சிறுகதை: கோப்பையிலே தோன்றிய புயல் கரையைக் கடந்தது!
காப்பி போடுவது ஒரு கலை என்றால், போட்ட காப்பியை ரசித்துக் குடிப்பது மற்றொரு கலை. இந்த இரண்டு கலைகளிலும் கமலாவின் (அதாவது என் அருமை மனைவி கமலாவின்!) தேர்ச்சி அபாரமானது.
நாலு நாள் சாப்பாடு சாப்பிடாமல் இருப்பாள். பழைய புடவைகளைப் போட்டு எவர்சில்வர் பாத்திரம் வாங்காமல் ஒரு மாதம் முழுவதும் கூட இருப்பாள். தொடர்ந்தாற்போல் பதினைந்து நிமிடங்கள் என்னைத் திட்டாமல் கூட இருப்பாள்; ஆனால் காப்பி சாப்பிடாமல் அவளால் இருக்க முடியாது!
அவள் போடும் காப்பியும் பிரமாதமாக இருக்கும். டிகிரி காப்பி டிப்ளமா காப்பி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்; கள்ளிச் சொட்டு காப்பி என்பார்களே அது எல்லாம். கமலாவின் காப்பி என்ற இமயமலைக்கு முன், வெறும் பரங்கிமலை.
இப்படிக் காப்பி ரசிகை திலகமாகவும், காப்பி டிகாக்காஷன் பேரரசியாகவும் திகழ்ந்த கமலாவைத் திடீர் என்று ஆண்டவன் சோதனை செய்தான்.
அவ்வப்போது வயிற்றில் எரிச்சலாக இருக்கிறது என்று டாக்டரிடம் போனாள் ஒரு நாள். (வயிற்றில் எரிச்சல் வேறு; வயிற்றெரிச்சல் வேறு.) டாக்டர் பரிசோதித்து விட்டு, மறக்காமல் ஃபீஸ் வாங்கிக் கொண்ட பிறகு, "ஹைபர் ஆசிட் தொல்லை... காரம், காப்பி எல்லாம் கூடாது'' என்றார்.
டாக்டர் சொன்னதைக் கேட்டு கமலா இடிந்தே போய்விட்டாள். எதிர் வீட்டு கௌசல்யா "தீபாவளிக்குப் பட்டுப் புடவை வாங்கிக் கொண்டேன்' என்று கூறிய போது கூட கமலா இவ்வளவு கலங்கவில்லை. காரணம், கமலாவிற்குக் காப்பியின் மேல் அத்தனை உயிர். காரத்தைக் கூட அறவே விட்டாலும் விட்டு விடுவாள். ஆனால் காப்பியை....?
"டாக்டர், காப்பியைத்தானே விடணும்... விட்டு விட்டால் போச்சு...'' என்று மிகவும் சர்வ சாதாரணமாக, எவ்வித சலனமுமின்றிச் சொன்னாள் கமலா என்னும் இன்றைய நடிகையர் திலகம்!
மறுநாள் காலை. நான் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது, கமலா காப்பி கொண்டு வந்து கொடுத்தாள். அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்ததால், ""கமலா, அதிகம் சாப்பிட வேண்டாம். அரையே அரை கப் காப்பி சாப்பிடு...ஒண்ணும் தப்பில்லை'' என்றேன்.
அடுத்த கணம் கமலா என் எதிரே இல்லை. தூணைப் பிளந்து வந்த நரசிம்ம மூர்த்திதான் காட்சி அளித்தார். ""என்ன, சொன்னீங்க? அரை கப் காப்பி.யா?.. அதைவிட அரை கப் விஷத்தை கொடுங்கோ.. காப்பி சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கிறார். என்னைக் கண்டாலே ஆகாது உங்களுக்கு... எதுக்கு டாக்டர்கிட்டே காண்பிச்சிங்க? வியாதியோ வெக்கையோ நான் எக்கேடு கெட்டுப் போறேன்... நீங்களும் உங்க மனுஷாளும் சௌக்கியமாக இருந்தால் சரி... எப்படித்தான் இந்த மாதிரி ஈவு இரக்கம் இல்லாமல் சொல்ல உங்களுக்கு மனசு வருகிறதோ ?'' என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றாள். நான் ஒன்றும் பேசவில்லை. (வழக்கம் போல்!)
ஒரு நண்பரின் வீட்டிற்குக் கமலாவும் நானும் சென்றோம்.
"என்ன சாப்பிடுகிறீர்கள்? காப்பியா, டீயா, கூல்ட்ரிங்கா?'' என்று நண்பர் கேட்டார்.
