Short Story: சிறுகதை: நிலாச்சோறு
-----------------------------------------------------
”கட்டிக் கரும்பே கண்ணா
கண்ணம் சிவந்த மன்னா
நீயிங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்”
என்று ஒரு கவிஞன் திரைப்படம் ஒன்றிற்காக எழுதிய பாடல் பெரிய நகரங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வில் இன்று முற்றிலும்
உண்மையாகி விட்டது. யாருக்கும் யாரையும் பார்க்க நேரமில்லை..
சொந்த பந்தங்களெல்லாம் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன
அல்லது கரைந்து போய்க் கொண்டிருக்கின்றன!
சென்னை அம்பத்தூரில் இருந்து தாம்பரம் பகுதியில் இருக்கும் உறவினரையோ அல்லது திருவான்மியூரில் இருந்து வில்லி
வாக்கத்தில் இருக்கும் உறவினரையோ பார்த்துவிட்டுத் திரும்புவ
தென்றால் லேசான காரியமா? போக இரண்டு மணி நேரம் திரும்பிவர இரண்டுமணி நேரம் அவர்கள் வீட்டில் ஒரு இரண்டு மணி நேரம்
என்று வைத்துக் கொண்டால் கூட அரை நாள் பொழுது அவுட்டாகிவிடும்.
சென்னையில் மட்டுமா? பெங்களூரிலும் அதே கதைதான். எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து மாரத்தஹள்ளிக்கோ அல்லது பண்சங்கரி பகுதியில்
இருந்து ஜெய நகருக்கோ அல்லது இந்திரா நகருக்கோ போய் வந்தால்
இடுப்பு கழன்றுவிடும். பேருந்து அல்லது இரு சக்கர வாகனங்களுக்கு
இந்த நிலைமை. ஒலா டாக்ஸியில் போய் வந்தால் பணம் கழன்று விடும்.
சரி போகிற வீடுகளுக்கு கையை வீசிக்கொண்டு சும்மா போகமுடியுமா? பிஸ்கெட் அல்லது பழங்கள் என்று எது வாங்கினாலும் நூற்றைம்பதிலிருந்து
இரு நூறு வரை செலவாகும். வெங்காயம் நூறு ரூபாயை எட்டிப் பிடிக்கும்போது, ஆப்பிளும் மாதுளையும் எட்டிப் பிடிக்காதா என்ன?
சரி இதற்குத் தீர்வுதான் என்ன? நேரத்தையும், செலவையும் காரணம் காட்டி சொந்தங்களைப் பார்க்காமல் விட்டு விடலாமா? உறவுகளே வேண்டாம்.
மனைவி மக்களே போதும் என்று ஒதுங்கி இருந்து விடலாமா?
அதெப்படி முடியும்?
”சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம் எழுதும் புதுக்கதை இது”
என்று கவியரசர் கண்ணதாசன் எழுதி வைத்த வைர வரிகளுக்கு
அர்த்தம் இல்லாமல் போய்விடாதா?.
சில வேளைகளில் பெரும் சுமையாக மாறினாலும் உறவுகள்தான்
மனிதனின் பலமே! ஆபத்துகளில் கை கொடுக்க, துயரங்களில்
ஆறுதல் அளிக்க, இன்ப-துன்பங்களில் உரிமையோடு பங்கெடுக்க
உறவுகள் வேண்டும்.
மனிதனுக்குப் பிறப்பால் தாய், தந்தை, சகோதரன், சகோதரி போன்ற
25க்கும் அதிகமான சொந்தங்களும் திருமணத்தால் மாமனார், மாமியார் போன்ற 12க்கும் அதிகமான பந்தங்களும் கிடைப்பது எவ்வளவு பெரிய
பலம்!
உறவுகள் மேம்பட முதலில் தேவைப்படுவது விட்டுக்கொடுப்பதுதான் என்றாலும், பரஸ்பர உதவி, அன்பளிப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது,
அடிக்கடி சந்தித்து நலம் விசாரிப்பது வெளியூரில் இருந்தாலும் தொலைபேசியில் பேசுதல் போன்று எத்தனையோ மேட்டர்கள்
இருக்கின்றன..
