகக் குரு துலா லக்கின ஜாதகிக்கு (நன்றாகக் கவனிக்கவும்) 3 மற்றும் 6ஆம் இடத்திற்கு அதிபதி. இரண்டு தீய இடங்களுக்கு அதிபதி. அவர் எட்டில் அமர்ந்தால், அதுவும் ஜாதகியின் மாங்கல்ய ஸ்தானத்தில் அமர்ந்தால், மாங்கல்ய் அதோஷம் உண்டா? அவரின் ஆதிபத்யததை வைத்து இந்தக் கேள்வி.

தோஷம் இல்லை. ஏன்?

குரு முதல்நிலை சுபக்கிரகம். அவர் எட்டில் அமர்ந்தாலும், அங்கே தன்னுடைய ஆதிப்பத்யத்தைக் கைவிட்டு விட்டு (அதாவது 3 & 6ஆ இடங்களுக்கு உரியவன் என்னும் நிலையை விட்டுவிட்டு, நன்மையையே செய்வார். மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்க மாட்டார்.

பெண் தீர்க்க சுமங்கலி!!!!
---------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.5.25

Astrology: எட்டாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: எட்டாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

8th House and placement benefit of its lord

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது எட்டாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

1
எட்டுக்குரியவன் இலக்கினத்தில் இருந்தால், நாணயமில்லாதவனாக ஜாதகன் இருப்பான். தைரியக் குறைவு உடையவனாக இருப்பான். காதில் நோய், மனதில் பயம், பூர்வீக சொத்துக்கள் நாசம் உடையவனாக இருப்பான்.
2
எட்டுக்குரியவன் இரண்டில் இருந்தால், நாணயம் இல்லாத வாக்கு, துர்வார்த்தைகள் உடையவனாக ஜாதகன் இருப்பான். கல்வியில் ஆர்வமின்மை, குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள், உடல் பலமின்மை உடையவனாக இருப்பான்.
3
எட்டுக்கு உரியவன் மூன்றில் இருந்தால், சகோதர விரோதங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். காதில் நோய், மனதில் பயம், பூர்வீக சொத்துக்கள் நாசம் உடையவனாக இருப்பான்.
4
எட்டுக்குரியவன் நான்கில் இருந்தால் தாய்வழி ஆதரவின்மை, குடும்ப சச்சரவுகள், வாகன நாசம், மனை நாசம், சுகமின்மை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
எட்டுக்குரியவன் ஐந்தில் இருந்தால்,பிள்ளைகளால் அமைதியின்மை உண்டாகும். புத்திர நாசம், பிரபுக்களின் விரோதம், கலகம், உடல் உபாதை, உறவினர்களுடன் விரோதம், அலைச்சல், மன உறுதியின்மை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
6
எட்டுக்குரியவன் ஆறில் இருந்தால், மெலிந்த உடல் அமைப்பு, தீய எண்ணங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். முதுமைத் தோற்றமும், ஆயுள் குறைபாடும் உண்டாகும். சத்ரு ஜெயம் உடையவனாக இருப்பான். புத்திரயோகம் உடையவனாக இருப்பான்.
7
எட்டுக்குரியவன் ஏழில் இருந்தால், மனைவியால் நாசங்கள் உண்டாகும். கலகம், இகழ்ச்சி, வறுமை உடையவனாக இருப்பான். ஆனால் தீர்க்கமான ஆயுள் இருக்கும்.
8
எட்டுக்குரியவன் எட்டில் ஆட்சி பலத்துடன் இருந்தால், ஆயுள் நாசம், மனசஞ்சலங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். அலைச்சல், பிறர்சொல் கேளாமை உடையவனாக இருப்பான். அவமானங்கள் உண்டாகும்
9
எட்டுக்குரியவன் ஒன்பதில் இருந்தால் தந்தைக்குத் தோஷம், தந்தைவழிச் சொத்துக்கள் நாசம் அடையும். புத்திரர்கள் வழியில் துன்பம், பாக்கிய நாசம், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் விரோதம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
10
எட்டுக்குரியவன் பத்தில் இருந்தால், தொழில் மற்றும் வேலையில் ஸ்திரமின்மை உண்டாகும். அடிக்கடி தொழில், வேலை மாற்றங்கள் உண்டாகும். பிறருடன் பகைமை, சமாளிப்புக்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். தீர்க்க ஆயுள் உடையவனாக இருப்பான்.
11
எட்டுக்குரியவன் பதினொன்றில் இருந்தால் மூத்த சகோதரரின் உறவு கெடும். அடிக்கடி துன்பங்கள் உண்டாகும். பல வழிகளில் லாபம் தேடும் நிலை அதாவது அதுபோன்ற முயற்சிகள் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
எட்டுக்குரியவன் பன்னிரெண்டில் இருந்தால், புத்திர தோஷம், அகால போஜனம் உடையவனாக ஜாதகனிருப்பான். அயன, சுகங்கள் நாசமாகும். ஊர் சுற்றுபவனாக ஜாதகன் இருப்பான். அமைதியின்மை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.5.25

Astrology: ராசிகளின் உட்பிரிவு.

