மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.11.07

அட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை!

அட, புதுக்கவிஞரா நீங்கள் - எழுதுங்கள் கவிதை!

வீட்டில் ஒரு கவியரங்கம். நான்கு நண்பர்களின் கலந்துரையாடல்
- கவிதை வரிகளிலும் உரையாடல்.

நண்பர் ஒருவர் தலைப்பைச் சொன்னார்:
அர்ச்சனை:

பத்து நிமிடங்களில் எழுதி, நான் ஒரு கவிதையை வாசித்தேன்.
அதைக் கீழே கொடுத்துள்ளேன்.


அர்ச்சனை:

குமரனுக்குச் செய்வார் கோயிலில் அர்ச்சனை
குழந்தைக்குச் செய்வார் வீட்டிலே அர்ச்சனை
மாமியார் செய்வார் பகலிலே அர்ச்சனை
மருமகள் செய்வாள் இரவிலே அர்ச்சனை
முப்பதில் தொடங்கும் மனிதனின் அர்ச்சனை
நாற்பதில் தொடரும் மனைவியின் அர்ச்சனை
எவர் செய்தாலும் எழிலாகும் அர்ச்சனை
என்றும் பயன்தரும்! செய்வீர் அர்ச்சனை

அப்பா செய்தார் ஆயிரம் அர்ச்சனை
அனுதினம் நடக்கும் ஆறுகால அர்ச்சனை
அர்ச்சனை கேட்டேன் அடியேன் வளர்ந்தேன்
அனுபவம் பெற்றேன் அத்தனையும் உண்மை!
உணவின் அருமை பசித்தால் தெரியும்
உறவின் அருமை இழந்தால் தெரியும்!
அப்பாவின் அருமை இருக்கையில் தெரியவில்லை
அது தெரிந்தபோது அவர் இருக்கவில்லை!
-------------------------------------------------------

எப்படி இருக்கிறது சாமி?

சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.
என் வகுப்பறை மாணவர்களில் எத்தனைபேர்கள்
கவிதை ரசிகர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்
எழுதுங்கள் கவிதை: இடுங்கள் அதைப் பின்னூட்டத்தில்

இலக்கணம் தெரிந்தவர்கள் வெண்பா, ஆசியப்பா என்று
கலக்குங்கள்.

இலக்கணம் தெரியாதா? பரவாயில்லை - புதுக்கவிதையாக எழுதுங்கள்

அதுவும் வேண்டாமா? பரவாயில்லை கருத்தை உரையாகவும் எழுதலாம்

மிகச் சிறந்த கவிதைக்கு அல்லது கருத்திற்கு ஒரு நல்ல புத்தகம்
பரிசாக அனுப்பி வைக்கப்படும்

மொத்தம் மூன்று தலைப்புக்கள்:
1. தேங்காய்
2. (வாழைப்) பழம்
3. வெற்றிலை, பாக்கு

எதாவது ஒரு தலைப்பிற்கும் எழுதலாம் - அல்லது மூண்று தலைப்புக்களுக்குமே எழுதலாம்
வரிகளுக்கு வரம்பில்லை

கலக்குங்கள் - காத்துக் கொண்டிருக்கிறேன்
அன்புடன்,
வாத்தியார்

18.11.07

JL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.


------------------------------------------------------------------------------------------------------------
JL.51 ஜோதிடம் என்னும் மகாசமுத்திரம்.
ஜோதிடம் என்னும் மகாசமுத்திரத்தில் என்னோடு சில மாதங்கள் பயணித்தீர்கள்.
அந்த சமுத்திரத்தை முற்றிலும் அறிந்தவர்கள் இன்றைய தேதியில் எவரும் இல்லை.

மாமுனிவர்களும், ரிஷிகளும் அறிந்து, உணர்ந்து எழுதிவைத்துவிட்டுப்போனவைகள்
நூல் வடிவில் ஏராளமாக உள்ளன. சரவளி, காலப் பிரகாசிகா, பாராசுரர் மற்றும்
ஜெய்மானி போன்ற சான்றோர்களும், அகத்தியர், புலிப்பாணி போன்ற சித்தர்களும்
எழுதிய நூல்கள் அடிப்படை நூல்களாகும்.

