ஜோதிடக் கட்டுரை: கோயில் மாடு!
ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)
பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகளே (உழைக்கும்)
படம்: த்னிப்பிறவி
----------------------------------------------------------
உலகில் உள்ள அத்தனை பேர்களும் உழைக்கிறார்களா?
உழைக்கும் அத்தனை பேர்களும் தினமும் எட்டு மணி நேரங்களுக்குக்
குறையாமல் உழைக்கிறார்களா?
உழைக்கிற அத்தனை பேர்களுக்கும் நியாயமான கூலி கிடைக்கிறதா?
நியாயமான கூலி கிடைக்கின்ற அத்தனைபேர்களும் மகிழ்ச்சியாக
இருக்கிறார்களா?
இல்லை!
----------------------------------------------------------
உழைக்கிறேன் என்று தினமும், 12 மணி நேரம் மண்வெட்டிக்
கொண்டிருந்தால் என்ன கிடைக்கும்?
கொஞ்சம் அறிவு, கொஞ்சம் புத்திசாலித்தனம் ஆகியவற்றையும் கூட்டணி
சேர்த்துக் கொண்டு உழைப்பவனுக்குத்தான் விரும்பியது கிடைக்கும்.
-------------------------------------------------------------
விரும்பியது கிடைத்தவன் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறானா?
கிடைத்த அந்தக் கணம்வரை இருப்பான்.
அதற்குப் பிறகு மனம் வேறு ஒன்றை விரும்பும்
எல்லாத் துன்பங்களுக்கும் மனம்தான் காரணம்.
மனதைக் கட்டுப் படுத்தினால், மனதை அடக்கத் தெரிந்தால்
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்
-------------------------------------------------------------
எல்லோராலும் மனதை அடக்க முடியுமா?
முடியும். அதற்கு நீங்கள் மனது வைக்க வேண்டும்.
அதாவது முயற்சி செய்ய வேண்டும்
பயிற்சி செய்ய வேண்டும்
--------------------------------------------------------------
பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவன், உப்புமா கம்பெனியில்
வேலைபார்த்து மண்டை காய்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்து,
தன் நிலைமை பரவாயில்லை என்று திருப்தி கொள்ள வேண்டும்.
காரில் வேலைக்குச் செல்பவன், இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச்
செல்பவனைப் பார்த்துத் திருப்தி கொள்ள வேண்டும்.
இருசக்கரவாகனத்தில் வேலைக்குச் செல்பவன், கைவண்டி இழுத்து
அல்லது பாரம் தூக்கிப் பிழைப்பு நடத்தும் தொழிலாளியைப் பார்த்துத்
திருப்தி கொள்ள வேண்டும்.
நமக்கு எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து, தாங்கித் தடுக்குப்
போட்டுத் தன்னைப் பேணுகின்ற மனைவி இல்லையே என்று
வருத்தப்படுபவன், மனைவியின் படவையைத் துவைத்துக் காயப்போடும்
சக மனிதனை நினைத்துத் திருப்தி கொள்ள வேண்டும்.
வேண்டிய அளவிற்குப் பொருள் ஈட்டும் கணவன் தனக்கு அமையவில்லையே
என்று வருத்தம் கொள்ளும் மங்கை நல்லாள், குடித்துவிட்டு வந்து
தினமும் தொல்லை கொடுக்கின்ற கணவனைக் கட்டிக் கொண்டு அழுகின்ற
சக தோழியைப் பார்த்துத் திருப்தி கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------
”வாத்தி(யார்) என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“நடப்பெதெல்லாம், கிடைப்பதெல்லாம், நமது ஜாதகப் பலன், வாங்கி வந்த வரம்
என்று நினையுங்கள்.திருப்தியடையுங்கள். அது போதும்.”
உங்கள் மகிழ்ச்சிக்கு நான் கியாரண்டி - குக்கர் கம்பெனி விளம்பரங்களைப்
போல- நான் உத்திரவாதம்!:-))))))”
--------------------------------------------------------------------
மாடுகளில் ஐந்து வகையான மாடுகள் உண்டு.