Astrology: ராசிகளின் உட்பிரிவு.

ராசிகள் அவைகளின் தன்மைகளை வைத்து 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன
அதை நீங்கள் அறியத் தந்துள்ளேன்.

தன்மைகளுக்கான பலன்களைப் பாடத்தில் கொடுத்துள்ளேன்.தேடிப் படிக்கவும்!

சர ராசிகள் (Movable signs),ஸ்திர ராசிகள் (Fixed signs), உபய ராசிகள் (Dual signs) 
என்று ராசிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

The Vedic seers grouped the signs in three categories as Movable, Fixed and Dual.
------------------------------------------------------------------
1
சர ராசிகள் (Movable signs)
மேஷம் (Aries), கடகம் (Cancer), துலாம் (Libra), மகரம் (Capricorn)
----------------------------------------------------------------
2
ஸ்திர ராசிகள் (Fixed signs)
ரிஷபம் (Taurus), சிம்மம் (Leo), விருச்சிகம் (Scorpio) கும்பம் (Aquarius)
-----------------------------------------------------------------
3
உபய ராசிகள் (Dual signs)
மிதுனம் (Gemini), கன்னி (Virgo), தனுசு (Sagittarius), மீனம் (Pisces)
----------------------------------------------------------------

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.5.25

Astrology: அம்பானியும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்!

Astrology: அம்பானியும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்!

எட்டும் உயரத்தில் எட்டு அட்டவணைகள்!

அஷ்டகவர்க்கப் பாடங்கள் - பகுதி 2

பரல்களின் விஷேசம் என்ன?

அதை வைத்துத்தான் உலகில் உள்ள அனைவரும் சமம். இறைவன்  அனைவரையும் சமமாகப் படைத்திருக் கிறான், அய்யன் வள்ளுவர் சொன்னதைப்போல, வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் இறைவன் என்பது அனைவருக்கும் தெரியவரும்.

அம்பானியும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்.
பில் கேட்சும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்.
பாரதப் பிரதமரும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான்
எடியூரப்பாவும் ஒன்றுதான் நீங்களும் ஒன்றுதான் 

ஜாதகத்தில் உள்ள 36 பாக்கியங்களில் உங்களுக்கு சில இருக்கும், அவர்களுக்கு சில இருக்கும்.
உங்களுக்கு சில இல்லாமல் இருக்கும். அவர்களுக்கு சில இல்லாமல் இருக்கும்

எதைச் சாப்பிட்டாலும் உங்களுக்குச் ஜீரணமாகும்.
எங்கே படுத்தாலும் உங்களுக்குத் தூக்கம் வரும்
எத்தனை லார்ஜ் அடித்தாலும் உங்களைக் கேள்வி கேட்க ஆளில்லை
எந்த இடத்திற்கு வேண்டுமென்றாலும் ஏ.கே 47துணை இல்லாமல் நீங்கள் போய்வரலாம்.

யாராக இருந்தாலும் ஜாதகத்தின் மதிப்பு 337 (அதாவது 337 பரல்கள்) மட்டுமே!!!!!
--------------------------------------------
சூரியனுக்கு  -  48 பரல்கள்
சந்திரனுக்கு  - 49 பரல்கள்
செவ்வாய்க்கு - 39 பரல்கள்
புதனுக்கு    -  54 பரல்கள்
குருவிற்கு   -  56 பரல்கள்
சுக்கிரனுக்கு  - 52 பரல்கள்
சனிக்கு     -  39 பரல்கள்
---------------------------------------
ஆக மொத்தம் - 337 பரல்கள்
__________________________

