மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.3.11

Short Story: ஆத்தா எழுதிய கடிதங்கள்

-----------------------------------------------------------------
Short Story: ஆத்தா எழுதிய கடிதங்கள்
அகத்தில் இருப்பவள் ஆத்தாள். அம்மா என்பதற்கான தூய தமிழ்ச்சொல். செட்டி நாட்டில் அன்னையை  ஆத்தாள் என்றுதான் சொல்லுவார்கள் பிறப்பில் இருந்து நம் உள்ளத்தில் இருக்கும் பெண்மணி ஆத்தா(ள்)

அகம் + ஆள் = அகத்தாள் = ஆத்தாள்

ஒரு ஆத்தாள் தன் மகனுக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்துக் கதையாக்கியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். இந்தமாதம், ஒரு மாத இதழுக்காக எழுதியது. அது அந்த இதழில் வெளியாகி  உள்ளது. நீங்களும் படித்து மகிழ அதை உங்களுக்காக இன்று வலையேற்றி இருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++                    
1
15.12.2007

பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

நேற்றுக் காலை, என்னை, இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டு, போகும்போது, நீ கண்கலங்கிய காட்சி என்  நெஞ்சிற்குள்ளேயே நிற்கிறது.

கவலைப் படாதே! நான் நினைத்த அளவிற்கு, இங்கே ஒன்றும்
மோசமாக இல்லை. எல்லாம் முறையாகத்தான்  நடக்கிறது. இந்த
முதியோர் காப்பகம் கட்டி ஐந்து ஆண்டுகளாகிறதாம். இதை
முதியோர் இல்லம் என்று சொல்லாமல், முதியோர் காப்பகம்
என்றுதான் சொல்கிறார்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
என்று என்  அறிவிற்கு எட்டவில்லை!

இன்றையத் தேதிக்கு மொத்தம் 450 பேர்கள் இருக்கிறார்களாம். பத்துப்பேர்களாவது நட்பாகக் கிடைத்தால்  போதும்.
மிச்சக் காலத்தை ஓட்டிவிடுவேன்.

இங்கே பக்கத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவ பெருமாள்
கோவில் என்னும் திருக்கோவில் உள்ளதாம்.பதினொன்றாம்
நூற்றாண்டில் கட்டப்பெற்ற பழம் பெருமை வாய்ந்த கோவிலாம். ஆழ்வார்களில் மூத்தவரானமகான் ராமானுஜர் அவதரித்த ஊராம்
இது. வயதான காலத்தில் இங்கே வந்து சேர்ந்ததால், என்னுடைய  வைகுண்டப்  பிராப்த்தி நிறைவேறும் என்று நம்புகிறேன். அதை
நினைத்தால் சற்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

பெத்தபிள்ளைகள், தாயபிள்ளைகள், பங்காளிகள், செட்டிநாட்டில்
உள்ள நம் ஊர் மக்கள் என்று அனைவரையும்  பிரிந்து வந்து இங்கே
இருக்க வேண்டிய கட்டாகட்டியான சூழ்நிலையை நினத்தால் மட்டும்
மிகவும் வருத்தமாகஉள்ளது. வேறு ஒரு வருத்தமும் இல்லை.

மாதம் ஒருமுறையாவது வந்து பார்த்துவிட்டுப்போ! வரும்போது, சென்னையில் இருந்து இவ்வளவு தூரம்  மோட்டார்  சைக்கிளில்  வர  வேண்டாம். காலம் கெட்டுக்கிடக்கிறது. நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் சொல்லும்படியாக  இல்லை. வாகனங்களில் செல்பவர்கள் எல்லாம் விமானம் செல்லும் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

உன்னை நம்பி, என்னுடன் சேர்த்து நான்கு ஜீவன்கள் இருக்கின்றன. ஆகவே பஸ்சிலேயே வந்துவிட்டுப்போ!

அன்புடன்,
காலத்தால் கரை ஒதுங்கிப்போன உன் ஆத்தா,
கமலம்பாள்
                          ++++++++++++++++++++++++++++

2
1.1.2008

பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

இங்கே வந்து 15 தினங்களாகி விட்டன! எல்லாம் ஓரளவிற்குப் பழகி
விட்டது. காலையில் இட்லியும், பொங்கலும்  தருகிறார்கள். மதிய
உணவாக சாதத்துடன் சாம்பார் அல்லது புளிக்குழம்பு, ஒரு கூட்டு,
ஒரு பொரியல்  தருகிறார்கள்.

மோர் புளிக்காமல் அம்சமாக இருக்கிறது. இரவில் இட்லி,
தோசை அல்லது சப்பாத்தி. எதை வேண்டுமென்றாலும்
வாங்கிக் கொள்ளலாம். மாலையில் 4 மேரி பிஸ்கெட்டுகளும்,
டீயும் தருகிறார்கள். காலை எட்டு மணிக்கு  ஃபில்டர் காப்பியும்,
பகல் 11 மணிக்கு வெஜிடெபிள் சூப்பும் தருகிறார்கள். எல்லாம் சூடாக இருக்கிறது. வீட்டுச்  சாப்பாட்டிற்கு இது தேவலை. அதாவது அடுத்தவர் கையை எதிர்பார்த்துச் சாப்பிடுவதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

காலை மற்றும் மாலையில் தினமும் 40 நிமிடங்களுக்குக் குறையாமல் அனைவரும் நடைப் பயிற்சி மேற்கொள்ள  வேண்டும். அதைக் கண்காணிக்க ஆள் போட்டிருக்கிறார்கள்.

பொது வாசகசாலையும், பொது தொலைக்காட்சி அரங்கமும் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் யாராவது ஒருவர்  வந்து ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துக்கிறார்.

ஒரு அறைக்கு இரண்டு பேர்கள். என் அறையில் என்னுடன் ஸ்ரீரங்கத்து
மாமி ஒருவர் இருக்கிறார். வயது அறுபத்தைந்து. என்னைவிட ஐந்து
வயது குறைவானவர். வேதங்கள் உபநிடதங்கள் எல்லாம் தெரிந்தவராக இருக்கிறார். அவருக்கு ஒரே மகன். தில்லியில் பெரிய பதவியில் இருக்கிறானாம். மருமகள் கலப்பாம். உணவு, கலாச்சாரம்
பிடிக்கவில்லை. இங்கே வந்துவிட்டேன் என்கிறார்.

இங்கே உள்ளவர்களிடம் ஆளுக்கு ஒரு கதை இருக்கிறது.
என்னத்தைச் சொல்வது? கலிகாலம்! “வடித்த சோறும்,  உப்பும்,
தண்ணீரும், கிடைத்தால் போதும் என்ற காலம் வரப்போகிறது”
என்று எங்கள் அப்பச்சி சொல்வார்கள்.அப்படித்தான் எதிர்காலம் இருக்கும்போலத் தெரிகிறது!

அடுத்தமுறை வரும்போது உன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வா!

அன்புடன்,
உன் ஆத்தா,
கமலம்பாள்
                         +++++++++++++++++++++++++++++++++

3
1.4.2008

பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

“நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்”


என்று அந்தச் சிறுகூடல்பட்டிக் கவிஞன் எழுதிவைத்துவிட்டுப்போனது எனக்கும் சேர்த்துத்தான் என்பது  இப்போதுதான் தெரிகிறது.

வயதான காலத்தை முதியோர் இல்லத்தில் கழிக்கும்படியாக நேரிடும்
என்று ஒரு நாளும் நான் நினைத்ததில்லை. "உனக்கென்ன நான்கு
பிள்ளைகள். வயதான காலத்தில் உன்னை ராணி மாதிரி வைத்துக்கொள்வார்கள்" என்று உங்கள் அப்பச்சி முன்பு சொன்ன
தெல்லாம் நீர் மேல் எழுத்தாகப் போய்விட்டது.

நான்கில் மூன்று, பெண் பிள்ளைகளாகப் போய்விட்டன.
அவர்களைக் கட்டிக்கொடுத்தாகிவிட்டது. கொட்டிக்  கொடுத்துக் கட்டிவைக்கவில்லை. எதவாகத்தான் கட்டிக்கொடுத்தோம்.
கைக்கும் வாய்க்குமான வருமானத்தில் அவர்கள் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். என்னை வைத்து அவர்களால்
எப்படிப் பராமரிக்க முடியும்?  அது நியாயமுமல்ல!

உங்கள் அப்பச்சியின் மறைவிற்குப்பின் உன்னைத்தான் நான் நம்பியிருந்தேன்.

நீ நல்லவன். சத்திய சிந்தன். ஆனாலும் கிரகக்கோளாறு. மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க  வேண்டிய சூழ்நிலை.

“என்ன செலவானாலும் பரவாயில்லை, முதியோர் இல்லலத்தில் உங்கள் தாயாரை விட்டுவிடுங்கள். என்னால் பார்த்துக்கொள்ள முடியாது” என்று அவள் உத்தரவு போட்ட பிறகு உன்னால் என்ன செய்ய முடியும்?

எம்காம், சிஏ என்று உன்னை நன்றாகப் படிக்கவைத்தேன். பழநி அப்பன் அருளால் உனக்கு மத்திய அரசு  வேலையும் கிடைத்தது. கை நிறையச் சம்பளமும் வருகிறது. ஆனாலும் என்ன பிரயோசனம்?

அந்நியத்தில் வேண்டாம், அனுசரனையாக இருப்பாள் என்று  உனக்கு சொந்தத்தில் மணம் முடித்தேன். வந்த மகராசி, வாய்க்கு ருசியாக ஒரு நாள் கூட சமைப்பதில்லை. மாதத்தில் பாதி நாள், லெட்சுமி குழம்பும்,
வாழைத் தண்டு பொரியலும்தான். பொங்கலன்று மட்டும்தான் பொரித்த அப்பளத்தைக் கண்ணில் காட்டுவாள். 

உனக்காவது பரவாயில்லை. தினமும் ஒருவேளை, அலுவலகத்தில் ஊழியர்களுக்கென்று உள்ள குறைந்த கட்டணக் கேன்ட்டீனில்
சாப்பிட்டு விடுகிறாய். இரண்டு பெண் பிள்ளைகளும் என்ன செய்யும்? கேட்டால்,அவர்களுக்காகத் தான் பணத்தைச் சேர்க்கிறேன் என்கிறாள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதாவது உன்  அப்பச்சி இறந்த பிறகு
உங்கள் வீட்டிற்கு வந்தநாள் முதலாக அவளுடைய சிக்கனத்தைப்
பார்த்துப்  பலமுறை நான் அதிர்ந்து போயிருக்கிறேன். அதைச் சிக்கனம்
என்று சொல்ல முடியாது. மகாக் கருமித்தனம். பிள்ளைகள்
இரண்டிற்கும் வயதிற்குத் தக்க வளர்ச்சி இல்லை. தேய்ந்து
போய் இருக்கின்றன. உன் மனைவி  கடுகைக் கூட எண்ணிப்
போட்டுத்தான் தாளிக்கிறாள். அந்தக் கொடுமையை எங்கே போய்ச்
சொல்வது? அதை எல்லாம் நீ கண்டு கொள்வதில்லை. பிள்ளைகள்
இரண்டும் தேய்ந்துபோய்,  சோகை பிடித்ததுபோல  இருந்தால் எவன் கட்டிக்கொள்வான்?  பின்னால் உனக்குத்தான் கஷ்டம்!

நேற்று நீ இங்கே என்னைப் பார்க்க வந்திருந்தபோது, உன் மகள்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு  வந்திருந்தாய்.அவர்கள் இருவரும்
‘அப்பத்தா’ என்று என்னைக் கட்டிக்கொண்டு அழுதுவிட்டார்கள். நீங்கள்  திரும்பிச் சென்றதில் இருந்து உங்கள் நினைவாகவே இருக்கிறது. அதனால்தான் மன ஆறுதலுக்காக இந்தக்  கடித்தத்தை எழுதுகிறேன்.
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

உன்னை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. பழநி அப்பனை பிராத்திப்பதைத் தவிர எனக்கு வேறு  வழி ஒன்றும் தெரியவில்லை.
உனக்கும் அப்பச்சி இல்லை. எனக்கும் அப்பச்சி இல்லை. அப்பச்சி
இல்லாதவர்களுக்கெல்லாம் அவன்தான் அப்பச்சி! அவன்தான் உன்
வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்!

கண்ணீருடன்,
உன் ஆத்தா,
கமலம்பாள்

                         +++++++++++++++++++++++++++++++++++++

4
15.10.2008

பிரியமுள்ள பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

நேற்று கிறுகிறுவென்று தலை சுற்றுவதுபோல இருந்தது. சுதாகரித்து, அருகில் இருந்த தூணைப் பிடிப்பதற்குள்  தவறிக் கீழே விழுந்துவிட்டேன். முன்பக்கத் தலையில் அடிப்பட்டுவிட்டது. நெற்றி நன்றாகப் புடைத்துக் கொண்டு விட்டது.

அருகில் இருந்தவர்கள் பதறி விட்டார்கள். ஐஸ் கட்டிகளை வைத்து முதல் உதவி செய்தார்கள். விடுதிக்கு  வழக்கமாக வரும் மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்த்துவிட்டு, தாழ் இரத்த அழுத்த நோய்  (Low Blood
Pressure) உள்ளது என்று சொல்லி, அதற்காக மாத்திரைகளைக் கொடுத்து விட்டுப் போனார். நெற்றியில் இன்று காலையில் வீக்கம் வற்றிவிட்டது.

இருந்தாலும் பத்து நாட்கள் நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லி, பக்கத்தில் உள்ள மருத்துவ  சிகிச்சைப் பகுதிக்கு என்னை மாற்றி விட்டார்கள்.

அந்தப் பகுதிக்கு, தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று நிதி
உதவி அளிக்கிறதாம். அங்கே பெண்களுக்காகத்  தனி அரங்கும், ஆடவர்களுக்காகத் தனி அரங்கும் உள்ளது. தலா பத்துப் பேர்களைத்
தங்க வைத்து சிகிச்சைஅளிக்கும் வசதிகள் உள்ளன.

அங்கே நம் செட்டிநாட்டு கிராமம் ஒன்றைச் சேர்ந்த சாலி ஆச்சி
அவர்களைச் சந்தித்தேன். இங்கிருந்து பத்துக்  கிலோ மீட்டர்
தொலைவில் ‘சிவன்தங்கல்’ என்னும் கிராமத்தில் இருக்கும்
முதியோர் இல்லத்தில் இருக்கிறார்களாம். அந்த இல்லமும்
இதைச் சேர்ந்ததுதானாம். அங்கே எண்பது வயதிற்கு மேற்பட்டவர்
களைத் தங்க வைத்துள்ளார்களாம்.

