மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Puraana Stories புராணக் கதைகள். Show all posts
Showing posts with label Puraana Stories புராணக் கதைகள். Show all posts

6.7.24

ஆன்மிகம்: எல்லாம் அவன் செயல்!


ஆன்மிகம்: எல்லாம் அவன் செயல்!

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன் அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான்

கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் கண்ணனை இறுக பற்றி  கொண்டு "கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான்  நீயும் துக்கம் தாள முடியாமல்  அழுகிறாயோ ?" என்று கேட்டான் .

"இல்லை அர்ஜுனா,  நான் துக்கம் தாளாமல் அழவில்லை.உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம்  தாளாமல் அழுகிறேன்" என்றான் கண்ணன்.

"கண்ணா நீ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம், எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது."

"உறவு, பற்று ,பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா"

"அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச  பந்தம் அவர்களை விட்டு போகாது ".

"அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம்  செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது" என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன்.

ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்கலோகத்தில் இருந்தான் அபிமன்யு. அவனை அடையாளம் கண்டுகொண்ட  அர்ஜுனன் "என் மகனே அபிமன்யு" என்று பாசத்தோடு கட்டி அணைக்க போனான் .

அணைக்க போன அர்ஜுனனை தடுத்த அபிமன்யுவின் ஆன்மா "அய்யா, யார் நீங்கள்?  என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது. தயவு கூர்ந்து என்னை விட்டு விலகி செல்லுங்கள்" என்றது.

அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம், "பார்த்திபா பார்த்தாயா, உறவு பாசம் பந்தம்  உணர்வு  கோபம் அன்பு காமம் யாவும் உடலில் உயிர் இருக்கும் வரைதான்.  உடலை விட்டு உயிர் போய் விட்டால் ஏதும் அற்ற உடலுக்கும்  உணர்வு இல்லை. அதை விட்டு போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை  நீ அழ வேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே அதை கட்டி பிடித்து அழு—உன் உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல பிறந்த  உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொள் .

படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான். நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே. செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு அதுவே வாழ்வின் அர்த்தமாகும்" என்று கூறி கண்ணன் புன்னகைத்தான்.

ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் 🙏
--------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.2.22

அடித்து ஆடலாம் வாருங்கள்!




அடித்து ஆடலாம் வாருங்கள்!

பொங்கலுக்குப் பிறகு கடந்த 17 நாட்களாக பதிவுகள் எதுவும் போடவில்லை. உடல்நிலைதான் காரணம். இப்போது சரியாகி விட்டது.
இனிமேல் முடிந்தவரை தொடர்ந்து எழுதுகிறேன்

இப்போது கவியரசர் கண்ணதாசன் வரிகளில் அசத்தலான புராணக்கதை ஒன்றை உங்களுக்குத் தருவதில் மகிழ்வு கொள்கிறேன் !

கண்ணதாசன் கவிதை வரியில் ஒரு  வாணிய செட்டியாரின்  புராணக்கதை!

ஒரு பாடலின் இடையே வரும் ரெண்டு வரிகளில் 
இவ்வளவு பெரிய உண்மை கதை அல்ல நிஜமே


இன்று நான் கேட்ட ஒரு பழைய பாடல்...
என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது ..!
.
“ *இசைத்தமிழ்* நீ செய்த அரும் சாதனை..” 
.
எத்தனையோ ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் " *திருவிளையாடல்* " படப் பாடல்தான் இது ..!
ஆனால் இன்று ஏனோ....
இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , 
மீண்டும் மீண்டும் உள்ளத்தின் உள்ளே ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு...
அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன..!
.
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -  மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”*
.
 பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!
.
இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன *சிவலிங்கம்* சாட்சி சொன்ன கதை..?
.
நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்...
.
“ அது வந்து.... 
அதாவது.... சிவனின் *திருவிளையாடல்களில்* 
அதுவும் ஒன்று....
அதற்கு மேல்.... .... முழுசா தெரியலியே..!”
.
சரி...பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்..
 *கண்ணதாசன்* ...!
.
சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்..! 
அவர் ஒரு வரி எழுதினால் ..
அதற்குள்ளே *ஓராயிரம்* அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்..!
.
கூகிளில் , அங்கும் இங்கும் தேடி ஓடி... 
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையைப் பிடித்தேன்....
அது *இதுதான்* ...!
.
அந்தக் காலத்தில்....காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்... 
.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் 
தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை...
.
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர ....
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .... 
.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..
சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ....
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
.
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?
அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்... 
.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது....!
.
தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் ....
.
நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட...
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்...
.
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , 
இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
.
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் ...
அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , *சிவலிங்கமும்தான்* ...!
.
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.....
.
கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
.
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” 
.
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!
.
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :
"நாங்கள் சாட்சி.."
.
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
.
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்... 
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...! 
.
பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
.
இப்போதும் , *மதுரையில்* சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்... 
 *வன்னிமரம்* , *கிணறு* , *சிவலிங்கம்* ஆகியவை இருக்கிறதாம்....!
.
நீங்கள் பார்த்திருக்கிறீர்களா...?
.
ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன் ... ஆனால் அப்போது இந்தக் கதை தெரியாததால் கவனிக்கவில்லை..!
இனி போகும்போது தேடிப் போய்ப் பார்க்க வேண்டும்..!
. கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “ *சாட்சிநாதர்* ” என்றும் “ஸ்ரீ *சாட்சிநாதசுவாமி* ” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!
.
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறதாம்..!
[ “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறாராம் கல்கி..]
.
. கதையைப் படித்து முடித்த நான் , 
 *கண்ணதாசனை* எண்ணி எண்ணி வியந்து போனேன் ...!
.
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ..?”
.
....கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , 
இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே..! 
இந்தக் கதையை முழுவதும் படிக்காமல் , 
கண்டிப்பாக கண்ணதாசனால் அந்த ஒரு வரியை எழுதி இருக்க முடியாது..!
.
சரி.... ஒரு பாடலுக்கே இப்படி என்றால் ....
அவர் எழுதிய *ஆயிரக்கணக்கான* பாடல்களில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் இருக்கும்..?
.
அவற்றை தெரிந்து கொள்ள ,எத்தனை ஆயிரக்கணக்கான கதைகளை....நூல்களை..புராணங்களை...இதிகாசங்களை அவர் படித்திருக்க வேண்டும் ..?
.
 அத்தனையும் இந்த ஒரு *ஜென்மத்தில்* , 
எப்படி அந்த காவியத் தாயின் இளைய மகன் கண்ணதாசனுக்கு சாத்தியமாயிற்று ..?
.
“ஆம்...அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த 
நிலையிலும் அவனுக்கு மரணமில்லை”
.
 கண்ணதாசன் வாசிக்க வேண்டிய கவிஞர் மட்டும் அல்ல... மனதில் சிம்மாசனம் போட்டு அமர வைக்க வேண்டிய கவிஞர்
----------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.12.20

பழத்தை விடுத்து அதன் தோலை பகவான் ஏன் உண்டார்?


பழத்தை விடுத்து அதன் தோலை பகவான் ஏன் உண்டார்?

👆பாண்டவர் தூதனாக கிருஷ்ணர், அஸ்தினாபுரம் சென்றார் !*

பரந்தாமன் வருகை அறிந்த ஆன்றோர் அனைவரும் அவனை எதிர்கொண்டனர்...!

கண்ணன் இராசவீதி வழியாக வந்து கொண்டிருந்தான். 

வீதியின் இருமருங்கிலும் வானளாவிய மாளிகைகள் கண்ணனை வரவேற்பதற்காக அலங்கரிக்கப்பட்டு விளங்கின...!

முதல் மாளிகையைக் கண்ட கண்ணன் "இது யாருடையது?" என்றான்..!

"என்னுடையது" என்று பதில் வந்தது. பதில் சொன்னவன் துரியோதனன்... !

இப்படியே ஒவ்வொரு மாளிகையையும் கண்ணன் கேட்டுக் கொண்டே வந்தான். அவனைத் தொடர்ந்து எதிர் கொண்டவர்கள், 

தங்கள் மாளிகையை என்னுடையது என்னுடையது என்றே சுட்டிக் காட்டினர்...!

துரோணர், வீடுமர், கிருபர், துச்சாதனன், கர்ணன் முதலியோர் அனைவரும் அவ்வாறு கூறியவருள் முக்கியமானவர்கள்...!

கண்ணன் அவர்கள் வரவேற்பைப் பொருட்படுத்தாமல் சென்று கொண்டேயிருந்தான்...!

வீதியின் கடைசிப் பகுதிக்கு வந்தாகிவிட்டது. அங்கே ஒரு கூரைச் சிறுகுடில். தவக்குடில் போல விளங்கியது...!

வழக்கம் போல் "இது யாருடையது?" என்றான் கண்ணன்...

"இது தேவரீரது திருமாளிகை" என்று பதில்வந்தது. ..

பதில் வந்த திசையை நோக்கினான் எம்பெருமான். அங்கே மகாத்மா விதுரர், பணிவுடன் கண்ணனை வணங்கிய வண்ணம் காட்சியளித்தார். . .!

அவரது தோற்றம் அடக்கமே உருவம் கொண்டு எதிரே நிற்பதுபோன்றிருந்தது.

பக்தவத்சலனான பாண்டவர் தூதன், "அப்படியா? 

இப்பெருநகரில் எனக்கும் ஒரு மாளிகையுள்ளதே !

நான் அதில் தங்குவதே முறை" என்று கூறிக் கொண்டு, அந்தக் குடிலுக்குள் நுழைந்துவிட்டான்...!

தனது சிறு குடிலில் கண்ணன் எழுந்தருளிவிட்டான் என அறிந்த விதுரன், பூரித்துப் போனான்..!

எதிர்பாராமல் வந்த விருந்தினன் கண்ணனை எவ்வாறு உபசரிப்பது? 

ஏதாகிலும் பால், பழம் வாங்கி வரலாம் என்று விதுரன் வெளியே சென்று விட்டான். . .!

விதுரன் வீட்டில் அவன் துணைவி மட்டும் தனியாக இருந்தார்...!

அவர் சிறந்த பக்தை. கண்ணனை எதிர்பாராமல் சந்தித்த அந்த அம்மையாரும் செய்வதறியாது திகைத்து நின்றார்..!

