Astrology - பரதேசம் போவது எப்படி?
யாராவது பரதேசம் போக விரும்புவார்களா? என்னடா வாத்தியார் இப்படித் தலைப்பிட்டிருக்கிறார் என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்.
ஜாதகப்படி பரதேசம் போகும் அமைப்பு சிலருக்கு இருக்கும். நாம் போக விரும்பாவிட்டாலும், அல்லது அப்படிப்போகும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காவிட்டாலும் அதைத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவை இரண்டையும் சொல்வதுதான் ஜோதிடம். அதைத் தெரிந்து கொள்வதால் ஒன்றும் கெட்டுப்போய் விடாது. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.
பரதேசிகள் அலைந்து திரியும் இடம்தான் பரதேசம். முதலில் பரதேசி என்றால் என்னவென்று தெரிந்துகொள்வோம்.
பரதேசி என்றால் ஊர் ஊராகச் சுற்றித்திரியும் பிச்சைக்காரன் என்று அகராதில் குறிப்பிடப்பெற்றுள்ளது. (wandering beggar). குடும்பத்தைத் துறந்து வெளியேறிய துறவிகளையும் அது குறிக்கும்
அந்தக் காலத்தில் பரதேசம் என்றால் நாடுவிட்டு நாடு போவதைக் குறிக்கும். இப்போது அப்படியெல்லாம் போக முடியாது. விசா பிரச்சினை குறுக்கே வந்து நிற்கும். ஆகவே உள் நாட்டிலேயே வேறு மாநிலங்களில் சுற்றித் திரிவது என்று பொருள் கொள்ளலாம்.
சரி, பரதேசம் போவதற்கான ஜாதக அமைப்பு என்ன?
அதை இன்று பார்ப்போம்!
----------------------------------------
பாரப்பா ஈராறோன் இரு நான்கோனும்
பகருகின்ற செவ்வாயும் மூவர் சேர்ந்து
கூறப்பா எவ்விடத்தில் கூடிட்டாலும்
கொற்றவனே பரதேசம் போவான் காளை
சீரே நீசசந்திரனும் கண்ணுற்றாலும்
சிலகாலந் தங்கியிருந்து செம்பொன் தேடி
ஆறப்பா அவன் பதியில் வந்து வாழ்வான்
அப்பனே புலிப்பாணி அறைந்திட்டேனே!
- புலிப்பாணி முனிவர்
ஈராறோன் என்றால் பன்னிரெண்டாம் அதிபதி (12th Lord)
இரு நான்கோன் என்றால் எட்டாம் வீட்டுக்காரன் (8th Lord)
செவ்வாய் என்றால் நம் அனைவருக்கும் தெரியும்
ஆக அம்மூவரும் கூட்டாக ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், ஜாதகன் ஒரு நாள் பரதேசம் போவானாம்.
சரி, விதிவிலக்குண்டா?
நீச சந்திரன், அதாவது பெளர்ணமிக்குப் பிறகு அமாவாசை வரை உள்ள தேய்பிறைச் சந்திரன், அம்மூவரையும் தன் பார்வையால் பார்த்தால் சற்று விதிவிலக்கு உண்டு. அதாவது ஜாதகன் போவதை அது தடுத்து நிறுத்தாது. ஆனால் சிலகாலம் ஜாதகன் சுற்றித்திரிந்து தங்கம் முதலான பொருட்களுடன் திரும்ப வீடு வந்து சேர்வானாம். பொருள் ஈட்டிக்கொண்டு வருவான். அல்லது உங்கள் மொழியில் சொன்னால் எங்காவது ஆட்டையைப் போட்டுக்கொண்டு வருவான்.
வந்து, தன் நாயகி, தன் மக்களுடன் சேர்ந்தால் சரிதான்!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com