Short story: சிறுகதை பராமரிப்பு நிதி
(Maintenance Fund)
மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதி இந்த மாதம் 20ஆம் தேதி இதழில் வெளிவந்த சிறுகதை இது. நீங்கள் படித்து மகிழ அதை இன்று இங்கே
பதிவிட்டுள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------
"மன்னார்குடி மதிலழகு
வேதாரண்யம் விளக்கழகு
திருவாரூர் தேரழகு
சொக்கலிங்கம் சொல்லழகு!
என்பார்களாம் உள்ளூர்க்காரர்கள். உள்ளூர்க்காரர்கள் மட்டுமல்ல, வட்டகையைச் சேர்ந்த பொதுமக்களும் அப்படித்தான் சொல்வார்களாம்.
அப்படிப்பட்ட சீமானாக, சொற்சிலம்பமாடும் பேச்சாளராகத் திகழ்ந்தவர் எங்கள் பாட்டையா சொக்கலிங்கம் செட்டியார்” என்று பெருமைப்
பட்டுக்கொள்வார், நமது கதையின் நாயகரான பழநியப்ப செட்டியார்.
அப்படி பாட்டையாவின் பெருமைகளை அடிக்கடி சிலாகித்துச் சொல்பவர், சமயங்களில் குறையாக இப்படியும் சொல்வார்: “எங்கள் பாட்டையா
பர்மாவிற்குப்போய் நிறைய சம்பாதித்து, உள்ளூரில் இத்தத் தண்டி வீட்டைக் கட்டியவர், இதைப் பராமரிப்பதற்கென்று ஒரு நிதியை ஏற்படுத்தி
வைக்காமல் போய்விட்டார்”
“என்ன பானா ளானா சொல்கிறீர்கள்? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!” என்று யாராவது கேட்டால், “திருவாரூர், திருக்குறுங்குடி, திருக்கோலக்கா, திருவிடைமருதூர், திருநெல்லிக்கா என்று ஐந்தாறு ஊர்களில் பசுமடம் கட்டிக்கொடுத்ததோடு, நந்தவனங்களுக்கும் இடம் வாங்கிக்கொடுத்தார். அத்துடன் அவற்றைப் பராமரிப்பதற்கென்று அங்கங்கே விளைநிலங்களையும் வாங்கி, அதையும் சேர்த்துக் கோவில் நிர்வாகத்திடம் கொடுத்தாராம். அதுபோல எங்கள் பெரிய வீட்டிற்கும் செய்திருந்தால், இப்போது அதைப் பராமரிப்பதில் இடியப்பச் சிக்கல் இருக்காது”
“ஏன் அவருடைய கொள்ளுப்பேரர்கள் என்று எட்டுப் பேர்கள் இன்று இருக்கிறீர்களே, எல்லோரும் நல்லாத்தானே இருக்கிறீர்கள். ஒற்றுமையாகச்
சேர்ந்து செய்ய வேண்டியதுதானே?”
“தன்னைப் பேணித்தனம் உள்ளே நுழைந்து, ஒற்றுமையை அடித்து விரட்டிவிட்டது. வாரிசுதாரர்கள் எட்டுப் பேர்களில் மூன்று பேர்கள் எதற்கும்
ஒத்து வரமாட்டேன் என்கிறார்கள். தாங்களும் செய்ய மாட்டார்கள். அடுத்தவனையும் செய்ய விடமாட்டார்கள்.”
“அதற்குக் அடிப்படைக் காரணம் என்ன?”
“அடிப்படைக் காரணம், வெளிப்படைக் காரணம் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை. வீடு எப்போது இடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வீடு இடிந்தால், வீட்டில் இருக்கும் உத்திரம், தூண்கள், நிலைகளுடன், வீடு இருக்கும் 33 சென்ட் இடத்துடன் அருகில் தோட்டமாக இருக்கும் 67
சென்ட் இடத்தையும் விற்றுக் காசாக்கி, தங்கள் பங்கை வாங்கிக் கொண்டு போய் விடலாம் என்றிருக்கிறார்கள்”
“வீடு என்ன விலைக்குப் போகும்?”
“சோனா மேனா வீடு மூன்று கோடிக்குப் போனதாம். எங்கள் வீடு நான்கு கோடிக்குப் போகும்!”
“வந்தால், போனால் தங்குவதற்கு?”