கண்ணன் அமர்வதற்கு ஓர் ஆசனங்கூடத் தரவேண்டும் என்று தோன்றவில்லை...!

கண்ணன் ஒன்றையும் எதிர்பாராமல், தரையில் அமர்ந்து கொண்டான்..

"அம்மா எனக்குப் பசிக்கின்றது,ஏதாவது கொண்டு வாருங்கள்!" என்றான்..

வீட்டில் இன்னும் சமையல் ஆகவில்லை. விதுரன் ஏதாவது வாங்கி வந்த பிறகுதான் சமையல் ஆக வேண்டும்.

அதற்குள் பரம்பொருள் பசிக்கின்றது என்கின்றாரே என்று அந்த அம்மையார் செய்வதறியாமல், இயந்திரம் போல் இயங்கத் தொடங்கினாள்...!

சமையலறையில், எப்போதோ சமைத்த கீரை மட்டும் இருந்தது. 

காய்ந்து போயிருந்த அந்தக் கீரையைக் கொண்டுவந்து கண்ணன் முன் வைத்தாள்...!

கண்ணன் கைநிறைய வெண்ணெய் எடுத்துண்டு பழகியவன் அல்லவா?

அந்தப் பழக்கத்தால் போலும் ! கீரையை கைநிறைய எடுத்து உண்டான். 

"ஆகா இவ்வளவு சுவையான கீரையை இதற்கு முன்பு நான் உண்டதே இல்லை” என்று கூறியவாறே அந்தக் காய்ந்துலர்ந்த கீரை முழுவதும் உண்டுவிட்டான்...!

"கீரை தீர்ந்துவிட்டதே...வேறு என்ன தரலாம்!” என்று சிந்தித்த அந்த தெய்வத்தாய்க்கு, 

வீட்டுக்குள் வாழைப்பழம் இருப்பது நினைவுக்கு வந்தது.விரைந்து சென்று வாழைப்பழம் கொண்டுவந்தாள்...!

பழத்தை உரித்து உரித்து பகவானுக்குத் தரத்தொடங்கினாள்...

பக்திப் பரவசத்தில் மூழ்கிய அம்மையார், அவசரத்தினால் உரித்த சுளைகளை அப்பால் எறிந்துவிட்டு,

பழத்தோலை இறைவன் திருக்கரத்தில் கொடுத்தாள். கண்ணன் பழத்தோலை சுவைத்து சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். 

பழச்சுளைகள் குப்பையில் விழுந்துகொண்டே இருந்தன.அப்போது விதுரன் வந்துவிட்டார்...!

கண்ணனுக்குத் தன் மனைவி வெறுந்தோலைத் தருவதும், அவன் உண்பதும் கண்ட விதுரர்,வியப்பில் மூழ்கினார்.

"ஐயோ! பகவானுக்குத் தோலை உண்ணத் தந்து அபசாரப்பட்டு விட்டோமே!” என்று கழிவிரக்கம் கொண்டார்.

“இறைவனே விருந்தினனாக வந்துள்ள போது, வாழைப் பழத்தோலைத் தரலாமா?

இது பகவானுக்குச் செய்யும் அவமானமல்லவா? இங்கே கொண்டுவா நான் தருகின்றேன். 

நீ சென்று சமையல் செய்!” என்று மனைவியை அனுப்பிவிட்டுத் தாமே வாழைப்பழத்தை உரித்துத் தரலானார்..! 

தோலை எறிந்து விட்டுச் சுளையைத் தந்தார் விதுரர்...!

பழச்சுளையைச் சற்றே சுவைத்த மாயபிரான், விதுரனை நோக்கி,

"நான் இவ்வளவு நேரமும் உண்ட தோலின் சுவை இந்தச் சுளையில் சிறிது கூட இல்லையே!” 

ஆதலால், தங்கள் மனைவியார் தந்ததுபோல் தோலையே தாருங்கள்!" எனக்கேட்டு அருந்தலானான்...!

வாழைப்பழத்தை விடத் தோல் சுவையாக இருக்குமா? 

கண்ணன், விதுரரிடம் விளையாட்டுக்காக அப்படிப் பேசினாரா? என்று ஐயம் நமக்கு எழலாம். 

அது சாதாரணத் தோலாக இருந்தால், சுவை இராதுதான். ஆனால், அதில் அந்த அன்னையாரின் பாசமும் பரிவும் பக்தியும் அல்லவா கலந்திருந்தன !

"தன் பக்தர்களுக்காக கண்ணன் எதை வேண்டுமானாலும் செய்வான் என்பதை விளக்குகிறது இக்கதை..!" 

*ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்!*
--------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.11.20

கோடீஸ்வரர் ஓட்டாண்டியான கதை!


கோடீஸ்வரர் ஓட்டாண்டியான கதை!

கி.பி. 1480-ல் அவர் ஒன்பது கோடிகளுக்கு அதிபதி.

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் ஒன்பது கோடி சொத்துள்ள மிகப்பெரிய பணக்காரரின் மகன்.

கடைசியில் 80 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது கி.பி. 1560-ல் அவர் ஒரு ஓட்டாண்டி.

நம்ப முடிகிறதா? கணக்குப் போட்டுப் பார்த்தால் இன்று பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியாக அவர் குலம் வாழ்ந்திருக்கும்.

ஆனால் இன்று பணமில்லை. மங்காத புகழ் இருக்கிறது. இதெல்லாம் இறைவன் திருவிளையாட்டு.

செல்வம் செல்வம் என்று செருக்குடன் வாழ்ந்த அவரைவிட்டு லட்சுமியானவள் "செல்வோம்... செல்வோம்...' என்று போய்விட்டாள்.

ஆனால் அத்தனை பணமும் போனபின்புதான் அவருக்கு ஞானம் பிறந்தது.

கையில் ஒரு காசுகூட இல்லாத நிலையில்தான் அவர் மகாலட்சுமியை அழைத்தார்.

அதுவும் எப்படி? அற்புதமான ஸ்ரீராகத்தில் அழைத்தார். சிலர் அப்பாடலை மத்யமாவதி ராகத்திலும் பாடுவர்.

அந்தப் பாடலைப் பாடும்போதே கண்களில் நீர் பெருகும்; மனம் மகிழ்ச்சியில் பொங்கிடும்; நெஞ்சில் ஆனந்தம் தாண்டவமாடும்; மெய் சிலிர்க்கும்.

"பாக்யாத லக்ஷ்மி பாரம்மா- நம்மம்ம நீ சௌ  
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா....'

மகாலட்சுமியை அவர் அழைக்கும் அழகே அழகு.

"சலங்கை கட்டிய கால்களினால் மெதுவாக அடியெடுத்து வைத்து, அந்த இனிமையான சலங்கை ஒலியால், உன்னை தஞ்சமடைந்து பூஜை செய்யும் பக்தர்களுக்கு தயிரிலிருந்து வரும் நறுமணமான வெண்ணெயைப்போல் வருவாய் தாயே' என்று கெஞ்சுகிறார் அந்த மகான்.

அவருடைய இயற்பெயர் #ஸ்ரீனிவாச_நாயக்.

அவர் வசித்த ஊரின் நாட்டாண்மையாகத் திகழ்ந்தார் அவர். மக்கள் அவரை செல்வத்தின் பொருட்டு #நவகோடி_நாராயணசெட்டி என்றும் அழைத்தார்கள்.

அவ்வளவு பெரிய தனவந்தரான அவர் ஒரு கருமி. எச்சில் கையால்கூட காக்கையை விரட்டமாட்டார் என்பது அவருடைய விஷயத்தில் நிஜம்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு பதினெட்டு வயதாகும்போது திருமணம் நடந்தது. #மனைவியின்_பெயர்_சரஸ்வதி.

அவள் இவருக்கு நேர் எதிரானவள். தான- தர்மம் என்றால் கொள்ளைப் பிரியம். கடவுள் பக்தி மிகுந்தவள்.

அவர் வாழ்ந்த ஊரில் பகவான் #ஸ்ரீகிருஷ்ணன் #பாண்டுரங்கனாகக் காட்சியளித்தான்.

பெரிய கோவில். மக்கள் "பாண்டுரங்கா... பாண்டுரங்கா' என்று பக்திப் பரவசத்தில் நாள்தோறும், வீதி தோறும் பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டே போவார்கள்.

ஆனால் ஸ்ரீனிவாச நாயக் கண்டுகொள்ளவே மாட்டார்.

பார்த்தான் பாண்டுரங்கன். ஒரு முதிய ஏழை அந்தணன் உருவில், ஏழு வயதுச் சிறுவனோடு, ஸ்ரீனிவாச நாயக்கின் கடைமுன் வந்து நின்றான் இறைவன்.

""ஐயா... தர்மப் பிரபுவே...''

ஸ்ரீனிவாச நாயக் அந்தப் பிராமணனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விடுவானா இறைவன்?

""ஐயா... தர்மப் பிரபுவே... சுவாமி...''

""டேய்! யாருடா நீ?'' அதட்டினார் ஸ்ரீனிவாசன்.

""ஐயா... நான் ஓர் ஏழைப் பிராமணன். இவன் என்னுடைய ஒரே மகன். ஏழு வயதாகிறது. உபநயனம் செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்தால் இவனுக்கு பூணூல் போடலாம்.... பிரபு... ஏதாவது கொஞ்சம் பணம் கொடுங்கள்.... சாமி...''

""போ... போ... வேறு எங்காவது போய் பிச்சை எடு. என்னிடம் பணமே இல்லை...'' விரட்டினார் ஸ்ரீனிவாச நாயக். எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் நாயக்கின் மனம் இளகவில்லை. ஆனால் பகவான் அவரை விடுவதாயில்லை.

தினந்தோறும் வந்து, நமக்கு படியளப் பவனே அவரிடம் பிச்சை கேட்டான். நாயக்கும் அலுக்காமல் விரட்டினார்.

ஒருநாள், ""உங்களிடம் யாசகம் வாங் காமல் போகமாட்டேன் பிரபு...'' என்று சொல்லி, இறைவன் நாயக்கின் கடை வாசலிலேயே உட்கார்ந்து விட்டான்.

"இது ஏதடா வம்பாப் போச்சே...' என்று அலுத்துக்கொண்ட ஸ்ரீனிவாச நாயக், கல்லாப் பெட்டியிலிருந்து ஒரு செல்லாக் காசை எடுத்து அந்தணன் மேல் தூக்கி எறிந்தார். ""இந்தா, இதை எடுத்துப் போ. இனிமேல் கடைப்பக்கம் வராதே...''