அந்த ஆச்சி தன் மனக்குறையைச் சொல்லி ‘ஓ’ வென்று கதறி
அழுததைப் பார்த்து அரண்டுபோய் விட்டேன். அந்த ஆச்சிக்கு
நான்கு மகன்களாம். அண்ணா நகரில் ஆச்சி பெயரில் இருந்த
பெரிய வீட்டை இரண்டு கோடிக்கு விற்றுக் காசாக்கிப் பங்கு
வைத்துக்கொண்டு விட்டார்களாம். ஆச்சியை ஆளுக்கு மூன்று
மாதங்கள்  வைத்துக் கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்துப்
பேசியவர்கள், அதன்படி செய்யவில்லையாம். அங்கேயும்
மருமக்கள் பிரச்சினைதான். ஒருவருக்கொருவர் தன்முனைப்புப் பிரச்சினையும் உள்ளதாம். இங்கே கொண்டுவந்து  விட்டு விட்டார்களாம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆச்சி இங்கேதான் இருக்கிறார்களாம்.

இப்போது அதிகப்படியாக எழுந்துள்ள பிரச்சினை என்னவென்றால்,
வயது மூப்பின் காரணமாக (சாலி ஆச்சிக்கு  வயது எண்பத்தெட்டு -
அதை நினைவில் கொள்ளவும்) இயற்கை உபாதைகள் அனைத்தும்
ஆச்சிக்கு சில சமயங்களில் இருக்கும் இடத்திலேயே நடந்து விடுகிறதாம். பாதி நேரம் தன்னினைப்பு இல்லாததுதான் அதற்குக்  காரணமாம். அங்கிருக்கும் ஊழியர்கள் இரண்டு மூன்று முறை அடித்து
விட்டார்களாம். “ஏன் ஆச்சி இப்படிச் செய்கிறாய்? ஒன்னுக்கு வந்தால் எழுந்துபோய் இருந்துவிட்டு வருவதற்கு என்ன கேடு?” என்று வேறு  திட்டுகிறார்களாம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னைப் பார்க்க வந்த தன் மூத்த
மகனிடம் ஆச்சி அதைச் சொல்லித் தேம்பித்  தேம்பி அழுதிருக்கிறார்கள்.

“அப்பச்சி என்னை இங்கே அடிக்கிறாங்கடா. ஒத்த மகள்னு சின்ன
வயசிலே எங்க அப்பச்சி என்னைச் செல்லமா  வளர்த்தாருடா. என் ஆம்பிள்ளையானும் என்னை ஓவியமா வச்சிருந்தாருடா! அவ்க இருந்தவரைக்கு ஒரு துரும்பு என்மேலே பட்டதில்லைடா! இங்கே
யிருந்து என்னைக் கூட்டிக்கொண்டு போங்கடா ராசாக்களா!
இல்லைன்னா  ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுங்கடா, சாப்பிட்டு உயிரைப் போக்கிக்கிறேன்டா!” என்று சொல்லிஅழுதவர்களை
சமாதானப் படுத்திவிட்டு, ஊழியர்களை அழைத்து, ஆளுக்கு ஐநூறு
ரூபாய் கொடுத்து, இனி  அடிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டுப்
போனாரே தவிர, மூத்த மகன் வேறு ஒன்றும் செய்யவில்லையாம்.
அதற்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக இங்கே வரவுமில்லையாம்.

நெஞ்சு கணக்கிறது. கண்கள் பனிக்கின்றன. இதற்கு மேல் எழுத வரவில்லை. மற்றவை அடுத்த கடிதத்தில்

அன்புடன்,
ஆத்தா,
கமலாம்பாள்
                   ++++++++++++++++++++++++++++++++++++++++++

5
11.11.2008

பிரியமுள்ள மகன் பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

இப்போது ஓரளவிற்கு நலமாக இருக்கிறேன். மீண்டும் பெரிய
விடுதிக்கே என்னை மாற்றிவிட்டார்கள். இப்போது  ஸ்ரீரங்கம்
மாமியுடன் இருந்த அறையல்ல. வேறு ஒரு புதிய அறை. உணவுக்
கூடத்திற்கு அருகிலேயே போட்டுக்  கொடுத்து விட்டார்கள். கோவை சூலூரைச் சேர்ந்த அம்மணியம்மாள் என்னும் பெண்மணி என்னுடன் இருக்கிறார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராம். கலகலப்பாகப் பேசுகிறார்.

பகல் பொழுது எப்படியோ கழிந்து விடுகிறது. இரவில்தான் தூக்கம்
சரியாக இருப்பதில்லை. எதிர்காலத்தை  நினைத்தால் பயமாக
இருக்கிறது. சாலி ஆச்சி அடிக்கடி கண்முன் நிற்பதுபோலத்
தோன்றுகிறது.

அப்படிச் சமயங்களில் கந்த சஷ்டிக் கவசத்தை மனதிற்குள் சொல்லி
என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். எத்தனை நாட்கள் இந்த
அவதியோ? காலம்தான் கணக்கை முடித்து ஐந்தொகையைக் கொடுக்க வேண்டும்.

அன்புடனும், சற்றுக் கலக்கத்துடனும்
உன் ஆத்தா,
கமலம்பாள்

                 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

6
3.3.2009

பிரியமுள்ள மகன் பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

மறுபடியும் கிறுகிறுப்பு தலை சுற்றல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்று அதிகாலை கட்டிலில் இருந்து இறங்கிக் கழிப்பறைக்குச் செல்லும் வழியில் விழுந்துவிட்டேன். அடிபடவில்லை. யாரும் பார்க்கவுமில்லை. எழுந்து விட்டேன்.

அதற்குக் காரணம் எனக்குத் தெரியும். தினமும், இரண்டு வேளை
சாப்பிடுங்கள் என்று சொல்லி மருத்துவர்  கொடுத்த  மாத்திரைகளை
நான் சாப்பிடுவ தில்லை. அதிக நாள் உயிர் வாழ விரும்பவில்லை.
சாலி ஆச்சிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை எனக்கும் ஏற்படக்கூடாது.
சீக்கிரம் வைகுண்டத்திற்குப் போய்விடவேண்டும்.

மாத்திரையைச் சுற்றி இருக்கும் தாள்களைக் கிழித்து அறையில்
இருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டு  விடுவேன்.  மாத்திரை
களைக் கழிப்பறைப் பேசினில் போட்டுத் தண்ணீர் ஊற்றித் தள்ளி விட்டுவிடுவேன். தினமும் ஒழுங்காக மாத்திரைகளைச் சாப்பிடுவதைப்போலப் பாவனை செய்து கொண்டிருக்கிறேன்.

எத்தனை நாள் ஆகுமோ - எப்போது உயிர் போகுமோ? தெரிய
வில்லை!

எல்லாம் அவன் செயல்!

இறைவனின் அழைப்பிற்காக பொறுமையுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
உன் ஆத்தா
கமலாம்பாள்

                   +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

7
6.6.2009

பிரியமுள்ள மகன் பெரிச்சியப்பனுக்கு,

ஆத்தா எழுதிக்கொண்டது.

எச்சு வருகிறது. உடம்பும், மனமும் சோர்ந்து விட்டது. ரெம்ப நாள்
தாங்காது.

உனக்கு இதுவரை எழுதிய கடிதங்கள் எதையும் உனக்கு நான் 
அஞ்சலில் அனுப்பவில்லை. அனுப்புவதற்கான  வசதிகள் இங்கே 
இருந்த போதும் உனக்கு நான் அனுப்பவில்லை. உன் மனம் மிகுந்த வேதனைப்படும்  என்பதால் ஒன்றைக்கூட அனுப்பவில்லை.

நான் காலமான பிறகு, அவை அனைத்தையும் நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் என் பெட்டியிலேயே  இவற்றைச் சேர்த்து 
வைத்துள்ளேன். அனேகமாக உனக்கு நான் எழுதும் கடைசிக் 
கடிதம் இதுவாக இருக்கலாம்! மூன்று பெண்களுடன் பிறந்த உனக்கு
ஒன்றும் வைக்காமல் போகக்கூடாது என்பதற்காக, நம் வீட்டு இரட்டை  அறையில் உள்ள பெட்டகத்தில் 30 பவுன் நகைகளை வைத்துள்ளேன்.
என் அப்பச்சி எனக்குப் பிற்காலத்தில் கொடுத்தது. அத்துடன் சோழ
வந்தான் கிராமத்தில் அவர்களுக்கு உரிய இடத்தில் இரண்டு ஏக்கர்
பூமியை  எனக்காக எழுதிக்கொடுத்தார்கள். அதற்கான பத்திரமும்
நகைகளுடன் உள்ளது. அவைகள் பெட்டகத்தின்  இரகசிய அறையில்
உள்ளன. அவைகள் உனக்குத்தான். உன் பெண்களின் திருமணச்
செலவிற்கு அவற்றை  நீ பயன் படுத்திக்கொள். பழநியில் உள்ள 
சாதுக்கள் மடத்திற்கு அன்னதானத்திற்கென ரூபாய் பத்தாயிரம்  
மட்டும் எனக்காகச் செலுத்திவிடு. அது மட்டும் எனக்காக 
நீ செய்தால் போதும்!

முருகனருள் முன்னிற்கும்!


அன்புடன்
உன் ஆத்தா
கமலாம்பாள்

                    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பதினைந்து நாட்களில், ஒரு அமாவாசைத் திதியன்று கமலாம்பாள் ஆச்சி அவர்கள் இறைவனடி சேர்ந்து  விட்டார்கள். தகவல் தெரிந்து வந்த மகன் பெரிச்சியப்பன், தன் தாயாரின் பூத உடலை அம்புலன்ஸ் வாகனம்
ஒன்றில் ஏற்றிக் கொண்டு, அங்கிருந்து நேராக திருவொற்றியூர் நகர விடுதிக்குச் சென்று விட்டான். கலங்கிய  மனதுடன் தாயாரின் அந்திமக் காரியங்களுக்கு ஏற்பாடு செய்யத் துவங்கினான்.

அவனுடன் முதியோர் இல்லத்திற்கு வந்த அவனுடைய மனைவி,
இல்லத்தில் உள்ள புத்தகத்தில் கையெழுத்தை  இட்டு விட்டு,
ச்சியின் உடலையும், உடமைகளையும் பெற்றுக்கொண்டதற்கான சடங்குகளை முடித்துக் கொண்டு தன் தம்பியுடன் காரில் புறப்பட்டாள்.

அப்போதுதான் அது நடந்தது.

காப்பகத்தின் மேலாளர் ஆச்சியின் பெட்டியைக் கொண்டுவந்து
கொடுத்தார். எடுத்துக்கொள்ளாமல் போகிறீர்களே என்றும் சொன்னார்.
அதில் என்ன இருக்கும் என்று மகராசிக்குத் தெரியாதா என்ன?
வேண்டாம் என்று சொன்னாள். அவர் விடவில்லை. நீங்கள்தான்
எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று கையில் திணித்து,  அனுப்பி வைத்தார்.

காப்பகத்தை விட்டு வெளியே வந்தவள், அங்கே பக்கத்தில் இருந்த
பெரிய குப்பைத் தொட்டியில் அதைப்  போட்டு விட்டுத் தன் தம்பியுடன்
காரில் கிளம்பிப் போய்விட்டாள்.

பார்த்துக்கொண்டிருந்த பிச்சைக்காரன் ஒருவன் பெட்டியைப்
பிரித்துப் பார்த்தான். பழங்காலத்து இரும்புப் பெட்டி.எடைக்குப்
போட்டால் நூறு, இருநூறு கிடைக்கும். உள்ளே இருந்த நான்கு
சேலைகளில் நன்றாக இருந்த இரண்டு  சேலைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, நைட்டி எனப்படும் இரவு உடைகளுடன் மற்ற துணிமணிகளையும், சீப்பு,  கண்ணாடி இத்யாதிகளுடன், கொத்தாக
இருந்த கடிதங்களையும் குப்பைத்தொட்டியிலேயே வீசிவிட்டுப்
போய்விட்டான்.

அடுத்த நாள் ஆச்சி சிதையில் எரிந்து கொண்டிருந்த அதே 
நேரத்தில், ஸ்ரீபெரும்புதூர்  நகராட்சி குப்பைக்  கிடங்கில் 
ஆச்சியின் கடிதங்களும் தீக்கிரையாகின!

                      ++++++++++++++++++++++++++++++++++++++++++++
கதையின் முடிவு திருப்தியாக இல்லையா? உங்களுக்காக
கதையின் இன்னொரு க்ளைம்மாக்ஸைக் கீழே  கொடுத்துள்ளேன்.
படித்துப் பாருங்கள்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

அடுத்து வந்த பதினைந்தாம் நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அதை
இறைச் செயல் என்றும் சொல்லலாம்.

ஆத்தாவின் திரேக்கியத்தை எப்படிச் செய்யலாம். மனைவி, மக்களுக்கு, மற்றும் உடன் பிறப்புக்களுக்கு  புதுத்துணிகளை என்ன பட்ஜெட்டில் வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், பெரிச்சியப்பனின்
மனதில் பொறிதட்டியது.

யாரோ ஒரு புண்ணியவான் காப்பகத்திற்கு வந்தவர், அங்கிருந்த
அததனை பெண்களுக்கும் ஒரு காட்டன்  புடவையைத் தானமாகக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாராம்.

ஒரு மாதத்திற்கு முன்பு, பெரிச்சியப்பன் தன் தாயாரைப் பார்க்கப் போயிருந்தபோது, “நான் எங்கே அப்பச்சி அதைக் கட்டிக்கொள்ளப்
போகிறேன்? அந்தப் புடவையைக் கொண்டுபோய் என் பேர்த்தியிடம்
கொடு” என்று தன்  தாயார் சொன்னபோது, தன் தாயாரின் பெட்டியில்,
மேலாக இருந்ததை எடுத்துக்கொண்டு வந்தது நினைவிற்கு  வந்தது.
த்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்த சமயம், தன்னுடைய மனைவியும், மகள்களும் வெளியூர் சென்றிருந்ததால், தன்னுடைய அலமாரியில்
அதை வைத்ததும் பெரிச்சியப்பனின் நினைவிற்கு வந்தது.

இப்போது அது நினைவிற்குவர, அதை எடுத்துத் தன் மூத்த மகளிடம் கொடுத்தான்.

“அய்ய்ய்...” என்று ஆச்சரியம் மேலிட, வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவள், ஒரே நிமிடத்தில்  திரும்பி வந்தாள்.

“அப்பா, அப்பத்தா கொடுத்த சேலைக்குள் இந்தக் கடிதம் இருந்தது”

ஆமாம், அது ஆச்சி அவர்கள் எழுதியிருந்த கடைசிக் கடிதம். படித்தவுடன் பெரிச்சியப்பன் அதிர்ச்சிக்கு  ஆளாகிவிட்டான். பலவிதமான உணர்வுகள் கண்ணிலும் மனதிலும் தோன்றி மறைந்தன. மற்ற கடிதங்கள் எல்லாம்
மனைவி கடாசிவிட்டு வந்த பெட்டியோடு போய்விட்டதை உணர்ந்தான். கடவுள் அருளால் முக்கியமான அந்தக்  கடிதமாவது மிஞ்சியதே என்று மகிழ்ந்தான்.