"கூல்ட்ரிங்கே போதும். கமலாவிற்குக் காப்பி கூடாது. பெப்டிக் அல்சர்'' என்றேன். இது பெரிய தப்பு என்று எனக்கு அப்போது தெரியாது. வீட்டுக்கு வந்ததும் கமலா தனது மூன்றாவது கண்ணைத் திறந்தாள். (அவளுக்கு சைவ, வைஷ்ணவ வித்தியாசம் கிடையாது, ஒரு சமயம் நரசிம்ம மூர்த்தியாக இருப்பாள்; மற்றொறரு சமயம் முக்கண் சிவனாக இருப்பாள்!) மூன்றாவது கண்ணைத் திறந்து விட்டதுடன், "அவர் காப்பியா, டீயா, கூல்ட்ரிங்கான்னு கேட்டதற்கு, ’கூல்ட்ரிங்க் போதும்’னு சொல்றது ’காப்பி வேண்டாம், கமலாவுக்கு அல்சர்' என்று சொல்லாவிட்டால் உங்கள் தலை வெடித்தா போய்விடும்? ஏன், உங்க அக்காவுக்கு சைனைஸடீஸ், உங்க அம்மாவுக்கு ஆர்த்ரைட்டீஸ், உங்கண்ணாவுக்கு மைக்ரைன் என்று ஏன் சொல்லலை?... கமலா வியாதிக்காரின்னு ஊரெல்லாம் டாம்டாம் போடறதிலே என்ன சந்தோஷமோ?'' என்று கத்தினாள். கண்களிலிருந்து கண்ணீரும் வந்து விட்டது. அந்தக் கண்ணீர், கடைக்குப் போய்ப் புதிதாய் வாங்கி வந்த சைனீஸ் சில்க் புடவையால் துடைத்த பிறகுதான் நின்றது!
மூன்றாம் நாள் காலை, கமலாவுக்கும் வேலைக்காரிக்கும் வாக்குவாதம். நடப்பதைக் கேட்டு, ""என்ன கமலா, என்ன சமாசாரம்?'' என்று கேட்டேன்.
"என்னவா?... இவள் வேலையா செய்கிறாள்? படு தண்டம். நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்னு
"அவள் வராவிட்டால் எப்படி கமலா?....'' என்று ஆரம்பித்தேன்.
"நான்தான் சம்பளம் இல்லாத வேலைக்காரி ஒருத்தி இருக்கிறேனே?'' என்று சொல்லியபடியே "டொங்"கென்று சர்க்கரைப் புட்டியை மேடையில் வைத்தாள். அது சில பல துண்டுகளாக உடைந்தது. இந்த சமயம் பார்த்துத்தானா பால் பொங்கி அடுப்பில் வழிய வேண்டும்?
"சனியன் பிடிச்ச கேஸ் அடுப்பு... பிசாசாக எரியறது. இரண்டு நிமிஷம்தான் ஆச்சு.... அதுக்குள்ளே பால் பொங்கிடுத்து. நாளையிலிருந்து கரி அடுப்பு தான்...'' என்றாள் கமலா.
அன்று மாலை டில்லியில் பிரபல டாக்டராக இருக்கும் என் நண்பர் என்னைப் பார்க்க வந்தார். மூன்று நாட்களாக கமலா படுகிற அவஸ்தையையும் மற்றவர்களைப் படுத்தி வைக்கிற பாட்டையும் விவரமாகச் சொன்னேன். அவர் கமலாவைக் கூப்பிட்டு, டாக்டர் என்ற முறையில் சில கேள்விகள் கேட்டுவிட்டு, ""உங்களுக்கு அல்சர் எதுவுமில்லை, வெறும் அசிடிடிதான். அசிடிடி பின்னால் அல்சரில் கொண்டு விட்டு விடக் கூடும் என்பதால் டாக்டர் முன் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லியிருப்பார். காரம் கூடாதுதான். கோங்குரா சட்டினி, மிளகாய் பஜ்ஜி, காரக்குழம்பு போன்றவைகளைத்தான் சாப்பிடக் கூடாது. லேசான காரம் சாப்பிட்டால் தப்பில்லை. காப்பி சாப்பிட்டாலும் தப்பில்லை. ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கப் காப்பிக்கு மேல் சாப்பிடாதீர்கள் பித்தமாகிவிடும்'' என்றார்.
"அப்படியா டாக்டர்.... இதோ, காப்பி கொண்டு வருகிறேன்'' என்று உள்ளே ஓடினாள். கமலா எப்போது புள்ளிமானாக ஆனாள்? முகத்தில் எப்படி இத்தனை புன்னகை மலர்களை வரவழைத்துக் கொண்டாள்?