பல பெரியவர்கள் அவற்றை எளிய நூல்களாக மாற்றி எழுதிவைத்து விட்டுப்
போயிருக்கிறார்கள்.

நான் கற்றது கைமண் அளவுதான். நான் படித்த சில நூல்களை
நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

நான் படித்தது அவ்வளவும் என் நினைவில் இருக்கிறதா என்று கேட்டால்
நிச்சயமாக இல்லை!

எனக்குத் தெரிந்தவற்றில் சில விஷயங்களை மட்டும்தான் இதுவரை எழுதினேன்.
இதுவரை 50 அத்தியாயங்கள் எழுதியுள்ளேன்

அவ்வளவு நூல்களையும் படித்துத்தேறுவதென்றால் இந்த ஜென்மம் (ஆயுள்)
போதாது.

அடிப்படைப் பாடங்களை மட்டுமே சொல்லிக் கொடுத்துள்ளேன்.அது போதும்
மேலே கற்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் - படிக்க வேண்டிய
நூல்களை முன் பதிவு ஒன்றில் பட்டியல் இட்டுக் கொடுத்துள்ளேன்.

அதற்கான சுட்டி இங்கே உள்ளது:

அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுகிறேன். அதோடு பல ஜோதிட மாத
இதழ்கள் வருகின்றன. அவற்றையும் வாங்கித் தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்
அவற்றில் பல மேதைகள் தங்கள் ஜோதிட அனுபவங்களை ஆதாரத்துடன்
சுவைபட எழுதிவருகிறார்கள். பயனுள்ளதாக இருக்கும்.
------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தின் பிரம்மாண்டத்திற்கு இரண்டு செய்திகளைத் தருகிறேன்

1. ஒருவரின் ஜாதகம் போல இன்னொருவரின் ஜாதகம் அமைய எத்தனை
ஆண்டுகள் பிடிக்கும்?

ஒருவரின் ஜாதகத்தில் உள்ளதுபோல, குரு, சனி, ராகு ஆகிய மூன்று கிரகங்
களும் அதே நிலைக்கு வர (positionக்கு வர) குரு 12 ஆண்டுகள் x
சனி 30 ஆண்டுகள் x ராகு 18 ஆண்டுகள் = 12x30=360 x18 =
6,480 ஆண்டுகள் ஆகும். அதோடு மற்ற கிரகங்களின் சுழற்சியையும்,
லக்கினத்தின் அமைப்பையும் (360) பெருக்கினால்
ஒரு யுகத்தின் அளவு வரும். ஆகவே ஒரு யுகத்திற்கு ஒரு ஜாதகம்தான்.

2. எத்தனை விதமான ஜாதகங்களை எழுதலாம்?

ஒன்பது கிரகங்கள் + ஒரு லக்கினம் = 10 x 12 லக்கினங்கள் =
10 to the power of 12 (permutation combination)
= One followed by 12 zeros = 100000, 00,00,000 =
You can write 1,000 billion horoscopes
Today's world population is only six billion
---------------------------------------------------------------------
சம்ஸ்கிருதத்தில் அந்த ரிஷிகள் எழுதிவைத்திவிட்டுப்போன ஜோதிடக்
குறிப்புகள் (சுலோகங்கள்) மொத்தம் 1,20,000. அத்தனையும் உரை வடிவத்தில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் பதிவிடுவது என்பதும்,
படிப்பது என்பதும் சாத்தியமல்ல!

1.How to judge a Horoscope - Part 1
2.How to judge a Horoscope - Part 2
3.Hindu Predictive Astrology
4.Ashtakavarga System of Prediction

Written by Dr.B.V Raman, Bangalore

இந்த நான்கு நூல்களையும் வாங்கிப் படித்தால் போதும். ஜோதிடத்தை ஓரளவிற்குத்
தெரிந்து கொள்ளலாம். உங்கள் ஜாதகத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஆயுட்காலத்தைக் கணிக்கும் Formula கொடுக்கப் பட்டுள்ளது.
விருப்பப்பட்டால் உங்கள் ஆயுட்காலத்தை நீங்களே கணித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதுவும் அஷ்டவர்க்க முறையில் இன்னும் எளிமையாகத் தெரிந்து கொள்ளலாம்
நல்ல நேரம், நல்ல திசை, கெட்ட நேரம், கெட்ட திசை எல்லாம் எண் முறையில்
அஷ்ட வர்க்கத்தில் சிறப்பாகத் தெரிந்து கொள்ளலாம்.