யாராயிருந்தாலும், இந்த 337 கிடைக்கும். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கிடைக்கும். உங்களுக்கும் கிடைக்கும். பரல்களைப் பொறுத்தவரை நீங்களும் அவரும் சமம். ஜாதகத்தில் இந்தப் பரல்கள் பரவலாகக் கிடைத்த இடங்களின் மேன்மையை வைத்து அவர் பிரதமர் ஆகியிருக்கிறார். நம் வேறு விதத்தில் பிரமாதமாக இருப்போம். நமக்கு உள்ள சுதந்திரம், பாதுகாப்பைப் பற்றி எள் அளவும் கவலை இல்லத மேன்மை அவருக்கு இருக்காது. அதுதான் ஜாதக வித்தியாசம். பரல்கள் குவியும் இடங்களை வைத்து வரும் வித்தியாசம்
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.5.25

Astrology: ஒன்பதாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: ஒன்பதாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 
9th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது ஒன்பதாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
ஒன்பதிற்குரியவன், இலக்கினத்தில் இருந்தால், ஜாதகன் சகல பாக்கியங்களையும் உடையவனாக இருப்பான். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் இடத்தில் பக்தியும், மரியாதையும் உடையவனாக இருப்பான். தான தர்மங்களில் நாட்டமுடையவனாக இருப்பான்.
2
ஒன்பதிற்குரியவன், இரண்டில் இருந்தால்,குடும்பம் விருத்தி உடையவனாக இருப்பான். பிறர் சொத்துக்களைப் பெறுபவனாக, உயர் நிலையில் உள்ளவனாக இருப்பான்.
3
ஒன்பதிற்குரியவன் மூன்றில் இருந்தால்,சகோதர அனுகூலம், பிதுர் தோஷம் உடையவனாக இருப்பான். பிதுர் சொத்துக்களை இழப்பவனாக இருப்பான்.
4
ஒன்பதிற்குரியவன் நான்கில் இருந்தால், பெற்றோர் அதரவு, தாய்வழி உறவினர் ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான். வீடு, மனை, வாகன யோகம் செல்வம் உடையவனாக இருப்பான்.
5.
ஒன்பதிற்குரியவன் ஐந்தில் இருந்தால், புத்திரர்களால் யோகம், பிதுர் சொத்துக்கள், அரசு அனுகூலம் உடையவனாக இருப்பான். வீடு, மனை, வாகனம், தெய்வ வழிபாடு, பணியாட்கள் உடையவனாக இருப்பான்.
6
ஒன்பதிற்குடையவன் ஆறில் இருந்தால்,பிதுர் சொத்துக்கள் விரையமாகிவிடும்.புத்திர தோஷம், பாக்கிய நாசம், கடன் உள்ளவனாக ஜாதகன் இருப்பான்.
7.
ஒன்பதிற்குரியவன் ஏழில் இருந்தால், பிதுர் சொத்துக்கள் விருத்தியடையும். லட்சுமிகரமான மனைவி கிடைப்பாள். புத்திர வழியில் நன்மைகள் அடையப் பெறுவான்.
8
ஒன்பதிற்குரியவன் எட்டில் இருந்தால்,பாக்கிய நாசம், புத்திரநாசம் உண்டாகும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். இந்த இடத்துடன் சனி, ராகு அல்லது கேது சம்பந்தப்பட்டால் பிதா அங்கக்குறைவு உடையவராக இருப்பார்.
9
ஒன்பதிற்குரியவன் ஒன்பதில் ஆட்சி பலத்துடன் இருந்தால், பிதாவுக்கு ஆயுள் தீர்க்கம். பாக்கியங்கள் உடையவனாக ஜாதகன் இருப்பான். தெய்வ வழிப்பாட்ட்டில் நாட்டம் உடையவனாக இருப்பான். சிறப்பான குடும்பம், பணியாட்கள், பந்தங்கள் உடையவனாக இருப்பான்.
10
ஒன்பதிற்குரியவன் பத்தில் இருந்தால், பாக்கியங்கள், சுயசம்பாத்தியம் உடையவனாக ஜாதகன் இருப்பான். சொத்து, சுகம், பெரிய மனிதர்களின் நட்பு உடையவனாக இருப்பான். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவான்.
11
ஒன்பத்திற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், தந்தை படிப்படியாக உயர்ந்த நிலையை அடைவார். குடும்ப செளகர்யம், தெய்வீக வழிபாடு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
12
ஒன்பதிற்குரியவன் பன்னிரெண்டில் இருந்தால், பிதுர் சொத்துக்கள் விரையமாகும். வழக்குகள், தன விரையம் உடையவனாக ஜாதகன் இருப்பான். அயன, சயன, போகம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.5.25