எல்லாம் பழநி அப்பனின் கைங்கர்யம். அந்தக் கடிதத்தில், பழநி சாதுக்கள் மடத்திற்கு பத்தாயிரம் ரூபாய்  கொடுக்கும்படி ஆச்சி எழுதியிருந்தார் அல்லவா? அதை நிறைவேற்றும் விதமாக அந்தக் கடிதம் மட்டும்  தப்பித்திருக்கிறது.

வைக்கும் நியாமான கோரிக்கைகள் நிறைவேறாமல் போகாது. அதுதான் பழநி அப்பனின் மகிமை!

  +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

30.3.11

Astrology ராகுவிற்கு நிகரான சுழல் பந்து வீச்சாளர் கிடையாது!

---------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
 Astrology ராகுவிற்கு நிகரான சுழல் பந்து வீச்சாளர் கிடையாது!

நீங்கள் மட்டையாட்ட ரசிகரா? சந்திராவைத் தெரியுமா? தெரியாதென்றால் தெரிந்துகொள்ளுங்கள்.

1964ஆம் ஆண்டிலிருந்து 1978ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காக சிறப்பாகப் பந்து வீசிய கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர். லெக் ஸ்பின் பெளலர். சுழல் பந்து வீச்சுக்காரர்.

குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், அவரது வலதுகை மணிக்கட்டு அவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட போலியோ நோயால் செயல் இழந்துவிட்டது. இடது கையால் பயிற்சிசெய்து, அணியில் இடம் பிடித்தவர் அவர். பிஷன் சிங் பேடி, ஈ.ஏ.எஸ் பிரசன்னா போன்ற சக சுழல் பந்துவீச்சுக்காரர்களுடன் சேர்ந்து பல வெளிநாட்டு அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அவர்.

விவியன் ரிச்சர்ட்ஸால் (புகழ் பெற்ற மேற்கு இந்திய ஆட்டக்காரர்) தான் சந்தித்த சிறந்த பந்துவீச்சுக்காரர் என்ற பெருமை மிகும் பாராட்டைப் பெற்றவர்.

அவரைப் பற்ரிய மேல் விவரங்களுக்கு இதைப் படியுங்கள்

+++++++++++++++++++++++++++++++++++++++++=
சரி, சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன். நேற்று அதிவேகப் பந்து வீச்சாளர்களைக் குறிப்பிட்டு, அவர்களுடன் இரண்டு கிரகங்களின் தசாபுத்தியை விளக்கியிருந்தேன்.

இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களைச் சொல்லி, அவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ள ராகுவைப் பற்றிச் சொல்ல விளைகிறேன்.

ராகு தீய கிரகம். அத்துடன் கொடிய பாப கிரகம். 90% ஜாதகர்களை ராகு, தன்னுடைய தசா மற்றும் புத்தி காலங்களில் புரட்டிப்போட்டுவிடும்.

சுழல் பந்து வீச்சில் வரும் பந்தைப் போல எங்கே பிட்ச் ஆகும், எங்கே திரும்பும், என்ன செய்யும், முடிவு என்ன ஆகும் என்று சொல்ல முடியாத நிலை இருக்கும்.

மற்ற பாப கிரகங்கள் நிற்க வைத்து அடிக்கும். ராகு தொங்கவிட்டு அடிப்பார். அதுதான் வித்தியாசம்.

ஆகவே ராகுவின் காலங்களில், இறை வழிபாடு செய்து, அக்காலத்தை ஓட்டினால் அதுவே பெரிய விஷயம்.

இன்று கேது மகாதிசையில் ராகுவின் புத்திக் காலத்தையும், ராகு மகாதிசையில் கேதுபுத்திக் காலத்திற்கும் உரிய பலன்களைக் கொடுத்துள்ளேன். பாடல்களைப் படித்துப் பயன் பெறுக.

எல்லாம் பொதுப்பலன்கள்தான். ஆகவே யாரும் கலக்கமடைய வேண்டாம். இறைவழிபட்டால் எதையும் எதிர் கொள்ள முடியும். அதை மனதில் வையுங்கள்.

உண்டான கேது திசை ராகுபுத்தி
   உண்மையில்லா நாளதுவும் வருடம் ஒன்று
நன்றாகும் நாளதுவும் மூவாறாகும்
   நலமில்லா அதன் பலனை நவிலக்கேளு
விண்டாகுஞ் சத்த்துருவால் சோரபயமாகும்
   வினையான மனைவிதன்னால் வீண் கலகமாகும்
ஒன்றாகும் உன் உடம்பில் பிணி உண்டாகும்
   உறுதியில்லா உன் தெய்வம் வோடுந்தானே!

பாரேநீ ராகுதிசை கேதுபுத்தி
   பகருகின்ற மாதமது பனிரெண்டாகும்
சேரே நீ நாளதுவும் பதினெட்டாகும்
   செலுத்துகின்ற அதன்பலனை செப்பக்கேளு
ஊரேநீ விரோதமுடன் சத்துருவுமுண்டாம்
   உடன்கேடு பண்ணிவைக்கும் உண்மைபாரு
தேரேநீ திரவியங்கள் யேவலுடன் சேதம்
   தீதான காரியங்கள் தேகத்தில் காணும்!


(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

29.3.11

Astrology ‘மிடில் ஸ்டம்ப்’ எப்போது பறக்கும்?

 மைக்கேல் ஹோல்டிங்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


 ஆண்ட்டி ராபர்ட்ஸ்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology ‘மிடில் ஸ்டம்ப்’ எப்போது பறக்கும்?

அந்தக்காலத்தில் மேற்கிந்தியரின் பந்துவீச்சு மிகவும் பிரபலம். எதிரிகளும் நேசிக்கும் பந்துவீச்சு. மைக்கேல் ஹோல்டிங் & ஆண்டி ராபர்ட் ஆகிய இருவரும் வேகப் பந்துவீச்சாளர்கள். ஆளுக்கு ஒரு முனையில் இருந்து மாறி மாறிப் பந்துவீசுவார்கள். மட்டை பிடிப்பவர்கள் எவருமே அடித்து ஆடவெல்லாம் முடியாது. அப்படியொரு வேகம் இருக்கும். தங்கள் விக்கெட்டைத் தக்கவைத்துக் கொண்டால் போதுமென்ற நிலையில்  அவர்கள் இருப்பார்கள். கொஞ்சம் ஏமாந்தால் போதும் ‘மிடில் ஸ்டம்ப்’ பறந்து விடும்.

ஆட்டத்தில் அவர்கள் இருவரும் அசத்திய காலம்:
மைக்கேல் ஆண்ட்டனி ஹோல்டிங் (ஜமைக்கா) 1973 - 1989
ஆண்ட்டி ராபர்ட்ஸ் (ஆண்டிக்குவா) 1970 - 1984

அப்படியொரு நிலைமை தசா புத்திகளிலும் உண்டு. கேது திசையில் செவ்வாய்புத்தியும், செவ்வாய் திசையில் கேதுபுத்தியும் அப்படித்தான் இருக்கும். நாட்களைத் தள்ளினால் போதும் என்று ஜாதகன் சும்மா இருக்க வேண்டும். சுமார் ஐந்து மாத காலம். இறைவனைப் பிரார்த்தித்துவிட்டு அப்படித்தான் இருக்க வேண்டும்.

அவற்றிற்கான பலாபலன்களைப் பதிவிட்டுள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள். பாடல்கள் எளிமையாக இருப்பதால் அப்படியே கொடுத்துள்ளேன். விளக்கம் எழுதவில்லை.

தானென்ற கேதுதிசை செவ்வாய்புத்தி
   தாழ்வான நாளதுவும் நூற்றி நாற்பத்தியேழு
வானென்ற அதன்பலனை வழுத்தக் கேளு
   வண்மையுடன் யினசத்துரு தானே உண்டாம்
கோனென்ற கோளுநால் குடிகேடாகும்
   கோதையரால் குலமதுவும் நாசமாகும்
தேனென்ற திரவியமும் சேதமாகும்
   தெவிட்டாததுணைதம்பி தீதுண்டாமே

ஆகுமே செவ்வாயில் கேதுபுத்தி
   ஆகாத நாளதுவும் நூற்றி நாற்பத்தியேழு
போதவே பலன்தனை பூட்டக்கேளு
   பூவையரும் புத்திரரும் வியாதியாகும்
ஏகுமே வியாதியது கூடிக்கொல்லும்
   இன்பமுள்ளயின விரோதம் தானுமுண்டாம்
சாகுமோ சத்துருவும் பிசாசுதானும்
   சஞ்சலங்களதினாலே கோடிதானே!

(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

28.3.11

Astrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்?

------------------------------------------------------------------
Astrology தேசமெங்கும் எப்போது அலைய நேரிடும்?

சென்ற வாரம் கேது திசையில், சூரிய புத்தி எப்படியிருக்கும் என்று பார்த்தோம். அடுத்து இப்போது கேது திசையில் சந்திர புத்தி எப்படி இருக்கும் என்று பார்ப்போம். தொடர்ந்து சந்திர திசையில் கேது புத்தி எப்படி இருக்கும் என்றும் பார்ப்போம்.

சுபக்கிரகங்களின் தசா மற்றும் புத்திகள் பொதுவாக நன்மை பயக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் கேது மகா திசையில் மனகாரகன் சந்திரனுடைய புத்தி நன்றாக இல்லை. அதேபோல சந்திர திசையில் வரும் கேது புத்தியும் நன்றாக இல்லை. இரண்டிலுமே கேதுவின் ஆதிக்கம்தான் ஓங்கியிருக்கிறது. அவற்றிற்கான பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்

பூணுவான் கேது திசை சந்திர புத்தி
   புகழான மாதமது நாலு மூணும்
ஆணுவான் அதன் பலனை அறையக்கேளு
   ஆயிழையாள் விலகி நிற்பாள் அற்பமாகும்
தோணுவான் தோகையரும் புத்திரரும் பாழாம்
   தொகுதியுடன் பொருளதுவுஞ் சேதமாகும்
நாணுவான் நாரிகையும் சலத்தில் வீழ்ந்து
   நன்றாக மடிந்திடுவாள் நலமில்லைதானே

தெரிந்துநின்ற சந்திரதிசை கேதுபுத்தி
   தென்மையில்லாத நாளதுவும் மாதம் ஏழு
புரிந்துகொண்ட அதன் பலனைப் புகழக்கேளு
   புகழ்பெத்த மார்பில் சில பிணியுமுண்டாம்
பரிந்துகொண்டபாவையரும் பகை நாசமுண்டாம்
   பாங்கான தாய்தந்தை சுதன் மரணமாகும்
விரிந்துகொண்ட வியாதியது விழலாய்ப் பண்ணும்
   வீணாக தேசமெங்கும் அலைவான் பாரே!


(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.3.11

ஆறிய பவனும் ஆறாத பவனும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆறிய பவனும் ஆறாத பவனும்!

ஒரு சமயம் டெல்லி உமாஜியைப் பார்த்து நானும் ஜோக் பட்டியல் ஒன்று தயாரித்து வாத்தியாருக்கு அனுப்பினேன். வாத்தியார் வெளியிடவில்லை.

மின்னஞ்சலில் கேட்டபோது, "நீங்கள் 'சீரியஸ்' ஆன செய்தியையே எழுதுங்கள்"என்று பணித்துவிட்டார்.சினிமாவில் எந்த வேடம் முதல் படத்தில் செய்கிறோமோ, அதுவேதான் கடைசி வரைக்கும்.வில்லன் ஆக முதலில் செய்தால் அந்த முத்திரையைக் குத்தி மீண்டும் மீண்டும் வில்லனாக நடிக்கவே அழைப்பு வரும்.இதற்கு ரஜனி மட்டும்தான் விதிவிலக்கு. முதலில் நிறைய வில்லன் ரோல் செய்தார். 16 வயதினிலே பரட்டையை மறக்க முடியுமா? ஆனால் பின்னர் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்து, சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டர்.

என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன். "நமக்கு நகைச்சுவை உணர்வு இல்லையோ? சொல்லப்  போனால் நான்தான் அதிகமாக மனதுக்குள் சிரிக்கும் ஆசாமி.ஒரு குணம் (கெட்டதோ?) என்னிடம் இருப்பதை நானே கண்டு கொண்டேன். அது என்னவென்று கேளுங்கள்.('என்ன‌?' என்று கோரஸ் சத்தம் கேட்கிறது)  என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவருடைய முகத்தையும் போல என் முகத்தை மாற்றிக் காட்டுவது. இதை ஒரு கலையாகவே பலர் செய்கின்றனர். அதைக் கலை என்று பார்க்கத் தெரியாதவர்கள் "வலித்தா காண்பிக்கிறாய்?" என்று கோபித்து 'தர்ம அடி' கிடைக்க வழியுண்டு. என்றைக்கு எனக்கு 'அறம் சார்ந்த அடி' கிடைக்கப் போகிறதோ?!அதென்ன 'அறம் சார்ந்த அடி'? அதாங்க தர்ம அடியே தான்!  திடீரெனத் தோன்றிய தனித் தமிழ் ஆர்வம் அப்படிச் சொல்ல வைத்தது.

ஜோக்குக்காகப் பத்திரிகைகளையும் இணையத்தையும் பார்க்க வேண்டாம். நம் அன்றாட வாழ்விலே பார்க்கக்கூடிய நிகழ்வுகளிலேயே பல நகைச்சுவைகள் நிரம்பியுள்ள்ளன. கண்ணையும், காதையும், கூடவே ரசிகத் தன்மயையும் கூர்மைப்படுத்தினால், மகிழ்ச்சியில் கூத்தாடலாம்.சிலேடை, நக்கல், திருகுதாளம் என்று ஒரு 'ரவுண்டு'க‌ட்டி ஜோக்"கடி"க்கலாம்.

ஒருநாள் நானும் என் பெரியம்மாவும் சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் வாசல் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். பெரியம்மா படிக்காதவர்கள். 2,3 வகுப்பு படித்து இருக்க‌லாம். ஆனால் நல்ல கூர்மையான அறிவு.எங்க‌ள் இல்லத்தைக் கடந்து பல கூவி விற்போர் சென்று கொண்டிருந்தனர்.முதலில் ஒரு ஆண் வாழைக் காயும், பின்னால் ஒரு பெண் வாழை இலையும், அதன் பின்னர் ஒரு ஆண் பாகற்காயும், அவருக்குப்பின்னே ஒரு பெண் பாக்கு மட்டையும் கூவிக்கூவி விற்றுச்சென்றனர்.

முதல் ஆள் ஓங்கிய குரலில் "வாழக்காஆஆஆ வாழக்கா..." என்று கூவினார் பெரியம்மா சொல்கிறார்கள்,"அவன் எந்த அக்காவை வாழச் சொல்கிறான்?"

பின்னால் வந்த பெண் "வாழலை..ய்..ய்.. வாழலெய்ய்ய்" என்று கீழ்ஸ்தாயியில் அழும் குரலில் சொல்கிறாள். பெரியம்மா சொல்கிறார்கள்,"ஓஹோ!இவள் தானோ அவனுடைய வாழாத அக்கா?"