1.பால் கொடுக்கும் கறவை மாடு
2.ஏற்றப்படும் சுமைகளை இடம் மாற்றிக் கொடுக்கும் வண்டி மாடு!
3.உழுகின்ற மாடு.
4.செக்கு மாடு
5.கோயில் மாடு
கோயில் மாடுகளைத் தவிர மற்ற மாடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.
பெயரை வைத்து அவைகள் பற்றி உங்களுக்கு தெரியும்.
இந்தக் கோயில் மாடுகளைப் பற்றி மட்டும் ஒரு சிறு விளக்கம் கொடுக்கிறேன்.
கோயில் மாடு என்பது கோயிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட மாடு அல்லது
கோயில் வாசலில் படுத்திருக்கும் மாடு என்று எப்படி வேண்டுமென்றாலும்
நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்..
அந்த வகை மாடுகளை நீங்கள் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும்
பார்க்கலாம். நான்கு தெருக்களைச் சுற்றி வந்தால் அதற்குத் தேவையான
உணவு கிடைத்துவிடும்.
அகத்திக் கீரை, வாழை இலை, புண்ணாக்கு இத்தியாதிகள் என்று,
அந்தத் தெருக்களில் இருக்கும் பக்கதர்கள், தானமாகக் கொடுப்பதைத்
தின்று விட்டு வந்து கோயில் வாசலில் உள்ள மண்டபம் அல்லது
கொட்டகையில், படுத்துக் கொண்டு விடும்.
உழைக்காமல், எந்த வேலையையும் செய்யாமல் சுகமாக இருக்கிற
ஜீவராசிகள் அவைகள்.
அதுபோன்ற கோயில் காளைகள் மனிதப் பிறவிகளிலும் உண்டு.
அப்பனின் பணம் அல்லது மனைவியின் சம்பளம், அல்லது குடும்பச்
சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகைப் பணம் என்று
யாருடைய பணத்திலாவது அவர்களுடைய வாழ்க்கை நடக்கும்.
கூலி உயர்வு, பஞ்சப்படி உயர்வு, லீவுப் பிரச்சினை, ரேசன் அரிசி
பாஸ்போர்ட், விசா, வங்கிக்கடன் என்று எந்தப் பிரச்சினையும் இல்லாத
ஆசாமிகள் அவர்கள்.
அவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
உழைக்க வைக்க முடியாது.
உணரவைக்க முடியாது.
திருத்தவும் முடியாது.
உழைக்காமல் சுகமாக இருக்கவென்றே பிறந்தவர்கள் அவர்கள்.
சுகஜீவனம் என்று கிராமங்களில் அடையாளம் காட்டப்படுபவர்கள் அவர்கள்.
அது அவர்கள் வாங்கிவந்த வரம்.
----------------------------------------------------------------------
வேறு மாதிரி ஒரு உதாரணம் சொல்கிறேன்.
பல்லக்கு செய்கிறவன்
பல்லக்கைத் தூக்குகிறவன்
பல்லக்கில் போகிறவன்
பல்லக்கில் போகிறவனைப் பார்ப்பதற்காகத் தெருவோரம் நிற்கிறவன்
தெருவோரம் நிற்கிறவன் கழுத்தில் அமர்ந்து கொண்டு, அல்லது தோளில்
ஏறி நின்று கொண்டு பல்லக்கில் செல்பவனை/ அல்லது செல்பவளைப்
பார்த்து மகிழ்கிறவன்.
எந்த நிலை உங்களுக்கு பிடித்திருக்கிறது?
-----------------------------------------------------------------
பல்லக்கில் போகிறவன் எப்போதுமே பல்லக்கில் போக முடியுமா?
அதெப்படி முடியும்?
அவன் மகனே ஒருநாள் அப்பனை அடித்துப்போட்டுவிட்டு அவன்
பல்லக்கில் ஏறிக் கொண்டு விடுவான்.
அப்பன் சொத்தை அபகரித்துக் கொண்டுவிட்டு, அப்பனையே என்ன
சேதி என்று கேட்கின்ற பிள்ளைகள் இருக்கிறார்கள்.
