அழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன்!
"இன்பம் எங்கே? இன்பம் எங்கே? என்று தேடு
எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு!"
என்று பாட்டு எழுதி மக்களைப் பரவசப் படுத்தினான் ஒரு கவிஞன்.
எல்லா மக்களின் விருப்பமும் அதுதான்.
இன்பம்! இன்பம்! இன்பம்!
எங்கே கிடைக்கும் அது?
முதலில், இன்பம் என்பது என்ன?
மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவது இன்பம்! மனதைத் துள்ள வைப்பது இன்பம்.
மனதைக் கிறங்க வைப்பது இன்பம். கவலைகளை மறக்க
வைப்பது இன்பம்!
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஐந்து வயது சிறுவனுக்கு பத்து எக்ளேர் மிட்டாய் கிடைத்தால் இன்பம்
பத்து வயதுப் பையனுக்கு ரிமோட்டில் ஓடும் விளயாட்டுக் கார் கிடைத்தால் இன்பம்
பதினெட்டு வயதுப் பெண்ணிற்கு அனார்கலி மற்றும் பாட்டியாலா சுடிதாரில் இருபது செட் சுடிதார் எடுத்துக்கொடுத்தால் இன்பம்.
இருபத்தோரு வயதுப் பையனுக்குத் தினமும் கடலைபோட ஜெனிலியாவைப் போல அழகுள்ள ஒரு பெண் கிடைத்தால் இன்பம்.
இருபத்தைந்து வயது இளைஞனுக்கு பல்சர் மோட்டார் சைக்கிளும், பில்லியனில் ஏறி அவனோடு ஒட்டியமர்ந்து ஊர்சுற்ற நயனைப்போல ஒரு பெண்ணும் கிடைத்தால் அது இன்பம்.
முப்பது வயதுப் பெண்ணிற்கு போத்தீஸில், பத்து ரிவர்சபிள் பட்டு சேலை எடுத்துக் கட்டிக்கச் சொல்லிக் கொடுத்தால் அது இன்பம்.
முப்பத்தைந்து வயது மனிதனுக்கு வணிகம் செய்ய கொலேட்டரல் செக்யூரிட்டி இல்லாமல் ஒரு கோடி ரூபாய் வங்கிக் கடன் கிடைத்தால் இன்பம்
குடிமகனுக்கு சீவாஸ் ரீகல் விஸ்கி ஒரு ஃபுல் பாட்டில் இலவசமாகக் கிடைத்தால் இன்பம். (கூடவே பிரியாணியும், சிகரெட் பாக்கெட்டுகளும் கிடைத்தால் டபுள் இன்பம்.)
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்
எல்லாம் கிடைக்குமா? தொடர்ந்து கிடைக்குமா?
அதெப்படிக் கிடைக்கும்?
இன்பம் என்பது ரேசன் கடைச் சரக்கைப் போன்றது.ரேசன் கடைச் சரக்குகள் உங்களுக்கு என்று குறிப்பிடப் பட்டுள்ள பொருளில், ஒரு குறிப்பிடப்பெற்ற அளவு, ஒரு குறிப்பிடப் பெற்ற காலத்தில் கொடுக்கப் படுகிறதல்லாவா ? அதுபோல இன்பமும் அவ்வப்போது கிடைக்கும்.
துன்பம் அப்படிப் பட்டதல்ல! அது தபால்காரரின் கையில் இருக்கும் கடிதத்தைப் போன்றது. உங்களுக்கு வந்த கடித்தத்தை நீங்கள் வாங்கியாக வேண்டும். வீடு தேடி வரும்.
வாங்க மறுத்தால்?
தபால்காரர் கதவு வழியாக அல்லது ஜன்னல் வழியாகக் கடிதத்தை உள்ளே வீசி விட்டுப் போவதைப் போல அது வீசப்படும். யாரும் தவிர்க்க முடியாது அதை!
காலதேவன் கருணை மிக்கவன்.துன்பத்தையும் இன்பத்தையும் அவன் சமமாகத்தான் அளிப்பான்.