மறுநாள் காலை. பில்டரைத் தட்டும் "டங்"கென்ற ஓசையே கோயில் மணி ஓசையாக இருந்தது. சிறிது நாழிகையில் இரண்டு கப் காப்பியுடன் கமலா வந்தாள். அவள் ஒரு கப்பும் நான் ஒரு கப்பும் காப்பியை ரசித்துச் சாப்பிட்டோம். அப்பாடா, காப்பிக் கோப்பையிலே தோன்றிய புயல் கரையைக் கடந்தது!
- என் சொந்த சரக்கல்ல. மின்னஞ்சலில் வந்தது. அனுப்பிய அன்பரின் பெயர் அண்ணா சொக்கலிங்கம், சென்னை! எழுதிய அன்பர் திருவாளர் அகஸ்தியன்: தலைப்பு காப்பியும் கமலாவும் அவருடைய ப்ளாக் விலாசம் இதோ:
http://kadugu-agasthian.blogspot.com/
நன்றி இருவருக்கும்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------
இந்தப் படத்தைப் பார்த்தவுடன் கிரிக்கெட் ஆட்டக்காரர் மலிங்காவின் தலை உங்களுக்கு ஞாபகம் வந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை! |
வாழ்க வளமுடன்!
கதை நன்றாக இருக்கிறது அண்ணா சொக்கலிங்கம், நன்றி
ReplyDeleteகதை நன்றாக உள்ளது...
ReplyDeleteபதிவிற்கு நன்றிகள் ஐயா!
காபி ரசிகர்களுக்கென்றே எழுதப்பட்ட கலக்கலான கதை போலும், காபி ரசிகர்ளுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.
ReplyDelete//காப்பி போடுவது ஒரு கலை என்றால், போட்ட காப்பியை ரசித்துக் குடிப்பது மற்றொரு கலை.//
அனுபவித்து காபி குடிப்பவர்களுக்கு இதன் அருமை புரியும். எம்மைப்போலவே வாத்தியார் அவர்களும் ஒரு காபி ரசிகர் என்று நினைக்கிறேன். சுவைபட பகிர்ந்து கொண்ட வாத்தியார் அவர்களுக்கு நன்றி.
கமலாவையே பிரதிபலிகிறார்கள் இன்றைய குடும்ப தலைவிகள் . நோயாளிக்கு தேவை சிகிச்சை. அதைவிட முக்கியம் பயமுறுத்தாத சிகிச்சை என்பது.
ReplyDeleteமூன்ரூர்தியில் வந்த
மலின்காவின் தலை
இறங்கிகொண்ட இடம்
எனது புகைப்பட தொகுப்பு -
ஓட்டுனருக்கு ஒருசெய்தி
:=சாலைவிபத்து தமிழகம் முதலிடம் -நன்றி இன்றைய தினமலர்
வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteதொடர்ந்து உங்கள் ப்ளாக் படித்து வருகிறேன்.
இன்று வெளியாகியிருக்கும் இந்தக் கதை, பிரபல எழுத்தாளர் திரு அகஸ்தியன் அவர்கள் “காப்பியும் கமலாவும்” என்ற தலைப்பில் எழுதியது. அவருடைய ப்ளாக் விலாசம் இதோ - www.kadugu_agasthian.blogspot.com
படைப்புகள் அனுமதியின்றி வெளியிடப்பட்டால் படைத்தவருக்கு ஏற்படும் மன வருத்தம் உங்களுக்குத் தெரியாததல்ல. அதனால் படைப்பாளியின் பெயரையும் வெளியிடுவதற்காக இந்தத் தகவலைத் தந்தேன்.
இந்தக் கதை, அவருடைய ப்ளாக்கிலும் வெளியாகி இருக்கிறது.
அன்புடன்
மணிமுத்துமாலை
Ayya,
ReplyDeleteSotry is very good..
Student,
Trichy Ravi
அய்யா வணக்கம் , தங்கள் கதையில் உள்ளதுபோல் திருமதி கமலா அவர்களின் நோயை பற்றி அடுத்தவர்களிடம் கூறும்போது .அவர்களுக்கு வரும் கோபம் எல்லோருக்கும் பொதுவானதுதான்.நன்றி .அருமையான( உண்மையான ) கதை
ReplyDeleteநன்றி திரு.அண்ணா சொக்கலிங்கம் மற்றும் அகஸ்தியன் அவர்களே.
ReplyDeleteசிறுகதையை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள் வாத்தியார் ஐயா.
கதை மிக அருமை!
ReplyDeleteஎழுதியருக்கும்,சேர்த்தவருக்கும்&பதிவிட்டமைக்கும் நன்றி!
மேலும் என்ன ஒரு ஒப்பீடு மட்டை ஏற்றிய ஆட்டோ வண்டியுடன் மலிங்காவின் தலை மிக மிக அருமை!!!