“வந்தால், போனால், இருந்தால், சென்றால் தங்குவதற்கென்று உள்ளூரிலும், வசிக்கும் ஊர்களிலும், ஒன்றுக்கு இரண்டாக பங்களாக்களைக் கட்டிக்
கொண்டுள்ளார்கள். சென்றால் தங்குவதற்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களில் Share & Stay Properties நிறுவனங்களில் உறுப்பினர்களாக
இருக்கிறார்கள். பத்துப் பெரிய ஊர்களில் நகர விடுதிகள் இருக்கின்றன. வேறு என்ன வேண்டும்?”
“கஷ்டம்தான்!” என்று சொல்லிவிட்டுக் கேள்வி கேட்பவர்கள் அத்துடன் கழன்று கொண்டு விடுவார்கள்.
ஆனால் இதையே ஒருமுறை பழநியப்ப அண்ணன் தன் மனைவி வள்ளியம்மை ஆச்சியிடம் சொன்னபோது, ஆச்சி , செட்டியாரைக் கழற்று
கழற்றென்று கழற்றிவிட்டார்கள்.
“அப்படியெல்லாம் உங்கள் பாட்டைய்யா ஒரு பராமரிப்பு நிதியை வைத்துவிட்டுப் போயிருந்தால், உங்கள் அண்ணன் அதை ஏமாற்றி
எடுத்துக்கொண்டிருப்பார். நீங்கள் கூடப் பிறந்தவர்கள் இத்தனை பேர் இருக்கும்போது, உங்கள் ஆத்தாவோட சீதனப் பணம், உங்க ஆத்தாவின்
சக்களத்தியாவோட நகைகள் என்று எல்லாவற்றையும் ஏதோ ஒரு ஆகாத போகாத கணக்கைச் சொல்லி எடுத்துக்கொண்டு விட்டாரில்லையா?
அதைப் போல பாட்டைய்யா வச்சிட்டுப் போயிருந்தால் அதையும் சாப்பிட்டு முடித்திருப்பார். பொள்ளாச்சியில உள்ள தென்னந்தோப்பை, அது
பொதுச் சொத்துன்னுகூடப் பார்க்காம உள்ளடி வேலை செஞ்சு, சுய குத்தகைக்கு விட்டிருக்காரே - உங்களால என்ன செய்ய முடிஞ்சுது?”
“என்ன செஞ்சு என்ன பிரயோசனம்? மனுஷன் நிம்மதியாவா இருக்காரு? அவரோட மகனுக்கு முப்பத்திரெண்டு வயசாகுது, இன்னும்
கல்யாணமாகலை! இவரோட வில்லங்கம் தெரிஞ்சு எவனும் பொண்ணு சொல்லிவிட மாட்டேங்கிறான்”
“பையன் வெளிநாட்டில நல்ல வேலையில இருக்கான். கல்யாணமாகிறதுக்கு முன்னாடி, அவங்கிட்ட கறக்கிற வரைக்கும் கறப்போம்னு இவர்தான்
கல்யாணம் செய்யாம அவனைத் துணியைப்போட்டு மூடி வச்சிருந்தாரு. இப்போ அவன் அங்கேயே ஒரு குஜராத்திப் பொண்ணோட குடும்பம்
நடத்திக்கிட்டு இருக்கானாம். ஊருக்குள்ள பேசிக்கிறாக!”
“தொலையறானுங்க, அவனுங்களை விடு. இப்ப வீட்டை ரிப்பேர் பண்ணனுமே - அதுக்கு என்ன பண்றது? அதைச் சொல்லு!”
”நீங்க பெரியப்பன், சித்தப்பன், மக்கள் என்று ஐந்து பேர்கள் ஒற்றுமையாத்தானே இருக்கிறீர்கள்? இடக்குப் பண்ற மூன்று பேரை விட்டுட்டு மத்தவங்க ஒன்னாச் சேர்ந்து வீட்டை ரிப்பேர் பண்ணிடுங்க!”
“அவங்ககிட்டே பெர்மிசன் வாங்க வேண்டாமா? நாம செய்யிறதுக்கு ஒத்துக்க மாட்டாங்களே - என்ன பண்றது?”