அந்தக் காசைப் பார்த்துவிட்டு, ""பிரபு... இது தேய்ந்து போயிருக்கிறதே... எதற்கும் பிரயோஜனமில்லை. வேறு நல்ல காசு கொடுங்களேன்...'' என்றான் இறைவன்.

ஸ்ரீனிவாச நாயக் யோசித்தார்.

""நல்ல காசா? ஏதாவது பொருள் கொண்டு வந்து என் கடையில் அடமானம் வை... நல்ல காசு தருகிறேன்'' என்றார்.

அந்தணன் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு நேராக ஸ்ரீனிவாச நாயக்கின் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே- வெள்ளிக் கிழமையாதலால் துளசி பூஜையை முடித்துவிட்டு ஸ்ரீனிவாச நாயக்கின் மனைவி சரஸ்வதி ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள்.

""பவதி... பிக்ஷாம் தேஹி...''

ஓடோடிச் சென்று வாசலில் பார்த்தாள். பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட்டாள்.

""என்ன வேண்டும் சுவாமி?''

""அம்மா... நான் ஓர் ஏழை. வயதாகி விட்டது. இவன் என் பையன். இவனுக்கு பூணூல் போட வேண்டும். கையில் பணமில்லை.

ஒரு கஞ்சனைக் கேட்டேன். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் சல்லிக்காசுகூட தரமாட்டேன் என்று என்னை அடிக்காத குறையாகத் துரத்திவிட்டான். அம்மா...

உன்னைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாய். ஏதாவது உபகாரம் பண்ணம்மா...''

"பணம் நம்மிடம் கிடையாது. அப்படியே இருந்து, தர்மம் செய்தேன் என்று தெரிந்தால் புருஷன் அடித்தே கொன்றுவிடுவான். இவருக்கு நாம் எப்படி உதவுவது?' என்று யோசித்த சரஸ்வதி முடிவில் தன்னுடைய பரிதாபமான நிலையை விளக்கினாள்.

""அட... நீ என்னம்மா... புருஷன் உனக்குக் கொடுத்ததை தர்மம் செய்தால்தானே ஆபத்து? திருமணத்தின்போது உன் பெற்றோர் போட்ட நகைகள் உன்னுடையதுதானே?

அதைக் கொடுத்தால் அவர் என்ன செய்ய முடியும்?'' என்று அவளை உசுப்பேற்றினான் பிராமணன்.

"அட... உண்மைதானே? நம் வீட்டில் ஏராளமான நகைகளைப் போட்டார்களே எனக்கு? அவை அத்தனையும் என்னுடையவை தானே... அதில் ஒன்றை தர்மம் செய்தால் என்ன?'

சட்டென்று தன்னுடைய வைர மூக்குத்தியைக் கழட்டி அந்த பிராமணனிடம் கொடுத்து விட்டாள் சரஸ்வதி.

அவளை மனதார வாழ்த்தி விட்டு, அந்தச் சிறுவனுடன் நேரே ஸ்ரீனிவாச நாயக்கின் அடகுக் கடைக்கே வந்தான் அந்த பிராமணன்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கோ, மறுபடியும் தொந்தரவு ஆரம்பித்து விட்டதோ என்று தோன்றியது.

""இந்தாரும். இந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு ஏதாவது பணம் கொடும்'' என்று மிரட்டினான் பிராமணன்.

கையில் மூக்குத்தியை வாங்கி பரீட்சித்துப் பார்த்து, "இதை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே..' என்று யோசித்தார் நாயக்.

சிறிது நேரம் கழித்து, ""ஓய் பிராமணரே... இந்த மூக்குத்தி இங்கேயே இருக்கட்டும். இப்போது என்னிடம் காசு இல்லை. நாளை வந்து பணம் வாங்கிக்கொள்...'' என்றார்.

அதை ஒப்புக்கொண்ட அந்தணன் போய்விட்டான்.

உடனே ஸ்ரீனிவாச நாயக் தன் கடையைப் பூட்டிவிட்டு நேரே வீட்டிற்குப் போனார்.

மனைவியைப் பார்த்தபோது அவள் முகத்தில் மூக்குத்தியைக் காணவில்லை.

""சரஸ்வதி... மூக்குத்தி எங்கே? இன்று வெள்ளிக்கிழமை. முகம் மூளியாய் இருக்கலாமா? போய் மூக்குத்தி போட்டுக் கொண்டுவா...''

சரஸ்வதி வெலவெலத்துப் போனாள். "ஐயய்யோ... இப்போது என்ன செய்வது? அந்தப் பிராமணனுக்கு தானம் கொடுத்தேன் என்றால் கொன்று விடுவாரே?'

கடைசியில் சரஸ்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். "இந்தத் துஷ்டனிடம் மூர்க்கத்தனமாக அடிபடு வதைவிட சாவதேமேல்...' என்ற முடிவோடு, ஒரு பாத்திரத்தில் விஷத்தைக் கலந்து கையில் வைத்துக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்தாள்.

""தாயே துளசி... நான் உன்னிடம் வந்து விடுகிறேனம்மா'' என்று சொல்லி விஷத்தைக் குடிக்க முற்படுகையில்-

விஷப் பாத்திரத்தில் ஏதோ விழும் ஓசை கேட்டது. சரஸ்வதி உள்ளே கைவிட்டுப் பார்த்த போது அவளின் மூக்குத்தி இருந்தது. அவளை ஆனந்தமும், வியப்பும் அணைத்துக் கொண்டது. "என்னைக் காப்பாற்றிவிட்டாய் தாயே' என்று கண்களில் நீர் பெருக விழுந்து கும்பிட்டாள்... பிறகு, கணவனிடம் ஓடோடிச் சென்று, ""இந்தாருங்கள் மூக்குத்தி...'' என்று கொடுத்தாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு ஒன்றும் புரியவில்லை. மூக்குத்தியை எடுத்துக்கொண்டு பித்துப் பிடித்தவர்போல மீண்டும் தனது அடகுக் கடைக் குச் சென்றார். கல்லாப் பெட்டியைத் திறந்து, உள்ளே பத்திரமாக வைத்திருந்த மூக்குத்தியைத் தேடினார்.

அங்கே அது இல்லை. கடை முழுவதும் தேடினார். மூக்குத்தி கிடைக்கவில்லை. நாளை அந்த பிராமணன் வந்து, "எனக்கு பணம் வேண்டாம்... என்னுடைய நகையைக் கொடுங் கள்...' என்று கேட்டால் என்ன செய்வது?

மனைவியினுடைய மூக்குத்தியையா அவனுக்குக் கொடுப்பது? பிரமை பிடித்தது அவனுக்கு. கூடவே பயமும் வந்தது.

மறுநாள் காலை!

கடை திறந்த சில வினாடிகளிலேயே அந்தக் கிழவன் சிறுவனோடு வந்து விட்டான்.

""ஐயா... பிரபுவே.. நான் கொடுத்த நகைக்கு பணம் தருவதாகச் சொன்னீர்களே. இன்றும் பணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. என்னுடைய நகையைக் கொடுங்கள். வேறு கடையில் அடமானம் வைத்துக் கொள்கிறேன்...'' என்றான்.

ஸ்ரீனிவாச நாயக்கின் நிலை பரிதாபமானது. செருக்குடன் வாழ்ந்தவர் கிழவனிடம் கெஞ்சி னார்.

""ஐயா... மன்னித்து விடுங்கள். வெளியிலிருந்து கொஞ்சம் பணம் வரவேண்டியிருக்கிறது. வந்தவுடன் தருகிறேன். முடிந்தால் மாலை வாருங்களேன். கண்டிப்பாக பணம் தருகிறேன்.''

""சரி... சரி... சாயங்காலமும் என்னை ஏமாற்றி விடாதே. நான் வருவேன்...''

கிழவன் போனபின்பு, தன் கடையில் பணிபுரியும் ஒரு வேலையாளை அனுப்பி, அந்தக் கிழவன் எங்கே போகிறான் என்று கண்காணிக்கச் சொன்னார்.

அந்தக் கிழவனைப் பின்தொடர்ந்து சென்ற வேலையாள் சிறிது நேரம் கழித்து பதை பதைப்புடன் கடைக்கு ஓடி வந்தான்.

""என்னடா... ஏன் இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி ஓடி வருகிறாய்? கிழவன் உன்னை அடையாளம் தெரிந்துகொண்டு மிரட்டினானா?''

""சுவாமி... என்னை மன்னித்துவிடுங்கள்... கிழவர் இரண்டு மூன்று தெருக்கள் தாண்டி, பாண்டுரங்கன் கோவிலுக்குச் சென்றார்....

நேரே கர்ப்பக் கிரகத்துக்குள் புகுந்தார்... பின்னர் மறைந்து விட்டார்...''

ஸ்ரீனிவாச நாயக் திடுக்கிட்டார். என்ன இது? கடைக்கு வந்த முதியவர் யார்? என்ன அதிசயம் இது.!

கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவளும் மூக்குத்தியை அந்தக் கிழவருக்கு தானம் தந்ததையும், அவர் வாழ்த்தி விட்டுப் போனதையும் சொன்னாள்.

ஸ்ரீனிவாச நாயக்கிற்கு புரிந்துவிட்டது. கடவுளே தன்னை பரீட்சித்து விட்டதை உணர்ந்தார்.

அப்போது ஓர் அசரீரி பூஜை அறையிலிருந்து கேட்டது.

"இத்தனை செல்வங்களை வைத்துக்கொண்டு தான தருமம் செய்யாமல் வாழ்கிறாயே? உனக்கு எப்படி நற்கதி கிடைக்கும்?

போ... உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு புண்ணியம் தேடிக் கொள்.

இனி உன் பெயர் ஸ்ரீனிவாச நாயக் இல்லை. இந்த ஊரின் பெயரான புரந்தரகட என்கிற பெயரால் இனி உன் பெயர் புரந்தரதாசன்.

பகவானைப் பாடு. நீ நாரதருடைய அம்சம். ஸ்ரீ கிருஷ்ண தேவராயருடைய குல குருவான ஸ்ரீ வியாசராயரை தஞ்சமடைவாயாக. அவர் உனக்கு குரு உபதேசம் செய்வார்....'

புரந்தரதாசன்ஸ்ரீ னிவாச நாயக் தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்தார்.