அதன் பின்னர் ஒருவன் "பாருக்காஆஆஆ பாருக்காஆவ்..." என்று பாகற் காயைக் கூவி விற்கிறான்.பெரியம்மா மீண்டும், "எந்த அக்காவை இவன் பார்க்கச் சொல்கிறான்?" என்று கேட்கிறார்கள்.

பின்னாலயே ஒரு பெண் "பாக்க‌மாட்டெய்ங் பாக்கும‌ட்டைய்ய்ய்.."என்று கூவுகிறாள்.பெரியம்மாவின் மூளை வேலை செய்கிறது. "ஓஹோ! இவள் தானோ அவன் பார்க்கச் சொன்ன அக்கா? ஏன் பார்க்க மறுக்கிறாள்?"என்று சிரிக்காமல் கேட்டார்கள்.

ஒரு சாதாரண நிகழ்வில் நகைச்சுவையை, யாரையும் புண்படுத்தாத வகையில், இலக்கிய நயம் சொட்டச் சொட்டக் கூறிய பெரியம்மாவின் ஆற்றல் இன்று நினைத்தாலும் வியக்க வைக்கிறது.நகைச்சுவையாகப் பேசுவது, எழுதுவது எப்படி என்று பாடம் சொல்லிக் கொடுத்தாலும் நகைச்சுவை வந்து விடுமா? நகைச்சுவைக்கு 'டைமிங்', 'பாடி லாங்குவேஜ்' மற்றும் மொழி ஆற்றல் அவசியம்.'காமெடி டிராக்' என்று தனியாகப் போடக்கூடாது.நகைச்சுவை பெரியம்மாவைப் போல இயல்பாக மனத்துக்குள் முகிழ்க்க வேண்டும்.அதை மற்றவரும் மகிழும் வண்ணம் நேரம் பார்த்து அவிழ்த்து விடவேண்டும்."நான் ஒரு ஜோக் சொல்கிறேன் கேட்கிறீர்களா?" என்று கேட்டால், பெரும்பாலும் அடிக்கப்போகும் ஜோக் அறுவையாகப் போய்விடும் அபாயம்  உண்டு. பெரியம்மாவின் பெயர் கணப‌தி நடராஜன் சாரின் ஊரில் உள்ள பிரபலமான அம்பாளின் பெயர்.

முன்பெல்லாம் "அய்யர் காபி கிளப்", "பிராமணாள் டிபன் சென்டர்" என்று பெயர்ப் பலகையைத் தாங்கி நிற்கும் சிறிய சாப்பாட்டுக் கடைகள் உண்டு. அந்தக் கடையின் முக்கிய முதலே அந்த சாதிப் பெயர்தான். தந்தை பெரியார் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு செயல் திட்டமாக, பொது இடத்தில் சாதிப்பெயர் இருந்தால் தார் கொண்டு அதனை அழிக்கச் சொன்னார்.

தி க வினர் அப்படி தார் கொண்டு அழித்தனர். பெரியாருக்கு ஆதரவு பெருகியது. எனவே 'அய்யர்', 'பிராமணாள்' என்ற பெயர்க‌ள் மாற்றப்பட்டு 'லக்ஷ்மி பவன்' 'சரஸ்வதி கபே' 'ஷண்முக விலாஸ்' 'கணபதி கபே' என்று பெயர்கள் சூட்டப்பட்டன. அதிலும் கொஞ்சம் பேர் சாமர்த்தியம் செய்து "ஆரிய ப‌வன்"
என்று இனப் பெயரைச் சூட்டிக்கொண்டனர்.(ஆரியப் படையெடுப்போ, ஆரிய இனமோ, ஒன்றும் இல்லை' என்று அந்தக் கதையை அவிழ்த்து விட்ட மாக்ஸ்முல்லரே சொல்லியும் இன்றளவும் பிராமணர்களை ஆரியர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் சொல்வது நிற்கவில்லை) இந்த 'ஆரிய பவன்' என்ற பெயர் தங்க‌ளுடைய பிராமண அடையாளத்தை வியாபாரத்திற்காகத் தக்கவைக்கும் என்று கருதியவர்கள் அவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டனர்.

பிராமணர் அல்லாதோர் சப்பாட்டுக்கடை ஆரம்பிக்கும்போது 'திராவிடச் சிற்றுண்டி நிலையம்' என்று போட்டி போட்டார்கள்.

ஜோக் சொல்ல வந்துவிட்டு பழக்க தோஷத்தால்  சீரியஸ் ஆகிவிட்டேனோ? ஒரு சமயம் நண்பர் கூப்பிட்டார். "வாருங்கள் ஆரிய பவனில் ஒரு காப்பி சாப்பிடலாம்" என்றார்."வேண்டாம் சூடான பவனுக்கே போவோம்" என்றேன். நண்பர் ஒரு வினாடி புரியாமல் திகைத்தார். புரிந்தவுடன் ஆழமான நகைச்சுவையை ரசித்தார்.  "ஆரிய","ஆறிய" என்ற சொற்களை வைத்து விளையாடிய சிலேடை அது.

என்ன கொஞ்சமாவது சிரிப்பு வருதா? சிரிப்பு வராவிட்டாலும் வாய்விட்டுச் சிரியுங்கள்.நோய் விட்டுப் போகும்.குமரி முத்து, மதன் பாப் போலச் சிரியுங்கள். வீரப்பாச் சிரிப்பு வேண்டாம். நன்றி!

ஆக்கம்:
கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK)
லால்குடி

------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளர். திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் 
ஒரு கூட்டத்தில் பேசும்போது எடுக்கப்பெற்ற படம்
(ஆண்டு 1994)

வாழ்க வளமுடன்!

26.3.11

இளையராஜாவிற்கு எந்தவரியைப் பாட மனம் ஒப்பவில்லை?

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 இளையராஜாவிற்கு எந்தவரியைப் பாட மனம் ஒப்பவில்லை?

இன்றைய இளைஞர் மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
திரிவேணி சங்கமம்.

மனிதர்குல மாணிக்கம்... ஜவஹர்லால் நேரு அவர்களைக் காலன் அழைத்துப் போன வேளை!

நமது கவிபாடும் சோலை, கவியரசு அவர்களின் இதயத்தில் அந்தச் செய்தி இடியாய்  இறங்கியதால்; அவரின் இதயத்தில் கசிந்தோடும் செங்குருதியை நிரப்பிக் கொண்டு;  கவிஞரின் இரு விரல்களுக்கு இடையே குடிபுகுந்த அந்தப் பேனா... துக்கத்தைக் கக்கியது....

அதுவும், செங்கனலாய் வெடித்துச் சிதறி பீறிட்டு பொங்கி எழுந்து; தமிழ் பாரெங்கும் வழிந்தோடியது....

இதோ! அந்த துக்கம் தோய்ந்து விழுந்த வரிகள்!... கோபம் கொண்டு எழுந்து செங்கனலாய், வெடித்துச் சிதறுவதை பாருங்கள்.

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள்  எங்கே?
கூறிய விழிகள் எங்கே?
குறுநகை போனது எங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெல்லாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்தது இங்கே!...

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலை தீயில் இட்டார்!
அன்னையை தீயில் இட்டார்!!
பிள்ளையை தீயில் இட்டார்!!!
(அம்மம்மா என்ன சொல்வேன்....)

தீயவை நினையா நெஞ்சை
தீயிலே கருக விட்டார்!
தீயசொல் சொல்லா வாயை
தீயிலே கருக விட்டார்!!
(அம்மம்மா என்ன சொல்வேன்....)

சாவே உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயும் ஒரு
சஞ்சலத்தைக் காணாயோ?
தீயே உனக்கொரு நாள்
தீ மூட்டிப் பாராமோ?
யாரிடத்து பொய் உரைப்போம்?
யார்மொழியில் அமைதி கொள்வோம்?...

***********************************************************************************************
கவியரசு கண்ணதாசன் அவர்கள் இந்தப் பாடலை வடித்தபோது நடந்த நிகழ்வைப் பற்றி அறிய நேர்ந்தது! நீங்களும் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கிடைத்த உடன் அனைத்துப் பத்திரிக்கைகளிலும்இரங்கல் கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். அன்று மாலை கடற்கரையிலே இரங்கல் கூட்டமும் நடக்க ஏற்பாடு நடந்து கொண்டும் இருந்தது.

அப்போது பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள், பால தண்டாயுதமும், தா.பாண்டியன் அவர்களும் கவிஞரைக் கண்டு கவிதைப் புனைய சொல்ல வேண்டும் என்ற நோக்கோடு சென்று பார்த்து இருக்கிறார்கள்.

அங்கு கவிஞர், தந்தையை இழந்த மகனைப் போல தேம்பி, கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்திருக்கிறார், அப்போது அங்கு சென்ற இவர்கள் இருவருக்கும் அவரைத் தேற்றுவதே பெரும் பாடாகி விட்டதாம்.

பாலன், "கவிஞர், இதே சோகத்தோடு மாலைக் கூட்டத்தில் பாட ஒரு பாடலை எழுதுங்கள்" என்றாராம். கவிஞரின் உதவியாளர் ஒரு ஐந்தாறு மாத்தரைகளையும், தண்ணீரையும் கவிஞருக்குக் கொடுத்தாராம். காய்ச்சல் நெருப்பாய் கொதித்ததாம் கவிஞருக்கு.

நாற்காலியில் சாய்ந்துக் கொண்டு கண்ணீர் விட்டபடியே ராகம் போட்டுப் பாடிக் கொண்டு எழுதச் செய்வதை தா. பா. பார்த்துக் கொண்டு இருந்ததாக , நினைவு கூறுகிறார்.

+++++++++++++++++++++++++++++++++++
                  
"கவிஞர்கள் என்றாலே உணர்ச்சிக் கடலில் மூழ்கக் கூடியவர்கள். அவர்கள் நவரச உணர்வுகளின் எல்லைவரை அதாவது, நுனிவரை செல்பவர்கள். அவர்கள் மெல்லிய இதயம் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல. அவர்கள் எளிதில் காயப் படக் கூடியவர்கள், ஆனால், முழுச் சுரணையும் உள்ளவர்கள். அதோடு, அவர்கள் சுதந்திரமானவர்கள். புறக்கண்ணை மறந்து அகக் கண்ணாலே அதிகம் பார்ப்பவர்கள். ஏனென்றால், அதற்கு உண்மை மட்டுமே தெரியும்!

அவர்களின் படைப்புகளில் உள்ள நயமும், அழகும்,  உயிரோட்டமும் அதனாலே அவர்களுக்கு வசப் படுகிறது.  அது அந்தப் படைப்பை வாசிப்போரையும் எளிதில் ஆட்கொள்ளும்  அளவிற்கு சென்று விடுகிறது.”
அவர்கள் வாழும் சமுதாயத்தை ஆற்றுப் படுத்த அவதரித்த அவதாரர்கள். அவர்களின் அந்த முயற்சிக்கு தடையாய் வரும் எதையும் எரியும் கனலாய் சுட்டெரிப்பது மட்டும் அல்ல... அதற்கு உதவியவர்கள் பிரியும் போது, அவர்களின் பிரிவுக்கும் கண்ணீர் வடிப்பவர்கள் ஆவர்.

ஆக, அப்போது  கண்ணதாசன்; அந்த காலக் கணித மேதை கதறி அழுததும், கண்ணீர் விட்டதும் அதன் பொருட்டே என்று சொல்லவும் வேண்டுமோ? அப்படி எழுதப் பட்ட அந்தப் பாடல், அன்று மாலை கூட்டத்தில் திரு. சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடினாராம். அந்தப் பாடல் தான் மறுதினம் பத்திரிக்கைகளிலே வந்ததாம்.

சரி கட்டுரையின் நோக்கிற்கு வருவோம்!....

அப்படி அந்த துக்கத்தை சுமந்து கொண்டு வந்தத் தந்தியை! தீக்கதிரை!! ஜனசக்தியாய் விளங்கிய அந்த சிகப்பு மலரின் இறப்புச் செய்தியால் விளைந்த அந்த பா(பூ)மாலையில்  தேனது வடியாமல் துக்கம் தாளாமல் கண்ணீர் வடிந்தது!!

அன்று அந்த செய்தித்தாள் சற்று கனத்தே இருந்தது. குடகுமலை குளிராலா? அல்லது இதயம் கனக்கும் செய்தியை தாங்கி வந்ததாலா? அல்லது அதுவே அழுது, அழுது தன்னை தானே நனைத்ததாலா? அல்லது இரங்கல் பாமாலையில் வடிந்தக் கண்ணீராலா? யாரறிவார்?.

அப்படி கவியரசரின் துக்கத்தை சுமந்துச் சென்ற அந்த சோகப் பாடல் ஒரு பதினேழு வயது சிறுவனின் கரம் சேர்ந்தது. அவன் கண்களில் தெறித்த, கவியரசரின் செங்குருதித் தமிழ் வரி; அச்சிறுவனின் கண்களின் வழியே நுழைந்து, இதயம் புகுந்தது. ஆம், இதயம் புகுந்தது.

அது புனல் திரியும் கருவண்டுகள்;  துளையிட்ட, நாணல் தோகையின் ஓட்டையின் வழியே, காற்றுப் புகுந்து நாதத்தை எழுப்புவது போல்… இந்த சோகப் பாடல் அவனுள் புகுந்து ஒரு சோக ராகத்தை சுரம் பிரித்தது.

சுக ராகம் சோகம் தானே!!...

(Sweetest Songs are those that tell us of saddest Thoughts - Shelly.)

ஆம், அப்படி அந்தச் சிறுவனின் கண்களின் வழியே புகுந்து, சிந்தையில் கருவுற்று நின்ற;  கவியரசரின் அந்தக் கோபக் குரலின் வெப்பத்தால். அது கூறிய மாபெரும் தியாகியின் மறைவுச் செய்தியால்; கண்ணீரும் பெருகியது.
ஆம், அச்சிறுவனின்  கண்களில் கண்ணீர் பெருகியது என்றால் அது ஒன்றும் பெரிய வியப்பாகாது.  வேறென்ன வியப்பு?....

“ஒரு தேசக் காவலனின் மறைவுச்செய்தி. இன்னொரு, தேச  நேசனின் உள்ளக் குமுறல்களில் கவிதையாய் பிறந்து; அது கடைசியாக அன்று, அந்த பண்ணபுரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனை; இசைஞானியாய் உருவாக காரணமான முதல் பாடல் என்றால்; இசைஞானியை உருவாக்க கருவானது என்றால்; அது தான் பின்னாளில்... இன்றும் வியப்பாய் நிற்கிறது.” ஆம், அந்தப் பாடல் தான் இசைஞானி இளைய ராஜா அவர்கள் இசை அமைத்த முதல் பாடலாம்!!!.