“எதுக்காக பெர்மிசன் வாங்கணும்? அவங்களுக்குப் பாத்தியமான அறைகள்ல கையை வச்சாத்தான் பெர்மிசன் வாங்கணும். முகப்பு, பெட்டகசாலை,
சுத்துப்பத்தி, வளவு, இரண்டாங்கட்டு, மூனாங்கட்டுன்னு பொதுப்பகுதியை ரிப்பேர் பண்றதுக்கு பெர்மிசன் ஒன்னும் தேவையில்லை. மதுரைக்
கோர்ட்ல இருக்கிற எங்க அண்ணன்கிட்ட கேட்டுட்டேன். பாதுகாப்புக்காக வேணும்னா, கோர்ட்டுல பொதுப் பெட்டிஷன் ஒன்றைக் கொடுத்து
இஞ்சக்சன் ஆர்டர் ஒன்றை வாங்கி வச்சிகிட்டா போதும்னார்.”
“ஆகா, இதுக்குத்தாண்டி ராசாத்தி, உங்கிட்ட யோசனை கேட்கிறது. முதல்ல அதைச் செஞ்சு வேலையைத் துவக்கி விடுகிறேன்டி”
”அதுபோல செலவு தொகையையும் குறிச்சு வச்சு, பின்னாடி ஒரு நல்லது கெட்டதுன்னு அவ்க வரும்போது, வம்படியா, நீங்க அதைக் கொடுத்தால்தான் நாங்க உங்க வீட்டு விசேடங்கள்ல கலந்துக்குவோம்னு சொல்லி, வசூல் பண்ணிடலாம்.”
ஆச்சியின் அறிவுத்திறனையும், யோசனைகளையும் பார்த்துப் பழநியப்ப அண்ணன் மனம் நெகிழ்ந்துபோய் விட்டார்!
நெகிழ்ந்ததோடு இல்லாமல் பழநி தண்டாயுதபாணிக்கு நூத்தி எட்டு ரூபாய் பணம் எடுத்து முடிந்து வைத்துவிட்டு, வளவிற்குள் தன்னுடன்
ஒற்றுமையாக இருக்கும் மற்ற நான்கு பேர்களுடன் பேசி, ஒரு முடிவிற்கும் வந்தார்.
அதாவது தங்களுடைய பெரிய வீட்டைத் தான் முன்னின்று பராமரிப்பு வேலைகளைச் செய்வது என்ற முடிவிற்கு வந்ததோடு, ஒரு சஷ்டி தினத்தன்று தங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் குன்றக்குடி முருகன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையையும் செய்துவிட்டு வந்து வேலையைத் துவங்கினார்.
என்ன ஆயிற்று?
அதற்குப் பிறகு நடந்ததுதான் அதி சுவாரசியமானது. தொடர்ந்து படியுங்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பழநியப்ப அண்ணன் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தேசிய வங்கி ஒன்றின் வட்ட மேலாளராக தில்லியில் பணியாற்றியவர். அவருக்கு பிள்ளைச்
செல்வமாக ஒரே ஒரு மகன்தான். அவன் பெயர் சண்முகநாதன். அவனை பிட்ஸ், பிலானியில் படிக்க வைத்து கணினிப் பொறியாளராக்கினார்.
அத்துடன் மேல் படிப்பிற்காக அமெரிக்காவிற்கும் அனுப்பி வைத்தார். அங்கே எம்.எஸ் படித்து முடித்தவுடன், அவனுக்கு அங்கேயே ஒரு பெரிய
நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்தது. துவக்க சம்பளமே இந்திய மதிப்பில் ஆண்டுக்கு அறுபது லட்ச ரூபாய்கள் என்றால் பார்த்துக்
கொள்ளுங்களேன்.
க்ரீன் கார்டு பிரச்சினை ஏற்படும் முன்பாகவே, அவனுக்குத் திருமணத்தை செய்து வைக்க வேண்டுமென்று எண்ணியவர், தன் தங்கை மகள் சாலாவை
அவனுக்கு மணமுடித்து வைத்துவிட்டார். முடித்த கையோடு தம்பதியரை அமெரிக்காவிற்கும் அனுப்பி வைத்துவிட்டார்.
சாலா ஹைதராபாத்தில் வளர்ந்தவள். சரளமாக நான்கு மொழிகளைப் பேசுவாள். பொறியியல் படித்தவள். சி.டி.எஸ் நிறுவனத்தில் பணி செய்து
கொண்டிருந்தாள். தோது என்ற பெயரில் பைசா கூட பணம் வாங்கிக் கொள்ளாமல் அவளை மருமகளாக்கிக் கொண்டார். உறவினர் மத்தியில் அந்தத் திருமணம் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.