உறவுகளைப் பற்றி நினைக்கும்போது அண்ணாமலைக்கு அவனுடைய அப்பச்சி அடிக்கடி சொல்லும் பழமொழிதான் சட்டென்று மனதில் வந்து
நிற்கும்:
”கடன் கேட்காமல் கெட்டது.
உறவு போகாமல் கெட்டது”
என்று அவன் அப்பச்சி வீரப்ப செட்டியார் அடிக்கடி சொல்வார்.
உறவுகளைப் போய் அடிக்கடி பார்க்காமல் இருந்து அவைகள் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அண்ணாமலை ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தான்.
என்ன செய்தான்?
தொடர்ந்து படியுங்கள்!
+++++++++++++++++++++++++++++++++++
சிலருக்கு எல்லாம் தானாக வந்து சேரும். அவர்கள் இருக்கிற இடத்திற்கே வந்து சேரும். அதை ஜாதகப் பலன் எனலாம். அல்லது வாங்கி வந்த வரம்
எனலாம். அண்ணாமலைக்கு எல்லாம் அப்படித்தான் வந்து சேர்ந்தது.
ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்களை அவன் வாங்க, உள்ளூரில் மிகவும்
புகழ்பெற்ற பொறியியற் கல்லூரியில் படிப்பதற்கு சீட் தானாகக்
கிடைத்தது. அங்கே நான்கு ஆண்டுகள் அவன் படித்து முடிக்கும்
சமயத்தில் ஊருக்கு வந்திருந்த அவனுடைய சின்ன மாமா, வாடா,
எம்.எஸ் படிக்கலாம். நான் படிக்க வைக்கிறேன் என்று அவனை அமெரிக்காவிற்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்.
பி.இ., எம்.எஸ் என்று பொறியியல் படிப்பின் எல்லாக் கரைகளையும்
தொட்டு விட்டு வந்த அண்ணாமலைக்கு, அமெரிக்காவில், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை கிடைத்தது. அவர்கள் இவனுடைய திறமையைப் பார்த்துவிட்டு, நீ இங்கே பாஸ்டனில் இருக்க வேண்டிய
ஆள் இல்லை என்று சொல்லி, சியாட்டெல் நகரில் உள்ள தங்கள்
தலைமைச் செயலகத்திற்கு மாற்றி வேலை போட்டுக் கொடுத்து
விட்டார்கள்.
ஆள் ஜம்மென்று ரோஜா பட அரவிந்தசாமி மாதிரி அழகாக இருப்பான். ஊருக்கு வந்திருந்த அவனைக் கண்ணுற்ற செல்வந்தர் ஒருவர்,
பணத்தைக் கொட்டிக் கொடுத்து தன் ஒரே பெண்ணை அவனுக்குக்
கட்டிக் கொடுத்துவிட்டார். கர்நாடாக கூர்க் பகுதியில் அவருக்கு ஆயிரம்
ஏக்கர் காப்பித் தோட்டம் உள்ளது.
திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே ஒரு ஆண் குழந்தை பிறந்து அனைவரையும் மகிழ்வித்தது. அண்ணாமலையின் மாமனார் மகிழ்ந்து பெங்களூரில் இந்திரா நகரில் இருந்த தன்னுடைய வீடுகளில் ஒன்றை
தன் மகளுக்குப் பரிசாக எழுதிக் கொடுத்துவிட்டார். பத்து செண்ட்
இடத்தில் 2,000 சதுர அடி கட்டிடம், தோட்டத்துடன் கூடிய வீடு. இன்றைய மதிப்பில் பத்துக் கோடி ரூபாய் பெறக்கூடிய சொத்து அது.
