பழத்தை விடுத்து அதன் தோலை பகவான் ஏன் உண்டார்?
👆பாண்டவர் தூதனாக கிருஷ்ணர், அஸ்தினாபுரம் சென்றார் !*
பரந்தாமன் வருகை அறிந்த ஆன்றோர் அனைவரும் அவனை எதிர்கொண்டனர்...!
கண்ணன் இராசவீதி வழியாக வந்து கொண்டிருந்தான்.
வீதியின் இருமருங்கிலும் வானளாவிய மாளிகைகள் கண்ணனை வரவேற்பதற்காக அலங்கரிக்கப்பட்டு விளங்கின...!
முதல் மாளிகையைக் கண்ட கண்ணன் "இது யாருடையது?" என்றான்..!
"என்னுடையது" என்று பதில் வந்தது. பதில் சொன்னவன் துரியோதனன்... !
இப்படியே ஒவ்வொரு மாளிகையையும் கண்ணன் கேட்டுக் கொண்டே வந்தான். அவனைத் தொடர்ந்து எதிர் கொண்டவர்கள்,
தங்கள் மாளிகையை என்னுடையது என்னுடையது என்றே சுட்டிக் காட்டினர்...!
துரோணர், வீடுமர், கிருபர், துச்சாதனன், கர்ணன் முதலியோர் அனைவரும் அவ்வாறு கூறியவருள் முக்கியமானவர்கள்...!
கண்ணன் அவர்கள் வரவேற்பைப் பொருட்படுத்தாமல் சென்று கொண்டேயிருந்தான்...!
வீதியின் கடைசிப் பகுதிக்கு வந்தாகிவிட்டது. அங்கே ஒரு கூரைச் சிறுகுடில். தவக்குடில் போல விளங்கியது...!
வழக்கம் போல் "இது யாருடையது?" என்றான் கண்ணன்...
"இது தேவரீரது திருமாளிகை" என்று பதில்வந்தது. ..
பதில் வந்த திசையை நோக்கினான் எம்பெருமான். அங்கே மகாத்மா விதுரர், பணிவுடன் கண்ணனை வணங்கிய வண்ணம் காட்சியளித்தார். . .!
அவரது தோற்றம் அடக்கமே உருவம் கொண்டு எதிரே நிற்பதுபோன்றிருந்தது.
பக்தவத்சலனான பாண்டவர் தூதன், "அப்படியா?
இப்பெருநகரில் எனக்கும் ஒரு மாளிகையுள்ளதே !
நான் அதில் தங்குவதே முறை" என்று கூறிக் கொண்டு, அந்தக் குடிலுக்குள் நுழைந்துவிட்டான்...!
தனது சிறு குடிலில் கண்ணன் எழுந்தருளிவிட்டான் என அறிந்த விதுரன், பூரித்துப் போனான்..!
எதிர்பாராமல் வந்த விருந்தினன் கண்ணனை எவ்வாறு உபசரிப்பது?
ஏதாகிலும் பால், பழம் வாங்கி வரலாம் என்று விதுரன் வெளியே சென்று விட்டான். . .!
விதுரன் வீட்டில் அவன் துணைவி மட்டும் தனியாக இருந்தார்...!
அவர் சிறந்த பக்தை. கண்ணனை எதிர்பாராமல் சந்தித்த அந்த அம்மையாரும் செய்வதறியாது திகைத்து நின்றார்..!
கண்ணன் அமர்வதற்கு ஓர் ஆசனங்கூடத் தரவேண்டும் என்று தோன்றவில்லை...!
கண்ணன் ஒன்றையும் எதிர்பாராமல், தரையில் அமர்ந்து கொண்டான்..
"அம்மா எனக்குப் பசிக்கின்றது,ஏதாவது கொண்டு வாருங்கள்!" என்றான்..
வீட்டில் இன்னும் சமையல் ஆகவில்லை. விதுரன் ஏதாவது வாங்கி வந்த பிறகுதான் சமையல் ஆக வேண்டும்.
அதற்குள் பரம்பொருள் பசிக்கின்றது என்கின்றாரே என்று அந்த அம்மையார் செய்வதறியாமல், இயந்திரம் போல் இயங்கத் தொடங்கினாள்...!
சமையலறையில், எப்போதோ சமைத்த கீரை மட்டும் இருந்தது.
காய்ந்து போயிருந்த அந்தக் கீரையைக் கொண்டுவந்து கண்ணன் முன் வைத்தாள்...!