முப்பது வயதைத் தாண்டியவர்கள் பலர் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, பழநியப்ப அண்ணன் தன்
மகனுக்குச் செய்தது நல்ல எடுத்துக்காட்டு என்று என்று ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.
இறையருளால், சாலாவிற்கும் ஒரே ஆண்டில் ஒரு ஆண் மகவு பிறந்து அனைவரையும் மகிழ்வித்தது. பழநியப்ப அண்ணனும், தன் மனைவி
வள்ளியம்மை ஆச்சியுடன், சென்ற நவம்பரில்தான் பேரனைப் பார்த்துவிட்டு வருவதற்காக அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டு வந்தார். பேரனுக்கும் தன்
பாட்டையாவின் பெயரையே - சொக்கலிங்கம் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தார். குழந்தை பிறந்த அன்றே அந்தப் பெயர்தான் அங்கே உள்ள
மருத்துவமனையில் பதிவு செய்யப்பெற்றது.
இதுதான் பழநியப்ப அண்ணனின் பூர்வ கதை. இப்போது பிரதானக் கதைக்கு வருவோம்.
பழநியப்ப அண்ணன் தன் தம்பிகள் இருவர், சிறிய தந்தையாரின் மகன்களில் இருவர் ஆகியோருடன், ஒரு நல்ல வளர்பிறை முகூர்த்த நாளன்று
தங்கள் வீட்டில் அதிகாலையில் கணபதி ஹோமத்தைச் செய்துவிட்டு, பராமரிப்பு வேலையைத் துவக்கினார்.
சீனுக் கொத்தனாரை வைத்து எல்லா வேலைகளையும் முடித்துக் கொள்ளலாம் என்று அவரை எற்பாடு செய்திருந்தார். சீனுக் கொத்தனார் அந்தக் காலத்தில் அவருடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர். அவர் தன் ஆட்கள் நான்கு பேர்களுடன் வந்து முதல் நாள் வேலையைத் துவக்கினார்.
மூன்றாம்கட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்லும் நடைபாதை வாயிலில் இருந்த கதவு சரியில்லாமல் இருந்தது. கதவோடு இருந்த வெளிப்பக்கச்
சுவரில் ஒரு அரசமரம் முளைத்திருந்தது. பதினைந்தடி உயரம் வளர்ந்திருந்ததோடு நில்லாமல் சுவற்றிலும் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருந்தது.
அதன் வேர்கள் கணத்து இரு பிரிவுகளாக வீட்டிற்குள்ளும் உள்ளோடி இருந்தது.
முதலில் மரத்தை வெட்டினார்கள். அதன் பிறகு உள்ளோடி இருக்கும் வேர்களை அடியோடு எப்படி வெட்டி எடுப்பது என்று யோசிக்கும்போது. சீனுக்
கொத்தனார், சல்ஃபூரிக் ஆசிட் வாங்கி வேர் இருக்கும் பகுதிக்குள் ஊற்றி விடலாம் என்றார்.
பழநியப்ப அண்ணன் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை. அரசமரம், பிள்ளையாரின் அருள் பெற்ற மரம், அதில் ஆசிட்டை ஊற்றுவது முறையல்ல என்று சொல்லி, சுவற்றைக் கெல்லி, வேரைத் தோண்டி எடுக்கச் சொல்லிவிட்டார். சுவற்றில் 4 அங்குல ஆழத்திற்குத் தோண்டிக்கொண்டே வந்து வேர்களை அகற்றத் துவங்கினார்கள். அனுமார் வால்போல சுவற்றில் நீண்டு கொண்டே சென்ற வேர், வீட்டின் நடுப்பகுதியில் இருந்த சாமி அறை
வரைக்கும் வளர்ந்திருந்தது. சாமி அறையின் வெளிப் பக்கச் சுவர் வரை தோண்டி முடிக்கும்போதுதான் அது நடந்தது.
அந்தப் பகுதியில் பெரிய உளி, சுத்தியலை வைத்துத் தட்டும்போது, டங், டங் என்ற ஓசை எழுந்தது.
சீனுக் கொத்தனார், பழநியப்ப அண்ணனிடம் வந்து, சுவற்றில் அடிக்கும்போது எழும் ஓசையைச் சொன்னார். அத்துடன் இரண்டு முறைகள் அடித்தும்
காட்டினார்.