அஷ்டவர்க்கம் படிக்கும்போதுதான் உலகில் எல்லோரும் சமம் என்பது தெரியவரும்.
அனைவருக்குமே Total Marks(Bindhus) 337 தான்.

337 Devide by 12= 28

சராசரி மதிப்பெண் 28தான். 28ற்கு மேலே உள்ள வீடுகள் நல்ல நிலைமையில்
உள்ளனவாகும். 35 ற்குமேல் மதிப்பெண்கள் உள்ள வீடுகள் பிரமாதமான பலனைத்
தரும். 20ற்கும் கீழே உள்ள வீடுகள் மிகவும் மோசமான பலனைத் தரும்.

இரண்டுவீடுகளில் அதிக மதிப்பெண்கள் என்றால் அங்கே அதிகமாக விழுந்த
எண்களினால் வேறு வீடுகளில் எண்கள் குறையும். ஏனென்றால் மொத்தம்
337 தானே?

லக்கினம், மற்றும் இரண்டாம் வீட்டிற்கு உரிய பலாபலன்கள் எப்படி
மாறுபடும் என்பதை எழுதினேன். அதே முறையில்தான் மற்றுமுள்ள பத்து
வீடுகளுக்கும் பலன்களைப் பார்க்க வேண்டும்.

12 வீடுகளுக்கும் உள்ள வேலைகளைப் பட்டியலாகக் கீழே கொடுத்துள்ளேன்


----------------------------------------------------------------

நான் அந்தப் புத்தகங்களில் உள்ளவற்றையெல்லாம் எடுத்து எழுத முடியாது!

காப்புரிமை (Copy Right) பெற்றுப் பதிவு செய்யப்பெற்ற நூல்கள் அவைகள்
ஆகவே எனக்குள்ள சிரமத்தைப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

அடிப்படைப் பாடங்களைச் (Basic Lessons) சொல்லிக் கொடுத்துவிட்டேன்.
மேல் நிலைப் பாடங்களை (Advanced Lessons) நீங்களே படித்துக் கொள்ள
வேண்டியதுதான். வேறு வழியில்லை!

இதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இனிப் பாடங்கள் வராது. ஆனால் சுவையான ஜோதிடச் செய்திகளைக் கட்டுரை
வடிவில் நேரம் இருக்கும்போது எழுதுகிறேன். அது சுவையாகவும், பயனுள்ள
தாகவும் இருக்கும்

இதுவரை அதரவு கொடுத்து என்ன உற்சாகப் படுத்தி எழுத வைத்த அத்தனை
நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்.

(முற்றும்)

--------------------------------------------------------------------------------------------

7.11.07

வாத்தியாரின் வாழ்த்துக்கள்


வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

நட்புடன்
வாத்தியார்

JL. 50. உலகை மயக்கிய மந்திரப் பெயர்=================================================================
JL. 50. உலகை மயக்கிய மந்திரப் பெயர்

இது ஜோதிடத்தொடரின் 50வது பதிவு. ஆகவே இன்று இதை
ஸ்பெஷல் பதிவாக மகிழ்வோடு பதிவிடுகிறேன்.

படித்துவிட்டு இது Special ஆக இருந்ததா என்று நீங்கள்
பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

நம்ம ஊர் இளவட்டங்களெல்லாம் நமீதாவை விரும்புகிற அளவில்,
அவருக்காகச் செலவிடுகின்ற நேரத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூடத்
தொன்மையான கலையான ஜோதிடத்தில் செலுத்துவதில்லை.

1,500 ஆண்டுகளாக அக்கலையில் நமக்கிருக்கும் மேலான்மையைப்
புரிந்து கொள்ளாததோடு, அரைகுறையான கேள்விகளைக் கேட்டு
எரிச்சலையும் உண்டாக்குவார்கள்.

ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கு வந்து
இங்கே மகாராஷ்டிராவில் ஒரு அந்தனர் வீட்டில் இரண்டாண்டு காலம்
தங்கி, ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டதோடு, திரும்பிச் சென்று சுமார்
40 ஆண்டு காலம் அக்கலையில் புகழ்பெற்று உலகையே தன்னைத்
திரும்பிப் பார்க்க வைத்த ஒரு ஆங்கிலேயரைப் பற்றிய உண்மைச்
செய்திகளை இன்று பதிவிடுகிறேன்.