அதோடு மட்டுமா? கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள். அண்ணாமலைக்கு அவன் வேலை பார்க்கும்
இடத்தில் இருந்தும் பணம் கொட்டியது. மென்பொருள் எழுதும் கோடிங் முறையில் புதிய உத்தியைக் கண்டு பிடித்துக் கொடுத்து புதிதாக இரண்டு
மூன்று செய்லபாடுகளுக்கு வழி வகுத்துக் கொடுத்ததால், அவன் வேலை பார்த்த நிறுவனம் அடுத்த நிலைக்கு உயர, இவனையும் நன்றாகக்
கவனித்துக் கொண்டது. ஆறு லட்சம் டாலர்களை போனசாகக்
கொடுத்தார்கள். இந்திய பண மதிப்பில் அது நான்கு கோடி
ரூபாய்களுக்குச் சமம்.
இப்படி எல்லாம் கைச் சொடுக்கில் கிடைத்துக் கொண்டிருந்தாலும், அண்ணாமலையின் உள் மனதில் நம் தாய் நாட்டை விட்டுவிட்டு வந்து இத்தனை தூரத்தில் இருப்பதோடு, எத்தனை உறவுகளையும்,
சந்தோஷமான தருணங்களையும் இழக்கிறோம் என்ற வருத்தமும்
இருந்தது. அதே வருத்தம் அவன் மனைவிக்கும் இருந்தது.
"பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏதடா,”
என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளை ஒரு நாள் ஆழ்ந்து
கேட்ட போது, எடுத்தமுடிவில், சம்பாதித்தவரை போதும். தாய்
நாட்டிற்குத் திரும்புவோம் என்று முடிவு செய்தான்.
அவனுக்கு அப்போது வயது 32 தான். ஆனால் அவன் வேலை பார்த்த
கம்பெனி நிர்வாகம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “வேலையை உதறிவிட்டு உங்களால் எப்படி சும்மா இருக்க முடியும்? ஆகவே நீங்கள்
விலக வேண்டாம். இந்தியாவில் உள்ள நமது கிளை நிறுவனத்தில் உங்களுக்கு வேலை தருகிறோம். தொடர்ந்து வேலை செய்யுங்கள்.
வாரத்தில் 2 நாட்கள் மட்டும் கம்பெனிக்கு வந்தால் போதும். 3 நாட்கள்
வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் வேலை செய்யுங்கள் என்று சலுகைகளையும் அள்ளிக் கொடுத்தார்கள். சரி என்று அமெரிக்காவைக்
காலி செய்து கொண்டு ஊருக்குத் திரும்பியவன் ஒரு மாத விடுப்பிற்குப்
பிறகு பெங்களூரில் உள்ள தங்கள் கம்பெனிக்குப் போய்ச் சேர்ந்தான்.
சி.வி.ராமன் நகரில் அலுவலகம். அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வீடு ஒன்றையும் வாங்கிக் கொண்டு குடியேறினான்.
இந்திரா நகரில் இருந்த சொந்த வீடு, பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு
நல்ல வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப் பட்டிருந்ததால்.
அதற்கு முயற்சி செய்யவில்லை.
கோவை ஆர்.எஸ்.புரத்திலும் ஒரு சொந்த வீடு இருக்கிறது. அங்கே அவனுடைய பெற்றோர்கள் இருக்கிறார்கள். சென்னை அண்ணா
நகரிலும் ஒரு வீடு இருக்கிறது. சென்னையைத்தான் அவன் தெரிவு
செய்தான். ஆனால் அவன் மனைவி இந்தியா என்றவுடன் பெங்களூரைத்
தான் தேர்ந்தெடுத்தாள்.
படிக்கும் காலத்தில் அவள் பெங்களூரில் தங்கிப் படித்தவள். கடல்
மட்டத்தில் இருந்து மூவாயிரம் அடி உயரத்தில் அந்த ஊர் இருப்பதால்,
அங்கே எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும் என்பாள். சென்னை வெய்யில்போல வறுத்தெடுக்காதென்பாள்.
