கதையின் தலைப்பு: போட்ட சோறும், கேட்ட கேள்வியும், கிடைத்த பதிலும்!
அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 3
எங்கள் அப்பச்சி (My Father) சட்டென்று கதைகள் சொல்வதில் வல்லவர்.
சில கதைகள் அவர் மற்றவர்களுக்குச் சொல்லும்போது கேட்டதாக இருக்கும். இந்தக் கதை அப்படிக் கேட்டகதைதான். இது மூன்றாவது கதை. கதையின் கரு மட்டும் அவருடையது. கருவிற்கு உருவம் கொடுத்து விரிவாக்கம் செய்து, எழுத்தில் வடிவமைத்தது எல்லாம் என்னுடைய கைவண்ணம்.
ஒரு மாத இதழுக்காக எழுதியவற்றில் ஒரு கதையை இன்று உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்.
----------------------------------------------------------------------------
ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனும் செழிப்பாக இருந்தான். அவனுடைய நாடும் செழிப்பாக இருந்தது. ஆனால் மன்னனின் மனம் மட்டும் வறண்டுபோய்க் கிடந்தது. உள் மனதில், வெளியே சொல்ல முடியாத கவலை ஒன்று அவனை வாட்டிக் கொண்டிருந்தது.
என்ன கவலை?
அதை இப்போதே சொல்லி விட்டால் கதையின் சஸ்பென்ஸ் போய்விடும். ஆகவே தொடர்ந்து படியுங்கள்.
மன்னன் படு கஞ்சன். எல்லாவற்றையும் சேர்த்து வைப்பான்; பூட்டி வைப்பான். அதோடு கோபக்காரன்.
ஒரு நாள், வெளி தேசத்தில் இருந்து குதிரை வியாபாரியொருவன் மன்னனைப் பார்க்க வந்தான்.
வந்தவன் சும்மா வரவில்லை. மன்னன் தலையில் கட்டிவிட்டு, நல்ல வெகுமதிகளை வாங்கிக் கொண்டு போவோம் என்று பத்து வெள்ளைக் குதிரைகளையும் கொண்டு வந்திருந்தான். வந்தவன் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, அரசனைப் பூலோக இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளினான். நம் நாயகன் அதற்கெல்லாம் மசிபவனா என்ன? மசியவில்லை.
கடைசியில் வியாபாரி வந்த விஷயத்தைச் சொல்லிக் குதிரைகளைப் பார்க்கும்படி வேண்டிக் கொண்டான். மன்னனும் போய்ப் பார்த்தான். அவனுடன் அவனுடைய கஞ்சத்தனமும் உடன் சென்று பார்த்தது.
பத்துக் குதிரைகளுமே நன்றாகத்தான் இருந்தன.
வியாபாரி ஒரு குதிரையின் விலை ஆயிரம் ரூபாய் என்றான். ஒரு மூட்டை அரிசி இரண்டு பணம் விற்ற காலம் அது!
கெளரவம் கருதி ஒரே ஒரு குதிரையை மட்டும் வாங்கிக் கொள்ள முடிவு செய்த மன்னன், “ஒரு குதிரை போதும். இருப்பதில் நல்ல குதிரையாக ஒரு குதிரையை நீயே காட்டு என்றான்!”
அவனும் காட்டினான். மன்னன் குதிரையின் காலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட்டுத் திரும்பினான்.
திரும்பியவன், தன்னுடைய முதலமைச்சரை அழைத்து, விற்பனைக்கு வந்திருக்கும் குதிரைகளில், நல்ல குதிரையாக ஒரு குதிரையைத் தேர்ந்தெடுக்கும்படி கூறினான்.
மந்திரி சட்டென்று யோசித்தவர், நாம் வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று எண்ணியவர், மெதுவாகச் சொன்னார்:
“மன்னர்மன்னா, நமது நகரச் சிவன் கோவில் வாசலில், இரண்டு கண்களும் தெரியாத ஒரு பிச்சைக்காரன் இருக்கிறான். அவனுக்குக் கண்பார்வை இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பறிபோனது. பெரிய ஞானி அவன். அவனுடைய பூர்வீகம் யாருக்கும் தெரியாது. ஆனால் அவனுக்குத் தெரியாத விஷயமே கிடையாது. அவனை அழைத்து வந்து, குதிரைகளைப் பார்க்கச் சொன்னால், அவன் நல்ல குதிரையைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பான்.”
மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல், ஆட்களை அனுப்பி, அவனை அழைத்துவரச் செய்தான்.
வந்தவன், 5 நாழிகை நேரம் குதிரைகளைப் பரிசோதித்துவிட்டு, மன்னனை அழைத்து, இருப்பதில் இதுதான் உயர்வான குதிரை என்று சொல்லி ஒரு குதிரையைக் காட்டினான்.
வியாபாரி சொல்லி, மன்னன் அடையாளப் படுத்தி வைத்திருந்த குதிரைதான் அந்தக் குதிரை!
மன்னனுக்கு மிகுந்த ஆச்சரியம்.
“எப்படிச் சொல்கிறாய்?”
“எல்லாக் குதிரைகளுக்கும் பைகளில் கொள்ளைப் போட்டு வாயில் கட்டிவிடச் சொன்னேன். அம்சமுள்ள குதிரை நிதானமாகத்தான் திங்கும். மேலும் அதன் சுவாசமும் சீராக இருக்கும். இன்னொன்று அதன் உடம்பில் இருந்து அதிக துர்நாற்றம் வீசாது. இதுபோன்று குதிரைக்கென்று உரிய சில லட்சணங்களை வைத்து அதைத் தெரிவு செய்தேன்”
மன்னனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தன்னுடைய முதன் மந்திரியை அழைத்து, அந்த ஞானிக்குப் பரிசு வழங்கி, அனுப்பிவைக்கும்படி சொன்னான்.
என்ன பரிசு?
தினமும் ஒருவேளை உணவு. அதிகாலை உணவு. உங்கள் மொழியில் சொன்னால் ப்ரேக்ஃபாஸ்ட். அவனுக்கு அடையாள லட்சினை (Identity Card) வழங்கப் பெற்றது. அரசானையிடப்பெற்று, அதன் நகலும் (Copy palm leaf) வழங்கப் பெற்றது.
கோவிலுக்கு அருகில் இருந்த வேதவிற்பன்னர்கள் விடுதியில், அவனுக்கு அனுதினமும் காலைப் பலகாரம் வழங்கப்பெற்றது.
கதையின் நீளத்தையும், உங்கள் பொறுமையையும் கருதி, கதை இனிச் சுருக்கமாகச் சொல்லப்படவுள்ளது. விவரிப்புக்கள் இருக்காது.
********************************
இதேபோன்று அடுத்தமாதம் ஒரு நிகழ்வு ஏற்பட்டது. அது ஒரு வைர வியாபாரியை வைத்து. அதிலும், தன் திறமையைக் காட்டி மன்னனை அசத்தினான் அந்தப் பிச்சைக்கார ஞானி.
மன்னனின் உத்தரவின் பேரில், அவனுக்கு அடுத்து ஒரு பரிசும் கிடைத்தது.
ஆமாம் அடுத்த வேளை உணவு. மதிய உணவு. அதே விடுதியில். அதற்கான உத்தரவையும் மன்னன் பிறப்பித்தான்
ஒருமாதம் சென்றது.
தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு ஒரு முடிவைத் தேடும் முகமாக, அந்தப் பிச்சைக்கார ஞானியை அழைத்து வரச் செய்த மன்னன், தன்னுடைய பிரத்தியேக அறையில் அவனை அமரச் செய்து, அவனுடன், பேசலுற்றான்.
“நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்கப்போகிறேன். அது வேறு யாருக்கும் தெரியக்கூடாது. உனக்குப் பதில் தெரிந்தால் சொல்லு. இல்லையென்றால் அதை நீ உடனே மறந்து விட வேண்டும்”
“உத்தரவு மன்னா!” என்று பதில் சொன்னான் அவன். வேறு என்ன சொல்ல முடியும்?
”உனக்கு ஜோதிடம் தெரியுமா?”
”தெரியும் மன்னா!”
“என் பிறப்பைப் பற்றி நாட்டில் சிலர் கேவலமாகப் பேசுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அரசல் புரசலாக என் காதில் விழுந்தது. அது பற்றி உன் கருத்து என்ன? என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து, அதைப் பற்றி நீ சொல்ல முடியுமா?”