பதிவு சற்றுப் பெரிதாக இருக்கும்.நீளமாக இருக்கும். தீபாவளிப் பதிவு
என்று வைத்துக் கொள்ளுங்கள். பொறுமை இல்லாதவர்கள் பதிவை விட்டு
இப்போதே விலகி விடலாம். ரசித்துப் படிப்பவர்கள் மட்டும் தொடரவும்.

உலகை மயக்கிய அந்த மந்திரப் பெயர்:
வில்லியம் ஜான் வார்னர் - மற்றும் ஒரு பெயர் கவுன்ட் லூயி ஹாமோன்

ஆனால் சீரோ என்று சொன்னால்தான் அவரை அனைவருக்கும் தெரியும்.
His name, Cheiro, derives from the word cheiromancy -- meaning palmistry

அவர் வாழ்ந்த காலம்
November 1, 1866 - October 8, 1936 (சுமார் 70 ஆண்டு காலம்)

ஜோதிடம், கைரேகை, எண் ஜோதிடம் என்று அத்தனை துறையிலும்
உலகைக் கலக்கியவர் அவர்.

அவருடைய ரசிகர்கள் அல்லது அவரை ஆதரித்துக் கெளரவித்தவர்
களைப் பட்டியலிட்டு மாளாது.

King Edward VII (இங்கிலாந்தின் பேரரசராக இருந்தவர்) ,
William Gladstone, Charles Stewart Parnell, Henry Morton Stanley,
Sarah Bernhardt, Oscar Wilde, Professor Max Muller, Blanche
Roosevelt, the Comte de Paris, Joseph Chamberlain, Lord Russell
of Killowen,Robert Ingersoll ( இவர் பிரபல நாத்திகர் - லண்டனில்
வாழ்ந்தவர்) Ella Wheeler Wilcox, Lillie Langtry, Mark Twain,
W.T. Stead, Richard Croker, Natalia Janotha என்று
சிலரைக் குறிப்பிடலாம்.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சீரோ,
தனது கணிப்பை அது நன்மையோ அல்லது தீமையோ- அப்பட்டமாகச்
சொல்லிவிடுவார்.

பெரும் புகழையும் பணத்தையும் ஈட்டிய சீரோ ஐரீஷில் பிறந்தவர்,
ஆனால் அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்தவர்.

அவருடைய கணிப்பு என்றுமே தவறானது கிடையாது.

யுத்த நாயகன் என்று புகழ் பெற்ற ஃபீல்ட் மார்ஷல் லார்ட் கிச்சென்னரின்
கையைப் பார்த்த சீரோ வழக்கமான தகவல்களைக்கூறிவிட்டு,
இறுதியாகச் சொன்னார்,"நீங்கள் நீரில் மூழ்கி மரணமடைவீர்கள்"

நீச்சல் தெரியாத, பயந்துபோன கிச்சென்னார், உடனே தற்காப்பு
நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நீச்சலும் கற்றுக் கொண்டார்.
ஆனால் சீரோ சொன்னதுதான் நடந்தது.

1916-ஆம் ஆண்டு ஹம்ப்ஷயர் என்ற கப்பலில் ஃபீல்டு மார்ஷல்
பயணம் செய்தார். அக்கப்பல் கடற் கண்ணி ஒன்றில் மோதிச்
சேதமுற்று மூழ்கியது. லார்ட் கிச்சென்னர் நீரில் மூழ்கி மரணமடைந்தார்.

சீரோவை நேரில் பார்த்து தங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ள
மக்கள் கூட்டம் அலை மோதியது. நாள் ஒன்றிற்கு இருபது
பேர்களுக்குக் குறையாமல் சந்தித்துப் பலன்களைச் சொல்லி வந்தார்.

பெரிய இடங்களிருந்தும் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன!

இங்கிலாந்தின் மாமன்னர் ஏழாம் எட்வர்டின் உடல் நிலை மிகவும்
மோசமாகி மரணத்தின் விளிம்பில் அவர் இருந்த நேரம், மூச்சிவிடத்
திணறிக் கொண்டிருந்தார் அவர். மருத்துவர்கள் எல்லாம் கை
விட்டு விட்டனர். அரசரின் இறுதி நேரம் நெருங்கி விட்டது என்றனர்.