படித்து ஆளாக்கிய அப்பனை முதியோர் இல்லத்தில் போட்டுவிட்டு
பார்க் ஷெரட்டானில், தினமும் சரக்கடி’க்கும் மகன்கள் இருக்கிறார்கள்
பல்லக்கின் போகிறவன், முடக்கு வாதத்தில் எழ முடியாமல் படுத்து
விடும் காலமும் உண்டு.
சொகுசுக் காரில் போகிறவன், வியாபார நஷ்டத்தில் சொந்த வீட்டையே
விற்றுவிட்டு, ஒண்டிக் குடித்தனம் போக நேரிடலாம்.
விசுவாசம் இல்லாத மனைவி, மக்களுக்குப் பாடுபட்டவன், வீதிக்கு
வரும் நிலை ஏற்படலாம்.
இப்படி அடுக்கடுக்காக எழுதிக் கொண்டே போகலாம்.
அதெல்லாம் ஏன் நடக்கிறது? தன் நிலையைத், தன் பொஸிசனை
மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியாதா?
முடியாது.
நேரம் வரும்போது கோபுரத்தின் உச்சிக்குப் போகிறவன், நேரம்
மாறும்போது, கோபுரத்தின் மேல் இருந்து கீழே விழ நேரிடும்
எப்போது உச்சிக்குப் போவான், எப்போது கீழே விழுவான் என்று
ஜாதகத்தில் தெரியுமா? அதாவது எப்போது வெய்யில் காலம், எப்போது
வசந்த காலம் என்று ஜாதகத்தில் தெரியுமா?
தசா புத்திகளை வைத்துத் தெரியும்!!!
அதற்கொரு உபாயம் இருக்கிறது. உங்கள் மொழியில் சொன்னால்
ஒரு குறுக்கு வழி இருக்கிறது.
அது மேல் நிலைப் பாடம்.
மின்னஞ்சல் வழியாக வரும்
எப்போது வரும்?
எப்போது கஷடம் தீரும் என்பதற்கும் அதே பாடம்தான். விவரமாக
வரும். இன்னும் மூன்று நாட்களில் வரும்.
நடுவில் இரண்டு நாட்கள் வாத்தியார் வெளியூர்ப் பயணம் அதனால்
மூன்று நாட்கள். பொறுத்திருந்து படியுங்கள்.
---------------------------------------------------------------
”வாத்தி (யார்), மின்னஞ்சல் பாடம் ஒருவாரமாக வரவில்லையே?”
என்று கேட்டு ரத்தம் வரும்வரை பிறாண்டாதீர்கள்.
வகுப்பறையில் பாடம் நடத்த ஒரு நாள். 30 அல்லது 40 பின்னூட்டங்
களூக்கும், வரும் தனி மின்னஞ்சலகளுக்குப் பதில் எழுத ஒருநாள்
என்று வாத்தியாரின் கணக்கில் நாட்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன.
அதோடு அவருடைய சொந்த மற்றும் வியாபார அலுவல்கள்
வாத்தியார் தன்னுடைய வேலைகளில் மும்மரமாக முழு ஈடுபாட்டோடு
இருப்பதால், சிலசமயம், எப்போது விடிகிறது? எப்போது இரவு வருகிறது?
என்பதே அவருக்குத் தெரியாமல் போய்விடுகிறது.
பாவம் வாத்தியார், அவரைப் படுத்தாதீர்கள், பிறாண்டதீர்கள்
பாடத்தை மட்டும், அது வெளியிடப்படும்போது மட்டும் படித்துத்
திருப்தி கொள்ளூங்கள்! மகிழ்ச்சி கொள்ளூங்கள்
பானை செய்கிறவனுக்குப் பத்து நாட்கள் வேலை
போட்டு உடைக்கிறவனுக்கு ஒரு நொடி போதும்.
பதிவு எழுதிகிறவனுக்கு இரண்டு மணி நேரம் வேலை.
பதிவைப் படிக்கிறவனுக்கு ஐந்து நிமிடம் போதும்.
ஒரு பதிவைப் படித்துவிட்டு, அடுத்த பதிவு எப்போது என்று
உடனே கேட்டால் என்ன செய்ய முடியும்?