“ஜாதகத்தை எதற்காகப் பார்க்க வேண்டும்? அது இல்லாமலேயே என்னால் சொல்ல முடியும்!”
மன்னனுக்குப் பயங்கர அதிர்ச்சி!
“ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய குணாதியங்களில் ஒன்றுகூட உங்களுக்கு இல்லை. அதைவைத்துச் சொல்கிறேன். உங்கள் பிறப்பில் கோளாறு இருக்கிறது. உங்கள் தந்தை உயிரோடு இல்லாததால், உங்கள் தாயாரைக் கேளுங்கள். சும்மா மேம்போக்காகக் கேட்காதீர்கள். மிரட்டிக் கேளுங்கள். உண்மை தெரியவரும்”
அதிர்ந்துபோன மன்னன், உடனே அதைச் செய்தான்
முதலில் உண்மையைச் சொல்ல மறுத்த மன்னனுடைய அன்புத் தாயார், தன் மகன், தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி மிரட்டிக் கேட்டவுடன், கண்களில் நீரோடு உண்மையைச் சொல்லி முடித்தாள்.
தனக்குத் திருமணமாகி ஆறு ஆண்டு காலம் குழந்தைப் பேறு இல்லாமலிருந் ததையும், வேறு ஒரு ஆடவனுடன் கூடி, குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொண்ட கதையையும் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னாள். அவனுடைய உண்மையான தந்தை தங்களுடைய அரண்மனையில் முன்பு வேலைபார்த்த சிப்பாய் என்றும் சொன்னாள். எல்லாவற்றையும் போட்டு உடைத்தாள்.
கலங்கிப்போன மன்னன், தன்னிலைக்கு வர இரண்டு நாழிகை நேரம் பிடித்தது
தன்னிலைக்கு வந்த மன்னன், திரும்பவும் வந்து அந்த ஞானியிடம் பேசலுற்றான்.
“ நீ சொல்வது உண்மைதான். என் தாயை விசாரித்துவிட்டேன். இப்போது சொல். நீ எப்படிக் கண்டுபிடித்தாய்?”
“நானோ கண் தெரியாதவன். என் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவன். கோவில் வாசலில் அமர்ந்து, என்னைப் படைத்த ஆண்டவன் திருவடிகளில் விழுந்து, என்னை உய்வித்து, அவனுடன் என்னைச் சேர்த்துக் கொள்ளூம்படி மன்றாடிக்கொண்டிருப்பவன். கிடைக்கும் உணவையே உண்டு கொண்டிருந் தவன். வெய்யிலோ மழையோ, கோவில் வாசலிலேயே படுத்து உறங்குபவன்.
என்னுடைய மேன்மையை, இரண்டு முறைகள் உங்களுக்கு உணரவைத்திருக் கிறேன். அப்போது நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நீங்கள் என் மீது இரக்கம் கொண்டு, இவ்வளவு பெரிய அரண்மனையில் எங்காவது ஒரு ஓரத்தில் தங்கிக் கொள்ள என்னை அனுமதித்திருக்க வேண்டும். செய்தீர்களா? முதலில் ஒருவேளை உணவிற்கு வழி செய்தீர்கள். அடுத்த சந்தர்ப்பத்தில்
எனக்கு இரண்டாவது வேளை உணவிற்கும் உத்தரவு கொடுத்தீர்கள். உண்மையான அரச வாரிசென்றால் இந்த நீச குணமெல்லாம் இருக்காது. அதைவைத்துத்தான் சொன்னேன்!”
மன்னன் அதிர்ந்து விட்டான். அத்துடன் அரண்மனையில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவனைத் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தான்.
நல்ல பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகள் நல்லவர்களாகவே இருப்பார்கள். நல்ல உயரிய குணம் உடையவர்களாகவே இருப்பார்கள்
இதைத்தான் அவ்வையார் தனது மூதுரைப் பாடலில் இவ்வாறு அருமையாகச் சொன்னார்:
“அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்
பொருள்: நம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் குணம் எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது
=============================================================
கதை எப்படி இருந்தது.? பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
======================================================================