சீரோ வரவழைக்கப்பட்டார். அரசரின் கையை ஆராய்ந்த பிறகு
சீரோ சொன்னார்.

"உங்கள் உயிருக்கு இப்போது ஒன்றும் ஆபத்தில்லை. 69வது வயதில்தான்
உங்களுக்கு மரணம் ஏற்படும்"

அதன்படி 1841ல் பிறந்த அரசர், 1910ஆம் ஆண்டு மே மாதம் -
தனது 69 வது வயதில்தான் காலமானார்.

அதேபோன்று பிறிதொரு சமயம், அரச குடும்பத்தினர் அனைவரையும்
உட்காரவைத்து ஒவ்வொருவர் கையாகப் பார்த்துப் பலன் சொல்லும்போது,
பட்டத்து இளவரசன் எட்டாம் எட்வர்ட் வேல்ஸின் கையைப் பார்த்துவிட்டு,
சீரோ சொன்ன செய்தியால் மொத்த அரச குடும்பமும் திடுக்கிட்டுப்
போய் விட்டது.

சீரோ சொன்னது இதுதான்."இளவரசனே, நீ பதவிக்கு வரமாட்டாய்.
அரசனாகும் வாய்ப்பு உனக்கு இல்லை!"

அதன்படிதான் பின்னால் நடந்தது. திருமதி சிம்ப்சன் என்ற விவாகரத்தான
- தன்னை விட இரண்டு வயது மூத்த பெண்ணை - அந்த இளவரசன்
காதலித்ததையும் - தன் காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பிய போது, காதலிதான்
முக்கியம் எனக்கு - நாடும் பதவியும் முக்கியமில்லை என்று ஒரு
பெண்ணிற்காக ஒரு மிகப் பெரிய சாமராஜ்ஜியத்தையே (அப்போது பிரிட்டனின்
கீழ் 26 நாடுகள் இருந்த காலம்) உதறிவிட்டுத் தன் காதலியோடு
நாட்டையே விட்டு வெளியேறினான் அந்த இளைஞன் (அது மிகவும்
சுவாரசியமான கதை - 40 ஆண்டுகளுக்கு முன்பு சாவி அவர்கள்
ஆனந்த விகடனில் தொடராக அதை எழுதினார் - படித்தவர்களுக்கு
நினைவிருக்கும்)

23 -06 - 1894 ஆண்டு பிறந்த - முடி துறந்த அந்த இளவரசன், பிறகு
பிரான்ஸ் நாட்டில் 28 .05.1972 வாழ்ந்து தன்னுடைய 79 வது வயதில்
இறந்து போனான். விக்டோரியா மகாராணியின் பேரன் அவன் என்பது
உபரிச்செய்தி.

தெரியாதவர்கள் அக்கதையைப் படிக்க சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன்
The story of Edward Eight

சீரோ எழுதிய நூல்கள்தான் இன்று ரேகை சாஸ்திரம் மற்றும் எண் கணித
நிபுணர்களின் வேத புத்தகங்களாகும்

நீங்களும் வாங்கிப் படியுங்கள்!

ரேகை சாஸ்திரஸ்தில் அவருக்குள்ள மேதைத்தனத்தையும், தனித்தன்மை
யையும் அறிந்து கொள்ளவும், உலகிற்கு அதை நிருபிக்கவும்
அமெரிக்காவில் இவருக்கு டெஸ்ட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள்.
மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களையும், புகழ் பெற்ற அறிஞர்
களையும் கொண்ட கூட்டுக் குழு அதை நடத்தியது. ஏராளமான
பத்திரிக்கையாலர்களும் அதில் கலந்து கொண்டார்கள்.

புகை படர்ந்த காகிதத்தில் பன்னிரெண்டு பேருடைய கை ரேகைகளைப்
பதிவு செய்து சீரோவிடம் கொடுத்தார்கள்.

கை ரேகைகளைத் தவிர அவற்றில் எந்த விதமான குறிப்போ
அல்லது அடையாளமோ கிடையாது.