பெங்களூர் வந்து எல்லாம் ஒரளவிற்கு அமைந்தவுடன், உறவுகளைப் போற்றும் விதமாக அண்ணாமல் செய்த முக்கியமான வேலை,
பெங்களூரில் உள்ள தங்கள் சொந்த பந்தங்களின் முகவரிகளைச்
சேகரித்தான். பங்காளிகள்
25 புள்ளிகள். தாய பிள்ளைகள், மற்றும் செட்டி நாட்டைச் செர்ந்த பெங்களூர் வாழ் தங்கள் ஊர்க்காரர்கள் என்று
50 பேர்கள். எல்லோருடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்கள் ஆகியவற்றைத் தொகுத்து அனைவருக்கும் செய்தி அனுப்பினான்.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று அனைவரையும் தங்கள் வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தான். தங்கள் குடியிருப்பின்
மேல் தளத்தில் உள்ள அரங்கில் 150 பேர்கள் வந்து கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். மதிய விருந்திற்கும் ஏற்பாடு செய்தான்.
வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அண்ணாமலையைப் பாராட்டினார்கள். முதல் சந்திப்பிலேயே பெரியவர்கள், குழந்தைகள்
என்று 200 பேர்கள் கலந்து கொண்டார்கள். மூன்று மாதங்கள் அப்படியே நகர்ந்தது. மூன்றாவது மாதம் இந்துஸ்தான் விமான நிறுவனத்தில்
விஞ்ஞானியாகப் பணியாற்றும் நகரத்தார், ”எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள். அனைவரும் என் வீட்டில் சந்திக்கலாம். நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றவுடன் அனைவரும் ஒப்புக்கொள்ள அதன்படியே
நடந்தது.
இந்த நிகழ்வுகள் பிரபலமாகி பெங்களூர் முழுவதும் பரவ, வேறு சில தமிழ் அமைப்புக்களும் இது போல செய்யத்துவங்கின. அண்ணாமலையின்
முயற்சி முழு நிறைவானது அப்போதுதான் எனலாம்!
==================================================
ஒரு முறை அண்ணாமலையின் வீட்டிற்கு வந்த அவனுடைய தந்தையார், அன்று அங்கே நடந்த உறவுகள் கந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு மகிழ்ந்ததோடு, எல்லோரும் சென்ற பிறகு, அன்று இரவு அண்ணாமலையிடம் பேச்சுக்கொடுத்துக் கேட்டார்.
”இந்த சந்திப்பிற்கான அடிப்படைக் காரணம் தோன்றியது எப்படி?” என்று கேட்டார்.
அண்ணாமலை புன்முறுவலுடன் சொன்னான்:
“எல்லாவற்றிற்கும் நீங்கள்தான் காரணம். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம்
அலங்காரம் நடப்பதுடன், பேரூர் நகர விடுதியில் மதியம் அன்னதானம் நடப்பதையும், அதில் 300 முதல் 400 வரை நகரத்தார்கள் கலந்து
கொள்வதையும் பார்த்திருக்கிறேன். ஆகின்ற செலவை 3 அல்லது 4 நகரத்தார்கள் பங்கிட்டுச் செலவழிப்பதையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
நீங்கள்தான் என்னைக் கூட்டிக்கொண்டுபோய் அதன் சிறப்பைச்
சொன்னீர்கள். அந்த நிகழ்வுதான் என் மனமாற்றத்திற்கும் இங்கே உறவினர்களையும் ஊர்க்காரர்களையும் மாதம் ஒருமுறை கூட்டிக் கெளரவிப்பதற்கும் கலந்துரையாடுவதற்கும் அடிப்படையாக அமைந்தது.”
அவன் தந்தையார் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார் என்றால் அது மிகையல்ல!
இப்படி ஒவ்வொரு ஊரில் உள்ளவர்களும் செய்தால், உறவுகள் மேன்மையுறும் அல்லவா? நேரமில்லை, தூரமாக இருக்கிறது, எத்தனை பேர்களை
எப்படிப் பார்ப்பது என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து மகிழலாம் இல்லையா?
கடன் தொடர்ந்து கேட்டால் வரும்.
உறவு தொடர்ந்து பார்த்தால் நிலைக்கும்!
===================================================================
ஒரு மாத இதழுக்காக அடியவன் எழுதிய சிறுகதை. அதை இன்று உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். படித்து மகிழுங்கள்
அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!