சாப்பிட்ட உணவு ஜீரணமாக ஐந்து மணி நேரம் ஆகும்
வயிற்றில் உருவான குழந்தை வெளியேவர 280 நாட்கள் ஆகும்
சனிதிசை சுயபுத்தி முடிய மூன்று வருடம் மூன்று நாட்கள் ஆகும்
ஏழரைச் சனி முடிய ஏழரை வருடம் ஆகும்!
ஒவ்வொன்றிற்கும் ஒரு கால அளவு உண்டு.
அதை மனதில் வையுங்கள்!
என்ன சரியா?
-------------------------------------------------
அடிக்குறிப்பு:
பதிவேட்டை வைத்து, மாணவர்கள் எண்ணிக்கை எகிறிக்கொண்டு
இருப்பதைப் பார்த்து, மகிழ்வதைவிடக் கவலைதான் அதிகமாகிக்
கொண்டிருக்கிறது.
எனக்குத் தெரிந்த ஜோதிடச் செய்திகளை, பிறர் அறிந்து கொள்ளட்டும்
என்றுதான் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.
I want to share my knowledge with others, particularly with the next
generation.
முப்பது மாதங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மன
நிலைமைக்குத் தகுந்த மாதிரி எழுதிக்கொண்டிருக்கிறேன். அப்படி
எழுதிக் கொண்டே வந்ததால், பாடங்கள் ஒரு ஒழுங்கின்றி சிதறிக்
கிடக்கின்றன. நானே என்னுடைய பழைய பாடங்களைக் குறுக்கு வழியில்
தேட சமயங்களில்
கூடுதுறையாரின் பதிவிற்குப் போய்த் தேட வேண்டியதாக உள்ளது.
அவற்றை ஒழுங்கு படுத்தி, விட்டுள்ளதை எழுதி, இணைத்து,
புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளேன்.
-----------------------------------------------------
வகுப்பறைக்கு வந்து படிப்பவர்களை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. உண்மையிலேயே ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள்
2. என்னுடைய எழுத்து நடைக்காகவும், குட்டிக் கதைகள், மற்றும்
உதாரண விளக்கங்களுக்காவும் வந்து, பொழுதுபோக்காகப் படிக்கிறவர்கள்
3. தங்களுடைய ஜாதகப் பலனை மட்டும் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள்
இந்த மூன்றாவது ரகக் கண்மணிகள், வகுப்பறையில் சேர்ந்த அன்றே
தங்கள் ஜாதகத்தை நீட்டிப் பலன் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
தொடர்ந்து மாணவன் என்கின்ற கோதாவில் நச்சரிக்கிறார்கள்.
’எதிர்காலம்’ எப்படி இருக்கும்? என்று கேட்கிறார்கள். எதிர்காலம்
என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரியுமா? தெரியாதா?
அவர்களுக்கு என் முகவரியைக் கொடுத்து வீட்டிற்கு வரச்சொல்லி,
எதிரில் அமர வைத்து அவர்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும்
பதில் சொல்லி அனுப்பினால், அதற்குப் பிறகு அவர்களுக்கு ஜோதிடம்
தேவையில்லை. ஜோதிடம் செல்லாக்காசு ஆகிவிடும்.
அவர்களுக்கு மட்டும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தவறாக
வகுப்பறையில் சேர்ந்திருக்கிறீர்கள். நல்ல ஜோதிடராகப் பாருங்கள்.
அதுதான் உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது. வகுப்பறையில்
ஜோதிடத்தைக் கற்றுத்தேர விரும்பும் மற்ற மாணவர்களுக்கும் நல்லது!
உங்களுக்கு வேண்டியது மீன் மட்டுமே!
மீன் பிடிக்கும் கலை அல்ல!
உங்களுக்கு வேண்டியது சாப்பாடு மட்டுமே
சமையல் கலையல்ல!
உங்களுக்கு வேண்டியது ”டண்டணக்கா” பாட்டு மட்டுமே
இசையமைக்கும் கலையல்ல!
-------------------------------------------------------------------
அன்புடன்,
நட்புடன்,
வணக்கத்துடன்,
வாத்தியார்.
வாழ்க வளமுடன்!