அதை அவரே கூறுவதைக் கேட்க, http://www.youtube.com/watch?v=8gbZ_AezSUw இந்த சுட்டியை முடுக்குங்கள். முத்துதிரும். ஆம் உங்கள் கண்களில் கண்ணீர் முத்துதிரும்.
**********************************************************************************************
மேலே எழுதப் பட்டப் பாடல் இளையராஜா பாடுவதை கணினியில் கேட்கும் போது நான் எழுதியது..... அதிலே கவிஞர் எழுதிய ஒரு வரியை அவர் நீக்கி அல்ல தவிர்த்து இருக்கிறார்."தெய்வமே உன்னையும் நாம் தேம்பி அழவையோமோ! என்ற வரி தாம் அது.

பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டப் போது... அன்று இந்த வரியை  பல மேடைகளிலே இளையராஜா அவர்கள் பாடி இருந்தாலும்; இன்று அவர் ஒரு முழு ஆன்மீக வாதி என்பதால்; அம்மா என்று தரையில் எழுதப்பட்ட எழுத்தைக் கூட தனது காலில் மிதிக்க எப்படி மனம் ஒப்பாதோ! அப்படி அவருக்கு அந்த வரியைப் பாட அவர் மனம் ஒப்பவில்லை போலும்.

கவிஞரும் கொண்ட வேசத்திற்கு தகுந்தாற் போல் (ஏன் வேஷம் என்கிறேன் என்றால் அன்றைய சூழலில் புனைப் பெயரிலே பக்திப் பாடல்களையும் எழுதி இருக்கிறார் என்று கேள்வியுறுகிறேன்) அந்த வரிகளை கைகொள்கிறார்.
அந்தக் கருத்தை மறுப்பது என்றாலும், அவர் இறைவனிடம் தான் கொண்ட உரிமையில் கூட அப்படி எழுதி இருக்கலாம் என்றும் சொல்லத் துணியலாம்.

“கவிஞர்களின் எண்ணமும், கருத்தும் அவர்கள் வாழும் காலத்தோடு மாறுபடும், இல்லை மேம்படும்.”

அன்று இந்தியாவின் முதல் பிரதமரின் மறைவிற்கு ஒரு பெரும் கவிஞரால் எழுதப்பட்ட இரங்கல் பாட்டிற்கு தான், தனது முதல் இசை அமைத்தேன் என்று அந்த பதினேழு வயது சிறுவன் கூறினால் அது அப்போது நமக்கெல்லாம் சாதாரணம்.

ஆனால், இன்று ஒரு இசை ஞானி என்று பெரும்பாலான மக்களால்  அன்போடு அழைக்கும் தகுதி படைத்த ஒரு கலைஞன், அது தான் தனது முதல் இசை அமைத்தப் பாடல் என்பது தான் மேதைகளின் சங்கமத்தை / முக்கூடலைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது. கங்கையாய், யமுனையாய், சரஸ்வதியாய்.... மூவரும் இங்கே சங்கமித்தது தான் ஆச்சரியப் படச்செய்கிறது!

நாட்டிலோ !, வீட்டிலோ !!, காட்டிலோ !!!.....  தாமரைகள், அவைகள் எந்தச் சேற்றில் முளைத்தால் என்ன?

அவைகள்; நிறத்தால், அளவால் வேறுபட்டால் என்ன?. ஆனால், அவைகள்; அழகாலும், மணத்தாலும் ஒன்றல்லவோ!

எங்கோ பிறந்து; எப்படியெல்லாமோ வளர்ந்து; முப்பெரும் மேதைகளின் சங்கமம் எப்படி நடந்தேறியது!  இதுவே, என்னை பெரிய வியப்பாய் ஆழ்த்தியது.

அவனின்றி அணுவும் அசையாது; யாரை எதற்காகப் படைத்தானோ! அவர்கள் தாமாகவே தங்களது கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.

அது இந்த பரந்து விரிந்த ஆகாயமும், எரியும் சூரியனும், கொட்டும் அருவியும், வீசும் காற்றும், சுற்றும் பூமியும் மட்டுமல்ல. அதை, விரும்பினாலும் விரும்பா விட்டாலும்; இந்த மானுடமும் அப்படித்தான். அவர்கள் தாமாகவே தங்களது கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றிலும் எல்லாமமுமாக நீக்கமற நிறைத்திருக்கும் அவனே எல்லா அதிசயங்களையும் நடத்துகிறான். இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் யாவும் அவனின் செயலே என்ற சிந்தனையை மேல் நிறுத்துவோம்.

நன்றி வணக்கம்.
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிங்கப்பூர்

+++++++++++++++++++++++++++++++++++++===
2

மனக்கண்ணில் மகிழ்ச்சி தெரிய வேண்டாமா?

'ஒரு சீட்டும் சரியா வரலியே?  பேசாம பாதில கழண்டுக்கலாமா?  இல்ல கொஞ்ச நேரம் பார்க்கலாமா?  கடைசியா மிஞ்சி இருக்கிறது இந்த அம்பது ரூபாதான்.  அதுவும் மனைவி அரிசி வாங்குவதற்காகக் கொடுத்தது.  இதையும் இழந்து அரிசியும் வாங்காம வீட்டுக்குப் போனா நிலைமை கேவலமாயிடும்'.

'என்ன யோசிக்கிற பட்டுன்னு சீட்டைப் போடு ' பாலுவின் குரல் துரிதப்படுத்தியது.

சீட்டைப்போட்டதுதான் தாமதம், எடுத்து டிக்கி அடித்தான் ராசு.

போச்சு எல்லா பணமும் காலி.  வெறுத்துப்போய் எழுந்தான் சுந்தர்.

தண்ணியடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள் அவன் கூட்டாளிகள்.  சுந்தர் வீட்டைப் பார்க்க நடந்தான்.

வேலை இருந்தவரை கையில் பணப்புழக்கம் இருந்தது.  இப்போது கொஞ்ச நாளாகவே சரியாக வேலையும் கிடைப்பதில்லை.

மனைவியிடம் என்ன காரணம் சொல்லலாமென்று ஒரே யோசனையாக இருந்தது. சுந்தரும் இதிலிருந்து விடுபடத்தான் நினைக்கிறான்.  ஆனால் அவன் தேமேன்னு போனால் கூட நண்பர்கள் இழுத்துப்பிடித்து உட்கார வைத்துவிடுகிறார்கள்.

வீட்டுக்குப்போனவனுக்கு நினைத்தபடியே வரவேற்பு இருந்தது.  கூடவே ஆத்தாவும் அது பங்குக்கு திட்டியது.  இது வழக்கமாக நடப்பதுதான்.  அவளையும் சொல்லி என்ன பயன்?  நாலு வீடுகள்ல வேலை பார்த்து சம்பாதிக்கறதை இப்படி தொலைச்சுட்டு வந்தா?

கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்தான்.  பெண் ஒரு பக்கம் உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தது.  கிழிஞ்ச சீருடையை போட்டுக்கிட்டு வருதுன்னு பள்ளிக்கூடத்தில நாலு நாளா திட்டுறாங்களாம். 

'ஏங்க உங்க நண்பர் வந்துருக்காரு.  உங்ககிட்ட பேசணுமாம்', சிந்தனை கலைத்து எழுந்தான்.

வாசலில் வேலு.

'அண்ணே, நம்ம சந்தானம் அண்ணன் கடைல வேலைக்கு ஆள் வேணுமாம்.  உங்களைப்பத்தி சொன்னேன்.  உடனே அழைச்சுகிட்டு வரச் சொன்னாரு'.

உடனே சுறுசுறுப்பானான்.  'இரு சைக்கிளை எடுத்துகிட்டு வரேன்'.

'வேணாண்ணே நம்ம சைக்கிள்லையே போயிடலாம், வாங்க'
--------------------------------------------------------------------------------------
ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை.  காலையில் ஏழு மணிக்குக் கடைக்குப் போனால் திரும்ப வர இரவு எட்டு ஒன்பது மணி ஆகிவிடுகிறது.  இன்று சம்பள நாள்.

காலையில் கிளம்பும்போதே பரபரப்புடன் இருந்தான்.  வேலையில் இருப்பே கொள்ளவில்லை.  மெதுவாக முதலாளியிடம் ஆரம்பித்தான்.  'அண்ணே, இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புவீங்களா?'

'சரி'

பையில் சம்பளம்.  உற்சாகத்துடன் சைக்கிளை மிதித்தான்.  'நேரா அப்படியே பெண்ணோட பள்ளிக்குப் போயி அதுக்கு அப்படியே சீருடையும் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிட்டா என்ன?  அப்படியே ஆத்தாவுக்கும் ரெண்டு நல்ல புடவையா வாங்கிடலாம்'  என்று காலையில் மனதில் உதித்த திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்குடன் விரைந்தான்.

மரத்தடியில் அவனுடைய சீட்டாட்ட நண்பர்கள் பட்டாளம் குழுமியிருந்தது.

'ஏ மாப்ளே, என்னடா உன்னை பிடிக்கவே முடியல.  வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் எங்களையெல்லாம் மறந்துட்ட போல.  ஒரு கை குறையுது.  வா வா'.

'இல்லண்ணே, பெண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு பள்ளிக்கூடத்திலேர்ந்து சொல்லி விட்டாங்க.  அதான் போய்கிட்டிருக்கேன்' கூசாமல் பொய் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

ஆத்தாவும், பெண்ணும் ஏன் மனைவியும் கூட மகிழ்ச்சியாகச் சிரிப்பது மனக்கண்ணில் தெரிந்தது.

ஆக்கம்: திருமதி. S. உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

25.3.11

வாழும் நாட்களுக்கான இன்பம் எது?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழும் நாட்களுக்கான இன்பம் எது?

தினமும் விழித்தோம், குளித்தோம், உண்டோம், சற்றே பணி செய்தோம், களித்தோம், உறங்கினோம் என்றில்லாமல், நாளும், பொழுதும் இன்பமாகக் கழிய வேண்டாமா? அதற்கு என்ன வழி? அதைத் தன்னுடைய பாடலில் சொல்கிறார் சீர்காழியார். பாடல் வரிகளைக் கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள். பயன் பெறுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++======

நீயல்லால் தெய்வமில்லை - எனது நெஞ்சே
நீவாழும் எல்லை முருகா

(நீயல்லால்)

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீயென்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியானே உன்னருள் தந்தாய்

(நீயல்லால்)

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்னாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுதிடலே
இங்கு யான் பெற்ற இன்பம்

(நீயல்லால்)

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
வாழ்க வளமுடன்!

24.3.11

Short Story உண்மைக்கு ஒரே வடிவம்

=========================================================
Short Story உண்மைக்கு ஒரே வடிவம்

"இன்றைய தேதியில் என்னோட சொத்தின் மதிப்பு என்ன தெரியுமா?" என்று ஏகப்பசெட்டியார் கேட்கவும், அவரது மனைவி மீனாட்சி ஆச்சி சுவாரசியமேயில்லாமல் "ம்ம்..." என்று பதில் சொன்னார்கள்.

காலையில் வந்த நாளிதழை வைத்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவர், நிமிர்ந்து உட்கார்ந்து சொன்னார்.

"அண்ணா நகரில் வாங்கிப்போட்ட நாற்பது சென்ட்டும் எட்டு வருடத்தில் நான்கு மடங்கு உயர்ந்து விட்டது. திருநகரில் உள்ள கிரவுண்டு வீட்டுமனை முப்பது வருடங்களில் இருபது மடங்கு ஏறிவிட்டது. பத்து சென்ட் இடத்துடன் டி.வி.எஸ் நகரில் வாங்கிய வீடு பத்து மடங்கு ஏறிவிட்டது.கையில் இருக்கும் ·புளூ சிப் ஷேர்களின் இன்றைய பங்குச் சந்தை நிலவரப்படி நான்கு கோடி ரூபாய். ஆக மொத்தம் எட்டு கோடி ரூபாய். உனக்கு வாங்கிக் கொடுத்த நூற்றைம்பது பவுன் நகைகளும், சொக்கிகுளம் பொது வீடும் நீங்கலாக இந்தப் பணம் அதைத் தெரிந்து கொள்!"

"அதைத் தெரிந்துகொண்டு எனக்கு என்ன ஆகப்போகிறது? நாளைக்கே நான் என்ன பன்னீரிலா குளிக்கப் போகிறேன்? அதே அடுப்படியில், அதே பழைய கேஸ் அடுப்போடும், தேய்ந்து போன குக்கரோடும், ஓடாய் நானும் கிடக்க வேண்டியதுதான். ஒன்று கேட்கட்டுமா? கோபித்துக் கொள்ள மாட்டேன் என்றால் கேட்கிறேன்"

"ஆகா, தாராளமாகக் கேள்!"

"நீங்கள் செத்துப்போனால் அழுவதற்கு ஆள் இருக்கிறதா?"

செட்டியாருக்குச் சுரீர் என்றது. கடப்பாரையால் மண்டையில் அடித்தது போன்று இருந்தது. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு மெதுவாகக் கேட்டார்.

"ஏன் அப்படிக் கேட்கிறாய்?"

"உங்களோடு பிறந்தவர்கள் மூன்று பேர்கள். என்னோடு பிறந்தவர்கள் நான்கு பேர்கள். நமக்குப் பிறந்தவள் ஒருத்தி. அவளுக்குக் கல்யாணமாகி வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை, ஆக, யாருடனாவது உங்களுக்கு சுமூகமான உறவு இருக்கிறதா? இந்தப் பாழாகப் போகிற பணத்தை வைத்து அத்தனை பேர்களுடனும் சண்டை. யாருட னாவது பேச்சு வார்த்தை இருக்கிறதா? யார் வீட்டிற்காவது போய் வர முடிகிறதா?"

ஆச்சி சொல்வதில் உள்ள உண்மையை மறுத்துச் சொல்லத் திரானி இல்லாமல், வழக்கம் போல நக்கலடித்துப் பதில் சொன்னார்.

"அதான், நான் செத்துப்போனா அழுவதற்கு உன்னைக் கட்டி வைத்திருக்கிறதல்லவா?"

"சிகப்பட்டி ஜோசியர் சொல்லியிருக்கார். உங்களுக்கு முன்னாடி நான் போயிருவேனாம். அதனால்தான் கேட்டேன், அழுக ஆள் இருக்கான்னு!"

"செத்துப்போன பிறகு அழுதா என்ன அழுகாட்டீன்னா என்ன? நான் என்ன உக்கார்ந்தா பார்க்கப் போகிறேன்? நல்லா அன்போடு இருந்தவனையே எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறார்கள் சொல். ஊர் கூடி உரக்க அழுதிட்டு, பேரினை நீக்கிப் பிணமென்று கூப்பிட்டு, சூரியன் காட்டிடையே கொண்டு போய்ச் சுட்டு விட்டு,  நீரில் மூழ்கி நினைப்பு ஒழிவார்கள்ன்னு திருமூலரே சொல்லியிருக்காரு"

"மனித வாழ்க்கையைக் கொண்டாடி கோலம் போடுறவனுக்காகத் திருமூலர் சொன்னது அது. ரெம்ப ஆடாதே அதான் முடிவுங்கிறதுக்காக அவர் சொன்னது. எப்படி வாழணும் - செத்தா என்ன கூட வரும்னு பட்டினத்தார் சொல்லியிருக்காரே - அது உங்கள் கண்ணில் படலியா?"

