மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.4.19

அந்தக் காலத்து புகைவண்டிப் பயணம்!!!!


அந்தக் காலத்து புகைவண்டிப் பயணம்!!!!

ரொம்ப நாளாவே தலைக்குள் ஒரு ஊரல் புகைவண்டி பற்றிய நினைவுகள் எழுதச்சொல்லி பிராண்டியபடி இருந்தன,இன்றைக்கு எழுதியே ஆக வேண்டும் என்று முடிவாக என்னுடைய எழுதுகோலான செல்பேசியை எடுத்துக்கொண்டு எழுதத் துவங்கினேன்

இடையிடையே கண் மேலேறி கடிகார முள்ளின் ஓட்டத்தை அவதானித்தபடி காலை நேரமாயிற்றே இனிமெல் தான் குளித்து முடித்து கடைதிறக்க எட்டரை மணிக்குள் செல்ல வேண்டும், ஆச்சு இப்போ மணி ஏழரை நல்ல நேரத்தில் தான் எழுத உட்கார்ந்திருக்கிறோம் என்று மனதில் முனகியபடி எழுத துவங்கினேன்.

கூ....கூ......சிக்புக்.. சிக்புக் என்ற ரயிலின் சப்தங்கள் காதுகளில் ரீங்காரமாய்.

காரைக்குடி ரயில் நிலையத்தில் காலை வெயிலின் சுள்ளென்ற உணர்வில் பிளாட்பாரத்தில் அரை டிராயர் அரைக்கை சட்டையில் நானும் வெள்ளைக்கு மாற்று குறைந்த நிறத்தில் வேட்டியும் பழுப்பு வண்ண சட்டையும் கையில் வெற்றிலையை நீவியபடி அப்பா அருகே ஜாம்பர்செட் என்ற புது மோஸ்தரில் பொட்டு பொட்டு புள்ளிகள் இட்ட கரு நீல சேலையும் முழங்கையையும் தாண்டி நீண்டிருந்த நீல வண்ண ஜாக்கெட்டும் வாணிஸ்ரீ கொண்டையும் போட்டுகொண்டு அம்மா வலது கையில் தண்ணீர் கூஜா ஒன்றும் இடது கையை மடித்து இடுப்பில் வைத்தபடி நிற்க எங்களுக்கு பக்கத்தில் டிரங் பெட்டி ஒன்றும் வக்கூடை என்று சொல்லும் ஓலைக் கூடையும் ஒரு பெரிய துணிபை என்று இருக்க சற்று தள்ளி தலைப்பா கட்டு சகிதம் ஒரு பெரியவரும் பக்கத்தில் அவரின் மனைவி தோற்றத்தில் ஒரு அம்மாவும் சுற்றிலும் தட்டுமுட்டு சாமான்களோடு இருக்க காரைக்குடி மாயவரம் ரயிலுக்கு இன்னும் சற்று நேரம் இருக்க நீல சட்டையம் அதே வண்ண அரைக்கால் சட்டையும் அணிந்த ரயில் நிலைய ஊழியர் நடைபாதை ஓரம் தொங்கி கொண்டிருந்த இரும்பு தண்டவாள துண்டில் கண கண என்று முதல் மணியை அடித்தார்.

பயணிகளிடம் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டது.எல்லோரும் அவரவர் சாமான்களை சரிபார்ப்பதும் கூட வந்த நண்டு சிண்டு குழந்தைகளை டேய் ஓடாதீங்க ரயில் வருது என்று சத்தமிட்டு கூப்பிடுவதுமாக சல சலவென்று ஒரே சத்தம் இதற்கிடையில் இரண்டாவது மணியும் அடிச்சாச்சு எல்லோரும் ரயில் வரப்போகும் திசையை நோக்கி ஆவலும் பரவசமும் பொங்க பார்க்க தூரத்தில் சிக் புக் சிக்புக் சிக்புக் என்ற சப்தமும் வானில் புகையின் மெல்லிய கோடிட்ட தோற்றமும் ரயில் வருவதை உறுதி செய்தது .
இறுதிக்கட்ட பரபரப்பில் காரைக்குடி ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பயணிகள் கைகளில் தங்கள் பொதிகளை சுமந்தபடி நிற்க இப்போது நீண்ட சிக்... புக் சிக்..புக் என்ற இழுவை சப்தமிட்டபடி கரிய உருண்டையான வடிவ அரக்கன் இரு கைகளை அசைப்பது போல் பக்கவாட்டில் உள்ள பிஸ்டண்கள் சிலிண்டர் வடிவ உருளைக்குள் போவதும் பின்வாங்குவதுமாக நீராவியை உமிழ்ந்தபடி கூ ....கூ...என்று என்று சப்தமிட்டபடி நுழைந்தது,இன்ஜினுக்குள் முகம் உட்பட உடல் முழுவதும் கரி பிசுக்கு தோற்றத்துடன் டிரைவரும் அருகில் நீண்ட கைப்பிடி கொண்ட கரி அள்ளி போடும் சாதனத்தோடு உதவியாளரும், இன்ஜினுக்குள் ஒருபுறம் கரியின் உதவியால் எழுந்த மஞ்சள் நிற நெருப்பு ஜூவாளை வட்டவடிவ கரி போடும் வாயிலில் அழகிய தோற்றம் தர, டிரைவர் வாயிலில்  நின்றபடி வெளியே ஒரு கையை நீட்டியடி இருக்க, ரயில் நிலைய ஊழியரின் கையில் இருந்து நீண்ட பிரம்பில் முன்புறம் வளைந்து பெரிய பேட்மிண்டன் பேட்டில் நரம்புகள் இல்லாதிருப்பது போல அதை நீட்டிய டிரைவரின் கையில் மாட்டிக்கொண்டு இன்ஜினுக்குள் இழுத்துக்கொண்டார் ,அதே போல் ஒரு பிரம்பு பிளாட்பாரத்தில் வீசப்பட்டது.இறுதி பெருமூச்சு விட்டபடி கூ....என்ற நீண்ட விசிலடித்தபடி .நின்றது ரயில்.