சுதாகரித்துக் கொண்ட பழநியப்ப அண்ணன், “சாமி வீட்டின் உட் பகுதியில் தரையில் இருக்கும் படைப்புச் சாமான்களால் அந்த ஓசை ஏற்படலாம்.
அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். வெட்டி எடுத்ததுவரை போதும். முதலில் சுவற்றில் நோண்டிய பகுதிகளில் சிமெண்டைப் பூசி சரி பண்ணுங்கள்.
மற்றதை நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறி அவர்களின் கவனத்தைத் திருப்பினார்.
மாலை 4 மணிக்கு அந்த வேலைகள் முடிந்தவுடன், வேலையாட்கள் அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டு, தன் தம்பிகள் நான்கு பேர்களுடன்
வீட்டிற்குள் அமர்ந்து ரகசியமாக ஆலோசனை செய்தவர், ஒரு முடிவிற்கு வந்தார்.
தரையைத் துளை போட்டு வெட்டி எடுக்கும் சின்ன இயந்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொன்னார். சாமி வீட்டில், விளக்கிருந்த பகுதிக்குக் கீழே
உள்ள தரையைத் தோண்டினார்கள். 4 அடிக்கு 4 அடி பள்ளம் வெட்டினார்கள். ஐந்து அடி ஆழம் வெட்டி எடுத்தவுடனேயே அது கண்ணில் பட்டது.
இரண்டு செப்புத் தவலைகள் கண்ணில் பட்டன.
சற்று சிரமப்பட்டு மேலே தூக்கிவிட்டார்கள். அந்தக் காலத்துத் தவலைகள். ஒவ்வொன்றும் 30 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு இருக்கும். துணியை
வைத்துத் துடைத்தவுடன், சொ.அ.சொ என்ற அவர்களுடைய வீட்டு விலாசம் இரண்டு தவலைகளிலும் பளிச்சிட்டது. மேலே மூடிகள் ஈயத்தால் பற்ற
வைக்கப்பெற்று சீலிடப்பெற்றிருந்தன!
புதையல்தான் அவைகள்.
என்ன இருக்கும்?
திறந்து பார்த்தால் அல்லவா தெரியும்!
(தொடரும்)
கதையின் நீளத்தைக் கருதி கதையின் அடுத்த பகுதி நாளை வெளிவரும்!
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
நாளை, விரைவில் வராதான்னு இருக்கு.
ReplyDeleteஇப்படி சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே!
நல்ல இடத்தில் வந்து 'சஸ்பென்ஸ்' வைத்துவிட்டீர்களே ஐயா!
ReplyDeleteஇப்போதே ஐபிஎல் பெட்டிங் போல புதையலில் என்ன இருக்கும் என்று பெட்டிங் துவங்கிவிட்டதாம்.
இரண்டு குடங்களிலும் கங்கைத் தண்ணீர் இருக்கலாம்.
சரளமான நடையில் அருமையான கதை.
kmrk1949@gmail.com
அருமையான கதை, சுவாரசியமாக உள்ளது.
ReplyDeleteசரியான இடத்தில் இடைவேளை!.. பொழுது எப்போது விடியும் என்றிருக்கின்றது!..
ReplyDeleteஆரம்பம் முதல்,சஸ்பென்ஸ் வரை கதை ஓட்டம் பிரமாதம்!எப்போ விடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்!
ReplyDeleteஒரு தொடர் நாடகம் பார்த்தது போல் இருக்கிறது. வாத்தியாருக்கு முழுதுமாக தட்டச்சுவதற்கு நேரமில்லை. அதனால் தொடரும் போட்டு விட்டார்.
ReplyDeleteமுன்பொரு முறை நான் பார்த்த ஒரு மர்மத் தொடர் நாடகத்தில் இப்படிதான் தோண்டும் போது தவலை கிடைக்கும். அதைத் திறந்துப் பார்த்தால் ஒரு மனிதனின் முழு எலும்புக் கூடும் சில ஓலைச் சுவடிகளும் இருக்கும். இதைப் படித்தவுடன் அந்த தொடர் நாடகம் ஞாபகத்திற்கு வந்து விட்டது. உங்கள் கதையில் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நீங்கள் மர்மக் கதைகள் எழுதுவதில்லை. எல்லாமே குடும்பக் கதைகள்தான்.
கதை மிகவும் அருமை... கதாநாயகன் பராமரிப்பு பணம் வைத்திருந்தால் நன்றாக இருக்குமென்று இன்று நினைத்ததைபோலவே அன்று அவர் தாத்தா யோசித்து பணத்தை புதைத்து வைத்திருப்பாரோ?
