மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label தத்துவம். Show all posts
Showing posts with label தத்துவம். Show all posts

12.8.19

வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்!!!


வாழ்க்கைத் தத்துவம் அடங்கிய செய்யுள்!!!

அருமையான செய்யுள் !

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன!
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்து செட்டியாரே"*

எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்

வெங்காயம் ---- (வெண்+காயம்) வெண்மையான உடல்
சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)
வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்
ஆவதென்ன - ஆவது ஒன்றுமில்லை
இங்கார் - - - - - - (இங்கு + ஆர்)  இப்பூலகில் யார்
சுமந்திருப்பார் இச்சரக்கை ---  அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
மங்காத ---- குறைவில்லாத
சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)
தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்
ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்
செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்

 வெண்மையான உடல் சுருங்கி போனால்  வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்  ஆவது ஒன்றுமில்லை
 இப்பூலகில் யார் அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
 குறைவில்லாத வைகுந்தம்  அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)  நீ கொடுத்துவிட்டால்
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும் அனைத்து  செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
 இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்
------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
======================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.2.19

பட்டினத்தாரைப் பற்றி கவியரசர் சொன்னது!!!


பட்டினத்தாரைப் பற்றி கவியரசர் சொன்னது!!!

*கவிஞா் கண்ணதாசன் சொல்கிறாா்:*
✍✍✍✍✍✍✍✍
*ஞானம் பிறந்த கதை:  பட்டினத்தாா் சொல்கிறாா்:*
😌😌😌😌😌😌😌😌😌

புனித மண்டபத்திற்குள் இந்த பூத உடல் நுழைந்தது.

சமணர்களும், பிறரும் கூட காலில் விழுந்து வணங்கக் கூடிய துறவியாக, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருந்தாா் சிவானந்தயோகி. நான் அவா் காலில் விழுந்து வணங்கினேன். அவா் கண்ணைத் திறந்து பாா்த்தாா். நான் விவரங்களைச்  சொல்லவே இல்லை; அவரே சொன்னாா்.

*"தண்ணீாில் குளிப்பவனுக்கு நெருப்புச் சுடும்; நெருப்பிலே குளிப்பவனுக்கு தண்ணீா் சுடும்; இரண்டுக்கும் நடுவிலே*
*உட்காா்ந்திருப்பவனுக்கு இரண்டுமே சுடும்.  போகி நீாிலே* *குளிக்கிறான்.  யோகி நெருப்பிலே* *குளிக்கிறான். ரோகி நடுவிலே நிற்கிறான்; நீ*  *போகத்துக்குத் திரும்ப நினைத்தால் முடியாது;*
*ரோகத்திலேதான் விழ வேண்டி இருக்கும்."* அவா் பேசி முடித்தாா்.

என்னை ஆசிா்வதித்தாா். இடது காதிலே ஒரு மந்திரத்தைச் சொன்னாா். அவா் அதைச் சொல்லும் போது, வலது காதிலே ஒரு வைணவ மந்திரம் கேட்டது.  *"பிரம்மம் ஒன்றே"* என்பதை அது உணா்த்திற்று.

அந்த லயத்திலேயே நான் புறப்பட்டேன்.  மடத்தின் வாசலில் திருவோடு இல்லாதவா்களுக்கு அழகான திருவோடுகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தாா்கள். அது ஒரு வகை தா்மம்.

அந்தத் திருவோட்டை கையில் வாங்கிக் கொண்டு ஊரே என்னை வேடிக்கை பாா்க்கும் நிலையில் நேரே என் தாயாாின் இல்லத்துக்கு
வந்தேன். முதல் பிச்சையைத் தாயின் கையிலே தான்
வாங்க வேண்டும்.

*"வீடிருக்க, தாயிருக்க, வேண்டுமனை யாளிருக்க,
பீடிருக்க, ஊணிருக்க, பிள்ளைகளுந் தாமிருக்க,
மாடிருக்க, கன்றிருக்க வைத்த பொருளிருக்க,
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே?"*  ..... என்று ஆயிரக்கணக்கானவா்கள் வேடிக்கை பாா்க்க, தாயின் முன்னாலே நின்று, *"தாயே பிச்சை"*  என்று கோஷம் கொடுத்தேன்.

கையில் ஏதும் இல்லாமல் வந்த என் தாயாா், என்னைப் பாா்த்து சிாித்தப்படி, *"மகனே இன்னும் நீ பணக்காரனா"* என்றாா்கள்.  *"ஏன் தாயே அப்படிச் சொல்கிறீா்கள்?"* என்றேன்.  *"வீடு உனக்கு அந்நியமாகி விட்டது; ஆனால், ஒரு ஓடு உனக்கு சொந்தமாகி விட்டதே!"* என்றாா்கள்.

*"எனக்கு ஐந்தாவது ஞானம் பிறந்தது"*

அந்த ஓட்டைத் தூக்கி
தூக்கியெறியப் போனேன்.

*"நில், அந்த ஓட்டை வைத்துக் கொள்.  ஆனால், அதன் மீது பாசம் வைக்காதே!"*  அது காணாமல் போனால், *"என் ஓடு எங்கே?" என்று தேடாதே!"* என்றாா்கள். பிறகு பிச்சை இட்டாா்கள்.

அடுத்தது மனைவியின் இல்லம்; அவள் கண்ணீராலே பிச்சையிட்டாள். .
-----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.7.17

அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?


அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
1
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
2
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
3
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
4
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
5
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
6
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
7
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
8
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
9
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
10
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.2.17

என்ன பாவம் செய்தேனோ?




என்ன பாவம் செய்தேனோ? 

 பாடல் வரிகளைக் கேளுங்கள். அருமையான பாடல். அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் எழுதியது. உங்கள் வசதிக்காக பாடல் வரிகளையும் கொடுத்துள்ளேன். மேலும் பாடலின் ஒலி வடிவத்தையும் கொடுத்துள்ளேன்.

 அன்புடன்
 வாத்தியார்
---------------------------------------------------------------------------------------
“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென் றறியேனே!
(மநு முறை கண்ட வாசகம்)
- வள்ளலார்
Vallalar Song - Enna Paavam Seitheno - Mazhaiyur Sadasivam



=====================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

12.12.16

சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!


சின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்!!!

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா  அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன  பிரியும், பிரிந்தன புணரும்.

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்

விரும்பிப் போனால் விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.6.16

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?

இதற்கான  விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். ”சரி” என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனைக் காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?' விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .

இன்று எது
உன்னுடையதோ
அது நாளை
வேறு ஒருவருடையது.
எங்கிருந்து
பெறப்பட்டதோ
அது அங்கேயே
திரும்பப்பெறப்படும்.
சந்தேகம் என்பது
கொடிய நோய்.
மரணமே முடிவு.

நம்பிக்கை என்பது
உயிரைப் போன்றது.
அதுவே நிரந்தரமான
மகிழ்ச்சியாகும்.

நம்பிக்கையோடு
வாழ்வோம்.
மகிழ்ச்சியைப்
பெறுவோம்.
---------------------------
படித்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!