நானும் எங்கள் குடும்பமும் பக்கத்திலிருந்த தலைப்பாகட்டுப் பெரியவரின் குடும்பமும் ஒரே பெட்டியில் ஏறி உள்ளே சென்றோம்.அது மீட்டர்கேஜ் என்று இருந்த காலம் பெட்டிகள் அகலம் குறைவாக இருக்கும். மூன்று மூன்று பேர் எதிரெதிரே அமரும்படிக்கு மரத்தில் செய்யப்பட்ட  உட்காரும் பலகையும் சாய்மானமும் இருக்க மேலே பொதிகள் வைக்க பலகையும் இருக்கும் பெட்டியின் வெளித்தோற்றம் ரயில்வேக்குரிய மஞ்சளும் அரக்கும் கலந்த நிறமும் உட்புறம் அழுக்கு மஞ்சளும் நிறம் மாறாமல் இருக்கும் கூரைக்கு சற்று கீழே அபாய சங்கிலி இதை அனாவசியமாக இழுத்தால் அபராதம் ரூபாய் 500 கட்ட வேண்டும் என்ற எச்சரிக்கை பலகையோடு இருக்கும்.இரண்டு புற உட்காரும் பலகைக்கும் அருகில் ஜன்னல் குறுக்கு கம்பிகள் செருகப்பட்டும் ,கண்ணாடி போட்ட இறக்கு கதவும் கொண்டிருக்கும்.

ஜன்னல் அருகே உட்கார்ந்து வெளியில் ஓடும் மரங்கள்,வயல்வெளிகள்,மனிதர்கள் என்று பார்க்க ஆசையோ ஆசையா இருக்கும். அம்மா தான் டேய் கண்ணுல கரி விழுந்துரும் வெளிய எட்டி பார்க்க கூடாது தலைய உள்ள திருப்புன்னு அதட்டிக்கிட்டே இருப்பாங்க.அப்பா என்னை புன் சிரிப்புடன் பார்த்தபடி டேய் தம்பி என்று செல்ல கோபம் தொனிக்கும் குரலில் அதட்டுவார்கள்.

ஆனாலும் எனக்கென்னவோ பார்வை வெளியில் தான் மரங்கள் விர் விர் என பின்னோக்கி ஓடும் அழகும் ரயிலின் ஆட்டமும் ரயிலை விட்டு வீட்டுக்கு சென்றாலும் அன்று முழுவதும் ஆட்டியபடி இருக்கும் நினைவு , ஆஹா........

காரைக்குடியில் கூ.......என்று விசிலடித்தபடி கிளம்பும் ரயிலுக்கு கடைசியில் இருக்கும்  கார்டு வேனிலிருந்து வெள்ளை பேண்ட்,வெள்ளை கோட்,வெள்ளை தொப்பி சகிதம் கார்டு பச்சை கொடியை அசைத்தபடி பிளாட்பாரத்தை ரயில் தாண்டும்வரை வெளியில் எட்டி பார்த்தபடி நிற்பார்.இரவு நேரங்களில் கையில் எண்ணெய் விளக்கு இருக்கும் ஒருபுறம் பச்சை,ஒருபுறம் சிகப்பு என்று கண்ணாடி பொருத்திய விளக்கு தேவைக்கேற்ப விளக்கின் கண்ணாடியை வெளியே காண்பிப்பார்.

கைகாட்டி என்று சொல்லும் ரயிலுக்கு சமிங்கை செய்ய ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் முன்பாக உயர கம்பத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கை போன்ற தோற்றமும்  சிகப்பு ,பச்சை கண்ணாடி வில்லைகள் மேலும் கீழும் பொருத்தப்பட்டு பின்புறம் எண்ணெய்  விளக்கு மாட்டும் கம்பியோடு இருக்கும் .அதிலிருந்து கம்பி வடம் ஒன்று சமிங்ஞை அறையில் ஒரு லிவரோடு பொருத்தப்பட்டிருக்கும்.