எப்படி இரவு பகல் சமமாக இருக்கிறதோ எப்படி உறவும், பிரிவும் சமமாக இருக்கிறதோ அப்படி இன்பமும், துன்பமும் சம அளவில்தான் அளிக்கப்படும்
உறவும், பிரிவும் எப்படி அளவில் சமமாகும்?
பிறப்பை உறவு என்கின்றோம், இறப்பைப் பிரிவு என்கின்றோம். அவை இரண்டும் இல்லாதவன் யார்? ஆகவே அதுவும் சமம்தான்!
இன்னொரு எளிய உதாரணம் சொல்கிறேன். உலகில் ஜனித்த, ஜனிக்கின்ற அத்தனை பேர்களுக்கும் அஷ்டகவர்க்கப் பரல்கள் மொத்தம் 337 தானே?
அம்பானிக்கு 674, அவருடைய வாகன ஓட்டுனருக்கு 337 என்றா இருக்கிறது?
இல்லையல்லவா?
ஆகவே நம்பிக்கையோடு இருங்கள். இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒன்றாகவே பாவியுங்கள். பிரச்சினை எதுவும் தெரியாது!
இன்பத்தைக் கொடுக்க சந்திரன், சுக்கிரன், குரு என்று மூன்று கிரகங்கள் இருந்தால், துன்பத்தைக் கொடுக்க ராகு, கேது சனி என்று மூன்று கிரகங்கள் உள்ளன.
ஆகவே இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!
அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் பாட்டில் இப்படிப் சொன்னார்.
"இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி"
---------------------------------------------------------------------------------------------------
ஆறு மனமே ஆறு -அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு..........!
(கட்டுரையின் நீளம் கருதி பாடல் வரிகளை இத்துடன் நிறுத்திவிட்டேன். மன்னிக்கவும்)
கதை போதும். பாடத்தைப் பார்ப்போம் வாருங்கள்!
----------------------------------------------------------------------
அழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன்!
ராகுவை அழகன் என்று யாராவது சொல்வார்களா? அவன்மேல் ஆசை வைப்பார்களா என்று கேட்காதீர்கள்.
அழகிற்கு அளவுகோல் கிடையாது.எனக்கு கனகாவும் அழகுதான் காந்திமதியும் அழகுதான். திரிஷவும் அழகுதான் மனோரமாவும் அழகுதான்.
அதுபோல சந்திரனும் அழகுதான்.ராகுவும் அழகுதான்
ஆனால் இருவரும் சேர்ந்தால் அழகாக இருக்காது!!!
இருவரும் சேர்ந்தால் என்ன ஆகும்?
அதை நீங்கள் வகுப்பறை ஜோதிடம் - பகுதி 2 புத்தகத்தில் விரிவாகப் பார்க்கலாம். இதுபோல் பல பாடங்கள் உள்ளன. தொகுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து புத்தகத்தை அச்சடிக்கும் வேலை. கோவையில் மிகப் பெரிய அச்சகம் ஒன்றில் அது அச்சாகும். அவர்களிடம் எல்லாமே தானியியங்கும் இயந்திரங்கள் ஒரே வாரத்தில் புத்தகத்தை நம் கையில் தவழ விட்டு விடுவார்கள். புத்தகம் வெளி வந்தவுடன் முறையான அறிவிப்பு பதிவில் வெளியாகும்.
இறையருளால் பிப்ரவரி 28ம் தேதிக்குள் வெளியாகும் என்று நினைக்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள்.
புத்தகம் எத்தனை பக்கங்கள். என்னென்ன பகுதிகள் வெளியாகும்?
அது சஸ்பென்ஸ். இப்போதே சொன்னால் சுவை போய் விடும். ஆகவே அதற்கும் சேர்த்துப் பொறுத்திருங்கள்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
அழகன் (Handsome Man) என்று சொன்னாலே, எனக்குக் கண் முன் வந்து நிற்பவர் ‘தளபதி’ & ‘ரோஜா’ பட நாயகன் அரவிந்தசாமிதான். ஆகவேதான் இந்தப் பதிவின் முதல் வார்த்தைக்குத் தகுந்தாற்போல அவர் படத்தைப் போட்டிருக்கிறேன். வேறு ஒன்றுமில்லை!
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================