ஒரு நொடியில் ஒன்பது கோடி ரூபாய் போயிற்று. ஓட்டாண்டியானார்.

தன் மனைவி, மக்களோடு இறைவன் நாமங்களைப் பாடியவாறே ஹம்பி சென்று ஸ்ரீ வியாசராயரை சரணடைந்தார்.

அவர் ஸ்ரீநிவாச நாயக்கின் பிறப் பின் ரகசியத்தைச் சொல்லி அவருக்கு குரு உபதேசம் செய்தார்.

கால்நடையாகவே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்தார் புரந்தரதாசர்.

சுமார் நான்கு லட்சம் பாடல்களை இறைவன்மீது பாடினார்.

நம்முடைய திருவையாறு சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு, சிறுவயதில் அவருடைய அன்னை புரந்தரதாசரின் பதங்களையே சொல்லி க்கொடுத்தார்.

ஸ்வர வரிசை என்று சொல்லப்படுகிற "ஸ, ரி, க, ம, ப, த, நீ..' என்கிற ஆரோகண அவரோகணங்களை சங்கீத உலகிற்கு  தந்த பிதாமகர் #புரந்தரதாசரே.

அவருடைய பதங்கள் இன்றும் நம் நாட்டுக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.

அப்படிப்பட்ட #மகான் புரந்தரதாசர் கி.பி. 1584-ல் இறைவனோடு இரண்டறக்கலந்தார்.
=-------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.8.20

ஆடிப் பெருக்கும் அன்பர் வந்தியத்தேவனும்!!!!


ஆடிப் பெருக்கும் அன்பர் வந்தியத்தேவனும்!!!!

29.10.1950 அன்று வெளியான கல்கி வார இதழில் ஒரு புதிய தொடர்கதை ஆரம்பமானது. பெரிய அளவில் எந்த விதமான முன் அறிவிப்போ,மிகைப்படுத்தலோ இல்லாமல் இராஜராஜரின் இளவயதில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு தொடர்கதை என்று மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது.

பொன்னியின் செல்வனின் பயணம் இவ்வாறு எளிமையாகவே தொடங்கியது.

மூன்று ஆண்டுகள் கல்கி வார இதழில் கதை தொடராக வந்தது,அதன் பின்னர் பலமுறை கல்கி வார இதழில் தொடராகவும்,முழுப்புத்தகமும் வெளிவந்தது.

இந்த கதையின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும்  இருக்கும் என்பதை கல்கியே எதிர்பார்த்து இருக்கமாட்டார்.

கதையின் தலைப்பு அருள்மொழிவர்மரை குறிப்பிட்டாலும்,நிஜத்தில் நாயகன் வந்தியத்தேவன் தான்.

யார் இந்த வந்தியத்தேவன்? எந்த அரச பரம்பரையில் வந்தவர்?
வாணர் குலம்,கீழைச்சாளுக்கியம்,வேங்கி,இராஷ்டிரகூடம் என பல்வேறு (குழப்பத்தோடு கூடிய) கருத்துக்கள் உள்ளது. ஏதாவது போரில் ஈடுபட்டரா? சோழர் படை பிரிவில் தளபதியா அல்லது சோழர் துணையோடு  எதாவது ஒரு  நிலப்பரப்பை ஆட்சி செய்தாரா? இதற்கான பதில் இன்னும் ஆதாரத்தோடு தெரியவில்லை. ஆனாலும் 1950 ல்ஆரம்பித்த வந்தியத்தேவனின்  பயணம் இன்னும் உற்சாகம் குறையாமல் தொடர்கிறது.

நட்பு,காதல்,குறும்புத்தனம்,சமயோஜித புத்தி என  பல்வேறு குணங்களால் பலபேரின் (குறிப்பாக பெண்கள்) ஆதர்ச நாயகனாக இன்றும் வலம் வருவதற்கு காரணம் கல்கியின் மந்திர எழுத்துக்கள்.

குந்தவையின் காதல் கணவனாக நாம் அறிந்த வந்தியத்தேவனுக்கு நிஜத்தில் ஐந்து மனைவிகள் என்று குழுவில் ஒரு முறை கல்வெட்டு புகைப்படத்தோடு பதிவிட்ட போது, இல்லை நீங்கள் சொல்வது பொய்,வந்தியத்தேவன் அப்படிபட்டவர் இல்லை என பொங்கியவர்கள் ஏராளம்.கல்கியின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி அது.

 வந்தியத்தேவன் ஆடி பெருக்கு அன்று வீரநாராயண ஏரிக்கரையில் இருந்து மீண்டும் ஒரு முறை தனது சோழ தேசத்து பயணத்தை தொடங்குகிறார்.அன்போடு வரவேற்போம் நமது வந்தியத்தேவனை!!!!!!

(ஆண்டவர் கனி முகநூல் பதிவு) நன்றி
--------------------------------------------
படிதத்தில் பிடித்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.20

நீதிக் கதை: நாம் எப்படியிருக்க வேண்டும்?


நீதிக் கதை: நாம் எப்படியிருக்க வேண்டும்?

ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது! சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள்! காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்!

அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உ௩்களை அறிமுகப்படுத்தி க்கொள்ளு௩்கள் என்றாள்! உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன்! ஒருவர் சூரியன்! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்!

சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்த பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று செல்வம், இரண்டு இளமை! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்!

சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்! ஒன்று பூமி! எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தா௩்கும்! மற்றொன்று மரம்! யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!

சற்று கோபமடைந்த காளிதாசர் நான் ஒரு பிடிவாதக்காரன் என்றார்! அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்! ஒன்று முடி! மற்றொன்று நகம்! இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!

தாகம் அதிகரிக்கவே நான் ஒரு முட்டாள் என்று தன்னை கூறிக்கொண்டார்! உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்! ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன்! மற்றவன் அவனுக்கு துதிபாடும் அமைச்சன்! என்றாள்!

காளிதாசர் செய்வதறியாது, அந்த பெண்ணின் காலில் விழுந்தார்! உடனே அந்த பெண் மகனே எழுந்திரு என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்! சாட்சாத் சரஸ்வதி தேவியே அவர் முன் நின்றாள்! காளிதாசர் கைகூப்பி வண௩்கியதும், தேவி தாசரைப்பார்த்து காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்! நீ மனிதனாகவே இரு என்று தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்!

           இதுபோலத்தான் குழந்தைகள் எதிர் காலத்தில் பணம் சம்பாதிக்கவும், வசதியாக வாழவும் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கிறார்களே தவிர, மனிதனாக, தாய், தந்தை, மனைவி, மக்கள், உற்றார் உறவினருக்கு, நம் தாய் நாட்டிற்கு, நமக்கு உணவு தரும் பூமிக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுத்தரவேண்டும்! பெற்றோரை தாய்நாட்டை , உறவுகளை பிரிந்து, ஏசி அறையே உலகம், தொலைபேசியே உறவு, பணம் சம்பாதிப்பதே வாழ்க்கை யென வாழ்க்கையை இயந்திரமயமாக்கி மனித நேயமில்லா வாழ்க்கை வாழக் கூடாது!

அதனால்தான் ஒருமா௩்கனிக்காக பெற்றோரை விட்டு பிரிந்த முருகனை ஈசனும், பார்வதியும் பிள்ளையாரும் சேர்ந்து அழைத்து வந்து அவர் செய்ய வேண்டிய கடமையை உணர்த்கியதாக புராணங்கள் கூறுகின்றன!

நீ நீயாகவே (மனிதனாகவே ) இரு! 
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.6.20

காந்தாரியும் கிருஷ்ண பரமாத்வாவும்!!!!!


காந்தாரியும் கிருஷ்ண பரமாத்வாவும்!!!!!

interesting read.....somewhat long post.....very powerful and enlightening.....

பொறுமையாக படிக்கவும்...மிகுந்த ஞானம் தோன்றும்.

காந்தாரியின் கனவு

“நீ கபட நாடக வேஷதாரி என மீண்டும் ஒருமுறை நிரூபித்தாய் கண்ணா!  நீ
 பரசுராமனாகப் பிறந்து குடித்த க்ஷத்திரிய இரத்தம் போதவில்லையா?
நீயே உலகின் முழு முதல்வன் எனினும் இப்போரைத் தடுக்கவில்லையே? மாறாக அதைத் திறம்பட நடத்தி என் மக்களை மட்டும் அழித்தாயே? உனக்கு இது தகுமா?

 ஒரு பிள்ளையைப் பெற்றவளே அதை இழந்தால் வரும் சோகம் சொல்லில் அடங்காது. உன் அன்னைக்கும் அது நன்றாகவே தெரியுமல்லவா? நீ பிறக்கும் முன்னமேயே ஆறுபேரைக் கொன்றுவிட்டுப் பிறந்தவனாயிற்றே! உனக்கு எங்கே ஒரு அன்னையின் வலி தெரியப் போகிறது.

இப்போது நான் உனக்குச் சாபமிடுகிறேன்! எப்படி என் சந்ததிகள் என் கண் முன்னே அழியும் கொடுமையை நான் கண்டு நொந்தேனோ அதே போல் நீயும் உன் வருஷ்ணி குலமும் சர்வ நாசம் அடையப்போகிறீர்கள்!

உன் கண் முன்னேயே யாதவர் இரத்தம் அருவி போல் வழிந்தோடப் போகிறது!  இன்றிலிருந்து 36ம் வருடம் அது நடக்கும்! இது என் பதிவ்ரதா சக்தியின் மேல் ஆணை!”

என்று மகாசபையில், அவையோர் அனைவரும் கல்லாய்ச் சமைந்து, நா வறண்டு, பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போகும் வண்ணம் கிருஷ்ணனைச் சபித்த பின்பு காந்தாரி தன் அந்தப்புரத்துக்குத் திரும்புகிறாள்.

லோகநாயகன், ஜகத்ரக்ஷகன், புருஷோத்தமன் என தானே தன் மனக்கோயிலில் அனுதினமும் வழிபட்ட பெரும்தெய்வத்துக்குத் தானே சாபம் கொடுத்தேனே என்று ஒரு பக்கம் வேதனைப்பட்டாள்.