சீரோ அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துவிட்டு,
மற்றவற்றிற்கு குறிப்புகள் எழுதிக் கொடுத்தார்.

அத்தனையும் உண்மை.

இறுதியாக தனியாக எடுத்துவைத்திருந்த ரேகையை எடுத்தார்.

"இது ஒரு கொலைகாரனின் கை ரேகை" என்றார். அனைவரும்
ஆச்சரியத்தால் அதிர்ந்து போயினர்.

அதற்குக் காரணம், உண்மையிலேயே ஒரு கொலைக்குற்றத்திற்காக
மரண தண்டனையை எதிர் நோக்கிச் சிறையில் காத்திருக்கும்
டாக்டர் மேயர் என்பவனின் கைரேகைதான் அது!

"ஆனால் இவனுடைய மர்ண தண்டனை நிறைவேறாது. ரத்தாகிவிடும்"
என்றார் சீரோ.

அதன்படிதான் நடந்தது.

இறுதிவரை அந்தக் கணிக்கும் திறமை சற்றும் குறையாமல் இருந்தது
சீரோவிடம். தனது ஆயுள் நெருங்குவதை உணர்ந்த சீரோ,
பதிப்பாளர்களிடம் தீவிரம் காட்டி, தன்னுடைய கண்டுபிடிப்புக்கள்,
கணிப்புக்கள், அனுபவங்கள் அத்தனையையும் புத்தகமாக வெளியிட்டு
விட்டுத்தான் மறைந்தார்.

தன்னுடைய இறுதி நாளையும் சரியாகக் கணித்துத் தன் மனைவியிடமும்,
நண்பர்களிடமும் சொன்ன சீரோ, தன்னுடைய வாழ்நாளின் கடைசி
தினத்தன்று தன் நண்பர்களுக்கு மிகப் பெரிய விருந்தையும் அளித்தார்.
அன்று இரவு படுத்தவர்தான் அடுத்த நாள் காலையில் எழுந்திரிக்கவில்லை
அவர். படுக்கையிலேயே உயிர் பிரிந்திருந்தது. (3.10.1936)

தான் கற்றுக்கொண்ட கலைக்காக, இந்தியாவின் புகழை அவர் தன்னுடைய
நூல்களில் நன்றிக்கடனாக குறிப்பிடத்தவறவில்லை! That is his greatness!

The Story of Cheiro - Click here for the link

Link for numerology:

===================================


=======================================================
எண் கணிதத்தில் சீரோ எழுதிய பல சுவையான செய்திகள், மற்றும்
கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் அடங்கிய பல குறிப்புகள்
என்னிடம் உள்ளன. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றைப் பதிவிடுகிறேன்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

*************************************

1.11.07

JL 49.கையில் காசு தங்குமா? தங்காதா?

JL 49.கையில் காசு தங்குமா? தங்காதா?

இரண்டாம் வீட்டின் பலன்

இரண்டாம் வீட்டிற்கு தனஸ்தானம் (House of Finance), குடும்ப ஸ்தானம்
(House of family life), வாக்கு ஸ்தானம் (House of speech) ஆகிய
வேலைகள் உண்டு. ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி, அவர்
அமர்ந்த இடம், அந்த வீட்டில் வந்து அமர்ந்த கிரகம், அந்த வீட்டின்
மேல் விழும் நல்ல மற்றும் தீய கிரகங்களின் பார்வை, அம்சத்தில்
இரண்டாம் வீட்டு அதிபதியின் நிலை ஆகிய காரணங்களால் வெவ்வேறு
விதமான பலன்கள் உண்டாகும்.

இரண்டில் சனி இருந்தால் கையில் காசு தங்காது. உத்தியோக ஸ்தானம்
நன்றாக இருந்து நல்ல ஆறு டிஜிட் சம்பளம் வந்தாலும் கையில் காசு
தங்காது (Expense oriented horosocope)

அதேபோல இரண்டில் சனி இருந்தால், குடும்ப வாழ்க்கை அமையாது.
சில அரசியல் தலைவர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரிய வரும்.
அப்படியே எழாம் வீட்டின் காரணமாக நல்ல மனைவி கிடைத்திருந்தாலும்,
அவளை இங்கே விட்டு விட்டு அவன் பொருள் ஈட்ட துபாய் போன்ற
நாடுகளுக்குப் போய்விடுவான். வருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு
இருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று
சொல்ல முடியும்?