கண்ணன் கைநிறைய வெண்ணெய் எடுத்துண்டு பழகியவன் அல்லவா?
அந்தப் பழக்கத்தால் போலும் ! கீரையை கைநிறைய எடுத்து உண்டான்.
"ஆகா இவ்வளவு சுவையான கீரையை இதற்கு முன்பு நான் உண்டதே இல்லை” என்று கூறியவாறே அந்தக் காய்ந்துலர்ந்த கீரை முழுவதும் உண்டுவிட்டான்...!
"கீரை தீர்ந்துவிட்டதே...வேறு என்ன தரலாம்!” என்று சிந்தித்த அந்த தெய்வத்தாய்க்கு,
வீட்டுக்குள் வாழைப்பழம் இருப்பது நினைவுக்கு வந்தது.விரைந்து சென்று வாழைப்பழம் கொண்டுவந்தாள்...!
பழத்தை உரித்து உரித்து பகவானுக்குத் தரத்தொடங்கினாள்...
பக்திப் பரவசத்தில் மூழ்கிய அம்மையார், அவசரத்தினால் உரித்த சுளைகளை அப்பால் எறிந்துவிட்டு,
பழத்தோலை இறைவன் திருக்கரத்தில் கொடுத்தாள். கண்ணன் பழத்தோலை சுவைத்து சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான்.
பழச்சுளைகள் குப்பையில் விழுந்துகொண்டே இருந்தன.அப்போது விதுரன் வந்துவிட்டார்...!
கண்ணனுக்குத் தன் மனைவி வெறுந்தோலைத் தருவதும், அவன் உண்பதும் கண்ட விதுரர்,வியப்பில் மூழ்கினார்.
"ஐயோ! பகவானுக்குத் தோலை உண்ணத் தந்து அபசாரப்பட்டு விட்டோமே!” என்று கழிவிரக்கம் கொண்டார்.
“இறைவனே விருந்தினனாக வந்துள்ள போது, வாழைப் பழத்தோலைத் தரலாமா?
இது பகவானுக்குச் செய்யும் அவமானமல்லவா? இங்கே கொண்டுவா நான் தருகின்றேன்.
நீ சென்று சமையல் செய்!” என்று மனைவியை அனுப்பிவிட்டுத் தாமே வாழைப்பழத்தை உரித்துத் தரலானார்..!
தோலை எறிந்து விட்டுச் சுளையைத் தந்தார் விதுரர்...!
பழச்சுளையைச் சற்றே சுவைத்த மாயபிரான், விதுரனை நோக்கி,
"நான் இவ்வளவு நேரமும் உண்ட தோலின் சுவை இந்தச் சுளையில் சிறிது கூட இல்லையே!”
ஆதலால், தங்கள் மனைவியார் தந்ததுபோல் தோலையே தாருங்கள்!" எனக்கேட்டு அருந்தலானான்...!
வாழைப்பழத்தை விடத் தோல் சுவையாக இருக்குமா?
கண்ணன், விதுரரிடம் விளையாட்டுக்காக அப்படிப் பேசினாரா? என்று ஐயம் நமக்கு எழலாம்.
அது சாதாரணத் தோலாக இருந்தால், சுவை இராதுதான். ஆனால், அதில் அந்த அன்னையாரின் பாசமும் பரிவும் பக்தியும் அல்லவா கலந்திருந்தன !
"தன் பக்தர்களுக்காக கண்ணன் எதை வேண்டுமானாலும் செய்வான் என்பதை விளக்குகிறது இக்கதை..!"
*ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்!*
--------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
================================================
வணக்கம் குருவே!
ReplyDeleteமீண்டும் பாரதம் இங்கேயும் கண்ணன்! யாதவக் கிருஷ்ணனைப்
பெற்றவரும் வளர்த்தவளும் செய்த புண்ணியம் தான் எவ்வளவு மகத்துவம்!!
அந்த மாயக்கண்ணனின் ஒவ்வொரு செயலும் எவ்வளவு மகோன்னதம்!!
அவற்றைப் படிக்கப் படிக்க உடல் சிலிர்க்கிறது!
தன்னிடம் பக்தி கொண்டோரை
ஒருநாளும் கை விட்டானில்லை!
விதுரரின் பக்தியும் அப்படித்தானே!
அதனால் அவரையும் ஆட்கொண்டான் அம்மான்!!
பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!👍🙏🙏
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்த்திற்கு நன்றி வரதராஜன்!!!!!
ReplyDelete