 எனினும், அவள் கோபம்  அவளுக்கு நியாயமாகவே தோன்றிற்று. கொடும் போர் முடிந்து சிறிது அமைதி திரும்பியபின், இப்போதுதான் சில்லென காற்று வரத் தொடங்கியுள்ளது போலும் என நினைத்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

திடீரென எதோ சப்தம் கேட்க, தெய்வீக நறுமணம் அறையில் பரவ கண் விழித்தாள்.

 கிருஷ்ணன் கையில் குழல், துளசி மாலை மற்றும் பீதக வாடையுடன் முகத்தில் எப்போதும் இருக்கும் மந்தகாசப் புன்னகையோடு அருகில் நின்றிருந்தான். 

ஒரு நொடியில் கௌரவர் நூற்றுவர் முகங்களும் அவள் மனக்கண்ணில் மின்னலென வந்து போயின. கோபம் மீண்டும் கொப்பளிக்க

“எங்கே வந்தாய்? இன்னும் யார் உயிர் வேண்டும் உனக்கு? வாய்க்கு வாய் நான் உன் பக்தை எனச் சொல்வாயே? இது தான் உன் பக்தரக்ஷண லக்ஷணமா?”

“காந்தாரி இன்னும் கோபம் தீரவில்லையோ?”

“என் நூறு புதல்வர்கள், கோடி வீரர்கள், பல கோடி குதிரை, யானை என இவ்வளவு பேரழிவு தேவையா கிருஷ்ணா? நீயே இதைத் தடுத்திருக்கலாமே? உன்னால் முடியாததா என்ன?

“என் முடியாது? தடுத்திருக்க முடியும். அல்லது அனைத்தையும் என் ஸங்கல்பத்தாலேயே நினைத்த மாத்திரத்தில் அழித்திருக்க முடியும்”

“பிறகு ஏன் செய்யவில்லை?

“காந்தாரி! நீ என் பரம பக்தை. அதோடு சிறந்த பதிவ்ரதையும் கூட. அதனால் உனக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். கேள்!

 இந்த யுகம் பாரதப்போரோடு முடிகிறது. ஸம்பவாமி யுகே யுகே என்பது படி, புது யுகம் பிறக்க, பழையது அழிய வேண்டும். பாசம் எனும் கருமேகம் உன்னை மட்டுமல்ல உன் கணவனின் கண்களையும் மறைத்தது.

அந்த மாயத்திரை இன்னும் விலகவில்லை. அந்தகம் நிறைந்த இந்த மாளிகையில் ஒரே ஒரு அகல் விளக்கு விதுரன் மட்டுமே. அவன் மட்டுமே என்னை பூரணமாக அறிவான்”

“கிருஷ்ணா! உன்னை நான் இன்று அறிந்து கொண்டேன். நீயும், விதுரனும்  பக்ஷபாதம் கொண்டவர்கள்”

“காந்தாரி! என் பக்தனை நிந்தித்தால் வரும் பாவம் என்னை நிந்திப்பதினும் கொடியது. அதனால் தான் இன்று உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டேன். உன்னுடைய இந்த கேள்விக்கு நான் விடைகூறுமுன்  நீ பதில் சொல்.

முதலில் ஏன் நீ உன் கணவனைச் சபிக்கவில்லை? சக்கரவர்த்தி நினைத்திருந்தால், இந்தப் போரே நிகழ்ந்திருக்காது.

 பாண்டவர்கள் நியாயமாகக் கேட்ட ஆட்சியை ஏன் அவர் கொடுக்க விரும்பவில்லை? ஆரம்பத்திலிருந்து துரியோதனை பாபியாக வளரவிட்டதே அவரது கண்மூடித்தனமான பிள்ளைப்பாசம் அல்லவா?
நீ பதிவ்ரதை என்பது உன் கணவனுக்கு! ராஜமாதாவாக இந்த நாட்டு மக்களின் நலனை நீ ஒரு கணம் எண்ணிப்பார்த்திருப்பாயா?

பிறகு, பீஷ்ம, கிருப, துரோணாதிகளை ஏன் நீ சபிக்கவில்லை? தன் சஹோதரர்களின்  தர்ம பத்தினியையே பல்லாயிரம் பேர் முன்னிலையில் துரியோதனனும், துச்சாதனனும் மானபங்கப்படுத்திய பின்பும் மௌனம் சாதித்தனரே?

 மேலும், விபீஷணன் போல விதுரன் மட்டுமல்லவா மனசாட்சிக்குப் பயந்தான்? மற்றோர் எல்லாரும் செஞ்சோற்றுக்கடன் என்ற போர்வையில் துரியனுக்காக போரும் புரிந்தனரே? பெரியவர்களைச் சபிக்க முடியாது என்ற எண்ணமோ?

உன் மகன்?  தன் சகோதர்களையே  அடிமைகளாக்கி, அவமானப்படுத்தி அவர்களின் மனைவியையே “மடியில் வந்து அமர்வாய்” என விளித்து மாபாதகம் செய்தானே?

மேலும்,  “ஜ்யேஷ்ட ப்ராதா பித்ரு சமான:” என்று உனக்குத் தெரியாதா? தன் 99 சகோதரர்களுக்குத் தந்தையாக இருக்க வேண்டியவன் தன் சுயநலத்திற்காக அவர்களைப் பலி கொடுத்தானே? அவனை ஏன் சபிக்கவில்லை?

 பிள்ளைப்பாசம் அறிவுக்கண்ணை மறைத்ததோ? நீ இப்போது கேட்கும் நியாயம் அன்று எங்கே போனது? அவனைக் கேட்டாயா?
ஏன் சகுனியை சபிக்கவில்லை? அவன்தான் உண்மையில் உடன்பிறந்தவள் குடும்பத்தை கூற்றின் மறுஉருவம் போல் சர்வ நாசமாக்கியவன்.

“கிருஷ்ணா! சகுனி என் சகோதரன். மேலும், நீ மேற்கூறிய அனைவரும் என் உற்றார் உறவினர் ஆச்சாரியர்கள் அல்லவா?

“பார்த்தாயா காந்தாரி! அறியாமை உன் புத்தியை மட்டுமல்ல பக்தியையும் மறைக்கிறது. அப்போது நான் யார்? உனக்கு   சொந்தமில்லையா?  பாண்டவர் என்னை சொந்தமெனக் கொண்டனர். அதனால் பிழைத்தனர்.

“கபடனே! குந்தி உன் சொந்த அத்தை. அதனால் தான் ஒருதலை நீதியாக பாண்டவர் பக்கம் நின்று என் குலத்தை வேரோடு சாய்த்துவிட்டாய்”

“பேதையே! அதுவல்ல நிஜம். உலகில் நல்லோரெல்லாம் என் சொந்தம். நான் அவர்களுக்குப் பூரணமாய் சொந்தம். அவர் மனமே நான் நித்யவாசம் செய்யும் வீடு.

“சரி அதைவிடு காந்தாரி! பாண்டவர் அழிந்து துரியோதனன் பட்டம் கொண்டிருந்தால் உனக்கு மகிழ்ச்சி தானே ஏற்பட்டிருக்கும்? அது சுயநலம் அல்லவா? அதற்கு என்ன செய்தால் தகுமோ அதை துரியோதனாதிகளைச் செய்ய விட்டாயே?

“கிருஷ்ணா! ஒரு தாய் தன் மக்கள் நன்றாய் இருக்க வேண்டும் என நினைப்பது தவறா?”

“அப்படியானால் நான் இந்த உலகுக்கெல்லாம் தாயன்றோ! எனக்கும் சுயநலம் இருக்கக் கூடாதா? உலகம் முழுமையும் என் சொத்து. அதை நல்விதம் ஆத்தலும், காத்தலும் என் பொறுப்பு. அதையே செய்தேன்”.

என் அவதார நோக்கை நிறைவேற்ற இந்தப்போர் ஒரு சாக்கே. ஆனால் ஏன் அதை தனி ஒருவனாக நான் செய்யவில்லை? ஏன்  என எண்ணிப்பார்.
“என் 100 பிள்ளைகளையும் கொன்றுவிட்டாயே? இனி நான் எண்ணிப்பார்க்க என்ன இருக்கிறது?

“அப்படியில்லை. நான் கர்மேந்த்ரியங்களுக்கு அப்பாற்பட்டவன் எனினும், சில விதிமுறைகளை நான் பின்பற்றுகிறேன்.

கர்மா – அவரவர் முன்வினைப் பயன்கள் பகுத்தறிவு – நல்லவை, தீயவைகளை அறிந்து கொள்ளும் திறன்.இயற்கையின் கட்டுப்பாட்டிலுள்ள  இவ்விரண்டிலும் நான் தலையிடுவதில்லை”

மேலும், இராமனாக ஏன் காடுகளில் திரிந்து வானரர் உதவியோடு இராவணனை அழிக்க நான் சிரமப்பட்டிருக்க வேண்டுமென எண்ணிப்பார். நான் உயர்வற உயர் நலம் உடையவன். அதை யாருக்கும் விளம்பரப்படுத்த அவசியமில்லாதவன். ஆனால் என் பக்தர்கள்? பக்தர்களுக்கு ஏற்றம் அளித்தல் என் கடமை.

போரில்லாவிட்டால் அபிமன்யு எனும் வீரன் சரித்திரத்தில் எவ்வாறு இடம் பெற்றிருப்பான்? கர்ணனின் கொடைத்திறனும், செஞ்சோற்றுக்கடன் தீர்த்த தீரமும் எப்படி விளங்கியிருக்கும்? பீஷ்மனின் வைராக்யம் எப்படி மற்றவர்க்கு ஒரு உதாரணமாக அமைந்திருக்கும்?

மறுபுறம், அஸ்வத்தாமன், ஜயத்ரதன், அவ்வளவு ஏன்? உன் சகோதரன் போன்ற கீழ்மக்களிடம் இருந்து பிறருக்குப் பாடம் புகட்டவேண்டியது என் கடமையல்லவா?

“எனினும், எங்கள் பக்கம் நீ இருக்கவில்லையே கண்ணா?”

“அதற்கும் ஒரு வாய்ப்பு வந்ததே காந்தாரி. உன் மகன் தான் நிராயுதபாணியான நான் வேண்டாம் என்று என் சேனைகளை எடுத்துக்கொண்டான். மேலும் விதுரனின் வடிவில், அவன்  திருவாக்கில் நான் உங்கள் கூடவே இருந்தேனே? நல்லோர் உருவில் என்றும் நான் இருப்பேன். என்னை அறிய நீங்கள் முயலவில்லை. உன் கனவில் இன்று நான் வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு கணம் நினைப்பவர்க்கே ஓடி வருபவன் நான். நீ என் பக்தை.