அதேபோல இரண்டில் சனி இருந்தால், வாயைத் திறந்தால் சண்டைதான்.
தர்க்கம்தான். அவன் பேசுவது நியாயமாக இருந்தாலும் எப்போதுமே தர்க்கம்
செய்யும் குணத்தால் மற்றவர்கள் அவனை விரும்ப மாட்டார்கள்.

ராகு அல்லது கேது இருந்தாலும் அதே பலன்தான்.

இரண்டாம் வீட்டில் குரு அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் போன்ற சுபக்
கிரகங்கள் இருந்தால் மேற்கூறியவற்றிற்கு எதிரான பலன்கள் நடக்கும். கையில்
காசு தங்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நல்ல சொல்வாக்குக்குப்
பெற்றுத் திகழ்வான்.

எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள்,
பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக சிலருக்கு பலன்கள் வேறுபடலாம்.

1. இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.

2. இரண்டில் சந்திரன் இருந்தால் - இளம் வயதிலேயே திருமணமாகிவிடும்.
பணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும்.பெண்களு
டனான கேளிக்கைகளில் நாட்டம் உள்லவனாக இருப்பான்

3. இரண்டில் செவ்வாய் இருந்தால் - கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,
வீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும்

4. இரண்டில் புதனிருந்தால் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும்
ஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன்
.
5. இரண்டில் குரு இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். தர்மங்கள்
செய்பவன். சுகமாக வாழக்கூடியவன்.

6. இரண்டில் சுக்கிரன் இருந்தால் சுகமாக வாழ்பவன். அதிகமான உறவுகளைக்
கொண்டவன். நல்ல மனைவி அமைவாள். வித்தைகள் தெரிந்தவன்.
பெண்களிடம் வசப்பட்டுவிடுபவன்.

7. இரண்டில் சனி இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்
அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். கையில் காசு
தங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும். எல்லாத் தீமைகளும் இவனுக்குப்
பெண்களாலேயே உண்டாகும்.

8. இரண்டில் ராகு அல்லது கேது இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது
இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய
வன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மன
சஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதான
காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.

9. இரண்டில் சுபக்கிரகங்கள் சேர்ந்து நின்றால் - பெரும் பணக்காரனாக
இருப்பான். சகல வித்தைகள் தெரிந்தவனாக இருப்பான்.

10. இரண்டில் சுபக்கிரகங்களுடன் - சூரியனும் கூடி நின்றால் - பொருள்
நாசம். கையில் காசு தங்காது.

11. இரண்டில் சுபக்கிரகங்களுடன்- செவ்வாய் கூடி நின்றால் ஞானமும்
(அறிவும்) செல்வமும் உண்டு

12. இரண்டில் சூரியனும், சனியும் கூடி நின்றால், அவன் சம்பதித்தது
மட்டுமல்ல, பரம்பரைச் சொத்தும் சேர்ந்து கரைந்துவிடும்

13. இரண்டில் சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் நல்ல மனைவி, மக்கள்,
செல்வம் எல்லாம் கூடி வரும்

14. இரண்டாம் இடத்தில் குரு இருந்து அந்த வீட்டிற்கு ஏழில் புதன்
அமர்ந்திருந்தால் பொருள் விரையம் அல்லது நாசம் ஆகும்

15. இரண்டில் சந்திரன் நிற்க உடன், சனி அல்லது ராகு அல்லது கேது
சேர்ந்து நின்றால் தரித்திரம். கையில் காசு தங்காது (Everything will be
drained out)

16. If the second lord is associated with rahu or ketu, the native
will be weak

17. இரண்டிற்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால்(If the second lord is
placed in the sixth house) அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -
அவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.

18. அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்து
அமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.

19. கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்
ஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய்
இருப்பான்.

20. இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன்
கூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்

21. இரண்டாம் அதிபனும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாக
அமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.

22. இரண்டம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னி
ரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்

23. இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்
ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்

24. இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில்
குருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.

25. மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்
நின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரிய
செல்வந்தனாக இருப்பான்.

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன்
வகுப்பறை நிறைவு பெறுகிறது

(தொடரும்)