Astrology பத்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology பத்தாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 
10th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது பத்தாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
பத்தாம் வீட்டுக்குரியவன் இலக்கினத்தில் அமர்ந்தால், கீர்த்தி, ஆயுள் விருத்தி, ராஜ வாழ்க்கை, நட்பு, செல்வம், கல்வி, ஞானம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
2
பத்திற்குரியவன் இரண்டில் இருந்தால், நல்ல குடும்ப வாழ்க்கை, செல்வம், வாக்கு சாமர்த்தியம் அமையப் பெற்றவனாக ஜாதகன் இருப்பான்.
3
பத்திற்குரியவன் மூன்றில் இருந்தால், சகோதரர்கள் இருப்பினும், விஷேச பலன் இருக்காது. சகோதர தோஷம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
4
பத்திற்குரியவன் நான்கில் இருந்தால், தாய்வழி ஆதரவு, பெரிய வீடு, மனை, வாகனம், கால்நடைகள், பணியாட்கள், நல்ல குடும்பம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
பத்திற்கு உரியவன், ஐந்தில் இருந்தால், புத்திர விருத்தி, பிரபுக்கள் தயவு, கெளரவமான வாழ்வு, ராஜஜீவனம், அதிகாரம், புத்திக்கூர்மை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
6
பத்திற்கு உரியவன் ஆறில் இருந்தால்,  தந்திரபுத்திக்காரனாக, கெட்ட வழிகளில் அதாவது குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பவனாக ஜாதகனிருப்பான். திடமான உடலமைப்பு, அந்தஸ்து இல்லாதவனாக ஜாதகன் இருப்பான். பிறர் பொருளை அபகரிக்கும் குணம் உடையவனாக இருப்பான்.
7.
பத்திற்குரியவன் ஏழில் இருந்தால் தரித்திரமான அமைப்பு உடையவனாக ஜாதகன் இருப்பான். மனைவியிடம் பிணக்கம் உண்டாகும். கணவனுக்குக் கட்டுப் படாத மனைவி அமைவாள். மனைவி மூலம் பொருள் ஈட்டுவான். பல மனைவிகளை உடையவனாக ஜாதகனிருப்பான்.
8
பத்திற்கு உரியவன் எட்டில் இருந்தால்,, ஆயுள் விருத்தி இருக்கும். புத்திர தோஷம், மனைவியுடன் இணக்கம் இன்மை உடையவனாக ஜாதகன் இருப்பான். தத்துப் புத்திரன் கிடைப்பான். ஆபத்துக்கள் நிறைந்தவனாக இருப்பான்.
9
பத்திற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால், பிதுர் சொத்துக்கள் நாசமாகும். புத்திர தோஷம், சிரமமான வாழ்க்கை அமையும்.தெய்வ வழிப்பாடு, பெரிய மனிதர்களின் அபிமானம், தானதர்மகுணம் உடையவனாக ஜாதகன் இருப்பான். பிற்கலத்தில் சிறப்பான வாழ்வு உடையவனாக  இருப்பான்.
10.
பத்திற்கு உரியவன் ஆட்சி பலத்துடன் பத்தில் இருந்தால், உலக அறிவு, உறவினர்களின் ஆதரவு, பெரிய மனிதர்களின் ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.தெய்வ வழிபாடு, கீர்த்தி, புண்ணிய காரியங்களைச் செய்தல் ஆகியவை நிறைந்தவனாக ஜாதகன் இருப்பான்.
11
பத்திற்கு உரியவன் பதினொன்றில் இருந்தால், மூத்த சகோதரருக்குக் கண்டம்,தொட்டது துலங்கும். எதிலும் லாபம் பெறுபவனாக ஜாதகன் இருப்பான்.
12
பத்திற்கு உரியவன் பன்னிரெண்டில் இருந்தால், வீண் செலவுகள் உண்டாகும். பொருள் நஷ்டம், கஷ்டம், புத்திரர்களால் தீயபலன் ஆகியவை உண்டாகும். சொத்துக்கள் அழியும். அயன, சயன், சுகம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.5.25

Astrology: பதினொன்றாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும்

Astrology: பதினொன்றாம் வீடும் அதன் அதிபதி அமர்ந்த இடத்திற்கான பலன்களும் 
11th House and placement benefit of its lord

கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!

கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

இப்போது பதினொன்றாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1
பதினொன்றாம் வீட்டுக்கு உரியவன் இலக்கினத்தில் இருந்தால், ஜாதகன் அதிகம் படித்தவன். வாக்கு வன்மை, சாதுர்யமாகப் பேசும் தன்மை உடையவன். நல்ல லாபம் பெறக்கூடியவன். அயன, சயன, சுக பாக்கியங்களை உடையவன். மூத்த சகோதரருடன் நட்பாக உள்ளவன்
2
பதினொன்றுக்கு உரியவன் இரண்டில் இருந்தால், வழக்கறிஞர்களைப் போல பேசக்கூடியவன். நல்ல உடலமைப்பு, வருமனம், கெளரவம் மிக்கவனாக இருப்பான். அதிகாரம் உடையவனாக இருப்பான்.
3
பதினொன்றிற்கு உரியவன் மூன்றில் இருந்தால், மூத்த சகோதரர்களுக்கு ஜாதகனால் நன்மை உண்டாகும். அவர்களின் மேலான ஆதரவு இவனுக்கு இருக்கும்.
4
பதினொன்றிற்கு உடையவன் நான்கில் இருந்தால்,  நல்ல குடும்பம், வீடு, மனை, வாகன வசதிகள் உடையவனாக ஜாதகன் இருப்பான். செல்வாக்கு, தெய்வ வழிபாடு, தாய்வழி ஆதரவு உடையவனாக ஜாதகன் இருப்பான்.
5
பதினொன்றிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால்,புத்திரர்களால் முன்னேற்றம், தந்தையின் தொழிலை பிள்ளைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை நடக்கும். அந்தஸ்து, அரசு அனுகூலம், பெரிய மனிதர்களின்நட்பு ஆகியவை உடையவனாக ஜாதகன் இருப்பான்.
6
பதினொன்றிகு உரியவன் ஆறில் இருந்தால்,குறையாத கடன் சுமை, செய்தொழிலில் வஞ்சகர்கள்,போட்டியாளர்கள் இருப்பார்கள்.காது, கண் நோய், குரல் நோய், அயன, சயன, சுக நாசம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
7.
பதினொன்றிற்கு உரியவன் ஏழில் இருந்தால், மனைவியினால் அதிர்ஷ்டம், புத்திரர்களால் சுகம், முன்னேற்றம் உடையவனாக இருப்பான். தெய்வ வழிபாடு பொதுப்பணி உடையவனாக இருப்பான். தனச் செலவுகள் அதிகம் இருக்கும்.
8
பதினொன்றிற்கு உரியவன் எட்டில் இருந்தால்,  தீய காரியங்களால் பணச் செலவுகள் உண்டாகும். படுக்கை, சாப்பாடு, சுகம் நாசமாகும். பலவித தொழில் செய்யும் விருப்பமும் முயற்சியும் இருக்கும். ஆனால் எதிலும் போதிய லாபம் இல்லாமல் இருக்கும்!
9.
பதினொன்றிற்கு உரியவன் ஒன்பதில் இருந்தால்,தந்தை செய்து வந்த தொழிலை எடுத்துச் செய்து விரிவடையச் செய்வான். சொத்து, வாகனம், உயர் பதவி, அதிகாரம் உடையவனாக ஜாதகன் இருப்பான். படுக்கை, சாப்பாடு சுகம் மிக்கவனாக ஜாதகன் இருப்பான்.
10
பதினொன்றிற்கு உரியவன் பத்தில் இருந்தால், கெளரவமன தொழில் அல்லது உத்தியோகம், அடக்கமான, அமைதியான  குடும்பம் இருக்கும். செளகர்யங்கள், தெய்வீக வழிபாடு, நல்ல வருமானம் உடையவனாக ஜாதகன் இருப்பான்.
11.
பதினொன்றுக்கு உரியவன் பதினொன்றில் ஆட்சி பலத்துடன் இருந்தால், சாதாரண லாபம். சமபலன்கள் உண்டாகும். தெய்வீக வழிபாடு, கெளரவமான குடும்பம் உடையவனாக ஜாதகன் இருப்பான். பிற்கலத்தில் செல்வத்துடன் இருப்பான். மூத்த சகோதரர்கள் நலமாக இருப்பதுடன், ஜாதகனுடன் நல்ல உறவோடு இருப்பார்கள்.
12
பதினொன்றிற்கு உரியவன் பன்னிரெண்டில் இருந்தால், பொருள் விரையம், கடன் தொல்லைகள், வியாதிகள், அமைதிக்குறைவு உடையவனாக ஜாதகன் இருப்பான். அயன, சயன சுகங்கள் உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.5.25