“கிருஷ்ணா! உன்னையே சபித்த என்மேல் இவ்வளவு உனக்கு அன்பும் கருணையுமா உள்ளன?”

“காந்தாரி! உன் சாபத்தை நான் ஏற்றுக்கொண்டு உன்னை பெரும் பாவத்திலிருந்து காத்தருளினேன்”

“பெரும் பாவமா? அது என்ன கிருஷ்ணா?”

“ஒருவேளை நீ பாண்டவர் யாரையாவது சபித்திருந்தால், பாகவத அபசாரம் எனும் படுகுழியில் வீழ்ந்திருப்பாய். என்னை நிந்தித்தலிலும் அது மிக மிகக்கொடுமையான பாவம்”.

“கிருஷ்ணா! ஜனார்தனா! என் அறிவுக்கண்களைத் திறந்தாய். ஆனால் என் சக்திக்கு ஏற்ற உன்னைச் சரணடையும் ஒரு உபாயம் சொல்வாயா?”

“கலங்காதே! பதினெட்டு அத்தியாயங்களாய் அர்ச்சுனனுக்கு உரைத்ததை ஈரடியில் உனக்குச் சொல்கிறேன்.

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோக்க்ஷேமம் வஹாம் யஹம் ||

“நீயென்றால் அது நானே. உனக்குள் இருந்து உன்னைப் பேசவைத்தேன். கர்மாவுக்கு பேதம் இல்லை. நான் உட்பட. உன் சாபம் பலிக்கும். என் பழைய பகைவன் வாலியே என்னை அழிக்க வேடனாக வந்து வஞ்சம் தீர்ககப்போகிறான். நான் அழிவற்றவன். அவதாரம் மறையலாம். ஆனால்,
பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

என்ற என் வாக்கிற்கேற்ப நான் என் எண்ணப்படி மீண்டும் மீண்டும் பிறப்பேன்”

“கிருஷ்ணா! அறிவுச்சுடர் ஏற்றியவனே! போதும் இந்த வாழ்வு! இனி நான் என் கணவருடன் அனைத்தையும் துறந்து வடக்கிருந்து உன் நிழல் தேடி வந்து சேர்வேன்”.

இவ்வாறு கூறியதும் சட்டென்று நினைவு வந்தவளாய், எழுந்து அமர்ந்தாள். கனவு என்றாலும், அதன் உட்பொருளை உணர்ந்து அவள் மனம் தெளிந்தது. திருதராஷ்ட்ரனைக் கண்டு உடனே கானகம் ஏக முடிவு செய்து மெல்ல அவன் அறை நோக்கி நடந்தாள்.

கரிய உருவம் ஒன்று பின்னால் சிரித்தபடி நின்றது.......

- Author unknown......
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.5.20

ஐந்து கணவனை கொண்டவள் எப்படி வாழ்ந்தாள்


ஐந்து கணவனை கொண்டவள் எப்படி வாழ்ந்தாள்
உரையாற்றுபவர் வாசுகி மனோகரன்
அவசியம் கேளுங்கள்



அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.4.20

நெல்லிமரத்தின் சிறப்பு!

நெல்லிமரத்தின் சிறப்பு!

நெல்லி மரத்துக்கும் செல்வத்துக்கும் என்ன சம்மந்தம்....?

உலத்திலேயே பணக்கார கடவுள் யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனால் பணம் வேண்டுமென்றால் குபேரனைத்தான் வழிபடுவோம். குபேரன் மாதிரி பணக்காரணாக வேண்டும் என்னும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்.ஆனால் அந்த குபேரனுக்கே பணத்தட்டுப்பாடு வந்தபோது என்ன.செய்தார் தெரியுமா?

போர் ஏற்ப்பட்ட காலத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தம்மிடமிருந்த செல்வம் அனைத்தையும் இழந்து விட்டார் குபேரன்.செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்த போது சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்.

"நெல்லி மரங்களை நட்டு வளர்த்து விட்டு அவை வளர்ந்ததும் என்னை வந்துப்பார்" என்றார் சிவபெருமான்.

செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமானின் கட்டளை என்பதால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தார்.

நெல்லி மரங்களின் பராமரிப்பிலும் குறை வைக்கவில்லை. ஏனெனில் சிவபெருமானின் ஆணை ஆயிற்றே

நாள்கள் கடந்து விட்டன.நெல்லி மரங்கள் அனைத்தும் பூ பூத்தன.காய் காய்த்து காய்களெல்லாம் இனித்தன.

குபேரனின் வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பிற்று.சூழ்ச்சி செய்து செல்வம் பறித்த வளங்கள் எல்லாம் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகள் எல்லாம் திரும்ப கிடைத்தன. குபேரனைவிட பெரிய அரசரெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்டத் தொடங்கினார்கள்.

குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக் கணைகள் எப்படி இது சாத்தியம். மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்.

"நெல்லி மரங்கள் வளர்ந்ததா?இழந்த செல்வம் கிடைத்ததா"? என்றார் சிவபெருமான்.

"நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த காரியத்தைப் புரிந்துக் கொள்ள முடியவில்லையே" என்றார் குபேரர்.

"நீ வைத்தவை நெல்லி மரங்கள் அல்ல லட்சுமிதேவி. உரிய முறையில் அவற்றுக்கு நீர் ஊற்றினாய். அதனால் செய்த பாவங்கள் தொலைந்து லட்சுமிதேவியின் அருளைப் பெற்றாய்" என்று சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதை சொல்லலானார்

மேலும்"ஒருநாள் தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம். அதனால்தான் இதனை தெய்வீக மரம் என்று சொல்கிறார்கள்" என்றார்.

மகாலட்சுமியின் சொரூபமான நெல்லி மரத்தை வளர்த்து தினசரி நீர் ஊற்றி லட்சுமி கடாட்சத்தைப் பெற்று மகிழுங்கள்...!
----------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.4.20

சரணாகதி அடைந்த சிட்டுக்குருவி!

சரணாகதி அடைந்த சிட்டுக்குருவி! 

சரணாகதி ...இறைவா.....நீயே..... கதி!

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.

குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக்  கொண்டிருந்தனர்.

ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன்  வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.

தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “ கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.

“ நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்.

“ எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” என்றது குருவி!

*"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”*- இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்!

குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை.

போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.

அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை.

ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்.

ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார்.

யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்.

 ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது!

 மனிதன் தானே!  “நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன். ஒரு  புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத்
தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார்  ஸ்ரீ கிருஷ்ணர்!

 “பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம், “அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்!

அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை!

போர் நடந்து,  பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்.

அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்!

தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான்.

ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்!

“எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர்
சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்.

அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன.

தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள்
தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!

“ பகவானே! என்னை மன்னித்து விடு!

உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்.

அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்!

அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.

“பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதுஷ்கிருதாம், தர்ம சம் ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

*"சரணாகதி நீயேகதி"*  -- என்று சரணடைவோம் மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு 

*நம்புவோம் நிம்மதியாக வாழ்வோம்*

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.4.20

மகாபாரதத்தில் ஊரடங்கு !


மகாபாரதத்தில் ஊரடங்கு !

மஹாபாரத யுத்தத்தில் தன்னுடைய தந்தை துரோணாச்சாரியரை ஏமாற்றிக் கொன்றதில் அஸ்வத்தாமன் மிகவும் கோபமடைந்தார்.

அவர் பாண்டவ சேனை மீது மிக பயங்கரமான ஒரு ஆயுதம் "நாராயண அஸ்த்ரம்" விட்டு விட்டார்.

இதற்கு மாற்று உபாயம் எதுவுமே கிடையாது. யாருடைய கைகளில் எல்லாம் ஆயுதம் உள்ளது அல்லது யுத்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றார்களோ அவர்களைப் பார்த்து அவர்கள் மீது அக்னி மழை பொழியும். அவர்கள் அழிந்து விடுவார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணர் சேனைக்கு அவரவர் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு நிற்குமாறு கட்டளையிடுகிறார்.

மேலும் மனதில் யுத்தம் செய்வதற்கான எண்ணம் கூட வரக் கூடாது இந்த அம்பு அதையும் கண்டறிந்து அவர்களை அழித்து விடும் என்று கூறினார்.

நாராயண அஸ்த்ரம் மெதுமெதுவாக தனது நேரம் முடிந்தவுடன் அமைதி ஆகிவிட்டது.

இந்த விதமாக பாண்டவ சேனை காப்பாற்றப் பட்டனர்.

இதன் உள்கருத்தைப் புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

எல்லா இடங்களிலும் யுத்தம் வெற்றி அடைவதில்லை.

நம்முன் இருக்கும் கிருமியிடமிருந்து தப்பிக்க கொஞ்ச காலம் அனைத்து வேலையையும் விட்டு விட்டு அமைதியாக கைகளைக் கட்டிக் கொண்டு மனதில் நல்ல எண்ணம் வைத்து ஓரிடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.

கிருமியை பற்றிய எண்ணம் கூட வரக் கூடாது.

அது அதனுடைய நேரம் வரும் போது தானாக மறைந்து விடும் அல்லது அழிந்து விடும்.
இறைவனால் சொல்லப்பட்ட இந்த உபாயம் வீணாகி விடாது.
வீட்டில் இருப்போம். நம் வாழ்வு நன்றாக இருக்கும்.🙏
-------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.3.20

எது உண்மையான பக்தி?

எது உண்மையான பக்தி?

*ஒரு குட்டிக்கதை!*

மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும் ?

ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார்.

செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார்.

பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர்
மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி
நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.

போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்" என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.

அவர் 'தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’
என்று கேட்பார்.

அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்”என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு செல்கிறார்.

பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார்.

அதற்கு அந்தச் செல்வந்தர் *“தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”* என்று கேட்க, நாரதரும், நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.

அதற்கு அந்த செல்வந்தர் *“அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?”* என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.

அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது.

ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, *“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?”* என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார்.

கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.

இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன்,நீயே சரணம் என்று
பற்றுவதே ”உண்மையான பக்தி” .

இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று
பதிலளித்தார் நாராயணன்.

காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது
மகா சமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ*… அது போல், கடவுளுடன்
நமது மனமும் கலந்துவிட வேண்டும்.

நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும்.

அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம் என்று வந்தால் அது *வியாபாரமாகிவிடும்.*

ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால்
வியாபாரமாகி விடும்.

அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் *பக்தி* என்று பெயர்.
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.3.20

மாமன்னன் மனுநீதிச் சோழன்


மாமன்னன் மனுநீதிச் சோழன்

வீதிவிடங்கன் உல்லாசமாக தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. உல்லாசத்தின் உச்சியில் இருந்த இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி அங்கேயே அக்கன்றின் அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன். மன்னன் மீதிருந்த அன்பாலும் அவன் மகன் இந்நாட்டின் ஒரே வாரிசு என்ற எண்ணத்தாலும் யாரும் இச்செய்தியை மன்னனுக்குச் சொல்ல விரும்பவில்லை.

மக்கள் சொல்லாவிட்டாலும் அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து அகன்றது. மக்களும் அப்பசுவின் பின் சென்றனர்.அது எங்கு செல்கின்றது என யாருக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் பொருட்டே அதன் பின்னே கூட்டமாகச்சென்றனர். அப்பசு மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது.

அந்தப்புரத்திலிருந்த மன்னன் திடுக்கிட்டான். மந்திரி பிரதானியர் புடைசூழ ஓடிவந்தான் வாயிலுக்கு. ஒரு மனிதனை எதிர்பார்த்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்று இறுமாந்திருந்த மன்னனுக்கு இது பேரிடியாக இருந்தது. என்ன நடந்தது எனக் கேட்டபோது யாரும் எதுவும் பேசாது நின்றனர். மன்னன் அந்தப் பசுவின் பின்னே நடந்து சென்றான். அப்பசு மன்னனைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் நாவால் தான் ஈன்ற கன்றினை நக்கிக் காட்டியது. மன்னன் அக்காட்சியைக் கண்டு கண்கள் கலங்க நின்றான்.

பின் கண்கள் சிவக்க மந்திரியாரைப் பார்த்து "இப்பாவ்த்தைச் செய்தவன் யாவன்? உடனே அவனை என்முன் கொணர்ந்து நிறுத்துங்கள் " எனக் கட்டளையிட்டான். அனைவரும் அமைதியாயிருந்தனர்.

"நீங்கள் கூறாவிட்டால் நீதி தவறிய மன்னனாக நான் ஆவேன். அவ்வாறு நான் உயிர் வாழ விரும்பவில்லை.என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்." என்ற மன்னனைத் தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும். என்று முடிவு செய்தான்.

உடனே ஒரு மன்னனாக நின்று சேவகருக்குக் கட்டளையிட்டான். "உடனே தேரைப் பூட்டுங்கள். அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்துங்கள்.அவன் மீது தேரை ஏற்றிக் கொல்லுங்கள். தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்." என்று கூறினான்.ஆனால் அவன் கட்டளையை யாரும் ஏற்க முன்வரவில்லை. வருங்கால மன்னனை நாட்டின் இளவலைக் கொலை செய்ய யாரும் விரும்பவில் லை .

.மனுநீதி தவறாத மாமன்னன் மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டு த தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது. மந்திரி முதலியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.மக்களோ தங்கள் நிலைமறந்து அலறிக் கூக்குரலிட்டனர். எதையும் கவனத்தில் கொள்ளாத சோழமன்னன் தேரை விரைவாகச் செலுத்தினான்.

என்ன அதிசயம்? தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.

விண்ணிலிருந்து ஒரு அசரீரியின் குரல் கேட்டது. "சோழ மன்னா! தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக." என்று வாழ்த்தி மறைந்தது.மன்னன் மனம் மகிழ்ந்து தன் மகனை அணைத்துக் கொண்டு உச்சி மோந்தான்.

நீதி என்று வரும்போது துலாக் கோல்போல் இருந்து நீதிவழங்கிய சோழ மன்னனை நம் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாதல்லவா!

திருவாரூரில் மனுநீதி சோழன் கல் தேர், திருவாரூர் கோயிலின் இடது புறத்தில் வடக்கு மட வளாகத்தில் இருக்கும் கல் தேர் மண்டபம்.

'வாயில்லா ஜீவனின் உணர்வும், தன் மகனின் உயிருக்கு இணையானது' என்று மதித்தவன் மனுநீதி சோழன். அப்படிப்பட்ட அரசர்கள் ஆண்ட நாடு நம் தமிழகம்.✍
----------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.3.20

நெகிழ வைத்த புராணக் கதை1


நெகிழ வைத்த புராணக் கதை1

இராவண வதம் முடிகிறது. தேவர்கள் பூமாரி பொழிகின்றனர். அப்போது அங்கே
தசரதன் தோன்றுகிறார். இராமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார்.
“உன்னை வனவாசம் அனுப்ப வேண்டி இருந்ததே என்கிற வருத்தம், உயிர் போன பின்னும், என்னைத் துளைத்துக் கொண்டே இருந்தது. இன்றுதான்
அது தீர்ந்தது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வேண்டிய வரம் ஒன்றைக் கேள் !" என்கிறார்.

ராமர் வரம் எதுவும் தேவையில்லை என்கிறார். இல்லை !
நீ கேட்டுத்தான் ஆக வேண்டும் என்கிறார் தசரதன்.
“ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று கேள் !”
என்று தசரதன் சொல்கிறார். ஆயினும் என்கிற வார்த்தை பிரயோகம் முதலில் இராமர் மறுத்தார் என்பதை சுட்டுகிறது. இப்போது ராமர் வரம்
கேட்கத் தயாராகிறார்.
என்ன வரம் கேட்கப் போகிறார்?

அதற்கு முன் ஒரு Flashback....
பரதன் அரசாள வேண்டும்....இராமர் வனம் புக வேண்டும்.... என்று கைகேயி வரங்களைக் கேட்கவே தசரதன் மிகவும் நொந்து போகிறார். வேறு வழியில்லாமல் வரங்களைக் கொடுத்து விட்டு, குலகுரு வசிட்டனை நோக்கி, “இனிமேல் இந்தப் பாவி கைகேயி என் மனைவி அல்லள். அரசாளப் போகும் பரதனும் என் மைந்தன் அல்லன். என் மறைவுக்குப் பிறகு இறுதி காரியங்கள் செய்யும் உரிமையையும் பரதன் இழக்கிறான் !" என்று தசரதன் சொல்லி விட்டு மாண்டு போகிறார். இப்படித் தன் தந்தையார்
சொல்லி விட்டது இராமன் மனதில் முள்ளாகத் தைத்துக் கொண்டிருக்கிறது !

இப்போதோ,
இத்தனை ஆண்டுகள் கழித்து, தசரதன் ஒரு வரம் தருகிறேன் ! என்று சொல்கிறார்.
இராமர் என்ன நினைக்கிறார்? கைகேயி மற்றும் பரதனை மன்னித்து முறையே தன் மனைவி என்றும், மகனென்றும் தசரதன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்க நினைக்கிறார் !

இந்த நினைவோடு ராமர் தசரதனைப் பார்த்து,
“தீயள் என்று நீ துறந்த...”
என்று ஆரம்பித்து விடுகிறார். இதற்கு பிறகு
என்ன சொல்லைப் போடுவது? தீயவள் என்று...நீ துறந்த கைகேயி என்று சொல்ல முடியாது.
தன் தாயை பெயர் சூட்டி ராமன் அழைக்க மாட்டான்.
சரி ! தீயள் என்று நீ துறந்த
உன் மனைவி என்று போடலாமா ? இல்லை ! அதுவும் இயலாது ! ஏனென்றால் ஏற்கனவே தசரதன் கைகேயி...என் மனைவி அல்லள்.. என்று சொல்லி இருக்கிறார். .
சரி ! அதுவும் வேண்டாம் !
தீயள் என்று நீ துறந்த
பரதனின் தாய் என்று சொல்லலாமா ? என்றால்
அதுவுமே இயலாது. காரணம்.... பரதன் என் மகனே அல்லன் என்றும் தசரதன் முன்னரே சொல்லி விட்டார்.
கைகேயி, மனைவி, பரதனின் தாய் என்ற சொற்கள் எதையும் பயன்படுத்த முடியாது. வேறு எந்த சொல்லைப் போட முடியும் ராமன்? இந்தத் திகைப்பு
நமக்கு ஏற்படலாம்.
ஆனால் இங்குதான் ஜொலிக்கிறார் கவிச்சக்ரவர்த்தி. பெரிய குழப்பத்திலும் அற்புதமான ஒரு முடிவை எடுக்கிறார் !

இராமன் பகை கொள்ளாப் பண்பினன் !
ஆதலின் கைகேயியைச் சுட்டத் தயக்கமின்றி இராமன் போடும் சொல் ..... “தெய்வம்” என்பதாகும்.
“தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும்” என்று
இராமன் சுட்டுகிறான் !

*ஆயினும் உனக்கு அமைந்தது
   ஒன்றுரை என, அழகன்
தீயள் என்று நீ துறந்த என்
   தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம்
   தருக’ எனத் தாழ்ந்தான்......
என்று சொல்கிறார் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

இராமர் அப்படி சொன்ன உடன்
" வாய் திறந்து எழுந்து ஆர்த்தன
 உயிரெலாம் வழுத்தி ” என்றும் முடிக்கிறார் கம்பன். உலகமே இராமரை வாழ்த்தியதாம் ! உயிர்களெல்லாம்
வாழ்த்தினவாம் !

எப்பேர்ப்பட்ட உயர்ந்த பண்பாட்டினை எவ்வளவு சுவையாக சொல்லி சென்றிருக்கிறார் கம்பன் ?
ராமாயணக் கதை நமக்கெல்லாம் தெரியும். இந்தியாவில் இருக்கும் ஹிந்துக்கள் அல்லாத
பிற மதத்தினருக்கு கூட கதை தெரியும் ! ஆனால் இது மாதிரி நுணுக்கமான இடங்களை ரசிப்பது நம் கம்பனைப் படிக்கும் போது மட்டுமே !
எப்பேர்ப்பட்ட இடம் இது அல்லவா? தெய்வம் என்கிற சொற்ப்ரயோகம் எவ்வளவு உன்னதமானது? யாராவது இப்படி ஒரு சொல்லை அந்த இடத்தில் எதிர்பார்ப்போமா? அதுதான் கம்பன்...!!

ஸ்ரீ ராம ஜெயம் !!!