"என்ன சொல்லியிருக்காரு பட்டினத்தார்?"

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, கைப்பற்றிய மாந்தரும் வீதி மட்டே, மெத்த விம்மியழும் பிள்ளைகளும் சுடுகாடு மட்டே, பற்றித் தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமுமே' ன்னாரு. அதைத்தான் எல்லாருக்கும் புரியும்படியா கண்ணதாசன் எளிமைப் படுத்தி எழுதினாரு. வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ'ன்னு எழுதினார். பாவ, புண்ணியத்தை உங்களை மாதிரிப் பாதிப்பேர் ஒத்துக்க மாட்டாங்கன்னு தான் யாரோன்னு போட்டாரு. அதோடு இல்லாமல் ஏன் அப்படிப்போட்டீர்கள்ன்னு கேட்டபோது சொன்னாராம் - புரிஞ்சுக்கிறவன் புரிஞ்சிக்கட்டும், புரியாதவனுக்குப் புரியாமலேயே போகட்டும்னாராம்!"

"அதே கண்ணதாசன்தான் சொன்னாரு 'கையிலே காசிருந்தா கழுதைகூட அரசனடின்னாரு' கையில காசில்லைன்னா ஒருத்தன்கூட மதிக்க மாட்டான் தெரிஞ்சுக்க!"

"சட்டில வேணும்னா சின்னது பெரிசு இருக்கலாம், செட்டியில சின்னது பெரிசெல்லாம் கிடையாது செட்டியார்கள்ல யாருமே ஒருத்தரை ஒருத்தர் பணத்தை வச்செல்லாம் மதிப்புக்கொடுக்கிறதில்லே அவுகவுக பழகுகிற தன்மையை வச்சும், செய்யிற சேவையை வச்சும், பண்ணுகிற தர்மத்தை வச்சும்தான் மதிப்பே தவிர நீங்க சொல்ற பணத்தை வைத்தல்ல. இன்னைக்கும் வைநாகரம் செட்டியாரையும், அண்ணாமலை செட்டியாரையும், அழகப்ப செட்டியா ரையும், பாடுவார் முத்தப்ப செட்டியாரையும், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரையும், எல்லாரும் மனசார நினைக்கிறாங்கன்னா, அதுக்கு அவர்கள் செய்த இறைப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி இதுபோல ஏதாவது ஒரு பணிதான் காரணமே தவிர, நீங்க சொல்ற பணம் காரணமல்ல - அதைத் தெரிஞ்சுகிட்டுப் பேசுங்க!"

"இப்ப என்ன பண்ணனும்கிற?"

"ஊறவுகளை யாரும் உண்டாக்க முடியாது. அத்தனை உறவுகளுமே இறைவனால் கொடுக்கப்பட்டது. ஆகவே அந்த உறவுகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளாவிட்டாலும், நோகவைத்து நொங்கெடுக்காமல்  இருக்கலா மில்லையா? கட்டித்தழுவும் படியாக இல்லாவிட்டாலும், உட்கார வைத்துப் பேசும்படியாவது இருக்க வேண்டாமா? ஆகவே உற்றார் உறவினர்களுக்கு உங்கள் மேல் இருக்கும் கடுப்பைப் போக்குங்கள் - கசப்பைப் போக்குங்கள்
- அது போதும்!"

ஆச்சியின் ஒவ்வொரு வார்த்தையும் ஒங்கிச் செவிட்டில் அறைவைதைப் போன்றிருந்தது. அதற்குப் பிறகு அவர் மெளனமாகி விட்டார்.

ஆனால் அதே நேரம் வேறு ஒரு இடத்தில் அவருடைய தம்பிகள் மூவரும் அவரைப் பற்றி சிலாக்கியமில்லாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அதுவும் யாரிடம்? சொக்கிகுளம் ராமசாமி அண்ணனிடம்.

ராமசாமி அண்ணன் எவ்வளவு பெரிய மனிதர்? செல்வாக்கு, சொல்வாக்கு மிக்கவர் என்பதோடு பல பொது சேவைகளை முன்னின்று செய்பவர். செல்வந்தர். பிறந்த ஊரிலும், வசிக்கும் மதுரையிலும் பிரபலமானவர். அரசியல் மற்றும் சமூக செல்வாக்கு உள்ளவர். அதோடு மிக்க தர்ம சிந்தனை உள்ளவர். உதவி என்று வருபவர்களுக்கும், பாகப்பிரிவினை, பஞ்சாயத்து என்று வருபவர்களுக்கும் வேண்டியதைச் செய்து கொடுப்பார் அவர். அதனால் சென்றிருக்கலாம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காலை ஏழு மணிக்கே, தன் ஊரைச் சேர்ந்த தேனா ஆனா குடும்பச் சகோதரர்கள் நால்வரில், பெரியவர் - அதாவது நம் கதாநாயகர் ஏகப்ப செட்டியாரை விடுத்து, மற்ற மூன்று சகோதரர்களும் வந்து தங்களுடைய குறையைச் சொன்னபோது, ராமசாமி அண்ணன் பொறுமையாகக் கேட்க ஆரம்பித்தார்.

வந்தவர்களுடைய தந்தையார், தான் இருந்த காலத்திலேயே தன்னுடைய சொத்துக்களையெல்லாம் ஊரில் இருந்த பொது வீடு உட்பட அனைத்தையும் பங்கு வைத்துக் கொடுத்து விட்டார். மதுரை சொக்கி குளத்தில் தான் வசித்துவந்த பெரிய வீட்டை மட்டும் தனக்குப் பிறகு எடுத்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தார்.

அதில்தான் சிக்கல் இப்போது. நான்கு கிரவுண்ட் இடத்தில் அம்சமான வீடு. இன்றைய மதிப்பில் இரண்டு கோடி ரூபாய்க்குப் போகும். அவர் இறந்து பத்து வருடமாகிவிட்டது.அதை விற்றுக் காசாக்குவதில் சகோதரர்களிடையே ஒற்றுமையில்லை. வீடு பூட்டிக் கிடக்கிறது.

“நீங்கள்தான் அவரோடு பேசி, அந்த வீட்டை விற்பதற்கு எங்களோடு அவரை ஒத்துழைக்கச் சொல்ல வேண்டும். இல்லை விற்கக்கூடாது என்று அவர் நினைத்தால் அவரையே அதைக் கிரயம் செய்து கொண்டு எங்களுக்குப் பணத்தைக் கொடுத்து விடச் சொல்லுங்கள். அது உங்களால்தான் முடியும்” என்று வந்தவர்களில் மூத்தவரான உலகப்பன் சொல்ல, மற்ற இருவரும் ஒத்தூதுவதைப்போல ஆமாம் என்றார்கள்.

ராமசாமி அண்ணன் புன்னகைத்துவிட்டுப் பதில் சொன்னார், “நீங்கள் உங்கள் பங்காளிகளில் ஒருவரைவைத்துப் பேசுங்கள். உடன்படாவிட்டால் நான் பேசுகிறேன். அதுதான் முறையும்கூட!”

உலகப்பன் விடுகிற மாதிரித் தெரியவில்லை, தொடர்ந்து சொன்னார், ”அவரோடு வேறு யாரும் பேச முடியாது. கோண வழக்குப் பேசுவார். எங்கள் ஆத்தாவிடம் அவர் பால் குடித்த காலத்துக் கதையில் இருந்து
ஆரம்பித்துப் பேசுவார். யாரும் உட்கார்ந்து கேட்க முடியாது.”

“பால் குடித்த கதையா? அது என்ன கதை?”

“அவர் கைப்பிள்ளையாக இருந்த காலத்தில் எங்கள் தாயாருக்கு பால் ஊறல் இல்லாததால் - எங்கள் வீட்டுத் தோட்டத்தில் குடியிருந்த பெண்மணி அவருக்கு ஆறுமாதம் தாய்ப்பால் கொடுத்தாளாம்!”

“அது எப்படி அவருக்குத் தெரியும்?”

“அதை மட்டுமல்ல, அதைப் போன்ற வேறு சில சம்பவங்களையும் வாய்மொழியாகக் கேட்டுத் தன் மனதில் பதிய வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் சொல்லி எப்போது பார்த்தாலும் இடக்காகப் பேசுவார். எங்கள் அப்பச்சி அவரை அண்ணாமலை அரசர் கல்லூரிக்கு அனுப்பிப் பொறியியல் படிக்க வைத்ததையெல்லாம் மறந்துவிட்டுப் பேசுவார். தான் என்னமோ சுயம்பாகப்பிறந்து வளர்ந்ததைப் போல அடாவடியாகப் பேசுவார். இப்போது அது அதிகமாகி விட்டது. அவர் ஒர வஞ்சனையாக வளர்க்கப் பெற்றாராம். அவருக்குக் குடும்பத்தில் பெரியவன் என்ற மரியாதை இல்லையாம். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? மதிப்பும், மரியாதையும் என்ன கேட்டு வாங்குகிற அல்லது காசு கொடுத்து வாங்குகிற கடைச் சரக்கா? தானாக அல்லவா அது வர வேண்டும்! அதனால்தான் நாங்கள் உங்கள் உதவியை நாடி வந்தோம்.”

ராமசாமி அண்ணன் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார், ”சரி பேசிப் பார்க்கிறேன்”

“இல்லை பேசி, முடித்துக் கொடுங்கள். நல்ல தகவலாகச் சொல்லுங்கள். நாங்கள் மீண்டும் வந்து பார்க்கிறோம்” என்று சொல்லி எழுந்தவர்கள், விடை பெற்றுக் கொண்டு திரும்பிச்சென்று விட்டார்கள்,

அதிசயத்தக்க சம்பவம் ஒன்று மூன்று நாட்களில் நிகழவிருப்பதை எதிர்பார்க்காதவர்களாய்!

+++++++++++++++++++++++++++++++++++++++++

மதுரை வெய்யிலோடு போராடியதில் மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. மூன்றம் நாள் மாலை ஆறு மணி அளவில் ராமசாமி அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தவுடன் உலகப்பனும் அவருடைய தம்பிகள் முருவரும் பரபரப்பாகி விட்டதோடு, உடனே அவருடைய அலுவலகத்திற்குச் சென்று அவரைப் பார்த்தார்கள்.

அங்கே, அவர் பேசப் பேச அவர்கள் மூவரும் வியப்பின் எல்லைக்கே போய் விட்டார்கள்.

களிமண்ணில் பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்கானதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது குரங்கு பிடிக்கபோய் அது பிள்ளையாராகி விட்டதே என்றும் அதிசயத்தார்கள்.

ராமசாமி அண்ணன் சொன்ன செய்தி அப்படி!

இவர்கள் வந்துவிட்டுப் போனதும், அவர் ஏகப்ப செட்டியாரை தொலைபேசியில் அழைத்து, உங்களைப் பார்க்க வேண்டும், எப்போது வரலாம் என்று கேட்க, பதிலுக்கு அவர், உங்களைப் பார்க்க எத்தனைபேர் காத்துக் கிடக்கிறார்கள் - அப்படியிருக்கும் போது நீங்கள் வரலாமா? நானே வருகிறேன் என்று சொல்லி அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவரை வந்து பார்த்ததாகவும், வந்தவரிடம் இவர் வீட்டுப் பிரச்சினையைச் சுருக்கமாகச் சொல்லி சுமூகமாக  என்று கூற, உடனே அவர் பதிலுக்கு எந்தவித சர்ச்சையும் செய்யாமல் நீங்கள் சொல்கிறபடி செய்ய நான் தயாராயிருக்கிறேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், கடவுள்  புண்ணியத்தில்  நான்  நன்றாக  இருக்கிறேன். என் தம்பிகள் மூவருக்கும் வியாபாரத்தில் நஷ்டம்,கடன்கள், திருமணம் செய்து வைக்க வேண்டிய  மகள்கள் என்று பணப்பிரச்சினையிருப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதனால் அந்த வீட்டை விற்று வரும் ஒரு பைசாக்கூட எனக்கு வேண்டாம். அவர்களையே எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். என்று கூறியதோடு மட்டுமல்லாமல், அதை உறுதிசெய்யும் விதமாக அடுத்த நாளே தன் தம்பிகள், பொது வீட்டை விற்று முழுப் பணத்தை எடுத்துக் கொள்ளும்படியாக அவர்களின் பெயருக்குப் பவர் ஆஃப் அட்டார்னி எழுதிக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப்போய் விட்டதாகவும் சொல்லி அந்தப் பத்திரத்தை எடுத்து அவர்கள் கையில் கொடுக்கவும் செய்தார்.

சகோதரர்கள் மூவருக்கும் மயக்கம் வராத குறை. இதை அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்க வில்லை. உலகப்பன் தான் சுதாகரித்துக் கொண்டு முதலில் பேசினார். “எங்களால் நம்ப முடியவில்லை. ஆச்சரியமாக இருக்கண்ணே!”

ராமசாமி அண்ணன் மெல்லிய குரலில் சொன்னார்,  “எனக்கும்தான். அவரைப் பற்றிய பலரது எண்ணங்களையும் அவர் தகர்த்துவிட்டார். அதைவிட ஆச்சரியம் ஒன்று இருக்கிறது. கேட்டால் அசந்து போவீர்கள். நேற்று இந்தப் பத்திரத்தைக் கொடுக்க வந்தவர், நீங்கள் ஊருக்குப் பல உபகாரம் செய்கிறீர்கள் அண்ணே. நானும் ஒன்றைச் செய்ய விரும்புகிறேன். நம்ஊர்ப் பொதுநல நிதியில் இந்தத் தொகையைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி  ஒரு செக்கைக் கொடுத்து விட்டுப்போனார்...தொகை எவ்வளவு தெரியுமா?”

ஊகம் செய்ய முடியாத சகோதரர்கள் மூவரும் மெளனமாக இருந்தார்கள்.

அவரே தொடர்ந்து சொன்னார். “ஐம்பது லட்ச ரூபாய்!”

அதோடு விடாமல் தன் மேஜை அறையில் இருந்து அந்தச் செக்கை எடுத்து அவர்களிடம் காட்டவும் செய்தார். சகோதரர்கள் மூவரும் ஆடிப்போய் விட்டார்கள். தங்கள் மூத்த சகோதரனின் மன மாற்றத்திற்கான என்னவாக இருக்கும் என்று மின்னலாக யோசித்துப் பார்த்தபோது ஒன்றும் பிடி படவில்லை!

எப்படிப் பிடிபடும்? எல்லாம் ஆச்சி போட்ட போடுதான் என்பது யாருக்குத் தெரியும்? அல்லது யாரால் ஊகம் செய்ய முடியும்?

சுயநலமில்லாமல் ஒரு பெண் பேசும் சத்தியமான வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்! கல்லையும் கரைக்கக் கூடியது அது!