Astrology: வீடுகளும் கிரகங்களும் - முதலில் லக்கினம்

Astrology: வீடுகளும் கிரகங்களும் - முதலில் லக்கினம்

1
லக்கினத்தில் சூரியன் இருந்தால், ஜாதகன் உண்மையை உறுதியாகப் பேசுபவன். சிவந்த நிறமும், உஷ்ண தேகமும் உடையவனாக இருப்பான். மெலிந்த உடல்வாகு இருக்கும். தன்னம்பிக்கை உடையவனாக இருப்பான்.
2.
லக்கினத்தில் சந்திரன் இருந்தால் அழகான கண்கள், இளைத்த சரீரம், வட்ட முகம் உடையவனாக
ஜாதகன் இருப்பான். தூய்மையானவன்.புத்தியுள்ளவன்.பாக்கியவான். பெண் சகோதரிகள் இருப்பார்கள். நீர் சம்பந்தமான நோய்கள் இருக்கும். அதாவது அடிக்கடி மூக்கில் நீர் வடிதல் போன்ற சிறு சிறு நோய்கள் உடையவனாக இருப்பான்.
3
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால், முன்கோபம், சட்டென்று சண்டைக்குப் போகும் குணமுடையவனாக ஜாதகன் இருப்பான். மெல்லிய ஆனால் உறுதியான உடல் அமைப்பு இருக்கும். பிறரை மீறிப் பேசுபவன். சஞ்சல மனதை உடையவன். நகைச்சுவை மிகுந்தவன்.
4
லக்கினத்தில் புதன் இருந்தால், நகைச்சுவைப் பிரியர். ரோகமுள்ளவர்.குறைந்த நிறம். பிறரை அளந்துவிடக்கூடியவர். சமயமறிந்து பேசக்கூடியவர். நல்ல குணமுடையவர். அறிவுரை வழங்குவதில் விருப்பம் உடையவர். தலைமை தாங்கும் தகுதியை/அமைப்பை உடையவர்.
5.
லக்கினத்தில் குரு இருந்தால், ஆசீர்வதிக்கப்பெற்றவர். எடுத்த செயல்களை முடிக்கக்கூடியவர். அறிவாற்றல் மிக்கவர். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவர். எல்லா நலன்களும் அவரைத் தேடிவரும் அமைப்பை உடையவர்.
6.
லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால், அழகிய கண்கள், சுருள்முடி கொண்டவர். கலை ஆர்வம், இரசிப்புத் தன்மை உடையவர். ஆடம்பரப் பொருள்களை விரும்பக்கூடியவர். அலங்காரத்தில் விருப்பம் உடையவர். சுகங்களை உடையவர். பெண்களுடன் சரளமாகப் பழகக்கூடியவர்.
7
லக்கினத்தில் சனீஷ்வரன் இருந்தால், ஆயுள் பலம் உள்ளவர். மெலிந்த தேகம் உடையவர். பிடிவதம், மந்த செய்கைகளை உடையவர். கபடம் மிக்கவர்.
8
லக்கினத்தில் ராகு இருந்தால், முரட்டுத் தனம், ஆக்கிரமிக்கும் குணம் உடையவர். நீச குணம் இருக்கும். சுயநலம் மிக்கவர். விவாதம் செய்யும் சுபாவம் உடையவர். பலம் மிகுந்த உடல் அமைப்பு உடையவர்.
9
லக்கினத்தில் கேது இருந்தால், மெலிந்த உடல் அமைப்பு, பலக் குறைவு உடையவர். நம்பிக்கை இன்மை, பகுத்தறியும் குணம் உடையவர். ஞானம் உடையவர். விஷ ரோகம் உடையவர்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.5.25

Astrology: கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:

Astrology கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:

Placement benefits of planets!
கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!