---------------------------------------------------
படித்து நெகிழ்ந்தது
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.2.20

புராணக் கதை: காண்டிவ வில்லின் மகிமை!!!!!


புராணக் கதை: காண்டிவ வில்லின் மகிமை!!!!!

*சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்*.

*ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்*.
*“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்*.

*அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்*.

*“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்*.

*நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்*.

*அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்*.

*“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்*.

*பல ஆண்டுகள் கழிந்தன*.

*மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்*.

*“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்*.

*அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்*.

*கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்*.

*அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்*.

*அதுவும் வெறும்  சாதாரணத் திருடர்களிடம்*

*வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்*.

*“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்*.

*"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது*.

*இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்*.

*மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்*.

*ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்*.

*அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்*.

*இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது*.

*இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”*
                   
*( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்*.

*இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்*.
---------------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.1.20

புராணக் கதை: எல்லாமே கனவுதான்!!!!


புராணக் கதை: எல்லாமே கனவுதான்!!!!

எல்லாமே_கனவுதான்

ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.

அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் மிகவும் துன்பப்பட்டார்.

அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது.

திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.

கண் விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.

இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.

அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.

பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.

ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.

"நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?

அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.

மந்திரி, ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை. அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

"நான் பிச்சைக்காரனா, மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.

நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.
அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.

ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை.

" என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.

அவரைப் பார்த்த மறு வினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.

குள்ளமாக, கறுப்பாக, எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்?அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.

"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன். அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும், கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.

"என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.

"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை. இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.

சபை முழுக்க கொதித்தெழுந்தது. "என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.

"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.

"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.

"கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.

உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.

"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது. ஏன் சிரித்தார்கள்? என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா? இல்லை. இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து, என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள். என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?

தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான். இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.

பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.

வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?

தூங்கினப்போ கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான். 
உன்னோட ராஜ வாழ்வும், பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை. 

ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே. தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.    பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே. முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும். ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக்கொள்” என்றார்.
--------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.1.20

கண்ணனின் மனதில் யார் இருக்கிறார்?


கண்ணனின் மனதில் யார் இருக்கிறார்?

அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார்.

உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத்தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.

அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.

அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச்சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப்போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய்ச்சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி.

எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான்.

□கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

இல்லை..இல்லை... என்னைக்கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி.

○என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல!, கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன்.○
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

31.12.19

பீஷ்மர் சொன்ன மந்திரங்கள்!!!


பீஷ்மர் சொன்ன மந்திரங்கள்!!!

*பீஷ்மர் ஜெபிக்கச் சொன்ன இறைத் திருநாமங்கள்.*

*மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போர் முடிந்தவுடன், அம்பினால் செய்யப்பட்ட படுக்கையில் இருந்த பீஷ்மரிடம்  பாண்டவர்களை
அழைத்துச் சென்ற கிருஷ்ணர், அவரிடம் உயிர்கள் பிறவிச்
சக்கரத்தில் இருந்து விடுபடும் வழியை  எடுத்துரைக்க வேண்டினார்.*

*அதை ஏற்ற பீஷ்மர்  நாராயணன் ஒருவனே நித்தியமும் சத்தியமும் ஆனவர். யார் ஒருவன்  அவரை முழு நம்பிக்கையுடன் பூஜிக்கிறானோ, அவனுக்கு சகல செளபாக்கியம் கிடைப்பதோடு, மோட்சமும் நிச்சயமாகக் கிடைக்கும் " என்று உபதேசித்தார்*.

*யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக  இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்* 🙏" என்றார்.

*அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம்.*

*தினமும்  ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.*

🎍 *ஓம் கேசவாய நமஹ* ‼

🎍 *ஓம் சங்கர்ஷனாய நமஹ* ‼

🎍 *ஓம் நாராயணாய. நமஹ* ‼

🎍 *ஓம் கேசவாய நமஹ* ‼

🎍 *ஓம் சங்கர்ஷனாய  நமஹ* ‼

🎍 *ஓம் நாராயணாய. நமஹ* ‼

🎍 *ஓம் வாசுதேவாய. நமஹ* ‼

🎍 *ஓம் மாதவாய. நமஹ* ‼

🎍 *ஓம்  ப்ரத்யும்னாய. நமஹ* ‼

🎍 *ஓம் கோவிந்தாய. நமஹ* ‼

🎍 *ஓம் அனிருத்தாய. நமஹ* ‼

🎍 *ஓம் விஷ்ணவே நமஹ* ‼

🎍  *ஓம் புருஷோத்தமாய. நமஹ* ‼

🎍 *ஓம் மதுசூதனாய. நமஹ* ‼

🎍 *ஓம் அதோக்ஷஜாய. நமஹ* ‼

🎍 *ஓம்  த்ரிவிக்ரமாய. நமஹ* ‼

🎍 *ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய  நமஹ* ‼

🎍 *ஓம் வாமனாய. நமஹ* ‼

🎍 *ஓம் அச்சுதாய. நமஹ* ‼

🎍 *ஓம் ஸ்ரீதராய. நமஹ* ‼

🎍 *ஓம் ஜனார்தனாய நமஹ* ‼

🎍 *ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ* :

🎍 *ஓம் உபேந்த்ராய. நமஹ* ‼

🎍 *ஓம் பத்மநாபாய. நமஹ* ‼

🎍 *ஓம் ஹரயே நமஹ* ‼

🎍 *ஓம் தாமோதராய. நமஹ* ‼

🎍 *ஓம் ஸ்ரீ  கிருஷ்ணாய நமஹ* ‼

🎍 *ஓம் நமோ நாராயணா* ‼

------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.11.19

நீங்களும், நானும், நமது கஷ்டங்களும்!!!!


நீங்களும், நானும், நமது கஷ்டங்களும்!!!!

*கடும் கஷ்டம் அனுபவிக்கிறீர்களா? கடவுள் உங்களை கை விடமாட்டார்.!!*

நம்மில் பலருக்கு, மனிதில் எப்போதும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கும். ‘நமக்கு மட்டும், கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறான். அடுத்தவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்களே’ என புலம்புவர். இதே போன்ற எண்ணம், மஹாபாரத்தில், பாண்டவர்களுக்கும் ஏற்பட்டது.

குருஷேத்திர யுத்தம் முடிந்துவிட்டது. பிதாமகர் பீஷ்மர், அம்பு படுக்கையில் படுத்திருந்தார். தை மாத ரத சப்தமி நாளில் இறப்பதற்காக காத்திருந்தார். ஒருநாள், தருமன் உட்பட பாண்டவர்கள், பீஷ்மரை சந்தித்தனர்.
நலம் விசாரித்த பீஷ்மர், ‘உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டதா' என, கேட்டார்.

இதற்கு தருமன் சிரித்தான். ‘தாத்தா! நாங்கள் தருமத்தின் பாதையில் தானே நின்றோம். எங்களுக்கு உள்ள பங்கை  தரமறுத்து, துரியோதனன் துன்புறுத்தினான். தருமம் வெல்ல, நாங்கள் அடைந்த கஷ்டங்கள், துயரங்கள் உங்களுக்கு தெரியாதா? அவ்வளவு கஷ்டங்கள் அடைய, நாங்கள் செய்த தவறு என்ன. தவறு செய்த துரியோதனன், கடைசி வரையில் மகிழ்ச்சியாக தானே இருந்தான்’ என, கேட்டான் தருமன்.

மற்ற நான்கு பேரும், ‘ஆமாம் தாத்தா, நல்ல வழியில் நடந்தால், கஷ்டங்கள் அனுபவிக்கதான் வேண்டுமா‘ என, கேட்டனர். பீஷ்மர் சிரித்துவிட்டு, பதில் அளித்தார்.

'பேரக்குழந்தைகளே! நீங்கள் வாழ்வில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்துவிட்டு தான், இன்று வெற்றி பெற்றுள்ளீர்கள். இதை நான் மறுக்கவில்லை. ஆனால், இவ்வளவு கஷ்டங்கள் வந்த போதும், நீங்கள் நிம்மதியை இழக்கவில்லை. அதர்ம பாதையில் செல்லவில்லை. கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நீங்கள் மகிழ்ச்சியை இழந்தீர்களா?

13 ஆண்டு வனவாசம் இருந்த போது கூட, நீங்கள் மகிழ்ச்சியாக தான் இருந்தீர்கள். ஆனால், துரியோதனன் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. ஆனால், அவன் நிம்மதியாக இருந்தானா?

எந்நேரமும் உங்களை பற்றியே நினைத்துக் கொண்டு, உள்ளூர பயந்து கொண்டிருந்தான். உங்களுக்கு தீமை செய்வதில் தான், அவனது முழு எண்ணமும் சிந்தனையும் இருந்தன.துரியோதனனால், உங்களுக்கு துன்பம் ஏற்பட்ட போதேல்லாம், உங்களை கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றினான்.

நல்ல எண்ணங்களுடன் நீங்கள் இருந்ததால், உங்கள் பக்கம் கடைசி வரை, இறைவன் இருந்தான். ஆனால், துரியோதனன் பக்கம் அவன் ஒரு போதும் இல்லை. நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பது, அவர்களின் திறமையை வெளிப்படுத்ததான். பல கஷ்டங்களை அனுபவித்த போதும், நீங்கள் தருமத்தின் பாதையைவிட்டு அகலாமல் இருந்ததால், பெரும் பெயரும் புகழும் பெற்றுள்ளீர்கள்.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான், கெட்டவர்களுக்கு ஆண்டவன் அள்ளி தருவான், ஆனால், கைவிட்டுவிடுவான் என, கூறி முடித்தார் பீஷ்மர்.

உண்மைதான், ஆண்டவன் நமக்கு கஷ்டம் கொடுக்கிறான் என்றால், அவன் நம்மை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், மனதில் எந்த  சந்தேகமும் வராது. கஷ்டம் கொடுத்த இறைவனுக்கு அதிலிருந்து நம்மை காப்பாற்றவும் தெரியும்... 

*அன்புடன் திருமலை*
-------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.11.19

வாழ்க்கை எப்போதுமே ஏன் இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை ?

வாழ்க்கை எப்போதுமே ஏன் இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை ?

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசு ராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது, துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக

"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்
என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை

ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.
--------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!