”அழுவதற்கு ஆள் இருக்கிறதா? மதிப்பெல்லாம் பணத்தைவைத்தல்ல! கடைசியில் வருவது செய்த பாவமும் புண்ணியமுமே” என்று ஆச்சி அவர்கள் போட்ட போட்டில் தான் ஏகப்ப செட்டியாரின் கல்மனமும் கரைந்தது என்றால் அது மிகையல்ல! அதுதான் உண்மை!

உண்மைக்கு ஏது மிகை?

உண்மைக்கு ஒரே வடிவம்தான் - பழநி அப்பன் கையில் இருக்கும் வேலைப் போல!

+++++++++++++++++++++++++++++++++++
ஒரு குறு இதழில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுவரை 72 சிறுகதைகள் எழுதியுள்ளேன். இது 16.3.2008 இதழில் வெளி வந்த சிறுகதை. நீங்கள் படித்து மகிழ வேண்டும்
என்பதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்.

மகிழ்ந்தீர்களா - இல்லையா?
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

23.3.11

வாசல் தோறும் என்ன இருக்கும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாசல் தோறும் என்ன இருக்கும்?

    "ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு புறவிசைக்கும் அவ்விசைக்கு சமமானதும், எதிர் திசையிலும் அமைந்த எதிர் விசையை அப்பொருள் தருகிறது. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை  உண்டு" என்று நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி சுட்டிக்காட்டுகின்றது.

    பொருட்களுக்கு மட்டுமல்ல, மனித செயல்பாடுகளுக்கும் அந்த விதி பொருந்தும். அதைத்தான்  பெரியவர்கள் நல்லதையே நினை. நல்லதையே செய் என்று சொல்லுவார்கள். முற்பகல் செயின், பிற்பகல்  விளையும் என்பார்கள்.

    நல்லதும், கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. இரவு, பகல். உறவு, பகை. இன்பம் துன்பம். வறுமை  செழுமை. பெருமை, சிறுமை. என்று இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை.

    ஆகவே இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை நமக்கு வந்துவிட்டால்  எந்தப் பிரச்சினையும் இருக்காது.

    “இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம்
    இறைவன் வகுத்த நியதி”

    என்றார் கவியரசர் கண்ணதாசன்

    எதற்காக இத்தனை பில்ட் அப்’ என்றால் தசா புத்திகளில் நன்மையும் இருக்கும், தீமையும் இருக்கும். தீமையான தசா புத்தி கடந்து செல்லும் காலத்தில் பொறுமையாக இருத்தல் அவசியம். கலங்காமல் திடமாக
இருத்தல் அவசியம். சொல்வதற்கு எளிதாக இருக்கும். ஆனால் கடைபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும். இருந்தாலும் என்ன செய்வது தாக்குப் பிடிக்கத்தான் வேண்டும். இறைவழிபாடு அதற்கு உறுதுணையாக இருக்கும்

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
       வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வந்தாலும்
       வாடி நின்றால் ஓடுவதில்லை
       வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
       இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

    என்றார் கண்ணதாசன். நாம் வாடி நிற்பதால், எதுவும் நம்மை விட்டுப்போகாது. நாம்தான் அனுபவித்தாக வேண்டும்.

    கேது திசையில் அடுத்து வரும் சூரிய புத்தி சிலாக்கியமாக இருக்காது. அதுபோல சூரிய திசையில்,  கேதுவின் புத்தியும் நன்மையளிக்காது. அது சொற்பகாலமே என்பதால் தாக்குப் பிடிக்க வேண்டும். தாக்குப் பிடித்து அதைத் தள்ளிவிட வேண்டும். அவற்றிற்கான பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பயன்  பெறுக!

பாரப்பா கேதுதிசை சூரிய புத்தி
   பாங்கான நாளதுவும் நூத்தி இருபத்தி ஆறு
பாரப்பா அதன் பலனைச் சொல்லக்கேளு
   ஆகாத சத்துருவால் அக்கினியும் பேயும்
சேரப்பா சேர்ந்ததுமே கூடிக் கொல்லும்
   சேர்ந்து நின்ற தந்தை குரு மரணமாகும்
வீரப்பா வீண் சிலவு மிகவேயாகும்
   வீடுவிட்டு காஷாயம் பூணுவானே!

ஆமென்ற ரவிதிசையில் கேதுபுத்தி
   ஆகாத நாளதுவும் நூற்றியிருபத்தாறு
போமென்ற அதன் பலனைப் புகழக் கேளு
   பொருந்துகின்ற காரியங்கள் சேதமாகும்
நாமென்ற மனைவிதன்னை நாசம் பண்ணும்
   நலமில்லா சத்துருவும் நல்குவான் பார்
தாமென்ற இருந்தவிடம் விட்டே கலைக்கும்
   தரணிதனில் தண்டம்வரும் சார்ந்துகேளே


அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

22.3.11

அதிகமான போதை எதில் உள்ளது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அதிகமான போதை எதில் உள்ளது?

முதலில் போதை என்னும் சொல்லிற்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.

மது, கஞ்சா முதலியவற்றை அதிகமாக உட்கொண்டதும் ஏற்படும் நிலை. புலன் செயல்படுவதில் தெளிவற்ற நிலை. சுயக்கட்டுபாடு குறைந்த நிலை. அதுதான் போதை.

எவை எவை போதையைத் தரும்?

அன்னபூர்னா காப்பி - ஒரு கோப்பை பதினெட்டு ரூபாய் என்றாலும், இரண்டு மடக்குக் குடித்துவிட்டு வந்து,  வாசலில் உள்ள பெட்டிக்கடையில் ஒரு வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை வாங்கி இழுப்பவனிடம் சென்று கேளுங்கள்.  அந்த ஷணத்தில் கோவைக்கே நான்தான் ராஜா என்பான். அந்த போதை ஒரு அரை மணி நேரம் நீடிக்கும்.

ஹேவர்ட்ஸ் 5000 ஸ்ட்ராங் பியர் - ஜில்லென்ற பியர் 2 பாட்டில்
அல்லது சீவாஸ் ரீகல் விஸ்கி 4 லார்ஜ்  குடித்துவிட்டு
அமர்ந்திருப்பவன், அந்த நிலைதான் சொர்க்கம் என்பான். அது
ஒரு நான்கு மணி நேரம் நீடிக்கும். அதையே ஒரு அளவின்றி
குடித்தவன், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற
நிலையில் துவண்டு  கிடப்பான்.

கஞ்சா, அபின், ப்ரவுன் சுகர் என்று தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களைத் தேடி அலையும் ஆசாமிகள்  உண்டு. அவை எல்லாமே நிரந்தமற்றவை. வந்த போதை சிலமணி நேரத்தில் நீங்கி விடும்.

சில பெண் போதை ஆசாமிகள் இருக்கிறார்கள். எந்த பெண்ணைப் பார்த்தாலும் தேவதைபோல இருக்கிறாள்  என்பான். தூணுக்கு சேலை கட்டி விட்டால் கூட, எதிரில் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பான்.

பதவி போதை, புகழ் போதை, செல்வாக்கு போதை என்று போதையில் பல உட்பிரிவுகளும் உள்ளன!

இப்படிப் போதை பலவகைப்படும்.

உண்மையான போதை எதில் உள்ளது?

உண்மையான போதை உங்கள் வங்கி இருப்பில் உள்ளது. உங்கள் வங்கி இருப்பில் ஒரு பத்து லட்ச ரூபாய்  இருக்கிறது. அது என்றும் குறையாத அளவிற்கு உங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்று
வைத்துக்கொள்ளுங்கள். அது தரும் போதைக்கு நிகரானது எதுவுமே இல்லை. முயன்று பாருங்கள். முயன்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்

மேலே குறிப்பிட்டுள்ள போதைகள் எல்லாம் ஒரு காலகட்டம் வரைதான். அதாவது 50 வயதுவரை அல்லது 60  வயதுவரைதான். அதற்குப் பிறகு?

போதையற்ற நிலைதான் போதையானது. போதையை ஒதுக்கும் நிலைதான் போதையானது. நிலையாமைதான்  நிலையானது என்பதை உணரும் நிலை. அல்லது உணர்ந்த நிலை.

பொருள் தேடுவதற்காக நாம் செய்த முயற்சிகள், செய்த வேலைகள்
எல்லாம் வீண் என்று உணரும் நிலை.சேர்த்த  பொருட்கள், குவித்த செல்வங்கள், வாங்கிபோட்ட இடங்கள் எல்லாம் நமக்குப் பயன்
படாமற் போகும் அல்லதுபோகப் போகிறது என்பதை உணரும்
அல்லது உணர்ந்த நிலை.

அது எப்போது ஏற்படும்?

நமக்கு ஞானம் வரும்போது ஏற்படும்.

“நன்றிகெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால்
இல்லையொரு தொல்லையடா”


என்று கவியரசர் சொன்ன வரிகளின் அர்த்தத்தை உணரும்போது, ஒவ்வொரு மனிதனுக்கும், அது ஏற்படும். ஏற்படாவிட்டால், அதை, கேது ஏற்படுத்திக் கொடுப்பான். அவன் ஞானகாரகன் அல்லவா? அதை  ஏற்படுத்துவதுதான் அவனுடைய முக்கியமான வேலை. கேது மகா திசையின் முடிவில் அனைவருக்கும் அது  ஏற்பட்டிருக்கும். அல்லது கிடைத்திருக்கும்.

கிடைக்காவிட்டால்? ஜாதகன் இன்னும் கஷ்டப்பட வேண்டியது பாக்கி உள்ளது என்று பொருள்:-))))
+++++++++++++++++++++++++++++++++++++

கேது மகாதிசையில் கேதுவின் சுய புத்திக்குப் பிறகு வருவது கேதுவில் சுக்கிரபுத்தி, சுக்கிரனால் ஒரு சில  சந்தோஷங்கள் இருந்தாலும், புத்திக்காலம் பாங்கில்லாமல் இருக்கும். பாங்கில்லாமல் என்பதற்கு முறையில்லாமல்  என்று பொருள். பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்

2
பகையான கேதுதிசை சுக்கிர புத்தி
   பாங்கில்லா மாதமது பதினாலாகும்
தகையான அதன் பலனை சாற்றக்கேளு
   தாழ்வில்லா சத்துருவால் விலங்குண்டாகும்
நகையான பூஷணங்கள் சிலவதாகும்
   நாரிழையாள் தன்னுடனே அபமிருந்துகாணும்
வகையான ராசாவால் மனமகிழ்ச்சியாகி
   மனைவி மக்கள் தன்னுடனே வாழ்வான் காணே!


சரி, சுக்கிர திசையில் கேதுவின் புத்தி எப்படி இருக்கும்? கேதுவின் கை ஓங்கி இருக்கும். எல்லாம் கேடான  பலன்களாக இருக்கும். பாடலைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.

ஆளலாம் சுக்கிரனில் கேது புத்தி
   ஆகாத மாதமது யீரேழாகும்
வாழலாம் அதன்பலனை வகுத்துச் சொல்வேன்
   வளர்கொடியாள் தான்சாவாள் வான்பொருளும் போகும்
தாழ்வான தன்னரசு ராச்சியங்கள் போகும்
   சம்பத்துதான் போகும் தாய்தந்தை மரணம்
கோளலாம் சத்துருவால் குடிகேடாகும்
   கோதையரும்தான் போவாள் குடிகேடாமே!


(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

21.3.11

Astrology Lessons குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology Lessons குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே!

கேது மகா திசை

இதுவரை புத்திநாதன் புதனுடைய மகாதிசையையும், அதில் வரும் மற்ற கிரகங்களின் தசா புத்திகளின் பலன்களையும் பார்த்தோம்.

அடுத்து என்ன?

சொல்லவும் வேண்டுமா? தசா வரிசையில் புதனுக்கு அடுத்தது கேதுதான். தொடர்ந்து அதைப் பார்ப்போம்.

பூமியில் பிறந்தவர்கள் அனைவரும், ராகு அல்லது கேது திசையைச் சந்தித்தே ஆகவேண்டும். சந்திக்கவில்லை என்றால் அல்ப ஆயுசில் போர்டிங் பாஸ் வாங்கியிருக்க வேண்டும்.

பரணி, பூரம், பூராடம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி
அஸ்தம், திருவோணம், மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய பன்னிரெண்டு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகுதிசையைச்
சந்தித்தாக வேண்டும். திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு, பிறக்கும்போதே ராகுதிசை இருக்கும்.
ஏனென்றால் அம்மூன்று நட்சத்திரங்களுக்கும் ராகு அதிபதி.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி,
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரக்காரர்களும்
கேது திசையைச் சந்தித்தாக வேண்டும். அஸ்விணி, மகம், மூலம்
ஆகிய நட்சத்திரக்காரர் களுக்கு, பிறக்கும்போதே கேது திசை
இருக்கும். ஏனென்றால் அம்மூன்று நட்சத்திரங்களுக்கும்
கேது அதிபதி.

பொதுவாக கேது திசை 90% பேர்களுக்கு நன்மையளிப்பதாக இருக்காது. கேது ஞானகாரகன். திசை முழுக்கப் பலவிதமான கஷ்டங்களுக்கு ஜாதகனை உட்படுத்தி இறுதியில், திசை முடிவில் ஜாதகனுக்கு ஞானத்தைக் கொடுப்பான். கஷ்டப்படாமல் ஞானம் எங்கிருந்து வரும்? இழப்புக்கள், பிரிவுகள், நஷ்டங்கள், துயரங்கள், துரோகங்கள், துன்பங்கள், உடல்வலி, மனவலி என்று பலவிதமான வலிகளைக் கொடுத்து முடிவில் ஜாதகனை மேன்மைப் படுத்துவான். ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து வலியின் அளவுகள் மாறுபடும்.

உதாரணத்திற்கு வம்பு, வழக்கு என்று ஒரு ஜாதகன் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடும்போது, நல்ல வழக்குரைஞரும், ஹோண்டா சிட்டி காரும் இருப்பது ஜாதகத்தின் மற்ற அம்சத்தினால் என்று கொள்க! அதேநேரம், கடும் வெய்யிலில் குடையைப் பிடித்துக் கொண்டு நீதி மன்றம் செல்லும் நிலைமையும், வக்கீலுக்குக் கொடுக்க மனைவியின் நகையை அடகு வைத்துப் பணம் புரட்டும் நிலையும் உண்டானால், அது ஜாதகத்தின் தீய அமைப்பினால் என்பதையும் அறிக!

கேது மகா திசை மொத்தம் 7 ஆண்டுகள் காலம் நடைபெறும்.

அதில் (கேது மகாதிசையில்) முதலில் வருவது கேதுவின் சொந்தபுக்தி. அதன் கால அளவு (7 X 7 = 49) 4 மாதங்கள் + 27 நாட்கள். அதற்கான பலனைக் கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுக. பாடல் எளிமையாக இருப்பதால் விளக்கம் எழுதவில்லை!