முதலில் லக்கின அதிபதி!
1
அவர் முதல் வீட்டில், அதாவது லக்கினத்திலேயே இருந்தால், அதுவும் ஆட்சி பெற்று அது அவருக்குச் சொந்த வீடாக இருந்தால் மிகவும் நல்லது.
அதனால் ஜாதகனுக்கு நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும் கொடுப்பார். ஜாதகன் பக்திமானாகவும், நல்ல குணங்களை உடையவனாகவும் இருப்பான்.
லக்கினத்தின் மேல் சனி, ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் பார்வை இருக்கக்கூடாது. அவைகளின் சேர்க்கையும் இருக்கக்கூடாது. அவ்வாறான அமைப்பில் ஜாதகனுக்கு நீண்ட ஆயுள் இருக்கும்.
2.
லக்கின அதிபதி 2ம் வீட்டில் இருந்தால், அதாவது லக்கினத்திற்கு அடுத்த வீட்டில் இருந்தால், ஜாதகன் செல்வந்தனாகவும், நல்ல மனைவி மக்களுடைய குடும்பத்தைக் கொண்டவனாகவும் இருப்பான்.  ஜாதகனுக்கு வாய், வார்த்தை அதாவது வாக்கு சாமர்த்தியம் இருக்கும். எதையும் பேசி சமாளிக்கும் ஆற்றல் உடையவனாக இருப்பான்.
3.
லக்கின அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தாக், ஜாதகன் உடன்பிறப்புக்களுடன், அதாவது சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமையாக வாழ்பவனாக இருப்பான். செல்வந்தனாகவும், செல்வாக்கு உடையவனாகவும் இருப்பான்.
4
லக்கினாதிபதி நான்காம் வீட்டில் இருந்தால், ஜாதகன் எல்லா சுகங்களையும் உடையவாக இருப்பான். வீடு, வாசல், நிலம், புலம், வண்டி வாகனம் என்று எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான். கல்வி, கேள்விகளில் விருப்பமுடையவனாகவும், தாயிடத்தில் பாசம் மிக்கவனாகவும் இருப்பான்.
5
லக்கினாதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். குழந்தை பாக்கியம் உள்ளவனாக இருப்பான். பெரும்பாலும் சொந்த ஊரில் வசிப்பவனாக இருப்பான். பூர்வ புண்ணிய பலத்துடன் இருப்பான். நல்லபடியான வாழ்க்கை அமையும்
6.
லக்கினாதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால், அது நன்மையான அமைப்பு இல்லை. ஜாதகன் போராடப் பிறந்தவன். வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்ததாக இருக்கும். எதிரிகள் இருப்பார்கள். கடன் உண்டாகும். அணுகுமுறை வெற்றியைக் கொடுக்காது. லக்கினாதிபதி பாப கிரகம் என்றால் இந்த இடத்தில் இருப்பது சில விஷயங்களில் நன்மையானதுதான்
7
லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால், ஜாதகன் காமம் அதிகம் உடையவனாக இருப்பான். பலவிதமான ஆசைகள் உடையவனாக இருப்பான். திருமணத்தால் மேன்மை அடைபவனாக இருப்பான். பிறரை ஈர்க்கும் தன்மை உடையவனாக இருப்பான்.
8
லக்கினாதிபதி எட்டில் இருப்பது நன்மையான அமைப்பு இல்லை. சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். சிலருக்கு அவமானங்களும் கெட்ட பெயரும் உண்டாகும். சனி, ராகு அல்லது கேது இந்த இடத்துடன் சம்பந்தப் பட்டிருந்தால் ஜாதகனுக்கு உடற் குறைபாடு இருக்கும்.
9
லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் பாக்கியசாலியாக இருப்பான். எல்லா பாக்கியங்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகும். தந்தையை நேசிப்பவனாகவும், தந்தையின் ஆதரவைப் பெற்றவனாகவும் இருப்பான். தர்ம காரியங்களைச் செய்வான். எப்போதும் நல்ல பெயர் இருக்கும்.
10
லக்கினாதிபதி பத்தில் இருந்தால், எந்த நேரமும் தன்னுடைய தொழில் அல்லது வேலை பற்றிய சிந்தனை உடையவனாக இருப்பான். அன்றாட வேலைகளில் கண்ணும் கருத்தும் உடையவனாக இருப்பான். தர்மகாரியங்களைச் செய்பவனாக இருப்பான்.
11.
லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால், லாபம் உடையவனாக இருப்பான். இது லாப ஸ்தானம் அதை மனதில் வையுங்கள். மூத்த சகோதரனாக இருப்பான் அல்லது மூத்தவர்களிடம் அன்பு உடையவனாக இருப்பான். சுபக்கிரகங்களின் பார்வை இல்லாவிட்டால் மாரக திசையாக மாறும் அபாயம் உண்டு.
12
லக்கினாதிபதிக்கு 12ம் இடம் உன்னதமானது அல்ல! ஜாதகன் பண விரயம் உடையவனாக இருப்பான். உயர்ந்த நிலையை அடைய முடியாதவனாகவும் இருப்பான். அயன, சயன, சுகங்களை கிடைத்தவரை அனுபவிப்பவனாக இருப்பான். சிலருக்கு ஆயுள் குறைவு ஏற்படும். எல்லோருக்கும் அல்ல!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.5.25

Astrology: இரண்டாம் வீடும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்கள்


Astrology: இரண்டாம் வீடும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்கள்


கிரகங்களின் அமர்விடப் பலன்கள்:
Placement benefits of planets!
கிரகங்களின் அமரும் இடத்தைவைத்துப் பலன்கள் வேறுபடும். அவற்றை விவரமாகப் பார்ப்போம்!