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
////Blogger துளசி கோபால் said...
ReplyDeleteநாளை, விரைவில் வராதான்னு இருக்கு.
இப்படி சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே!/////
அடடே, வாருங்கள் துளசி டீச்சர். உங்கள் வருமை மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. மீதிக் கதையை இன்று பதிவிட்டு உள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்தைச் வ்சொல்லுங்கள். உங்களுடைய வாரணாசி பயணக் கட்டுரைகளைப் படித்தேன். விரிவாக எழுதி அசத்தி உள்ளீர்கள். அதற்கு ஷ்பெசலாக ஒரு நன்றி!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநல்ல இடத்தில் வந்து 'சஸ்பென்ஸ்' வைத்துவிட்டீர்களே ஐயா!
இப்போதே ஐபிஎல் பெட்டிங் போல புதையலில் என்ன இருக்கும் என்று பெட்டிங் துவங்கிவிட்டதாம்.
இரண்டு குடங்களிலும் கங்கைத் தண்ணீர் இருக்கலாம்.
சரளமான நடையில் அருமையான கதை.
kmrk1949@gmail.com/////
உங்களின் விமர்சனத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger Raja Murugan said...
ReplyDeleteஅருமையான கதை, சுவாரசியமாக உள்ளது./////
ஆமாம். எழுத்தின் வெற்றி ரகசியமே சுவாரசியமாக எழுதுவதுதான். இல்லை என்றால் நானே படிக்க மாட்டேன்.
/////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteசரியான இடத்தில் இடைவேளை!.. பொழுது எப்போது விடியும் என்றிருக்கின்றது!../////
இப்போது விடிந்துவிட்டது. கதையின் அடுத்த பகுதியைப் பதிவிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!
/////Blogger Subramaniam Yogarasa said...
ReplyDeleteஆரம்பம் முதல்,சஸ்பென்ஸ் வரை கதை ஓட்டம் பிரமாதம்! எப்போ விடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்!/////
இப்போது விடிந்துவிட்டது. கதையின் அடுத்த பகுதியைப் பதிவிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!
/////Blogger Kirupanandan A said...
ReplyDeleteஒரு தொடர் நாடகம் பார்த்தது போல் இருக்கிறது. வாத்தியாருக்கு முழுதுமாக தட்டச்சுவதற்கு நேரமில்லை. அதனால் தொடரும் போட்டு விட்டார்.
முன்பொரு முறை நான் பார்த்த ஒரு மர்மத் தொடர் நாடகத்தில் இப்படிதான் தோண்டும் போது தவலை கிடைக்கும். அதைத் திறந்துப் பார்த்தால் ஒரு மனிதனின் முழு எலும்புக் கூடும் சில ஓலைச் சுவடிகளும் இருக்கும். இதைப் படித்தவுடன் அந்த தொடர் நாடகம் ஞாபகத்திற்கு வந்து விட்டது. உங்கள் கதையில் அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நீங்கள் மர்மக் கதைகள் எழுதுவதில்லை. எல்லாமே குடும்பக் கதைகள்தான்./////
கதை முன்பே பத்திரிக்கை ஒன்றில் வெளியான கதை. இடம் கருதி பத்திரிக்கையிலும் இரண்டு பகுதிகளாக, இரண்டு இதழ்களில்தான் வெளியிட்டார்கள். ஆமாம் நான் மர்மக்கதைகள் எழுதுவதில்லை. அனைத்துமே குடும்பக்கதைகள்தான்!
/////Blogger Selvam Velusamy said...
ReplyDeleteகதை மிகவும் அருமை... கதாநாயகன் பராமரிப்பு பணம் வைத்திருந்தால் நன்றாக இருக்குமென்று இன்று நினைத்ததைபோலவே அன்று அவர் தாத்தா யோசித்து பணத்தை புதைத்து வைத்திருப்பாரோ?/////
கரெக்ட். அதுதான் நடந்திருக்கிறது. இரண்டாம் பகுதியையும் படித்துப் பாருங்கள். நன்றி
/////Blogger karthik sekar said...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்/////
தகவலுக்கு நன்றி நண்பரே!
தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்
ReplyDelete/////Blogger Jeevalingam Kasirajalingam said...
ReplyDeleteதங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்////
உங்கள் வரவேற்பிற்கு மிக்க நன்றி!