ஆமென்ற கேது திசை வருஷம் யேழு
     அதினுடைய புத்தி நாள் நூற்றி நாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனை புகழக் கேளு
     புகழான அரசர்படை ஆயுதத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதிகாணும்
     தனச்சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாம்
     நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே!


சுருக்கமாகச் சொன்னால் குளத்திலே தண்ணியில்லாத காலம். மீன்களும் இருக்காது. கொக்குகளும் வராது. வறண்ட காலம்.

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

20.3.11

பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே!

----------------------------------------------------------------------------------
பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே!


இன்றைய வாரமலரை நமது வகுப்பறை மூத்த மாணவர் ஒருவரின் கட்டுரை ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++
நினைக்கத்தெரிந்த மனமே உன‌க்கு மறக்கத் தெரியாதா?' என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு.சில நிகழ்வுகளை மறக்கவே முடியவில்லை. அப்படித்தான் சில மனிதர்களையும்.மனித‌ர்களும் நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து இருப்பதால் மனிதரை நினைத்தால் நிகழ்வும்,நிகழ்வை நினைத்தால் அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதரும் மனத்திரையில் தோன்றி ஆட்டம் போடுகிறார்கள்

.நான் என்ன செய்யட்டும்? அதுதான் ஒரு வடிகாலாக வகுப்பறைiயில் வந்து என் மனச் சுமைகளை இறக்கி வைக்கிறேன். "மூத்த குடிமகன்" என்ற பட்டத்தையும், கட்டணச் சலுகையையும் இரயில்வேக்காரர்கள் கொடுத்திருக்கிறார்கள். 'பெரிசு'களுக்கே உரிய ஆதங்கங்கள் அதிகமாகி விட்டது.

என்னுடைய ஆக்கங்க‌ளில் பலவிதமான நிகழ்வுகளையும்,நான் சந்தித்த நிஜ மனிதர்களையும் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

மறதி என்ற ஒன்றை மட்டும் இறைவன் வைக்கவில்லை என்றால் பலரும் பைத்தியம் பிடித்துத்தான் அலைவோம். 'தெரிந்து எடுக்கப்பட்ட மறதி' (SELECTIVE AMNESIA) என்று ஒன்று சொல்வார்கள்.அது என்னவென்றால், எல்லாம் நினைவு இருக்கும்;ஆனால் மறந்து விட்டாதாக வெளியில் நாடகம் ஆடுவது.

என்னுடைய பிரச்சனை என்னவென்றால் மறதி குறைவாகவும், நினைவில் நிற்பவை அதிகமாகவும் உள்ளது. .

இப்போதும் ஒரு மறக்க முடியாத நிகழ்வைச் சொல்கிறேன்.அதனுடன் சம்பந்தப்பட்டவர் யார் தெரியுமா?

மனுநீதிச்சோழர், திருக்குவளை தந்த திருச்செல்வர்,முத்தமிழ் வித்தகர், வாழும் வள்ளுவர்,தற்காலத் தொல்காப்பியர் (இப்படியெல்லாம் அவரை கூப்பிடக்கூடாது என்று அன்புக்கட்டளை இட்டுள்ளார்; அதற்காக நாம் கூப்பிடாமல் இருக்க முடியுமா?) மூத்த அரசியல் சாணக்கியர், மத்திய அரசை தன் கைப்பிடியில் வைத்திருப்பவர்(சூத்ரதாரி),தமிழ் இனக் காவலர், தமிழக முதல்வர் (இன்னும் என்னென்ன‌வோ உண்டு)
டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

ஒரு படத்தில் போக்குவரத்துக் காவலர்களிடம் விவேக் பீலாவுடுவார் "எனக்கு ஐ ஜியைத் தெரியும்!"  காவலர்கள் உடனே சல்யூட் அடிப்பார்கள். "ஐ ஜிக்கு என்னைத் தெரியாது!"என்பார் விவேக். அவ்வளவுதான், தாங்கோ தாங்குதான்.

அது போலத்தான் நானும். எனக்கு டாக்டர் கலைஞரைத் தெரியும். அவ‌ருக்கு என்னைத் தெரியாது. அப்படி என்னைத் தெரியாமல் இருந்தும் என் வாழ்க்கைப் பாதையையே அறவே மாற்றி விட்டு விட்டார் கலைஞர்.அவரை நான் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி ஆகிவிட்டது.

அப்படி என்னதான் நடந்தது? சொல்கிறேன் அய்யா சொல்கிறேன். அதற்கு முன்னால் கொஞ்சம் அஸ்திவாரம் போட வேண்டியுள்ளது.

சேலம் அரசுக் கல்லூரியில் என்னுடன் பிஎஸ்ஸி (கெமிஸ்டிரி) படித்தவர் சி.பாண்டியன்.அவருடைய தந்தையார் சித்தையன் பெரியார் பக்தர். நான் கல்லூரி படித்த சமயம் தி மு க ஆட்சிக்கு வந்து விட்டது. எனவே நண்பர் பாண்டியனின் குடும்பத்தாருக்கு ஆளும் கட்சி பிரமுகர்கள் எல்லாம் நல்ல பழக்கம்.இளங்கலை முடித்தபின்னர் பாண்டியன் சென்னை வந்து அழகப்பா காலேஜ் ஆஃப் டெக்னாலஜியில் எம் எஸ் சி பயோகெமிஸ்டிரியில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொண்டு, என்னைக் காண வந்தார். அப்போது என் மறைந்த மூத்த அண்ணன் வீட்டில் என் பெற்றோருடன் சென்னை கோட்டூர் அடையாரில் வசித்து வந்தேன். ஏ சி டெக் குக்கும் என் வீட்டிற்கும் கூப்பிடு தூரம்.  பட்டப் படிப்புக்குப் பின் என்ன செய்வது என்று குழ‌ப்பத்தில் நான் இருந்த போது பாண்டியன் வந்தார்.தான் ஏ சி டெக்கில் சேர்ந்து விட்டதைக் கூறினார்.
"உனக்கென்னப்பா!.உங்கள் ஆட்சி நடக்கிறது. எனக்கெல்லாம் எங்கே இடம் கிடைக்கும்?" என்று பெருமூச்சுடன் கூறினேன்.

"என்ன,முத்து! இப்படி சலித்துக் கொள்கிறாய்?!உனக்கும் சேர விருப்பமா? உடனே வா!சான்றிதழையெல்லாம் கொண்டுவா!உடனே பேராசிரியரைப் போய் பார்ப்போம்!" என்றார். 'சரி' என்று அவருடன் போனேன்.கல்லூரியில் அங்கும் இங்கும் அலைந்து, பலரையும் பார்த்து, தன் அப்பா பெயரைச் சொல்லி, இறுதியாக முடிவு எடுக்க வேண்டிய பேராசிரியரிடம் அழைத்துச் சென்றார். அவர் ஒன்றும் பேசாமல்,"நாளை பிற்பகலுக்குள் கட்டணத்தைக் கட்டி விடு.நாளை மறுநாள் வகுப்புத் துவங்குகிறது.பிற்பகல் ஒரு மணிக்குள் நீ தொகை செலுத்தாவிட்டால் வேறு மாண‌வனுக்கு 'சீட்' போய் விடும்.கட்டண ரசீது, உன்னுடைய அசல் சான்றிதழ் எல்லாவற்றையும் நாளை மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும்" என்றார்.மகிழ்ச்சியுடன் வீடு வந்த்து சேர்ந்தேன்.

அப்பாவிடமும் அண்ணனிடமும் செய்தியைக் கூறினேன்."சரி நாளை காலை சீக்கிரம் கிளம்பி நந்தனத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகம் போய் உன் பட்டப் படிப்பைப் பதிவு செய்து விட்டு, பின்னர் கல்லூரியில் வந்து சான்றிதழ்களை ஒப்படைத்துவிடு" என்று அண்ணன் ஆலோசனை கூறினார்.

மறு நாள் காலை திட்டமிட்டபடி நந்தனம் வேலை வாய்ப்பு அலுவலகம் சென்றேன். விரைவில் பதிவு செய்ய முடிந்தது. செய்து விட்டு அந்த அலுவலக வாசலுக்கு வந்து நின்றேன்.அவ்வளவுதான் தெரியும். ஒரு பெருங் கூட்டத்தால் மோதித் தள்ளப்ப‌ட்டேன். நான் ஒரு புறமும் என் கையில் வைத்திருந்த சன்றிதழ் கோப்பு ஒரு புறமும் தூக்கி எறியப் பட்டோம்.என் கண்ணுக்கு முன்னால் என் சான்றிதழ்கள் கூட்டத்தாரின் கால்களில் பந்தாடப்பட்டு சிதறி சின்னாபின்னமாகிக் கண் காணாமல் போய் விட்டது.

ஏன் அந்தக் கூட்டம்? டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல் முதலாக அமெரிக்கா சென்று திரும்பிய வரை மீனம்பாக்கத்தில் வரவேற்று நகருக்குள் அழைத்துச் செல்வோரின் பெருங்கூட்டத்துக்குள் சுனாமி போல் இழுத்துச் செல்லப்ட்டு சீர் அழிந்தேன்.

வேதனையுடன் கல்லூரிக்குச் சென்று நடந்ததை சொல்லி அழுதேன்.

"வெரி சாரி!ஏற்கனவே நாங்க‌ள் பாடம் துவங்க வேண்டிய நாள் தள்ளிப் போய்விட்டது.உனக்காகக் காத்திருக்க முடியாது" என்று சொல்லி விட்டு வரிசையில் அடுத்துத் தயாராக இருந்த மாணவனைப் பணம் கட்டச் சொல்லி விட்டார். நண்பர் பாண்டியன் மிகவும் வருந்தினார். "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே" என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்.

எங்க‌ள் பாதை மாறிவிட்டது.நண்பர் பாண்டியன் பட்ட மேற்படிப்பு முடித்து, பி ஹெச் டி முடித்து டெல்லி ஜவஹர்லால் நேரு ப‌ல்கலையில் பேராசிரியராகச் சேர்ந்தார். 1978 வரை அவருடன் தொடர்பு இருந்தது.இப்போது எங்கே இருக்கிறாரோ? எங்காவ‌து அமெரிக்கப் பல்கலையில் இருக்கலாம். நான் ஒரு எழுத்தராக என் பணிக் காலம் முழுதும் உழன்றேன்.

எல்லாம் சரி! டாக்டர் கலைஞர் இதில் எப்படி சம்பந்தம் என்கிறீர்களா?

சம்பந்தம் உள்ளதோ இல்லையோ, நான் நண்பர் பாண்டியனைப் போலப் பேராசிரியராக முடியவில்லையே என்று நினைக்கும் போதெல்லாம்,டாக்டர் கலைஞர் என் நினைவில் வருவதைத் தவிர்க்க் முடியவில்லை. ஏன் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அன்புடன்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி


 கட்டுரையாளர் கல்லூரியில் படித்த காலத்தில் 
எடுக்கப்பெற்ற புகைப்படம்!
==================================================================
ஹி..ஹி.. வேறொன்றுமில்லை.  வாகனத் திருட்டைத் தடுப்பதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டியதிருக்கிறது.
சரி.. உயிரைப்  பூட்டி வைக்க ஏதேனும் வழியுண்டா?
வாழ்க வளமுடன்!

19.3.11

இயற்கைப் பேரழிவை இயன்றவரை சொல்லும் பஞ்சாங்கங்கள்!

---------------------------------------------------------------------------------
 இயற்கைப் பேரழிவை இயன்றவரை சொல்லும் பஞ்சாங்கங்கள்!

வகுப்பறையின் மூத்த மற்றும் நமது மதிப்பிற்குரிய மாணவர், அன்பர், திருவாளர் வி.கோபாலன் அவர்களிடம் இருந்து வந்த கடிதத்தை அப்படியே கொடுத்துள்ளேன். படித்துப் பயன்பெறுக!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------

அன்புடையீர்,

மிகவும் பிற்போக்கானவர்களைக் குறிப்பிட பொதுவாக "அவன் ஒரு பழைய பஞ்சாங்கம்" என்கிறார்கள் அல்லவா? அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக என் நண்பர் எனக்கு அனுப்பியுள்ள விக்ருதி வருட பஞ்சாங்கத்தில் வெளியாகியுள்ள இவ்வாண்டின் பலன்களில், மாசி மாதத்தில் இமய மலைப் பகுதியிலும், இந்தோனேஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் பூகம்பம், வெள்ளப் பெருக்கு, போன்ற இயற்கை பேரழிவுகள் வரும் என்று கூறப்பட்டிருப்பதைப் பகுத்தறிவு வாதிகள் கவனிக்கட்டும். இனியாவது அறிவியல் பூர்வமான பஞ்சாங்கப் பலன்களை அவர்கள் இழிவு செய்யாமல் இருக்கட்டும். இதோ அந்தக் கடிதம், அதில் உள்ள பலன்களைப் பாருங்கள்.

அன்பன்,
வி.கோபாலன்
தஞ்சாவூர்
--------------------------------------------------------------
Go thorugh this who know tamil. Our Hindu panchangam has already predicted earth quake in japan one year back itself
++++++++++++++++++++++++++
படத்தின் மீது கர்சரைவைத்துக் கிளிக்கிப் பாருங்கள் படம் பெரிதாகத் தெரியும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வருந்த வைக்கும் செய்தி!

ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து அணு உலைகள் வெடித்தன.

அவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும் அணு உலைகளை குளிர்விக்கவும் கடுமையாக போராடி வருகிறது ஜப்பான்.

இந்நிலையில் மக்களை கொன்றும் குவிக்கும் அளவிக்கு மிக மோசமாக கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கண்கலங்கியவாறு டோக்கியோ மின் அணு உலை தலைமை அதிகாரியான Akio Korimi  பேட்டியொன்றில் தெரிவித்துள்ளதாக சில சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அழுதபடி பேட்டியளிக்கும் அவரது படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


அணு உலைகள் மீது விமானமூலமும் தரையிலிருந்தும் தண்ணீரை கொட்டும் நடவடிக்கைகளினால் அணு உலைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூற முடியாது எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.

கதிர்வீச்சின் தாக்க அபாய எச்சரிக்கையை இன்று ஜப்பான் அதிகரித்திருந்தமையானது 1979 இல் பெனுசிலாவியாவில் Three Mile Island  அணு உலை விபத்தின் போது ஏற்பட்ட கதிர்வீச்சு தாக்கத்தின் அளவுக்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய அரசு தொடர்ந்து கதிர்வீச்சின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் இன்னமும் அதிகமான அபாய கட்டத்தை தாண்டவில்லை எனவும் தெரிவித்து வருகின்றது. எனினும் கதிர்வீச்சு தாக்கம் தொடர்பான உண்மையை ஜப்பான் மறுத்து வருவதாக ஜப்பானிய மக்கள் விசனம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

உலக நாடுகள் பலவும் ஜப்பானில் இருக்கும் தங்கள் பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- நன்றி: தமிழ் மீடியா செய்திகள் வலைத்தளம்
 

வாழ்க வளமுடன்!