இப்போது இரண்டாம் வீட்டையும், அதன் அதிபதி அமரும் இடத்திற்கான பலன்களையும் பார்ப்போம்!

கிரகங்கள் அவ்வாறு அமரும் இடமானது அவற்றின் உச்ச வீடாக அல்லது ஆட்சி வீடாக இருந்தால் சுபமான பலன்கள் உண்டாகும். இதை மனதில் வையுங்கள்!

1.
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகன் செல்வம் உடையவனாக இருப்பான். ஏனென்றால் அது திரிகோண ஸ்தானம். நல்ல அமைப்பாகும். புத்திசாலியாக, வாக்கு சாமர்த்தியம் உள்ளவனாக இருப்பான். நல்ல குடும்ப வாழ்க்கையை உடையவனாக இருப்பான்.
2
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் ஆட்சி பலம் பெற்று இரண்டில் இருப்பது நன்மையான அமைப்பாகும். ஜாதகன் தனம், செல்வம், நல்ல குடும்பம், வாக்கு அமைப்பு எல்லாம் உடையவனாக இருப்பான்.
3.
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் மூன்றாம் வீட்டில் இருந்தால்,சகோதர அதிர்ஷ்டம் உண்டாகும். சிலருக்கு கல்வியில் முடக்கம் ஏற்படும்.
4.
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் நான்கில் இருந்தால், சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவனாக ஜாதகன் இருப்பான். தாயிடம் அன்பு மிகுதியானவனாக இருப்பான். கல்வி, பூமி, வியாபாரம் இவை ஒன்றின் மூலம் பொருள் ஈட்டுபவனாக இருப்பான்.
5
இரண்டாம் வீட்டிற்கு உரியவன் ஐந்தில் இருந்தால்,  ஜாதகனுக்குப் புத்திர தோஷம் இருக்கும். காதகன் புத்திக் கூர்மை உடையனாக இருப்பான். சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் தொடர்பு அவனுக்கு உண்டாகும்.
6
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், ஆறாம் வீட்டில் இருந்தால், வாக்கில் சோர்வு இருக்கும். பேச்சில் உளறல் அதிகமாக இருக்கும் தேவையில்லாதவற்றைப் பேசிக் கொண்டு திரிவான். பணச் சேதங்களும் உண்டாகும்
7
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், ஏழாம் வீட்டில் இருந்தால், களத்திரதோஷம். பெண் சம்பந்தமாய் செலவு. ஜாதகன் சங்கீத ஞானம் உடையவனாக இருப்பான்
8
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், எட்டாம் வீட்டில் இருந்தால், பேச்சில் தடங்கலும், சமயங்களில் பேசா மடந்தையாகவும் இருப்பான். தன விரையம் உடையவனாக இருப்பான்.
9
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், ஒன்பதாம் வீட்டில் இருந்தால், சிலருக்கு பிதுர் தோஷம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். ஜாதகன் செல்வம், பாக்கியம் உடையவனாக இருப்பான்.
10
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், பத்தாம் வீட்டில் இருந்தால், கல்வி மேம்பாடு உடையவனாக இருப்பான். சாஸ்திரங்களை ஆராய்ந்து கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கும். வாய் சாமர்த்தியம் உடையவனாக இருப்பான். வாக்கினால் பிரபலம் அடைபவனாக இருப்பான்.
11
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், பதினொன்றாம் வீட்டில் இருந்தால், செல்வம் உடையவனாக இருப்பான். கொடுக்கல், வாங்கல் செய்பவனாக இருப்பான். கையில் எப்போதும் காசு, பணம் உடையவனாக இருப்பான்.
12
இரண்டாம் வீட்டிற்கு உரியவன், பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால், வாய் சாமர்த்தியம் உடையவனாக இருப்பான். ஆனால் அதனால் அவனுக்கு பலன் ஒன்றும் இருக்காது. தன விரையம் உடையவனாக இருப்பான். வீண் செலவுகள் அதிகம் இருக்கும்!

அன்புடன்
வாத்தியார்
=================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!