அங்கிருக்கும் பாயின்ட்ஸ்மேன் என்றழைக்கப்படும் ஊழியர் ரயில் தங்கள் நிலையத்துக்கு முதல் நிலையத்திலிருந்து கிளம்பிய தகவல் தொலைபேசி வாயிலாக அறிந்த உடன் லிவரை இழுத்து ரயில் உள்ளே வர சமிங்கை செய்வார்.இரவில் எண்ணெய் விளக்கு ஏற்றி கைகாட்டி மரத்தில் ஏறி விளக்கை மாட்டி வைப்பார்,லிவர் இழுத்ததும் கைகாட்டி மேலே ஏறி பச்சை விளக்கு எரியும் தோற்றம் தரும்.

டிக்கெட் கவுண்டரில் மஞ்சள் நிறத்தில் சிறு அட்டையில் போகும் ஊர் புறப்படும் ஊர் தேதி ரயில் சார்ஜ் என்று பதிவுகள் கை அடி மிஷின் மூலம் அடித்து தருவார்கள்.

காரைகுடியிலிருந்து மாயவரம் செல்லும் ரயில் கோட்டையூர்,புதுவயல் என்று எல்லா நிலையங்களிலும் நின்று செல்லும்.

எங்காவது ஒரு நிலயத்தில் ஒரு மணி நேரம் கூட நிறுத்தி விடுவார்கள்,அப்பா போட் மெயில் கிராசிங் என்று சொல்வார்கள் திடீரென்று வேக வேகமாக எதிர் திசையில் ஒரு ரயில் எங்களை கடந்து செல்லும் அப்பொதெளல்லாம் ஒற்றை ரயில் பாதைகள் தான் போக வர இரண்டுக்கும்.

ரயிலுக்கு சரியான  நேரம் என்பதெல்லாம் கிடையாது ,சராசரி ஐந்து மணி நேரம் 8 மணி நேரம் தாமதமாக சேரும் இடத்துக்கு சென்று சேரும்.மாயவரம் வண்டி திருவாரூருக்கு எப்படியும் இரண்டு மணி நேரம் தாமதமாக சேரும்.நாங்கள் திருவாரூரை அடைந்ததும் எல்லோரும் கரி பூசிய உருவத்தோடு வீடு சேர்ந்து முதலில் குளித்து விட்டுத்தான் மறுவேலை.

அப்போதும் ரயிலில் இயற்கை உபாதைகள் கழிக்கும் அறைகள் ரயிலில் உண்டு .

இன்றைய புல்லட் ரயில்,ஜன்தன்,ஹெரிட்டேஜ் என்று பல்வேறு வசதிகள் AC பெட்டிகள்,தூங்கும் வசதிகள் என்று அன்று பர்ஸ்ட் கிளாஸ் என்றும் கூபே என்றும் தனி கேபின்கள் பணம் படைத்தவர்களுக்கு,2ND கிளாஸ் என்று நடுத்தர வர்க்கத்துக்கு தூங்கும் வசதி பெட்டி, பொது மக்களுக்கு மூன்றாம் வகுப்பு என்ற பெட்டி இதில் தான் மகாத்மா எப்போதும் பயணம் செய்வார்கள், என் மக்கள் பயணம் செய்யும் வசதியே எனக்கும் வேண்டும் என்பார்கள்.
1966-68ன் இனிய நினைவுகள்.

இப்போதும் சோபாவில் ஆட்டியபடி நான் ஆச்சியின் 'என்னங்க காலையில் குளிச்சு கடைக்கு போகாம செல்ல நோண்டிக்கிட்டு ஆடிக்கிட்டு இருக்கீங்க'என்ற அதட்டல் நினைவுலகுக்கு கொண்டு வர எழுந்து குளிக்க சென்றேன்.

ஆக்கம்: நாச்சியாபுரம், சேதுராமன் லெட்சுமணன்.
----------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

 1. வணக்கம் குருவே,
  பரவாயில்லையே, இத்தனை ஆண்டுகள் கழித்தும் அன்றைய
  கரிவண்டி (புகைவண்டி) பிரயாணம்
  ரம்மியமாக இருந்தது!
  நான் அவ்வணடியில் இருந்தது போல ஒரு அநுபவம் தந்தமைக்கு நன்றி, ஐயா!👍👌💐

  ReplyDelete
 2. /////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே,
  பரவாயில்லையே, இத்தனை ஆண்டுகள் கழித்தும் அன்றைய
  கரிவண்டி (புகைவண்டி) பிரயாணம்
  ரம்மியமாக இருந்தது!
  நான் அவ்வணடியில் இருந்தது போல ஒரு அநுபவம் தந்தமைக்கு நன்றி, ஐயா!👍👌💐////

  நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com