நன்றி.
nalla kathai
ReplyDelete(www.astrologicalscience.blogspot.com)
வணக்கம் ஐயா,
ReplyDeleteஅண்ணா சொக்கலிங்கம் மற்றும் சிறுகதை எழுதிய அன்பர் திருவாளர் அகஸ்தியன் அவர்களுக்கும் நன்றி...கமலா அம்மா பேசும் வசனங்களை படித்து சிரித்து கொண்டேயிருந்தேன்...சுயசரிதையை தந்துள்ளார் என்று நினைக்கிறேன்...
அந்த தேங்காய் மட்(ண்)டையை எங்கோ பார்த்த ஞாபகம்,வாத்தியார் ஐயா சந்தேகத்தை தீர்த்துவிட்டார்!
அதானே..வாத்தியார் நடையில் இல்லையே..ன்னு நினைச்சேன்..
ReplyDeleteநல்ல ஆர்டிகிள்..கமகமன்னு..வாடை சும்மா..கும்முன்னு......தூக்கலா இருந்துச்சு.. வரிக்கு வரி சிரிப்பு..
யார் கதை எழுதினாலுமே கமலாதான் இல்லத் தலைவியன் பெயராக அமைகிறது.
ReplyDeleteஜெயகாந்தன் தன் காலத்துக்கு முன்னர் இருந்த எழுத்துக்களைப் பற்றி 'கமலா காப்பி ஆற்றிய கதைகள்'என்றுதான் விமர்சித்தார்.
அக் கதைகளின் 'பேட்டெர்ன்' பற்றி இப்படிச்சொல்வார்:"காலையில் அலுவலகம் கிளம்பும் சமயம் கமலா கணவனுடன் சண்டைபோட்டு அனுப்பிவிட்டாள்.
கோவத்துடன் போன கணவன் நினைவாகவே கமலா பகல் பொழுதைக் கழிக்கிறாள். அலுவலகத்தில் அவனுக்கும் கோவம் தணிந்துவிடுகிறது. இவள் நினைவாகவே இருக்கிறான்.
மாலையில் வரும்போது மல்லிகைபூவும், அல்வாவும் மறக்காமல் வாங்கி வருகிறான்.கமலாவும் அவன் உள்ளே நுழைந்தவுடன் முக மலர்ச்சியுடன் காப்பியை ஆற்றி எடுத்துக் கொண்டு அவன் எதிரில் வந்து நிற்கிறாள்."
இதற்கு மேல் யதார்த்தமான பார்வை இல்லாமல், சமூகப்பிரஞை இல்லாமல் எழுத்துக்கள் இருந்தன என்பதற்கு 'கமலா காப்பி ஆற்றின கதை' என்பார்.
அப்படிப்பட்ட கதைகள் இன்னமும் பெயர் மாற்றாமல் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஹார்ம்லெஸ். 70 வயது தாத்தா கல்யாணம் பண்ணிய நிஜக்கதை என்னவெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தியது இங்கே!
அதனால கமலாவையே காப்பி ஆற்றிகொண்டு இருக்க விடுவதுதான் அனாவசிய விவாதங்களைத் தவிர்க்கும்.
ஆமாம். அந்த கமலா மாமி முகவரி கொடுத்தால் ஒரு கப் காப்பி வாங்கிக் குடிச்சுட்டு வரேன்.
//////R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
அண்ணா சொக்கலிங்கம் மற்றும் சிறுகதை எழுதிய அன்பர் திருவாளர் அகஸ்தியன் அவர்களுக்கும் நன்றி...கமலா அம்மா பேசும் வசனங்களை படித்து சிரித்து கொண்டேயிருந்தேன்...சுயசரிதையை தந்துள்ளார் என்று நினைக்கிறேன்...
அந்த தேங்காய் மட்(ண்)டையை எங்கோ பார்த்த ஞாபகம்,வாத்தியார் ஐயா சந்தேகத்தை தீர்த்துவிட்டார்!/////
சுயசரிதை,தேங்காய்ம(ட்)ண்டைன்னு
கமென்ட் படிக்குறப்போ ஃபுல் ஃபார்ம்லே இருக்கீங்க ன்னு தெரியுது..
இந்த வாரம் மலர்லே ஒரு புதுக்கதையை எதிர்பார்க்கலாமா?
இந்தக் கதைக்கு உரிய பாராட்டுக்களும், நன்றிகளும் கதையை எழுதிய திரு அகஸ்தியன் அவர்களுக்கே உரியதாகும்!
ReplyDeleteபின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் என் நன்றியை மொத்தமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்!
நன்றி வணக்கத்துடன்
வாத்தியார்